சனி, அக்டோபர் 06, 2018

பெரியார் சிந்தனைகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுச் சேர்க்கும் முயற்சி


பெரியார் சிந்தனைகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுச் சேர்க்கும் முயற்சி


மு.சிவகுருநாதன்


(தந்தை பெரியார் எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பான ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும் நன்செய் பிரசுரம் வெளியிட்ட குறுநூல் குறித்த அறிமுகப்பதிவு.) 







     சிறு வெளியீடுகள் மற்றும் குறுநூல்கள் அவ்வப்போது எழும் தேவையின் அடிப்படையில் வெளிவருபவை. இவை மலிவுப் பதிப்பாக, பரப்புரை நோக்கில் வெளிவருபவை. இதனால் பெரும் வாசகப் பரப்பிற்குச் சென்றடைகின்றன. ஒரு வகையில் தனிச்சுற்று இதழ்களைப் போல பிறகு வாசிப்புக்குக் கிடைக்காமல் போவது பெருங்குறையே. இத்தகைய குறு நூல்களை அரசு நூலகங்கள் வாங்குவதில்லை என்பதும் ஒரு காரணம்.

  திராவிட மற்றும் பொதுவுடைமை இயக்கங்கள் இத்தகைய பரப்புரைகளில் ஈடுபட்டு வந்துள்ளன. இத்தகைய குறு வெளியீடுகள், துண்டறிக்கைகள் மூலம் அவை தங்களது கருத்தியல்களை மக்களிடம் கொண்டு சென்றன. தற்போது திராவிட இயக்கங்கள் இவற்றில் தொய்வடைந்துள்ளன என்றே சொல்லவேண்டும். ஆட்சி, அதிகார மமதை பரப்புரை, மக்கள் எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்துவிட்டது. 

  பெரியார் தனது இறுதிக்காலத்தில் “எனக்கு 93 வயதாகிவிட்டது. இனி என்னை கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள். சென்னையில் நிரந்தரமாகத் தங்கி நூல் வெளியீடுகள், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுகிறேன்”, என்று சொன்னார். இதன் மூலம் கருத்தியல் பரப்புரைக்கு இம்மாதிரியான மலிவு விலை மக்கள் பதிப்புகள், குறுநூல்கள், துண்டறிக்கைகள் ஆகியன உதவி செய்வதையும், பெரியார் அவற்றை உணர்ந்து, பயன்படுத்திய பாங்கை அறியலாம். 




    இன்றும் இயக்கங்கள், அமைப்புகள் இம்மாதிரியாக குறுநூல் மற்றும் வெளியீடுகளை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவை பெரும்பாலும் கட்சி, இயக்க, அமைப்பு எல்லைகளைத் தாண்டிப் பயணிப்பதில்லை என்பதே உண்மை நிலவரம். 

    அந்த வகையில் பெரியாரது குறுநூல்களுள் ஒன்று ‘பெண் ஏன் அடிமையானாள்?’ 1928 - 1931 காலகட்டத்தில் பெரியார் எழுதிய 10 கட்டுரைகளில் தொகுப்பே இந்நூல்.  01.01.1942 இல் பெரியார் இக்குறு வெளியீட்டுக்கு முன்னுரை ஒன்றும் எழுதியுள்ளார்.  இந்நூலில் உள்ள கீழ்க்கண்ட தலைப்புகளில் அவை வெளியான விவரத்தைச் சேர்த்துள்ளேன். இவை வே.ஆனைமுத்து பதிப்பித்த ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. 



  • கற்பு (குடியரசு, சித்திர புத்திரன் என்ற பெயரில் வெளியான கட்டுரை, 08.01.1928)
  • வள்ளுவரும் கற்பும் (குடியரசு, 12.02.1928)
  • காதல் (குடியரசு, தலையங்கம், 18.01.1931)
  • கல்யாண விடுதலை (குடியரசு, தலையங்கம், 17.08.1930)
  • மறுமணம் தவறல்ல (குடியரசு, தலையங்கம், 12.10.1930)
  • விபச்சாரம் (குடியரசு, தலையங்கம், 26.10.1930)
  • விதவைகள் நிலைமை (குடியரசு, கட்டுரை, 22.08.1926)
  • சொத்துரிமை (குடியரசு, தலையங்கம், 05.10.1930)
  • கர்ப்பத்தடை (குடியரசு, தலையங்கம், 06.04.1930)
  • பெண் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழிய வேண்டும் (குடியரசு, தலையங்கம், 12.08.1928)



    இக்குறுநூலை தோழர் தம்பி மலிவு விலையில் அச்சிட்டு தமிழகமெங்கும் விநியோகிப்பது இக்காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும். ‘இனி வரும் உலகம்’, ‘சிந்தனையும் பகுத்தறிவும்’ போன்ற பெரியாரின் சிந்தனைகளும் அம்பேத்கர், காந்தி போன்றரது சிந்தனைகளும் வரும் காலங்களில் மக்கள் பதிப்பாக சிறிய வடிவில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இவற்றை பள்ளிகள், கல்லூரிகள் வழியே இன்றைய இளைஞர்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். நாம் இந்நூலுக்கு அளிக்கும் வரவேற்பு அதற்குத் தூண்டுகோலாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. பெரியார் சிந்தனைகளை பிற மொழிகளுக்கும் கொண்டு செல்ல விரும்பும் அவரது முயற்சிகளைப் பாராட்டி வரவேற்போம். 


பெண் ஏன் அடிமையானாள்? (குறுநூல்)  தந்தை பெரியார்

பக்.: 48 விலை: ரூ. 10

தொடர்புக்கு:

கவிஞர் தம்பி,
நன்செய் பிரசுரம்,
அபு பேலஸ்,
திருவாரூர் சாலை,
திருத்துறைப்பூண்டி – 614613.

செல்: 9789381010, 9092336999

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக