புதன், ஜனவரி 18, 2017

வாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்

வாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்




பொ. இரத்தினம்,



வழக்கறிஞர்,


அமைப்பாளர்


பகத்சிங் மக்கள் சங்கம்


அலைபேசி: 94434 58118





        கடந்த சில ஆண்டுகளாக பண்பாடு, கலாச்சாரம், வீர விளையாட்டு என்கிற போர்வையில் ஜல்லிக்கட்டு பற்றிய அதீத புனைவுகள் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் எழுச்சி என போலியான சித்தரிப்புகள் அரங்கேற்றப்படுகின்றன. ஜல்லிக்கட்டு பற்றி இங்கு பரப்பப் படுபவை பெரும்பாலும் பொய், பித்தலாட்ட மோசடிகளே.



         கலாச்சாரம், வீரத்தன்மை போன்றவற்றைச் சமூகம் சார்ந்ததாக சித்தரிப்பது ஆதிக்க சாதியினரின் வேலை. இந்த ஆதிக்க சாதியினரின் கொம்பு சீவும் வேலைகளுக்கு இன்றைய இளைஞர்கள் பலியாவது வேதனை. சாதியக் கலாச்சாரத்தை வளர்க்க இம்மாதிரியான காட்டுமிராண்டித்தனங்கள் பரப்பப் படுகின்றன. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைத் தூண்டிவிட்டு அரசியல் செய்கிறார்கள். அரசியலை ஒரு விபச்சாரமாக்கி அதன் பலனை அறுவடை செய்து அரசியல் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்க வைக்க இவைகள் நடத்தப்படுகின்றன.



         ஜல்லிக்கட்டில் அனைத்து சாதியினரும் இணையும் புள்ளி ஏதுமில்லை. தமிழ் சமூகம் என்று ஒருங்கிணைக்கப்பட்ட சமூகம் ஒன்று இல்லை. இச்சமூகம் ஒரு தாறுமாறான கும்பல். தமிழ் மொழி பேசுவோர் மட்டுமே உண்டு. இதிலுள்ள சீரழிவுகள், அசிங்கங்கள் ஏராளம். இவற்றைச் சீர்படுத்த யாருக்கும் அக்கறை இல்லை.



       தமிழ்ச்சமூகம் பன்னெடுங்காலமாக படிநிலைச் சாதியச் சமூகமாகவே உள்ளது. இதன் அடுக்குகளில் ஆதிக்க சாதிவெறி குடிகொண்டுள்ளது. தலித்களை இழிவுபடுத்தப் பயன்படும் வசைமொழிகள் இதனை உணர்த்தும். ‘தமிழால் ஒன்றுபடுவோம்’ என்ற அழைப்பில் தோழமை மற்றும் சமத்துவ உணர்வு வெளிப்படவில்லை. மாறாக படிநிலைச் சாதியத்தின் ஆதிக்க உணர்வே மிஞ்சி நிற்கிறது.



       இந்த ஒழுக்கமற்றச் சூழலில் பெண்களுக்கு பெரும் ஆபத்து நிகழ்கிறது. அவற்றிற்காகப் போராட யாருமில்லை. பெண்களே கூட ஜல்லிக்கட்டுகாகப் போராட பழக்கப் படுத்தப்படுகின்றனர். இதற்கு சினிமா ஒரு முதன்மைக் காரணமாகும்.


      மக்களைக் குழப்பி அதில் மீன்பிடிக்கும், ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிறுவனமாக இன்று சினிமா வளர்ந்துள்ளது. இது வெளியே சொல்ல நா கூசுமளவிற்கு சீரழிவுகளை உள்ளடக்கிய நிறுவனமாகும். ஒழுக்கக்கேடு, ஒழுங்கீனங்களை வளர்க்கும் இந்நிறுவனங்களும் அவற்றை சமூகத்தில் கட்டிக்காக்க அரசியற் கட்சிகளும் பேருதவி புரிகின்றன.



      ஒட்டுமொத்தத் தமிழ்க் கலாச்சாரம், போராட்டம் என்று கூவுபவர்கள் கூடங்குளம் போன்ற மக்கள் போராட்டம் நடைபெறும் பொது எங்கே போயினர்? வார இறுதி மற்றும் பொங்கல் விடுமுறைச் சுற்றுலா போன்றதுதான் இவர்களது போராட்டங்கள்.


       சேவல் சண்டையைப் போல ஜல்லிக்கட்டும் கொடியது. இதைப் பார்க்கும் குழந்தைகள் எவ்வாறு வளர்வார்கள்? குழந்தைகளைப் போல வளர்க்கிறோம், அன்பாகத் தழுவுகிறோம் என்பதெல்லாம் அபத்தம். இன்றைய சமூகத்தில் குழந்தைகள் குழந்தைகளாக வளர்க்கப்படாமல் தனியார் பள்ளி என்னும் வதை முகாமுக்கு அனுப்பிவிட்டு காளைகளைக் குழந்தையாக மாற்றுவதால் என்ன பலன்?


       காளைகளை உசுப்பேற்றி, வெறியூட்டி அவற்றை விரட்டுவது எப்படி கலாச்சாரமாக இருக்க முடியும்? எனவே இது காட்டுமிராண்டித்தனமான வேலைத்திட்டமே. கும்மாளப்படுத்திச் சுகம் காணுதலும் ஆணாதிக்கமும் இங்கு கலாச்சாரமாக கட்டமைக்கப்படுகிறது.


          தீண்டாமை, சாதியம், சாதி ஆவண வெறிக் கொலைகள், மணற்கொள்ளை, குடிநீர்ப் பிரச்சினை போன்ற அடிப்படையான சிக்கல்களுக்கு எதிராக இளைஞர்களின் திரட்சியை உருவாக்கும் முயற்சி ஏன் இல்லை? அனைவரும் கேடுகளைக் காப்பாற்றும் சூதாடிகள். அரசியல் மது குடித்தக் குரங்காய் மாறியுள்ளது. இந்த அரசியல் சமூகத்தை இவ்வாறு வழிகாட்டுகிறது. மாயைகள் மூலம் தமிழர்களைச் சீரழிக்கும் சதி நடக்கிறது.



       கல்வி உரிமைகள் பறிபோகின்றன. நீட் தேர்வுகள் போன்ற அனைத்திந்தியத் தேர்வுகள் மூலம் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பறிக்கப்படப் போகிறது. 69% இடஒதுக்கீடு கூட இங்கு இல்லாமற் போகக்கூடும். மாநில சுயாட்சி வெற்று முழக்கமாகவே இருக்கும்.



       தமிழகத்து மணலைக் கொண்டு காவிரியில் அணை கட்டுகிறார்கள். விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இல்லை. அடுத்தத் தலைமுறைகளைக் காப்பாற்ற இவர்கள் தயாராக இல்லை. மாறாக சமூகத்தை மேலும் மேலும் சீரழிவிற்குள் தள்ளுகிறார்கள். படித்த, நகரம் சார்ந்த செல்வம் கொழிப்போர்கள், சமூகத் துரோகிகள் இணைகிறார்கள். ஆதிக்க சாதியினர் தங்களது பிடியை விடத் தயாராக இல்லை. சாதியொழிப்பை முன்னெடுக்காமல் அதைக் கட்டிக்காக்கும் உங்களை விட கேடுகெட்டவர்கள் யாரும் இருக்க முடியாது.


        மனிதன் இங்கு மனிதனாக வளரவில்லை. அரசியல் சட்டத்திற்கு எதிரான பித்தலாட்டம் நடைபெறுகிறது. சமூகத்தைப் போலவே நீதிமன்றங்களும் சாதி காப்பாற்றுபவையாக உள்ளன. பல நீதிபதிகளும் சாதியவாதிகளாக இருக்கின்றனர். உலகிலேயே அதிக அத்தியாயங்கள் கொண்ட இந்திய அரசியல் சட்டம் மாமனிதர் அம்பேதகரின் உழைப்பால் உருவானது. இதை சாதியவாதிகள் சீரழிக்க அனுமதிக்கக் கூடாது.



        ஜல்லிக்கட்டு காளைகள் வேறு; ‘பொலி’ காளைகள் வேறு. ஒருநாள் கூத்திற்கு இக்காளைகளை வெறியூட்டி, இனவிருத்திக்கு விடாது வளர்க்கிறார்கள். இதை வளர்ப்பவர்கள் பெற்றவர்களுக்குக் கூட பொறுப்பாக இருப்பதில்லை. பிறகு சமூகத்திற்கு எப்படி இருப்பார்கள்? சாதிய, ஆணாதிக்க வெறியர்களாகவுமே இவர்கள் இருப்பர்.



      நிலமானியச் சமூகம் இன்றில்லை. நவீன சமூகத்தில் காளைகளின் தேவை குறைந்துள்ளது. இதன் தேவை இனவிருத்திக்கு விந்து எடுப்பது மட்டுமே. காட்டுமிராண்டித்தனமான, சாதிய ஜல்லிக்கட்டை நடத்தித்தான் இந்த இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதல்ல. அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. கபடி போன்ற விளையாட்டுகளில், வாகனப் பயணங்களில் அடிபடுதல், விபத்து, மரணம் இல்லையா? என்று எதிர்க்கேள்வி கேட்பதைவிட அபத்தம் வேறிருக்க முடியாது. இத்தகைய ஒப்பீடுகள் நியாயமற்றவை.



      இன்று தமிழக்கத்தைப் பாதிக்கும் சூழலியல் பிரச்சினைகள் ஏராளம். இவற்றில் விவசாயத்தில் அழிவும் அடங்கியுள்ளது. அவற்றையெல்லாம் வேண்டுமென்றே புறந்தள்ளி, ஜல்லிக்கட்டை சர்வரோக நிவாரணியாக முன்னிலைப்படுத்துவது மிகப்பெரிய சதி, பித்தலாட்டம், மோசடி.



        இன்று ‘பீட்டா’ அமைப்பைப் பற்றிப் பேசுபவர்கள் பெப்சி, கோக் ஆகியவற்றின் கொள்ளைகளை இதுவரையில் கண்டுகொண்டதில்லை. இது இல்லாமல் இவர்களது ஒரு நாள் கழியாது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இங்கு துரும்பும் அசைக்கப்பட்டதுண்டா?



         எல்லாரும் மனிதராருகுங்கள். வாழ்வதற்கு யோசியுங்கள். உண்மையான வேளாண் சிக்கலை உணருங்கள். விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க செய்யவேண்டிய முன்னெடுப்புகளைக் கண்டடையுங்கள். ஆணாதிக்க, சாதிவெறி மமதைகளையும் பொய், பித்தலாட்டங்களையும் உடைத்தெறியுங்கள். கலாச்சாரம் என்ற பெயரிலான புனைவுகளை நம்பாமல், சமத்துவ சமூகம் கட்டெழுப்ப உதவுங்கள்.


      எனவேதான் மாமனிதர் அம்பேத்கரின் ஊக்கத்துடன், உற்சாகத்தையும் கொடுக்கும் வழிகாட்டலை உள்வாங்கவேண்டும். ‘கற்பி, ஒன்று சேர், போராடு’ என்பதும் “நம்மிடம் நேர்மை இருக்கின்றது. நம்மிடம் முழுமைபெற்ற நியாயம் இருக்கின்றது. நமது மாண்பினை மீட்டெடுக்க நாம் ஏன் தயங்கவேண்டும்?”, என ஒடுக்கப்பட்ட மக்களின் படைத்தளபதியாக வாழ்ந்து காட்டினார்.


எனவே நாமும் சமூக இயக்கம் நடத்துவோம்!


சமூக நீதி மறுக்கும் தளங்களை நொறுக்குவோம்!


அரசியல் சட்ட நோக்கங்களுக்காக செயல்படுத்துவோம்!


அரசியல் சீரழிவுகளை கலையெடுப்போம்!


ஆதிக்கமற்ற சமூகக் கட்டமைப்பை உருவாக்குவோம்!

1 கருத்து:

Krishna 9884448969 சொன்னது…

Aiyya.. Miga azhamana karuthugal!!
Ungalaipondra eduthuraikum periyor iladhathey indraya samooga kedu.

கருத்துரையிடுக