வியாழன், நவம்பர் 26, 2015

08. போர்ச்சுகீசிய குதிரை வியாபாரி எழுதிய விஜயநகரப் பேரரசு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்



08.  போர்ச்சுகீசிய குதிரை வியாபாரி எழுதிய விஜயநகரப் பேரரசு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்

            (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                     மு.சிவகுருநாதன்



(சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பில் புது எழுத்து வெளியீடாக ஜூலை 2006 –ல் வெளியான, ‘விஜயநகரப் பேரரசு – ஃபெர்னாவோ நூனிஸின் வரலாற்றுப் பதிவுகள்’ நூல் குறித்த பதிவு இது. போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ராபர்ட் சீவெல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, அவரின் ‘A Forgotten Empire: Vijayanaga’ நூலில் வெளியிட்டுள்ளதன் தமிழாக்கம்.)

    தென்னிந்தியாவின் தக்காணப் பீடபூமி பகுதியில் கி.பி. 1336 முதல் கி.பி. 1646 வரை நீடித்திருந்த விஜயநகரப் பேரரசு
சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு என வெவ்வேறு மரபுகளால் ஆளப்பட்டது. கி.பி. 1336 இல் ஹரிஹர தேவராயர், புக்க தேவராயர் ஆகிய சகோதரர்கள் இந்த அரசை நிர்மாணித்தனர்.

   தேவராயர் என்பது இவர்களது வம்சப் பெயராகும். இவர்களுள் கிருஷ்ணதேவராயர் என்பவரைப் பற்றி வரலாற்றுப் பாடநூற்களில் நீங்கள் படித்திருக்கலாம்.

     இப்பகுதியில் நேரடி பார்ப்பன முடியரசாக விஜய நகர அரசை அவதானிக்கலாம். இதுவரையில் தென்னிந்தியாவில் அரசர்களுக்கு பட்டம் சூட்டி  அரசுகளை பின்னாலிருந்து இயக்கியவர்கள் இப்போது தாங்களே மன்னராயினர்.

   போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ராபர்ட் சீவெல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, அவரின் ‘A Forgotten Empire: Vijayanaga’ நூலில் வெளியிட்டுள்ளதன் தமிழாக்கம் சா.தேவதாஸ் மிக அழகாக தமிழில் பெயர்த்துள்ளார். போர்ச்சுகீசிய குதிரை வணிகராக மூன்றாண்டுகள் விஜயநகர பேரரசில் தான் கண்டு, கேட்ட விவரங்களை வரலாற்றுக் குறிப்புகளாகப் பதிவு செய்துள்ளார். ஃபெரிஸ்டா, இபின் பதூதாவோ, அப்துர் ரஸாக்கோ ஆகியோர்கள் எழுத்துக்களை விட ஃபெர்னாவோ நூனிஸின் குறிப்புகள் முக்கியத்துவம் பொருந்தியதாக ராபர்ட் சீவெல் கணிக்கிறார். (சா.தேவதாசின் முன்னுரை)

  விஜய நகரத்தின் அரசர் ஒரு பிராமணர், அது மட்டுமல்லாது 200 க்கு மேற்பட்ட தளபதிகளும் இஸ்லாமியர் அல்லாதவர்களாக அதாவது இந்துக்களாக இருந்ததை நூனிஸ் பதிவு செய்கிறார். திருட்டு போன்ற சிறிய குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பிராமணர்களுக்கு இத்தகைய தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டது. இவர்களது ஆட்சியில் பிராமணச் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும்.

   நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் பிராமணர்கள், கடுமையான உழைப்புக்கு உதவமாட்டார்கள். மூன்று பேர் அல்லது ஒரே கடவுள் உள்ளதாக நம்பும் இவர்கள் அக்கடவுளை மும்மூர்த்தி என்றழைக்கின்றனர் என்றும் குறிக்கிறார். 

    கன்னடரில் ஓர் பிரிவு உண்டு. அவர்களது கோயில்களில் குரங்குகள், பசுக்கள், எருமைகள் மற்றும் பேய்ச்சிலைகளை வழிபடுகின்றனர். குரங்குகளைப் பற்றிப் பேசும்போது இந்நிலங்கள் முன்காலங்களில் குரங்குகளுக்குரியதாக இருந்ததாக அம்மக்கள் சொல்வதாக நூனிஸ் பதிவு செய்கிறார்.
  
  பிராமணரான தெலுங்கு மன்னர் ஒவ்வொரு நாளும் திருமணம் செய்துகொள்ளாமலும்  எந்தவொரு பெண்ணையும் தொடாமலிருக்கும் கற்றறிந்த பிராமணரது போதனைகளைக் கேட்கின்றார். நாள்தோறும் பசுக்களை முத்தமிடுகின்றனர். (பசுவின் பிட்டங்களில் முத்தமிடுவதாகச் சொல்வதை என்னால் உறுதி செய்ய இயலவில்லை என்கிறார்.) பசுவின் சாணத்தை புனிதநீர் போல, பாவங்களிலிருந்து தமக்கு கழுவாய் தேடிக்கொள்வதாகவும் குறிப்பு சொல்கிறது.
 
  இந்த விஜயநகரப் பேரரசில் இஸ்லாமியர் அல்லாத இந்துக்களே உள்ளனர். கணவர் இறக்கும்போது மனைவியர் உடன்கட்டை ஏறும் சடங்கை நேரில் பார்த்து ஓர் தேர்ந்த வருணனையாளரைப்போல விவரிக்கிறார். தெலுங்கர்கள் என்ற ஓர் பிரிவினர் மனைவியரை கணவனுடன் உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்ததையும் இங்கு பதிவு செய்கிறார்.
 
  பிராமணர்கள் இறப்பு, 11 ஆம் நாள் சடங்கு மற்றும் திதி போன்றவற்றை விலாவாரியாகப் பதிவு செய்கிறார். இந்த விநோதப் பழக்கங்களால் உந்தப்பட்டு கூடுதலாக சடங்குளைப் பதிவு செய்திருப்பார் போலும். எதிரிகளிடம் சரணடைவதற்கு முன்னதாக மனைவியர்கள், மகள்கள், சிறிய பிள்ளைகளை மன்னர், தளபதிகள் உள்ளிட்ட  அனைவரும் செய்ததை, ‘அருவெறுக்கத்தக்கது’ எனப்பதிவு செய்யும் நூனிஸ் உடன்கட்டை ஏறும் சடங்குகள் போன்றவற்றில் எந்தக் கருத்தும் தெரிவிப்பதில்லை என்பது ஆராயத்தக்கது.

    தந்திரங்கள், சூழ்ச்சிகள், வஞ்சகங்கள், கொலைகள், போர்கள், படையெடுப்புகள், கொள்ளையிடல் என ரத்த ஆறு ஓடும் பக்கங்கள் இங்கே குறிப்புகளாக விரிகின்றன. மன்னர், தளபதிகள் ஆகியோரின் அகவாழ்க்கை, பலதார மணம், எதிரி நாட்டு அரசிகள், இளவரசிகளை சிறைப்பிடித்தல், உடன்கட்டை ஏறுதல், ஒட்டுமொத்த தீக்குளிப்பு, வாரிசுரிமைக்கான தந்தை, சகோதரக் கொலைகள் என அனைத்துவித முடியாட்சி அக்கிரமங்களும் நிறைந்த ஓர் அரசாக விஜயநகர அரசு இருப்பதை இக்குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

    இஸ்லாமிய மன்னர்களை மட்டும் இம்மாதிரியான செயல்களுக்குச் சூத்திரதாரிகளாகக் கட்டமைக்கும் போக்கு இந்திய வரலாற்றாசிரியர்களிடம் மிகுந்து காணப்படுகிறது. இந்து அரசர்களிடம் காணப்படும் அநீதிகளை மறைக்கு மதவாதக் கண்ணோட்டம் மேலோங்கியுள்ளதைக் காணமுடிகிறது.   

  சில எடுத்துக்காட்டுகள் மட்டும் இங்கே தரப்படுகின்றன.

  விருபாட்ச ராயர் எனும் அரசர் மது, மாது என்று உல்லாசபோதையில் திளைக்க, அவர்களது மகன்களான இளவரசர்கள் இருவரும்  மன்னரைக் கொல்லத் திட்டமிடுகின்றனர். முத்தவன் தந்தையைக் கொலை செய்தபின், “கறைபட்ட கரங்களுக்கு அரசாட்சி பெரும்பாவம், எனவே தம்பிக்கு முடிசூடுங்கள்”, என்கிறான். தந்தையைக் கொன்றவன் தன்னையும் கொல்லலாம் என்று பிறர் சொன்னவற்றைக் கேட்டு தம்பி கையாலே அண்ணன் கொல்லப்படுகிறான். மேலும் தந்தையைப் போலவே இவனும் உல்லாச விரும்பியாகிறான். (பக். 22)

  கொண்டவீட்டைக் கைப்பற்றியதும் ஒரிய மன்னன் தலைமறைவாகவே, அரசி, இளவரசன், ஏழு தளபதிகள் விஜயநகரத்திற்கு கொண்டு வரப்பட்டனர். ஒரிய அரசி, “விஜயநகரப் பேரரசில் குதிரைகளுக்கு லாடம் கட்டும் கொல்லர்களுக்கு தரப்படுவாள்” என்று கல்வெட்டு பதித்த அரசன், ஒரிய அரசனும் மகளும் வந்து சேர்ந்தபிறகு மகளைத் திருமணம் செய்துகொண்டான். (பக்.31,32)
  
  சாளுவ திம்மர் சுல்தானை வென்று, அவரது மனைவி, மகன், குதிரைகள், யானைகள், ஏராளமான பணம், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றைக் கையகப்படுத்தி மன்னருக்கு அனுப்பி வைத்தார். (பக். 34)

  பெரும் எண்ணிக்கையிலான குதிரை, யானைப் படைகளுடன், லடசக்கணக்கில் காலட்படை வீரர்களும் இடம் பெற்றனர். இவர்களுக்கு சேவை புரிய வண்ணார் உள்ளிட்ட பலர் இருந்தனர். இப்படையினருடன் 20,000 தேவதாசிகளும் சென்றதாக நூனிஸ் குறிப்பில் தெரிவிக்கிறார். (பக். 38)

   மன்னர் தன் விரலிலிருந்து ஒரு மோதிரத்தைக் கழற்றி, சேவகன் ஒருவனிடன் தந்து அரசியாரிடம் தரச் சொன்னார். அப்போது அவரகள் சம்பிரதாயப்படி தம்மை எரியூட்டிக்கொள்ளவேண்டும். (பக்.47)

  அரசர் கிருஷ்ணாராவ் அரியணை ஏறியபின் மரபுப்படி நிறைய மனைவிகளைத் தேடிக்கொண்டார். தந்து முன்னாள் காதலி ஒருத்திக்கு மாளிகை ஒன்று கட்டி, மாடத்தில் தங்க வைத்து அழகு பார்த்தார். அவளை மிகவும் அதிகம் நேசித்தார். அவளைக் கவுரவிக்க ‘நாகலாபுரம்’ என்னும் நகரை நிர்மாணித்தார். (நாகலாபுரம் தற்போது ஹோஸ்பேட் என வழங்கப்படுகிறது. (பக். 70)

   இவருக்கு பள்ளத்தாக்கில் அணைகட்டும் முயற்சியில் தோல்வி வர, ரத்தப்பலி வேண்டும் என்ற மந்திரவாதிகள், முனிவர்கள் வேண்டுகோளை ஏற்று, தூக்குத்தண்டனை கைதிகளை வரவழைத்து சிரத்சேதம் (நரபலி) செய்து அணையைக் கட்டி முடித்தார். (பக். 71)

   இந்த அணையை காவல்புரிய 1,000 காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் வழியாகவே மனிதர்கள், சரக்குகள், எருதுகள் அனைத்தும் நுழைய வேண்டியிருந்தது. இவ்வாயில் ஆண்டுக்கு 12,000 பொற்காசுகளுக்கு ஏலம் விடப்பட்டது. (அந்தக்கால BOT மற்றும் சுங்கச்சாவடி) வரியில்லாமல் உள்ளூர், வெளியூர் ஆட்களோ, சுமைகளோ, எருதுகளோ உள்ளே நுழைய முடியாது. ஒவ்வொரு நாளும் அவ்வழியே வரும் 2,000 எருதுகளுக்கும் வரி உண்டு. கொம்பில்லாத எருதுகளுக்கு மட்டும் விலக்கு. (ப. 71, 72)

     அச்சுதராயருக்கு 500 மனைவிகள்; விரும்பிய பெண்ணுடம் அவர் சுகித்திருந்தார். (இவர்கள் தளபதிகள், கனவான்களின் மகள்கள்) அவர் இறந்தபோது இவர்கள் அனைவரும் உடன்கட்டை ஏறினர். இவர் எந்த இடத்திற்குச் சென்றாலும் தனக்கு மிகவும் பிடித்த 20 அல்லது 25 மனைவியரை பொன், வெள்ளி வேலைப்பாடுகள், முத்துமணிக் குஞ்சம் கட்டப்பட்ட பல்லக்கில் அழைத்துச் செல்வார். முக்கிய அரசிகளுக்கு மட்டும் தங்கம், பிறருக்கு வெள்ளிப் பல்லக்கு. இவர்களுக்கு சேவை புரிய ஆயிரக்கணக்கில் பணிப்பெண்களும் சில திருநங்கைகளும் உண்டு. அந்தப்புரத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. அரசிகளுக்ககாக 200 க்கும் மேற்பட்ட பசுக்கள்  வளர்த்து அதிலிருந்து இவர்களுக்கான  நெய் தயாரிக்கப்பட்டது. (பக். 76, 77)

  விஜயநகர் மன்னர்கள் பசு/மாடு தவிர்த்து ஆடு, பன்றி, மான், காடை, முயல், புறா, முள்ளம்பன்றி என அனைத்தையும் உண்டனர். எலிகள், பூனைகள், பல்லிகள் (இது உடும்பாக இருக்கலாம்!) என அனைத்தும் சந்தைகளில் விற்கப்பட்டது. இவை உயிருடன் விற்கவேண்டும் என்பது நிபந்தனை.

  விஜயநகர அரண்மனைகளில் 4,000 க்கு அதிகமான பெண்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் தேவதாசிகளும் உண்டு. பல்லக்கு தூக்குவோர், மல்யுத்தம் செய்வோர், சோதிடம் பார்ப்போர், நிமித்தம் (குறி) சொல்வோர், செலவுக்கணக்கு எழுதுவோர்,  சரி (தணிக்கை) பார்ப்போர், வாத்தியக் கருவிகள் இசைப்போர், சமையற்காரர்கள், உணவில் நஞ்சு கலக்காதிருக்க காவல் புரிவோர், பணிப்பெண்கள், இரவில் அந்தப்புரத்தில் காவல் புரிவோர், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என பல்லாயிரம் பெண் அரண்மனையில் பணியாற்றினர். (பக். 84, 85)

  இறுதியாக ஓர் வேண்டுகோள். சில போர்ர்சுகீசிய பெயர்ச்சொற்கள் அப்படியே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அடைப்புக்குறிக்ககுள் அளித்து இவற்றை எந்த உச்சரிப்பிலாவது தமிழில் கொடுத்திருக்கலாம். 


விஜயநகரப் பேரரசு – ஃபெர்னாவோ நூனிஸின்  (Fernao Nuniz)  வரலாற்றுப் பதிவுகள்

(போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ராபர்ட் சீவெல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, அவரின் ‘A Forgotten Empire: Vijayanaga’ நூலில் வெளியிட்டுள்ளதன் தமிழாக்கம்.)

தமிழில்: சா. தேவதாஸ்
முதல் பதிப்பு: ஜூலை 2006
பக்கம்: 94
விலை: ரூ. 50

வெளியீடு: (புதிய முகவரி)

புது எழுத்து,
2/205, அண்ணா நகர்,
காவேரிப்பட்டிணம் – 635112,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

செல்: 9042158667

மின்னஞ்சல்: puduezuthu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக