புதன், ஜனவரி 04, 2017

புவியியல் அறிவுத் தேடலும் கொஞ்சம் நட்பும்…

புவியியல் அறிவுத் தேடலும் கொஞ்சம் நட்பும்…

மு.சிவகுருநாதன்




       டிசம்பர் 31, 2016 ‘தி இந்து’ நாளிதழில் “மழையை முன்கூட்டியே கணிக்கும் பள்ளி ஆசிரியர்” என்ற தலைப்பில் தோழர் ந.செல்வகுமாரைப் பற்றிய செய்தி வெளியானது. அச்செய்தி எனது பழைய பள்ளித் தோழரைப் பற்றியது. எனவே பழம் நினைவுகளைக் கிளறிவிட்டது.

    தற்போது மன்னார்குடிக்கு அருகே செருமங்கலம் ஊ.ஒ.ந. பள்ளியில் பணியாற்றும் செல்வகுமாரின் பூர்வீகம் வேதாரண்யத்தைச் சேர்ந்த தகட்டூர் கிராமம். திருவாரூருக்கு நட்ராஜ் மெஸ்சைப் போல தகட்டூருக்கு நட்ராஜ் ஓட்டல் மிகப் பிரசித்தம்.

     வேதாரண்யத்திலிருந்து வாய்மேடு வழியாக திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழித்தடங்களில் செல்லும் அநேக பேருந்துகளும் இதர வாகனங்களும் நின்று சாப்பிட்டு தேநீர், காபி குடித்துச் செல்லும் ஓட்டலது. ஓட்டல் என்று சொல்வதைவிட கொஞ்சம் பெரிய டீக்கடை என்று சொல்வதே பொருத்தமானது என்று நினைக்கிறேன்.

    அதன் ருசியே அந்த குக்கிராமத்தில் பேருந்துகளை நிற்கவைத்தது. இந்தக் கடை செல்வகுமாரின் அப்பா மற்றும் சகோதரர்களால் நடத்தப்பட்டது. இன்று இயங்கி வருகிறது.

ந. செல்வகுமார்  நன்றி: தி இந்து


    செல்வகுமார் என்னுடன் ஆயக்காரன்புலம் அரசு மேனிலைப்பள்ளியில் மேனிலை வகுப்புகளில் படித்தவர். ந.செல்வகுமார், சி.ஜேம்ஸ் பீட்டர், கணேஷ் ஆகிய நண்பர்களுடன் நால்வர் அணியாக செயல்பட்ட காலமது. அன்றைய தமிழக அரசியலில் ஒரு நால்வர் அணி செயல்பட்டது நினைவிருக்கலாம்.

    +2 க்குப் பிறகு நெருங்கிய தொடர்பின்றிப் போனது. 2010 என்று நினைக்கிறேன். செல்வகுமாரின் அலைபேசியைத் தேடிக் கண்டுபிடித்துத் தொடர்பு கொண்டேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. தற்போது அவரது அலைபேசி எண்ணும் கூட என்னிடம் இல்லை.

     பெரிய புவியியல் படிப்புகள் எல்லாம் படிக்காத நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டு சுய ஆர்வம், அறிவுத் தேடலை மட்டும் முன்னிறுத்தி இயற்கை புவியியல் ஆய்வாளராக வளர்ந்துள்ள தோழர் செல்வகுமாரை வாழ்த்துகின்றேன். பாராட்டுகள்.

    எப்படி உடல்நலம் குறித்த அறிவு நமக்கு அவசியமாக இருக்கிறதோ, அதுபோல புவியியல் சார்ந்த அறிவு நமது வாழ்வியலுக்கு இன்றியமையாத ஒன்றாகும். இயற்கையோடு இயைந்த நமது வாழ்வியல் பல்வேறு நிலவியல் அம்சங்களைக் கொண்டது. பள்ளிக் கல்விப் பாடநூல்கள் இவற்றை மிகவும் செயற்கையாக, மொண்ணைத்தனமாக மாற்றிவிட்டன. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு புவியியல் பாடமெடுத்துப் படிப்பவர்கள் மிகக்குறைவு.

    பாடநூல் அறிவைவிட சுயகல்வியால் அனுபவத்தால் பெறும் அறிவிற்கு ஈடில்லை. அதுதான் செல்வகுமாரின் பயணத்தில் முதன்மையாக இருந்திருக்க முடியும். எனவேதான் ஆசிரியர்கள் வெறும் பாடநூற்களில் முடங்கிப் போகாமல் சுயகல்வியை நோக்கிப் பயணிக்க வேண்டுமாய் அடிக்கடி வலியுறுத்த வேண்டியுள்ளது.

    இன்னொரு புறத்தைப் பற்றியும் இந்நேரத்தில் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. புவியியல் படித்தோரும் படிக்காதவர்களும் இணைந்து வலியுறுத்துகின்ற ஒடு காரியம் உண்டு. கங்கை – காவிரி இணைப்பு என்பதே அது. இந்தியப் புவியியல் அமைப்பு பற்றிய அடிப்படைப் புரிதலின்றிப் பலரால் முன்வைக்கப்படும் வெற்று அரசியல் முழக்கமாக இது மாறியுள்ளது. இதற்கு மறைந்த அப்துல் கலாம் கூட விதிவிலக்கல்ல என்பது வருந்தற்குரிய செய்தி.

     இந்திய போன்ற நாட்டின் இயற்கை அமைப்பு, பன்மைத்துவம் போன்ற எவ்வித அக்கறையும் இல்லாது இவ்வாறு எழுப்பப்படுவதும் இவற்றிற்கு பொறுப்பாக எதிர்வினையாற்றக் கூடியவர்களும் குறைவாக இருப்பதும் பொய்மைகளை அரங்கேற வைக்கிறது. இது போன்ற பெரிய திட்டங்களில் பின்னணி, அதனால் ஏற்படும் இடையூறுகள் ஒருபுறமிருக்க, அதனை வளைக்க அரசியல்வாதிகளும் கார்ப்பரேட்களும் சூழ்ச்சிகளனைத்தும் எல்லை கடந்தவை.


இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்

திருவாரூர்

https://www.facebook.com/mu.sivagurunathan

http://musivagurunathan.blogspot.in/

https://twitter.com/msivagurunathan

பன்மை

https://panmai2010.wordpress.com/

மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

வாட்ஸ் அப்: 9842802010

செல்: 9842402010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக