திங்கள், அக்டோபர் 01, 2018

பெரியார் ஏன் இன்றும் தேவைப்படுகிறார்?


பெரியார் ஏன் இன்றும் தேவைப்படுகிறார்?


மு.சிவகுருநாதன்


பகுதி: ஒன்று
    
இது பெரியார் பிறந்த மண். இங்கு இந்துத்துவம் காலூன்றவே முடியாது என்று ஒருசிலர் முழக்கம் எழுப்புகின்றனர். இது மிகவும் அபாயகரமான போக்கு. இது ஒரு வகையில் மூட நம்பிக்கையும் கூட. காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில்தான் நாட்டுப் பிரிவினைக்கு அடுத்தபடியாக 2000 இல் நடந்த இந்துத்துவ வெறியாட்டத்தில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். மகாத்மா ஜோதிபா புலே (மராட்டியம்), அண்ணல் அம்பேத்கர் பிறந்த மண்ணான மத்தியப் பிரதேசம், பூர்வீகமான மராட்டிய மாநிலம் ஆகியன தொடர்ந்து இந்துத்துவத்தின் சோதனைச்சாலையாகவும் வளரும் இடமாகவே இருந்து வருகிறது. 


   தமிழகத்தை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இந்துத்துவத்தை இங்கு அனுமதித்து வளரவிட்டதுதான் கடந்த கால வரலாறு. இவர்களைத் திட்டும் தமிழ் தேசியர்கள் பலர் இந்துத்துவ அபாயத்தை உணராதவர்களாகவும் மாறாக அவர்களுடன் இணக்கம் கொள்பவர்களாகவும் இருப்பது விந்தை. இந்துத்துவா ஆட்களுக்கும் தமிழ் தேசியர்களும் பல புள்ளிகளில் ஒன்றிணைகின்றனர். அவற்றில் மிக முக்கியமான  ஒன்று பெரியார் எதிர்ப்பு. ம.பொ.சி. யை மேற்கோள் காட்டி “திராவிட எதிர்ப்பு என்பதே பிராமண ஆதரவு”, என்பார் பெரியார். இத்தகைய பின்னணியில் பெரியார் பிறந்த மண் என இனியும் இறுமாந்திருக்க முடியாது. பெரியார், அம்பேத்கர் போன்ற மேதமைகளை மறு வாசிப்பு செய்யவேண்டும். அதை இன்றைய இளைஞர்களிடம் இயக்கமாகக் கொண்டு சேர்க்க வேண்டும். 


    அண்ணல் அம்பேத்கரது நூற்கள் மத்திய அரசின் உதவியுடம் அம்பேத்கர் பவுண்டேஷன் மிக மலிவான விலையில் தொகுதி ஒன்று ரூ. 40 க்கு இதுவரையில் தமிழில் 37 தொகுதிகள் வெளிவந்துள்ளது. இதுபோக அம்பேத்கர் அவர்களது வெளிவராத எழுத்துகள் தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்படுகின்றன. 


   பெரியாருக்கு இந்த வாய்ப்புகள் இல்லை. அவரது நூல்கள் அரசுடமையாக்கப்படவில்லை. இருப்பினும் சிறு சிறு நூல்களாக பெரியாரது சிந்தனைகள் தமிழில் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. தமிழர்களின் சிந்தனைச் சிதைவு, சுயநலம், பெருத்த நடுத்தர வர்க்கம் போன்ற பல காரணிகள் இவற்றைப் பெரிதாகக் கண்டுகொள்வவில்லை. ‘பெரியார் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் மூன்று தொகுதிகள் 1974 இல் பெரியவர் வே. ஆனைமுத்து அவர்களால் வெளியிடப்பட்டது. கைகளால் தூக்கிப் படிக்க இயலாத பெருநூற்கள் இவை. இவை திருத்தம் செய்யப்பட்டு 2009 இல் 20 தொகுதிகளாக மறுபதிப்பு கண்டது. 

   பெரியாரது ஒட்டுமொத்த எழுத்துகள், குடியரசு இதழ் தொகுப்புகளை திராவிடர் கழகம் வெளியிட்டது.  பெரியார் திராவிடர் கழகமும் பெரியார் நூல் தொகுப்புகளை வெளியிட்டது. பசு.கவுதமன் தெரிவு செய்யப்பட்ட சில படைப்புகளை 2009 இல் இரு தொகுப்பாக ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்…’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் மூலம் வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக பசு.கவுதமன் தொகுத்த விரிவான 5 தொகுதிகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸால் ஏப்ரல் 2017 இல் வெளியானது. ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ என்ற தலைப்பில் மொழி, கலையும் பண்பாடும், இலக்கியம், தத்துவமும் சொற்சித்திரமும், சித்திரபுத்திரனின் கட்டுரைகளும் உரையாடல்களும் என இந்த 5 தொகுப்புகளும் உள்ளன.  

    2016 ஜனவரி சென்னைப் புத்தகச் சந்தையில் கோவை விடியல் பதிப்பகம் ‘பெரியார்: அன்றும் என்றும்’ (பெரியாரின் தெர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) என்னும் ஒரு தொகுப்பு நூலை மலிவு விலையில் வெளியிட்டது. சில நாள்களிலேயே பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. அடுத்த ஆண்டு (2017)  ‘அம்பேத்கர்: அன்றும் என்றும்’ என்னும் தொகுப்பைக் கொண்டு வந்தனர். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

   இவற்றைத் தவிர ஆய்வு நூல்களில் குறிப்பிடத்தக்கவை எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா இணைந்து எழுதிய ‘பெரியார்: சுயமரியாதை – சமதர்மம்’ என்னும் நூலும் இதன் இரண்டாம் பகுதியான  எஸ்.வி.ராஜதுரை எழுதிய ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ என்னும் விடியல் பதிப்பகம் வெளியிட்ட இரு நூற்களுமாகும். பெரியாரை புதிய நோக்கின் அணுகிய அ.மார்க்ஸின் ‘பெரியார்?’ என்னும் குறுநூலும் வாசிக்க வேண்டியது.  ‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிட்ட இந்நூல் மின்னூலாக கீழ்க்கண்ட இணைப்பில் கிடைக்கிறது. 

http://www.amarx.in/wp-content/uploads/2016/10/Periyar-Book.pdf

    இன்றைய அவசர உலகில் தலையணை புத்தகங்களை வாசிக்க யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. அம்பேத்கரது எழுத்துகள் சிறு சிறு வெளியீடுகளாக குறைந்த விலையில் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட வேண்டும் என்று மனித உரிமைப் போராளி பொ.இரத்தினம் அடிக்கடி குறிப்பிடுவார். அவரும் பல சிறு வெளியீடுகளை அம்பேத்கர், பவுத்தம் பற்றி கொண்டு வந்துள்ளார். 

   பெரியார் பற்றி தி.க. சிறு வெளியீடுகளைக் கொண்டுவரத்தான் செய்கிறது. அவை அந்த இயக்கத்தைத் தாண்டி வெளியே செல்வதில்லை. கி.வீரமணியின் நூல்களுக்கு மட்டும் அவர்கள் முக்கியத்துவம் அளிப்பதாகக் குற்றஞ்சாட்டும் உண்டு. தோழர் தம்பி தனது நன்செய் பதிப்பகம் (திருத்துறைப்பூண்டி) மூலம் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும் பெரியாரது குறுநூலை ரூ. 10 விலைக்கு மலிவாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.  (பாரதி புத்தகாலயம் – எட்டாவது பதிப்பு: 2006 - வெளியிட்டுள்ள 64 பக்கமுள்ள  இந்நூல் ரூ. 25 விலை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜன. 2004 இல் திக ரூ. 25 க்கு வெளியிட்டது.)  மிக இன்றியமையாத பெரியார், அம்பேத்கர் எழுத்துகளை குறுநூற்களை அச்சிட்டு அளிப்பது, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். 

பகுதி: இரண்டு

     “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்தநாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்”,  

      என்று சுயமதிப்பீடு செய்துகொண்டு தாம் இறக்கும் வரையிலும் கலகக்கராராய் வாழ்ந்தவர் பெரியார். 

    “எனக்கு இந்தவிதமான உணர்ச்சிக்கு இடமில்லாமல், மானத்தைப் பற்றி கவலை இல்லாத திராவிட மக்களிடத்தில் நல்லபேர் வாங்கவேண்டும் என்ற கவலை சிறிதுமில்லை”, 

      என்று வெளிப்படையாக அறிவித்து கலாச்சார மதிப்பீடுகளை கட்டுடைத்து எதிர்க்கலாச்சாரவாதியாக இருந்தார்.

    “நாதசுரக் குழாயாய் இருந்தால் ஊதியாக வேண்டும். தவுலாயிருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பதுபோல் எனக்குத் தொண்டை, குரல் உள்ளவரை பேசியாக; பிரசங்கம் செய்தாக வேண்டும்”, என்று உடல் நலிவுற்ற நிலைலிலும் நவீன வசதிகள் ஏதுமற்ற சூழலில் தமிழகத்தின் தொலைதூர கிராமங்களுக்கும் சென்று வழிகாட்டினார். 
 
   “நானே எழுதி, நானே அச்சுக் கோர்த்து, நானே அச்சடித்து, யாரும் வாங்காவிட்டாலும் நான் ஒருவனே படிப்பேன்”, என்று தன்னிருப்பை நிலைநாட்டி, “93 வயதாகிவிட்டது. இனி என்னை கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள். சென்னையில் நிரந்தரமாகத் தங்கி நூல் வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுகிறேன்”, என்று சொன்ன அவரது உழைப்பு இன்று வீணாகிவிட்டதோ என்று எண்ணக்கூடிய அளவில் தமிழகச்சூழல் உள்ளது. 

   “எந்தக்காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய  எந்த குணத்தையும் என்மீது சுமத்திவிடாதீர்கள்”, என்று கேட்டுக்கொள்ளும் பெரியார் போகுமிடங்களில், “ராமசாமி கழுதைக்கு செருப்படி”, “ராமசாமி கழுதை செத்துவிட்டது”, “ராமசாயின் மனைவி அவிசாரி”, என்றெல்லாம் சுவரெழுத்துகள் எழுதப்பட்டன. “ராமசாமி சிரஞ்சீவியாக இருக்க வேண்டும்”, “ராமசாமி மனைவி கற்புக்கரசி”, என்பதற்கெல்லாம் மகிழ்ச்சியடைந்திருந்தால்தானே இதற்காக விசனப்படவேண்டும் என்று எதிர்க்கேள்வி எழுப்பி தனது பயணத்தைத் தொடங்கிவிடுவார் பெரியார். அவர் தன் மீது வீசப்பட்ட செருப்புகளை மிதித்துக்கொண்டு தனது பயணத்தில் முன்னேறினாரே தவிர பின்தங்கிவிடவில்லை. அவர் சிலை அவமதிக்கும் சங்கிகளுக்கு இது என்றுமே புரியப் போவதில்லை. 


பற்றுகளை விட்டொழித்தல்

      “ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே”  

        என்று புத்தர் வழியில் சாதி, மத, இன, மத, மொழிப் பற்றுக்களை துறக்கச் சொன்னவர் பெரியார். ஆனாலும்  அவருக்கு ஒரு அபிமானமிருந்தது. அதுதான் சுயமரியாதை அபிமானம். அதை அவரே வெளிப்படுத்துகிறார்.

   “எந்தக் கட்சியிலும் நீங்கள் சேரக்கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். உங்களுக்குள் ‘தேசாபிமானம்’ என்கின்ற யோக்கியமற்ற சூழ்ச்சிக்கு நீங்கள் ஆளாகக்கூடாது. அது, சோம்பேறிகள், காலிகள் ஆகியவர்கள் பிழைப்புக்கு ஏற்படுத்தப்பட்ட மோட்சம், நரகம் என்பது போன்ற மூட நம்பிக்கையாகும். உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானந்தான் உண்மையாய் வேண்டும்”, (குடியரசு: 13.10.1935, ராசிபுரம் வட்ட ஆதிதிராவிடர் மாநாடு)


பகுதி: மூன்று

கல்விச் சிந்தனைகள்

    பவுத்தம் ஆசைகளை மட்டுமல்ல; அனைத்து வகையான பற்றுகளையும்  அறவே அகற்றச் சொன்னது. அப்போதுதான் நிர்வாணம் கிடைக்கும். பற்றுகளைத் துறந்து நிர்வாணமடையும் சிந்தனா முறை புத்தர் நமக்களித்தது. 

   சேதோ விமுக்தி, பிரக்ஞா விமுக்தி என இருவகையான முக்திநிலைகளை தீக நிகாயத்தில் புத்தர் வலியுறுத்துகிறார். அறிவுநிலை மற்றும் உணர்வு ஆகிய இரண்டிலும் உள்ள பற்றுகளை நீக்குதல்  இங்கு முதன்மையானது. (பக். 72, தீக நிகாயம் – பௌத்த மறைநூல், தமிழில்: மு.கு.ஜெகந்நாத ராஜா, வெளியீடு: தமிழினி, டிசம்பர் 1988)  இதைத்தான் பெரியார் வேறு மொழியில் சொன்னார்.  

   “இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பெயரால் பல கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பல்கலைக்கழகம், கல்லூரி, உயர்தரப்பள்ளி என்பதாக பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை வைத்துக் கல்வி கற்பிப்பதைவிட, பகுத்தறிவுப் பள்ளிகள் மாத்திரம் வைத்து, ‘நிர்வாணமான சிந்தனா சக்தி’ தரும் படிப்பைக் கொடுத்து, மக்களை எதைப்பற்றியும், எந்தப் பற்றுமற்ற வகையில் செல்லும் வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமானால், நாட்டில் இன்று வீணாகும் செல்வம், அறிவு, ஊக்கம், நேரம் முதலியவை பெருமளவு மீதமாகி மக்கள் வாழ்க்கைத் தரமுயர்ந்து, ஒழுக்கம், நேர்மை, நல்லெண்ணம், மனிதாபிமானம், அன்பு, பரஸ்பர உதவி முதலியவை தானாக வளர்ந்து, இவைகளுக்குக் கேடான தன்மைகள் மறைந்து, எல்லா மக்களும் ‘குறைவற்றச் செல்வத்துடனும், நிறைவற்ற ஆயுளுடனும்’ வாழ்வார் என்பது உறுதி”. (விடுதலை தலையங்கம். பக். 146, பெரியார் கல்வி சிந்தனைகள், தொகுப்பு: அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலய வெளியீடு: டிசம்பர் 2007)

   மனிதன் பற்றற்ற நிலையில் எதையும் சிந்திக்கவேண்டும் என்று சொன்னவர் பெரியார். கூடவே மதம், சாதி, மொழி, தேசம் என நான்கு பற்றுக்களை அழிக்கவேண்டியவையாக அவரால் அடையாளம் காட்டப்பட்டன. இதில் முதலிரண்டும் சமூக சீர்திருத்தவாதிகள் அனைவரும் சொல்கிற ஒன்றுதான். ஆனால் பின்னிரண்டையும் சொல்வதற்கு பெரியார் போன்ற ஆளுமை தேவைப்படுகிறார்.

    கல்வியின் நோக்கம் ஏதேனும் ஒன்றை திணிப்பதல்ல. மாறாக ஏற்கனவே இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டிருப்பதை வெளிக்கொணர்ந்து விடுவித்து அவர்களை நிர்வாணமாக்குவதே கல்வி. எத்தகைய பற்றுகளும் முன்முடிவுகளும் துறந்து நிர்வாணமாவதே கற்றலில் முதல்படி. 

பறையர், சூத்திரப்பட்டங்கள் நீங்க…  

  “ஆதித் திராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்படவேண்டுமென்பதும், திராவிடர்களுக்கும் ஆதித் திராவிடர்களுக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும் பேதங்களும் ஒழிந்து, ஒரே சமூகமாக ஆக வேண்டும் என்பதும் எனது ஆசை. (குடியரசு: 02.08.1940, திருவாரூர் ஜஸ்டிஸ் கட்சி மாநாடு)

    “பறையர் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப்பட்டம் போய்விடும் என்று கருதினீர்களேயானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களே யாவீர்கள்”, என்றும் பெரியார் எச்சரிக்கிறார். தலித்களுக்கு தனி கிணறு திறந்துவைக்கும் காரைக்குடி நிகழ்வில் இதில் தனக்கு உடன்பாடில்லை என்பதையும் பதிவு செய்கிறார். 

மநு தர்மம்

   தமிழ், தமிழர்கள் என்கிற போர்வையில் மநு தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் போக்கு இன்றும் நிலவுகிறது. மநுவை மிகச்சரியாக அம்பலப்படுத்தியவர்கள் பெரியாரும் அம்பேத்கரும். இந்தியத் தலைமை நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது அங்கு மநுவின் சிலை நிறுவும் யோசனை முன்வைக்கப்பட்டது. அப்படி சிலை நிறுவினால் முதல் ஆளாக நான் இடித்துத் தள்ளுவேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது. 

    ஆனால் காலந்தோறும் மநுவை,  வருணாஸ்ரமத்தை எதிர்த்து இயக்கம் கண்ட பெரியார் பிறந்த மண்ணில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மநுநீதிச்சோழன்’ சிலை வைக்கப்பட்டுள்ளதே! திருவாரூர் நகரில் இருந்த சிறிய பூங்காவும் இன்று ‘மநு நீதிச்சோழன் மணிமண்பத்திற்கு’ திருடப்பட்டுவிட்டது. மநுவை, மநு தர்மத்தை எப்போது நாம் விளங்கிக் கொள்ளப் போகிறோம்? மநுவின் பெயரால் ஆட்சி நடத்திய ராஜராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட பிற்காலச் சோழர்களை தமிழர்களின் பெருமைகளாக, அடையாளமாக முன்னிறுத்துவதை எப்போது நிறுத்தப் போகிறோம்? முதலாம் ராஜராஜன் தனது தமையனைக் (ஆதித்திய கரிகாலன்) கொன்ற பிராமணர்களுக்கு மநு தர்மப்படி தண்டனை வழங்கப்பட்டது நமக்கெல்லாம் தெரியுந்தானே!

   திருவாரூரில் நடந்த சைவ – சமண கலகம் பற்றி பெரியபுராணப் பாடல் வழியே அறிய முடிகிறது.  63 நாயன்மார்களில் ஒருவரான தண்டியடிகள் காலத்தில் திருவாரூரில் சமணர் செல்வாக்கு மிகுந்திருந்தது.  கமலாலயம் எனப்படும் திருக்குளம் மிகச் சிறியதாகவும் அதனைச் சுற்றி நான்கு பக்கமும் சமணர்களின் சொத்துக்கள், பள்ளிகள், பாழிகள், மடங்கள் நிறைந்திருந்தன.  குளத்தைப் பெரிதாக்க தண்டியடிகள் விரும்புகிறார்.  வழக்கம் போலவே சிவபெருமான் அரசன் கனவில் வந்து தனது விருப்பத்தை வெளிப்படுத்த சமணர்களை ஓடத் துரத்திய பிறகு சமணப் பள்ளிகள், மடங்கள், பாழிகள் ஆகியவற்றை இடித்து குளத்தை விரிவுப்படுத்திய செய்தியை கீழ்க்கண்ட பெரியபுராணப் பாடல் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது. 

“அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர்தம்
சொன்ன வண்ண மேஅவரை ஓடத் தொடர்ந்து துரந்தற்பின்
பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து
மன்னவனும் மனமகிழ்ந்து வந்து தொண்டர் அடிபடிந்தான்”.
   பவுத்தம், சமணம், ஆசிவகம் என அவைதீக சமயங்கள் செழித்திருந்த திருவாரூர் தற்போதைய அடையாளமாக மநு, தேர், தியாகேசன் (சிவன்) மாறிப்போன கொடுமைகளை அறிய பெரியார் நமக்கு உதவுவார். 


தொலைநோக்குச் சிந்தனைகள்

     ‘இனிவரும் உலகம்’ பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனைக்கு எடுத்துக்காட்டு. மக்களின் தேவைகள் பூர்த்தியாகும், வேலை வாய்ப்பு இல்லாமற்போகாது, சோம்பேறிகள் இருக்க மாட்டார்கள், இழிவான வேலைகள் இருக்காது, ஒழுக்கக்குறைவு ஒழியும் என்று எதிர்காலத்தைப் பட்டியலிடுகிறார். கர்ப்பத்தடை குறித்த கருத்துகள் முற்போக்கானவை மட்டுமன்றி அறிவியல்பூர்வமானவை. 

    மேலும் அதிவேக விமானப் போக்குவரத்து, சட்டைப்பையில் கம்பியில்லாத தந்தி (செல்போன்?), உருவம் காட்டி பேசிக்கொள்ளும் சாதனம், சிறு குப்பிகளில் உணவு, மனித ஆயுள் நீட்டிப்பு, ஆண் – பெண் சேர்க்கை அவசியமில்லாத பிள்ளைப் பேறு என்று அவர் அடுக்கிக்கொண்டே செல்வது வியப்பு மேலிடக் கூடியது. 

   வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய சில நூல்களை வாசிக்கும்போது நமக்கு ஏற்படும் அதிர்ச்சிகள் அளவில்லாதவை.. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் சுயசரிதை (ஜூலை, 2014, அவ்வை இல்ல வெளியீடு) தமிழில் வெளியாகியுள்ளது. தேவதாசி ஒழிப்புச் சட்டமியற்ற பட்ட பாடுகளைச் சொல்லும்போதுகூட பெரியார் பெயரை ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. இதற்கான காரணம் நமக்குத் தெரியவில்லை.

   கர்ப்பத்தடை செய்து “பிள்ளைபேற்றைத் தடுப்பது முக்கியமான சுகாதாரம் என்பது சுகாதார மந்திரிக்கும் பெண்மணியாய் இருந்தும் டாக்டர் பட்டம் பெற்ற  முத்துலெட்சுமி அம்மாளுக்கும் தெரியாமல் போனது வருந்தத்தக்க காரியமேயாகும்”, என்று வருந்திக் கூறுவதுடன் இது தொடர்பான பிறமொழி நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவது, துண்டுப்பிரசுரம் வெளியிடுவது, நாடகம், சினிமா மூலம் பரப்புரை செய்வது ஆகியவற்றை வலியுறுத்துகிறார். “டாக்டர் முத்துலட்சுமி மசோதா, இந்து சமூக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்து முன்னாடியே அமுலில் வந்திருக்க வேண்டும். எனவே அம்மசோதாவை நான் பூர்ணமாக ஆதரிக்கிறேன்”, என்று கடித அறிக்கை வெளியிடுகிறார். இதைத் தடுக்க ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றோர் செய்த அட்டூழியங்களை நாடறியும். விரிவஞ்சி அவற்றை இங்கு தவிர்க்கிறேன்.

மொழிச் சிந்தனைகள்

   பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகளும் எழுத்துச் சீர்திருத்தங்களும் பின்னாளைய மொழியறிஞர்களும் வியக்கக் கூடிய வகையிலானவை. தமிழைக் காட்டுமிராண்டி  மொழி என்று கடுமையாகச் சாடிய பெரியார், மறுபுறம் அவற்றை மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டார். மொழி ஒரு கருவியே என்பதை அவர் பல இடங்களில் வலியுறுத்தினார்.  மதம், மொழி, இலக்கியம் ஆகியன சாதியைக் காப்பாற்றுபவை என்று சாடினார். தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் கூட சாதி, மதங்களை உயர்த்திப்பிடிப்பதை எடுத்துக்காட்டினார். இராமாயணம், பெரிய புராணம், தேவாரம், திருவாசகம் போன்ற இலக்கியப்பிரதிகளைக் கட்டுடைத்து, அதன் வாயிலாகவே தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்ற முடிவுக்கு அவர் வர நேரிடுகிறது. 

    அன்று மொழி பார்ப்பனியக் கறை படிந்ததாக இருந்தது. பின்னர் அதில் சைவக்கறை படிந்தது. சுயமரியாதை மற்றும் திராவிட இயக்கங்கள் அதை ஓரளவு மாற்ற முற்பட்டன. இருப்பினும் மேல், கீழ், உயர்ந்த, தாழ்ந்த என்பது போன்ற சொல்லாட்சிகள் இன்றும் நீடிக்கத்தான் செய்கின்றன. 

   எழுத்துச் சீர்திருத்தங்களை 13.01.1935 இல் ‘குடி அரசு’ இதழில் நடைமுறைப்படுத்தினார். தமிழ் எழுத்துகளை 54 அளவிற்கும் குறைக்கும் இவரது முடிவு மிகவும் புரட்சிகரமானச் செயல்பாடு. அச்சுப் பணியில் உள்ள பட்டறிவைக் கொண்டு அவரால் ஒரு சிறந்த மொழியிலாளராகச் செயல்பட முடிந்ததது வியப்பு. இவற்றுள் சிலவற்றை மட்டும் தமிழக அரசு ஏற்று பின்னாளில் நடைமுறைப்படுத்தியது. ‘ஐ, ஒள’ வரிசைகளை நீக்காமல் விட்டது புதிதாக மொழி கற்போருக்கும் இன்றும் இடையூறுதான். 

பவுத்தம், இஸ்லாம் குறித்த சிந்தனைகள்

   “இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து” என்று சொன்னதோடு அம்பேத்கர் இஸ்லாத்துக்குச் செல்வதை ஆதரித்து எழுதினார். ஆனால் அண்ணல் அம்பேத்கர் காலனிய மதம் என்பதால் கிறித்துவத்தையும் இந்தியாவை வென்று ஆண்ட மதமென்பதால் இஸ்லாத்தையும் தழுவ விரும்பவில்லை. அவரது முதல் தேர்வு சீக்கிய மதமாகவே இருந்தது. அதற்கு ஆதரவின்மையால் பவுத்தத்தைத் தேர்வு செய்தது வரலாறு. அம்பேத்கர் இந்தியப் பின்னணி கொண்ட ஒரு மதத்தையே விரும்பினார். 

   “புத்த தர்மம் என்றால், புத்தி தர்மம் என்பதாகும்; அதுதான் மனித தர்மமும் ஆகும். இந்த புத்தி தர்மத்தை – மனித தர்மத்தை எடுத்துக் கூறிப் பாடுபட்ட புத்தர்கள் எல்லாம் கழுவேற்றப்பட்டும், உடைமைகள் எல்லாம் சூறையாடப்பட்டும் இருக்கின்றனர். புத்த மடாலயங்கள் எல்லாம் இடிக்கப்பட்டும் தீ வைக்கப்பட்டும் இந்துக் கோயிலாக மாற்றப்பட்டும் கொடுமை இழைக்கப்பட்டும் இருக்கின்றன”, (கோலார் தங்க வயல் சொற்பொழிவு: விடுதலை: 16.05.1961) மறுபுறம் பவுத்த சிலை வழிபாட்டையும் இவர் விமர்சிக்கத் தவறுவதில்லை. 

    நமிநந்தியடிகளின் பெரிய புராணப்பாடலே திருவாரூர் தெப்பக்குளத்தை பெரிதாக்க அங்கிருந்த பவுத்த விகாரைகள், பாழிகள் ஆகியவற்றை இடித்த கதை பேசப்படுகிறது. சமணப் பெண்களை கற்பழிக்க வேண்டும் மாணிக்க வாசகர் பாடல் புகழ்பெற்றது! இதைப்பற்றிப் பெரியார், 

   “ஆலவாய் அழகராம் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் பாடும் திருத்தொண்டர் புராணத்தைச் (பெரிய புராணத்தை) சைவ மெய்யன்பர்கள் தலைமேல்வைத்துக் கொண்டாடுவார்கள்.

    ஆனால் அந்த நாள் முதலே கட்சி மாறித்தனங்களும், மாற்று மதத்துக்காரர் மனைவியரை மானபங்கப்படுத்த வேண்டும் என்னும் மதவெறியுணர்ச்சியும், 8000 சமணர்களை ஈவிரக்கமின்றிக் கழுவேற்றிக் கொன்ற கயமைத்தனங்களும் பெரியபுராணத்தில் பதிவாகியுள்ளன.”

    மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களில் திருவாலவாய்ப்பண் -கவுசிகம் என்னும் தலைப்பில் 3ஆவது பாட்டு,

மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாய்அருள்
பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண்,
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே

   இந்தத் திராவிடர்களின் (பெண்களை) - மனைவிகளை, தானே கற்பழிக்கத் திருவுளமே என்பது சம்பந்தர் பாடினதா? அல்லது வேறு யாரையாவதா? அல்லது இதற்கு வேறு பொருளா? என்கிற விவரத்தைப் பண்டிதர்கள் - சைவப் பண்டிதர்கள், அல்லது கிருபானந்தவாரியார், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கடப்பாடுடையவனாக இருப்பேன். (குடிஅரசு சித்திரபுத்திரன் கட்டுரை, 12.8.1944) என்று வினவுகிறார். இதற்கு யாரும் விளக்கம் அளித்ததாகத் தெரியவில்லை. பிற்காலத்தில் ‘கற்பழிப்பு’ என்ன்பதற்கு ‘கல்வியை அழித்தல்’ என்று புது விளக்கம் கூறப்பட்டது!  

புதிய போராட்ட வடிவங்கள்

   இந்து மதப் புராணக் குப்பைகள், கடவுள்கள் போன்றவற்றைச் சாடியும் பகுத்தறிவை மக்களிடம் விதைத்து வந்தார். திலகரால் குயுக்தியாக விடுதலைப் போராட்டத்தில் நுழைக்கப்பட்ட விநாயகரை  (கணசூரா) உடைத்தல், ராமர் படத்தைச் செருப்பால் அடித்தல், சட்டங்களைக் கொளுத்துதல், தமிழ்நாடு தவிர்த்த இந்தியப் படத்தைக் கொளுத்துதல், மநு தர்மம், இராமயணம் போன்ற குப்பைகளைக் கொளுத்துதல் என்பதாகவே பெரியாரது போராட்ட வடிவங்கள் இருந்தன. சுயமரியாதை இயக்கம் தொட்டு உண்ணாவிரதம் எனும் போராட்டத்தை பெரியார் கையிலெடுக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய செய்தி. காந்தியின் சத்தியகிரக போராட்ட வழிமுறைகளை கடைசி வரை விமர்சனம் செய்துகொண்டே இருந்தார்.  

   பெரியாரது மிக நீண்ட பொது வாழ்வில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக்காட்டி தமிழ் மொழிக்கும்  தலித்களுக்கும் எதிரானவராக சித்தரிப்பது அறிவுடைமையாகாது. அவரது எழுத்துகள், செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அணுகுவதே சிறந்தது. 


(30.09.2018 ஞாயிறன்று மாலை அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்ட நண்பர்கள் திருவாரூரில் ஏற்பாடு செய்த அறைக்கூட்டத்தில் பகிர்ந்துகொண்ட கருத்துகளின் கட்டுரை வடிவம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக