ஞாயிறு, நவம்பர் 22, 2015

05. மத நிறுவனத்திற்குள்ளே ஒடுக்கப்பட்ட மக்களின் கலகங்கள்05.  மத நிறுவனத்திற்குள்ளே ஒடுக்கப்பட்ட மக்களின் கலகங்கள்
            (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                - மு.சிவகுருநாதன்(புலம் வெளியீடாக (டிச.2014) வந்துள்ள ‘நாமசூத்திரர்கள் இயக்கம்’ – சேகர் பந்தோபாத்யாயாவின்  (தமிழில்: அப்பணசாமி) குறுநூல் குறித்த பதிவு.)

 
    ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுள்ளன. வருண தர்மத்தை கட்டி சாதியை வளர்க்கும் வைதீக மத நிறுவனங்களுக்குள்ளேயும் வெளியேயும் பல கலகங்கள் வரலாற்றின் நெடுகிலும் நடைபெற்றுள்ளன. நம்மூரில் நந்தன் செய்த கலகத்தைப் போல கிழக்கு வங்கத்தில் அந்த்யஜா  என்கிற தீண்டத்தகாத சமூகம் மதத்தினூடாகவே இயக்கம் கண்டு தங்களது உரிமைகளை வென்றெடுத்ததை இக்குறுநூல் விளக்குகிறது.
    இம்மக்கள் ஏற்படுத்திய ‘நாமசூத்திரர் இயக்கம்’ மற்றும் அவர்களின் போராட்டங்கள் பற்றிப்பேசும் இக் குறுநூல், பாசுதேவ் சட்டோபாத்யாயா எழுதிய ‘அதிருப்தியும் ஒருமித்த கருத்தும்’ (Dissent and Consensus) என்ற நூலின் (1989) அடிப்படையில் சேகர் பந்தோபாத்யாயா (2005) எழுதிய சிறு வெளியீட்டை அப்பணசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  தொல்குடி மக்களான இவர்களை வைதீக இந்து மதம் ‘சண்டாளர்கள்’ என்று பெயரிட்டுத் தீண்டத்தகாதவர்களாக ஆக்கியது. அந்த மதத்திற்குள்ளாக புதுக்கட்டமைப்பை உருவாக்கி தமக்கான உரிமைகளை நிலைநாட்டிய வரலாற்றை இந்நூல் மிகச்சுருக்கமாகப் பதிவு செய்கிறது. 
    அந்த்யஜா என்ற தீண்டத்தாகாத சமூகமாக ஆக்கப்பட்ட ‘சண்டாளர்கள்’ என்னும் இம்மக்கள் கிழக்கு வங்கத்தின் சதுப்புநிலப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள். ஆண்டின் பாதி நாட்கள் வெள்ளத்தால் மூழ்கியிருக்கும் இச்சதுப்புநிலப் பகுதியில் மீன் பிடித்தல், பரிசல் ஓட்டுதல், தச்சு வேலை, எண்ணெய் ஆட்டுதல் போன்ற வேலைகளைச் செய்து வந்தனர்.
   சதுப்பு நிலங்களும் வனங்களும் வேளாண் விரிவாக்கத்தில் விளைநிலங்களாக மாற்றம் பெற்றதால் இவர்கள் வேளாண் சமூகமாக மாற்றம்,அடைந்தனர். ஆனால்  நிலவுரிமையும் மூலதனமும் இவர்களிடம் இல்லை. மாறாக  நிலம் உயர்த்தப்பட்ட சாதி இந்துக்கள், பார்ப்பனர்கள் ஆகியோரிடமே குவிந்திருந்தது. எனவே வேளாண்மை விரிவாக்கத்தின் மூலம் ஒருசிலர் நிலவுடைமையாளராக மாறியதைத் தவிர இவர்களால் முழுப்பயனையும் பெற இயலவில்லை.  
   நாமசூத்திர மக்கள் மீது திணிக்கப்பட்ட இழிவுகள் சொல்லில் அடங்காதவை. சமஸ்கிருத அறிஞர்கள் இம்மக்களை ‘சாதி கெட்டவர்கள்’, அடிமைகள் என்றெல்லாம் அழைக்கின்றனர். பார்ப்பனர்களுக்கு தொண்டூழியம் செய்துவந்த இவர்கள் ‘அந்தேபாசி’ அல்லது ‘நகரத்திற்கு வெளியே வாழ வேண்டியவர்கள்’ என்று ஒதுக்கப்பட்டனர். மநு இவர்களை ‘மனிதர்களில் கீழானவர்கள்’ என்று பட்டியலிட்டான். சூத்திர ஆணுக்கும் பார்ப்பனப் பெண்ணுக்கும் முறைகேடான உறவின் மூலம் பிறந்தவர்கள், இவர்களைத் தொட்டால் தீட்டு என மநு நீதி சமைக்கப்பட்டது. (பக்.18)
  19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இம்மக்களில் பலர் கிருஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறினர். இந்து மதத்தில் நீடித்தவர்கள் கடும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டனர். இவர்களது மத, சமூகச் சடங்குகளை நிறைவேற்ற தனியே சண்டாள அல்லது பர்னா பிராமணர்கள் இருந்தனர். அவர்களும் நாம சூத்திரர்களைப் போல சாதியில் கீழானவர்களாக மதிக்கப்பட்டனர். நாம சூத்திரர்கள் விருந்துகளில் தனியே  அமரவும், இலைகளைத் தாங்களே எடுக்கவும் வேண்டியிருந்தது. இவர்களது கையிலிருந்து உணவு மற்றும் குடிநீரை உயர்த்தப்பட்ட சாதி இந்துக்கள் வாங்குவதில்லை.
    1870 களில் இவர்களின் முதற்கட்டப் போராட்டம் தோல்வியில் முடிய புதிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கவும் அதன் மூலம் சமூக விழிப்புணர்வை உண்டுபண்ணவும் திட்டமிட்டனர். அதன்படி ஆசான் ஹரிசந்த் தாகூர் வைணவத்தில் ‘மதுவா’ என்னும் புதுப்பிரிவை கட்டமைத்தார். இப்பிரிவு வைணவத்தைவிட தாராளமானதாகவும் சாதியம் இல்லாத, ஆண்-பெண் சமஉரிமையை அங்கீகரிக்கும் கூட்டு வழிபாட்டு முறையாக இது இருந்தது.
   1887 -ல் ஹரிசந்த் தாகூர் மறைவிற்குப் பின் அவரது மகன் குருசந்த் புதிய ஆசானானார். இவரது தலைமையின் கீழ் ‘மதுவா; பிரிவு இன்னும் வளர்ந்தது. குடும்ப தர்மம், பெண்களின் கற்பு, ஆண்களின் முறையான பாலுறவு, ஒழுக்கம், கல்வி முதலியன வலியுறுத்தப்பட்டு இச்சமூகம் உயர்வடைய வழிகோலியது.
   பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை ‘அவுட்சோர்சிங்’ செய்யும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேல்நிலையாக்கம் அல்லது சமஸ்கிருதமயமாதல்  என்றோ அல்லது பகுத்தறிவு வாதச் சொல்லாடல் கொண்டே இவற்றை நிராகரிக்க முடியாது. அவர்களது போராட்டக் களங்களை நாம் வெளியிலிருந்து தீர்மானிப்பது நல்லதல்ல. அவற்றின் நியாயப்பாடுகளை வேறு கண்ணோட்டத்தில் அணுகவேண்டிய தேவையிருப்பதை இந்நூலை வாசிக்கும்போது சொல்லத் தோன்றுகிறது.
   மதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இவர்கள் நடத்திய போர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் தந்திரோபயமாகவே அணுகப்படவேண்டும் என்பதையும் இந்நூல் உணர்த்துகிறது. 
  1905 –ல் கர்சன் பிரபுவின் வங்கப்பிரிவினையால் இந்தியாவெங்கும் தேசிய இயக்கம் பிரவாகமெடுத்தது என்றும் அதன் பின்னால் (1906 கொல்கத்தா காங்கிரஸ் மாநாடு) சுதேசி இயக்கம் இங்கே வீறுகொண்டெழுந்தது என்றும்  மையநீரோட்ட தேசிய இயக்க வரலாற்றெழுதியல் ஒற்றைக்குரலாக முன் வைக்கிறது. சுதேசி இயக்கத்தைப் புறக்கணித்த நாமசூத்திரர்கள் இயக்கமும்,  அது கட்டமைத்த ‘மதுவா’ வைணவப் பிரிவும் கிருஸ்தவ, இஸ்லாம் மதங்களுடன் இணக்கமான நிலைப்பாட்டுடன் செயலாற்றின. ஆதிக்க வைதீக இந்து மத எதிர்ப்பில் சமரசமின்றி இயங்கின. தற்கால ஒடுக்கப்பட்ட இயக்கங்கள் இவற்றிலிருந்து பாடம் கற்பதில் தவறில்லை.
   தேசிய இயக்கத் தலைவர்கள்  சுதேசிப் போராட்டத்தின் போது மிகவும் இழிவான பேச்சுக்களைப் பேசினர். சமூகச் சலுகைகள் உள்ளிட்ட இதர சலுகைகள் வழங்கப்படுவதாக வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. உப்பில் பசு, பன்றிக் கொழுப்பு, சர்க்கரையில் பசு மாட்டு எலும்புகள் சேர்க்கப்படுவதாகவும் வதந்தி பரப்பப்பட்டது. அந்நியப் பொருள்கள் விற்பனை தடை செய்யப்பட்டது. மீறினால் கடும் அபராதமும் செருப்படியும் வழங்கப்பட்டது. திருவதாங்கூர் சமஸ்தான தோள்சீலைப் போராட்டத்தில் மார்பை மறைத்தப் பெண்கள் ஆடைகளைக் களைந்து அவமானப்படுத்தப்பட்டனர். அதைப்போல நிலைமை அந்நியத்துணி உடுத்திய பெண்களுக்கு ஏற்பட்டது.
  இந்தச் சூழ்நிலையில் தேசியவாத வன்முறைகளுக்கு எதிராகவும் சுதேசி இயக்கத்தை எதிர்த்தும் ஆசான் குருசந்த், அவரது மகன் சசி பூஷண் மற்றும் நாமசூத்திர போராட்டக்காரர்கள் மிகவும் திறமையாக எதிர்கொண்டனர்.
   இங்கு சுதேசி இயக்கமென்பது உயர்சாதி, படித்த ஜமீன்களின் முழக்கம். இவர்கள் நாமசூத்திரர்களை பன்னெடுங்காலமாக புறக்கணிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர். எனவே சுதேசி இயக்கம் புறக்கணிக்கப்பட வேண்டியது, என காரணங்கள் மக்கள் மத்தியில் விளக்கப்பட்டது.
  பிரித்தானிய அரசு நாமசூத்திரர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் லிவர்பூல் உப்பை இலவசமாக வழங்கியது. குறைவாக இவர்கள் வாழும் பகுதிகளில் இவற்றைப் பெறமுடியாமற்போகவே தனிக் குடியிருப்புக்களை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
     1907 –ல் நடந்த நாமசூத்திரர்கள் மாநாட்டில், “இனி உயர்த்தப்பட்ட சாதி இந்துக்களுக்கு ஊழியம் செய்வதில்லை.” என்று முடிவெடுக்கப்பட்டது. ஒருகட்டத்தில் நாமசூத்திரர்கள் இஸ்லாமியர்களிடம் இணைந்து அரிவாள், வேல்கம்பு போன்ற ஆயுதங்களுடன் பார்ப்பனர்கள், காயஸ்தாக்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தும்வரை சென்றது.
  தேசிய இயக்கம் இவர்களோடு சமரசம் செய்துகொள்ள முன்வந்தபோதிலும், இச்சமூகத்தின் முதன்மைக் கோரிக்கையான பிறர் தங்கள் கைகளிலிருந்து உணவையும் நீரையையும் பெற்று அருந்தவேண்டும் என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
   1891 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் போது இவர்கள் ‘நாமசூத்திரர் அல்லது சண்டாளர்’ எனப் பதிவு செய்யப்பட்டனர். 1901 இல் ‘நாமசூத்திரர்’ (சண்டாளர்) என்று பதியப்பட்டது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு 1911 இல் ‘நாமசூத்திரர்’ என்று பதிய கோரிக்கை வைக்கப்பட்டு அதில் வெற்றியும் கிடைத்தது.
   இவ்வாறாக நாம சூத்திரர்கள் தேசிய இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தங்களது போரட்டக் குணத்தின் வாயிலாக தங்களது சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை நிலைநாட்டியதை இக்குறுநூல் நமக்குத் தெரிவிக்கிறது. இன்றைய ஒடுக்கப்பட்டோர் இயக்கங்களை மதிப்பீடு செய்யவும் அவர்களது போராட்ட வடிவங்களைத் தீர்மானிக்கவும் இத்தகைய வரலாறுகள் நமக்கு பயன்படும்.
  அழகான மொழிபெயர்ப்பைத் தந்த தோழர் அப்பணசாமிக்கும், வெளியிட்ட புலம் லோகநாதனுக்கும் நன்றிகள்.
  
வெளியீடு: புலம்
விலை: ரூ. 50
பக்.: 64
முதல்பதிப்பு: டிச. 20104

புலம்,
332/216
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005,
பேசி: 98406 03499
மின்னஞ்சல்: pulam2008@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக