திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளின் அரசியல் பின்னணி
மு.சிவகுருநாதன்
மு.சிவகுருநாதன்
சசிகலாவை அ.இ.அதி.மு.க. பொதுச் செயலாளராக்கவும் முதல்வராக்கவும் கருத்தொற்றுமைப் பரப்புரை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ஊடகங்களுக்குப் பெரும்பங்குண்டு. இதன்மூலம் ஒத்தக் கருத்து என்பதான பாவனைகளும் மாற்றுக்கருத்துகளை மூழ்கடிக்கும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கிறது.
கட்சிக்குள் நடக்கும் இந்த பாவனைகளாவது தொலைந்து போகட்டும் என்று விட்டு விடலாம். பொதுவெளியில் இதற்கென திட்டமிட்டு உருவாக்கப்படும் வதந்திகள் மிக மோசமானவை. இந்துத்துவப் பரப்புரையாளர்கள் செய்யும் சமூக வலைத்தளப் பரப்புரைகளுக்கு இணையானதாக இது உள்ளது.
கட்சிக்குள் இணக்கமான சூழல்கள் உருவான பின்பு பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது. அவ்வாறான கருத்துருவாக்க வதந்திகளையும் நமது கேள்விகளையும் சிலவற்றைத் தொகுப்போம்.
ஒன்று:
சசிகலா முதல்வரானதும் முதல் கையெழுத்து மதுவிலக்கிற்குத்தான்!
‘மிடாஸ்’ சாராயத் தொழிற்சாலையில் சசிகலா, ஜெ.ஜெயலலிதா, ‘சோ’ ராமசாமி ஆகியோரின் பங்கு என்ன? இப்போதெல்லாம் ஊடகங்களும் பிறரும் இதைப் பற்றைப் பேசுவதில்லையே, ஏன்? அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வான டொனால்ட் ட்ரம்ப் அரசியல் பரிச்சயமற்ற தொழிலதிபர் என்று பக்கம் பக்கமாகப் பேசும் ஊடகங்கள் இங்கு வாய் திறப்பதில்லை. இதுதான் இங்கு தகுதியோ என்னவோ! தி.மு.க. காரர்கள் நடத்து சாராய ஆலைகள் தனிக்கணக்கு.
இரண்டு:
ஜெயலலிதா மரணத்தையொட்டி இறந்த தொண்டர்களின் வீடுகளுக்கு சசிகலா நேரில் சென்று ஆறுதல் சொல்லப் போகிறார்!
தமிழகமெங்கும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மடிந்துள்ளனரே! இவர்களைப் பற்றி ஏதேனும் துரும்பு அசைக்கப்பட்டதுண்டா? விலையில்லாதப் பொங்கல் பையுடன் இவர்களது வாழ்வு முடிந்துபோகும் ஒன்றா?
கரும்பு விவசாயிகளின் உழைப்பைச் (கரும்புச் சக்கை) சாராயமாக்கி கொள்ளையடிக்கும் இவர்கள் கரும்பு விவசாயிகளுக்கு உரியவிலை கிடைக்க ஏதாவது செய்வததுண்டா?
மூன்று:
சி, டி பிரிவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பொங்கல் போனஸ் ரூ. 7000, ஏ, பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ. 3000 வழங்கத் திட்டம்.
நான்கு:
பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) சசிகலா முதல்வரானதும் ரத்து செய்யப்படுகிறது.
அய்ந்து:
ஏழாவது ஊதியக்குழுவில் பரிந்துரைகள் உடன் அமல்!
இவைகள் நெடுநாளைய கோரிக்கைகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதை நிறைவேற்றுவதற்கு சசிகலா அவதாரமெடுக்க வேண்டிய அவசியமென்ன? இத்தகைய கருத்துருவாக்கப் பின்னணியில் கேவலமான அரசியல் இதுதான்.
வடகிழக்குப் பருவமழை முற்றாகப் பொய்த்துவிட்டது. 1876 –ல் அதாவது 140 ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்த மழைப்பொய்ப்பு மீண்டும் நடந்துள்ளது. இதன் விளைவுகளை கொஞ்ச நஞ்சமல்ல. இது விவசாயிகளின் பிர்ச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை. இதைப் பற்றியெல்லாம் அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கவலைப்பட வேண்டாம் என்று நினைப்பது மிகப்பெரிய வன்முறையாகவே இருக்கும்.
பணமதிப்பு நீக்கத்தை வைகோ வரவேற்றுள்ளராம்! “நான் எடுத்த மிகத்தவறான முடிவு இது”, என்று ஊடகத்தின் முன்பு அழுது நடிக்க எவ்வளவு காலமாகும்? இவ்வாறு நடக்காது என்பதற்கு ஏதாவது உத்திரவாதம் உண்டா?
மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளை தங்களுக்குத் தாங்களே புகழ்ந்து அறிக்கைகள், கருத்துகள், கணிப்புகள் வெளியிட்டுக் கொண்டுள்ளனர். அதுபோலவே தமிழகத்தில் நடக்கும் அரசியல் கூத்துகளுக்கு அளவில்லை. இந்நிலை என்று மாறுமோ?
இவர்கள் உருவாக்கும் இந்த கருத்துருவாக்கங்கள் எவ்வளவு காலம் தாங்கும் என்பது அடுத்து வருகின்ற தேர்தல்கள் நிருபிக்கும். நமது மக்களாட்சி அமைப்பில் வேறு வழிகள் இல்லையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக