திங்கள், நவம்பர் 23, 2015

06. புத்திசாலித்தனமான முட்டாள் கதைகள்

06.  புத்திசாலித்தனமான முட்டாள் கதைகள்
            (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                - மு.சிவகுருநாதன்



(உயிர்மை பதிப்பக வெளியீடாக டிச. 2009 –ல் வெளியான, சஃபி மொழிபெயர்த்த முல்லா நஸ்ருத்தீன் கதைகள் ‘என்றார் முல்லா’ நூல் குறித்த பதிவு இது.)

          நீதிக்கதைகள் என்றதும் நமக்கு பல்வேறு கதைகள் நினைவுக்கு வருகின்றன. பீர்பால், கதைகள், தெனாலிராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், புராணக் கதைகள், ராமாயண-மகாபாரதக் கதைகள் என்று நிறைய இருக்கின்றன. நமது அரசுகள் பாடநூல்களில் இத்தகைய கதைகள் மூலமே நீதிபோதனையையும் நல்லொழுக்கத்தையும் கட்டமைக்க விரும்புகின்றன. இவைகள் சொல்லும் நீதியும் ஒழுக்க மதிப்பீடுகளும் யாருக்கானது என்பதில்தான் பெருஞ்சிக்கல் இருக்கிறது.

    ஆனால் முல்லா கதைகள் இவைகளை விட  தனித்துவக் குணங்களைப் பெற்றுள்ளன. முல்லா தனது கதைகளில் நீதிபோதனைகள் செய்வதில்லை. இவற்றில் வெளிப்படையான நகைச்சுவை இருக்கிறது. இந்த நகைச்சுவை குழந்தைகளின் விருப்பமாக உள்ளது. பெரியவர்கள் தங்கள் தொலைத்துவிட்ட குழ்ந்தைமையை மீட்டெடுக்க இது உதவி செய்கிறது. இந்த கோமாளித்தனத்திற்குள்ளாக தத்துவம் ஒளிந்திருக்கிறது. இவற்றைக் கண்டுணர நமது முகமுடிகளைக் கழற்றி வைத்துவிட்டு, ஓர் குழந்தைத்தனத்தோடு முல்லாவுடன் கழுதையில் பயணிக்கவேண்டும்.

   சஃபி 11 பக்கங்களில் முல்லா கதைகள் பற்றிய அறிமுகத்தை வழங்குகிறார். வயதும் அறிவும் வளர வளர முல்லாவிற்கும் நமக்குமான இடைவெளி அதிகரித்துவிடுகிறது என்கிறார் சஃபி. இக்கதைகளை கருத்தூன்றிப் படிக்கும்போது இவற்றில் இழையோடும் ஆழ்ந்த பரிமாணங்களை விளங்கிக் கொள்ளமுடியும் என்றும் சொல்கிறார். 

    நாம் எல்லாருக்குள்ளும் நார்சிசஸ் என்ற கிரேக்க புராண கதாபாத்திரம் போன்று சுயமோக ஆசை தளும்புகிறது. அந்த ஆசை மிதமிஞ்சி நோய்க்கூறாக மாறாமல் மட்டுப்படுத்த, எச்சரிக்கை செய்ய உருவாக்கப்பட்டவை முல்லா கதைகள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் என்றும் சஃபி விளக்குகிறார். 

  முல்லா நஸ்ருத்தீன் என்பது சூஃபி  ஞானிகளால் உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரம். சுய ஆய்வுக்காக, மனதைத் தயார்ப்படுத்தும் பயிற்சிக்காக, சூஃபிகளால் தயாரிக்கப்பட்ட இக்கதைகள், தினசரி வாழ்விலிருந்து ஒரு சம்பவத்தைத் துண்டித்து எடுத்து நம் முன் போட்டு அதில் நம் கவனத்தைக் குவிய வைத்து நம்மையே கேள்வி கேட்க, சுயவிமர்சனம் செய்து கொள்ள உருவாக்கப்பட்டவை என்று சஃபி அறிமுகவுரையில் குறிப்பிடுகிறார்.                                                                                                                    
  கோதம புத்தருக்கு முன் ‘எண்ணில் புத்தர்கள்’ தோன்றியதாகக் கருதுவது புத்த மரபு. போதி சத்துவர்களாகப் பல பிறவிகள் எடுத்தவர் புத்தர். இந்த போதி சத்துவர்களின் வாழ்வில் நடந்ததாக பகவான் புத்தர் சொன்ன கதைகளே புத்த ஜாதகக் கதைகள் என்றும் அறத்தை வலியுறுத்தும் இக்கதைகள்  ஆங்கிலத்தில் 537 கிடைக்கிறது என்று அ.மார்க்ஸ் முன்னுரையில் குறிப்பிடுகிறார். 

  முல்லா நிகழ் வாழ்வின் தர்க்கங்களைக் கலைத்துப் போடுகிறார், எந்த நீதி மற்றும் அற போதனைகளையும் அவர் செய்வதில்லை என்றும் சொல்லும் அ.மார்க்ஸ், முல்லா நமது மரபில் காணமுடியாத ஒரு புத்திசாலித்தனமான முட்டாள் (wise fool) என்றும் சொல்கிறார். வழக்கமாக நாம் உலகைப் பார்க்கும் முறைகளிலிருந்து திசை திருப்பி சிந்தனையை உசுப்புவதே அவரது பணி என்றும் சொல்கிறார். 

   “நகைச்சுவை என்பது ஒருவகை உணர்வோ, அறுசுவைகளில் ஒன்று மட்டுமோ அல்ல. உலகை வழமையான பார்வையிலிருந்து விலகிப் பார்க்கும் முறைமைகளில் ஒன்று. (Humor is not a mood. But a way of looking at the world. Wittgenstein) இந்த வகையில்தான் எப்போதும் நகைச்சுவை என்பது ஒரு விமர்சனமாகவே அமைந்துவிடுகிறது. நகைச்சுவை பைத்திய நிலை கனவு முதலியன அதிகாரங்களுக்கு எதிராகவே அமைவதன் பின்னணி இதுதான்.” என்றும் முன்னுரையில் குறிப்பிடும் அ.மார்க்ஸ் நமது அரங்க மரபில் ‘விதூஷகர்கள்’ நாயகனை வெகு சாதாரணமாக கிண்டல் செய்வது ‘அந்நியமாதல்’ உத்தி எனவும் சொல்கிறார். 

   வாழ்வின் தர்க்கங்களிலிருந்தும் வன்முறைகளிடமிருந்தும் தப்புவதற்கு நமக்கு உதவி செய்பவை என்று சொல்லும் அ.மார்க்ஸ், இஸ்லாமில் சூஃபி, பவுத்தத்தில் ஸென், உருது மற்றும் அரபு மொழிகளில் உருவான ‘லடாஐஃப்’, ‘லடிஃபா’, ’ஹீகாயத்’ போன்றவை பழம்பெருமை மிக்க நம் தமிழில் ஏன் உருவாகவில்லை? ‘பரமார்த்த குரு கதை’க்கு முன்னதாக இப்படியானதொரு இலக்கிய வகை இங்கு உண்டா? என்றும் வினா எழுப்புகிறார். யோசிக்கவேண்டிய செய்தியாக இது உள்ளது. 

    சஃபி குறிப்பிடுவது போல, முல்லாவை காரியக்காரராக, கர்வியாக, ஞானியாக, கருமியாக, அசடராக, திருடராக, நீதிபதியாக, தேசத்தைக் காக்க வாளெடுக்கும் வீரர்கள் மத்தியில் புல்தடுக்கி பயில்வானாக என்று பலவேடங்களில் இதைப் படிக்கும்போது நீங்கள் சந்திக்கலாம். 

   இறுதியாக ஒரு முல்லா கதையுடன் நிறைவு செய்வோம். 

ஒரு கோமாளி நஸ்ருத்தீனைப் பார்த்தான். அவன் பையில் ஒரு முட்டையை வைத்திருந்தான். 

“முல்லா, யூகிப்பதில் நீர் வல்லவரா?”, என்றான்.

“ரொம்ப மோசமில்லை”, என்று பதில் சொன்னார் முல்லா.

“அப்படியானால், என் பையில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள்”, என்றான் கோமாளி.

“ஒரு துப்பு கொடுங்களேன்”, என்ரு கேட்டார் முல்லா. 

“முட்டை வடிவத்திலிருக்கும், உள்ளே மஞ்சளும் வெள்ளையும் இருக்கும், முட்டை மாதிரி இருக்கும்”,. என்று அடையாளங்கள் சொன்னான் கோமாளி.

“அப்படியானால் அது ஒருவித தின்பண்டமாகத்தான் இருக்கும்”, என்றார் முல்லா. 

 (ப. 53, தலைப்பு: என்னவென்று யூகி?) 

என்றார் முல்லா
முல்லா நஸ்ருத்தீன் கதைகள்
தமிழில்: சஃபி (தொகுப்பு & மொழிபெயர்ப்பு)
பக்கம்:   270
கதைகள்: 292
விலை: ரூ. 160
முதல் பதிப்பு: டிசம்பர் 2009
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்,
சென்னை -600018.
பேச: 044 – 249934448,
மின்னஞ்சல்: uyirmmai@gmail.com 
இணையதளம்: www.uyirmmai.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக