திங்கள், நவம்பர் 30, 2015

09. சொல்லப்படாத வரலாறுகளும் திரிக்கப்பட்ட வரலாறுகளும்

09. சொல்லப்படாத வரலாறுகளும் திரிக்கப்பட்ட வரலாறுகளும்
 
                    (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)

                                           மு.சிவகுருநாதன்(காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஆக. 2010 –ல் வெளியான, ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘வரலாறும் வழக்காறும்’ என்ற நூல் குறித்த பதிவு இது.)


 
      இங்கு வரலாறு என்பது மன்னர்களின், போர்களின் வரலாறாகச் சுருங்கிப் போய்விட்டது. இதனை விரிவாக்க, மறைக்கப்பட்ட, சொல்லப்படாத, திரிக்கப்பட்ட வரலாற்றை அறிந்துகொள்ள நாட்டார் வழக்காறுகள் பயன்படுகின்றன. இவையனைத்தையும் வரலாற்றுண்மைகளாகக் கருதும் போக்கு ஒன்றுள்ளது. 
 
  அவ்வாறில்லாமல் ஆ.சிவசுப்பிரமணியன் வரலாற்றிற்கும் வழக்காற்றிற்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டை உணர்ந்தவர். அவர் தமது பல்வேறு நூற்களின் மூலம் வரலாற்றையும் வழக்காறையும் பொருத்திப் பார்த்து ஆய்வு செய்வதன் வாயிலாக வரலாற்றில் திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர். 
 
   “மாற்று வரலாற்றுக்கான தரவுகளாக வாய்மொழி வழக்காறுகளும் சடங்குகளும் அமைகின்றன. இவற்றை நாம் அப்படியே வரலாற்றில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் ஐயமில்லை. மரபு வழி வரலாற்றுக்கான தரவுகளை எவ்வாறு ஏனைய தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறோமோ அதே போன்று இத்தரவுகளையும் பயன்படுத்தி உண்மையைக் கண்டறியலாம்.” என்று ஆ.சிவசு வெறொரு நூலுக்கான முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். (அடித்தள மக்கள் வரலாறு, பாவை பப்ளிகேஷன்ஸ், இரண்டாம் பதிப்பு, டிச. 2011.)
 
   காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘வரலாறும் வழக்காறும்’ என்ற நூலில் இவரது 10 கட்டுரைகள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் வரலாற்றுப் பாடங்கள் எவ்வாறு உள்ளன என்பதற்கு தனது அனுபவங்கள் வழியாக ஓரு சித்திரம் வரைகிறார். இங்கு வரலாற்று நாவல்கள் என்ற போர்வையில் அரசர்களின் அந்தப்புரங்களை சுற்றிவந்த நிலையை மாதவையா, பிரபஞ்சன் ஆகியோர் மாற்றியமைத்ததைச் சுட்டுகிறார்.
 
   பள்ளிகளில் பிராமண ஆசிரியர்கள் ‘பிரம்மஹத்தி’ என்ற சொல்லை திட்டுவதற்கு பயன்படுத்தக் கேட்டிருக்கலாம். ‘பிரம்மஹத்தி’ என்ற பார்ப்பனப் பேய் புராணக்கதையைக் கொண்டு பார்ப்பனர்கள் தங்களது சமூக மேலாண்மையை (Social Hegemony) நிலைநாட்டுவதை ஓர் கட்டுரை விவரிக்கிறது. மநு தர்மத்தை ஒட்டி உற்பத்தி செய்யப்பட்ட இப்புராணக்கதைகள் மூலம், பண்பாட்டு மேலாண்மையை அடித்தள மக்களின் மீது நிலைநிறுத்தி, அவர்களின் சமூக ஒப்புதலைப் பெறும் முயற்சியின் வெளிப்பாடே இத்தகைய கதைகள், என்று சிவசு எழுதுகிறார். 
 
   பிராமண சமூகம் மநு தர்மத்தின் வழியாக தனக்கான ஓர் ஆதிக்க வழக்காறைக் கட்டமைத்துள்ளது. திருவாரூர் மநு நீதிச்சோழன் கதையும் இவ்வாறாக கட்டமைக்கபட்டதே. பிராமணர்களையும் பசுக்களையும் பிற வருணத்தவர் கொல்வது மாபாவம் என்றும் பார்ப்பனர்கள் செய்யும் கொலைகளுக்குக் கூட கடினமான தண்டனை கூடாது எனவும் மநு தர்மம் வகுத்தளித்திருக்கிறது. 
 
    முதலாம் ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் (கிபி.965) பஞ்சவன் பிரமாதி ராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்ற பார்ப்பனர்களால் கொலை செய்யபட்டான். 20ஆண்டுகள் கழித்து இக்கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் முதலாம் ராஜராஜன் அவர்களிருவரும் பார்ப்பனர் என்பதால் அவர்களுக்கு உடலை வருத்தும் தண்டனைகள் வழங்கப்படவில்லை. மாறாக அவர்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்த பணத்தில் காட்டுமன்னார்கோயில் சிவன் கோயிலில் பார்ப்பனர்களுக்கு உணவு வழங்க உத்தரவிடப்பட்டான். சத்திரிய அரசாட்சி என்கிற பெயரில் மநு தர்ம ஆட்சியே என்று நடந்தது எனபதை இத்தகைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. 
 
   ‘பிரம்மஹத்தி’ பற்றிய ஐந்து கதை வடிவங்கள் இந்நூலில் சொல்லப்படுகின்றன. அவற்றில் மூன்று கதைகள், மூன்றாம் குலோத்துங்க சோழன், வீரசேனன், வரகுணன் (பாண்டிய மன்னர்கள்) கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் மருதீஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு வாசலில் ‘பிரம்மஹத்தி’ காத்திருப்பதைப் பற்றிக் கூறுகிறது. 
 
    வைதீக இந்து மதம் தீட்டைக் கழிக்க, தீ, பசுமாட்டின் மூத்திரம், பட்டு, பூணுல், சுத்தி சடங்குகள், யாகங்கள் என்று பல்வேறு விதமான வழிமுறைகளை வைத்திருக்கிறது. ‘பிரம்மஹத்தி’யைப் போக்க உப்பை பயன்படுத்துகிறார்களோ என்னமோ தெரியவில்லை. திருவிடைமருதூர் கிழக்குக் கோபுரத்தின் தென்பகுதியில் அரசனது வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘பிரம்மஹத்தி’க்கு உப்பைக் கொட்டி வழிபாடு செய்கிறார்கள். 
 
   1930 சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடர்ந்து தீண்டாமைக்கு எதிரான ‘சம்பந்தி போஜனம்’ போன்றவற்றை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஏற்கவில்லை என்பதை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை (1937) சம்பவம் பற்றிய கட்டுரையும் இதில் உள்ளது. 
  
   நீடாமங்கலத்தில் 1937 டிசம்பர் 28 இல் நடைபெற்ற தஞ்சை மாவட்ட காங்கிரஸ் மாநாட்டில் ‘சமபந்தி போஜனம்’ உண்ட சுமார் 20 தலித்கள் காங்கிரஸ் பண்ணையார் சபாபதி உடையார் தலை மயிரைப் பிடித்து இழுத்து அடித்து, உதைத்து வெளியேற்றினர். பிறகு இவர்களுக்கு மொட்டையடித்து சாணிப்பால் ஊற்றி யார் கூப்பிட்டாலும் செல்லக்கூடாது என எச்சரித்து பணம் (ஓர் அணா) கொடுத்து சேரிக்கு அனுப்பினர். 
  
   காங்கிரஸ் கட்சியின் ஊதுகுழலாக விளங்கிய ‘தினமணி’ இம்மாதிரியான நிகழ்வு நடைபெறவில்லை என்று எழுதியது. பின்னாட்களில் வெண்மணிப் படுகொலையை ஆதரித்து தலையங்கம் எழுதும் அளவிற்கு சென்ற தினமணி தனது சாதீய மனோபாவத்தை வெளிப்படுத்தியது. இச்சம்பவம் பற்றிய செய்திகள் ஆதாரங்கள் குடியரசு, விடுதலை போன்ற இதழ்களில் வெளியிட்ட தந்தை பெரியார் தலித் தோழர்கள் வழக்கு தொடர் ஆலோசனை வழங்கியும் அதற்கான உதவிகளையும் செய்தார். 
 
   பண்ணையாரின் சமூகத்தைச் (உடையார்) சேர்ந்தவரும் நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான சர்.ஏ.ட்டி.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட தலித்கள் சார்பில் வழக்கும் தொடுத்தார். ஆதிக்க சக்திகள் வழக்கு போட்டவர்களை அச்சுறுத்தி இவ்வழக்கை நீர்த்துப்போகச் செய்தனர் என்கிற விவரங்கள் இந்நூலில் கிடைக்கின்றன. 
 
   சாணிப்பால், சவுக்கடி தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக இருந்த பண்ணையார் ஒடுக்குமுறை, சாதிய இழிவுகள் மற்றும் கூலிச்சுரண்டல் என்பதாக நீட்சி பெற்றதை கம்யூனிஸ்ட் கட்சிகள் வளர்ந்து இந்நிலை மாறப் போரடியதை மற்றொரு கட்டுரை விவரிக்கிறது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் களப்பாலில் 1944 இல் நடந்த முத்தரப்புக் கூட்டத்தில் ‘களப்பால் ஒப்பந்தம்’ செய்துகொள்ளப்பட்டது. இதன்படி சவுக்கடி, சாணிப்பால் கொடுத்தல் நிறுத்தப்படும் என்றும் முத்திரை மரக்காலில்தான் குத்தகை நெல்லும், ஊதிய நெல்லும் அளக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்தியது. தஞ்சை மாவட்டத்தில் இத்தகைய போராட்டங்களில் திராவிட இயக்கங்களின் பங்கையும் மறுக்கமுடியாது. 
 
   தோழர் நல்லக்கண்ணு சிறைவாழ்க்கை, போராட்டங்கள் பற்றி ஒருகட்டுரை பேசுகிறது. ஹாப்ஸ்பாமின் கண்ணியமிகு கொள்ளையர்களுக்கான (Noble Robbers) வரையறைகளில் பெரிதும் பொருந்திப் போகக்கூடிய கொள்ளைக்காரன் செம்புலிங்கம் பற்றிய கட்டுரை ஒன்று, தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழிலாளிகளின் நாட்டார் பாடல்கள் பற்றிய கட்டுரை, வரலாறும் வழக்காறும் என்ற தலைப்புக் கட்டுரை, ‘ஒரு நகரமும் ஒரு கிராமமும் – கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள் என்ற பேரா.எஸ்.நீலகண்டன் நூல் அறிமுக விழா உரைச் சுருக்கக் கட்டுரை என நூல் விரிகிறது.

வரலாறும் வழக்காறும் (கட்டுரைகள்)
ஆ.சிவசுப்பிரமணியன்
பக்கம்: 120
விலை: ரூ. 90
மூன்றாம் பதிப்பு: ஆகஸ்ட் 2010
 
வெளியீடு: 
 
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் – 629001.
பேச: 04652 – 278525,
மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in
இணையதளம்: www.kalachuvadu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக