வியாழன், அக்டோபர் 25, 2018

பார்வைகளை விசாலமாக்குவதும் கற்பிதங்களை அகற்றுவதும் கல்வியின் பணி

பார்வைகளை விசாலமாக்குவதும் கற்பிதங்களை அகற்றுவதும் கல்வியின்  பணி


(இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 03
 

மு.சிவகுருநாதன்


 (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல்புவியியல்  - பற்றிய கருத்துகள்.)
      வளங்கள் பற்றிய வழமையான பார்வையில் எவ்வித மாற்றங்களையும் காணமுடிவதில்லை. கீழ்க்கண்ட கூற்றுகள் அவற்றை உறுதிப்படுத்துகின்றன

மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்”, (பக்.157, 6 ஆம் வகுப்பு)

ஒரு பொருளின் பயன்பாட்டினைக் கண்டறிந்த பின்புதான் அப்பொருள் வளமாக மாறுகிறது”, (பக்.158, 6 ஆம் வகுப்பு

உலகில் காணப்படும் உயிருள்ள பொருள்கள் மனிதனால் அடையாளம் காணப்பட்ட பிறகுதான் உயிரியல் வளங்களாக அறியப்பட்டன”, (பக்.160, 6 ஆம் வகுப்பு)

இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனித வளம் என அழைக்கப்படுகிறது”, (பக்.163, 6 ஆம் வகுப்பு)  (தனிநபர் அல்லது குழுக்கள் என்றிருக்கவேண்டும்) 

    மனிதனின் பார்வையில் மட்டும் புவியை, இயற்கையை அணுகியதன் விளைவல்லவா இவை! நமது சிந்தனைகள் இவ்வாறு இருந்தால் வளப்பாதுகாப்பு சாத்தியமே இல்லை. இத்தகைய அணுகுமுறையுடன் நிலையான வளர்ச்சி என்று பேசுவதெல்லாம் வெற்று முழக்கமே.

   “ஒரு பொருளின் பயன்பாட்டினைக் கண்டறிந்த பின்புதான் அப்பொருள் வளம்”, என வரையறை செய்துவிட்டுமறைந்திருக்கும் வளம்”, என்று பேசுவது முரண்தானே!

  இந்தப் பூமியும் இயற்கையும் மனிதனுக்கானவை என்கிற ஒற்றைப் பார்வையில் உருவாகும் வழமையான கருத்தியல்கள், கற்பிதங்கள் மாற்றம் பெறுவது காலத்தின் கட்டாயம். நுகர்வியம் சார்ந்து வளங்களை வரையறுப்பதும் அவை சார்ந்த சொல்லாடல்களும் மாறவேண்டியது அவசியம்

    “காற்று வேகமாக வீசக்கூடிய இடங்கள் இன்னமும்  அடையாளம் காணப்படாமல் உள்ளன”, (பக்.161, 6 ஆம் வகுப்பு)

   “மும்பை ஹை பகுதியில் 20 மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன”, (பக்.84, 9 ஆம் வகுப்பு புவியியல்) ஆகிய தரவுகள் இத்தகைய வளங்களை நமது அரசுகள் எவ்வித  அணுகுகின்றன என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. வளங்களை அடையாளம் காணுவதன் பின்னணி அரசியல் மிகவும் வெளிப்படையானது. இந்திய அணுசக்தி முதலீட்டில் சிறுதுளிகூட மரபு சாரா எரிசக்திக்கு செலவிடுவதில்லை என்பதை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்    மனித வளம் குறித்த பார்வையும் மிக மோசமாக உள்ளது. மூளை உழைப்பை உன்னதப்படுத்தியும் உடலுழைப்பை கீழிறக்கும் வேதகாலப் பார்வையில் எவ்வித மாற்றமும் இன்றி இருப்பது கல்வியாகுமா?

   “மனிதன் ஒரு மதிப்புமிகு வளமாக பார்ப்பதற்குக் காரணம் அவனிடம் உள்ள கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறனாகும். (.கா.) மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்”, (பக்.163, 6 ஆம் வகுப்பு) என்ற கூற்றுக்கு செயல்பாடாக, திருவள்ளுவர், ஐன்ஸ்டின், மேரி கியூரி, போக்குவரத்துக் காவலர், நெல்சன் மண்டேலா, பேருந்து ஓட்டுநர் ஆகிய படங்கள் கொடுக்கப்பட்டு, “சிறப்பு வாய்ந்த மனிதர்களையும் தொழில் சார்ந்த மனிதர்களையும் அடையாளம் காண”, வலியுறுத்தப்படுகிறது

   மனிதவளம் பற்றிய இத்தகைய பார்வைகளின் தாக்கம் என்னவாக இருக்கும்? மனிதர்களை இவ்வாறு பாகுபடுத்துவது ஏன்? அறிவு சிறப்பானது என்றால் உடல்திறன், உழைப்பு இழிவானதா? எதனடிப்படையில் இப்பார்வைகள் உற்பத்தியாகின்றன
 
       நீர்க்கோள’ வரையறையில் இறுதியாக ‘நிலக்கோளம்’ என்று தவறாகச் சுட்டப்படுகிறது. இதைப்போன்ற எழுத்துப்பிழைகள் ஏராளம். “புவியின் மேற்பரப்பில் 97 சதவீத நீரானது கடல்களுக்கு உட்பட்டதாகவும் 3 சதவீதத்திற்கும் குறைவான நீரானது ……………….. காணப்படுகிறது”, (பக்.79) என்றுள்ளது. ஆனால் விளக்கப்படத்தில் 97.5% உவர்நீர் என்று குறிக்கப்பட்டுள்ளது (பக்.80). நன்னீர் 2.5% என்பது இல்லை. பனிமுகடு மற்றும் பனியாறுகள் 79% நிலத்தடிநீர் 20% போக எஞ்சிய 1% குறிக்கப்படவில்லை. இவையிரண்டும் தனித்தனியே உருவாக்கப்பட்டது என்று காரணம் சொல்லாமல் பாடத்திற்கும் படத்திற்குமான வேற்றுமைகள் களையப்படவேண்டும்.   “ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று பின்லாந்து அழைக்கப்படுகிறது”, (பக்.80, 9 ஆம் வகுப்பு) என்று சொல்லிக்கொடுக்கும் நாம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் (முந்தைய செங்கற்பட்டு மாவட்டம்) ‘ஏரி மாவட்டம்என அழைக்கப்பட்டதையும் அங்கு ஆயிரக்கணக்கில் ஏரிகள் இருந்ததையும் அவை சென்னை மாநகர விரிவாக்கத்தால் அழிக்கப்பட்டன என்பதையும் எப்போது உணர, உணர்த்தப் போகிறோம்
                                                                                                                                                                                                                                                                                                
   சுந்தா நிலப்பகுதி’, (பக்.102, 9 ஆம் வகுப்பு) சுண்டா பள்ளம் (பக்.82) சுந்தா அகழி (பக்.93) என்று (sunda land, sunda deep) மாற்றிமாற்றிச் சொல்லாமல் ஒரே சொற்களைப் பயன்படுத்துவது நலம். ‘பள்ளம்என்பதைவிட அகழியே (trench) பொருத்தமானது

   உலகில் மிக நீளமான பவளப்பாறைத் திட்டு ‘The Great Barrier Reef’ அறிமுகமாகிறது (பக்.92). இங்கு மன்னார் வளைகுடாவையும் சொல்வது அவசியம். கடற்களஞ்சிய விளக்கப் படத்திலும் சொல்லப்படவில்லை


   “இச்சத்தை ரொட்டி தயாரித்தல், மது வடித்தல், திராட்சை ரசம் தயாரித்தல், உயிரி எத்தினால் தயாரித்தல் மற்றும் மருத்துவப்புரதம் தயாரித்தலுக்குப் பயன்படுகிறது”, (பக்.160, 6 ஆம் வகுப்பு) ஈஸ்ட் என்பது ஒரு நுண்ணுயிரி. தாவர வகைப்பாட்டில் பூஞ்சைகள் (காளான்கள்) என்னும் பிரிவில் வைக்கப்படுபவை.  (எத்தினால் அல்ல; எத்தனால்)

   “கங்கை வாழ் ஓங்கில் (டால்பின்), இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினமாக 2010 –ல் அறிவிக்கப்பட்டது”, (பக்.92, 9 ஆம் வகுப்பு) கங்கை வாழ் ஓங்கிலை நீர்வாழ் விலங்காக அடையாளப் படுத்தியுள்ளனர்

    “The Ganetic Dolphin was declared the National Aquatic Animal in 2010” (page 80) என்றுதான் ஆங்கில வழியில் உள்ளது. ‘National Aquatic Animal’ என்பது எப்படிகடல்வாழ் உயிரினம்ஆனது என்று தெரியவில்லை. இதுதான் பாடநூல்கள் மொழியாக்கத்தின் நிலை

   நான்கு வகையான நன்னீர் (ஆற்று) ஓங்கில்கள் (டால்பின்கள்) உலகில் காணப்படுகின்றன. அவை கங்கை (இந்தியா), சிந்து (பாகிஸ்தான்), யாங் சி (சீனா), அமேசான் (தென் அமெரிக்கா) ஆகிய ஆறுகளில் காணப்படுவனவாகும். இவற்றில் அமேசான் ஓங்கில்கள் மிகப் பெரியவை. பாகிஸ்தானும் சிந்து ஓங்கிலை தேசிய நீர்வாழ்  விலங்காக அறிவித்துள்ளது.  

    நீர்வாழிடம் நன்னீர் வாழிடம் (fresh water), கடல்நீர் வாழிடம் (marine)  என இரண்டாகப் பிரியும். கங்கை நதியில் வாழும் ஒரு வகை ஓங்கிலை (டால்பின்) நன்னீர் விலங்காகவே வகைப்படுத்த வேண்டும். பிற்காலத்தில் கடல்நீர் உயிரினமாக வேறொன்றை அறிவிக்க நேரலாம்! ரிக்டர் அளவுகோல் என்றால் என்ன? எனக்கேட்ட அறிவியல் தொழிநுட்பத்துறை அமைச்சரைக் கொண்ட நாடு இது! மேலும் வேதங்கள்புரணங்களில்  இருக்கும் உண்மைகளை விண்டுரைக்கும் இவர்களது திறமை அறிவியலில் வசப்பட வாய்ப்பே இல்லை

      ‘ரான் ஆப் கட்ச்பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. (தனி ஆய்வு: பக்.88) இதனுடன் ராணுவ வீரர்களின் இன்னல்கள் பேசப்படுகின்றன. சதுப்புநிலம் என்றால் உவர்நிலம் என்கிற கற்பிதத்தை  முதலில் உடைக்கவேண்டும். சதுப்புநிலங்களில்கூட நன்னீர், உவர்நீர் சதுப்புநிலங்கள் உண்டு. கங்கையின் தராய் நன்னீர் சதுப்புநிலமாகும். ரான் ஆப் கட்ச், சுந்தரவனக்காடுகள், பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையத்திக்காடுகள் (கண்டல்கள்) போன்ற ஆறுகளின் கழிமுகப் பகுதிகளில் காணப்படுவது உவர் சதுப்புநிலங்களாகும். Estuary என்பது பொங்குமுகம், கழிமுகம், முகத்துவாரம்  எனப் பலவாறு  மொழிபெயர்க்கப்படுகிறது

   சதுப்புநிலங்கள், காடுகள், பாலைவனங்கள், பனிமலைகள், கடல்கள் ஆகிய பகுதிகளில் ராணுவத்தினர் படும் சிரமங்களைப் பட்டியலிடும்போது நமக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் உயிர்வாழ முடியாத பகுதி என்று நினைக்கும்  இவ்விடங்களில் பழங்குடி மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து வருவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இவை சூழலியல் குறித்த நமது பார்வைகளைச் சற்று விரிவாக்கக்கூடும்

    பழங்குடியினர், மீனவர்கள் போன்றவர்களை அவ்விடங்களை  வீட்டு அப்புறப்படுத்தும் சூழலே இங்குள்ளது. அவர்கள் அங்கு வசிப்பதே பாதுகாப்புக்கும் சூழலியலுக்கும் அச்சுறுத்தல் என்கிற மனநிலை மிக மோசமானது. இப்பகுதிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்க அவர்களை அப்புறப்படுத்துவதுதான் இந்தியாவெங்கும் நடக்கிறது. எல்லைப் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, பாலைவன மேம்பாடு, சதுப்புநிலப் பாதுகாப்பு, ஓதசக்தி உற்பத்தி, இமயமலை (கார்கில், சியாச்சின்) என்று வரும்போது அங்குள்ள பழங்குடியினர், உள்ளூர் மக்கள் திரளைப் பயன்படுத்தாமல் அவர்களை விரட்டியடிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிலை மாறவேண்டும். இவைகளைப் பற்றிக் கற்பிதம் செய்யப்பட்ட நூலறிவைவிட அம்மக்களுக்கு இயற்கை மீதான் அனுபவ அறிவு அதிகம் என்பதை அங்கீகரிக்கும் மனநிலை வேண்டும். கார்கில் ஊடுருவலை இந்திய உளவுத்துறையோ, செயற்கைக் கோள்களோ கண்டுபிடிக்கவில்லை. அங்கு ஆடுகள் மேய்க்கும் பழங்குடியினர் பார்த்துத் தெரிவித்த பிறகுதான் ஊடுருவல் இந்திய ராணுவத்தின் கவனத்திற்கு வந்தது.

    அதைப்போல சுந்தரவனக் காடுகளில் மக்கள் வசிக்க முடியாத பகுதிகளில் அகதிகளாகக் குடியேறி வாழ்ந்த தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்ட மக்கள் (நாமசூத்திரர்கள்)  மேற்குவங்க அரசால் அழித்தொழிக்கப் பட்டனர். (பார்க்க: மரிஜிச்சாபி படுகொலைகள், கருப்புப்பிரதிகள் வெளியீடு) வனப்பாதுகாப்பு, கடற்கரை மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு போன்றவை வனவாசிகள், மீனவர்கள், பழங்குடியினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படவேண்டும். ஆனால் அத்தகைய பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்பதே யதார்த்தம்.
    
         மன்னார் வளைகுடாவின் இருப்பிடம்இந்தியாவின் தென்கிழக்குப் பகுதிக்கும் இலங்கையின் மேற்குக் கடற்கரைக்கும் இடையே சோழமண்டலக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது”, (பக்.108) என்று படத்தில் குறிக்கப்படுகிறது. தெற்கே கோடியக்கரையில் தொடங்கி வடக்கே கிருஷ்ணா நதியின் கழிமுகம் வரை சோழமண்டலக் கடற்கரை என்பது உள்ளது. சோழமண்டலக் கடற்கரைக்குத் தெற்கே அல்லது கீழே தென் தமிழகக் கடற்கரைப்பகுதியில் மன்னார் வளைகுடா அமைந்துள்ளது

    அவிசீனியா, ரைசோபோரா போன்றவை உவர் சதுப்புநிலத் தாவரங்களாகும். மாங்குரூவ் என்ற பெயரில் தாவரம் ஏதும் உண்டா? சதுப்புநிலக்காடுகளை ‘mangrove forest’ என்றழைக்கிறோம். இதுவே தாவரமாகிப் போனதோ?

    ஆங்கில மற்றும் தமிழ் வழிப் பாடநூல்களில் விளக்கப்படத்தில் கீழ்க்கண்டவாறு இடம்பெறுகிறது

Flora

    They consist of species belonging to the mangrove, Rhizophora, Avicennia, Bruguiera, Ceriops and Lumnitzera genus. (page 95, IX Std.)

தாவரங்கள்

இப்பகுதியில் காணப்படும் தாவரங்கள் மாங்குரூவ், ரைசோபோரா, அவிசேனியா, புருஃவீய்ரா, செரியாப்ஸ் மற்றும் லூம்நிட்ஜெரா ஜெனஸ் (தமிழ் வழி)

Fauna 

     Indo - Pacific bottle nose dolphin, Spinner dolphin, Common dolphin, Melon - headed whale and critically endangered whale species. (page 95, IX Std.)

விலங்குகள்

பாட்டில் மூக்கு, ஸ்பின்னர், பொதுவான டால்பின்கள், மெலன் ஹெட் திமிங்கிலம் மற்றும் அழியும் நிலையில் அருகிவரும் உயிரினங்கள். (தமிழ் வழி)

   இந்த மொழியாக்கங்களை வாசிக்கும்போது நகைப்பிற்கிடமாக இருக்கிறது. ‘Common dolphin’ டால்பின் என்று சொன்னால் போதுமே! பொதுவான டால்பின் என்று சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்க வேண்டுமா? இந்திய - பசுபிக் பகுதிகளில் காணப்படும் பாட்டில் மூக்கு டால்பின், ஸ்பின்னர் டால்பின் (சிறியவகை) ஆகியன இங்கு சொல்லப்படுகிறது.  “இந்திய - பசுபிக் பகுதி” யை தமிழில் காணவில்லை.

     Vizhinjam - விழிஞ்சம் என்பதைவிழிஞ்சியம்’ என்று எழுதக்கூடாது. இதைப்போலவே இனயம்  என்பது இணையம் என்று மாற்றி எழுதுவதும் உண்டு. (அன்னா ஹசாரே ஐ அண்ணா ஹசாரே என்று சொல்வதைப்போல) Hydro turbines – விசைப்பொறி உருளை பொருத்தமாக இல்லை. (பக்.87) Hypsometric curve என்பதை உயரவிளக்கப்படம் என்று சொல்வதேப் போதுமானது. உயரங்காட்டு வளைவு என  பயங்காட்ட வேண்டாம். (பக்.84) 
     
         கேரள மாநிலம் விழிஞ்சம் என்னுமிடத்தில் சுமார் ரூ. 7000 கோடி செலவில் பன்னாட்டுத் துறைமுகத்திட்டம் செயல்படுத்துவது அம்மாநில மக்களின் எதிர்ப்பால் தடைபட்டுள்ளது. அதை தமிழ்நாட்டு கடற்பகுதியான குளச்சலுக்கு அருகே இனயம் (இணையம் அல்ல) என்னுமிடத்திற்கு மாற்ற நடந்த முயற்சியும் தமிழக மக்களின் எதிர்ப்பைப் பெற்றுள்ளது. சேது சமுத்திரம், பன்னாட்டுத் துறைமுகம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தும்போது இப்பகுதிகளில் உள்ள பவளப்பறைகள் வறண்டு, ஆக்சிஜன் குறைந்து கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கமுடியாத பகுதியாக மாறும் அபாயம் உள்ளது. 

    ஆனால் பாடநூல்கள் என்ன சொல்கின்றன? ‘கடல் வளங்களைப் பாதுகாத்தல்’ (பக்.92, 9 ஆம் வகுப்பு) என்னும் தலைப்பின் கீழ் எண்ணெய் வளம், பெருங்கடல் மீன்பிடிப்பு, சுற்றுலா, பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள் மூலம் வர்த்தக மேம்பாடு, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஆகியன பேசப்படுகிறது. இவையனைத்துமே கடல்வளம் மற்றும் சூழலியலுக்கு எதிரான செயல்பாடுகள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

   ஒரு உள்ளூர் உதாரணம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் வாஞ்சூரில் (தமிழ்நாட்டு எல்லையான நாகூர் அருகில்) மார்க் (MARG) தனியார் துறைமுகம் 2006 இல் அமைக்கப்பட்டது. வேதியுரங்கள், சிமென்ட் போன்றவற்றை இறக்குமதி செய்வதாக முதலில் சொன்ன இந்நிறுவனம் தற்போது இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை மலைபோல் குவித்து வைத்துள்ளது. இத்துறைமுகம் புதுச்சேரிக்குட்பட்ட காரைக்காலில் இருப்பினும் ஒப்பீட்டளவில் பாதிப்பு தமிழகப் பகுதிகளுக்கே அதிகம். இதைப்போலவே விழிஞ்சம், இனயம் என எந்தப்பகுதியில் துறைமுகம் அமைக்கப்பட்டாலும் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் பாதிப்படையும். 

    இங்கிருந்து கருப்பு மணல் போன்றிருக்கும் நிலக்கரி (சாம்பல்) சரக்குத் தொடர்வண்டிகள், லாரிகள் என இருப்புப்பாதைகள் மற்றும் சாலைகள் வழியே மூடாமல் கொண்டு செல்லப்படுகின்றன. நிலக்கரித்துகள்கள் எங்கும் படிந்து எங்கும் கருமை படர்ந்துள்ளது. இதனால் ஏற்படும் சூழலியல், சுகாதாரப் பாதிப்புகள் ஏராளம்.  எண்ணூர் துறைமுகத்தால் வடசென்னைக்கு ஏற்பட்ட நிலை மார்க் துறைமுகத்தால் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டப் பகுதிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலைவிட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

    கடலிலும் இதன் பாதிப்பு மிகுதி. காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகள்  உடனடியாகப் பாதிப்படையும். இப்பகுதியிலுள்ள சதுப்புநிலக் காடுகள் (அலையத்திக்காடுகள்) பெருமளவு அழியும். நாகூர் பகுதி மக்கள் இதற்காக பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மக்கள்திரள் மற்றும் சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர்.

   ஆர்க்டிக் தூந்திர உணவு வலையில் grasses என்பது புல்வெளி என தமிழ்ப் படுத்தப்படுகிறது. Grasslands தானே புல்வெளிகள்? Grasses புற்கள் என்ற சொல்ல ஏது தடை?  lichen - லிச்சென்களை - பாறைச்செடி என்று சொல்வது சரியா?  (பாறைகள் மீது ஒட்டி வாழும் ஆல்காக்கள் லித்தோஃபைட்கள் எனப்படும்.) லிச்சென்கள் என்பவை  பூஞ்சைகள் ஆல்காக்களுடன் கூட்டுயிரி வாழ்க்கை நடத்தும்  முறையாகும்.  இதில் பூஞ்சைகளும் பாசிகளும் இணைந்து வாழ்கின்றன. இவையே வடதுருவப் பகுதியில் (ஆர்க்டிக்) காணப்படுகின்றன. எனவே இது பாறைச்செடிகள் அல்ல.

      National Institute of Oceanography (NIO) தேசிய கடல்சார் நிறுவனம்’, என்று சொல்லலாமா? ‘தேசியப் பேராழியியல் நிறுவனம்’, என்று சொல்லலாமே! Sea, Ocean  இரண்டையும் கடல் என்றே மாறி மாறி குறிப்பது சரியல்ல

    “There are places on earth that are both biologically rich and deeply threatened”,  (page 94, IX Std.)

     “புவியின் சில பகுதிகளில் அதிக உயிரின வளங்கள் மற்றும் அதிக உயிரினப் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளும் உள்ளன”, (பக்.107)  இப்படித்தான் சொற்றொடர் அமைப்புகள் உள்ளன. எளிமையற்ற மொழியாக்கங்கள் குழந்தைகளையும் பெற்றோர்களையும் ஆங்கில வழிக்குத் துரத்தவேச் செய்யும். கீழே இன்னொரு மொழிபெயர்ப்பு அதிசயம்!

“A person who studies ecology is referred to as an Ecologist”, (page 88, IX Std.)

     “சூழலியல் பற்றிப் படிப்பவர் சூழலியலாளர் (Ecologist) எனப்படுகிறார்”, (பக்.99) study என்னும் சொல்லுக்குத் தமிழில் ஆய்வு என்றும் பொருள் உண்டல்லவா? “person who studies or is an expert in Ecology”, என்று ஆக்ஸ்போர்டு அகராதி சொல்கிறது. “சூழலியல் பற்றி ஆய்வு செய்பவர் அல்லது  வல்லுநர்”, என்பதே பொருத்தமாக இருக்க முடியும்

      சுரங்கத் தொழில்தான் அனைத்துப் பொருளாதாரச் செயல்பாடுகளிலும் முன்னிலை வகிப்பதாக”, (பக்.160, 6 ஆம் வகுப்புசொல்லப்படுகிறது. இதன் பாதிப்புகள், சூழலியல் கேடுகளை விளக்காமல் வளப்பாதுகாப்பு, நிலைத்த வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியமில்லை என்பதை  உணரவேண்டும்.

      மேலும் உயிரினப் பன்மை அழிதல், கடல் வளப் பாதுகாப்பு, நிலைத்த வளர்ச்சி ஆகியன பற்றி விளக்கும் போதெல்லாம் மக்கள்தொகைப் பெருக்கம் மட்டுமே காரணமாகச் சுட்டப்படுகிறது. கங்கை மாசுபட்டதில் அதன் கரைகளில் இருக்கும் தொழிற்சாலைகளுக்குப் பங்கில்லையா? மக்கள் பெருக்கத்தின் காரணமாகவே இங்கு தொழிலகங்கள் நிறுவப்படுகின்றனவா? இங்குள்ள கார், தோல், பின்னலாடை போன்ற  தொழில் உற்பத்தியில் உள்நாட்டு நுகர்வு எவ்வளவு? மக்கள்தொகையைக் காரணம் காட்டுவது தப்பிக்கும் போக்கு. இவ்வகை மனநிலை மாற்றம் பெறவேண்டும். இது கல்வியில் நடைபெறவில்லை என்றால் வேறெங்கும் சாத்தியமில்லைஒரு பின் குறிப்பு

     ஒன்பதாம் வகுப்பு குடிமையியல் - மனித உரிமைகள் பாடத்தில் மட்டும் சில திருத்தங்களை SCERT செய்துள்ளது. மலாலா உரையின் விடுபட்ட பகுதி, போக்ஸோ (POCSO), பெண்களுக்கான ஒதுக்கீடு 30%, பழங்குடியினர் ஒதுக்கீடு 1% ஆகியவற்றைத் தவிர எஞ்சியவை பிழைகளாகப் படவில்லை போலும்! அடுத்த ஆண்டில் முழுவதுமாக பிழைகள் களையப்படும் என்று நம்புவோம்.

                                   (இன்னும் வரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக