காந்தியும்
இன்குலாப்பும் இணையும் புள்ளி மற்றும் ஜெயா மார்க்ஸ்
மு.சிவகுருநாதன்
தோழர் நெடுவாக்கோட்டை உ. ராஜேந்திரன். மா.லெ. இயக்கவாதி,
ஓய்வு பெற்ற ஆசிரியர், அ.மார்க்சின் நெருங்கிய நண்பர், தோழர். அ.மா. வின் மன்னார்குடி
நினைவுகளைக் கரைய வைப்பவர். அது பற்றிப் பேசும்போது இவரைக் குறிப்பிடத் தவறுவதில்லை
அ.மார்க்ஸ். இரண்டு ராஜேந்திரன்களில் இவர் ஒருவர். மற்றொருவர் வழக்கறிஞர் சிவ.ராஜேந்திரன்.
பல்லாண்டுகளாக உடல்
நலிவுற்று துன்பப்பட்டபோதிலும் கருத்தியல், கொள்கை, வாசிப்பு எதையும் மறக்காமலிருக்கும்
தோழரை பொங்கலன்று (ஜன. 14, 2017) வீட்டிற்குச் சென்று சந்தித்தேன். டயாலிசிஸ் உபகரணங்களுடன்
வீடே மருந்துவமனையாக உள்ளது. நீண்டநாள் பாதிப்பின் உபவிளைவாய் காதுகள் கேட்கும் திறனை
இழந்துவிட்டன. அதனால் மிக சப்தமாகப் பேசுகிறார். சிலேட்டில் எழுதித்தான் அவருடன் உரையாட
முடிகிறது. அவரது துணைவியாரும் மகனும் மருத்துவப்
போராட்டத்தில் உறுதுணையாக இருக்கிறார்கள். இவ்வளவு ஆண்டுகள் சளைக்காமல் போராடும் இவர்களைப்
போற்ற சொற்கள் இல்லை.
சென்னைப் புத்தகக்
காட்சியில் தோழர் கேட்டதன் பேரில் ‘இயல்வாகை’ வெளியிட்ட, அ.கி.வேங்கடசுப்பிரமணியன்
மொழிபெயர்ப்பில் ஜே.சி.குமரப்பாவின் ‘நிலைத்த பொருளாதாரம்’ வாங்கி வந்தேன். அந்நூலை
அவரிடம் அளித்துவிட்டு சிறிது உரையாடித் திரும்பினேன். காந்தி, ஜே.சி.குமரப்பா, இன்குலாப்,
அ.மார்க்ஸ், தய்.கந்தசாமி என்பதாக அவரது உரையாடல் வெளி விரிகிறது.
வீட்டிலேயே முடங்கியிருக்கும் அவரது வாழ்வை முகநூல்
மற்றும் சில புத்தக வாசிப்புகள் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. நீண்ட நேரம்
அமர்ந்து படிப்பது அவரது உடல்நலத்திற்கு இயலாத ஒன்று. செல்போனில் முகநூலை படுத்துக்கொண்டே
படிப்பதற்கு வசதியாக இருக்கிறது தோழருக்கு.
நான் அடிப்படையில்
இயக்கவாதி. அதன் வழியாக, வழிப்பாட்டு மனோநிலையின்றி இன்குலாபின் கவிதைகள், செயல்பாடுகள்
எனக்குப் பிடித்தமானவை. எனது திருமணம் கூட அவரது தலைமையில்தான் நடந்தது. கடைசியில்
அவரைச் சென்று பார்க்க எனது உடல்நலம் ஒத்துழைக்கவில்லை,
என்று சொல்லி இன்குலாபின் கவிதைகளை வாசிக்கச் சொல்லுகிறார். இதுவரையில் இன்குலாபை அவ்வளவாக
வாசித்ததில்லை. இனியாவது வாசிக்க வேண்டும், என்று நினைத்துக் கொள்கிறேன்.
இயக்கக் கருத்தியல் வெளியீடுகளைத் தோளில் சுமந்து
சென்று விற்றிருக்கிறேன். அ.மார்க்ஸ் எழுதிய
‘இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்டுகதைகளை’ ரூ. 3 க்கு விற்றிருக்கிறேன். இயக்க நூல்கள்
தவிர பிறவற்றை விற்கமாட்டேன், என்றும் பெருமையுடன் பதிவு செய்கிறார்.
காந்தியை விரும்பி
வாசிக்க வர்த்தமானர் பதிப்பகம் வெளியிட்ட 20 தொகுதிகளை வாங்கி படுக்கையில் அருகே ஒரு
சிறிய மரப் பீரோவில் வைத்திருக்கிறார். இந்தத் தொகுதிகளை வீட்டுக்குத் தெரியாமல் அப்போதே
வாங்கிவிட்டேன் என்று சொல்லி சிரிக்கிறார். மருத்துவச் செலவிற்கு ஊதியம், சேமிப்பு
அனைத்தையும் தொலைத்த குடும்பம் அது. இருப்பினும் அவரால் சில ஆயிரங்கள் கொடுத்து காந்தி
தொகுப்பை வாங்காமல் இருக்க முடியவில்லை.
எனக்கு ஜே.சி. குமரப்பாவை
ரொம்பப் பிடிக்கும். டிராக்டர் சாணி போடுமா, என்று கேட்டவர் அவர். அவரது சில புத்தகங்களை
வாசித்திருக்கிறேன். இப்புத்தகம் கிடைக்கவில்லை. அதான் உங்களை வாங்கி வரச் சொன்னேன்,
என்று சொல்லி புத்தகங்களைப் பார்க்கிறார்.
வாசிப்புத் தேடல்
அவ்வளவு எளிதில் தீர்ந்துபோகும் ஒன்றா? தூக்குமேடைக்கு முன்பு பகத்சிங்கின் வாசிப்பு
நமக்குத் தெரியுந்தானே. எப்போது வேண்டுமானாலும் சாகலாம். அதற்காக வாசிக்காமல் சாகமுடியுமா
என்ன? இந்த வாசிப்பின் வழியே அவரது ஆயுள் இன்னும் கொஞ்சம் நீளட்டும்.
முகநூலில் பெரும்பாலும்
அக்கப்போர். ஒரு சிலர் சிறப்பாக எழுதுகிறார்கள் என்றும், அ.மார்க்ஸ் மற்றும் சிலர்
எழுதுவதை உடனுக்குடன் படித்துவிடுவதாகவும் சொல்கிறார். அ.மார்க்சின் கருத்துகள் சிலவற்றில்
மாற்றுக்கருத்து உண்டு. இருப்பினும் அவற்றை வெளிப்படையாக பேச நான் விரும்புவதில்லை.
முகநூலில் பழனிச்சாமி (பல்னீஸ்) இவ்வளவு திட்டியிருக்கக் கூடது, என்று வருத்தமடைகிறார்.
தய்.கந்தசாமி நாஞ்சில்
சம்பத் பற்றியெல்லாம் முகநூலில் பதிவிடுகிறார். இதெல்லாம் தேவையா? இவற்றையெல்லாம் பொருள்படுத்தாமல்,
இளைஞர்கள் உருப்படியாக நிறைய எழுதவேண்டும் என்றும் ஆசை கொள்கிறார்.
மகள் என்ன படிக்கிறாள்? என்று வினவ, முதல் வகுப்பு
என சைகை செய்கிறேன். எந்தப்பள்ளியில் படிக்க வைத்தாலும் சி.பி.எஸ்.இ. மற்றும் சிங்கப்பூர்
பாடத்திட்டப் புத்தகங்களை வாங்கி வீட்டிலேயே சொல்லிக்கொடுங்கள். ஆசிரியர்களை நம்பாதீர்கள்.
காந்தியைப் போல நம்மால் இருக்க முடியாதல்லவா! அவர் தனது குழந்தைகளைப் பள்ளிக்கே அனுப்பவில்லை,
என்று சொல்லிச் சிரிக்கிறார்.
ஹாஸ்டல் மாணவர்களுக்கு
சாப்பாடு போட்டதோடு அல்லாமல், அவர்கள் கழற்றிப்போட்ட ஆடைகளையும் துவைத்துப் போட்டவர்
ஜெயா மார்க்ஸ். மதுக்கூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் போதையில் வாந்தியெடுக்க, அவற்றையும்
அவரையும் சுத்தம் செய்ததை என்னால் மறக்க இயலாது. மார்க்ஸ் எல்லாரைப் பற்றியும் எழுதுகிறார். ஏன் ஜெயா
மார்க்ஸ் குறித்து இதுவரை எழுதவேயில்லை? நீங்கள் மார்க்சிடம் சொல்லி எழுதச் சொல்லுங்கள்,
என்று கேட்டுகொள்கிறார்.
தனது உடல்நிலையை
ஒரு கணம் மறந்து இவ்வாறு உரையாடக் கிடைத்த வாய்ப்பு இனிமையான பழம் நினைவுகளைக் கிளறி
விடக்கூடும். இவற்றை அடிக்கடி பேச நேரம் வாய்க்குமா என்ன? இருப்பினும் அவர் உடல்நலம்
கருதி இத்துடன் முடித்துக் கொண்டு, சிலேட்டில் ‘ரெஸ்ட் எடுங்க’ என்று எழுதிக்காட்டி,
கைகுலுக்கிவிட்டு கிளம்புகிறேன்.
தோழர் சொல்வது உண்மைதானே மார்க்ஸ்! ஏன் எழுதவில்லை?
இப்போதும் ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை. இனியாவது எழுதுங்கள் மார்க்ஸ்!
சில ஆண்டுகளுக்கு
முன்பு ‘அ.மார்க்ஸ்: சில மதிப்பீடுகள்’ நூல் வெளியீட்டு விழா முடிந்து வெளியேறும் தருணத்தில்
அப்புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வெளியேறும்போது ஜெயா மார்க்ஸை படமெடுத்தேன்.
அது ஒரு குறியீட்டுப்படம் போல இருக்கிறது. அப்படத்தில் உள்ளதைப் போன்று அ.மார்க்சை
நெஞ்சில் சுமந்து, அவருக்காக இன்னல்கள் பலவற்றையும் சேர்த்தே சுமந்தவர். இன்னும் மார்க்ஸ்
ஒரு குழந்தை மாதிரி. இன்றும் அவர் ஏ.டி.எம். கார்டைக் கூட பயன்படுத்துவதில்லை. குழந்தைமையைச்
சகித்துக் கொள்வதில் ஜெயாவுக்கு ஈடில்லை.
அ.மா. விமர்சனத் தொகுப்பு
வரும்போது அதில் ஜெயா மார்க்சின் நேர்காணல் இடம் பெறவேண்டும் என்று நினைத்தோம். அது
நடக்கவில்லை. வீட்டின் மூலையில் சமையறை இருந்தாலென்ன? மார்க்ஸ் வீட்டு சமையலறையில்
ஒரு சிறிய மரப்பீரோ. அதில் மார்க்ஸ் நூல்கள் அனைத்தும் இருக்கும். அச்சில் இல்லாத நூல்கள்,
நண்பர்களுக்கு தேவைப்படும் நூல்கள் அவ்வப்போது இங்கிருந்து ‘சுட’ப்படும். நான் இருமுறை
‘என்ன நடக்கிறது, காஷ்மீரில்’ இரண்டாம் பதிப்பை அங்கிருந்துதான் மார்க்ஸ் சுட்டுக்கொடுத்தார்.
எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. பிரான்சிலிருந்து
சுகன் கனகசபை ஜெயாவுடன் அவரது தங்கை இல்லத் திருமணத்திற்கு மன்னார்குடி வந்திருந்த
சமயம், ஒருநாள் பகற்பொழுதில் சுகனை தஞ்சை அழைத்துச் செல்ல பைக்கில் சென்றிருந்தேன்.
தஞ்சைக்கு பைக்கில் செல்ல வேண்டாம். பஸ்சில்தான் போக வேண்டும். பாத்து, பத்திரமாகச்
சென்று வாங்க, என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
இவ்வளவுக்கும் சுகனோ,
நானோ சிறு குழந்தைகள் இல்லை. நாங்கள் மாலையில் வீடு திரும்பும் வரையில் அவர் நிலைகொள்ளா
தவிப்பை உணரமுடிந்தது. சுகனது கடவுச்சீட்டு, வீசா ஆகியவற்றை சென்னையில் வைத்துவிட்ட
பதற்றம் வேறு அவரை வாட்டியது.
அன்றுதான் தஞ்சையில் ‘சௌந்தர சுகன்’ இதழை வாங்கி,
சுகனைத் தொடர்பு கொண்டு சந்திக்க முயன்றோம். அவர் வெளியூரில் இருந்ததால் அந்த வாய்ப்பு
கிட்டவில்லை, அதன் பிறகும்.
தனது அம்மாவைப் பற்றி
அதிகம் எழுதியதில்லை என்று அடிக்கடி சொல்லும் மார்க்ஸ், அவரைப் பற்றி சில நேரங்களில்
எழுதியிருக்கிறார். ஆனால் ஜெயா மார்க்ஸ்? இனி
எழுதுங்கள் மார்க்ஸ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக