வெள்ளி, ஆகஸ்ட் 16, 2019

‘வரை’, ‘முடிய’ என்ற சொற்களின் பொருளறிந்துப் பயன்படுத்துதல்

  ‘வரை’, ‘முடிய’  என்ற சொற்களின் பொருளறிந்துப் பயன்படுத்துதல்  

 மு.சிவகுருநாதன் 

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 40) 
       


       பாடநூல்களில் ‘முதல்’, ‘வரை’, ‘முடிய’ போன்ற சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதில்  ‘வரை’, ‘முடிய’ போன்ற சொற்களைப் பொருளறிந்துப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. பாடநூலில் இவற்றின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. ஆனால் குழப்பம் தொடரவேச் செய்கிறது.

     பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘பருவக்காலங்கள்’ எனும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது.  

     “வானிலை நிபுணர்கள் இந்திய காலநிலையில்  நான்கு பருவங்களை அடையாளம் கண்டுள்ளனர்.  அவை.

1. குளிர்காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி வரை

2. கோடைக்காலம்: மார்ச் முதல் மே வரை

3. தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது  மழைக்காலம்: ஜுன் முதல் செப்டம்பர் வரை

4. வடகிழக்கு பருவக் காற்று காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை”, (பக். 111)

       ஆங்கில வழியில் இவ்வாறு உள்ளது.

“Seasons
The meteorologists  recognize the four distinct  seasons in India. They are;
1. Winter or cold  weather season  (January - February).
2. Pre Monsoon or summer or hot weather  season (March - May).
3. Southwest monsoon or rainy season  (June - September).
4. Northeast monsoon season  (October - December)”.    (page: 100)

    ஆங்கிலத்தில் எழுதுவதைப் போல இணைப்புக் (hyphen) குறியிட்டு  (-) எழுதுவதில் சிக்கலில்லை என்றே தோன்றுகிறது. ‘முதல்’,  ‘முடிய’ என்றெழுதும்போது பொருள் மாறுபடுகிறது. 

    “மார்ச் முதல் மே வரை”, என்றால் மார்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களை மட்டுமே குறிக்கிறது. “மார்ச் முதல் மே முடிய “, என்று சொன்னால் மட்டுமே மார்ச், ஏப்ரல், மே எனும் மூன்று மாதங்களையும் குறிக்கின்றது.
  
   இதைப்போலவே, “சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை” என்று சொன்னால் அது சட்டப்பிரிவு 11 ஐ உள்ளடக்காது; 5 - 10 ஐ மட்டும் குறிக்கும். பாடநூல் எழுதுபவர்கள் இதைப் பொருளறிந்து பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.

  எனவே, ‘பருவ  காலங்கள் ‘ எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ள வரிகள் கீழ்க்கண்டவாறு அமையலாம்.

     “வானிலை நிபுணர்கள் இந்திய காலநிலையில்  நான்கு பருவங்களை அடையாளம் கண்டுள்ளனர்.  அவை.

1. குளிர்காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி முடிய

2. கோடைக்காலம்: மார்ச் முதல் மே முடிய 

3. தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது  மழைக்காலம்: ஜுன் முதல் செப்டம்பர் முடிய 

4. வடகிழக்கு பருவக் காற்று காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் முடிய” 

     10 சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் இந்திய அரசியல் சட்டப்பிரிவுகளைக் குறிப்பிடும்போது இச்சிக்கல் தலையெடுக்கிறது.  எடுத்துக்காட்டாக சில வரிகள் இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றன. ‘வரை’ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘முடிய’ எனும் சொல்லைப் பயன்படுத்திக் இக்குழப்பத்தைப் போக்கலாம்.

         ‘சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை’,  ‘சட்டப்பிரிவுகள் 12 ல் இருந்து 35 வரையுள்ள’, ‘சட்டப்பிரிவுகள் 36 ல் இருந்து 51 வரை’, ‘சட்டப்பிரிவு  36ல் இருந்து 51 வரை’, ‘6 முதல் 14 வயது வரையுள்ள’, ‘சட்டப்பிரிவு 268ல் இருந்து 293 வரை உள்ள’, ‘சட்டப் பகுதி XVII இல்  343 லிருந்து 351 வரையுள்ள’, ‘பகுதி V இல் 52 முதல்  78 வரையிலான’,  ‘65 வயது வரை’, ‘பகுதி VI இல் 152  முதல் 237 வரையிலான’ போன்றவற்றை  முறையே,  ‘சட்டப் பிரிவுகள் 5 லிருந்து 11 முடிய’,  ‘சட்டப்பிரிவுகள் 12 லிருந்து 35 முடிய உள்ள’, ‘சட்டப்பிரிவுகள் 36 லிருந்து 51 முடிய’, ‘சட்டப்பிரிவு  36 லிருந்து 51 முடிய’, ‘6 முதல் 14 வயது முடிய உள்ள’, ‘சட்டப்பிரிவு 268 லிருந்து 293 முடிய உள்ள’, ‘சட்டப் பகுதி XVII இல்  343 லிருந்து 351 முடிய உள்ள’, ‘பகுதி V இல் 52 முதல்  78 முடிய’,  ‘65 வயது முடிய’, ‘பகுதி VI இல் 152  முதல் 237 முடிய ’  என மாற்றி எழுதுவது நல்லது.    

 “இந்திய அரசியலமைப்பின் பாகம் II  சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப்  பற்றி விளக்குகின்றன. (பக்.187)

“Articles 5 to 11 under part II of the  Constitution deals with the citizenship”. (page: 171)

“இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III)  12 ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள்  அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன”. (பக்.187)

“The Fundamental Rights are enshrined  in Part III of the Constitution from Articles  2 to 35”. (page:171)  (12 வெறும் இரண்டானதுதான் மிச்சம்?!)

“அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்,  இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு  36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது”. (பக்.189)

“The Directive Principles of State Policy are  enumerated in Part IV of the Constitution 
from Articles 36 to 51”. (page: 173)

“6 முதல் 14 Zவயது வரையுள்ள குழந்தைகள்  அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல்”.  (பக்.191)


“To provide opportunities for education to  his child or ward between the age of six and  fourteen years”. (page: 174)

“இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி  XII சட்டப்பிரிவு 268ல் இருந்து 293 வரை உள்ள பிரிவுகள் மத்திய-மாநில அரசுகளின்  நிதி சார்ந்த உறவுகளைப் பற்றி விளக்குகிறது”. (பக். 191)


“Article 268-293 in Part XII deal with the  Financial relations between centre and the 
States”. (page: 175

“அரசியலமைப்பு சட்டப் பகுதி XVIIஇல்  343 லிருந்து 351 வரையுள்ள சட்டப்பிரிவுகள்  அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன”.  (பக்.192)


“Part XVII of the Constitution deals with the official language in Articles 343 to 351”.  (page: 175)

“இந்திய  அரசியலமைப்பின் பகுதி V இல் 52 முதல்  78 வரையிலான சட்டப்பிரிவுகள் மத்திய அரசின்  நிர்வாகம் பற்றி குறிப்பிடுகிறது”. (பக்.197)


“Articles 52 to 78 in part V of Indian  Constitution deals with the Union Executive”. (page: 180)

“இது இந்திய  அரசியலமைப்புச் சட்டம் பகுதி V இல் 79 முதல் 122  வரை உள்ள சட்டப்பிரிவுகள், இந்திய நாடாளுமன்ற அமைப்பு, உள்ளடக்கம், ஆயுட் காலம், அலுவலர்கள்,  செயல்முறைகள், சிறப்புச் சலுகைகள், அதிகாரங்கள் பற்றி குறிப்பிடுகிறது”. (பக்.203)
 
“Article 79 to 122 in part V  of the constitution deal with the organization, composition, duration, officers, procedures,  privileges, powers and so on of the Parliament”. (page: 186)

“உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் 65 வயது வரை பதவியில் நீடிப்பர்”. (பக்.207)

“The Chief  Justice and other judges of the Supreme  Court hold the office up to the age of 65  years”. (page: 190)

“அரசியலமைப்பின்     சட்டப்பிரிவுகள்  அனைத்து மாநிலங்களுக்கான  சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடுகிறது.  ஆனால் அரசியலமைப்புப் சட்டப்பிரிவு 370 ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து  வழங்கியுள்ளது”. (பக். 212)

“It lays down a uniform structure for the State  Government, in part VI of the constitution  from Article 152 to 237, which is applicable  to all the states, save only the state of Jammu  and Kashmir which has a separate constitution  for its government under Article 370”. (page: 195)

 

(இன்னும் வரும்…)

வியாழன், ஆகஸ்ட் 15, 2019

மொழிபெயர்ப்பு மற்றும் புரிதல் குளறுபடிகள்


மொழிபெயர்ப்பு மற்றும் புரிதல் குளறுபடிகள்

 மு.சிவகுருநாதன் 

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 39)       





      எட்டாம் வகுப்பு  சமூக அறிவியல் பொருளியல் பகுதியில் உள்ள  ‘பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்’ என்ற பாடத்திலுள்ள  மொழிபெயர்ப்பு மற்றும் புரிதல் குளறுபடிகளையும் குழப்பங்களையும் கொஞ்சம் பார்ப்போம். 

  “கற்றல் படைப்பாற்றலை ஏற்படுத்தும், படைப்பாற்றல் சிந்தனையைத் தூண்டும், சிந்தனை அறிவாற்றலை அளிக்கும், அறிவாற்றால் உங்களை சிறந்தவராக்கும்”, (பக்.246) என்ற ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பொன்மொழியுடன் இப்பாடம் தொடங்குகிறது!

    பாடநூலின் ஆங்கில, தமிழ் வழி வடிவங்களைக் கீழே காணலாம்.
“Online Banking (Net Banking)

      Online  Banking, also  known as internet  banking is an  electronic payment  system that  enables customers  of a bank or other  financial institutions to conduct a range of  financial transactions through website. 

E-Banking

      Electronic  banking, also  known as National  Electronic Funds  Transfer (NEFT),  is simply the use of  electronic means to transfer funds  directly from one account to another account”.  (page:219)

“மின்னணு பணம்

            மின்னணுப் பணம் என்பது வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னணு  முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாகும்.

நிகழ்நிலை வங்கி (இணைய வங்கி)

        நிகழ்நிலை வங்கி அல்லது இணைய வங்கி  என்பது வாடிக்கையாளர் அல்லது பிற நிதி நிறுவனங்கள்  வலைதளத்தின் மூலம்  ஒரு பரந்த நிதிப்  பரிவர்த்தனைகளை நடத்தும் ஒரு மின்னனு  முறையாகும்.

மின் வங்கி

        மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி  பரிமாற்றம் (NEFT)  என்றும்  அழைக்கலாம். காசோலை அல்லது  ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து  மற்றொரு கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு  மின்னணு வழிமுறை பயன்படுகிறது”. (பக். 251)

    இணைய வழிப் பணப்பரிமாற்றம் பல வழிகளில் நடைபெறுகிறது. அவற்றுள் சில:

  • NEFT (National Electronic Fund Transfer) 

  • IMPS (Immediate Payment Service)  

  • RTGS (Real Time Gross Settlement) 

  • UPI (Unified Payments Interface)


    இதில் NEFT (National Electronic Fund Transfer) ஐ மட்டும் மின் வங்கி என தனியாக வரையறுப்பது அபத்தம். இணைய வங்கி, மின் வங்கி என தனித்தனியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கணினி, அலைபேசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி இத்தகைய பரிமாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவற்றைத் தனித்தனியே அணுகுவதும் சரியல்ல.

   இப்பாடத்தில் இடம் பெற்றுள்ள ஒரு விளக்கப்படத்தில் online, mobile banking (page:216) ஆகியவற்றுக்கு முறையே கணினி, அலைபேசி  படம் இடம் பெற்றுள்ளது. இதன் தமிழாக்கமாக நிகழ்நிலை வங்கி (online),  நடமாடும் வங்கி (mobile banking) என்றும் இடம் பெறுகிறது. (பக்.248)
 
      அலைபேசி மூலமும் இணைய வங்கிச் செயல்பாடுகள் நடைபெறலாம். எனவே இதை ‘நடமாடும் வங்கி’ எனலாமா? கையில் எடுத்துச் செல்வதெல்லாம் ‘நடமாடும்’ (Mobile) என்ற வகையினத்தில் அடங்குமா? ‘mobile banking’ ‘நடமாடும் வங்கி’ என்றால் ‘mobile phone’ நடமாடும் போனாகுமோ?

     ‘சேமிப்புகள்’ பகுதியில் வங்கிச் சேமிப்புக் கணக்குகள் சொல்லப்படுகின்றன.


  • மாணவர் சேமிப்பு கணக்கு

  • சேமிப்பு வைப்பு

  • நடப்பு கணக்கு வைப்பு

  • நிரந்தர வைப்பு  (பக்.253)


   ஆங்கில வழியில் இவ்வாறு உள்ளது.

1. Student Savings Account 
2. Savings Deposits 
3. Current Account Deposit
4. Fixed Deposits   (page: 221)

   மாணவர்களுக்கு மட்டும் வங்கிக் கணக்காவும் பிற வைப்பாகவும் ஏன் மாறுகிறது?


  • மாணவர் சேமிப்பு கணக்கு (Student Savings Account) 
  • சேமிப்புக் கணக்கு (Savings Account)  
  • நடப்புக் கணக்கு (Current Account)
  • நிலையான வைப்புக் கணக்கு (Fixed Deposit  Account)   


           என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். பொதுவாக ‘வைப்பு’ என்பது Fixed Deposit ஐ குறிக்கப் பயன்படுகிறது.

      பயிற்சியில் “வணிக வங்கிகள் என்றால் என்ன? மற்றும் வைப்புகளின் வகைகள் யாவை?”, என்ற வினா ஒன்றுள்ளது. (பக்.257) மேலும் “குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்கள் எந்த வங்கி வழங்குகிறது? (பக்.257)  என்ற வினாவிற்கு இப்பாடத்தில் ‘இந்திய ரிசர்வ் வங்கி’ மட்டும் குறிப்பிடப்படுவதால் மாணவர்கள் அதையே பதிலாகச் சொல்கின்றனர்! அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் பல்வேறு கடன்களை அளிக்கும் நிலையில் இவ்விதமான அபத்தமான வினா ஏன் எழுப்பப்படுகிறது?
    

     ‘கருப்புப் பணம்’  குறித்து குழந்தைகளுக்கு பாடநூல் விளக்குவதைக் கொஞ்சம் கவனியுங்கள்.

“Black Money

     “Black Money is any  money on which it is not  paid to the government. 
Black Money is money  earned through any  illegal activity controlled  by country regulations”.  (page: 222)

    “கருப்பு பணம்

     கருப்பு பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும். நாட்டின் ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம் அனைத்தும் கருப்பு பணமாகும்”. (பக்.255)

“Black Money is money  earned through any  illegal activity controlled  by country regulations”.  (page: 223)

“கருப்பு பணம் என்பது நாட்டின் ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணமாகும்”. (மீள்பார்வை, பக்.256)

   “அரசுக்கு கணக்குக் காட்டாத வருவாய் அல்லது பணம்” என்று எளிமையாக குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? 



    கருப்புப் பணத்தை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு (Demonitazation) நடவடிக்கை எடுக்கப்பட்டதாம்! (பக்.255) கள்ளப் பண ஒழிப்பு, கருப்புப் பண ஒழிப்பு, மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவித்தல், பயங்கரவாத ஒழிப்பு என மாற்றி மாற்றிச் சொல்லப்பட்ட இதன் இலக்கில் ஏற்பட்டப் பெருந்தோல்வி என்பது பொருளியல் அறிஞர்களால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. 

உலோக பணம்
காகித பணம்
கருப்பு பணம்
நடப்பு கணக்கு
நிலை களன் (‘நிலை கலன்’ என்று பாடத்தில் உள்ளது)
வைப்பு கணக்கு
 
           என எங்கும் வல்லினம் மிகுவதேயில்லை. 

உலோகப் பணம்
காகிதப் பணம்
கருப்புப் பணம்
நடப்புக் கணக்கு
நிலைக் களன்
வைப்புக் கணக்கு 

             என்று எழுதவேண்டும் என பாடம் எழுதுபவர்களுக்கு மாணவர்களே சொல்லிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

     இறுதியாக, இன்னொரு எடுத்துக்காட்டு: எட்டாம் வகுப்பு புவியியல் பகுதியில் ‘வானிலையும் காலநிலையும்’ என்ற பாடத்தில் ‘உச்ச வெப்பநிலை, நீச வெப்பநிலை, தின வெப்பவியாப்தி , வெப்பவியாப்தி என்ற வழக்கொழிந்தச் சொற்களைக் கொண்டு பாடம் எழுதப்படுவதை கவனியுங்கள். இந்தப்பாடம் 1960 களில் பாடம் எழுதப்படுகிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. 

இதன் தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்கள் கீழேத் தரப்படுகின்றன. 

 “வெப்பநிலை வீச்சு ( Mean Temperature)

    ஓர் இடத்தில் 24 மணி நேரத்திற்குள்  நிலவும் அதிகப்பட்ச மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலைக்கும் இடையேயுள்ள சராசரியே வெப்பநிலை வீச்சு ஆகும். [(87° F + 73° F) / 2 =  80° F] ஒரு நாளில் அமையும் உச்ச வெப்பநிலைக்கும் மற்றும் நீசவெப்பநிலைக்கும்  இடையேயுள்ள வேறுபாடு தின வெப்பவியாப்தி  அல்லது தினசரி வெப்பநிலை வீச்சு எனப்படும்.  ஒரு ஆண்டின் அதிகவெப்பமான சராசரி மாதத்திற்கும் குறைந்த வெப்பமான சராசரி  மாதத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கு  ஆண்டு வெப்பவியாப்தி என்று பெயர்”. (பக்.214)

“Mean Temperature

The average of maximum and minimum  temperatures within 24 hours is called mean 
daily temperature [(87o F+73o F) / 2=80o F]. Diurnal range of temperature is the  difference between the maximum and  minimum temperatures of a day. Annual  range of temperature is the difference  between the highest and lowest mean monthly  temperatures of a year. The distribution of  temperature is shown by means of Isotherms.  Isotherms are imaginary lines which connect  the same temperatures of different places”.  (page:184)

       இதற்கு மாறாக கேரள – SCERT வெளியிட்டுள்ள ஒன்பதாம் வகுப்பு புவியியல் தமிழ் வழிப் பாடநூலில் அதிகம், குறைவு, தினசரி வெப்பநிலை வேறுபாடு (Diurnal range of temperature) என்று அழகாகக் குறித்துள்ளனர். இப்போது தெரிகிறதா, நாம் எங்கே இருக்கிறோம் என்று? அவற்றை பின்வரும் பத்திகளில் காண்க. 
 
கேரளப் பாடநூல்

     “ஒரு நாளில் அனுபவப்படும் அதிக வெப்பநிலைக்கும் குறைந்த வெப்பநிலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தினசரி வெப்பநிலை வேறுபாடு (Diurnal range of temperature) என அழைக்கின்றனர். தினசரி வெப்பநிலை வேறுபாடு = அதிக வெப்பநிலை – குறைந்த வெப்பநிலை

    ஒரு நாளில் சராசரி வெப்பநிலையைத் தினசரி சராசரி வெப்பநிலை (Daily mean temperature) என்பர். இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைக் கவனிக்கவும். 

தினசரி சராசரி வெப்பநிலை = அதிக வெப்பநிலை – குறைந்த வெப்பநிலை / 2” (பக். 11, ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் II, மாநிலக் கல்வியாராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் – SCERT – கேரளம்)

(இன்னும் வரும்…)