ஞாயிறு, ஜனவரி 30, 2011

‘சமச்சீர் கல்வி’ பாடநூற்கள் :- என்ன செய்யப் போகிறது? -மு.சிவகுருநாதன்

‘சமச்சீர் கல்வி’ பாடநூற்கள் :- என்ன செய்யப் போகிறது?     

-மு.சிவகுருநாதன்

 (மிகத் தாமதமாக ஒரு பதிவு)






         தமிழக அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் ஆகிய நான்கு வகையான பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் பாடநூற்கள் என்று திட்டமிட்டு 2010 - 2011 ஆம் கல்வியாண்டு முதல் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு புதிய பாடநூற்கள்  அறிமுகம் செய்யப்பட்டன.  எஞ்சிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் (2011 - 2012) புதிய புத்தகங்கள் அச்சாகி வெளிவரக் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



            இந்த முறையிலிருந்து தப்பிக்க மெட்ரிக் பள்ளிகள் மத்திய அரசின் CBSE  பள்ளிகளாக மாற்றம் பெற்று வருகின்றன.   அரசின் பொதுப்பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு தங்களுக்கான பாடநூற்களை தனியார் பள்ளிகளே தயாரித்துக் கொள்ள ஏதுவாக நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருக்கிறார்கள்.



            ‘சமச்சீர் கல்வி’ என்ற பெயருக்கும் உண்மையான சமச்சீர் கல்விக்கும் யாதொரு தொடர்புமுமில்லை.    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மற்றம் மெட்ரிக் பள்ளிகளின் மதிப்பெண் பட்டியலில் சமத்துவம் பேணப்பட்டது.  நான்கு கல்வி வாரியங்களுக்கு ஒரே பாடநூல் என்பதே ‘சமச்சீர் கல்வி’ என்று கூட கூற வாய்ப்பில்லாத நிலையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஒரே  பாடத்திட்டத்தின் (Syllabus) வாயிலாக ‘சமச்சீர் கல்வி’ என்று பேசக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.



            முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கான புதிய பாடநூற்கள் வெளியாகி ஓராண்டு முடியப் போகும் தறுவாயில் இவற்றைப் பற்றி நமது கல்வியாளர்களும் ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் எவ்வித கருத்துகளையும் வெளிப்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியது.   இது நமது சமூகம் கல்வியின் மீது கொண்டுள்ள அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.    தீராநதி ஆகஸ்ட் 2010இல் வெளியான மீனாவின் கட்டுரையும்


http://www.kumudam.com/magazine/Theranadi/2010-08-01/#  

காலச்சுவடு டிசம்பர் 2010 வெளியான வே. சுடர்ஒளியின் (இவர் முதல் வகுப்பு தமிழ்ப் பாடநூல் குழுவில் அங்கம் வகித்தவர்) கட்டுரையும் 


விதிவிலக்கானது.  இவ்விரண்டு கட்டுரைகளின் பெரும்பாலான கருத்துக்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.   இப்பாட நூற்கள் பற்றிய வேறு சில கருத்துக்களை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 



            கோத்தாரி கல்விக் குழு (1964 - 66) அருகாமைப் பள்ளிகளை (Neighbourhood Schools) பரிந்துரை செய்தது.    இம்முறையின்படி உள்ளூர்ச் சூழல்களுக்குத் தகுந்தவாறு வட்டார அளவிலான பள்ளிகளும் பாடத்திட்டங்களும் அமைய வேண்டும் என்பதே கல்வியாளர்களின் விருப்பமாக இருந்தது.  எனவே பாடத்திட்டத்திற்கும் பாடநூற்களுக்கும் கல்விச் செயற்பாட்டில் முக்கிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது.

            இப்புதிய பாடநூற்களை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுக்கள்,  அவற்றின் செயல்பாடுகள், அவற்றின் பின்னாலுள்ள அரசியல் ஆகியன விமர்சனத்திற்குள்ளாக்கப்பட வேண்டும்.   ஆறாம் வகுப்பு பாடநூற்கள் தயாரிப்பில் வல்லுநர் குழு, மேலாய்வுக் குழு தவிர்த்த பாடநூல் குழுவில் 5 பாடங்களுக்கும் சேர்த்து 58 பேர் உள்ளனர்.    இவர்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 27 பேர், ஈரோடு மாவட்டத்தில் 6 பேர் என 4 மாவட்டத்திற்கு மட்டும் 33 பேர் போக எஞ்சிய 25 நபர்கள் 15 மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.  13 மாவட்டங்களுக்கு பாடநூல் குழுவில் இடம் இல்லை.   கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, தர்மபுரி போன்ற பல மாவட்டங்கள் புறக்கணிப்பிற்கு உள்ளாகியுள்ளன.



            முதல் வகுப்பு பாடநூல் குழுவிலும் இதே கதைதான்.  முதல் வகுப்பு 4 பாடநூற்களிலுள்ள பாடநூல் குழுவில் உள்ள 34 பேரில் 18 பேர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.   ஒரு சிலர் மீதமுள்ள 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.   கன்னியாகுமரி, நீலகிரி, தர்மபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்கள் அறவே ஒதுக்கப்பட்டுள்ளன.



            வட்டார அளவிலான பல்வேறு வேறுபாடுகளை கொண்ட தமிழகத்தின் முக்கிய இடங்களான நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களின் பங்கு இல்லாமல் எப்படி பாடநூல் குழு அமைக்கப்பட்டதென்று தெரியவில்லை.   பாடநூல் குழுவில் 50% இடங்களை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் எப்படி ஆக்ரமித்துக் கொண்டார்கள்?



            இக்குழுவினர் எத்தனை முறை கூடினார்கள்?  என்ன விவாதித்தார்கள்? எவ்வித முடிவுகளை எடுத்தார்கள்? என்று யாருக்கும் தெரியாது.  இணையதளம் வழியாகவும் நேரிலும் கருத்துகள் கேட்கப்பட்டதாகச் சொல்லும்போது, எத்தகைய கருத்துகள் வந்தன? அவற்றில் எவை ஏற்கப்பட்டன? பாடத்திட்டத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டது? என்பதும் ரகசியமாகவே நடந்திருந்திருக்கிறது.



            முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு பாடநூல் குழுவில் மொத்தம் 92 பேர் உள்ளனர்.  அதில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 11 பேர்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 11 பேர்; பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் 49 பேர் அங்கம் வகித்துள்ளனர்.  மேலும் ஒரு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், 5 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஒரு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர், 14 இடைநிலை ஆசிரியர்களும் இக்குழுவில் உள்ளனர்.  மருந்துக்குக் கூட ஒரு கல்வியாளர், எழுத்தாளர், ஓவியர், சிந்தனையாளர் எவருமில்லை.  பிறகெப்படி பாடநூல் சிறப்பாக இருக்கும்?.  ட்ராட்ஸ்கி மருது போன்றவர்களை அட்டை வடிவமைப்புக்கு மட்டும் பயன்படுத்தாமல் உள்ளடக்கத்திற்கும் நூலாக்கத்திற்கும் பயன்படுத்தினால் என்ன? 



            ஆசிரியராக பணியாற்றவோர் அனைவரும் கல்வியாளர்கள் என்றால் நாடு என்றோ முன்னேறியிருக்கும்.   குறிப்பிட்ட வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர் அந்தப் பாடநூல் தயாரிப்பில் பங்கு பெறுவது சிறப்பானதுதான்.  அத்துடன் கூடவே படைப்பாளிகள், ஓவியர்கள் இடம் பெற்றிருந்தால் முழுவதும் வண்ணத்தில் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தின் தரம் இன்னும் மேம்பட்டிருக்கும்.   கல்விப் பணியாளர்கள் (Academicians) தவிர்த்து சுதந்திரமான நவீன சிந்தனைகளை உள்வாங்கிய படைப்பாளிகள் இக்குழுவில் இடம் பெற வேண்டும்.  தொழில் முறை ஓவியர்களைக் கொண்டு படம் வரையும் போது அது உயிரோட்டமில்லாற் போகிறது..

                      

            மனித உரிமை ஆணையங்கள், நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் போன்றவற்றில் ஓய்வு பெற்றவர்களை நியமித்து அந்த அமைப்புக்களை முடக்கிப்போடும் வேலையை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.  அதைப் போல வல்லுநர் குழு, மேலாய்வுக் குழு போன்றவை முன்னாள் இயக்குநர்கள், கல்வி அலுவலர்கள், பேராசிரியர்களுக்கு மட்டும் இடம் பெறும் ‘முதியோர் இல்லமாக’ காட்சியளிக்கின்றன.   வயதானவர்களின் ஆளுமை மற்றும் சிந்தனைகளைப் பயன்படுத்துவதில் மாற்றுக் கருத்தில்லை.   தந்தை பெரியார் போன்ற சிந்தனையாளர்களுக்கு வயது ஒரு தடையாக இருந்ததில்லை.  கல்வித்துறையில் பதவி வகித்த காரணத்தினாலும் அரசியல் செல்வாக்கினால் மட்டுமே இவர்கள் இந்த இடங்களை கெட்டியாக தக்க வைத்துக் கொள்கின்றனர்.  இவர்கள் கடந்த காலத்திலும் தற்பொழுதும் கல்விக்காக ஆற்றிய பணிகள் என்ன?  எந்த அளவிற்கு இவர்கள் நவீன சிந்தனைகளை உள்வாங்கியவர்கள்?  என்பதெல்லாம் கேள்விக்குரியது.  ஒன்றிரண்டு பேரைத் தவிர்த்த பிறர் இக்குழுவிற்கு தகுதியற்றவர்கள் என்பதே உண்மை.  பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநர் வ.ஆ. சிவஞானம் 9 புத்தகங்களையும் மேலாய்வு செய்திருக்கிறார்.   புதிய பாடத்திட்டத்தை இளைய சமூகத்திற்கு அளிக்க என்னமாய் உழைத்திருக்கிறார் பாருங்கள்!



            தயாரிக்கப்பட்டு அச்சாகிக் கொண்டிருக்கும் எஞ்சிய வகுப்பு பாடநூற்களுக்கும் இதே நிலைதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.   நமது அண்டை மாநிலமான கேரளத்தை ஒப்பிடும் போது நாம் கல்வியில் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பது விளங்கும்.  படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களை இக்குழுக்களில் சேர்க்க வேண்டும் என்று சொல்கிற போது வேறொரு சிக்கலும் ஏற்படும்.  ஆளும் கட்சிக்கு வேண்டிய சினிமாக்காரர்களும் சின்னத்திரைக்காரர்களும் இந்த இடங்களைப் பிடித்துக் கொள்வார்கள்.  இதுதான் தமிழ்நாட்டின் அவலம்.



            இந்த இரண்டு வகுப்புகளுக்கான பாடநூற்களில் சில நேர்மறையான கருத்துகள் இல்லாமலில்லை.  அவைகள் குறித்து மேலே குறிப்பிட்ட இரு கட்டுரைகளும் அதிகம் பேசிவிட்டபடியால் மேலோட்டமான சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.



            இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பன்மைத் தன்மையை பிரதிபலிக்கும் கருத்துக்களை தேடத்தான் வேண்டியுள்ளது.  மேலே குறிப்பிட்ட குழுக்களில் ஒரே ஒரு இசுலாமியர் மட்டுமே உள்ளார்.  இந்துமதம் தவிர்த்த பிற மதங்களையும் அவைதீக பாரம்பரிய கருத்துக்களையும் பகுத்தறிவுவாதத்தையும் பன்மைத்துவ நோக்கில் இவர்கள் அணுகவேயில்லை. 

            சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நம்மவர்கள் என்றும் களப்பிரர், பல்லவர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர்களை பிறர் என்றும் அறிமுகம் செய்கிறார்கள்.   இருக்கட்டும்.  சமண - பவுத்த மதங்கள் பரவிய விதம் அதனை ஆதரித்த மன்னர்கள் பட்டியலிடப்படுகின்றன.  களப்பிரர் காலத்தில் இவ்விரு மதங்கள் இருந்த நிலை, இன்னும் இருக்கின்ற பவுத்த - சமணக் கோயில்கள், சமணப்படுக்கைகள் போன்றவற்றைச் சொல்லவிடாமல் தடுப்பது எது?



            பழந்தமிழகப் பெருமை, மொழிப்பெருமை, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என்று எதைப் பேச வந்தாலும் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் கருத்துக்களும் பெருமையும் சேர்த்தே சொல்லப்படுகிறது.  அப்போதெல்லாம் பெயர் குறிப்பிடப்படாமல் தமிழக முதல்வர் கலைஞர் எனக் குறிப்பிடப்படுகிறது.  பாடநூல் குழுவினர் எதைத் தக்க வைப்பது என்பதிலேயே குறியாக இருந்துள்ளனர்.  நடிகைகள் மீனா, ஸ்ரேயா போன்றோர்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட இவர்களுக்கு இல்லாதது வேதனைக்குரியது.  ஆட்சியாளர்கள் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் புகழ்பாடி ‘தமிழரசு’ இதழைப் போல பாடநூற்களைத் தயாரிப்பது எதிர்கால சந்ததியின் அறிவை மழுங்கடிக்கும் வேலை.



            ஆறாம் வகுப்பில் கலைஞர் உயிர்க் காப்பீட்டுத் திட்டம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், முழுச் சுகாதாரத் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாவற்றையும் அறிமுகம் செய்து அரசின் புகழ்பாடியாயிற்று.  வரும் அடுத்தடுத்த வகுப்பு பாடநூற்களில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் போன்ற பிற திட்டங்கள் பட்டியலிடப்படும்.  பொருளாதார அறிமுகம் வரவேற்கப்பட வேண்டியதே.   ‘நுகர்ச்சி’ என்பதை விட ‘நுகர்வு’ என்பதே பொருத்தமாக இருக்கும்.   இதைப் போல கலைச் சொல்லாக்கக் குறைபாட்டிற்கு நிறைய உதாரணம் காட்டலாம்.



            இத்திட்டங்களை மட்டும் சொல்பவர்கள் வரும் வகுப்புகளில் பொருளாதாரப் பாடத்தில் தொடர்ச்சியாக வருவாய் பற்றிச் சொல்லும்போது இன்று அரசின் பெரும் வருவாய் ஆதாரமாக இருக்கின்ற ‘டாஸ்மாக்’ (TASMAC) பற்றியும் சொல்ல வேண்டும்.   சொல்வார்களா?  அறிவியல் பாடங்களில் ஆற்று மணலை அரசே கொள்ளையிடும் அவலத்தையும் அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளையும் மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.  தெரிவிப்பார்களா?



            சங்கம், குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் போன்ற கருதுகோள்களை ஏற்றுக் கொண்டு பாடம் எழுதுபவர்கள் சிந்து சமவெளி எழுத்து முறையில் உள்ள சித்திர எழுத்துக்கள் தொல் - தமிழ் எழுத்துடன் உறவுடையன என்று கூறப்படுவதாக சொல்கின்றனர்.  இவ்வாறு கூறப்படுவதில் மாறுபடுவோரும் உண்டாம்.  ஆனால் மொகஞ்சதாரோவில் எடுக்கப்பட்ட பொருள்கள் அங்கு வாழ்ந்த மக்களின் சமயக் கோட்பாட்டையும் சமயப் பற்றினையும் அறிவிக்கின்றன என்று நிறுவி சிவன், சக்தி, லிங்க வழிபாட்டை உறுதி செய்கிறார்கள்.  இது மட்டும் எப்படி முடிகிறது?



            பின்லாந்து மொழியியலறிஞரான அஸ்கோ பர்போலா சிந்துவெளி எழுத்தை படித்தறிய சித்திரப்புதிர் எழுத்து முறையைக் (Rebus) கையாள்கிறார்.   தென்னாசியாவில் இருந்ததாக அறியப்படும் மொழிக் குடும்பங்களுக்குச் சொந்தமான மொழியாக இருந்திருக்கக் கூடிய ஹரப்ப மொழி அண்டை கிழக்கு மொழிகளுக்கு மாற்றாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக இவர் கணிக்கிறார்.  சீன - திபெத்திய மொழி இமயமலைப் பிரதேசத்திலும் புரு சாஸ்கி மொழி காரகோரம் மலைப்பகுதியில் தனிமைப்பட்டு போனதால் இவையிரண்டையும் தவிர்த்து எஞ்சியிருப்பது இந்தோ - ஈரானிய மொழியும், ஆரிய மொழிக் குடும்பமும், தென்னிந்தியாவில் இப்போது பேசப்படும் திராவிட மொழிக் குடும்பமும்தான் என்கிறார்.



            கி.மு. 2000 முதல் பேசப்பட்டு வந்த ஆரிய மொழிக் குடும்பத்திற்கும் ஹரப்ப மொழிக்கும் உறவில்லை.  ஏனெனில் சிந்து சமவெளி மக்கள் குதிரையை அறிந்திருக்கவில்லை.   எனவே ஹரப்பர்களின் மொழி திராவிட மொழிதான் என்று வரையறை செய்து சிந்து சமவெளி சித்திர எழுத்துகளின் 386 குறியீடுகளிலிருந்து நட்சத்திரம், முருகன், கார்த்திகை, வெள்ளி என சித்திர எழுத்துகளைப் படித்தறியும் புதிய முறையியலை அஸ்கோ பர்போலா அளிக்கிறார்.   இந்த சித்திர எழுத்துகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டவை என்றும் ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.   அஸ்கோ பர்போலாவை அழைத்து விருதளித்து கோவை செம்மொழி மாநாடெல்லாம் நடத்திவிட்டு  மீண்டும் பழம் பஞ்சாங்கத்திடம் அடைக்கலமாவது எதற்கு எனத் தெரியவில்லை.



            ஐராவதம் மகாதேவன் சில மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அஸ்கோ பர்போலாவின் ஆய்வு நேர்மையை சந்தேகிக்கவில்லை.   ஹரப்ப மொழி சித்திர எழுத்துகளை படித்தறியும் அஸ்கோ பர்போலாவின் புதிய முயற்சியை முன்னோடியாக இனம் காண்கிறார்.  இந்த மாதிரியான எவ்விதப் புரிதல்களும் இல்லாமல் எழுதப்படுபவைதான் தமிழகப் பாடநூல்கள் என்பதை ஒத்துக் கொண்டேயாக வேண்டும்.



            மகாவீரர் காலம் கி.மு. 534 முதல் கி.மு. 462 வரை எனவும் புத்தரின் காலம் கி.மு. 563 முதல் கி.மு. 483 வரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   சமகாலத்தவராக இருப்பினும் மகாவீரர் புத்தரை விட வயதில் மூத்தவர்.  இப்பாடநூலின்படி மகாவீரர் புத்தரை விட இளையவராகி விடுகிறார்.  புத்தரின் பவுத்தம், மற்கலியின் ஆசீவகம் ஆகியவற்றை விட முன்னர் தோன்றியது சமணம் என்பதே வரலாறு.  மயிலை.சீனி. வேங்கடசாமியின் கருத்துப்படி மகாவீரர் காலம் கி.மு. 599 முதல் 527 வரை என்பதே சரியானதாக இருக்கும்.



            “ஆங்கிலேயர் காலத்தில் ஜமீன்தார்கள் உருவாகி பெரும்பாலான நிலங்கள் ஜமீன்தாரர்களின் உடைமைகளாக மாறின” என்று சொல்லும் போது அதற்கு முன்னால் நிலங்கள் உழைக்கும் மக்களிடம் இருந்ததா? என்று கேட்கத் தோன்றுகிறது.  “விடுதலை பெற்ற இந்தியாவில் எத்தகையஅரசு அமைய வேண்டும் என்ற விவாதம் எழுந்த போது, நமது நாடு மக்களாட்சி அரசாக அமைய வேண்டும் என்று கருத்து மேலோங்கியது”, என்று புதுக்கதையளக்கிறார்கள்.



            அரசியல் நிர்ணய சபை 1946-ல் அமைக்கப்பட்டு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே பணி தொடங்கப்பட்டு, அரசியலமைப்பு வரைவுக் குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் பெரும் முயற்சி மற்றும் உழைப்பால் தயாரிக்கப்பட்ட வரைவு சட்டத்தை 1949 நவம்பர் 26-ல்  அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது.   இதற்கு மாறாக சுதந்திரத்திற்குப் பிறகுதான் மக்களாட்சி அரசாக மாற வேண்டும் என்று கருத்து ஏற்பட்டதாகக் கூறுவது எவ்வளவு பெரிய புரட்டல்வாதம்.  இந்தப் பாடத்தில் குடியரசு, மக்களாட்சி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், கிரிக்கெட் விதிகளைப் போல அரசியல் சட்டத் தொகுப்பு, அரசியல் அமைப்புச் சட்டம் என்றெல்லாம் விலாவாரியாகச் சொல்பவர்கள் சொல்லாமல் விட்ட பெயர் ஒன்றுண்டு.  அந்தப்பெயர் அம்பேத்கர்.  பக்கத்துப் பக்கம் ‘கலைஞர் புராணம்’ பாடும் புத்தகத்தில் அல்லும் பகலும் உழைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி அம்பேத்கரின் பெயரைக் குறிப்பிடாமல் விடுவது எந்த வகையான தீண்டாமை என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.



            இலங்கை, பர்மா (தற்போது மியான்மர் - அதைக் கூட பழைய பெயரிலேயே அழைக்கிறார்கள்), திபெத், சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பவுத்த மதம் பின்பற்றப்படுகிறதாம்.  இந்தியாவில் பவுத்த மதத்தினர் இல்லை என்று சொல்கிறார்கள்.   இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இன்றும் பவுத்த மதத்தினர் வாழ்வதையும் சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபட பவுத்தம் ஒரு வழிமுறையாக இருப்பதையும் மறைக்க முடியுமா?  திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கும் பல்லாயிரக்கணக்கான திபெத் அகதிகளுக்கும் அடைக்கலமளித்திருக்கும் ஒரு நாட்டில் பவுத்த மதம் இல்லையென்பதை எப்படிப் புரிந்து கொள்வது?  இதைத்தான் இந்தியா - தமிழ்நாட்டின் பன்மைத் தன்மையை மறுக்கிற, மதச் சார்பின்மையை கேலிக்குள்ளாக்கும் செயல் என்று சொல்கிறோம்.  கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு குறிப்பு போடுபவர்கள்.  “இந்துவாகப் பிறந்தேன்.  ஆனால் இந்துவாக இறக்க விரும்பவில்லை”, என்று சொல்லி அம்பேத்கர் பெருந்திரளான மக்களுடன் பவுத்த மதத்தில் இணைந்ததை குறிப்பாக போட்டிருக்க வேண்டும்.  ஆனால் அரசியல் அமைப்புச் சட்டம் பற்றி சொல்லும் போது அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்பவர்களிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

                      

            ஆறாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் ‘புரம்’ என்பதற்கு ஊர் என்று பொருள் சொல்லி ‘நாட்டுப்புறம்’ என்பதை ‘நாட்டுப்புரம்’ என்றே தொடர்ந்து பிழையாகச் சொல்லியிருக்கிறார்கள்.   தெனாலிராமன் கதையும், விவேகானந்தர் பற்றிய துணைப் பாடங்களும் நமக்கு உணர்த்த வருவதுதான் என்ன? இதிலிருந்து எப்போது விடுபடப்போகிறோம்?



            தராசுரம் கோயில் பற்றிய பாடத்தில் “தஞ்சை அரண்மனைக்குச் சொந்தமானது இக்கோயில்” என்று வருகிறது.  தஞ்சை அரண்மனையில் எந்த மன்னர் இருக்கிறார் என்ற கேள்வி மாணவர்கள் மனத்தில் எழக்கூடும்.  யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த மூன்று கோயில்களும் மன்னர் மானியங்கள் ஒழிக்கப்பட்ட நிலையில் மராட்டிய இளவரசருக்குச் சொந்தமான இருக்க வேண்டிய தேவை என்ன என்று யோசிக்க வேண்டியுள்ளது.



            இன்று பல்வேறு பயிற்று முறைகள் ஒவ்வொரு வகுப்பிற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.  1 முதல் 4 வகுப்புகளுக்கு செயல்வழிக் கற்றல் (ABL - Activity Based Learning) முறை நடைமுறையில் உள்ளது.  5-ஆம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி (SALM - Simplified Active  Learning Methodology)
  என்ற முறையும்   6-லிருந்து 8-ம் வகுப்பு முடிய (ALM - Active  Learning Methodology) என்ற முறையும்  9-ம் வகுப்பிற்கு மட்டும் ALM+ என்ற கற்பித்தல் முறையும் பின்பற்றப்படுகிறது.  10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வழக்கம் போல தேர்வுக்கு தயார் செய்யும் பழைய முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது.   இந்த நவீன கற்பித்தல் முறைகளை ஏன் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யவில்லை என்பது புதிராக உள்ளது.  இவ்வித கற்பித்தல் உத்திகளை பாடநூல் தயாரிப்பில் நினைவில் கொண்டதாகத் தெரியவில்லை.



            ஒன்பது பாடநூற்களில் உள்ள குறைகளைச் சொன்னால் பக்கங்கள் போதாது.  விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.  புத்தகங்களை வண்ணத்தில் அச்சிடுவது மட்டும் போதாது.  ஓவியங்கள், படங்கள் போன்றவற்றை இன்னும் தெளிவாகவும் குழப்பத்தை ஏற்படுத்தாமலும் வடிவமைக்க வேண்டியது அவசியம்.



            ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற கல்வி அலுவலர்கள் மட்டுமே ஒரு தரமான பாடத்தைத் தயாரித்து விட முடியாது.  எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், ஓவியர்கள் போன்ற பல்வேற தரப்பாரின் ஒட்டு மொத்த முயற்சியில் நாட்டின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்கும் வழியிலும் பாடநூற்கள் தயாரிக்கப்படுவதே கல்வி தரத்தை உயர்த்தும்.   அதுவரையில் இத்தகைய பாடப்புத்தகங்களால் கல்வியில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடப் போவதில்லை. 

கலைமாமணி விருதுகளை கூறுகட்டி வழங்கும் தமிழக அரசு -மு.சிவகுருநாதன்

கலைமாமணி விருதுகளை கூறுகட்டி வழங்கும் தமிழக அரசு  -மு.சிவகுருநாதன்



            பல ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தனக்களிக்கப்பட்ட ‘கலைமாமணி’ விருதை ஏற்க மறுத்தார்.   என்ன காரணத்திற்காக விருது வழங்கப்படுகிறது என்பது தெரியவில்லை என்று அவர் சொன்னார்.  28.01.2011 அன்று 2008, 2009 மற்றும் 2010 ஆகிய மூன்றாண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் 74 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.  24.01.2011 அன்று 2007 மற்றும் 2008 ஆண்டிற்கான சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட்டன.

                      

            விரைவில் தேர்தல் வரப்போகிறதல்லவா?  எனவேதான் பல ஆண்டுகளுக்கான இவ்விருதுகளை கூறு கட்டி அளித்து சாதனை படைக்கிறது தமிழக அரசு.  தேர்வுக் குழுவில் இருக்கும் அனைவரும் தி.மு.க. உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் நபர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் தேர்வு செய்பவர்களும் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாகவும் கலைஞர் டி.வி., சன் டி.வி. ஆகியவற்றில் பணி செய்பவர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் இருந்தால் போதும் என்பதே தகுதியாகிவிட்டது.



            காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள அண்மையில்தான் ஜெயந்தி நடராஜன், டி. யசோதா,  டி. ரவிக்குமார் போன்றோர்க்கு அரசு விருதுகளை அள்ளி வழங்கினர்.



            மத்தியில் மட்டும் என்ன வாழ்கிறது?   ஜனவரி 24, 2011 -ல் அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ, பத்மவிபூஷ­ண் விருதுப் பட்டியலைப் பார்த்தால் இது புலனாகும்.   இலக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருது அவ்வை நடராஜனுக்கு வழங்கப்படுகிறது.   இலக்கியத்தை இப்படி கூட கேவலப்படுத்தலாம் போலிருக்கிறது!  தாரளமயமாக்கலுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அனுவாலியாவிற்கு பத்மவிபூ
ஷ­­ண் விருது அளிக்கப்பட்டுள்ளது.



            தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றோர் பட்டியலில் எழுத்தாளர் சா. கந்தசாமி, நாஞ்சில் நாடன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.  இந்தப் பட்டியலில் ராணி மைந்தன், ராஜேஷ்குமார் போன்ற துப்பறியும் எழுத்தாளர்களும் இளசை சுந்தரம், பொன். செல்வகணபதி, பேரா.தே.ஞானசேகரன், திண்டுக்கல் ஐ. லியோனி, பொ. சத்தியசீலன், தேச. மங்கையர்க்கரசி போன்ற ‘பேச்சு வியாபாரிகளும்’,  கவிக்கொண்டல் சு. செங்குட்டுவன், கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் போன்ற ‘வாழ்த்துப்பா கவிஞர்களும்’, தமன்னா, அனுஷ்கா போன்ற நடிகைகளும் இடம் பெற்றுள்ளனர்.    இந்த பட்டிமன்றப் பேச்சாளர்கள், கருணாநிதிக்கு வாழ்த்துப்பா பாடும் கவிஞர்கள், துப்பறியும் எழுத்தாளர்கள், நடிக்கவே செய்யாமல் கவர்ச்சிப் பதுமைகளாக வந்து போகும் நடிகைகள் போன்றோருக்கு விருது கொடுப்பதில் நமக்கு எந்த வருத்தமும் இல்லை.  இந்தப் பட்டியலுக்குள் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன் போன்றோரின் பெயர்களை உள்ளே நுழைப்பதன் மூலம் இந்த கூத்துக்களுக்கு அங்கீகாரம் வழங்க இவர்களிருவரும் பலிகடாவாக்கப்படுகின்றனர் என்பதே உண்மை.   நாஞ்சில் நாடன் எழுத்தாளர் என்பது தமிழக அரசுக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது.



            2010ஆம் ஆண்டிற்காக சாகித்திய அகாதெமி விருதைப் பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பல்வேறு பிரச்சினைகளில் அரசை வெகுவாக விமர்சித்து வருபவர்.   டிவிட்டரில் ஒரு நண்பர் எழுதியிருப்பதைப் போல,  இந்த அரசை விமர்சனம் செய்ததற்குத் தண்டனையாக கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.  எனவே இவ்விருவரும் இந்த விருதை மறுப்பதன் மூலம் தமிழ் அறிவுலகிற்கு பெருமை சேர்க்க வேண்டும். 



            விஜய் டி.வி.யை விட்டு விட்டு கலைஞர் டி.வி.க்கு கட்சி மாறியதற்காக திண்டுக்கல் ஐ.லியோனிக்கு இந்த சன்மானம் தரப்படுகிறது.  தமன்னா, அனுஷ்கா போன்ற நடிகைகளுக்கு வழங்கக்கூடாது என்று சொல்லவில்லை.  கற்றது தமிழ், அங்காடித் தெரு, மகிழ்ச்சி போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருக்கும் அஞ்சலி போன்ற நடிகைகளைக் கண்டுகொள்ளாமல் ‘கவர்ச்சிப் பதுமைகளை’ மட்டும் சிறப்பிப்பதன் மூலம் வருங்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆட்கள் கிடைக்கலாம்.



            தமிழகத்தில் மு. கருணாநிதிதான் பெரிய இலக்கியவாதி.  மற்றவர்கள் எல்லாரும் அவரது அடிப்பொடிகள் என்ற நிலை நெடுங்காலமாக இருந்து வருகிறது.   இந்த நிலை மாறவேண்டுமானால் நாஞ்சில் நாடன் விருதை மறுத்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.   சாரு நிவேதிதா தனது இணையப்பக்கத்தில் இதையே வலியுறுத்தியுள்ளார்.   தமிழ் அறிவுலகத்தின் மீதான இத்தகைய தாக்குதல்களை தமிழ் அறிவு ஜீவிகள் கண்டிக்க வேண்டும்.

வியாழன், ஜனவரி 27, 2011

வாக்குரிமையை கட்டாயமாக்க முடியுமா? -மு.சிவகுருநாதன்

வாக்குரிமையை கட்டாயமாக்க முடியுமா?         -மு.சிவகுருநாதன்



          இந்திய அரசியலமைச் சட்டப் பிரிவு 324-ன் படி  ஜனநாயக முறைப்படி நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்த 1951ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது.   இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்றதா என்பது கேள்விக்குரியது.   இந்த ஆண்டிலிருந்து (2011) ஜனவரி 25ஐ தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து நாடெங்கும் வாக்களிக்கும் உரிமை, ஜனநாயகம் பற்றிய பரப்புரைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.



          தகவல், கல்வி, உணவு உரிமைச் சட்டங்கள் வரிசையில் வாக்களிக்கும் உரிமைச் சட்டம் இயற்றுவதைத் தவிர்த்து அரசு இம்மாதிரியான பரப்புரைகளில் ஈடுபடுவதை நாம் கவனிக்க வேண்டும்.  ஏற்கனவே வாக்குரிமை அடிப்படை உரிமையாக உள்ளது.  கருத்துரிமை, பேச்சுரிமை கூடத் தான்  இருக்கிறது.  உயர்நீதி மன்ற உத்தரவு பெற்று கடலூரில் நடத்தப்பட்ட கூட்டம்
(22.01.2011) ஒன்றில் காவல் துறை அத்துமீறி பிரபா. கல்விமணி உள்ளிட்ட பலரை தமிழக அரசு சிறையிலடைத்திருக்கிறது .   சத்தீஸ்கர் அரசின் முயற்சியால் ராய்ப்பூர் நீதிமன்றம் மனித உரிமைப் போராளி பிநாயக் சென்னை ஆயுள் தண்டனை அளித்து மனித உரிமையை சிறைப்படுத்தியுள்ளது.



          அண்மைக் காலத்தில் விரக்தியுற்ற படித்தவர்கள் சிலரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் வாக்களிக்காமல் இருக்கிறார்கள்.  ஜனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமைப் பயன்படுத்தாமல் இருப்பது வெட்கக் கேடான, கோழைத் தனமான செயலாகும்.  என வாக்காளர் தினக் கூட்டத்தில் பேசியுள்ளார் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா.   பல்வேறு அடிப்படை உரிமைகள் பலகோடி மக்களுக்கு கிடைக்காத நிலையில் வாக்குரிமையை மட்டும் முன்னிலைப் படுத்துவதன் பின்னாலுள்ள அரசியலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.



          இந்தியக் குடியரசின் தொடக்கக் கால தேர்தல்கள் அதிக முறைகேடுகளின்றி நடைபெற்றாலும் 1970களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்கள் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாக அமைந்தன.  பீகாரில்தான் அதிக வன்முறை என்று சொல்கிற நிலைமை மாறி தற்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களால் அந்த இடத்தைத் தமிழகம் பெற்று விட்டது. 



          உச்சநீதி மன்றம் 2002இல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்,  அவரது கணவன் / மனைவி மற்றும் சார்ந்திருப்போரின் சொத்து விவரங்கள், குற்றப் பின்னணி, வங்கி இருப்பு, பெற்ற கடன்கள், கல்வித் தகுதி போன்ற விவரங்களை கட்டாயமாக தெரிவிக்க வலியுறுத்தியது.   இந்த விவரங்களைத் தெரிந்து கொள்வது வாக்காளர்களின் அடிப்படை உரிமை என உச்சநீதி மன்றம் வலியுறுத்தியது.   ஆனால் அரசியல் கட்சிகள் இதை ஏற்க மறுத்தனர்.   2003இல் உச்சநீதி மன்றம் வாக்காளர் உரிமைக்கான புதிய சட்டங்கள் இயற்றப்படும் வரை இத்தீர்ப்பு பொருந்தும் என்று உத்தரவிட்டது.



          தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி அரசு அமைத்த வி.எம். தார்க்குண்டே, தினேஷ் கோஸ்வாமி, இந்திரஜித் குப்தா ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் நிறைய பரிந்துரைகளைச் செய்திருக்கின்றன.  தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகள் / வேட்பாளர்களுக்கு நன்கொடை வழங்குதல் / பெறுதலைத் தடை செய்தல், தேர்தல் செலவை அரசே ஏற்றல் போன்ற பல பரிந்துரைகள் செய்யப்பட்டிருப்பினும் ஒன்றுமே நடக்கவில்லை.   வாக்காளர் உரிமையை நிலைநாட்ட இதையும் தாண்டி நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.



          இதில் முக்கியமானது விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்துவது ஆகும்.  இதன் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளருக்குப் பதிலாக கட்சியே போட்டியிடும்.  நாடு / மாநிலத்தில் அக்கட்சி பெறும் மொத்த வாக்கு சதவீதத்திற்கேற்ப நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  



          உதாரணமாக 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் சுமார் 45%.  பெற்ற இடங்கள் 163.  அ.இ.அ.தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் சுமார் 40%; பெற்ற இடங்கள் 69.  விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தால் தி.மு.க. கூட்டணி 105 இடங்களையும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி 94 இடங்களையும் பெற்றிருக்கும்.  இதைக் கூட கூட்டணியாக பார்க்காமல் தனித்தனி கட்சியைக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.  இதைப் போன்று அனைத்து தேர்தல்களிலும் பெற்ற வாக்கு சதவீதத்திற்கும் இடங்களுக்கும் பேரளவு வித்தியாசம் இருப்பதைக் காண முடியும்.



          இதன் மூலம் நேர்மையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்று குறை கூறலாம்.  ‘Right man in Wrong Party’ 
என்று சொல்கிறார்களே இதனால் என்ன பயன்?   தற்போதைய சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் கட்சித் தலைவருக்குத் தான் விசுவாசம் காட்டுவார்களே தவிர வாக்களித்த  மக்களுக்கு அல்ல.  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு தனித் தேர்தல் நடத்தும்போது கூட்டணித் தேர்தல் வாக்குகளைக் கொண்டு கட்சிகளை அங்கீகரிப்பது எப்படி சரியாக இருக்கும்?



          ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட சட்டமன்ற / நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் போது ஒரு தொகுதிப் பதவியை விட்டு விலகுவதால் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.  இதற்கு  ஏற்படும் செலவை பதவி விலகியவரிடமே வசூலிக்க வேண்டும்.   சோனியா காந்தி, ஜெயலலிதா போன்றோர் தொடர்ந்து இவ்வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடுவது தடை செய்யப்படவேண்டும்.



          இப்போதும் வேட்பாளர்கள் சொத்துக் கணக்கு அளிக்கிறார்கள்.  அதை பத்திரிக்கையும் வெளியிடுகின்றனர்.  அண்மையில் கூட முதல்வர் மு. கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட்டு சாதனை படைத்தார்!.   இந்தக் கணக்குகளை தேர்தல் ஆணையமோ, நீதி மன்றங்களோ சரிபார்க்கும் அதிகாரம் படைத்ததாக இல்லை.  தவறான கணக்கு அளித்து வெற்றிப் பெற்ற ஒருவரது  பதவியைப் பறிப்பதற்கு இங்கு வழியில்லை.



          ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் பதிவான வாக்குகளில் 50%க்கு குறைவாகப் பெறும்போது அவர்களுக்கிடையே மறு தேர்தல் நடத்தி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதுதான் சரியாக இருக்கும். விகிதாச்சார பிரதிநிதித்துவத்தில் இந்த சிக்கல் எழ வாய்ப்பில்லை. 



          தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இடைக்கால அரசாக செயல்படும் அரசுகள் அரசு எந்திரத்தை விளம்பரம் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தவறாகப் பயன்படுத்துவது நடைபெறுகிறது.  இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியின் அத்துமீறல்களுக்கு அளவேயில்லை.  தமிழகத்தில் நடைபெற்ற பல இடைத்தேர்தல் முறைகேடுகள் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவின் கண்டனத்திற்கு உள்ளானது.  ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை.



          வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பது கூட சிலரால் வலியுறுத்தப்படுகிறது.  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒரு முறை வாக்களிக்காதவர்களுக்கு ரூ. 1000/- அபராதம் விதிக்க வேண்டும் என்று கூட சொன்னார்.  வாக்களிக்கும் உரிமை என்பதில் வாக்களிக்க மறுக்கும் உரிமையும் சேர்ந்தே இருக்கிறது.  மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்திலேயே மேலே குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை / வாக்களிக்கவே விரும்பவில்லை என்று தனி பட்டன்கள் வைக்கப்படும் போதுதான் வாக்காளர் உரிமைகள் பாதுகாக்கப்படும். 49  ஓ -வை  படித்தவர்கள் மட்டுமே பயன் படுத்தமுடியும்.  அரசும் அரசியல் கட்சிகளும் வாக்குரிமையைப் பற்றி மட்டும் பேசும்போது நீதிமன்றங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் வாக்காளர்களின் உரிமை பற்றி பேச வேண்டியுள்ளது.



          தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவின்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது ( 24 .01 .2011 )    வாக்காளர்கள் பணம், பிரியாணி, மது போன்றவற்றிற்கு பலியாகாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்த செய்கைகள் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் கவனத்திற்கு வந்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.



          அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு (Electronic Voting Mechine) எந்திரத்தில் குளறுபடிகள் நடப்பதாகவும் அதனால் பழைய வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வலியுறுத்துகின்றன.  இந்த குற்றச்சாட்டைத் தவிர்க்க தேர்தல் ஆணையம்
மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்துடன் ஒரு பிரிண்டரை இணைத்து வாக்களித்த விவரங்களை வாக்காளர்களுக்கு ரசீதாக அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.   வாக்காளர்களுக்கு பணமளிக்கும் வேட்பாளர்கள் அவர்களது மத நம்பிக்கை சார்ந்து விளக்கேற்றி சத்தியம் வாங்குதல் போன்ற உத்தரவாதங்களைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது.  இனி இந்த ரசீதை அளித்து வாக்களித்திருப்பதை உறுதி செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படும்.  வாக்களிப்பின் ரகசியத் தன்மை அம்பலத்துக்கு வரும்.



          1986இல் வாக்களிக்கும் வயது 21லிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டது.  தற்போது 16 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.  அதற்கு முன்னதாக பெரும்பான்மையானஇன்றைய இளம் தறைமுறை சினிமா நடிகர்களிடமும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களிடமும் சரணாகதி அடைந்திருப்பதை நாம் கவனிக்க மறக்கக் கூடாது.  வளரும் இளம் தலைமுறை அரசியல் விழிப்புணர்ச்சி பெறாமல் முடங்கிப் போக நமது பாடத்திட்டங்கள் பேருதவி புரிகின்றன.   வேறெந்த மாநிலங்களைவிட தமிழகம் சின்னத்திரை,  பெரியதிரைகளால் பெரிதும் சீரழிந்துள்ளது. 

        

          தமிழக சினிமா நடிகர்கள் ஒரு படம் நடித்தவுடன் முதல்வர் பதவி மீது குறி வைக்கிறார்கள்.  அவர்களிடம் ஊடகக்காரர்கள் எப்போதும் முன் வைக்கும் ஒரே கேள்வி, எப்போது அரசியலுக்கு வருவீர்கள்? என்பதாகும்.  அவர்களும் மக்களுக்கு எதாவது செய்யவேண்டும். கூடிய விரைவில் அறிவிப்பேன் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்.   இதில்தான் தமிழ் ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன.  தந்தை பெரியார், அன்னை தெரசா, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் போன்றோர் எவ்வித அரசுப் பதவிகள் வகித்து மக்களுக்கு தொண்டாற்றவில்லை என்பதெல்லாம் இவர்களுக்கு புரியவில்லை.   இதைக் கேட்கும் ஊடகத்தாரும் அவர்களுக்கு நினைவுப்படுத்துவதில்லை.



          விடுதலைப் போராட்டக் காலங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் போன்றோர் அக்கால இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருந்தனர்.   1947ல் நாடே விடுதலைக் கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்க பிரிவினையால் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தார் காந்தி.   அடித்தட்டு தலித் மக்களின் வாழ்விற்காக தன்னுடைய படிப்பு, பதவி, உயிர் போன்றவற்றை அர்ப்பணித்தார் அம்பேத்கர்.   இதுபோன்ற காரணங்களால் இளைஞர்கள் இவர்கள்பால் இயற்கையாக ஈர்க்கப்பட்டனர். 



          1975இல் நெருக்கடி நிலையின் போது ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற சோ­சலிஸ்ட் தலைவர்கள் முன் மாதிரியாக விளங்கி தேசிய அளவில் ஒரு மாற்றத்தை உண்டாக்கினார். 1987 - 88ல் 64 கோடி போபார்ஸ் பீரங்கி பேர ஊழலை வெளிப்படுத்தி ஊழலுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி தேர்தலில் வெற்றி பெற்று  மத்தியில் ஒரு கூட்டணி அரசு வழி நடத்தினார் வி.பி. சிங்.   இன்று கூட பல்லாயிரம் கோடி மதிப்பிலான 2ஜி அலைக்கற்றை ஊழல்,  ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் என ஊழல்கள் அணிவகுத்து நிற்கின்றன.   ஆனால் இவற்றிற்கு எதிரான இயக்கம் நடத்த எந்த ஒரு தலைவரையும், இயக்கத்தையும் காண முடியவில்லை.



          இளைஞர் சமூகம் கிரிக்கெட், சினிமா ஆகியவற்றில்  மூழ்கியுள்ளது.  
கிரிக்கெட், சினிமாக்காரர்கள்  தங்களை ஆண்டால் போதும் என்ற எண்ணமே இளைஞர் சமூகத்திற்கு  இருக்கிறது.  இவர்கள் இல்லாவிட்டால் தெளிவான அரசியல் புரிதல் இல்லாத அப்துல்கலாம்களிடம் சரணடைகிறார்கள்.   வயது முதிர்வு காரணமாக செயல்பட முடியாமல் இருக்கும் அடல் பிகார் வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நினைக்கும் இளைஞர் கூட்டம் இருப்பதைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று கூட தெரியவில்லை.   இவர்களுக்கு ராகுல் காந்தி போன்ற இளவரசர்களும் நாட்டை வழி நடத்தப் போதுமானவர்கள்.



          நேர்மையான, எளிமையான தலைவர்களுக்கு முன்மாதிரியாக கு. காமராஜ், நிருபன் சக்கரவர்த்தி ஆகியோரைத்தான் திரும்பத் திரும்ப கூறி வருகிறோம்.   ஏன் இந்த மாதிரி தலைவர்கள் பலர் உருவாகவில்லை?.  அரசும் சமூக அமைப்பும் சுயநல வர்ககங்கள் உருவாவதைத் தானே ஆதரிக்கின்றன.



          அரசு ஊழியர்களின் ஊதியத்தை விட அதிகமாக பெற வேண்டும் என்பது மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கை.   அதற்கென அமைக்கப்பட்ட குழு ரூ. 80000/- அளிக்க பரிந்துரை செய்தது.  ஆகஸ்டு 2010இல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.50000/- ஆக உயர்த்தப்பட்டது.   இதைத் தவிர தொகுதிப் படி மாதம் ரூ,40000/-, அலுவலகப் படி ரூ. 2000/- இது போக பயணப்படி, தொலைபேசிப்படி, குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு தொடர்வண்டிப் பயணம் என ஏகப்பட்ட வசதிகள்,  மேலும் ஓய்வூதியம் ரூ. 20000/-.  இதைப் போல தமிழகத்திலும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் உயர்த்தப்பட்டது.   நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஊதிய உயர்வை எதிர்த்தவர்கள் இடதுசாரிகள் மட்டுமே.   இவற்றிற்கு மேலாக பல கோடி ரூபாய்கள் தொகுதி மேம்பாட்டு நிதி என ஓதுக்கப்படுகிறது.  இதில் ஏகப்பட்ட ஊழல்கள்.   இவற்றை மத்திய தணிக்கைத் துறை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறது.  பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் மறுமுறை பொறுப்பேற்றதும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.  இதிலிருந்து இதன் அத்துமீறல்களை நாம் உணர முடிகிறது.  நாட்டு மக்களனைவரும் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க நாடாளுமன்ற மலிவு விலைக் கேண்டீன் விலை விவரங்கள் சமீபத்தில் நாளேடுகளில் வெளிவந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   அந்த விலைகளைப் பார்க்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களோ என ஐயுற வேண்டியுள்ளது.



          உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு அளிக்கப்பட்ட போதிலும் சட்ட மன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு அளிக்கும் மகளிர் மசோதா மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.   மக்களவையில் நிறைவேற்றாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகிறது.  அம்மசோதாவில் பெண்களுக்கு சாதிவாரி ஒதுக்கீடு  வேண்டுமென்ற கோரிக்கை முன் வைக்கப்படுவதால் தாமதமாகிறது என்று போலியான காரணம் சொல்லப்படுகிறது.    அரசு இம்மசோதாவை தற்போதைய வடிவிலோ அல்லது திருத்தங்கள் செய்தோ நிறைவேற்றத் தயாரில்லை என்பதே உண்மை.   சரிபாதி வாக்காளர்களின் உரிமையையும் சட்டமியற்றுவதில் பெண்களின் பங்கையும் நிராகரிப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.



          இவ்வளவு குளறுபடியான ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு, வாக்காளர்களின் உரிமைகளை மிதித்து வாக்குரிமையை மட்டும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அது தொடர்பான பரப்புரைகளில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் பலன் தராது.  வாக்குரிமையை கட்டாயமாக்கி சட்டமியற்றுவது எந்தப் பலனையும் அளிக்காது என்பதை அரசே உணர்ந்துள்ளது.  விகிதாச்சார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட முறையான தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக அமல் செய்வதே ஓரளவு பலன் தருவதாக அமையும். 

எம்.வி. வெங்கட்ராம் : - தமிழிலக்கியத்திற்கு ஒரு சிறுபான்மை சமூக பங்களிப்பு-மு.சிவகுருநாதன்

எம்.வி. வெங்கட்ராம் : - தமிழிலக்கியத்திற்கு ஒரு சிறுபான்மை சமூக பங்களிப்பு  -மு.சிவகுருநாதன்

 (சாகித்திய அகாதெமி 22 ஜனவரி 2011 சனியன்று கும்பகோணம் ஜனரஞ்சனி சபாவில் எம்.வி.வெங்கட்ராம் படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கை நடத்தியது.  அது குறித்த சிறிய பதிவு)
 






          எம்.வி. வெங்கட்ராமுடனான தனது சந்திப்பு, நட்பு பற்றியும் சொல்லி அவரது எழுத்துக்களை சிலாகித்து பேசியவர்களாக வே.மு. பொதியவெற்பன், தேனுகா, தஞ்சை ப்ரகாஷ் ஆகியோர்களை பட்டியலிட்டு எம்.வி.வி. பற்றி இன்னமும் அதிக தகவல்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.  நேரம் கிடைக்கும்போது இடைஇடையே அச்செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று சொல்லி ஒரு நீண்ட அறிமுக உரையை இராம. குருநாதன் நிகழ்த்தினார்.



          பின்னர் பேச வந்த சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் எம்.வி.வி.யின் நாவலைப் படிக்காமல் சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதப்பட்ட நாவல் என்று விமர்சனம் எழுதியதை குறிப்பிட்டு பேசினார்.  அ. மார்க்ஸ் போன்றவர்கள் தமிழிலக்கியத்தை தலித் இலக்கியம், செட்டியார் இலக்கியம், முதலியார் இலக்கியம் என்றெல்லாம் சாதி ரீதியாக வகைப்படுத்தி வைத்துள்ளனர் என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.  தமிழில் இப்படியெல்லாம் அணுகும் போக்கு உள்ளது என்பதை ‘கண்டுபிடித்து’  வெளிப்படுத்தினார்.



          மேலும் இந்திய இலக்கிய சிற்பிகள் நூல் வரிசையில் எம்.வி.வி.யைப் பற்றிய நூல் ஒன்றை தேனுகாவை எழுதித் தருமாறும் அதை சாகித்திய அகாதெமி கண்டிப்பாக வெளியிடும் என்றும் அறிவித்தார்.  எம்.வி.வி.யின் நாவல்கள் மற்றும் படைப்புகள் பற்றி வந்துள்ள விமர்சனங்களை குறிப்பிட்டு சிற்பி பேசி முடித்தார்.



          மைய உரையாற்றிய சாகித்திய அகாதெமி பொதுக்குழு மற்றும் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் இரா. மோகன், பி.எஸ். ராமையா எப்படி எம்.வி.வி.க்கு வழிகாட்டினார் என்பதைத் தெரிவித்தார்.   தி.ஜா., கு.ப.ரா., க.நா.சு. போன்ற சமகால எழுத்தாளர்களோடு எம்.வி.வி.யைத் தொடர்புப்படுத்தி தனது பேச்சை நிறைவு செய்தார்.



          சிறப்பு விருந்தினர்களின் உரைக்குப் பிறகு நன்றியுரை சொல்ல வந்த ரவி சுப்பிரமணியன் எம்.வி. வெங்கட்ராமுடன் உள்ள தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.  அவரைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்கு நிறைய செலவு பிடிக்கும்.  எனவே சாகித்திய அகாதெமி உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



          முதல் அமர்வில் தலைமையேற்ற அ. மார்க்ஸ், கும்பகோணத்தில் நாங்கள் நெருங்கி உறவாடிய எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு என்றும் அவர் அளவிற்கு இல்லையென்றாலும் எம்.வி.வி.யுடனும் தொடர்பு இருந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார்.  இவரது படைப்புகளில் ‘காதுகள்’ தம்மை ஈர்க்கவில்லையயன்றும் ‘நித்ய கன்னி’, ‘வேள்வித் தீ’  போன்றவற்றை சிறந்த படைப்புகளாக பார்ப்பதாகவும் கூறினார்.


          எம்.வி.வி. பாரதத்தின் மேல் அதிக ஈடுபாடு கொண்டவர்.  தமிழ்ச் சூழலில் கம்பராமாயணம் பேசப்பட்டதைப் போல வியாசபாரதமோ, நல்லாபிள்ளை பாரதமோ பேசப்பட்டதில்லை.  பாரதத்தின் மீது அதீத பற்றுடைய எம்.வி.வி. முயன்றிருந்தால் தமிழுக்கு ஒரு அருமையான பாரதம் கிடைத்திருக்கும் என்றார்.



          1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழலில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எம்.வி.வி., அத்வானியை சந்தித்ததையும் குறிப்பிட்டு இந்துத்துவத்துடன் இணக்கமாக இருந்த எழுத்தாளர் என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொன்னார்.



          தமிழ்நாட்டில் சிறுபான்மை சமூகமான செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த எம்.வி.வி.க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.  இன்றும் கூட செளராஷ்டிரா மொழிக்கு வரி வடிவம் இல்லை.  அவர்களது மொழி கூட பலரால் கிண்டல் செய்யப்படுகிறது.  இவர் தனது இறுதிக் காலத்தில் செளராஷ்டிரா மொழிக்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.  இந்தப் பின்னணியில் அவரது அடையாள அரசியலையும் இந்துத்துவத்தின்பால் அவர் சாய நேர்ந்ததையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.



          இந்த அமர்வில் பேசிய பேரா. மணி எம்.வி.வி.யின் படைப்புகளில் 7 மட்டும் அசலானது; அவர் எழுதியது.  எஞ்சியவை அனைத்தும் பிற மொழிகளிலிருந்து பெயர்க்கப்பட்டவை அல்லது தழுவப்பட்டவை.  இதை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.  என்னுடைய உயிர் வாழ்க்கைப் போராட்டத்திற்காக நான் இவற்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.  பதிப்பகத்தார் மொழி பெயர்ப்பு அல்லது தழுவல் என்பதை போட வியாபார நோக்கங்களுக்காக மறுத்து விட்டனர்  என்றும் எம்.வி.வி. சொன்னதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  அவர் இறந்து விட்டார் என்பதற்காக இதைச் சொல்லவில்லை என்றும் அவர் என்னிடம் நேரில் சொன்னவற்றையே சொல்கிறேன் என்றும் அந்த 7 நூற்களையும் பட்டியலிட்டார்.  இரா. மோகனின் துணைவியார் நிர்மலா மோகன் ‘வேள்வித்தீ’   பற்றி உரையாற்ற ‘காதுகள்’ பற்றி மதியழகன் பேசினார்.



          மதிய உணவுக்குப் பிறகு இரண்டாவது அமர்வில் தலைமையேற்ற ந. விச்வநாதன், பேரா.மணியின் தழுவல் கருத்தை முற்றிலும் நிராகரித்தார்.   இதை என்னால் உறுதியாக மறுக்க முடியும்.  அதற்கான இடம் இதுவல்ல என்றார்.  எம்.வி.வி.யின் படைப்புகளுக்கு சாதி, மதம் போன்ற அடையாளங்களை அளிப்பது தவறு என்றார்.  தான் எம்.வி.வி.யுடன் கொண்ட நட்பு மற்றும் அவரது படைப்புகள் பற்றி விரிவாகப் பேசினார்.



          இந்த அமர்வில் அமிர்தம் சூர்யா (என்று நினைக்கிறேன்) எம்.வி.வி.யின் நாவலை (‘நித்ய கன்னி’யாக இருக்கலாம்) பக்கம் பக்கமாக படித்துக் காட்டி, “மரங்கள் ஒன்றோடொன்று புணர்ந்து....” என்றெல்லாம் சொல்லி சுகி சிவத்திற்கு இணையாக எம்.வி.வி.யின் கற்பனைத் திறத்தை வியந்து கொண்டேயிருந்தார்.  அடுத்து வியாகுலன் கட்டுரை எழுதி வந்து காத்திருந்தார். 



          வியாகுலன் கட்டுரை வாசிப்பதற்கு அமிர்தம் சூர்யா விடுவதாக இல்லை.  அதற்கு மேல் அரங்கில் இருக்க பொறுமையின்றி கிளம்பி வெளியேறி விட்டேன்.  அதனால் வியாகுலன் மட்டுமல்ல திருப்பூர் கிருஷ்ணன், தேனுகா, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி போன்ற பலரின் உரைகளைக் கேட்க வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது.



          இந்த அமர்வுகளை ஏற்பாடு செய்யும் ‘சாகித்திய அகாதெமி’ போன்றவை ஏன் இவ்வாறு பணத்திற்கு செலவுக் கணக்கு காட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி அங்குள்ளவர்கள் யோசிக்க வேண்டும்.   ஒரே நாளில் எந்த விதமாக கால வரையறை ஏதுமின்றி 22 பேர்கள் பேச வேண்டும் என நினைப்பது எவ்வகையான நியாயம் என்று தெரியவில்லை.  ஒவ்வொருவரும் 30 நிமிடங்களுக்கு மேலாக எடுத்துக் கொள்ளும்போது 10 மணி நேரத்திற்கு மேல் ஒரு நாள் அரங்கை எப்படி நடத்துவது?  இதை பார்வையாளர்கள் மீதான வன்முறையாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.   ஒரு நாள் அமர்வில் 10 பேர் பேசுவதே போதுமானது.   இரண்டு நாள் அமர்வை ஒரே நாளில் திணிப்பது பார்வையாளர்களை விரட்டவும் தூரப்படுத்தவுமே பயன்படும்.



          காலையில் அமர்வு தொடங்கிய போத இருந்த 50 பேரில் மதியம் 20 பேர்தான் மீதம் இருந்தனர்.  முடிக்கும்போது 10 பேராக இருந்திருக்கக் கூடும்.   எம்.வி.வி.க்காக வந்திருந்த அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உரைகளில் அரண்டு பாதியில் வெளியேறி விட்டனர்.  கூட்டமே இல்லாமல் அமர்வுகளை ஏற்பாடு செய்வது முன்பே சொன்னது போல செலவுக் கணக்கு காட்டத்தான் பயன்படுமே தவிர வேறு எந்த பயனும் கிட்டாது.



          கும்பகோணத்தில் இரு அரசுக் கல்லூரிகளும் பல தனியார் சுயநிதிக் கல்லூரிகளும் உள்ளன.  அவர்களுடன் சாகித்திய அகாதெமி இணைந்து இதுமாதிரியான கருத்தரங்குகளை அங்குள்ள தமிழ்த் துறை மாணவர்களை மட்டுமாவது சேர்த்து ஒரு பெரிய அரங்கிலோ அல்லது கல்லூரி வளாகத்திலோ நடத்தியிருந்தால் எம்.வி.வெங்கட்ராம் பற்றிய சில செய்திகளாவது அவர்களைச் சென்றடைந்திருக்கும்.   ஒரு சிறு குழுக் கூட்டம் போல் தவிர்த்து பரவலாக சென்றடைய ஏதுவான முயற்சிகளை இனிமேலாவது சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு எடுக்க வேண்டியது அவசியம்.

 

ஞாயிறு, ஜனவரி 23, 2011

மீனவர்கள் மற்றும் அகதிகளுக்காக பேசும் மக்கள் சினிமா -மு.சிவகுருநாதன்

மீனவர்கள் மற்றும் அகதிகளுக்காக பேசும் மக்கள் சினிமா  -மு.சிவகுருநாதன் 









          ஜெகதாப்பட்டினம் மீனவர் பாண்டியன் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை, வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல், ராமேஸ்வரம் மீனவர்களின் 400 விசைப்படகுகளை 4 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்கள் மற்றும் வலைகளைப் பிடுங்கிக் கொண்டு விரட்டியடித்தனர் - என்பதெல்லாம் அண்மையில் வந்த தினசரிச் செய்திகள்.  ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் பாதிக்காத குடும்பங்களே இல்லை.  அதிகபட்சமாக என்ன நடக்கும்?  முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவார்.  அத்துடன் முடிந்து போன 

விஷயத்தை நாம் மறந்து வேறு வேலைக்குப் போயிருப்போம்.



            கவிஞர் லீனா மணிமேகலையின் இயக்கத்தில் எழுத்தாளர் ஷோபா சக்தியின் வசனத்துடன் மீனவர்கள் மற்றும் அகதிகள் பிரச்சினைகளைப் பேசும் ‘செங்கடல்’ (The Dead Sea ) என்ற திரைப்படம் சென்சார் போர்டால் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.   இலங்கை அரசை இப்படம் விமர்சிக்கிறது என்ற காரணத்தைக் காட்டி தணிக்கைத் துறையால் நிராகரிக்கப்பட்ட செங்கடல் திரைப்படம் தனுஷ்கோடி அருகிலுள்ள கப்பிப்பாடு கிராமத்தைக் கதைக் களனாகக் கொண்டு தனுஷ்கோடி, ராமேஸ்வரம் வாழ் ஏன் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள், இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினைகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.



            தமிழில் அரசியல் படங்களுக்கான இடம் வெறுமனே உள்ளது.  அதுவும் சமகால அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்கும் படங்கள் வருவதே இல்லை.   அப்படி வந்தாலும் அதில் செய்யப்படுகிற சுய தணிக்கை மிகவும் மோசமானதாக இருக்கும்.  பெரியார் படமெடுக்கக் கிளம்பியவர்கள் சென்சார் போர்டுக்கு முன்னதாக மு. கருணாநிதியின் ஒப்புதலைப் பெற்றதை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.  ஈரானியப் படங்களைப் போல சமகால அரசியலை வெளிப்படுத்தும் படங்களுக்கு செங்கடல் முன்னோடியாக அமையக்கூடும்.



            இப்படத்தை லீனா மணிமேகலை இயக்கியுள்ளார்.  தயாரிப்பு - ஜானகி சிவக்குமார்; திரைக்கதை - சி. ஜெரால்ட், ஷோபாசக்தி, லீனா மணிமேகலை; வசனம் - ஷோபாசக்தி; ஒளிப்பதிவு -  எம்.ஜெ. இராதாகிருஷ்ணன்.  நடிகர்கள் :-  லீனா மணிமேகலை, ஷோபா சக்தியுடன் கப்பிப்பாடு மீனவக் குடும்பங்கள் மற்றும் மண்டபம் அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள்.



            கடலோரப் பாதுகாப்பு, கடற்கரை மேலாண்மைத் திட்டங்கள், சுனாமி மேம்பாட்டுப் பணிகள் என்ற பல்வேறு காரணங்களால் மீனவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரங்கள் அனைத்தும் ஒரு புறம் பறிக்கப்பட்ட நிலையில் இந்திய கடற்படை, இலங்கை கடற்படை, தமிழ்நாடு காவல்துறை என பல அதிகாரங்களுக்கிடையில் சிக்கி சீரழியும் மீனவர்களின் வாழ்க்கையை இதுவரை யாரும் இவ்வளவு நேர்த்தியாகவும் உண்மையாகவும் காட்டியதில்லை.



          இதைப் போலவே இலங்கை, இந்திய ராணுவங்கள், கப்பற்படைகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்கள்,  தமிழ்நாடு போலீஸ் போன்ற பல தரப்பின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை சொல்லி மாளாது.  வசதியுள்ள இலங்கைத் தமிழர்கள் போருக்குப் பயந்து அய்ரோப்பா, கனடா என்று பயணமாக, ஏழைத் தமிழர்கள் வேறு வழியின்றி கள்ளத் தோணி மூலம் பூர்வீகத் தாயகமான தமிழ்நாட்டை வந்தடைய வேண்டிய அவலம், இது அவர்களுக்கு விருப்பமில்லாத நிலையிலும் உயிர் வாழ்க்கைக்கான போராட்டத்தின் ஒரு கண்ணியாகிறது. 



            தமிழக மீனவர்களும், இலங்கைத் தமிழ் அகதிகளும் தம் உயிர்வாழ்க்கைப் போராட்டத்தில் ஒன்றிணையும் புள்ளியாக தனுஷ்கோடி உள்ளது.  அப்பகுதியில் மையம் கொண்ட கதையானது வேறு ஒருவர் எடுத்திருந்தால் ஒரு காதற்கதையாக சுருங்கிப் போயிருக்க வாய்ப்பு உண்டு.  ஆவணப்பட இயக்குநராக வரும் லீனா மணிமேகலை எடுக்கும் ஆவணப் படக்காட்சிகள், அவர் படம் எடுப்பதைத் தடை செய்யும் காவல்துறையின் செயல்பாடு வழியே அகதிகள், மீனவர்கள் இன்னல்கள் பேசப்படுகின்றன.  இதன் காரணமாக இப்படம் சினிமா என்பதையும் மீறி டாக்குமெண்டரி தன்மையைப் பெற்று விடுகிறது.  முன்பே சொன்னது போல் தமிழ் சினிமாக்களின் வழக்கமான பார்முலாவைக் கையாண்டிருந்தால் மூன்றாம்தர காதல் கதையிடம் சரணடைய வேண்டியிருக்கும்.

 

              ஆனாலும் கதாநாயகன் இல்லாத தமிழ்ப்படம் பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது.இப்படத்தில் பல குரல்கள் பேசப்பட்டாலும் லீனாவே கதாநாயகன் இடத்தைப் பிடித்துக்கொள்கிறார்.ஆவணப்பட இயக்குநராக படத்தில் வரும் லீனா திரையைமுழுதும்ஆக்கிரமிக்கிறார். ஈழப்படுகொலையை எதிர்த்து தில்லியில் நடைபெற்ற போராட்டம்,ஆவணப்பட இயக்கம்,போலீஸ் விசாரணை,மீனவர்களிடம் காட்டும் பரிவு என எல்லாவற்றிலும்  லீனாவே ஆக்கிரமித்து தமிழ்ப்பட  கதாநாயக நிலையை அடைந்துவிடுகிறார்.இது இப்படத்தின் குறையாகப்படுகிறது.

            எழுத்தாளர் ஷோபா சக்தியின் இலங்கை வட்டார வழக்கு தமிழ் வசனங்கள் அசலாக ஒலிக்கின்றன. தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற போலியான இலங்கைத் தமிழுக்கு ஆட்படாமல் போனதற்கு லீனாவை ஷோபா சக்தியையும் பாராட்டலாம்.



            இடையிடையே வரும் கவிதைகளும் கதை சொல்லலும் நம்மை நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்கின்றன.  இந்த உத்தி படம் முழுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  லீனாவின் வளர்ப்பு பிராணியாக ஆமை கூட கவிதையாக வந்து போகிறது.  “ஒரு மொழி என்றால் ஒரு நாடு; இரு மொழி என்றால் இரு நாடு” என்று சொல்வதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.   தமிழை ஒரு மொழி என்று மட்டும் சொல்லிவிட முடியுமா என்ன?  முஸ்லீம்கள், தலித்கள், வெள்ளாளர்கள், மலையகத் தமிழர்கள் போன்றவர்களை தமிழால் ஒன்றிணைக்க முடியவில்லையே!.மொழி மட்டுமல்ல மதம் கூட நாட்டை ஒன்றிணைக்க முடியாது என்பதற்கு நமக்கு பங்களாதேஷ் உதாரணம் ஒன்று போதும்.



            இலங்கை அரசை விமர்சிக்கும் படம் என்று சொல்லும் தணிக்கைக் குழு இப்படத்தை சரியாகப் பார்க்கவில்லை என்றே படுகிறது.  இப்படம் யாரைத் தான் விமர்சிக்கவில்லை?  இந்திய, தமிழக, இலங்கை அரசுகள், ராணுவம், போலீஸ், கடற்படை, இந்திய - தமிழக அரசியல் கட்சிகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளி இயக்கங்கள், அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டம், பத்திரிக்கையாளர்கள் போன்ற யாரும்,எதுவும் விட்டுவைக்கப்படாமல் கிண்டலுக்கும் விமர்சனத்திற்கும் உண்டாக்கப்படுகின்றனர்.



          பள்ளிக்கூடத்திற்கு அழைக்கும் தொண்டு நிறுவன மற்றும் ஆசிரியர்களை நோக்கி மீனவச் சிறுவர்கள் செய்யும் பகடி மிகவும் ரசிக்கதக்கதாக உள்ளது.   அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் துயரங்களை அவர்கள் கடந்து செல்வதற்கு இந்த மாதிரியான பகடிகள் பேருதவி புரிகின்றன.



            இப்படத்தில் ஷோபா சக்தியும் அகதியாக வந்து போயியுள்ளார்.  ஷோபா சக்தி குடும்பத்தாரிடம் நடைபெறும் விசாரணையில் தேசிய கீதம் பாடச் சொல்லி கேட்டு சிறுமி
ஜன கன மன... என எழுந்து நின்று பாடத் தொடங்குவதிலிருந்து உண்மையை அறிந்து கொள்ள போலீஸ் செய்யும் புத்திசாலித்தனத்தை விட அவர்களது குயுக்தி விசாரணை உத்திகளே நம் கண்முன் விரிகின்றன.



            ‘செங்கடலில்’ நடிப்பதற்கு நடிகர்களைத் தேடி அலையாமல் மீனவர்களையும் அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களைத் தேடிப் பிடித்து மிகுந்த சிரமத்திற்கிடையில் நடிக்க வைத்துள்ளனர்.  சிற்சில குறைபாடுகள் இருப்பினும் இத்தகைய முயற்சிகளை மக்கள் சினிமா என்று அழைப்பதில் தவறில்லை.



            மீனவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொனி படத்தில் உள்ளது.   ஆயுதம் வழங்கினால் மட்டும் மீனவர்கள் உயிரைக் காக்க முடியாது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.என்னதான்
ஆயுதம் வழங்கினாலும் அரசுகளின் ஆயுதங்களுடன் சாமானியர்கள் போராடமுடியாது. நமது போராட்டங்கள் ஆயுதமற்ற வழியில் மட்டுமே இருக்கமுடியும்.


        ஜனநாயகம், கருத்துரிமை, சுதந்திரம் என்றெல்லாம் கூறிக் கொண்டுள்ள ஒரு நாட்டில் அற்பமான காரணங்களைக் காட்டி ‘செங்கடல்’ போன்ற சினிமாவைத் தடை செய்வதன் மூலம் அடித்தட்டு விளிம்பு நிலைக் குரல்களைத் தடுத்து விட முடியாது.



            லீனாவின் கவிதைகள் ஆபாசமானவை என்று கூறி இந்து மக்கள் கட்சி, ம.க.இ.க. போன்றவை ஓரணியில் திரண்டதை நாம் மறந்திருக்க முடியாது.  அப்பிரச்சினையில் லீனா என்ற தனிநபரை முன்னிலைப்படுத்தி பலர் கருத்துரிமை ஒடுக்கப்படுவதைக் கண்டும் காணாமல் மவுனம் காத்தனர்.  ‘செங்கடல்’ பிரச்சினையிலும் லீனா என்ற ஒரு தனி நபரை மையப்படுத்தாமல் மீனவர்கள் மற்றும் அகதிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையைப் பேசும் மக்கள் சினிமாவை பொதுவெளிக்கு அனுமதிக்க மறுப்பது கருத்துரிமைக்கு எதிரானது என்பதால் அனைவரும் சென்சார் போர்டின் செயலைக் கண்டிக்க முன்வர வேண்டும்.


(11.01.2011 அன்று சென்னையில் ‘செங்கடல்’ Preview  பார்த்த பிறகு எழுதப்பட்டது)

 

‘வெண்மணி’ காலாண்டிதழ் -மு.சிவகுருநாதன்

‘வெண்மணி’ காலாண்டிதழ்    -மு.சிவகுருநாதன் 

 



          “சட்டம், அரசு,  நீதி, நிர்வாகம் என எல்லா வழிகளிலும் மறித்து நிற்கின்ற சாதிக்கும் அதன் வெளிப்பாடான தீண்டாமைக்கும் எதிரான - செங்கொடி இயக்கத்தின் துணை கொண்டு - மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளைத் தாங்கி களம் காண்பது” என்ற கொள்கைப் பிரகடனத்துடன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ‘வெண்மணி’ காலாண்டிதழ் வெண்மணிப் படுகொலையின் நினைவு நாளில் வெளியாகியிருக்கிறது.

          

            கட்டுரைகள், கவிதைகள், குறிப்புகள், அம்பேத்கர் பட விமர்சனம் என 42 பக்கங்கள் விரியும் இவ்விதழ் அடித்தட்டு தலித் மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைவதில் மகிழ்ச்சி.   வருகின்ற இதழ்கள் இன்னும் காத்திரமான கட்டுரைகள், தகவல்கள் நிரம்பியதாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.



            ‘நோக்கமும் பயணமும்’ என்ற பி. சம்பத்தின் கட்டுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயல்பாட்டை விளக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.   ராஜாராம் மோகன்ராய் போன்றவர்களை சமூக சீர்திருத்தப் போராளிகள் பட்டியலில் சேர்ப்பது எந்த அளவிற்கு பொருந்தும் என்பது விளங்கவில்லை.



            கடந்த மூன்றாண்டுகளாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகத்தின் 22 மாவட்டங்களில் 1845 கிராமங்களில் தீண்டாமை குறித்த ஆய்வுகள் நடத்தி 85 விதமான தீண்டாமைக் கொடுமைகளையும் 23 விதமான வன்கொடுமைகளையும் கண்டறிந்து வெளிப்படுத்தியதை பாராட்டாமல் இருக்க முடியாது.   இத்தகைய தீண்டாமை வடிவங்கள் இவ்விதழ்களில் வெளியிடப்படவேண்டும்.  இன்று தீண்டாமை மிகவும் பூடகமான முறையில் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுவது பலபேர் அறியாத ஒன்றாக இருக்கிறது.



            அண்ணல் அம்பேத்கர் குறித்த இரா. அதியமானின் கட்டுரை போன்ற  தொடக்கநிலை கட்டுரைகளைத் தவிர்த்து, விரிவான வழியில் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களை அறிமுகம் செய்வது இன்றைய இளம் தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும்.



            உத்தப்புரம் குறித்த க. சுவாமிநாதனின் கட்டுரை, அருந்ததியர் நிலை மற்றும் உள் ஒதுக்கீடு பற்றி கே. சாமுவேல்ராஜ் கட்டுரை போன்றவை சமூகத்தின் இன்றைய அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுடன் சமூகத்தின் சாதியபிமானத்தையும் வெளிப்படுத்துகிறது.



                        வன உரிமைச் சட்டம் - 2006ஐ செயல்படுத்தாமல் பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பறிக்கும், கேவலமான ஆடு திருடும் தொழிலில் ஈடுபடும் அரசின் வனத்துறையின் அத்துமீறலை ‘ஆடு திருடவா அதிகாரம்?’ என்ற பெ. சண்முகத்தின் கட்டுரை அம்பலப்படுத்துகிறது.



            வெண்மணிப் படுகொலையின் தீர்ப்பை மயிலை பாலுவின் கட்டுரை விமர்சிக்கிறது.   இந்தியாவில் 2001 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பார் சுமார் 17 கோடி பேர் இருக்கின்றனர்.   இம்மக்களுக்காக அமல்படுத்தப்படும் துணைத் திட்டங்களினால் பட்டியலின மக்கள் நேரடியாக பலனடையும் விதமாகவும், பிற பிரிவு மக்களுடன் சமத்துவமாக்கும் விதமாகவும் இல்லை என்பதை  த. நீதிராஜனின் கட்டுரை புள்ளி விவரங்களுடன் அளிக்கிறது.



            அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் பற்றிய சைதை ஜெ-வின்  திரை விமர்சனக் கட்டுரை அத்திரைப்படத்தின் நல்ல அம்சங்களை எடுத்துரைக்கிறது.  அம்பேத்கர் மூலம் இந்திய வரலாற்றின் மாற்றுச் சிந்தனையை படம் பார்க்கும் அனைவர் மனத்திலும் உருவாக்கும் என்பது நடந்தால் நன்றாக இருக்கும்.



            அருந்ததிய இனத்தைச் சேர்ந்த விடுதலை வீரர் ஒண்டி வீரனை மிகச் சுருக்கமாகவேனும் அறிமுகம் செய்கிறது கு. ஜக்கையனின் கட்டுரை.  ஆதவன் தீட்சண்யாவின் கவிதை நன்றாக இருக்கிறது.  சிதம்பர ரகசியங்களை அம்பலமாக்கி கடவுள் நந்தனோடு சேர்ந்து மாட்டுக்கறி உண்பதும் அவருக்கு நந்தன் அடைக்கலமளிப்பதும் மெச்சும்படியாக உள்ளது.



            இந்த இதழின் சிறப்பு அம்சமாகப்படுவது ‘பட்டியலின மக்களுக்கான துணைத் திட்டம் வரைவு கோரிக்கை சாசனம்’ ஆகும்.  1979இல் சிறப்பு உடன்கூறு திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு 2007 -ல் பட்டியலின மக்களுக்கான துணைத்திட்டம் என்று பெயர் மாற்றம் பெற்ற இத்திட்டம் செயல்படாமல் முடங்கியிருக்கும் நிலையை எடுத்துக்காட்டி இத்திட்டம் சிறப்பாக செயல்பட 10 பரிந்துரைகளையும் இச்சாசனம் செய்கிறது.



            இனிவரும் இதழ்கள் இன்னும் அதிக வீச்சான, கருத்தாழமிக்க கட்டுரை மற்றும் படைப்புகளை ‘வெண்மணி’ கொண்டு வரும் என்ற நம்பிக்கை உண்டாக்குகிறது இந்த இதழ்.



நன்கொடை :ரூ 10
ஆண்டு சந்தா :ரூ 40
தொடர்பு முகவரி:
வெண்மணி காலாண்டிதழ்,
c /o பாரதி புத்தகாலயம்,
421 -அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-600018 .
செல்: 9443545398
           9445419748
e.mail:venmani1968@gmail.com

பிநாயக் சென்:- துரத்தும் அநீதி -மு.சிவகுருநாதன்

பிநாயக் சென்:- துரத்தும் அநீதி     -மு.சிவகுருநாதன் 





          டிசம்பர் 24, 2010 அன்று சத்தீஸ்கர் மாநில ராய்ப்பூர் நீதிமன்றம் உலகப் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி பிநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியது.  தேசத் துரோகம், தேசத் துரோக சதி ஆகிய குற்றப்பிரிவுகளின் அடிப்படையில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 124(A), 120(B) சத்தீஸ்கர் மாநில மக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்படி டாக்டர் பிநாயக் சென், மாவோயிஸ்ட் சித்தாந்தியான நாராயண் சன்யால், கொல்கத்தா வர்த்தகர் பியூஷ் குஹா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாக நீதி மன்றம் அறிவித்தது.   “பயங்கரவாதிகளும் மாவோயிஸ்டுகளும் துணை ராணுவப் படைகளையும் அப்பாவி பழங்குடி மக்களையும் கொன்று குவிக்கிறார்கள்.   இதனால் சமூகத்தில் அச்சமும் பயங்கரவாதமும் பரவுகிறது; ஒழுங்கின்மையும் அமைதியின்மையும் ஏற்படுகிறது.  எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ள முடியாது” என்று நீதிமன்றம் சொல்கிறது.



            சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் சித்தாந்தியான நாராயண் சன்யாலை அவரது குடும்பத்தார் கேட்டுக் கொண்டதற்கிணங்க மருத்துவ சிகிச்சைக்காக காவலர்கள் முன்னிலையில் 30 தடவைக்கு மேல் சந்திக்கிறார்.  அப்போது சிறையிலிருந்த சன்யாலிடமிருந்து கடிதங்கள், கட்டளைகளை மாவோயிஸ்ட்களிடம் சேர்த்ததாகவும் இம்மூவரும் மாவோயிஸ்ட்டுகளுக்கு நெட்வொர்க் ஏற்படுத்தினர் என்பதே சத்தீஸ்கர் போலீசின் வாதம்.  இவ்வழக்கு தொடர்பாக டாக்டர் பிநாயக் சென் கடந்த 2007 மே 14-ல் கைது செய்யப்பட்டு பிணையில் வருவதற்கு 2 ஆண்டுகள் போராட நேரிட்டது.  அப்போது அவரை விடுதலை செய்ய உலகளவில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



            டாக்டர் பிநாயக் சென் மற்றும் நாராயண் சன்யாலுடன் கொல்கத்தாவில் தான் வைத்திருக்கும் தொழிற்சாலைக்கு பீடி இலைகள் வாங்க அடிக்கடி சத்தீஸ்கர் செல்லும் வர்த்தகர் பியூஷ் குஹாவும் இணைக்கப்பட்டு மாவோயிஸ்ட்டுகளுக்காக ஒரு வலையமைப்பை உருவாக்கி தேசத் துரோக குற்றத்தில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு வாதிட்டது.



            இதற்காக முறைப்படி அனுமதி பெற்று அதிகாரிகள் முன்பு நடந்த சிறை சந்திப்புகள், போலியாக தயாரிக்கப்பட்ட கடிதங்கள், Indian Social Institute என்ற அமைப்புக்கு  சென்னின் மனைவி இலினா சென் அனுப்பிய மின்னஞ்சலை பாகிஸ்தான் உளவு அமைப்பான அய்.எஸ்.அய். என்றெல்லாம் இந்த வழக்கை புனைந்தது காவல்துறை.   நீதிமன்றம் ஆதாரங்கள், சாட்சியங்களை ஆய்வுக்குட்படுத்தாமல் சமூகத்தில் அச்சம் நிலவுவதால் பெருந்தன்மை காட்ட முடியாது என்று மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதிலேயே குறியாக இருந்திருந்தது.  நீதி மன்றம் வழங்க வேண்டியது நீதியைத் தானே தவிர பெருந்தன்மையை அல்ல.



          டாக்டர் பிநாயக் சென் அப்படி என்னென்ன செய்தார்?  வேலூர் கிருத்தவ மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர் பிநாயக் சென் குழந்தை மருத்துவ நிபுணர்.  இவர் 1980களில் ­ஷங்கர் குஹா நியோகி என்ற இயக்கத்துடன் சேர்ந்து பழங்குடிகளின் உடல்நலத்தைப் பாதுகாக்க குறைந்த செலவில் மருத்துவமனைகள், உடல் நலத்திட்டங்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்தவர்.  இதுதான் இந்திய அரசின் தேசிய கிராமப்புற உடல் நல இயக்கத்திற்கு முன்னோடியாக அமைந்தது.



            மக்கள் சிவில் உரிமைக் கழகத்தில் (PUCL) தீவிரமாக செயல்பட்ட இவர் சிறைக்கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொடங்கி அவர்களுக்கெதிரான வன்முறையிலிருந்து பாதுகாத்து, அவர்களின் உரிமைகளுக்காக போராடியவர்.  இவர் தனது உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கை மூலமாக அரசின் கூலிப்படையான சல்வா ஜுடும் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தினார்.



            நக்சல்களுக்கு எதிராக பழங்குடியினர் ‘தன்னெழுச்சியாக உருவான இயக்கம்’ சல்வா ஜுடும் என்றும் இது முக்கிய திருப்புமுனை என்றும் அரசு கதையளந்தது.  ஆனால் சென்னின் உண்மை அறியும் குழு அறிக்கையோ, பழங்குடி மக்களை அவர்களது கிராமத்திலிருந்து விரட்டியடிக்க அரசு உண்டாக்கிய கலக எதிர்ப்புப் படையே சல்வா ஜுடும் என்பது.  இதன் சட்டத்தை மீறிய வன்முறைக்கு அரசே காரணமாக இருக்கிறது.  சல்வா ஜுடும் தன்னெழுச்சியாக உருவான இயக்கம் அல்ல, என்ற உண்மைகளை வெளியுலகிற்கு அளித்தது.



            சல்வா ஜுடும் கூலிப்படையை அரசு உருவாக்கியதோடல்லாமல் அவற்றிற்கு ஆயுதங்கள் வழங்கி பழங்குடி மக்களுக்கெதிரான வன்முறையை முன் நின்று அரசு நடத்துவது இதனால் அம்பலப்பட்டு போனது.  அதே சமயம் டாக்டர் சென் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகளையும் கண்டிக்கத் தவறவில்லை.  தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவும் அவர்களது உரிமைகளுக்காகவும் அர்ப்பணித்த ஒரு மனித உரிமைப் போராளி வேறு எப்படி இருக்க முடியும்?



            இந்திய சிவில் உரிமைக் கழகத்தின்(PUCL) அகில இந்திய துணைத் தலைவராகவும் சத்தீஸ்கர் மாநிலப் பொதுச் செயலராகவும் செயல்படும் டாக்டர் பிநாயக் சென் அரசு, காவல்துறை அடக்குமுறைக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல.  கடந்த 30 ஆண்டுகளாக பலமுறை சிறை சென்ற அனுபவம் அவருக்கு உண்டு.  இந்த ராய்ப்பூர் நீதிமன்றம் அவர் மீது அடக்குமுறையை தொடுத்திருப்பதுதான் சற்று விநோதம்.



            சென்னுக்கு எதிரான இந்த நீதிமன்றத் தண்டனையை சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர்.  உலகமெங்கும் உள்ள அறிவு ஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் இத்தீர்ப்பை விமர்சித்து, உடன் பிநாயக் சென் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தியுள்ளனர்.



            உயர்நீதி மன்ற மேல் முறையீட்டில் சென்னுக்கு விடுதலை கிடைக்க வாய்ப்பு மிகுதி.  மனித உரிமைகளில் நம்பிக்கை வைத்திருப்போர் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நம்பிக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மிருக விதூ­ஷகம் - உடல்கள், சடங்குகள், இனப்படுகொலை, உலகமய எதிர்ப்பு, கொஞ்சம் சாதியம்

மிருக விதூஷ­கம் - உடல்கள், சடங்குகள், இனப்படுகொலை, உலகமய எதிர்ப்பு, கொஞ்சம் சாதியம்                         -மு.சிவகுருநாதன் 








          “நாங்கள் இப்புவியின் கோமாளிகள்.  உறவுகளற்ற தாய்மார்கள்.  எங்களுக்கு உடல்கள் இல்லை.  நிலமில்லை.  திசைகளும் இல்லை.  வனப் பறவைகளாக மிதந்தலைகிறோம்.  எங்களிடமிருந்த தானியங்கள் களவாடப்பட்டுவிட்டன.  இருந்தும் பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்துள்ளோம்.  அது முளைத்தெழுந்து தானியங்களின் கூட்டமாய் வரும்.  நாங்களே உலகின் தொன்மையான இனம்” என்ற பிரகடனத்துடன் ச. முருகபூபதியின் இசை, எழுத்து இயக்கத்தில் மணல்மகுடி குழுவினர் வழங்கிய ‘மிருக விதூஷ­கம்’ நாடகத்தை தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் அக்டோபர் 24, 2010இல் காண வாய்ப்பு கிடைத்தது.



            “ஆயிரம் வருடங்களுக்கு முன் தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த இராஜராஜன் தமிழ், இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளைப் பயில்வதற்கு தஞ்சைப் பெரியகோயிலிலேயே தனித்தனியே இசைக் கூடம், நடனக் கூடம், நாடகக் கூடம் உள்ள ஒரு கல்லூரி அமைத்து பயிற்றுவதற்கு நடிகர்கள், நடன மாந்தர்கள், இசை வாணர்களை அமர்த்தி தமிழ் நுண்கலை மரபுகளைக் காத்து வளர்த்த அருங்கலை விநோதனாவான்“ என்று சொல்லி, “அவன் பெரிய கோயிலைக் கட்டி ஆயிரமாண்டு நிறைவுற்ற நினைவுகளுடனிருக்கும் தஞ்சை மண்ணில்” இப்போது நமது மரபான கிராமிய அடையாளங்களை, கலாச்சாரங்களை இழந்து வரும் சோகமும் அவற்றை மீட்க எண்ணும் கோபதாபமும் சடங்கார்த்த உடல் மொழிக் கொண்டு நகர்மயமாதல், உலகமயமாதலுக்கு எதிராக மணல்மகுடி குழுவினர் வழங்கும் ‘மிருக விதூஷ­கம்’ நவீன நாடகம் காண வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



            மிருக விதூ­ஷகம் நாடகம் திறந்த வெளியில் பார்வையாளர்கள் மத்தியில் ஈரமாக்கப்பட்ட நிலத்தில் நிகழ்த்தப்பட்டது.  அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களான பிச்சையயடுப்பவர்கள், பெண்கள், அரவாணிகள், பழங்குடியினர், கோமாளிகள், குப்பை பொறுக்குவோர் போன்றோர்களின் உடல் மொழியும் பழங்குடி மக்களின் தொல்லிசை வழியாகவும் நாடகம் அரங்கேறுகிறது.  நாடகத்தில் பங்கேற்பாளர்களின் உடல்மொழி முக்கியத்துவம் பெறுகிறது.  காலனிய ரேகை படாத உடலாக இருக்க வேண்டும் என முருகபூபதி விரும்புகிறார்.  இது எந்த அளவிற்கு சாத்தியமென்பதை பிறகு பார்ப்போம்.



            நமது அண்டை நாடான இலங்கையில் நடத்தப்பட்ட இனப் படுகொலைகள், பசுமை வேட்டை என்ற பெயரில் நமது அரசு பழங்குடியினர் தொடுத்துள்ள போர், பன்னாட்டு கம்பெனிகளுடான ஆயிரக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் நிலத்தை விட்டு விரட்டப்பட்டோர்கள், அணைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றால் வீடு மற்றும் மண்ணை இழந்தவர்கள், வீடாகிய காட்டை விட்டு வெளியேற்றப்படும் பழங்குடிகள், கடற்கரையை விட்டு துரத்தியடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் ஆமைகள், அரவாணிகள், கைவிடப்பட்டவர்கள் போன்ற பலவற்றால் பாதிக்கப்பட்டோரின் வேதனைக் குரல்கள் இந்நாடகத்தில் முழுவதுமாக வியாபித்திருந்தது.



            பெயரற்ற, முகமற்ற காலனிய ரேகை படாத உடல்கள், பல்வேறு அடக்குமுறைக்கு உண்டான இவ்வுடல்கள் விதைகள், புழுக்கள், பூச்சிகள் மற்றும் மிருகங்களாக மாறி அதன் வழியே தனது சோகங்களைச் சொல்வதோடு மண்ணோடு அயக்கியமாகி சடங்கு வழி உடல்களாக தோற்றம் கொள்கின்றன.   ஏற்றத்தாழ்வுகள் கடந்த தன்னிலை அழிந்த தன்னலமற்ற உடல்களைச் சடங்குகளின் வழியேதான் பெற முடியும் என்று முருகபூபதி தீவிரமாக நம்புகிறார்.  இனக்குழு சடங்குகளின் வழி உருமாற்றம் பெறும் உடல்களின் மூலம் சமூகத்துடன் ஊடாட்டம் நிகழ்த்தப்படுகிறது.



            பழங்குடி மக்களின் தொல் இசை பழங்குடி மக்களின் இசைக்கருவிகள் மூலம் இசைக்கப்படுகிறது.  எல்லாம் இலவசமாய்ப்போன இன்றைய அரசியல் சூழலில் தூக்கு கயிறும் கூட இலவசம் என்று சொல்லி கிண்டலடிக்கும் போது மட்டும் கோமாளிகளாக இருக்கும் விதூ­ஷ­கர்கள் மற்ற நேரங்களில் மிகவும் ‘சீரியஸ்’ ஆகவே நடித்திருக்கிறார்கள்.



            நாடக மொழி கவித்துவமானதாக இருந்தாலும் பார்வையாளர்களை அதிர்ச்சியூட்டுவதாக அமையவில்லை.  சமகால அரசியல் பிரக்ஞை இருக்கும் பார்வையாளர்களுக்கு புரிதல் எளிதில் கிட்டி விடுகிறது.  நவீன நாடகங்களுக்குண்டான பூடகத் தன்மை இருப்பினும் அவற்றுடன் பார்வையாளன் கொள்ளும் உறவினடிப்படையில் இப்புரிதல் ஏற்படுவதாகக் கொள்ளலாம்.



            ச. முருகபூபதி கூறுவது போல தமிழ் நிகழ்த்து கலை மரபில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் உறவு வழியால் பிணைக்கப்பட்டவர்கள்.  போர்க்களமாகிப் போன இன்றைய சூழலில் அநாதைகளாக விதூ­ஷ­கர்கள் அநாதையான நிலத்தில் மிருக நிலை எடுத்து அதன் வழியே சமகால பிரச்சினைகளைப் பேசி வருகிறார்கள்.



            இன்றுள்ள போர்ச்சூழலில் மிருக நிலை என்பது கூட மனித நிலையை விட மேம்பட்டதாகத்தான் கருத வேண்டியுள்ளது.  எனவே மிருகங்கள், பூச்சிகள், தானியங்கள் வழி விதூஷ­­கர்கள் தங்களது சொல்லாடலை நிகழ்த்துகிறார்கள்.



            பல நேர்மறையான அம்சங்கள் நிறைந்த இந்த நவீன நாடகத்தில் சில இடைஞ்சலாக கூறுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.  அது உடல் மொழி மற்றும் நாடக மொழி சம்மந்தப்பட்டது.



                        மீண்டும் புராதன காலத்திற்கு திரும்புதல் என்ற கருத்தாக்கம் எந்த அளவிற்கு சாத்தியப்படும், காலனிய ரேக படாத உடல்கள் வேறு பல சாதீய / மத ரேகைகள் படிந்திருப்பதை நாம் எப்படி கவனிக்காமலிருக்க முடியும் என்று தெரியவில்லை.  இங்கு காலனிய நீக்கம் எவ்வாறு நடைபெறவில்லையோ அதைப் போலவே சாதி / மத நீக்கமும் அறவே நடைபெறவேயில்லை.  காலனிய உடல்களை விட சாதீய / மத உடல்கள் விட மிகவும் மோசமானவை; கோரமானவை.  இந்த உடல்களின் வழி இலங்கை இனப் படுகொலை, பசுமை வேட்டை, உலகமயமாதல் போன்றவற்றை எளிதில் விமர்சிக்கலாம்.  உத்தப்புரம், தனிக்குவளைகள் உள்ளிட்ட பல்வேறு தீண்டாமை ஒடுக்குமுறைகளை அணுகவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.



            கிராமச் சடங்குகளையும் அந்த சடங்கு நிகழ்த்துதல் மற்றும் ஒலிகளை புறக்கணிக்கப்பட்டவர்களின் நாடக மொழியாக ச. முருகபூபதி கணிக்கிறார். (தீராநதி ஆகஸ்ட் 2010 - நேர்காணல்).  கிழக்கு ராமநாதபுரத்தில் மாசி மாதம் நடக்கும் முத்திருளாயி கோயில் நடக்கும் பெருங்கிழவி சடங்கில் பள்ளரும் மறவரும் இணைவதை முருகபூபதி உதாரணமாகக் காட்டுகிறார்.



            இங்கு சடங்குகளனைத்தும் முற்றிலும் சாதீயமானவை.  சாதியை விட்டு விட்டு சடங்கை மட்டும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது.  சடங்குகள் மண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளதாக சொல்லும்போதே அதனுடன் இணைந்த சாதி துருத்திக் கொண்டிருப்பதை எளிதில் உணர முடியும்.  சடங்குகளில் ஒரு நாள் மட்டும் சாதி வேறுபாடுகள் அழிவதையும் மறுநாள் மேல் - கீழ் சாதிப் படிநிலைகள் பாதுகாக்கப்படுவதை புரட்சிகரமாக எடுத்துக் கொள்வது நன்றாயிருக்காது.



            உள்ளூர்க் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருந்து விட்டு உலகமயம், பசுமை வேட்டை, இனப்படுகொலை என்றெல்லாம் பேசித் திரிவது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் தேவையாக இருக்கலாம்; ஒரு படைப்பாளி அரசியல்வாதியாக வேண்டாம் என்று நான் கருதுகிறேன்.



            அழைப்பிதழில் குறிப்பிட்டது போல் ராஜராஜன் பெருமை பேசுவதும் அவன் மூலம் தஞ்சையில் நுண்கலைகள் வளர்ந்ததையும் நேர்மறையாக ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ அணுகுவதைப் போல படைப்பாளியான ச. முருகபூபதியும் பார்ப்பதும், ராஜராஜனின் மறுபக்கத்தையும் சாதிச் சடங்குகளின் மறுபக்கத்தையும் காணத் தவறுவதும் படைப்பு வீரியத்தை முழுங்கடிக்கவே செய்யும்.  மண், மரபு என்றெல்லாம் பேசுபவர்கள் சாதியை மட்டும் மறந்து விடுவதென்பது தமிழ்ச் சூழலில் அன்றாட நிகழ்வாக மாறியிருக்கிறது.  இந்நாடகம் இனப் படுகொலையை பேசாதிருந்தால் ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ தஞ்சையில் நிகழ்த்தியிருக்குமா என்பது அய்யமே.

திங்கள், ஜனவரி 17, 2011

வெண்மணி நினைவு தினமும் நூல் வெளியீடும் -மு.சிவகுருநாதன்

வெண்மணி நினைவு தினமும் நூல் வெளியீடும் -மு.சிவகுருநாதன் 


       வெண்மணிப்படுகொலையின்   42 -வது  நினைவு தினம்  டிசம்பர்,25 ,2010 வெண்மணிப்போராளிகளின் அஞ்சலிக்கூட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ‘வெண்மணி’ என்ற காலாண்டிதழும் சோலை சுந்தரபெருமாள் தொகுத்த ‘வெண்மணியிலிருந்து...’ என்ற வாய்மொழி வரலாற்று நூல் தொகுப்பும் வெளியிடப்பட்டது.






வெள்ளி, ஜனவரி 07, 2011

போராளி அருந்ததி ராயின் பயணம் -மு. சிவகுருநாதன்

போராளி அருந்ததி ராயின் பயணம்

                                                                -மு. சிவகுருநாதன்




(பயணி வெளியீடாக அ. முத்துகிருஷ்ணன் மொழி பெயர்ப்பில் வந்துள்ள அருந்ததி ராயின்‘தோழர்களுடன் ஒரு பயணம்’ நூல் குறித்த விமர்சனம்)


          1997இல் ‘The God of Small Things’ நாவலுக்கு புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய், அதன் பிறகு நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணைக்கட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஆதிவாதிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.   இவ்விவகாரத்தில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு மக்களுக்கு எதிராக இருந்த போது அதை விமர்சிக்கத் தயங்காதவர்.  அதனால் சிறைத் தண்டனையும் பெற்றார்.  பசுமை வேட்டை (Operation Green Hunt) என்ற பெயரில் இந்திய அரசு  தண்டகாரண்ய  காட்டுப் பகுதிகளில் பழங்குடி மக்களுக்கெதிரான போரில் ஈடுபட்டுள்ளது.  இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ‘மாபெரும் அச்சுறுத்தல்’ ஆகிப்போன அப்பகுதிச் சென்று பழங்குடி மக்களுடன் தங்கியிருந்து அவர் எழுதியிருக்கும் நூல்தான் ‘தோழர்களுடன் ஒரு பயணம்’.



           இந்தியாவின் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் அரசை எதிர்த்துப் போரிடுவது தற்போது மட்டும் நடைபெறும் ஒன்றல்ல.  ஹோ, ஓரான், கோன், சந்தல், முண்டாக்கள், கோண்டுகள் ஆகிய பழங்குடி மக்கள் பலமுறை ஜமீன்தார்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் கந்து வட்டிக்காரர்களுடன் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டங்களுக்கு நெடிய வரலாறு உண்டு (பக்.09) என்பதை தொடக்கத்திலேயே தெளிவுபடுத்துகிறார்.  பழங்குடியினர் எழுச்சியும் நக்சல்பாரி அரசியலும் பிரிக்க இயலாதவை.  இந்திய அரசால் தொடர்ந்து திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்டு, விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒரு பெரும் கூட்டம் மாவோயிஸ்டுகளாக அணி திரண்டு நிற்பதை (பக். 10) சுட்டிக்காட்டி இம்மக்களின் வாழ்வுரிமைப் பறிப்பைப் பட்டியலிடுகிறார்.



          கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளடங்கிய தண்டகாரண்ய வனப் பகுதியில் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு (MoU - Memorandum of Understanding)  ஒப்பந்தங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளன.  இவைகள் மூலம் இரும்பாலைகள், மின் திட்டங்கள், அலுமினிய ஆலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், அணைகள், சுரங்கங்கள் போன்றவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் அங்கிருக்கும் பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும்.  எனவே இந்திய அரசு உள்நாட்டு மக்களுக்கு எதிரான போரில் இறங்கியிருக்கிறது.  ‘பழங்குடியினரை மைய நீரோட்டத்திற்கு அழைத்து வருவது’ அல்லது ‘நவீன வளர்ச்சியின் பயன்களை அவர்களுக்கு வழங்குவது’ என்ற சொல்லாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

          வேதாந்தா நிறுவனம் ஒரிசாவில் பாக்சைட்டை வெட்டியிருக்கிறது.  அங்குள்ள பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி செய்கிறது.  இதனை நம் மீது கரிசனம் கொள்ள வந்துள்ள மிருதுவான பூதங்கள் என்று கூறி பன்னாட்டு சமூக பொறுப்பை (CSR) என்.டி.ஆரின் தொன்மம் சார்ந்த படங்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார். (பக். 13).  கர்நாடகாவில் தனியார் நிறுவனம் அங்கு வெட்டியிருக்கும் ஒரு டன் இரும்புத் தாதுவிற்கு ரூ.27 ஐ அரசிற்கு அளிக்கிறது.  அந்த நிறுவனத்திற்கு ரூ. 5000 கிடைக்கும் போது ஏன் அரசு, நீதிபதிகள், ஊடகங்களை விலைக்கு வாங்க முடியாது?  ராய்ப்பூரில் வேதாந்தாவின் புற்று நோய் மருத்துவமனையைப் பார்க்கும்போது அங்கு மிகப் பெரிய பாக்சைட் மலை இருப்பதை ஊகிக்க முடிகிறது என்கிறார்.  (பக். 14).  வேதாந்தா நிறுவனத்தின் முன்னாள் வழக்கறிஞரான இன்றைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இப்போரின் CEO வாக செயல்படுவதாக உண்மையை போட்டுடைக்கிறார்.



          2005 இல் சத்தீஸ்கரில் இரு இரும்பு ஆலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.  ஒன்று ரூ. 7000 கோடியில் பைலாதீலாவில் எஸ்ஸார் ஸ்டீல்.  மற்றொன்று ரூ.10000 கோடியில் லாகன்தீகுடாவில் டாடா ஸ்டீல்.  அப்போதுதான் பிரதமர் மன்மோகன்சிங் மாவோயிஸ்டுகள் “உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்” என்ற ‘புகழ் பெற்ற’ அறிக்கையை வெளியிட்டார்.  உடனடியாக டாடா, எஸ்ஸார் ஆகிய நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு பெரும் ஏற்றம் கண்டதின் (பக். 40) சூட்சுமத்தை விளக்குகிறார்.



          பிரதமரின் அறிக்கையில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் களம் இறங்கலாம் என்ற செய்தியும் உட்கிடையாக இருந்ததையும் அதன் பிறகு அரசின் கூலிப்படையான சல்வா ஜுடும்-ன் செயல்பாடுகள் தொடக்கம் பெற்றதையும் “பழங்குடியினரின் நிலம் சார் தன்மையையும் இரட்டைப்பார்ப்பன நாஜி உணர்ச்சியையும் இணைத்த அற்புதக் கலவை” என்றும் எழுதுகிறார்.



          சட்டீஸ்கர் ஆயுதப்படை (CAF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), இந்தியன் திபெத் எல்லை போலீஸ் (ITBF), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISSF), க்ரே ஹவுண்ட்ஸ், ஸ்கார்பியன்ஸ், கோப்ராக்கள் என அனைத்து வகையான படைகளும் திரட்டப்பட்டுள்ள அரசின் கொள்கைக்கு  ‘உள்ளங்களை மனங்களை வெல்வது’ (WHAM) என்று அரசு செல்லமாக அழைப்பதை என்னவென்பது? (பக்.46)



          நாகா பெட்டாலியன் சென்று விட்டபோதிலும், காவல் துறையினர் பெண்களும் கோழிகளும் தேவைப்படும் பொழுதெல்லாம் வருவார்களாம். (பக். 61).  2005இல் நாகா பெட்டாலியனும், சல்வா ஜுடும் படையும் இணைந்து கோர்மா என்ற கிராமத்தைத் தாக்கி புரட்சிகர ஆதிவாசி மகளிர் அமைப்பின் உறுப்பினர்களான லுக்கி, சுக்கி மற்றும் வேறு ஒரு பெண்ணையும் பிடித்துச் சென்று பாலியல் வல்லுறவு கொண்டு கொன்று விடுகின்றனர்.   புல் தரையின் மீதுதான் பாலியல் வல்லுறவு கொண்டார்கள்.  ‘முடிந்த பின்பு அங்கே எந்த புல்லும் இருக்கவில்லை’  என்கிறாள் ரீங்கி - என்ற நிகழ்வைப் (பக். 61) படிக்கும்போது நமதரசின் கோரமுகம் வெளிப்படுகிறது.



          மக்கள் யுத்தக்குழு (PWG), கட்சி ஐக்கியம் (PU), மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் (MCC) ஆகியன இந்திய கம்யூனிஸ்ட் (மா.லெ.) CPI (ML) யுடன் இணைந்து தற்போது பீகார், ஜார்க்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஆக செயல்படுவதையும் தோழர் வேணுவின் உரையாடல் வழியே ராய் வெளிப்படுத்துகிறார்.  இவர்களுடைய மக்கள் அரசில் வேளாண்மை, வர்த்தகம் - தொழில், பொருளாதாரம், நீதி, பாதுகாப்பு, மருத்துவம், மக்கள் தொடர்பு, கல்வி - கலாச்சாரம், வனம் ஆகிய 9 துறைகள் செயல்படுகிறது.  பல மக்கள் அரசுகள் சேர்ந்தது ஒரு பகுதி குழு.    மூன்று பகுதி குழுக்கள் ஒன்றிணைந்ததுதான் ஒரு பிரிவு என்றும் தண்டகாரண்யாவில்  10 பிரிவுகள் (Division) உள்ளதாகவும் தோழர் வேணு தெரிவிக்கிறார்.  (பக். 39).  அரசு அறிக்கையின்படி நக்சல் பகுதிகளில் வனங்கள் விரிவடைந்திருப்பதின் காரணத்தை உணர முடிகிறது.



          தண்டகாரண்ய காட்டில் அருந்ததி ராயின் நெடிய பயணத்தின் ஊடே மாவோயிஸ்டுகளைப் பற்றி தகவல்களையும் இந்திய அரசின் செயல்பாடுகளையும் விளக்குகிறார்.  சிவப்பு எறும்பு சட்டினி (சாப்போலி) சுவைத்து நன்றாக இருந்தது என்றும் எழுதுகிறார் (பக். 35).  பழங்குடி மக்களுடன் ஒன்றிப் போன நிலையை இது உணர்த்துகிறது.  சாரு மஜும்தார் சொன்ன  ‘சீனாவின் பாதை எங்கள் பாதை’ என்ற வாசகம் ஏகாதிபத்தியமாகிப் போன சீனாவுடன் சேர்ந்து இந்தியா உச்சரிக்க வேண்டியதாகப் போனதுதான் தலைகீழ் மாற்றம் என்கிறார்.  ஆனால் “இன்றும் கட்சி சரியாக உள்ளது எனச் சொல்லும் அருந்ததி, இன்று மக்கள் நலனைப் பேண வேண்டிய பொறுப்பில் இருப்பதால் மக்கள் கட்சி; அதன் ராணுவம் மக்கள் ராணுவம் ஆனால் புரட்சி முடிந்த பின்பு இந்தக் காதல் கசப்பான திருமண வாழ்க்கையாகிப் போகலாம்”(பக்.72) என்று தனது அய்யத்தையும் வெளிப்படுத்தத் தவறவில்லை.



          போலீஸ்காரரின் தலை துண்டிக்கப்பட்ட செய்தியைப் பற்றிச் சொல்லும்போது “ஆயுதப் போராட்ட முறையில் ஒழுங்கு எப்படி ஒரு மிகவும் கீழ்த்தரமான வன்முறையில் முடிந்து விடக்கூடிய அல்லது சாதிய, இன, மதக் குழுக்களுக்கிடையேயான சண்டைகளாக மாறி விடக்கூடிய வாய்ப்புள்ளது என்பதற்கு உதாரணமாகும்”. அபாயம் பற்றி எச்சரிக்கையும் செய்கிறார்
(பக். 91, 92).



          சாரு மஜும்தாரின் ‘நெடு நாளையப் போர்’ தந்திரம் எந்தவொரு அரசியல் பிரச்சினைக்கும் ராணுவத்தைப் பயன்படுத்தத் தயங்காத, காலனிய சக்தியாக மாறிப்போன இந்திய அரசை உயர்சாதி இந்துக்களின் அரசாக அருந்ததி ராய் மிகச் சரியாகவே கணிக்கிறார்.   இந்த அரசுதான் தேவைப்படும் போது எதிர் பகைமையைத் தருவிக்கும் என்றும் “சத்தீஸ்கரில் போரிட நாகாக்களையும், மிசோக்களையும் அனுப்புகிறது.  சீக்கியர்களை காஷ்மீருக்கும் காஷ்மீரிகளை ஒரிசாவுக்கும் தமிழர்களை அசாமுக்கும் அனுப்புகிறது” என்றும் இந்திய அரசின் நெடுநாளையப் போரை அம்பலப்படுத்துகிறார்.



          தண்டகாரண்யாவின் மக்கள் அரசு, “மொத்த உலகத்திற்கான மாற்று அல்ல, அல்லாஸ்காவுக்கு அல்ல, புதுதில்லிக்கு அல்ல, மொத்த சட்டீஸ்கருக்குக் கூட அல்ல, இது இவர்களுக்கு மட்டுமானதே.  தண்டகாரண்யாவுக்கானதே” என்று கூறும் அருந்ததி ராய்,“ஆனால் அதுவே அவர்களை பூண்டோடு ஒழித்து விடும். இது வரலாற்றையே போருக்கு அழைக்கிறது”.  என்கிற யதார்த்தத்தையும் பிரதிபலிக்கிறார்.



          பாகிஸ்தானில் ஜியா - உல் - ஹக்கின் அடக்குமுறைக் காலத்தில் பாடப்பட்ட அகமத்பெயஸ் எழுதிய ‘அந்த நாளைக் காண்போம்’  என்ற பாடல் வனத்தில் பாடப்பட்டதையும் அடக்குமுறைகளுக்கு எதிரான, சற்று விநோதமான கூட்டணி நாமாக ஏற்படுத்தாமல் இயல்பாகவே அமைகிறது என்பதை நயம்படச் சொல்கிறார்.



          அ. முத்துகிருஷ்ணனின் அழகான தமிழில் படங்களுடன் புத்தகம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனித்திருக்கலாம்.



          தோழர்களுடன் ஒரு பயணம் - அருந்ததி ராய்

          தமிழில் : அ. முத்துகிருஷ்ணன்.  

        
         பயணி வெளியீடு.  பக். 96.  விலை: ரூ.60

          பயணி, 216/332 - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, 

          திருவல்லிக்கேணி,
          சென்னை - 600005. 
          செல்:9445124576, 

                        9626369201. 
        payanibooks@gmail.com