6
மற்றும் 9 ஆம் வகுப்பு இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்:
ஒரு
பார்வை -
பகுதி:
01
மு.சிவகுருநாதன்
(சமூக அறிவியல் - குடிமையியல் - மனித உரிமைகள், இந்திய
அரசமைப்புச் சட்டம், தேசிய சின்னங்கள் ஆகிய பாடங்கள் பற்றிய கருத்துகள்.)
6, 9 வகுப்புகளுக்கான
இரண்டாம் பருவப் பாடநூல்கள் வெளிவந்துவிட்டன. வழக்கம் போலவே மாநிலக்
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இணையதளத்தில் பதிவேற்றப்படுவதற்கு
முன்னதாகவே சமூக ஊடகங்களில் பரவிவிட்டன. ஒரு வாரத்தில் ‘கையேடுகள்’ வந்து விடுகின்றன.
இன்னொரு பக்கம் பாடக்குறிப்புக் கையேடுகள் அமோகமாய் விற்பனையாகின்றன. ஆசிரியர்கள் இடம்பெறும்
‘வாட்ஸ் அப்’ குழுக்களில் இவைகள் பகிரப்படுகின்றன. கையேடுகள், பாடக் குறிப்புகள் அதிகம்
விற்பனையாவது கல்வியில் நல்ல சூழல் இல்லை என்பதையே நமக்கு உணர்த்துகிறது.
பாடத்திட்டம், பாடநூல்
எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் இவற்றின் பின்னணியில் பலன் என்னவாக இருக்கும்? இதைத்
தடுக்க முடியாதவர்கள் 9, +1 வகுப்புகளில் பாடம் முழுமையாக நடத்தப்படுவதை எப்படிக் கண்காணிப்பார்கள்
என்பது கேள்விக்குறி.
தனியார் பள்ளிகளில்
இவ்வாண்டு மட்டுமே 9 வகுப்புப் பாடங்கள் நடத்தப்படும். இந்த மாணவர்கள் மட்டும் தப்பித்தார்கள்.
அடுத்தக் கல்வியாண்டிற்கு 10 ஆம் வகுப்புப் பாடநூல் வந்துவிடும் என்பதால் அதையே இரு
வகுப்புகளுக்கும் ஒன்றாக்கி விடுவார்கள். இதைத் தடுக்க அரசு, கல்வித்துறை, அதிகாரிகள்
என எத்தரப்பும் ஏதும் செய்யாது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு இருந்தால் போதுமென
இவை அனைத்தையும் மறைமுகமாக ஆதரிப்பார்கள்.
புதிய பாடநூல்களை இறுதி செய்வதற்கு முன்பு சற்று மேம்படுத்தி
அச்சுக்கு அனுப்புவதே நல்லது. வெளிப்படையாகத தெரியும் பிழைகளையாவது இதன் மூலம் ஓரளவு களையலாம். ஒவ்வொரு முறையும் இப்படிச்
சொல்லி வருகிறோம். ஆனால் நடப்பது வேறு.
ஒரு பருந்துப் பார்வையில்
தென்படும் சிலவற்றை மட்டும் இங்கு தொகுத்துக் கொள்வோம்.
ஒன்பதாம் வகுப்பு
இரண்டாம் பருவ சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் ‘மனித உரிமைகள்’ என்ற பாடம் உள்ளது.
இப்பாடத்தில் “மலாலா நோபல் பரிசு வென்றவர்”, என்றுள்ளது (பக்.124). இது எப்படி சரியாகும்?
“மலாலா நோபல் பரிசு பெற்றவர்”, (“Nobel Peace prize laureate”, (Page:
110) என்று சொல்வதே எவ்வளவு சரியானது. ‘பச்பன் பச்சாவ் அந்தோலன்’ கைலாஷ் சத்யார்த்தி
பற்றிய குறிப்பும் இப்பாடத்தில் உண்டு (பக்.126). மலாலாவும், கைலாஷ் சத்யார்த்தியும்
ஒரே ஆண்டில் (2014) நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டவர்கள் என்பதைக் குறிப்பிடவில்லை.
கைலாஷ் சத்யார்த்தியை சிறார் உரிமைச் செயல்பாட்டாளர் என்றழைப்பதே பொருத்தம்.
“Kailash
saythyarti is a Nobel recipient”, (Page: 111) என்று ஆங்கில வழியில்
இருப்பதை தமிழில் நீக்கிவிட்டார்கள். ஏனென்று தெரியவில்லை? “Global March against child labour”, (Page: 111) என்பதை “குழந்தை
உழைப்புக்கு எதிரான உலகலாவிய அணிவகுப்பு”, (பக். 126) என்று மொழி பெயர்க்கிறார்கள்.
அணிவகுப்பும் பேரணியும் ஒன்றா? சிந்திக்க வேண்டும்.
தொழிலாளர்கள் மற்றும்
பெண் தொழிலாளர்கள் நலனில் அம்பேத்கரின் பங்களிப்புகள் சுட்டப்படுவது சிறப்பு. மேலும்
காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரை இணைத்திருப்பதும் நன்று. பாடத்தலைப்பில் அம்பேத்கர்,
நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரது ஓவியம் உள்ளது. பாடத்தில் மார்ட்டின்
லூதர் கிங் பற்றிய எவ்வித குறிப்ப்பும் இல்லை. எனவே காந்தியின் ஓவியத்தை இங்கு இணைத்திருக்கலாம்.
‘சமயச் சுதந்திரம்
மற்றும் பகுத்தறிவுக்கான உரிமை’ என்ற தலைப்பில் சமய நம்பிக்கையின்றி மனச்சாட்சிபடி
வாழும் உரிமை என்று குறிப்பிட்டிருப்பது பாராட்டத்தக்கது. இதற்கான படத்தில் கிறித்தவர்கள்,
இஸ்லாமியர்கள் வழிபாடு செய்யும் படம் உள்ளது. இது பொருத்தமற்றது; நீக்க வேண்டும். இங்கு
சிறுபான்மையினருக்கு அளவுக்கதிமாக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக போலிப் பரப்புரைச் செய்யப்படுகிறது.
உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை. அதில் இரு மதத்தினரை மட்டும் சுட்டுவது சரியல்ல.
“பத்து ஆண்டுகளாக
கேரளாவில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வேலை செய்யும் பெண்கள் ஒரு நாளில்
ஏறக்குறைய 12-14 மணிநேரம் நின்றுகொண்டே வேலை
செய்துகொண்டிருந்தனர்”, (பக்.130) என்று எழுதப்படுகிறது. இந்தியா முழுதும் இதுதானே
நிலை! கேரள அரசு இதைக் கண்டுகொண்டிருக்கிறது. பிறர் கண்டு கொள்ளவில்லை என்பதால் அங்கெல்லாம்
இல்லை என்ற பொருளோ, தொனியோ வந்துவிடக்கூடாதல்லவா! இதற்கு எதிராக கேரள அரசு 2018 ஜூலையில்
வணிக நிறுவனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததைக் குறிப்பிடுவதால், கேரளாவில் மட்டும்
இது நிகழ்வதாகப் பொருள் தரக்கூடிய சொல்லாடல்கள் தவிர்க்கப்படுதல் அவசியம். இந்தியா
முழுமைக்கும் இதுபோன்ற சட்டங்கள் வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கலாம்.
தமிழகத்தில் அனைத்து
சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டமியற்றியது. (உச்சநீதிமன்றத்தால் இச்சட்டம்
ஒன்றுமில்லாமல் செய்யப்பட்டது வேறுகதை!) இதனால் தமிழகத்தில் மட்டும் பிற சாதியினர்
அர்ச்சகராக தடை உள்ளது என்ற முடிவுக்கு வரமுடியுமா? இரட்டைச் சடை மூலம் பள்ளி மாணவிகளுக்கு
இழைக்கப்படும் பால் பாகுபாடு குறித்து கேரளவிலிருந்து தேசிய மனித உரிமை ஆணையத்தில்
புகார் பதிவாகியுள்ளது. நாளை இது குறித்த உத்தரவு வரும்போது கேரளாவில் இரட்டைச்சடைக்
கொடுமை இருந்தது என்று எழுத முடியுமா?
இங்குள்ள மொழிபெயர்ப்புச்
சிக்கலையும் அறிக. ஆங்கில வழியில் உள்ள கீழ்க்கண்ட வரிகள் அப்படி மாற்றி மொழிபெயர்க்கப்படுகிறது.
Do you know
“It
is great victory for female workers who stand all the time more or less 12-14
hours per day while they are working in shops and commercial malls in Kerala
amended the shops and commercial establishment Act in July 2018”, (Page: 114)
உங்களுக்குத் தெரியுமா?
“பத்து ஆண்டுகளாக
கேரளாவில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வேலை செய்யும் பெண்கள் ஒரு நாளில்
ஏறக்குறைய 12-14 மணிநேரம் நின்றுகொண்டே வேலை
செய்துகொண்டிருந்தனர்”, (பக்.130)
“The state of Tamil Nadu provides 69% of reservations to the
scheduled Classes, Scheduled Tribes, Backward classes, Most Backward Classes,
Denotified communities and Minorities in employment and educational
institutions. Government of Tamil Nadu provides inner reservations for Muslims
in BC and for Arunthathiyar in SC category”, (Page: 113).
இதில் ‘Most Backward Classes’ இருமுறை வருகிறது.
“பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு
மற்றும் கல்வி நிறுவனங்களில் 69% இடஒதுக்கீட்டினைத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
ஆதிதிராவிடர் பிரிவில் இடம்பெற்றுள்ள அருந்ததியர் வகுப்பினருக்கு முன்னுரிமை அடிப்படையில்
சிறப்பு ஒதுக்கீடு வழங்கியுள்ளது”, (பக்.128) என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இங்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் என்கிற சொற்கள் இல்லை.
இடஒதுக்கீடு அட்டவணையில் (பக்.128) பழங்குடியினர்
இடஒதுக்கீடு 3% என்று தவறாக உள்ளது; 1% என்பதே சரி. பிற்படுத்தபட்ட வகுப்பு – முஸ்லீம்கள்
3.5% சுட்டப்படுகிறது. அருந்ததியர்கள் வழங்கப்படும் 3% உள் ஒதுக்கீடு குறிக்கப்படவில்லை.
இந்த 3% என்பதுதான் பழங்குடியினருக்கு மாறியது போலும்!
Inner reservation – உள் ஒதுக்கீடு வேறு; Special reservation – சிறப்பு
ஒதுக்கீடு வேறு. இரண்டாக ஒன்றாகக் குழப்பிக் கொள்ளப்படுகிறது. நாம் தொடர்ந்து வலியுறுத்தும்
மொழியாக்கக் குளறுபடிகளை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆசிரியர்களும் இதற்கு புது விளக்கம்
அளிக்கக்கூடும்.
“Under each reserved category and in General category 33% is reserved
for women and 4% is reserved for differently abled persons. Special reservation
offered to Arunthathiyars with in the seats reserved for Scheduled castes. For
persons studied in Tamil medium 20% seats are offered under each category on
priority basis”, (Page: 113 & 114)
“மேலும் பெண்களுக்கு 33% மாற்றுத் திறனாளிகளுக்கு 4% முன்னுரிமை அடிப்படையில்
ஒவ்வொரு பிரிவின் கீழும் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்
வழியில் பயின்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவின் கீழும் முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கப்பட்டுள்ளது”,
(பக்.128)
“தமிழ்நாட்டில்
திருநங்கையர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்”,
(பக்.128) என்ற வரிகள் ஆங்கில வழியில் இல்லை.
குழந்தைத் திருமணங்கள் பற்றியப் பெட்டிச் செய்தியில் தினமலர் இணையதளம் இடம்பெறுகிறது. பொதுவாகத் தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்வதுபோல படங்கள், செய்திகள் பாடநூலில் இடம்பெறுவது மரபல்ல. எனவே இந்தப்படம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக நாளிதழின் பெயரில்லாத செய்திப்பகுதி மட்டும் இடம்பெறச் செய்யவேண்டும்.
குழந்தைத் திருமணங்கள் பற்றியப் பெட்டிச் செய்தியில் தினமலர் இணையதளம் இடம்பெறுகிறது. பொதுவாகத் தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்வதுபோல படங்கள், செய்திகள் பாடநூலில் இடம்பெறுவது மரபல்ல. எனவே இந்தப்படம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக நாளிதழின் பெயரில்லாத செய்திப்பகுதி மட்டும் இடம்பெறச் செய்யவேண்டும்.
‘World Day’ என்பதை உலக நாள் என்று சொல்வது பொருத்தம் தானே! ‘World’ ஐ 'சர்வதேசம்' என்று நீட்டி முழக்க வேண்டிய
தேவையென்ன? ‘சர்வதேச அகிம்சை நாள்’ என்று எழுதுவதை எப்போது விடப்போகிறோமோ தெரியவில்லை.
‘International’ என்று வந்தால் கூட ‘உலகம்’ என்று சொல்வதில் தவறில்லை.
“நீட்டிக்கப்பட்ட
(Extended rights) உரிமைகளான குழந்தை உரிமை, SC மற்றும் ST உரிமை, பெண்கள் உரிமை, தகவல் அறியும் உரிமைச்
சட்டம் (RTI) மற்றும் தொழிலாளர் சட்டங்கள்”, (பக்.130) என்று மீள்பார்வையில் குறிப்பிடப்படுகிறது.
இந்திய அரசியல் சட்டத்திருத்தங்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை நீட்டிக்கப்பட்ட
உரிமை என்று சொல்வது சரியல்ல. இது இவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையோ பிச்சையோ அல்ல;
உரிமை. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 –ம் இவ்வாறு அமல்படுத்தப்பட்டதுதானே!
1976 இல் 42 வது சட்டத்திருத்தின் மூலம் இணைக்கப்பட்ட 11 அடிப்படைக் கடமைகளை அரசமைப்புக்
கடமைகள் என்று குறிப்பிடுவதையும் கவனிக்க (பக்.121). இவற்றை ஏன் ‘நீட்டிக்கப்பட்ட கடமைகள்’
அல்லது ‘புதிதாக ஏற்படுத்தப்பட்ட கடமைகள்’
என்று சொல்லவில்லை?
தகவல் அறியும் உரிமைச்சட்ட
செயல்பாட்டாளர்கள் அருணா ராய், நிக்கில்தேவ் ஆகியோரது படங்கள் (பக்.129) மட்டுமே உள்ளது.
பிற குறிப்புகள் ஏதுமில்லை. தகவல் உரிமை, கல்வியுரிமை, உணவு உரிமை, மனித உரிமை போன்ற
எதுவும் தானாகக் கிடைத்துவிடவில்லை. இம்மாதிரியான தன்னார்வலர்கள், செயல்பாட்டாளர் போன்றோர்
முன்னெடுக்கும் போராட்டங்கள், நீதிமன்றங்களில் நடைபெறும் சட்டப் போராட்டங்கள் வாயிலாகவே
சிறிது சிறிதாக உரிமைகள் பெறப்படுகின்றன.
கோபால கிருஷ்ண கோகலே
1906 இல் மத்திய சட்டமன்றத்தில் கட்டாயக் கல்விக்கு ரூபாய் ஒரு லட்சம் ஒதுக்கக் கொண்டு
வந்த மசோதா கிடப்பில் போடப்பட்டு, 1911 இல் இந்தியர்களால் தோற்கடிக்கப்பட்டது. நாடு
விடுதலை அடைந்தும் நிறைவேற்ற முடியாத கல்வி உரிமை உன்னிகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த
வழக்கினால் 2009 இல் சட்டமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பத்தில்
ரூ. 10 க்கான நீதிமன்ற வில்லை அல்லது வரைவோலை இணைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான
ஒன்றல்லவா! இதை ஏன் சொல்லிக் கொடுக்கவில்லை?
மனித உரிமைப் “பேரறிக்கையின்
பொது விளக்கமானது சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணம் அல்ல என்றபோதிலும் அது அரசியல்
மற்றும் அறநெறிசார் முக்கியத்துவம் உடையது”, (பக்.118) என்று உள்ளது.
அய்.நா. போன்ற உலக
அமைப்புகளில் மனித உரிமைகள், குழந்தை உரிமைகள், சூழலியல், கல்வி, உணவு, அகதிகள் போன்ற
பல்வேறு பிரச்சினைகளில் கொண்டு வரப்படும் அறிக்கைகள், தீர்மானங்கள் போன்றவற்றிற்கு
சட்ட அங்கீகாரம் இல்லை என்பது உண்மைதான். இவற்றை ஆதரிக்கும் நாடுகள் தங்களது நாட்டின்
சட்டமன்றங்களில் (நாடாளுமன்றம்) அதற்குரிய சட்டங்களை இயற்றி அவற்றை அளிப்பது / பாதுகாப்பது
ஒவ்வொரு நாட்டின் கடமையும் பொறுப்புமாகும். இதில் ஏற்படும் காலதாமதம் மோசமானது.
1948 டிசம்பர் 10
இல் பாரிசில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைப் பிரகடனத்தை ஆதரித்த 48 நாடுகளில் இந்தியாவும்
ஒன்று. ஆனால் மனித உரிமை ஆணையம் அமைத்தது 1993 இல் தான். இதைபோலவே கல்வி, உணவு, நுகர்வோர்,
அகதிகள் உரிமை, சூழலியல் போன்றவற்றிலும் நடக்கிறது.
“சமூக, பொருளாதார
மற்றும் பண்பாட்டு உரிமைகள் இரண்டாம் உலகப் போரின் விளைவுகளுக்குப் பின் உருவாக்கப்பட்ட
மனித உரிமைகள் சட்டத்தின் ஒரு பகுதியாகும்”, (பக்.118) இதற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த
மனித உரிமைகள் பற்றிய கவனிப்பு இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரே ஏற்படுகிறது.
ஆறாம் வகுப்பு முதல்
பருவ வரலாற்றுப் பாடங்களைப் போன்று இம்முறை குடிமையியல், பொருளியல் பாடங்களை உரையாடல்
வடிவில் அமைத்திருப்பதைப் பாராட்டலாம்.
தேசியச் சின்னங்கள் என்னும் பாடத்தில் ‘இயற்கை தேசியச்
சின்னங்கள்’ பட்டியலிடப்படுகிறது. தேசிய விலங்கு – புலி, தேசியத் தொல் விலங்கு – யானை,
தேசிய நன்னீர் விலங்கு – ஆற்று ஓங்கில் (நன்னீர் டால்பின்), தேசிய ஊர்வன – ராஜநாகம்
என்றுப் பிரித்துச் சுட்டுவது மாணவர்களிடம் தெளிவை உண்டாக்கும். தேசிய விலங்குகள் என்று
சொல்லி கூட அவற்றில் உள்பிரிவாக எடுத்துக் காட்டலாம். 7517 கி.மீ. கடற்கரைக் கொண்ட தீபகற்ப இந்தியாவிற்கு
விரைவில் தேசியக் கடல் விலங்கு அறிவிக்கப்படலாம் அல்லவா!
டால்பினை முன்பு பணவை
மீன் என்று குறிப்பிட்டனர். ஓங்கில் என்ற ஒரே பெயரில் அழைப்பது நல்லது. அடுத்தடுத்த
வகுப்புகளில் வேறு பெயரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இப்பட்டியலில்
தேசிய விளையாட்டைச் சேர்க்க இயலாதுதான்! ஆனால் பாடத்தில் அதை சேர்க்காமல் விட்டது பெருங்குறை.
கிரிக்கெட் மோகத்தில் ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுக்களை அழிவுக்குக் கொண்டுச் செல்லும்
சூழலில் இவற்றைச் சொல்வது மிகவும் அவசியம்.
ஹாக்கி மட்டைச் செய்யப்
பயன்படுவது மல்பெரி மரம். உரையாடலில் மல்பெரி மரத்தைச் சுட்டி ஹாக்கி மட்டை, ஹாக்கி,
பட்டுப்பூச்சி, பட்டு என்றெல்லாம் அறிமுகப்படுத்தலாம். காகிதம் தயாரிக்க காடு அழிவதையும் குறிப்பிட்டு, காகிதம், தேயிலை ஆகியன சீனாவிலிருந்து வந்ததையும் சொல்லி, நமது தேசிய பானம்
தேநீர் என்றுகூட அறிமுகம் செய்யலாம்.
பழைய பாடநூல்களைப்
போல தேசிய மொழி இந்தி என்று எழுதாமல் இருந்ததற்காகவே
தனியே பாராட்டலாம். இருப்பினும் எட்டாவது அட்டவணையில் இடம்பெறும் 22 மொழிகளும் தேசிய
மொழிகளே என்று அழுத்திச் சொல்லவேண்டியது நமது கடமை. தேசிய விலங்குகள் என்பதுபோல தேசிய
மொழிகள் என்பதை வலியுறுத்த வேண்டும்.
தேசிய விருது – பாரத
ரத்னா, தேசிய நூலகம் – கொல்கத்தா, தேசிய அருங்காட்சியகம் – தில்லி, தேசிய பானம் – தேநீர்
ஆகியவை அதிகாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில் அவற்றையும் அறிமுகம் செய்யலாம்.
ஆறாம் வகுப்பில் “உடனடியாகச் செய்ய வேண்டிய கடமைகளாக
நீ எவற்றைப் பட்டியலிடுவாய்?”, (பக்.193) என்று சிந்தனை வினா கேட்கப்படுகிறது. பாடத்திலும்
உரிமைகளை விட கடமைகள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. இது சரியா? கடமைகளைச் சொல்ல வேண்டாம்
என்று சொல்லவில்லை. பால் பாகுபாடுகள், பாலியல் சுரண்டல்கள், பொருளாதாரச் சுரண்டல்கள்,
வன்கொடுமைகள் போன்றவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உரிமைகளின் பால் கூடுதல் கவனம்
செலுத்த வேண்டியது அவசியம். உரிமைகளைக் கண்டுகொள்ளாது கடமைகளை மட்டும் போதிப்பதால்
நாட்டில் நடக்கும் பேரழிவுகள் ஏராளம்.
மொழியாக்கக் குளறுபடிகள் குறித்து பலமுறை சுட்டிக் காட்டுகிறேன்; கவனிப்பாரில்லை. இங்கு ஒன்று மட்டும். இப்பாடத்தில் ‘Right to Constitutional Remedies’ என இரு இடங்களில் வருகிறது. ஓரிடத்தில் ‘அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை’, (பக்.119) என்றும் பிறிதோரிடத்தில், ‘அரசமைப்பு தீர்வழிக்களுக்கான உரிமை’, (பக்.121) என்றும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. ‘அரசியலமைப்பின் வழி / படி தீர்வு காணும் உரிமை’ என்று புரியும்படி சொன்னால் கெட்டுவிடுமா என்ன? மேலும் ‘வழி தீர்வுகளுக்கான’, ‘தீர்வழிக்களுக்கான’ வல்லினம் மிகாமலும் தேவையின்றி மிகுவதும் நன்றாகவா இருக்கிறது? எனவேதான் தமிழ் வழிப் பாடநூல்களின் மொழிநடை மாணவர்களை கல்வியை விட்டோ அல்லது ஆங்கில வழிக்கோ துரத்துகிறது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.
மொழியாக்கக் குளறுபடிகள் குறித்து பலமுறை சுட்டிக் காட்டுகிறேன்; கவனிப்பாரில்லை. இங்கு ஒன்று மட்டும். இப்பாடத்தில் ‘Right to Constitutional Remedies’ என இரு இடங்களில் வருகிறது. ஓரிடத்தில் ‘அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை’, (பக்.119) என்றும் பிறிதோரிடத்தில், ‘அரசமைப்பு தீர்வழிக்களுக்கான உரிமை’, (பக்.121) என்றும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. ‘அரசியலமைப்பின் வழி / படி தீர்வு காணும் உரிமை’ என்று புரியும்படி சொன்னால் கெட்டுவிடுமா என்ன? மேலும் ‘வழி தீர்வுகளுக்கான’, ‘தீர்வழிக்களுக்கான’ வல்லினம் மிகாமலும் தேவையின்றி மிகுவதும் நன்றாகவா இருக்கிறது? எனவேதான் தமிழ் வழிப் பாடநூல்களின் மொழிநடை மாணவர்களை கல்வியை விட்டோ அல்லது ஆங்கில வழிக்கோ துரத்துகிறது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.
(இன்னும் வரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக