சனி, அக்டோபர் 20, 2018

எதற்காக இவ்வாறு மறைத்துத் திரித்து, மழுப்பி எழுதப்படுகிறது?

எதற்காக இவ்வாறு மறைத்துத் திரித்து, மழுப்பி எழுதப்படுகிறது?


(இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 02) 
 

மு.சிவகுருநாதன்


 (ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் - வரலாறு - பற்றிய கருத்துகள்.)
ஒரு முன் குறிப்பு:

  
                புதிய பாடநூல்களில் உள்ள குறைகளைச் சுட்டுவதால் இது மோசமான பாடநூல் என்று பொருளல்ல. விரைவுத் துலங்கல் குறியீடுகள் (QR Code) போன்ற கவர்ச்சிகர அம்சங்கள் இல்லாமலிருந்தாலும் கூட பழைய பாடநூல்களுடன் ஒப்பிடும்போது இவை தரத்தில் மேம்பட்டவையே. உருவத்தில் மட்டுமின்றி உள்ளடக்கத்திலும் பல நல்ல மாற்றங்களைக் கொண்டுள்ளது பாராட்டிற்குரியது. இருப்பினும்  இவற்றை மேலும் தரமாக்க சற்று மேம்படுத்தியிருக்கலாம் என்பதே நமது கருத்து. நம்மில் காணும் அலட்சியம், பணி அறம் - உழைப்பு – வாசிப்பின்மை  போன்றவற்றையும் சேர்த்தே விமர்சிக்க வேண்டியுள்ளது. ஆதார நூற்களின் தரம், அவற்றின் பயன்படு தன்மை, புதிய ஆய்வுகள் – சிந்தனைகளின்பால் கவனமின்மை போன்றவையும் கவனிக்க வேண்டியன. மேலும் பாடங்களில் மட்டுமல்லாது உங்களுக்குத் தெரியுமா?, விரைவுத் துலங்கல் குறியீடுகள் ஆகியவற்றில் உள்ள குறைகளையும் சுட்ட வேண்டியுள்ளது. விரைவுத் துலங்கல் குறியீடுகளின் உள்ள காணொளி வருணனைகள் மீளாய்வு செய்யப்படுதல் அவசியம். 


    ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் – வரலாற்றுப் பகுதியில் மூன்று பாடங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். 

01.வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

    ‘வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்’ என்ற முதல்பாடம் தொடங்கி ஒவ்வொரு வரிகளும் ஏதோ பூசி மெழுகி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை செய்கின்றன. யாருக்குப் பயந்து இவ்வாறு செய்யப்படுகிறது? பிராமணர்கள் மனம் நோகும்படியான உண்மைகளை எதையும் சொல்லிவிடக்கூடாது என்கிற பிடிவாதம் எங்கும் இழையோடுகிறது. இதனால் புனைவுகளே அதிகம் ஆக்ரமிக்க, சிந்திக்க வழியின்றிச் செய்யப்படுகிறது. ஆனால் இதன் மறுபுறம் சூத்திரர்களை இழிவுபடுத்தத் தயக்கம் ஏதுமில்லை. “வேலைத் திறன் கொண்ட சூத்திரர்”, என்று குறிப்பிடுவதைக் கவனிக்க. இதன் பொருள் ‘நல்ல வேலைக்காரர்’ அன்றி வேறென்ன?     “பிற்கால கட்டத்தில் திறன்கொண்ட, ஆரியரல்லாத மக்களை ஆரியர்கள் தமது சமுதாய ஏற்பாட்டுக்குள் கொண்டுவர நேர்ந்தது. அப்போது நான்கு இறுக்கமான வர்ண அமைப்பு உருவாக்கப்பட்டது. மதகுருவான பிராமணர், போரிடும் சத்ரியர், நில உடைமையாளரான வைசியர், வேலைத் திறன் கொண்ட சூத்திரர் என்று நான்கு வர்ணங்களைக் கொண்ட சமூக அமைப்பு உருவானது. இவ்வாறு நான்கு படிநிலைகள் கொண்ட சமூக ஒழுங்கு உருவாக்கப்பட்டது”, (பக்.111) என்று பாடநூல் சொல்கிறது.

   “பிராமணர்கள் அவருடைய வாயிலிருந்தும், சத்திரியர்கள் அவருடைய தோள்களிலிருந்தும், வைசியர்கள் அவருடைய தொடைகளிலிருந்தும், சூத்திரர்கள் அவருடைய பாதங்களிலிருந்தும் பிறந்தவர்கள்”, (பக்.25, சூத்திரர்கள் யார்?, அம்பேத்கர் தொகுப்பு: 13) என்ற வேதக் கோட்பாட்டைச் சொல்லாமல்  “வேலைத் திறன் கொண்ட சூத்திரர்”, என்பது இன்னும் இழிவுபடுத்தும் செயலே. இவர்களைவிட உடல்திறனில் கூடுதல் வலுவுடைய பிற வர்ணத்தவர்கள் வேலைத் திறனற்றவர்களா? மேலும் இவர்களது வேலைத்திறன் எத்தகையது? சத்திரியர்களின் போர்த்திறன் வேலைத் திறனில் அடங்காதா? இது அவைகளிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதா அல்லது வேலைத்திறன் அடிப்படையிலா? ஏன் இப்பகுதிகளில் உயர் சிந்தனை வினாக்கள் ஒன்றுகூட இடம்பெறவில்லை? சிந்தனையை இப்படி மழுங்கடிக்கலாமா?

    “இரு பிறப்பாளர்கள் (Dvijias) மட்டுமே குருகுலத்தில் மாணவர்களாகச் சேர்க்கப்படுவர்”, (பக்.113)  என்று குருகுலக் கல்வியில் போகிறபோக்கில் குறிப்பிடப்படுகிறது. இது பற்றி விளக்க வேண்டாமா? ஆசிரியர்கள் விளக்கி விடுவார்கள் என்கிற அதீத நம்பிக்கையா? 

     நால் வருணங்களில் சூத்திரர்கள் தவிர்த்த இதர மூன்று வருணங்களான பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மட்டுமே பூணூல் (உபநயனம்) அணியும் உரிமை பெற்றதால்  இரு பிறப்பாளர்கள் (துவிஜர்) எனப்படுவர். முதல் பிறப்பு தாயிடமிருந்தும், இரண்டாவது பிறப்பு அவர்கள் பூணூல் அணிவதாலும் ஏற்படுவதாக நம்பிக்கை!

   “பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என நான்கு சாதிகள் உள்ளன.  இவர்கள் பிறப்பால் படிப்படியாக ஏறுவரிசையில் (சாதியில்) ஒருவருக்கொருவர் உயர்ந்தவர்கள்”, (பக்.24, மேலது)

   “இவர்களுள் சூத்திரர்கள் மற்றும் தீயச் செயல்களைச் செய்பவர்கள் தவிர ஏனையோர் (1) உபநயனம் அல்லது பூணூல் அணியவும் (2) வேதங்களை ஓதவும் (3) புனித வேள்விகள் செய்யவும் விதிக்கபட்டவர்களாவர்”,  (பக்.24, மேலது)   சூத்திரர்களை இழிவுபடுத்தும் வர்ணப் பிறப்பு பற்றிய சொல்லாடல்கள் ஒருபக்கம் இருக்க, நால் வர்ணத்துள் உள்ளடக்கப்பட்ட சவர்ணர்களில் ஒருபிரிவான சூத்திரர்கள் அத்விஜர் (ஒரு பிறப்பாளர்) எனக் கீழாக்கப்பட்டனர். பிற்காலத்தில் சிவாஜியை மன்னராக  முடிசூடத் தகுதியில்லாதவர் என்று மறுத்ததை நாமறிவோம். இந்த நால் வர்ணத்திற்குள் அடங்காத அவர்ணர்கள் எனப்படும் ஆதிசூத்திரர்கள் என்னும் தீண்டப்படாதவர்கள் என ஒதுக்கப்பட்டதையும் நினைவில் கொள்ளவேண்டும். 
       இன்று பிராமணர்களுக்கு அடுத்தபடியாக சத்திரியர்கள், வைசியர்கள் என்ற பிரிவெல்லாம் கிடையாது. பிறரனைவரும் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் பிரிவில் அடக்கப்பட்டுள்ளனர்.

      “நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும். அவைகள் புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை எனக் கருதப்பட்டவை. சுருதி என்பது கேட்டல் (அல்லது எழுதப்படாதது) எனும் பொருள் கொண்டது; இவை வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டன”, (பக்.109) 

    “ஆகமங்கள், தாந்திரீகங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய ,மதம் குறித்த போதனைகளைக் கொண்ட நூல்களாகும். அவை நிலையானவை அல்ல, தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை. ‘ஸ்மிருதி’ என்பதன் பொருள் இறுதியான எழுதப்பட்ட பிரதி என்பதாகும்”, (பக்.109) 

     சுருதி என்றால் கேட்கப்படுவது என்றும் ஸ்மிருதி என்றால் நினைவில் வைக்கப்படுவது என்றும் பொருள்.  “இறுதியான எழுதப்பட்ட பிரதி” என்று ஸ்மிருதியை சொல்லமுடியுமா? இவைகளுக்கு வரிவடிவம் பிற்காலத்தில்தான் தரப்படுகிறது. கேட்பது “புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை” என்பதும் எழுதப்பட்ட பிரதி, “நிலையானவை அல்ல, தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை”, என்பதும் முரண் அல்லவா! இதை ஆசிரியர்களும் மாணவர்களும் எவ்விதம் விளங்கிக்கொள்வர்? 

    சுருதிகள் தெய்வ வெளிப்பாடுகளாகவும், ஸ்மிருதிகள் மனித வெளிப்பாடுகளாகவும் கருதப்பட்டன. எனவே முன்னது நிலையானதொன்றாகவும் பின்னதில் தவறுகள் இருக்கலாம் திருத்தப்படலாம் என்றும் கற்பிதம் செய்யப்பட்டன. (விரிவான வாசிப்புக்கு: இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு – வெண்டி டோனிகர், தமிழில்: க.பூரணச்சந்திரன், எதிர் வெளியீடு ஜூன் 2016)

அழித்து எரித்துச் சாகுபடி செய்யும் வேளாண்முறை

  “இம்முறையில் நிலத்தின் மீதுள்ள மரங்கள் மற்றும் செடி, கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்படும்”, (பக்.108) என்று எழுதுவது இப்போதுள்ள நடைமுறைகளை ஒட்டிய சிந்தனையின் வெளிப்பாடு. காடழிப்பு முறையில் வெட்டி அழிப்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. “காடுகளுக்கு தீயீட்டு அழிக்கும் பழைய வழக்கத்தின்படி நிலத்தைச் சீர்செய்தனர். அது தீக்கடவுளான அக்னி தேவனுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் பலியாகக் கருதப்பட்டது. அத்தீவட்டத்திலிருந்து தப்பிக்க முயன்ற எல்லா ஜீவராசிகளும் வெட்டிக் கொல்லப்பட்டுத் திருத்தப்பட்ட புதிய நிலங்களில், உழவுத்தொழில் துவங்கிக் குடியேற்றம் நிகழ்வுற்றது”, (பக்.166, பண்டைய இந்தியா, டி.டி.கோசாம்பி) 

உயிர்ப்பலியிடுதல்

    அன்றைய பலி மிருகங்கள் பட்டியல் நீண்டது.  குதிரைகள், பசுக்கள், காளைகள், வெள்ளாடுகள், மான்கள் என 180 விலங்குகள் பலி தரப்பட வெண்டுமென்று தைத்தீரிய சம்கிதம் விவரிக்கிறது. அடிமை மனிதனும் பலியிடப்பட்டான். மனிதனைத் தவிர பிற விலங்குகள் பலியிடப்பட்டு உண்ணப்பட்டன. ஆரியர்கள் மாமிச உணவுப்பழக்கம்  உடையவர்கள். சமண, பவுத்த, ஆசீவகம் போன்ற அவைதீகத் தாக்கத்தினால் இந்தியாவில் புலால் மறுப்பு மற்றும் அகிம்சைக் கொள்கைகள் பரவுகின்றன. மாட்டிறைச்சி, நெய்யில் வறுக்கப்பட்ட கன்றுக்குட்டி ஆகிய உணவுமுறைகள் பற்றிய பதிவுகள் ரிக் வேதத்தில் உண்டு. 

   வேள்விகளில் பசுக்களை பலிதரும் சடங்கு ‘கோசவா’ சடங்கு நிறைவேற்றப்பட்டது. தனக்குப் பிறக்கும் மகன் நீண்ட ஆயுள், நல்ல அறிவுடன் இருக்கவேண்டும் என விரும்புவோர் வேக வைத்த கன்றின் அல்லது மாட்டிறைச்சியுடன் அரிசிச்சோறும் நெய்யும் கலந்துண்ண வேண்டும் என்பது உபநிடதக் கட்டளைகளுள் ஒன்றாகும். (பார்க்க: பசுவின் புனிதம் - மறுக்கும் ஆதாரங்கள்,  டி.என்.ஜா.) 

    ஆனால் இன்றைய பசு அரசியல் செல்லும் பாதை வேறு. இன்றைய கொலைக்கள, அடையாள அரசியலிடமிருந்து சமூகத்தைப் பாதுகாக்க ஆரியர்கள் மாமிச உணவுண்டனர் என்பதை மட்டுமாவது சுட்டிக்காட்டுவது அவசியம்.

     “கொல்லப்படும் குதிரையுடன் மகாராணி கலவிபுரிய வேண்டுமென்றதோர் அருவருக்கத்தக்கதான வளமைப் பெருக்கச் சடங்கில், அக்குதிரை அநேகமாக முற்காலத்தில் சில யக்ஞங்களை நடத்திய ஒரு மூதாதை மன்னர் அல்லது அவருடைய பிரதிநிதிக்கு பதிலாளாகச் செயல்பட்டிருக்கலாம். அக்குதிரை பலியிடப்படுவதற்கு ஓராண்டு முன்புவரை அதன் விருப்பப்படி அலைய விடப்பட்டது. தன்னிச்சைப்படி செல்லும் அக்குதிரையை வேறு பழங்குடியினர் தடுத்து நிறுத்தினால் அதுவே போருக்குச் சவாலாக அமைந்தது”, (பக்.157, பண்டைய இந்தியா, டி.டி.கோசாம்பி) என்று கூறுவதின் மூலம் குதிரை செல்லும் தூரம் வரையிலான விளைநிலங்களைக் கைப்பற்றிக் கொள்ளும் போக்கு இருந்ததை அறிய முடிகிறது. இதன் காரணமாக எழுந்த எதிர்ப்புகளால் போர்கள் மிகுதியாயின. 

   ஆரியர்களின் மாட்டிறைச்சி உணவு, அசுவமேதம் (குதிரை) போன்ற யாகங்கள், சோம – சுரா பானங்கள், சூதாட்டம் போன்ற கேளிக்கைகள் போன்ற பலவற்றை பாடநூல்கள் மறைப்பதன் பின்னாலுள்ள அரசியல் இங்கு பேசப்பட வேண்டியதாகிறது. 

பெண்களின் நிலை / பெண்கல்வி 

     ரிக் வேதகாலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை; பொது நிகழ்வுகளில் எந்தப் பங்கும் இல்லை. இருப்பினும் குடும்பத் தலைவியாக இருப்பது, வீட்டில் சடங்குகள் செய்வது ‘ஓரளவிற்கு சுதந்திரமாக’ வரையறுக்கப்படுகிறது (பக்.111) 

    “பின் வேதகாலத்தில் பெண் கல்வி மறுக்கப்பட்டது”, என்று சொல்லும்போது ரிக்  வேதகாலத்தில் எத்தகைய பெண்கல்வி முறை இருந்தது என்று சொல்ல வேண்டுமல்லவா!

   தாய்வழிச் சமூக அமைப்பில் பெண்களுக்கு உரிமைகள் இருந்தன. போர்களில் ஈடுபட்டனர். ஆனால் ஆரியர்கள் பெண்கள் போரிடுவதை விரும்பவில்லை. இவர்களது தந்தைவழிச் சமூக அமைப்பு பெண்கள் போர் புரிவதை மட்டுமல்ல, கல்வி கற்பதையும் அனுமதிக்கவில்லை.

    போருக்கு அடுத்த முக்கியமான பணி ரிஷாக்களை (செய்யுள்கள்) இயற்றுவது. இவர்களை ரிஷி (ஆண்), ரிஷிகா (பெண்) என்றழைத்தனர். ரிக் வேதகாலத்தில் ரிஷிகாக்களின் எண்ணிக்கை 24 க்குக் குறைவில்லை. ஆனால் ஆராய்ந்து பார்க்கும்போது அவர்களில் பலர் கற்பனை என்று தெரிய வருவதாக ராகுல் சாங்கிருத்தியாயன் (ரிக் வேத கால ஆரியர்கள்) குறிப்பிடுகிறார். 

குருகுலக் கல்விமுறை

    இருபிறப்பாளர்கள் யார்? என விளக்கப்படுவதில்லை என்று முன்பே சொன்னோம். சூத்திரர்கள் பாடம் கேட்கத் தடையும், கேட்டால் தண்டனையும் இருந்தது. ஏகலைவன் கதை நமக்குத் தெரியுந்தானே! கல்விப் புலத்திற்குத் தடை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் சூத்திரர்களின் நிலை என்ன? இவற்றை விளக்குவதில் என்ன தடை? 

   “நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறிமுறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டன”, (பக்.113) என்று எழுதப்படுகிறது. பிராமணர்கள், சத்திரியர்களுக்கு ஒரேவிதமான பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டது என்று சொல்ல முடியுமா? பொதுக்கல்வி என்ற ஒன்றே அன்று இல்லையே. 

    “ஒழுக்கமான வாழ்க்கை மேற்கொள்வதற்கான பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது”, (பக்.113) ஒழுக்கத்தை இவர்கள் வர்ண அடிப்படையில் பகுத்தனர். பிராமண ஒழுக்கம், சத்திரிய ஒழுக்கம், வைசிய ஒழுக்கம், சூத்திர ஒழுக்கம் ஆகியன வரையறை செய்யப்பட்டு, அதற்கேற்ப குற்றங்களுக்குத் தண்டனைகளையும் நிர்ணயித்திருந்தனர். அனைவருக்கும் பொதுவான ஒழுக்கம் என்பதே நடைமுறையில் இல்லை. பிற்காலத்தில் சமணம், பவுத்தம், ஆசிவகம் ஆகிய அவைதீக சமயங்கள் போதித்த ஒழுக்கங்களுடன் இவற்றைத் தொடர்புப்படுத்த முடியாது. 

    பெரும்பாலான ஆசிரியர்கள் இன்றும் குருகுல ஆதரவாளர்களே. மெக்காலே கல்விமுறையின் குறைபாடுகளை அவர்கள் குருகுலக் கல்வியின் மூலமாக நிவர்த்தி செய்ய முற்படுகின்றனர். அவர்களுக்கு இப்பகுதி இன்னும் கூடுதலானப் புனைவுகளை உற்பத்தி செய்ய நல்வாய்ப்பாக அமையும். 

    இப்பாடத்தில் பின்பகுதியான ‘தமிழ்நாட்டின் பெருங்கற்காலம் / இரும்புக்காலம்’ பகுதியில் ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி), கீழடி (சிவகங்கை), பொருந்தல் (திண்டுக்கல்), பையம்பள்ளி (வேலூர்), கொடுமணல் (ஈரோடு) ஆகிய இடங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் படங்களுடன் விளக்கப்படுகின்றன. மேலும் கற்திட்டைகள், நினைவுக் கற்கள், நடுகற்கள் ஆகியன விளக்கிச் சொல்லப்படுவது சிறப்பு. இவை சிந்துவெளியைப் போன்று தொல்லியல் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றன.  ஆனால் வேதகாலம் பற்றித் தொல்லியல் சான்றுகள் அதிகமில்லாத நிலையில் வெறும் இலக்கியச் சான்றுகளின் அடிப்படைகள் பல்வேறு புனைவுகள் உற்பத்தியாகின்றன. 

   “அஸ்தினாபுரம் 1 –ல் கிட்டியவற்றில் மோசமாகச் சுடப்பட்டு, தரம் குன்றியும், காவிப்பூச்சும் உள்ள மட்பாண்டங்கள் அநேகமாகப் பிற்கால நாகர்களால் தயாரிக்கப்பட்டிருக்கலாம். காடுகள் திருத்தப்பட்ட பிறகு, படிப்படியாக நாகர்களும் விவசாயத்தில் இறங்கினர்”, (பக்.171, பண்டைய இந்தியா, டி.டி.கோசாம்பி) என்றும்

   “குருசேத்திரத்திலுள்ள அஸ்தினாபுரத்தின் தொடக்கநிலை குடியேற்றம், பழைய வேதகாலத்தின் பழங்குடிக்குரிய ஒரு சிறு கிளையினாரால் துவக்கப்பட்டது. அஸ்தினாபுரம் II –ன் மெருகிட்ட சாம்பல் நிறப் பானைகளைப் பொதுவாக, ஆரியர்களுக்குரியனவென்று கொள்ளாமல் பூரு-குரு மக்களின் மட்பாண்டமாகவே கருதவேண்டும்”, (பக்.166, மேலது)  என்றும் டி.டி,கோசாம்பி தனது ஆய்வுகளில் வெளிப்படுத்தியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. 

02.மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

   அறிவுமலர்ச்சிக்கும் சமணம், பௌத்தம் ஆகியவை தோன்றியதற்கான காரணங்களில் சடங்குகள் பற்றிச் சொல்லப்படுகிறது. உயிர்ப்பலியிடுதல் பற்றிய பேச்சு இல்லை. இறுதியாக சமண, பவுத்த ஒற்றுமைகளில் “இரத்தப் பலிகளை எதிர்த்தனர்” என்று இருக்கிறது. ‘உயிர்ப்பலி’ என்று சொல்லத் தயக்கம் ஏனென்று தெரியவில்லை? 

       உபநிடதத் தத்துவங்களை சாதாரண மக்களால் புரிந்துகொள்ள இயலவில்லை என்று சொல்லப்படுகிறது. மக்கள் மொழியில் இல்லை என்பது பற்றிய தகவல் இல்லை. இவை சமஸ்கிருதம் போன்ற பிறர் கற்கமுடியாத தெய்வ பாஷையில் இருந்ததும் இவற்றிற்கு எதிரான அவைதீக இயக்கங்கள் மக்கள் மொழியான பாலி, பிராகிருதம், மாகதி போன்றவற்றைப் பயன்படுத்தியதை பாடநூல் சொல்ல மறுக்கிறது. இங்கும் சுற்றி வளைத்துப் பூசி, மெழுகி மறைப்பு வேலைகளில் ஈடுபடுகிறது. 

   வழக்கம்போல திகம்பரர், சுவேதம்பரர் பிரிவுகள் மட்டும் சுட்டப்படுகிறது. மூன்றாவது பிரிவும் உண்டு. அவற்றை நாம் எப்போதும் சொல்வது கிடையாது. சமணத்தில் இப்படி ஒரு மரபு உண்டு என்பதை உணர்த்துவது அவசியம். ஸ்தானகவாசிகள் உருவ வழிபாட்டை எதிர்க்கும்  அருப (உருவமற்ற) வழிபாட்டினர்.  இவர்கள் உருவங்களுக்குப் பதிலாக சமண ஆகமங்களை வைத்து வழிபடுகின்றனர்.

   “திகம்பரர் வைதீக பழமைவாதப் போக்குடைய சீடர்கள்”, (பக்.124) “சுவேதம்பரர்கள் முற்போக்கானவர்களாகக் கருதப்படுகிறார்கள்”, (பக்.125) ஆகியவற்றையும் அடுத்தப் பாடத்தில் வரும், “கண சங்கங்கள் சமத்துவ மரபுகளைப் பின்பற்றின. (முடியாட்சி) அரசுகள் வைதீக வேத மரபுகளைப் பின்பற்றின”, (பக்.139) என்பதையும் எவ்வாறு விளங்கிக் கொள்வது? 

    வைதீகம் X அவைதீகம், பிற்போக்கு X முற்போக்கு, அசமத்துவம் X சமத்துவம் போன்ற முரணெதிர்வுகளை ஒன்றுடனொன்று குழப்பிக் கொள்ளக்கூடாது. வைதீக மரபுகள் பிற்போக்கானவை; இங்கு சமத்துவம் இல்லை. மாறாக அவைதீக மரபுகளில் சமத்துவம் பேணும் முற்போக்கு அம்சங்கள் உண்டு. இந்தப் புரிதலை உண்டாக்க வேண்டிய பாடநூல்கள் அவைதீக மரபின் ஒருபிரிவை (திகம்பரம்) வைதீகப் பழமைவாதம் எனச் சொல்வது சரியல்ல. திகம்பரப்பிரிவினர் ஆடை அணிவதில்லை என்கிற பழையப் பாடநூல்களைப் போலல்லாமல் திகம்பர சமணத் துறவிகள் ஆடை அணிவதில்லை என்று சரியாகச் சொன்னதற்காகப் பாராட்டலாம். 

     “மக்கள் பேசிய  மொழியிலேயே சமணக்கருத்துகள் சொல்லப்பட்டன”, (பக்.125), “வேள்விச் சடங்குகளுக்கு மாற்றாகக் கற்பிக்கப்பட்ட உபநிடதத் தத்துவங்களைச் சாதாரண மக்களால் புரிந்துகொள்ள இயலவில்லை”, (பக்.123), “மக்கள் பேசிய மொழிகளில் போதித்தனர்”, (பக்.129) “புத்தரின் போதனைகள் மிக எளிமையாக, உள்ளூர் மக்கள் பேசிய மொழிகளில் இருந்தன”, (பக்.128) ‘பாலி’ என்னும் வரி குறித்து இரு இடங்களில் (பக்.110 & 143) குறிப்பு உள்ளது. பாலி, பிராகிருதம், மாகதி மொழிகள் பற்றிய எந்தப் பதிவும் இல்லை. பௌத்தப் பிரிவுகள் அட்டவணையில் மட்டுமே, “பிராகிருத மற்றும் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினர்”, (பக்.128) என்றும் உள்ளது. 

   பவுத்தத் துறவிகள் ‘பிட்சுக்கள்’ (பக்.127) என்றே குறிப்பிடப்படுகின்றனர். பிக்குகள், பிக்குணிகள் போன்ற சொல்லாக்கங்களைப் பாடநூல்கள் அறிமுகம் செய்யாமல் பிறகு யார்தான் செய்வார்? ‘தமிழகத்தில் சமணத்தின் செல்வாக்கில்’ பள்ளி எனும் பெயர் பெற்றதைக் குறிப்பிட்டிருக்கலாம். பொதுகல்வி, சாதிபடிநிலை என்று எழுதுவதை முதலில் மாற்றவேண்டும். (பொதுக்கல்வி, சாதிப்படிநிலை) 

     விமோச்சினம் (பக்.126) என்று எழுதுவதையும் தவிர்க்கவேண்டும். லும்பினி வனம் லும்பினி தோட்டமாகிவிட்டது (பக்.126) மான் பூங்காவும் மான்கள் பூங்கா (பக்.127) என்றானது. Deer park ஐ மான் பூங்கா என்று சொல்வதே சரி. இன்று தொழிலகங்கள் அனைத்தும் ‘பூங்கா’க்களாக மாறிவிட்ட சூழலில் நாம் வாழ்கிறோம்! புத்தரின் பாதையை “இடைவழி (நடுவு நிலை வழி)” என்று சிரமப்படாமல் எளிய மொழியாக்கங்களைக் கண்டடைய வேண்டியது கல்விக்கு அவசியம்.

   புத்தர் துறவறம் பூணக் காரணமாக ‘நான்கு பெரும் காட்சிகளை’ இன்னும் எவ்வளவு நாள்களுக்குச் சொல்லித் தரப்போகிறோம்? 

   “புத்தருடைய தந்தை உட்பட எல்லா சாக்கியர்களும் ஏர் பிடித்து உழுதவர்களே. தவிரவும், தங்களுடைய ஆட்சிப் பகுதிகளுக்கு அப்பாலும் சில வணிகக் குடியேற்றங்கள் (நிகாமா) அவர்களுக்கு இருந்தன. சாக்கிய குலத்தலைவன் சுழற்சி முறையினால் தேர்தெடுக்கப்பட்டான். அதுவே, புத்தரைப் பற்றிய பிற்காலக் கதைகளில், அவரை இளவரசாகவும், மிகப் பெரிய அரண்மணைக்குரிய சுகபோகங்களில் திளைத்தவரென்றும் எழுத வைத்தது. உண்மையில் ராஜான்யா என்ற பட்டம் ஒரு குலத்தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடைய எந்த சத்திரியரை வேண்டுமானாலும் குறிக்கும்”, (பக்.193&194, பண்டைய இந்தியா - டி.டி.கோசாம்பி)

   கோலிய இனக்குழுவினருடனான ரோகிணி ஆற்றுநீரைப் பகிர்வதில் உள்ள சிக்கல், அதில் புத்தரது நிலைப்பாடு, இனக்குழு குடியரசுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் வாய்ப்புகள் (விவாதத்திற்கு கூட) வேண்டுமென்றே தவிர்க்கப்படுகின்றன.
 
   உலகம் அந்த நாளில்… என ஒப்பிட்டிருப்பது அருமை. புத்த ஜாதகக் கதை ஒன்றை (பக்.130,131) இணைத்திருப்பதும் சிறப்பு. இருப்பினும் கதைத் தேர்வில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாளந்தாவுடன் காஞ்சிக் கடிகை பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம். தனிப்பட்ட குரு ஒருவரிடம் கல்வி கற்கும் வைதீகக் கல்விமுறையும் (குருகுலம்) வர்ண வேறுபாடுகள் ஏதுமின்றி பல ஆசிரியர்கள், மாணவர்கள் ஓரிடத்தில் தங்கி கல்வி பயிலும் பள்ளி, கடிகை, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்த அவைதீகக் கல்விமுறைக்கும் உள்ள வேறுபாடுகள் மாணவர்களுக்கு மட்டுமல்ல; ஆசிரியர்களுக்கு முதலில் புரிய வைக்க வேண்டியது அவசியம். 


03. குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை


    சந்திரகுப்தர் சரவணபெலகோலாவில் (கர்நாடகா) சமணச் சடங்கான ‘சல்லேகனா’ செய்து உயிர்துறந்தார்”, (பக்.141) என்று பாடநூல் பேசுகிறது. சமணச்சடங்கான ‘சல்லேகனா’ அல்லது ‘சல்லேகனை’ என்பது நீர் மட்டும் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் வடக்கு நோக்கி அமர்ந்து உயிர் துறத்தலாகும். இதற்கு ‘வடக்கிருத்தல்’ என்று பெயர். சமணர்களின் புண்ணிய திசை நோக்கி அமர்ந்திறப்பதால் இப்பெயர் பெற்றது. சமணத்துறவி பத்ரபாகும் வடக்கிருந்து உயிர்நீத்தவர். சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் துயரங்களுக்கு தாமும் காரணம் என்றெண்ணி இவ்வாறு உயிர்துறக்கிறார். புறநூனுற்றுப் பாடல்களின் வழியும் உண்ணா நோன்பிலிருந்து உயிர் துறப்பதைக் காணலாம். பாரிவள்ளல் மறைந்ததும் சங்கப்புலவர் கபிலர் பட்டினி கிடந்து இறந்தார். 

“வலியழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயிம்
நலிபழிந்தார் நாட்டறைபோய் நைந்தார்”      என்னும் சிறுபஞ்சமூலப் பாடல் ‘வடக்கிருத்தல்’ பற்றிக் குறிப்பிடுகிறது. பாடநூல்சல்லேகனைஎனும் வடக்கிருத்தல் பற்றி ஏன் பேசவில்லை?

   மகாவீரா, புத்தா, பார்சவா, அசோகா, குப்தா, கனிஷ்கா, ஹர்ஷா ஆகிய பெயர்ச் சொற்களை தமிழுக்கு வரும்போது மகாவீரர், புத்தர், பார்சவர், அசோகர், குப்தர், கனிஷ்கர், ஹர்ஷர் என எழுதும் மரபுண்டு. கர்மா, தர்மா, தம்மா, சத்யா, அகிம்சா, அஸ்தேயா, பிரம்மச்சரியா ஆகியவற்றுக்கும் இது பொருந்தும். கர்மம், தர்மம், தம்மம், சத்யம், அகிம்சை, அஸ்தேயம், பிரம்மச்சரியம் என்று எழுதுவது குறித்து யோசிக்கலாம். எப்படி இருப்பினும் மாற்றி மாற்றி எழுதாமல் ஓர்மையை கடைபிடிப்பது நல்லது. 

    மகாஜனபதங்களில் சமத்துவக் குடியரசுகளை அறிமுகம் செய்வது அவசியமல்லாவா! இதற்கான வாய்ப்பு 2 மற்றும் 3 ஆம் பாடங்களில் இருந்தும் தவிர்க்கப்படுகிறது. 

   ‘தம்மம்’ பற்றி முன்பாடத்தில் அறிமுகம் ஆனபடியால் பிறகு ‘தர்மம்’ என்று சொல்லவேண்டியதில்லை என்று கருதுகிறேன். ‘தம்ம அசோகரை’ ‘நீதிமான் அசோகராக’ விளக்கமளிக்க வேண்டிய அவசியமும் இல்லை (பக்.141). தம்ம மகாமாத்திரர்கள் (தர்ம மகாமாத்திரர்கள்) என்றே அழைக்கலாம். தர்மபாலர் தம்மபாலராகவே இருக்கலாம். சந்த அசோகர் – தீய அசோகரா? தெளிவு தேவை. சந்தம் என்பது சந்தஸ் எனும் வடசொல்லின் திரிபு. இதற்கு அழகு, வண்ணம் என்ற பொருள்கள் உண்டு. (உம். சந்த நயம்) சந்தகா என்னும் சொல் பொலிகாளையை குறிக்கும். 
     அது (அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டு) அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மிக உயர்ந்த கருத்தான மனிதாபிமானத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது”, (பக். 141&142) என்று கூறப்படுகிறது. என்னே விந்தை! மனிதனைப் பிறப்பால் பாகுபடுத்தி, இழிவு செய்யும் வேத (இந்து) மதத்தில் மனிதாபிமானம் எங்குள்ளது? பாடக்குழுவினர் விளக்குவார்களா?

    இறக்குமதிப் பொருள்கள் அட்டவணையில் பட்டு (லினன்) என்றுள்ளது (பக்.144). பட்டு வேறு; லினன் வேறு அல்லவா! பட்டு பூச்சிகளின் கூட்டிலிருந்து கிடைப்பது; லினன் தாவர நாரிலிருந்து பெறப்படுவது. இரண்டையும் ஒன்றாக்க வேண்டாம். 

 மேலதிக வாசிப்பிற்கு: 

         முற்கால இந்தியா – தொடக்கக் காலத்திலிருந்து கி.பி. 1300 வரை – ரொமிலா தாப்பர் (மொ) அ.முதுகுன்றன், வெளியீடு:  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., விலை: ரூ. 750 என்னும் நூல் மூல நூல்கள் பட்டியலில் உள்ளது. இருப்பினும் இவற்றின் கருத்துகள் எந்தளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதில் அய்யமுண்டு. விரிவான வாசிப்பிற்கு தமிழில் உள்ள வேறு சில நூல்களைப் பரிந்துரைக்கிறேன்.

01. சூத்திரர்கள் யார்? அம்பேத்கர் தொகுப்பு: 13, விற்பனை உரிமை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை.
02. இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு – வெண்டி டோனிகர், தமிழில்: க.பூரணச்சந்திரன், எதிர் வெளியீடு ஜூன் 2016, விலை: ரூ. 750
03. சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் – மயிலை சீனி வேங்கடசாமி
04. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் – டி.டி.கோசாம்பி, தமிழில்: சிங்கராயர், விடியல் பதிப்பகம், கோவை.
05. இந்திய வரலாற்றில் பகவத்கீதை – பிரேம்நாத் பசாஸ், தமிழில்: கே.சுப்ரமணியன், விடியல் பதிப்பகம், கோவை.
06. பண்டைய இந்தியா - டி.டி.கோசாம்பி, தமிழில்: ஆர்.எஸ்.நாராயணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை.
07. மாயையும் எதார்த்தமும் -  டி.டி.கோசாம்பி, தமிழில்: வி.என்.ராகவன், அலைகள் வெளியீட்டகம், சென்னை.
08. பகவான் புத்தர் – தர்மானந்த கோசாம்பி, தமிழில்: கா.ஶ்ரீ.ஶ்ரீ., புத்தா வெளியீட்டகம், கோவை.
09. ரிக் வேத கால ஆரியர்கள் – ராகுல் சாங்கிருத்தியாயன், தமிழில்: ஏ.ஜி.எத்திராஜூலு, அலைகள் வெளியீட்டகம் / நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,  சென்னை.
10. மனித சமுதாயம் – ராகுல் சாங்கிருத்தியாயன், தமிழில்: ஏ.ஜி.எத்திராஜூலு,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,  சென்னை.
11. பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்  டி.என்.ஜா, தமிழில்:  வெ.கோவிந்தசாமி  பாரதி புத்தகாலய வெளியீடு, டிச. 2011.
12. மாவீரன் சிவாஜி – காவித் தலைவனல்ல, காவியத் தலைவன் - கோவிந்த் பன்சாரே (1988), ஆங்கிலத்தில்: உதய் நர்கர், தமிழில்:  செ.நடேசன், பாரதி புத்தகாலய வெளியீடு, அக்டோபர்  2015

                   (இன்னும் வரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக