வெள்ளி, அக்டோபர் 05, 2018

அ. மார்க்ஸ்: தொடரும் தோழமை


அ. மார்க்ஸ்: தொடரும் தோழமை



மு.சிவகுருநாதன்


     1986 – 1990 காலகட்டத்தில் ‘தினமணி’ நாளிதழில் ஐராவதம் மகாதேவன் ஆசிரியர் பொறுப்பில் செய்த பல மாற்றங்கள், ‘தினமணிச்சுடர்’, ‘தமிழ்மணி’ அநுபந்தங்கள் ஆகியன எனது வாசிப்பை கொஞ்சம் அதிகப்படுத்தின. 1990 பள்ளியிறுதி வகுப்பை முடித்து ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்திருந்த நேரத்தில் வே.மு. பொதியவெற்பனின்  (பொதிகைச்சித்தர்) குடந்தை சிலிக்குயில் மூலமாக ‘நிறப்பிரிகை’ போன்ற இதழ்களை வாசிக்கத் தொடங்கினேன். 


   ‘நிறப்பிரிகை’ கட்டுரைகள் என்னை ஈர்த்தன. கடிதங்கள் மூலம் அ.மார்க்ஸைத் தொடர்பு கொண்டேன். உடன் பதில் கிடைத்தது. நிகழ்வுகளுக்கான அழைப்புகளையும் அனுப்பி வைப்பார். அப்போதிருந்த ஒரே இடைநிலை இதழ் கோமல் சுவாமிநாதனின் ‘சுபமங்களா’. அதில் கரிகாலன் கவிதைகள் குறித்த நீண்ட விவாதம் நடைபெற்றது. கவிஞர் ஞானக்கூத்தன் கருத்துகளுக்கு எதிர்வினையாக அ.மார்க்ஸ் நிறைய எழுதியிருந்தார். அது தொடர்பாகவும் ‘சுபமங்களா’ விற்கு நான் எழுதிய பிரசுரிக்கப்படாத கடிதங்களை அ.மா.விடம் பகிர்ந்துகொண்டேன். 

   அப்போது ‘கணையாழி’ இதழும் வெளிவந்து கொண்டிருந்தது. அதில் திருத்துறைப்பூண்டி ‘கிழக்கு’ இதழ் குறித்த விளம்பரம் பார்த்து சந்தா செலுத்தி முதல் இதழைப் பெற்று வாசித்தேன். அதில் “சோவிற்கு மீசை முளைத்தால் சுஜாதா” என்னும் அ.மா. கட்டுரையும் இன்னும் சில கட்டுரைகளும் இருந்தன. நண்பர்கள் யாரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 


   ‘நிறப்பிரிகை’ ஏற்பாடு செய்த குடந்தை புதுமைப்பித்தன் கருத்தரங்கில் கலந்துகொண்டு முதன்முதலாக அ.மா. வை நேரில் சந்தித்தேன். வேட்டி. சட்டையில் இருந்த மார்க்ஸ் எனக்கு அதிர்ச்சியளித்தார். நானாக அறிமுகம் செய்து கொண்டபிறகு “பெரியவராக இருப்பீர்கள் என்று நினைத்தேன். சின்ன பையனாக இருக்கிறீர்களே!”, என்று ஆச்சரியப்பட்டார். நிகழ்விற்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்திருந்த மணலி அப்துல்காதர் (கிழக்கு), த.பிரிட்டோ, கொளப்பாடு ச. பாண்டியன், பா.ரவிக்குமார் போன்ற நண்பர்களையும் அன்றுதான் சந்தித்தேன். அன்று மதிய உணவு இடைவேளையின்போது ‘சிலிக்குயில்’ சென்று பொதியவெற்பனைச் சந்தித்தோம். அப்போது  அவர் புதுமைப்பித்தனை விமர்சிப்பதால் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். அதன்பிறகு திருத்துறைப்பூண்டி ‘கிழக்கு’ புத்தகக்கடையில் அ.மார்க்ஸ், கோ.கேசவன், கோணங்கி, மாத்தளை சோமு என பலரது படைப்புகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கும் சூழல் உருவானது. 

   சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘சுபமங்களா’ இதழுக்காக குடந்தை அ.மா. வீட்டில்  மணலி அப்துல்காதர், த.பிரிட்டோ, பா.லிங்கம், பா.ரவிக்குமார் ஆகியோர் நேர்காணல் செய்தோம். இது ஜூலை 1995 இல் வெளியானது. இந்த நேர்காணல் குறித்து அப்போதைய காலச்சுவடு  ஆசிரியர் குழுவில் இருந்த மனுஷ்யபுத்திரன், கண்ணன், லஷ்மி மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக சுபமங்களா இதழில் எழுதிய எதிர்வினையில் “அவரது சிஷ்யர்கள்”, என்று குறிப்பிட்டிருந்தனர்.  இதற்கு நான் எழுதிய பதில் ‘சுபமங்களா’ வில் வெளியாகவில்லை. அ.மார்க்ஸ் குரு சிஷ்ய பாரம்பரியத்தை  முற்றாக எதிர்ப்பவர், மாற்றுக் கல்வியை முன்வைப்பவர், வயது வித்தியாசம் பாராது ஆசிரியர் – மாணவர் என்ற வேறுபாடுகள் துளியுமின்றி அனைவருடனும் தோழமையோடு பழகுபவர் என்பது பலரும் அறிந்ததே. 


   அதன்பிறகும் ‘நிறப்பிரிகை’ நடத்திய  சினிமா கருத்தரங்கத்திலும் கலந்துகொண்டேன். அக்காலத்திலிருந்து  சிலிக்குயில், விடியல் வெளியிட்ட அ.மா.வின் நூற்கள் தொடங்கி இன்று  உயிர்மை வெளியீடுகள் வரை தொடர்ந்து ஒன்றுவிடாமல் வாசிப்பது வழக்கமானது. 100 நூல்களைத் தாண்டி எழுதியிருக்கும் அ.மார்க்ஸ் தமிழ்ச்சூழலில் நிகரில்லாத ஒரு படைப்பாளியும் செயல்பாட்டாளாருமாவார். 

     எழுத்து, களச்செயல்பாடு ஆகியவற்றை தனித்தனியே விலக்கி வைக்காமல் இரண்டையும் இணைத்து செயல்படுபவர். இந்த இயற்பியல் பேராசிரியர் கல்வி, சமூகம், அரசியல், கலாச்சாரம், தலித்தியம், பெண்ணியம், சங்க இலக்கியம், நவீன இலக்கியம், மாற்றுகள், பவுத்தம், இஸ்லாம், மனித உரிமைகள், பின் நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், வளைகுடாப் போர்கள், ஈழம், அரபு எழுச்சி, உலக அரசியல், உலகமயம், காஷ்மீர், நேபாளம் என  பல்வேறு களங்கள் சார்ந்து நிறைய எழுதியுள்ளார். (பேரா. பா. கல்யாணி, பேரா. சே.கோச்சடை, பேரா.ப.சிவக்குமார் போன்ற இயற்பியல் பேராசிரியர்களின் சமூகச் செயல்பாடுகளைப் பாடத்துடன் தொடர்புப் படுத்தி யாரேனும் ஆய்வு செய்யலாம்.)


  அவரது பணிகள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்காதவை.  எண்ணற்றவற்றுள் சிலவற்றைத் தொகுக்கலாம். 


  • மாற்றுகளை  அறிமுகம் செய்தல். (கல்வி, கலாச்சாரம், மருத்துவம்).
  • தேசியம் ஒரு கற்பிதம் குறித்த பதிவுகள்.
  • மார்க்சிய ஆய்வுகள்.
  • பின்நவீனத்துவ அணுகல்முறை.
  • தலித்தியச் செயல்பாடுகள், தலித் அரசியல்.
  • விளிம்புநிலை ஆய்வுகள்.
  • கல்வி மற்றும் பாடநூல்கள் குறித்த கரிசனம்.
  • பெரியார், அம்பேத்கர், காந்தி பற்றிய புதிய பார்வைகள்.
  • பவுத்தம், இஸ்லாம் குறித்த நூல்கள்.
  • சங்க மற்றும் நவீன இலக்கிய ஆய்வுகள்.
  • இந்துத்துவ எதிர்ப்பு.
  • சிறுபான்மையினர் நலன்.
  • ஈழம் அரசியல், சமூகம், இலக்கியம் தொடர்பான அவதானிப்புகள்.
  • மனித உரிமைச் செயல்பாடுகள்.
  • மரண தண்டனை எதிர்ப்பு.
  • உண்மை அறியும் குழு அறிக்கைகள்.
  • இலக்கிய விமர்சனங்கள்.
  • பயண இலக்கியத்தில் புதிய திறப்பு (வெள்ளைத் திமிர்).
  • மொழியாக்கம் (டாக்டர் பால்கோபால், பாரதி பாடல்களுக்குத் தடை, குஜராத் 2002 டெஹல்கா அம்பலம்).
  • தொகுப்பு நூல்கள் (விடுதலையின் பாதைகள், கல்வி).


   பாரதி ஆய்வாளராகத் தொடங்கிய எழுத்துப்பணி இடதுசாரி இயக்கம், புரட்சிப் பண்பாட்டு இயக்கம், மக்கள் கல்வி இயக்கம். அரசுக் கல்லூரி ஆசிரியர் இயக்கம், தலித் இயக்கங்கள், சுயமரியாதை இயக்கம், மனித உரிமை இயக்கங்கள் என தொடர்ந்து இயங்கி வருவது அ.மார்க்ஸால் மட்டுமே சாத்தியப்படக்கூடியது. 

    செந்தாரகை, நிறப்பிரிகை, அனிச்ச, சஞ்சாரம், இன்மை போன்ற பல இதழ்களில்  பங்கேற்று புதிய சிந்தனைகளை, மாற்றுகளை முன் வைத்தது அவரது முதன்மையான பணி. இலக்கியம், அரசியல் குறித்த  அவரது நுண்மையான அவதானிப்புகள், அதை வெளிக்கொணரும் பாங்கு ஆகியன குறிப்பிடத்தக்கவை. 

      பெரியார், அம்பேத்கர் போன்றோர் பற்றிய அவரது பார்வைகள் யாருக்கும் அதிர்ச்சி அளிக்கவில்லை. மாறாக காந்தி பற்றிய அவரது மறுவாசிப்பு பலருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. “தலித்தியம், பின்நவீனத்துவம் வரை என்னுடன் வந்த ஷோபாசக்தியால் காந்தி குறித்த மறுவாசிப்பை ஏற்க முடியவில்லை”, என்று ஒரு நேர்காணலில் வெளிப்படுத்துகிறார். 

    ஈழம் தொடர்பான அவரது கருத்துகள் பலரை அவருக்கு எதிரியாக்கியது. இருப்பினும் தனது கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைபாட்டால் சி.பி.எம். கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அ.மார்க்ஸ் பின்னாளில் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்த் தேசியர்களின் காழ்ப்புக்குள்ளானார். இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு, சக இயக்கங்களை ஒடுக்கியது, சைவ, இந்து தேசிய கட்டமைப்பு போன்றவற்றில் அ.மார்க்சின்  விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிறர் ஏற்றுக்கொள்வார்களோ, மாட்டார்களோ என்கிற தயக்கமின்றி தனது பாதையில் விரைந்து செல்லக்கூடியவர் அ.மார்க்ஸ். இதனால் அவருக்கு நிலையான நண்பர்கள் வட்டம்கூட இல்லை என்று சொல்லலாம். 

   குணா மட்டுமல்ல; தமிழ் தேசியத்தின் பல முகங்கள் பாசிசத்தின் வடிவமாக இருப்பதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இலக்கியம், அரசியல் களங்களில் தனது கறாரான நிலைப்பாட்டால் பல எதிரிகளைப் பெற்றுள்ளார். இந்துத்துவம் பற்றிய இவரது நூல்கள் வரலாற்று ஆவணமாகத் திகழ்பவை. அரசுகள், மாவோயிஸ்ட்கள், விடுதலை இயக்கங்கள் போன்ற எவற்றின் மூலம் வன்முறை ஏற்பட்டாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் முதல் ஆளாக இருக்கிறார். எனவேதான்  “உயிர்ப்புமிகு அறிவுஜீவி” (Organic Intellectual)  என்ற கிராம்சியின் கருத்தாக்கத்திற்குப் பொருத்தமான நபராகத் திகழ்கிறார். 

    இவரது நூல்கள் எவற்றையும் தவிர்க்க இயலாது. அவைகள் ஏதேனும் புதிதான ஒன்றை நமக்களிப்பவை. இருப்பினும் தேர்ந்த 12 நூல்களாக நான் கருதுபவை:


  • நமது மருத்துவ நலப் பிரச்சினைகள் – விடியல்.
  • வெள்ளைத் திமிர் (அய்ரோப்பிய பயணக் கட்டுரைகள்) – விடியல்.
  • பெரியார்? – அடையாளம்.
  • ஆரியக்கூத்து – எதிர் வெளியீடு.
  • நான் புரிந்துகொண்ட நபிகள் – உயிர்மை.
  • புத்தம் சரணம் – தமிழ்நாடு பௌத்த சங்கம்.
  • விலகி நடந்த வெளிகள் – கருப்புப் பிரதிகள்
  • பின் நவீன நிலை: இலக்கியம்  தேசியம்  அரசியல் - புலம் வெளியீடு
  • தலித் அரசியல் - எதிர் வெளியீடு.
  • எல்லாவற்றையும் உரையாடல்களாய் மாற்றி… அ.மார்க்ஸ் நேர்காணல்கள் – பயணி வெளியீடு
  • இந்துத்துவத்தின் பன்முகங்கள் – உயிர்மை.
  • பேசாப்பொருளைப் பேசத் துணிந்தேன் – உயிர்மை.


   சுமார் 20 க்கும் மேற்பட்ட உண்மை அறியும் குழுக்களில் அவருடன் பங்கு பெற்றுள்ளேன். கொலை, போலி மோதல் கொலைகள், துப்பாக்கிச் சூடு, சாதி, மதக்கலவரங்கள், சாதிய, மதக் கொடுமைகள், ஆணவக்கொலைகள், சிங்காரச் சென்னையால் குடிசைப்பகுதி மக்கள் வெளியேற்றப்படுதல் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான மக்களைச் சந்தித்து, பல தரப்புக் கருத்துகளைக் கேட்டு பிரச்சினைகள் பற்றி ஆழமாகச் சந்தித்து  அறிக்கை எழுதுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. மிகுந்த பொறுமையும் ஆழமான ஆய்வையும் கோருகின்ற பணியிது. 


      பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க் கதைகள்  நம்மையும் பாதிக்கும். அந்த பாதிப்புகள், அழிவுகளிடமிருந்து விடிவு கிடைக்காத என்ற ஏக்கம் நிறைந்த அவர்களது மொழிகளை உள்வாங்கி இரண்டு, மூன்று நாள்கள் அதே சிந்தனையில் இருந்து சிலமணி நேரம் மட்டும் தூங்கி பின்னிரவில் அவற்றைத் தொகுத்து எழுத, அல்லது கணினியில் தட்டச்சு செய்ய அதிக சிரந்தை எடுத்துக் கொள்வார். அறிக்கையின் முழு வடிவம் கிடைக்கும் வரை வேறு எந்த இடையூறுகளுமின்றி இருக்க வேண்டும்.  அறிக்கையில் அதன் நடுநிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிப்பார். பக்கம் சாராது உண்மையின் பக்கம்  நிற்பதே இவரது அறிக்கைகளின் சாரம். உண்மை அறியும் குழுக்களுக்கு மகாத்மா காந்தியே முன்னோடி. சிறந்த சமூக, அரசியல் ஆவணமாகத் திகழகூடிய இவ்வறிக்கைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வெளிவருவது அவசியம்.

   ‘நிறப்பிரிகை’ மாதிரியான மாற்று மற்றும் சிற்றிதழ்களைத் தாண்டி இவரது கட்டுரைகள் இன்று அனைத்து வெகுமக்கள் இதழ்களிலும் பிரசுரமாகின்றன. குமுதம் தீராநதியில் “பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன்” கட்டுரைத்தொடர்  5 ஆண்டுகள் வெளியானது. இந்த 59 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன (ஜூன் 2016). தற்போது தீராநதியில் “நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்”, என்னும் தொடர் 21 மாதங்களாக வெளிவருகிறது. இதில் பெரும்பகுதி பவுத்தக் காப்பியமான மணிமேகலையை தனித்த பார்வையோடு அணுகுகிறது. 

   ‘கரையும் நினைவுகளில்’ முகநூல் வழியே வாழ்வனுபவங்களை எழுதிச் செல்கிறார். ‘மேன்மைப்படுவாய் மனமே கேள்’ இதன் இரண்டாம் பகுதியாகத் தொடர்கிறது. இராமன் கடந்த தொலைவு, இது மோடியின் காலம், ஒளரங்கசீப்பும் அப்துல்கலாமும் என்ற நூல்கள் மூலம் சமகாலம் குறித்த தொடர் உரையாடலை நடத்தி வருகிறார்.  

   பணியில் இருந்தபோதும் செயல்பாட்டாளாராக வலம் வந்தார். பணி ஓய்வுக்குப்பிறகும் மனித உரிமை இயக்கப் பணிகளில் முழுவதும் ஈடுபட்டு வருகிறார். National Confederation of Human Rights Organizations (NCHRO)  தலைவராக தமிழ்நாடு என்கிற எல்லையைத் தாண்டி இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக பயணம் மேற்கொள்கிறார். உடல் நலத்தைப் பற்றி துளியும் அக்கறையின்றி இருப்பது அதிர்ச்சியளிக்கும் ஒன்று. இந்த பிறந்த நாளில் நாங்கள் சொல்வது ஒன்றுதான்; உடல்நலத்தைக் கவனியுங்கள். வாழ்த்துகள்.. மார்க்ஸ்… அன்பு முத்தங்களுடன்…. உங்கள் எழுத்துகள் இன்னும் வேண்டும் எங்களுக்கு...

   அடுத்த ஆண்டில் அவருக்கு 70 வது பிறந்த நாள். அதற்காக இல்லாவிட்டாலும் தமிழ்ச்சூழலின் அறிவுச் சூழலை மேம்படுத்திய அ. மார்க்சிற்கு வெறும் பாராட்டாக இல்லாமல் விமர்சன ரீதியாக சில பணிகளைச் செய்யலாம் என்று கருதுகிறேன். இது குறித்து தோழர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.


  • அவரது பணிகள் குறித்த ஒருநாள் அல்லது இருநாள் ஆய்வரங்கம் நடத்துதல்.
  • அவரைப் பற்றிய மதிப்பீடுகளை நூலாகக் கொண்டு வரலாம். ஏற்கனவே தோழர் மீனாவின் ஒரு தொகுப்பு (அ.மார்க்ஸ்: சில மதிப்பீடுகள், புலம் வெளியீடு, அக். 2010) உள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்னும் விரிவான பார்வைகளை உள்ளடக்கியதாக இது அமையலாம்.
  • அவரது தொகுக்கப்படாத படைப்புகள், முன்னுரைகள், விமர்சனங்கள், மதிப்புரைகள் ஆகியன தொகுக்கப் படவேண்டும்.
  • நூற்றுக்கணக்கான உண்மை அறியும் குழு அறிக்கைகள் பெரிய சமூகவியல் ஆவணமாக உள்ளது. அவைகளும் முறையாகத் தொகுக்கப்படுதல் அவசியம். இரண்டு மூன்று தொகுப்புகளாக வரும் அளவிற்கு அவர் எழுதிய உண்மை அறியும் குழு அறிக்கைகள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பு முயற்சி தொடங்கப்பட்டு, பாதியில் நிற்கிறது.
  • அவரது கடிதங்கள், அறிக்கைகள், உரைகள்  ஆகியவற்றைத் தொகுத்தல். கே.டானியல் தனக்கு எழுதிய 50 கடிதங்களை அ.மார்க்ஸ் தொகுத்திருக்கிறார் (கே டானியல் கடிதங்கள், அடையாளம், டிச. 2003). அதைப்போல அ.மார்க்ஸ் பிறருக்கு எழுதிய கடிதங்களைத் தொகுப்பது அவசியம்.
  • ‘நிறப்பிரிகை’, ‘அனிச்ச’ இதழ்கள் இதழ்களின் முழுத்தொகுப்பு வரவேண்டும்.  ‘நிறப்பிரிகை’ முன்னெடுத்த விவாதங்கள் இவ்வளவு நவீன வசதிகள் இருந்தும் தேக்கமடைந்திருக்கும் சூழலில் அவற்றை உயிர்ப்பிக்க இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள இவை அவசியமாகும். அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, ரவிக்குமார் ஆகியோர் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நிறப்பிரிகை தொகுப்பிற்கு ஒப்புதல் தரவேண்டும்.
  • புத்தம் சரணம் தவிர்த்து அ.மார்க்ஸ் பவுத்தம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் ஆங்காங்கே சிதறியிருக்கின்றன. அவற்றைத் தனித்தொகுப்பாக கொண்டுவருவது இன்றைய சூழலில் தேவையானது.
  • கரையும் நினைவுகள், மேன்மைப்படுவாய் மனமே கேள் ஆகியவற்றின் தொடர்ச்சியை ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கைச் சித்திரத்தை அவர் நமக்காக எழுத வேண்டும். இந்த பெருங்கனவுகள் அனைத்தும் நிறைவேறவேண்டும்.


(அக். 04, 2018 பேரா. அ.மார்க்சின் 69 வது பிறந்த நாள்.)

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக