கல்வி உரிமையில் தலையிட இவர்கள் யார்?
மு.சிவகுருநாதன்
வாட்ஸ் அப்பில் தோழர் சக்திவேல் கீழ்க்கண்ட பதிவென்று இட்டிருந்தார்.
“அன்புசால் கல்வியாளர்களே, 5 - ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி வரவேற்கக் கூடியதல்ல. காரணம் தேர்வு முறை மாற்றப் படவேண்டுமே தவிர தேர்ச்சி முறையினை அல்ல காலத்திற்கேற்ப தேர்வு முறை மாற்றத்தைக் காணவேண்டும் ஆனால் அதுபோல் வரையறைக்குட்பட்டு மாற்றத்தைக் கண்டிருந்த போதும் பொதுவாக சரியாக நடைமுறைப் படுத்தப் படவில்லை தேர்வு முறையினால் ஒழுக்கத்தை உருவாக்க முடியும் என்பதை எவ்வாறு ஏற்க முடியும் தேர்வு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதனை ஏற்க முடியுமா”,
இப்பதிவிற்கு ஆதரவாக நான் ஒரு பதிவை இட்டு அவற்றை பிற ஆசிரியக் குழுக்களுக்கு அனுப்பினேன்.
நமது ஆசிரியர்களில் 80% பேர் பெயிலாக்கும் முறைக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இனி 5 ஆம் வகுப்பிலிருந்து பெயிலாக்கும் நடைமுறை இவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என நம்பலாம். பணி அறத்தைப் பற்றி பேச மறுப்பதைப் போலவே இதைப் பற்றியும் விழிப்புணர்வு உண்டாக்க ஆசிரிய இயக்கங்கள் தவறி விட்டன. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஆசிரியர்கள் போராடும் வாய்ப்புண்டா? (மு.சிவகுருநாதன்)
அதற்கு வந்த எதிர்வினைகள் சிலவற்றையும் நான் அளித்த சில பதில்களையும் இங்கு தருகிறேன். பொதுவாக நம்மவர்கள் பெயர் குறிப்பிட்டு பதிவிடும் ‘கெட்ட பழக்கம்’ இல்லையென்பதால் பெயர்களைக் குறிப்பிட இயலவில்லை. அவர்களது செல் எண்ணைக் குறிப்பிடுவது நாகரிகமல்ல என்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன். என் கருத்துகளுக்கு இறுதியில் அடைப்புக்குறிக்குள் பெயரை இணைத்துள்ளேன்.
கருத்துகளில் உள்ள எழுத்துப் பிழைகளை மட்டும் திருத்தியுள்ளேன். ஒரு கருத்தை தங்கிலீஷில் இருந்து தமிழாக்கியுள்ளேன். வேறெந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
“pass-fail விவாதத்தில் நீங்க இருவர் - சக்திவேல், சிவகுருநாதன் - சொல்வதைக் காட்டிலும் பல விஷயங்கள் பேசப்பட வேண்டும். ஆனால் விவரமான விவாதங்களுக்குத் தளம்?”, (அருணா ரத்னம்)
“ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்க்கும் இவர்கள் மாணவர்களுக்குத் தேர்வு வைத்து பெயிலாக்குவதில் மட்டும் குரூரம் காட்டுவது அநியாயம்”, (மு.சிவகுருநாதன்)
“8 - வது வரை தேர்ச்சி போட சொல்லிட்டு 10 -வது ல பெயில் ஆயிட்டா யார குறை சொல்றாங்க னு பாருங்கள்”.
“ஏன் பத்தாவதுக்கு பொதுத்தேர்வுன்னு கேளுங்க....” , (மு.சிவகுருநாதன்)
“எவ்வளவு முயற்சி பண்ணினாலும். மாணவர்களை முழுவதும் தேர்ச்சி பெற வைப்பது கடினம். மெட்ரிக்குலேஷன் ஐ காலி பண்ணனும். பண்ணா போதும். மாணவர்கள் எண்ணிக்கை உயரும”..
“மாணவர் நலன் கருதி எல்லாம் ஆல் பாஸ் போடல”.
“ஸ்ரெங்க்த் போயிடும்”.
“கல்வி உரிமைச் சட்டம் எதற்காகக் கொண்டு வரப்பட்டது?”, (மு.சிவகுருநாதன்)
“நாம் படிக்கும் போது உள்ள நிலைமை மீண்டும் வர போகிறது. ஆசிரியர்களை குறை சொல்லாமல் இருந்தால் போதுமானது. 10ம் வகுப்பு தேர்வு ரத்தாக வாய்ப்பு இல்லை”.
“ABL முறை நமக்கு மட்டுமே. பல வித பயிற்சி நமக்கு மட்டுமே. ஆங்கில வழியில் இது எதுவுமே இல்லை. 100 மார்க்கை மட்டுமே முடிவு செய்கிறார்கள். அதற்கு ஏன் செயல்வழிகற்றல்?”
“நாம் படிக்கும் போது உள்ள நிலைமை மீண்டும் வர போகிறது. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . வரவேற்க தக்க கருத்து”.
“This step of making students 100% pass till 5th std gives happiness to all the teaching community”.
“எப்ப பார்த்தாலும் டீச்சர்ஸ் சரியில்ல, அதான் மாணவர்கள் படிக்கலன்னு குறை சொல்றது தப்பு”.
“நாம் எவ்வளவுதான் நடத்தினாலும் 100% அவங்க கிளியர் பண்ண முடியாது”.
“எல்லா டீச்சரையும் ஏன் குறை சொல்றீங்க? ஆல்பாஸ் போட்டுருங்க. நடத்துற சிஸ்டத்த மாத்துங்க. கிளி ஜோசியம் பாக்குற மாதிரி கார்டுய போட்டு விட்டுருங்க. டென்ந்த் ரிசல்ட் இல்லன்னா பிரைமெரியை கை காட்டி விடுறது”.
“குறையே சொல்லக்கூடாது என்பது எவ்வளவு பெரிய அதிகாரம்!”, (மு.சிவகுருநாதன்)
“ஒவ்வொரு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் எவ்வளவு மன உளைச்சல் ல வேலை பாக்கிறாங்க னு யாருக்கு தெரியும்”.
“நான் சொன்ன அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் விவாதம் சாத்தியமில்லை.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மூலம் எட்டாம் வகுப்பு முடிய அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது.
இதனால் ஓட்டுனர் உரிமம் பெறுதல், குழந்தைத் தொழிலாளராவது குறைதல், இடைநிற்றல் குறைவு போன்ற நன்மைகள் நடந்தன.
இப்போதைய இந்துத்துவ அரசு புதிய கல்விக்கொள்கை மோசடியின் மூலம் தடுக்க முற்படுகிறது.
இதன் மூலம் ஏழைகளின் கல்வி மற்றும் வாழ்வாதர உரிமை பறி போகிறது. இன்னும் நிறைய.... உண்டு.
இம்முடிவை எதிர்க்காமல் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி இல்லை என்பது அபத்தம்.
ஒன்று: பொதுத்தேர்வே தேவையில்லை.
இரண்டு: அனைத்து வகுப்பிற்கும் பருவமுறை.
பத்தாம் வகுப்பில் பெயிலானவர்கள் சமூக விரோதிகளாக மாறிவிடுவதில்லை.
அவர்களுக்கு உரிய பணியும் வாழ்வும் உண்டு. அத்துடன் எதுவும் முடிந்துவிடுவதில்லை.
ஆனால் ஆறாம் வகுப்பிலேயே மாணவர்களை வெளியேற்றினால் சமூகத்தில் நிறைய சீர்கேடுகளுக்குக் காரணமாக அமையும்.
இதெல்லாம் ஆசிரியர்களைக் குறை கூறும் விஷயமல்ல. நன்றி...
(மு.சிவகுருநாதன்)
“இனி 5 ஆம் வகுப்பிற்கு மாணவர்கள் பாஸ் ஆவதற்கு ஆசிரியர்கள் முயற்சி செய்வது நல்லது அதை விட்டு போராட்டம் தேவையா ?”
“ஆசிரியர்கள் இவ்வளவு பழமைவாதிகளாக இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.. “(மு.சிவகுருநாதன்)
“பெயில் ஆக வேண்டும் என எந்த ஆசிரியரும் நினைப்பதில்லை”.
“மாணவன் நிறைய கற்க வாய்ப்பு ஏற்படும்”.
“அப்புறம் ஏன் இந்த 'பெயிலாக்கும்' அதிகாரம்? ஒரே குப்பையை எத்தனை ஆண்டு படித்தாலும் அறிவு வந்துவிடாது. அறிவு இதில் இல்லை:”, (மு.சிவகுருநாதன்)
“ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்க்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தேர்வு வைத்து பெயிலாக்குவதில் மட்டும் குரூரம் காட்டுவது அநியாயம்”, (மு.சிவகுருநாதன்)
“இன்றைய தேர்ச்சி முறையில் மட்டும் எவ்வாறு அறிவு விளைகிறது?”
“நான் மனப்பாடத்தேர்வுகளும், பாஸ் - பெயிலும் வேண்டாம் என்கிறேன். கல்வியில் அறிவு உண்டாவதாக நான் கருதவில்லை”, (மு.சிவகுருநாதன்)
“தனியார் பள்ளிகளை நாமும் உழைக்க வேண்டும்?”.
“தனியார் பள்ளிகள் எப்படி உழைக்கின்றன என்று விளக்குங்களேன்!” , (மு.சிவகுருநாதன்)
“நீங்கள் காலை 10. 30 -க்குபள்ளி செல்வது மாலை 3 மணிக்கு வீட்டுக்கு செல்வது அப்புறம் எப்படி மாணவர்கள் பாஸ் செய்வார்கள் ? நான் அதை பார்த்திருக்குறேன்”.
“இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று யார் தடுத்தது?”, (மு.சிவகுருநாதன்)
“திறமை உள்ளவர்களுக்கு ஆசிரியர் வேலை இதில் என்ன தவறு அப்புறம் எப்படி திறமை உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க முடியும்?”.
“மனப்பாடம் செய்வதுதான் திறமை என்றால் அது தேவையில்லை..”. (மு.சிவகுருநாதன்)
“அதற்கு தான் நீட்தேர்வு வந்துவிட்டது. 2018 இல் Eng பொது தேர்வு வரபோகிறது. இனி எல்லாவற்றயும் தேர்வு வைத்து வேலை கொடுப்பது நல்ல திட்டம்”.
“பாஸ் பெயில் அந்தந்த மாநில உரிமையை பொருத்து அமையும். தமிழக ஆசிரியர்கள் ஆதரவு தரக்கூடாது என்பதே (பெயில் திட்டம்) என் கருத்து” . (பாலு, தஞ்சை)
பெயிலை எதிர்த்தும் எங்களது கருத்தை ஆதரித்தும் வந்த ஒருசில கருத்துகள். இதுவும் ஒருவருவடையது மட்டுமே.
“பெரும்பான்மையான ஆசிரியர்களின் குரூர விருப்பம் இது. இவர்களா போராடுவார்கள்?”
“இந்தப் பதிவிற்கே வீறுகொண்டு எழுகிறார்கள்!”, (மு.சிவகுருநாதன்)
“மாணவனை மனிதனாகப் பார்ப்பது இல்லை. Fail என்ற சொல்லின் வீரியம் இவர்களுக்குத் தெரியவில்லை”.
“மாணவனுக்கு வைக்கப்படும் தேர்வுகளை முதலில் ஆசிரியரை எழுதச் சொல்ல வேண்டும்”.
“அப்போது கண்டிப்பாகப் போராட்டம் வெடிக்கும்..”, (மு.சிவகுருநாதன்)
“இன்றைய மனப்பாடக் கல்வி முறை யாருக்கு உகந்தது? இந்த முறையில் யார் pass ஆவார்கள்? யார் Fail ஆவார்கள்? கல்வி பெறுவதிலிருந்து யாரையோ வெளியேற்றத் திட்டமிடுகிறார்கள்”.
“புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை ஆசிரியர்கள் மத்தியில் செய்யப்படவேண்டிய தேவையிருக்கிறது. முதலில் ஆசிரியர் சங்கங்களை அழைத்து தெளிவு படுத்த வேண்டும்”.
“காலம் கடந்துவிட்டது”, (மு.சிவகுருநாதன்)
“தலைவர்களே இது குறித்து எதுவும் அறியவில்லை. கல்வி மெல்ல மெல்லத் தனியார்மயத்தை நோக்கி முழுவதுமாக நகரத் தொடங்கியிருக்கிறது”.
இவற்றிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வருவது?
அரசுகள் பழமைவாதத்தை கடைப்பிடிப்பதாவது பரவாயில்லை. ஆசிரியர்கள் அவ்வாறு இருப்பது சமூகத்தை கேடாக்கும். அரசுகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மாற்ற முடியும். ஆசிரியர்கள் அப்படியல்லவே! 58 ஆண்டுகள் அவர்களது பழமைவாத அணுகுமுறை இந்தச் சமூகத்தைப் பாழாக்குமே!
மெக்காலேக் கல்வி விமர்சிக்கும் சிலர் அதைவிட கொடூரமான குருகுலக் கல்வியில் சரணடையும் ஆசிரியர்கள் இருப்பது வேதனை. இவர்கள் பெரும்பான்மையாக இருப்பதுதான் சாபக்கேடு. இன்றைய மத்திய அரசு இவர்களைப் போலவே சிந்திப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல.
ஆசிரியர்களை தேர்வு, மதிப்பெண் என்கிற மந்திரக் கயற்றால் கல்வித்துறையும் அரசுகளும் கட்டிப் போட்டுள்ளன. அவற்றிலிருந்து இவர்களை விடுவிப்பது அவ்வளவு எளிதல்ல.
தரம் பிரிக்கும் மநு தர்ம சூழ்ச்சி, தந்திரம், சமூக நீதியை ஒழித்துக்கட்டும் பின்னணி வேலைகள் ஆகியவற்றை கட்டுடைத்து விளங்கிக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது. மனப்பாடக் கல்வியை முன்னிறுத்தியது ஒருவகையில் வேத பாராயணம் செய்வபவர்கள் முன்னெடுத்த ஒன்று. இவற்றில் அறிவுக்கு ஒன்றுமில்லை. இவற்றை விடாமல் பிடித்தழுவதால் என்ன பலனும் இல்லை.
ஆசிரியர்களின் பெரும்பான்மைக் கருத்தை அரசு சட்டமாக்குகிறது என்று எடுத்துக் கொள்ள இயலாது. ஏனென்றால் நிதி தொடர்பான ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைய இருக்கின்றன. அவற்றைச் செயல்படுத்துவதில் அரசுகள் முனைப்பு காட்டுவதில்லையே!
இதன் மூலம் கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்து கல்வி உரிமையைச் செல்லாக் காசாக அரசு முயல்கிறது. இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைத்து ‘நீட்’ போன்ற மையப்படுத்தப்பட்ட தேர்வுகளின் வாயிலாக மாநில உரிமை, இடஒதுக்கீடு முதலானவற்றையும் பறித்து ஒரு குறிப்பிட்ட வர்க்கம் பலனடைய மத்திய அரசு சதி செய்கிறது.
இந்தச் சதி அல்லது குறுக்கு வழியைப் பின்பற்றை தம்மால் எதையாவது தனதாக்கிக் கொள்ளலாமா, என்கிற நடுத்தர வர்க்க மனநிலை ஆசிரியர்களிடம் இருப்பது மிக மோசமான விளைவுகளை அரசியல், சமூகக் களன்களில் உண்டுபண்ணும்.
புறவயமான, விசாலமான பார்வையை ஆசிரிய சமுதாயம் கண்டடைய வேண்டும். கல்வி பற்றிய மிகப் பழமையான மதிப்பீடுகளை, முன் முடிவுகளை அகற்றி நவீன சிந்தனைகளை உள்வாங்க வேண்டும். இந்த நவீனம் என்பது மேற்கத்திய இறக்குமதி அல்ல. (இதைப்பற்றி அநேகருக்கு காழ்ப்பு உண்டு!) நம்முடைய சிந்தனை மரபில் குறிப்பாக சமண, பவுத்த, ஆசிவக மரபில் கல்வி குறித்த நவீன பார்வைகள் உண்டு. இவற்றைப் புறந்தள்ளி கல்வியை ஒற்றை இந்துத்தவ, வேத மரபில் கட்டமைக்க முயல்வது மிகவும் அபத்தம். ஆசிரியர்கள் இந்த சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம்.
ஆசிரியர் கல்விப் பாடத்திட்டங்களில் (ஆசிரியர் பட்டயக் கல்வி, இளநிலைக் கல்வியியல் பட்டம்) நவீன கல்வி முறை குறித்தோ, நமது மாற்றுக் கல்வி மரபு குறித்தோ எவ்விதப் பாடங்களும் கருத்துகளும் இல்லை என்பது தெளிவு. இவற்றைப் படித்து ஆசிரியர்களாகும் இவர்களைக் குறை சொல்வதில் ஒரு வகையில் நியாயமில்லைதான். எனவே ஆசிரியர்கள் சுயகல்விக்கான தேடலைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக