செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

இந்திய அரசை நெருக்கி இறுக்கும் அண்ணா ஹஸாரே - அ.மார்க்ஸ்

 இந்திய அரசை நெருக்கி இறுக்கும் அண்ணா ஹஸாரே   - அ.மார்க்ஸ்    


        இந்திய அளவில் இன்றைய பேச்சு அண்ணா ஹஸாரேதான். பத்திரிகைகளைப் புரட்டினால், தொலைக்காட்சியைத் திறந்தால், நகர வீதிகளில் நடந்தால் எங்கும் அண்ணாஜிதான். சென்னை வீதிகளில் இளைஞர்கள் மூவண்ணம் தீட்டிய முகங்களுடன் மூலைக்கு மூலை அண்ணாஜியின் போஸ்டர்களைச் சுமந்து நின்று கொண்டிருக்கிறார்கள். கல்லூரிகளில் மாணவர்கள் மூவண்ணக் கொடிகளுடன் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அண்ணாவிடம் சமரசமாகி அவரது உண்ணாவிரதத்தை நிறுத்தாவிட்டால் கீழே குதித்துச் சாவேன் என உயரமான கட்டிடம் ஒன்றில் ஏறிக்கொண்டு ஒரு பையன் மிரட்டி ஊடகங்களில் இடம்பிடிக்கிறான்.

       இன்னொரு பக்கம் ட்விட்டர் அப்டேட்கள், குறுஞ்செய்திகள் இப்படியாக அண்ணாவின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டப்படுகிறது. நகர்களெங்கும் தொங்குகிற ஆயிரக்கணக்கான ஃப்ளெக்ஸ் போர்ட்கள் இந்த ஆதரவு இயக்கங்களுக்கு நிதி ஒரு பிரச்சினை இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் அண்ணா குழுவிற்கு (டீம் அண்ணா) வெளிவட்டத்தில் நின்று ஆதரவளித்து வருகிற அருணா ரோய், ஹர்ஷ் மாந்தர் போன்றோர்,  கோரிக்கை எல்லாம் நியாயந்தான். ஆனால் அதற்காக இத்தனை கெடுபிடிகள் தேவை இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் நம்முடைய கருத்து மட்டுமே சரி என்பதாகக் கருதி இந்த அளவிற்கு நெருக்கடி கொடுப்பது தவறு எனச் சொன்னவுடன், உள்வட்டத்தில் இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால், சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே ஆகியோர், நாங்கள் எந்தக் கருத்தையும் யார் மீதும் திணிக்கவில்லை என்பதற்கு மக்கள் அளிக்கும் பேராதரவே சாட்சி என அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர்.

          அண்ணா ஹஸாரேக்கு ஆதரவாக இன்று பெரிய அளவில் இந்தியாவின் நடுத்தரவர்க்கம் திரண்டு நிற்கிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய அரசு இன்று நடத்தும் பச்சை வேட்டை, விவசாயிகள் தற்கொலை, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மதக் கலவரத் தடுப்புச் சட்டம், மரண தண்டனை ஒழிப்புஎன எல்லா அரசியல் பேச்சுக்களையும் ஓரங்கட்டி, ஜன் லோக்பால் என்னும் ஒரே முழக்கத்தை நடுநாயகமாக்கிவிட்ட இந்த ஆதரவுப் படையினர் யார்? இவர்களின் வர்க்க கருத்தியற் பின்னணி என்ன?

      போராட்டக் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு வந்து நிற்கும் மாணவர்கள், இளைஞர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் முன்னணியில் நிற்கும் ஆதரவு சக்திகள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர்தான். இந்திய மக்கள் தொகையில் 30 சதம் வரை நடுத்தரவர்க்கத்தினர் உள்ளதாகக் கணக்கீடுகள் சொல்கின்றன. இவர்கள் ஒரு படித்தானவர்கள் அல்ல. பலதரப்பட்ட பின்னணி உடையவர்கள். எனினும் இவர்களுக்கிடையில் பல பொதுமையான அம்சங்களும் உண்டு.
       இவற்றில் முதன்மையானது இன்றைய ஆட்சி முறையையும் நிறுவனங்களையும் பெரிய விமர்சனமின்றி நம்புவது. அடுத்து இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிற கருத்தில் ஆட்சியாளர்களுடன் ஒத்துப் போவது. ஷாப்பிங் மால்கள், நால்வழிச்
சாலைகள், மெட்ரோ ரயில்கள், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் பெருமையுறுவது. இவர்களின் ஒரே குறை இத்தகைய வளர்ச்சிக்குத் தடையாய் இங்கே லஞ்சமும் ஊழலும் இருக்கிறதே என்பதுதான்.
நடுத்தர வர்க்க மதிப்பீடுகளில் இன்று மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதலான அரசு உயர் பதவிகளை லட்சியமாகக் கொண்டிருந்த இவர்களின் இன்றைய கவனம் கார்பொரேட் உயர் பதவிகளில் குவிகிறது. நாராயண மூர்த்தியும் நந்தன் நீல்கெய்னியும் தான் இன்று அவர்களின் ரோல் மாடல்கள். மார்க்சீயம், பெரியாரியம், அம்பேத்கரியம், மொழி வழித் தேசீயம் இவைகளிலிருந்து விலகியிருப்பது மட்டுமின்றி சாதி, மத அடிப்படையிலான அரசியல்களும்கூட காலத்துக்கு ஒவ்வாது என்பது இவர்களின் கருத்து. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலும் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. தாங்கள் விரும்பும் அரசியல் மாற்றங்களை செயல்படுத்த நீண்டகால அணிதிரட்டல்கள், அரசியல் செயல்பாடுகள், ஆயுதப் போராட்டங்கள் முதலியன தேவையில்லை, இவை தேவையற்ற விரயங்களுக்கே இட்டுச் செல்லும் என்பது இவர்களின் உறுதியான கருத்து.

       இந்த இடத்தில்தான் காந்தி குல்லாயுடன் காட்சியளிக்கும் அண்ணா ஹஸாரே இவர்களுக்குப் பொருத்தமான தலைவராகிவிடுகிறார். யார் இந்த அண்ணாஜி? மஹாராஷ்ட்ர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இம் முன்னாள் இராணுவ வீரர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வது: 1965 இந்திய பாகிஸ்தான் போரின்போது "க்ன்வாய்' ஒன்றில் சென்று கொண்டிருந்தாராம். திடீரென எதிரிகள் பொழிந்த குண்டுகளில் எல்லோரும் செத்துப் போனார்களாம் இவரைத் தவிர. நம்மை மட்டும் கடவுள் ஏன் விட்டுவைக்க வேண்டும்? ஆண்டவன் நம்மிடம் எதையோ எதிர்பார்க்கிறான் என்றுணர்ந்த அண்ணா, லஞ்ச ஊழல் முதலானவற்றை ஒழித்து மக்களை உய்விக்க விரதம் பூண்டாராம்.

        இராணுவத்தில் கிடைத்த ஓய்வு ஊதியப் பலன்களைக் கொண்டு, சொந்த மாவட்டத்திலுள்ள ராலேகான் சித்தி என்கிற கிராமத்திலிருந்த கோவிலொன்றைப் புதுப்பித்து அதையே தன் வாழ்விடமாக மாற்றிக்கொண்டார். ஏகப்பட்ட எளிமையான, ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து ஒரு முன்னுதாரணமான அற ஆளுமையாக (Moral Authority) மக்கள் மத்தியில் உருப்பெற்றார். மழை குறைவான பஞ்சப் பிரதேசமான ராலேகான் சித்தி  கிராமத்தை சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்ட செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றிய வகையில் இன்று அவர் மிகப் பெரிய புகழுக்குரியவராகியுள்ளார். பத்ம பூஷன் முதலான பல தேசிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவரது முயற்சியை மாதிரியாகக் கொண்டு கிராம வளர்ச்சித் திட்டமொன்றை மஹாராஷ்ட்ர அரசு உருவாக்கியுள்ளது.

       தமது மராட்டிய தேசியம் குறித்த பெருமை மிக்கவர்கள் மஹாராஷ்ட்ர மக்கள். பேஷ்வா ஆட்சி என்ற இந்துத்துவக் கோரிக்கை 19ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற மாநிலம் அது. இந்த தேசீய பிராந்தியப் பெருமையே பின்னர் சிவசேனா போன்ற வலதுசாரிப் பாசிச இயக்கங்களின் ஊற்றுக்கண்ணாய் அமைந்தது. சாதிக் கொடுமைகளுக்கு எதிரான பூலே மற்றும் அம்பேத்கர் இயக்கங்கள் உருவானதும் இம்மண்ணில்தான். அரசு உதவியை மட்டுமே நம்பியிராமல், மக்கள் தாமே சிரமதானம் மேற்கொண்டு கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வழக்கம் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உண்டு. இந்த மரபைப் பின்பற்றி மக்களைத் திரட்டி மழை நீரைத் தேக்குகிற சிற்றணைகளைக் கட்டி அவர்களின் வறுமையைப் போக்கியதோடு, பள்ளி, விடுதி எல்லாவற்றையும் உருவாக்கி மக்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டார் அண்ணா. இன்று அங்கே அவர் வைத்ததுதான் சட்டம். இவ்வாறு உருவான மரியாதையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி அவர் தொடர்ந்து அந்தக் கிராமத்தை ஆண்டு வருகிறார்.

         ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் அண்ணா, தேர்தல்களும் அரசியல் கட்சிகளும் கிராம ஒற்றுமையைக் குலைத்துவிடும் என இரண்டையும் அண்ட விடுவதில்லை. கடந்த 35 ஆண்டுகளாக அங்கே கிராம சபைகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. அண்ணா சொல்பவர்களே தலைவர்கள். அப்புறம் அங்கே திரையரங்குகள் கிடையாது. குடித்துவிட்டு கிராமத்திற்குள் நுழைபவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்படுவார்கள். குடும்பக் கட்டுப்பாடு கட்டாயம். கோயிலில் வைத்து தெய்வ சாட்சியாகவே முடிவுகள் எடுக்கப்படும்.

      அந்த கிராமத்தில் தங்கி ஆய்வு செய்த முகில் சர்மா என்கிற ஆய்வாளர் தலித்கள் மற்றும் பெண்களின் நிலைகளில் பாரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். தற்போது அண்ணா முன் மொழிகிற லோக்பால் மசோதா அதிகாரங்கள் பெரிதும் மையப்படுத்தப்பட்ட ஒரு சூப்பர் அதிகார அமைப்பாக இருக்கும் எனவும், காந்தியடிகள் கனவு கண்ட அதிகாரப் பரவலுக்கும் அண்ணாவின் அணுகல்முறைகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்குக் கடுந்தண்டனையைப் பரிந்துரைக்கிறது இவரது மசோதா.

         ஒரு கூட்டத்தில் லஞ்சம் வாங்குபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்றார் அண்ணா. இது உங்களின் காந்தியக் கொள்கைக்கு விரோதமில்லையா எனக் கேட்டபோது,  அதுதான் சொல்றேன். நமக்கு காந்தி மட்டும் போதாது. நமது லட்சிய மாதிரியா சிவாஜியும் இருக்கணும். அப்படித்தான் ஒரு முறை லஞ்சம் வாங்கின படேல் ஒருத்தரோட கையை சிவாஜி வெட்டினார் என்று பதிலுரைத்தார். ஊழல் பேர்வழிகளின் கையை வெட்டணும், தலையை வாங்கணும் என்றெல்லாம் அவர் சொல்வது ஏதோ கோபத்தில் மட்டுமல்ல. அண்ணாவைப் பொறுத்த மட்டில் நிர்வாகத்தில் ஊழல் இல்லாமலிருந்தால் போதும். மற்றப்படி மதவாதம், தீண்டாமை, உலகமயம் இவையெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. அதனால்தான் அவர் கூசாமல் நரேந்திர மோடியை நல்ல நிர்வாகி எனப் பாராட்டினார்.

       அண்ணா ஹஸாரேயின் உள் வட்டத்தைச் சேர்ந்த சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே மூவரும் நீதித் துறையைச் சார்ந்தவர்கள். முதலிருவரும் வழக்குரைஞர்கள். மூன்றாமவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் அலகாபாத் நீதி மன்றத் தீர்ப்பால் பதவி இழக்க இருந்த இந்திரா காந்தி, நெருக்கடி நிலையை அறிவித்து நீதித் துறையை ஒடுக்கித் தன் வழிக்குக் கொண்டு வந்த கதை நினைவிருக்கலாம். அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளுக்குப் பதவி உயர்வை மறுத்து, கீழே இருந்தவர்களை மேலுக்குக் கொண்டு வந்தார் இந்திரா. அப்படிப் பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்களில் ஒருவரான கே.எஸ். ஹெக்டேயின் மகன்தான் சந்தோஷ் ஹெக்டே. நெருக்கடி காலம் முடிந்து ஜனதா ஆட்சி வந்தபோது மீண்டும் நீதித்துறையைப் பலப்படுத்தி மேலுயர்த்துவதற்கென சட்டத்துறை அமைச்சராக்கப்பட்டவர்தான் சாந்தி பூஷன்.  அவரது மகன்தான் பிரசாந்த் பூஷன்.உரிய சட்ட திருத்தங்களைச் செய்து நீதித் துறையை பலப்படுத்தியதோடு மேலும் இரு மாற்றங்களை அவர் செய்தார்.

1) பொது நல வழக்கு (Public Interst Litigation) அறிமுகப்படுத்தப்பட்டது. யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படுகிற பிறருக்காக அரசை எதிர்த்து வழக்குப் போடலாம்.

2) அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் என்பது உணவு, கல்வி, இருப்பிடம், தூய்மையான சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கும் என விளக்கமளித்தது. இந்த அடிப்படையிலேயே இன்று பொது நல வழக்குகள் மூலமாக அழுத்தம் கொடுத்து கல்வி மற்றும் உணவு உரிமைச் சட்டங்களெல்லாம் இயற்றப்பட்டுள்ளன.

      உள்வட்டத்தில் உள்ள இன்னொருவர் அர்விந்த் கெஜ்ரிவால். இவர் ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளி. இவர் பங்கு பெற்றுள்ள தொண்டு நிறுவனம் இச் சட்டத்தின் மூலம் பெற்ற பல்லாயிரக்கணக்கான தகவல்களைத் தொகுத்து ஆய்வு செய்துள்ளது. தொண்டு நிறுவனங்கள்மூலமாக இவர்களுக்கு ஏராளமான வெளிநாட்டு மற்றும் கார்பொரேட் நிறுவன உதவிகள் கிடைக்கின்றன என்றும், இந் நிறுவனங்களில் பல இந்தியாவின் கனிமவளங்களைக் கொள்ளை அடித்து, சுற்றுச் சூழலை அழிப்பவை எனவும் குற்றம் சாட்டுகிறார் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய்.
ஆக நீதிமன்றங்கள், இருக்கிற சட்டங்கள் மற்றும் புதிதாய் இயற்றப்படும் சட்டங்கள் முதலானவற்றின் மூலமாகவே நாட்டின்  எல்லாக் குறைகளையும் போக்கி, சுபீட்சத்தை உருவாக்கிவிடமுடியும் என்கிற ஒருவகைச் சட்டவாதத்தை நம்புகிற நடுத்தர வர்க்க மனநிலைக்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவ் உள்வட்டத்தினர்.

       பொது நல வழக்குகள், தகவல் அறியும் உரிமை, சகல அதிகாரங்களும் குவிந்த லோக்பால் அமைப்பு ஆகியவற்றின் மூலம் "ஒளிரும் இந்தியாவை' உருவாக்கிவிடமுடியும் என நம்புகிற நடுத்தரவர்க்கத்திற்கு உண்ணாவிரதம், ஒத்துழையாமை முதலான காந்திய வழிகளை மட்டுமே பயன்படுத்தி, காந்தியத்திற்குச் சற்றும் பொருந்தாத கார்பொரேட் நகர்ப்புறக் கலாசாரத்தை நடைமுறைப்படுத்த அண்ணா ஹஸாரே  சரியான தலைவராகப் பொருந்திப் போகிறார்.

         சமீபகாலப் பெரு ஊழல்களுக்குக் காரணமான அரசின் பொருளாதாரக் கொள்கைகள், கார்பொரேட்களுக்கு வழங்கப்பட்டுள்ள அபரிமிதமான அதிகாரம், இதர முக்கியமான பிரச்சினைகளான மதவாதம், சாதீயம், பழங்குடி உரிமைகள், கல்வி/ மருத்துவம் முதலானவை வணிகமயமாதல், கறுப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி மக்கள் உரிமைகளை பறித்தல் முதலான எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் லஞ்ச ஊழலைப் பிரித்து இவர்கள் அதை மட்டும் முதன்மைப்படுத்துகின்றனர். இப்படியான இயக்கங்களில் எளிதாக வலதுசாரி பாசிச சக்திகள்  உள்ளே நுழைந்து விடுவதே கடந்த கால வரலாறாக இருந்துள்ளது.   ஜெயப்பிரகாஷ் நாராயணின் நவ நிர்மாண் இயக்கத்தின் மூலம் மேலுக்கு வந்தவர்தான் நரேந்திர மோடி என்பதை மறந்துவிட முடியாது. இன்றும்கூட இந்துத்துவ வலதுசாரி சக்திகள்தான் அதிக அளவில் அண்ணா ஹஸாரேவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றனர்.

       இந்தியாவை ஆட்டிப்படைக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று லஞ்ச ஊழல் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல்களை மன்னிக்க முடியாது.

          ஆனால் பிரச்சினை ஊழல்களோடு முடிந்துவிடுவதில்லை. ஊழல் ஒழிப்பைப் பிரதானப்படுத்தி மற்றவற்றிலிருந்து கவனத்தைத் திருப்புவது மிகவும் ஆபத்தானது என்கிற கருத்து அருந்ததி ராய் போன்ற  அறிவுஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது.

(அண்ணா ஹசாரே நேற்றுமுன்தினம் காலை உண்ணாவிரதத்தை கைவிடுவதற்கு முன்னதாக எழுதப்பட்ட கட்டுரை இது)

நன்றி:-தினக்குரல் 30.08.2011

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

அன்னா ஹாசாரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன் -அருந்ததி ராய்

அன்னா ஹாசாரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன்  

                                                                                                -அருந்ததி ராய்


அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..
       தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்வி கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைதான் சரியென அவர் 'டிக்' செய்திருப்பார்கள் (அ) வந்தே மாதரம்! (ஆ) பாரத அன்னைக்கு ஜே! (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா! (ஈ) இந்தியாவுக்கு ஜே!
 
        முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)


2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது "சாகும் வரை உண்ணாவிரதத்தை" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் "அன்னா அணி" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவைப் பார்லிமெண்டில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அது இருந்தது.
         பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டம், ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள், அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய இடத்திலேயே, கெளரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, அன்னா அணியின் உறுப்பினர்கள் திகாரில் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த விடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும் மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப் பட்டதில்லை.) இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லைலா மைதானத்தில் நாள் முழுக்க வேலைப் பார்த்து, அடுத்த வாரம் அரங்கேறப் போகும் தமாஷாவுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்” என்று முழக்கமிட ஆரம்பித்து விட்டார்கள்.
          அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அமத்தியத்துவப் படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு, அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாகக் கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகதானே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. ,இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது.
         இந்த மசோதா பயன் தருமா இல்லை தராதா என்பது, நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறிதான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி ஞாயமாக இருக்கும்?
        இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்கா விட்டால், அவர்கள் உங்களை "உண்மையான இந்தியன் இல்லை" என்று அடையாளப் படுத்துவர்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லாத போல, மாயையை உருவாக்கி வருகின்றன.
         இந்த உண்ணாவிரதம் ஐரம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தமும் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் அப்ஸ்பா சட்டத்திற்கு எதிராக AFSPA (Armed Forces [Special Power] ACT) பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப் பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே ஐரம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரம் கணக்கான கிராமத்துவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.
        அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? ஐரம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயு கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இலலையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்த, நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.
       பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா பார்லிமெண்டில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படா விட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கோரும், அன்னா என்ற 74 வயது மனிதனை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பிலியன் குரல்கள் ஒலித்து விட்டன,” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”
        மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசர தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ, அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ, இவர் ஒரு வார்த்தை கூட உகுத்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார்க் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது விசேச பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைப் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
       அவர் மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர். 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களைத் நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமார புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)
        இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர் எஸ் எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது அம்பலத்துக்கு இப்பத்திகையாளர்கள் மூலமாக வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்வி படுகிறோம். அங்கோ கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்தோ அல்லது கூட்டுறவு சொசைட்டியோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “இந்த மகாத்மா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சமார், ஒரு சுனார், ஒரு கும்ஹர் இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைதான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது?
     கோகோ கோலாவில் இருந்தும், லெக்மென் பிரதர்ஸில் இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று கையெடுத்து நடத்தியவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில் அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல விசேச பொருளாதார பகுதிகளைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் பெளன்டேசன்களும் அடக்கம். பல கோடிக் கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்களே அந்த அவர்கள். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித பாதகக் கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்?
    எப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! 2G ஸ்பெட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமான போது, பல முக்கியமான கார்பரேசன்களும் மூத்த பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் மற்றும் நேச கட்சிகளின் மந்திரிகளும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும் ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்த கரந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இவ்வளவு நாட்களிலும் முதன் முறையாக பத்திரிகையாளர்களும் பரிந்துரையாளர்களும் பெரும் அவமானப் பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா?
       அரசு தனது வழக்கமான கடமைகளைக் கைக்கழுவி வரும் போது, கார்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப் பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.
     தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும் அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்த இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டுச் செல்வதற்காகதான். இதன் மூலம் இன்னும் தனியார் மயமாக்குதலை ஊக்குவிப்பதுவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கையான வளங்களை  இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்குப் பரிந்துரைக்கும் கட்டணம் என்று பெயர் சூட்டப்படும்.
      இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராதிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்?
         இந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடிஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடியாட்டுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப் பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆங்கிலத்தில் : அருந்ததி ராய் (21/08/2011, தி இந்து)
தமிழில் : சொ.பிரபாகரன்
http://www.palanibaba.in/2011/08/blog-post_4823.html
நன்றி:-   http://www.tamilcircle.net/

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

செட்டிநாடு பவுண்டே­ஷ­னின் A School நிர்வாகத்திற்கு எதிராக பெற்றோர்களின் போராட்டம்

செட்டிநாடு பவுண்டே­ஷ­னின்   A  school   நிர்வாகத்திற்கு எதிராக
பெற்றோர்களின் போராட்டம்:

                          உண்மை அறியும் குழு அறிக்கை
                                                                                            











 
23.08.2011,                                                                                                                                                                       சென்னை.    

            சென்ற  ஜுலை 22ஆம் தேதியன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை மன்றம் கட்டிடம் முன்பு செட்டிநாடு பவுண்டே­ஷனின்   
A school நிர்வாகத்திற்கு எதிராகப் பெற்றோர்கள் நடத்திய போராட்டம் பத்திரிக்கைளில் வெளிவந்தது.  நிர்வாகத்திற்கு எதிராக பெற்றோர்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள செய்தியும் வந்தது.  A school பெற்றோர் அமைப்பின் பிரதிநிதிகள் கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர்.  இதையொட்டி கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை அமைப்பினர் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழுவொன்று அமைக்கப்பட்டது.  குழுவில் கீழ்க்கண்டவர்கள் பங்கு பெற்றனர்.

 01. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) சென்னை.

02. முனைவர். ப. சிவக்குமார், முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வர் , சென்னை.

03. பேரா. மு. திருமாவளவன், முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வர், சென்னை.

04. திரு. மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR)   திருவாரூர்.

05. பேரா. செல்வி, மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி, சென்னை.

06. திரு. பூமொழி, தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம், சேலம்.

07. ஜெனி டாலி, சமூக ஆர்வலர், சென்னை.


            இக்குழு சென்ற ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் சென்னையிலுள்ள நான்கு A school பள்ளிகளுக்குச் சென்று பார்வையிட்டது. அங்குள்ள நிர்வாகிகளிடம் (Administrators) பேசியது.  வாசலில்  நிறுத்தி வைத்து நாங்கள் பேசி அனுப்பப்பட்ட போதிலும் வெளியிலிருந்து நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.  வண்ணாரப்பேட்டை பள்ளியில் நிர்வாகியிடம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது எங்களில் ஒரு உறுப்பினர் உள்ளே சென்று பார்த்து வந்தார்.


             சி.பி.எஸ்.இ. வாரிய  மண்டல இணை இயக்குநர்அலுவலகம், தொடக்கக் கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றிற்கும் சென்று நர்சரி பள்ளிகளுக்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கணேசன், சங்கர் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். எஸ். நாகராஜ முருகன் முதலானோரிடம் நேரிலும் தொலைபேசியிலும்   பேசினோம்.

              செட்டிநாடு பவுண்டே­ஷன் நிர்வாகத் தரப்பில் அதன் நிறுவனர் அல்லது  இதர அடுத்த நிலை நிர்வாகி யாரையாவது சந்திக்க வேண்டும் என நாங்கள் கேட்ட போது  வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டோம்.   மின்னஞ்சலில் அனுமதி கோரி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டோம்.  இரண்டு நாட்களுக்குள் நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப் போவதாகச் சொல்லி மின்னஞ்சலில் அதற்கு முன் ஒரு ‘அப்பாயின்மெண்ட்’ கேட்டோம்.  ஒரு வாரத்திற்குப் பின் ஆகஸ்ட் 17 அன்று சந்திக்க முடியும் என தற்போது எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  மிகவும் நீண்ட இடைவெளி ஆயினும் நிர்வாகத்தின் கருத்தைக் கேட்காமல் அறிக்கை அளிக்கக் கூடாது என்பதற்காக ஒரு வாரம் பொறுத்திருந்து ஆகஸ்ட் 17 அன்று நிர்வாகத்தினரைச் சந்தித்தோம்.நிர்வாகத்தின் சார்பாக ஜெயஸ்ரீ மற்றும் சித்ரா ஆகியோர் விரிவாகப் பேசினர்.

பின்னணி:

            சென்னை பெருநகருக்குள் ‘செட்டிநாடு பவுண்டேஷ­ன்’ என்னும் நிறுவனம் 36 A school பள்ளிகளை நடத்துகிறது.   இவற்றில் 11 பள்ளிகள் நிறுவனத்தின் நேரடி நிர்வாகத்திலும் பிற ஃபிராஞ்சைஸ் (Franchise) முறையிலும் நடத்தப்படுகின்றன.  இந்தப் பள்ளிகளில் Pre Nursery, Pre K.G.,  L.K.G., U.K.G., முதல் வகுப்பு வரை உள்ளன.  ஓரிரு பள்ளிகளில் 2ஆம் வகுப்பிலும் சில மாணவர்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்றரை வயது முதல் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.  இரண்டு, மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் A school பள்ளிகளில் 200லிருந்து 300 குழந்தைகள் வரை உள்ளனர்.  புதிதாகத் தொடங்கப்பட்ட பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் உள்ளனர்.  ஆக ஒட்டுமொத்தத்தில் 36 பள்ளிகளிலும் குறைந்த பட்சம் 3000 முதல் அதிகபட்சமாக 4000 குழந்தைகள் கல்வி பயிலுகின்றனர். செட்டிநாடு பவுண்டே­ஷன் விளம்பரம் ஒன்றில் 6000 குழந்தைகள் பயிலுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


            ‘செட்டிநாடு பவுண்டேஷ­ன்’ எனப்படும் இந்நிறுவத்தின் நிறுவனராக (Founder) திரு. அண்ணாமலைச் செட்டியார் என்பவர் உள்ளார்.  இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செட்டிநாடு சிமெண்ட்ஸ், செட்டிநாடு மருத்துவ நகரம், செட்டிநாடு பவர் கார்ப்பரே­ஷன் முதலான செட்டிநாடு குழும கார்ப்பரேட் அலுவலகங்கள் அமைந்துள்ள அண்ணாசாலை ராணி சீதை மன்ற அடுக்கு மாடிக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. சற்றே வித்தியாசமாக ‘செட்டிநாடு பவுண்டேஷ­னின்’ ‘லோகோ’ அமைந்துள்ள போதிலும் ‘செட்டிநாடு’ என்கிற பெயர், பிற செட்டிநாடு குழுமங்களுடன் ஒரே கட்டிடத்தில்  A school  அலுவலகம் அமைந்துள்ள நிலை ஆகியவற்றின் ஊடாக செட்டிநாடு குழுமத்தின் கல்வி அமைப்பாகிய ‘செட்டிநாடு வித்யா­ஷரமின்’ ஒரு அங்கமே இந்த A school-ம் என்கிற பிம்பத்தை இந்நிர்வாகம் வெற்றிகரமாக கட்டமைத்துள்ளது.  பிற மூலதனங்களைக் காட்டிலும் இந்த பிம்பமே A school  களின் மிகப்பெரிய பலமாக உள்ளது.

     பெரிய அளவில் ஆங்கில, தமிழ் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்தும், போஸ்டர்களை வெளியிட்டும் A school குறித்து பிரச்சாரம் செய்யப்படுகின்றது.   தொடக்கத்தில் 36 வெவ்வேறு இடங்களில் A school நர்சரி பள்ளிகளைத் தொடங்கினாலும் எல்லாவிதமான வசதிகளுடனும் போரூர், பள்ளிக்கரணை, மாதவரம், முகப்பேர் முதலான நான்கு இடங்களில் 12ஆம் வகுப்பு வரையிலான மேல்நிலைப் பள்ளிகள் கட்டப்படும் எனவும், C.B.S.E. பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் எனவும், இந்தப் பள்ளிகளில் A school மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தங்களுக்கு வாக்குறுதிகள் அளித்ததன் அடிப்படையிலேயே தங்கள் பிள்ளைகளை  
 A School -களில் சேர்த்தோம் என நாங்கள் சந்தித்த பெற்றோர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.  பல பெற்றோர்கள் இது செட்டிநாடு வித்யா­ஷரமின் ஒரு அங்கம் எனவும் இங்கு C.B.S.E. பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது எனவும்  இன்று வரையிலும் நம்பியுள்ளனர் என்பது எங்கள் உரையாடல்களில் தெரிய வந்தது.


            இவையனைத்துமே பொய்யானவை.விளக்கம்.

பொய் 1:

            பிரச்சினை முற்றி வீதிக்கு வந்த பிறகு, சென்ற வாரத்தில் செட்டிநாடு கார்ப்பரேட் குழுமங்கள் சார்பாக ‘டிரேட் மார்க்’ எச்சரிக்கை
(ஆகஸ்ட் 10, 2011 - டைம்ஸ் ஆஃப் இந்தியா) வெளியிடப்பட்டுள்ளது.  செட்டிநாடு என்கிற பெயரைக் கண்டு ஏமாற வேண்டாமென மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.  எனினும் இதுவரை செட்டிநாடு கார்ப்பரேட் குழுமம் அதன் ஒரு அங்கமே A school என்பது போன்ற பொய் பிம்பம் கட்டமைப்பதை ஊக்குவித்தே வந்துள்ளது.  இப்போதும் கூட A school-களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பதை இந்த விளம்பரத்தில் வெளிப்படையாக அது அறிவிக்கவில்லை.  இன்றும் A school  தலைமை நிர்வாக அலுவலகம் பிற செட்டிநாடு குழும அலுவலகங்கள் உள்ள கட்டிடத்திலிருந்தே செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.எங்களிடம் நிர்வாகத்தின்  சார்பாக பேசியவர்களும்
செட்டிநாடு வித்யா­ஷரமின் நிறுவனர் திருமதி மீனா முத்தையா அவர்களின் மகன்தான் அண்ணாமலைச் செட்டியார் எனவும், மேற்குறிப்பிட்ட விளம்பரம்  தங்களைப் பற்றியதல்லவென்றும் கூறினர். எனினும் செட்டிநாடு வித்யாஷரத்தின் ஒரு அங்கம்தான் செட்டிநாடு பவுண்டேஷனா என்கிற கேள்விக்கு அவர்கள் தெளிவாகப் பதிலளிக்காமல் மழுப்பினர்.

பொய் 2:

            சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்று இப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன என்பது அப்பட்டமான பொய்.  ஆறாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமே இல்லை என்கிற போது 2-ம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இப்பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் எவ்வாறு சாத்தியம்?  செட்டிநாடு பவுண்டே­னின் நேரடி நிர்வாகத்தில் நடைபெறும் வண்ணாரப்பேட்டை A school- ன் நிர்வாகி திருமதி. தாரிணி என்பவரிடம் நாங்கள் இதுகுறித்துத் துருவித் துருவி விசாரித்த போது, “சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைத் தான் நாங்கள் கையாளுகிறோம்.  ஆனால் சி.பி.எஸ்.இ.-ல் ஏற்பு எதையும் நாங்கள் இதுவரை பெறவில்லை.  எட்டாம் வகுப்பு அடையும் வரை இத்தகைய ஏற்பு தேவையில்லை” என்றார்.


            எங்கள் குழு சி.பி.எஸ்.இ.-ன் மண்டல நிர்வாகத்தை அணுகிய போது அவர்களும் தாங்கள் இப்படியான ஏற்பு எதையும் A school- களுக்கு வழங்கவில்லை எனக் கூறினர்.  சி.பி.எஸ்.இ. ஏற்பது என்பது ஆறாம் வகுப்பிற்குப் பின்பே சாத்தியம்.  நர்சரி முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பாட வாரிய அனுமதியில் மட்டுமே இயங்க முடியும்.  கேந்திரிய வித்யாலயா பாடப் புத்தகம் ஒன்றைச் சொல்லிக்கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் மத்திய அரசு அனுமதி பெற்றுள்ளதாகச் சொல்வது பச்சை ஏமாற்றே.    எனவே இப்பள்ளிகள் சி.பி.எஸ்.இ. ஏற்புடன் செயல்படுகின்றன என்பதும் முழுப் பொய்.

 பொய் 3:

             சி.பி.எஸ்.இ. ஏற்பு மட்டுமல்ல.  வேறு எந்த வகை ஏற்புமே பெறப்படவில்லை என்பதே உண்மை.   சென்ற  மாதத்தில்  பெற்றோர்கள் தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி இயக்குநர் முனைவர் மணி அவர்களைச் சந்தித்து விசாரித்த போது அப்படியான பள்ளிகள் நடப்பது குறித்து தங்களிடம் தகவல்கள் இல்லை எனவும் புகார்கள் இருந்தால் காவல் நிலையத்திற்குச் சென்று தருமாறும் கூறியுள்ளார்.  ஒவ்வொரு கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி (DEEO) அலுவலகத்திலும் நர்சரிப் பள்ளிகளை கண்காணிக்க உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் (AEEOs) உள்ளபோது, தொடக்கக் கல்வி இயக்குநர் பெற்றோர்களின் புகாரை ஏற்று உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கலாம், அல்லது உரிய அதிகாரியைச் சென்று சந்திக்குமாறு அறிவுறுத்தியிருக்கலாம்.  அப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடக்கக் கல்வி இயக்குநர், பொறுப்பைத் தட்டிக் கழித்தது கண்டிக்கத்தக்கது.  எனினும் பிரச்சினை முற்றி வீதிக்கு வந்தபின் இயக்ககம் விழித்துக் கொண்டு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நாகராஜ முருகனை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு பணித்துள்ளது.  அவரும் தற்போது அறிக்கை அளித்துள்ளார்.  மாநில அரசிடமோ இல்லை, மத்திய கல்வி வாரியத்திடமோ யாரிடமும் எந்த அனுமதியும் இல்லாமல் கடந்த நான்காண்டுகளாக செட்டிநாடு  A school-கள் செயல்படுவதை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நாகராஜ முருகன்  உறுதி செய்தார்.

பொய் 4:

            போரூர், பள்ளிக்கரணை, மாதவரம், முகப்பேர் முதலான இடங்களில் பெரிய அளவில் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கட்டப்படுமென அளித்த வாக்குறுதி குறித்து நிர்வாகம் இதுவரை பத்திரிக்கைகளில் விளம்பரம் அளித்தது தவிர வேறு எந்த முயற்சியும் செய்யவில்லை.  நிலம் எதுவும் வாங்கப்பட்டதாகவும் தெரியவில்லை என்றும் எங்களைச் சந்தித்த நிர்வாகப் பிரதிநிதிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த இடங்களில்  பள்ளி தொடங்குவதற்கானப்  பூர்வாங்க வேலைகள் முடிந்துவிடும் என்றனர்.


நடைமுறையிலுள்ள A school-களின் தரமின்மை:


            தற்போதுள்ள A school கள் பெரும்பாலும் வணிக வளாகங்களுக்கு மத்தியிலும் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில்  உள்ள கட்டிடப்பகுதிகளிலும் வீடுகளிலுமே செயல்படுகின்றன. சிறு குழந்தைகள் கல்வி பயிலுவதற்கான அடிப்படைத் தகுதிகள் எதுவுமற்ற கட்டிடங்கள் இவை.  எடுத்துக்காட்டாக வண்ணாரப்பேட்டை  A school ஒரு வங்கி மற்றும் ATM அமைந்துள்ள கட்டிடத்தின் மாடியில் உள்ளது.  மேலேறிச் செல்வதற்கு ஒரே ஒரு மாடிப்படிதான் உண்டு.  அதுவும் கூட போதிய அளவு அகலமாக இல்லை.  இப்படியான ஒரு சூழலில் தீ விபத்து ஏற்பட்ட போதுதான் ஓடித் தப்ப இயலாமல் 93 குழந்தைகள் கும்பகோணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிருடன் எரிந்து சாம்பலாயினர். அகன்ற இரு மாடிப்படிகள் உள்ள கட்டிடங்களில்தான் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் அமையவேண்டும் என்பதும் மழலையர் வகுப்புகள் மாடிகளில் அமையக்கூடாதென்பதும் விதிமுறை.


            தவிரவும் இக்கட்டிடத்தின் உச்சியில் இரு செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இத்தகைய டவர்களிலிருந்து கசியும் கதிரியக்க ஆபத்து பற்றி தொடர்ந்து பத்திரிக்கைகளில் செய்திகள் தற்போது வருகின்றன.  எனினும் இப்பள்ளி நிர்வாகி தாரிணி இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் ஆபத்தான வரம்பிற்கு மிகமிகக் குறைவாக உள்ளது என மதுரையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் பெற்றுள்ள சான்றிதழ் ஒன்றை எங்களிடம் காட்டினார்.  ஆனால் தங்கள் பிள்ளைகள் சில சமயங்களில் வலிப்பு முதலிய நோய்களுக்கு ஆளாவதற்கு இதுதான் காரணமென  பெற்றோர்கள் சிலர்  எங்களிடம் கூறினர்.  இதுகுறித்து முறையாக விசாரிக்கப்படுதல் வேண்டும்.  சென்னையில் எத்தனையோ நிறுவனங்கள் உள்ளபோது ஏன் மதுரையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் சென்று  ஒரு சான்றிதழைப் பெற்றுள்ளனர் எனப் புரியவில்லை.


            அசோக் நகர் 18-வது அவென்யூவிலுள்ள .A school குடியிருப்பதற்கான வீடு ஒன்றில் அமைந்துள்ளது.  தலைமை ஆசிரியருக்குச் சமமான பொறுப்பிலுள்ள நிர்வாகி அமர்வதற்கு ஒரு அறை கூட அங்கு கிடையாது.  ஒரு வாட்ச் மேனைப் போல வாசலில் போடப்பட்டுள்ள ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார்.  விளையாடுவதற்கான போதிய இடம், மாணவர் எண்ணிக்கைக்குத் தகுந்த கழிப்பறை வசதிகள் இந்தப் பள்ளிகளில் கிடையாது.  மிகச்சிறிய ஒரு கொல்லைப்புறத்தில் ஒரு சிறு ஊஞ்சல், சறுக்கை முதலியவை ஒப்புக்கு அமைக்கப்பட்டுள்ளன.  பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதற்குச் சாத்தியமேயில்லை. இது குறித்துக் கேட்டதற்கு, "பிள்ளைகள் விளையாடவேண்டுமென்றால் பெற்றோர்கள் 'பார்க்'களுக்கு அழைத்துச் செல்லவேண்டியதுதானே?" எனப் பொறுப்பற்று பதில் கூறினர்.


                குடியிருப்பு வீடுகளின் படுக்கையறையுடன் இணைந்த டாய்லெட்டுகளை குழந்தைகள் பயன்படுத்தும் நிலையும் உள்ளது.  தூய்மையற்ற மிகச்சிறிய, நெருக்கமாக அமைக்கப்பட்ட கழிப்பறைத் தொட்டிகள் சில பள்ளிகளில் உள்ளன.  எல்லா மாணவர்களும் ஒரு சேர இவற்றைப் பயன்படுத்துவதன் விளைவாக சிறுநீர்த் தொற்றுகள் வருவதாகவும் பொதுவான சுகாதாரமின்மையால் அடிக்கடி தொற்று நோய்கள், சிரங்கு முதலானவைகளால் பாதிக்கப்படுவதாகவும் பல பெற்றோர்கள் எம்மிடம் முறையிட்டனர். இதுகுறித்துக் கேட்டதற்கு, "தொற்றுநோய் எங்கள் பள்ளியிலிருந்துதான் வரவேண்டுமா? வேறெங்கும் தொற்றியிருக்கக்கூடாதா?"  என நிர்வாகத்தின் சார்பாக பதில் அளிக்கப்பட்டது.


            இந்த ஆண்டு  ப்ராஞ்சைஸ் முறையில்  தொடங்கப்பட்ட அடையாறு  A  school -ன்  நிர்வாகி சுந்தர்ராஜன் “கட்டிட உறுதிச் சான்று, சுகாதாரச் சான்று, தீ தடையின்மைச் சான்று ஆகியவற்றை பெற வேண்டுமா?” என்று  A school நிறுவனரிடம் கேட்ட போது, “அவற்றை நாங்கள் ‘டீல்’ செய்து கொள்கிறோம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியதாக எங்களிடம் தெரிவித்தார்.


            வகுப்பறைகளும் நெருக்கமாகவே அமைந்துள்ளன.  பள்ளிக்கட்டிடங்கள் என்ற நோக்கமின்றி கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கோ, குழந்தைகள் இதரப் பயிற்சிகள் பெறுவதற்கோ எள்ளளவும் தகுதியற்றவையாக உள்ளன.

 வெளிப்படைத் தன்மையின்மை:

            இப்பள்ளிகளின் செயல்பாடுகள் முற்றிலும் வெளிப்படைத்தன்மை அற்றவைகளாக உள்ளன.  ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து உருவாக்க வேண்டிய பருவத்திலுள்ள இக்குழந்தைகள் குறித்து  முழுமையான செய்திகள் எதையும் பள்ளியிலிருந்து பெற இயலாததை பெற்றோர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.  பள்ளி நிர்வாகிகளிடம் எதைக் கேட்டாலும் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட பிறகே தகவல் சொல்கின்றனர்.   பிரச்சினைகளை முன் வைக்கும்போது நிறுவனரிடம் சொல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். நிறுவனர் எளிதில் அணுகப்படக் கூடியவர் அல்ல.  முன்னதாக அப்பாயின்ட்மெண்ட வாங்கியே சந்திக்க வேண்டும்.  மின்னஞ்சல்கள் மூலமாகவே சந்திக்க விண்ணப்பிக்க வேண்டும்.  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதில்லை.  பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்கள் என நடத்தப்படும் நிகழ்வுகளில் எல்லாப் பெற்றோர்களையும் நிர்வாகம்  ஒரு சேர சந்திப்பது இல்லை.  இடமில்லை என்கிற காரணம் எங்களிடம்  சொல்லப்பட்டது.  பொதுவான பிரச்சினைகளை நிர்வாகத்திடம் முன் வைக்கும்போது,  “பொதுவானவற்றை இங்கு பேசக்கூடாது.  உங்கள் குழந்தைக்கு தனிப்பட்ட பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள்” எனத் தாங்கள் எச்சரிக்கப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.  நிறுவனர் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும் குறைகள், அய்யங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையான பதில்கள் இல்லை. 

பயிற்சியின் தரமின்மை:

            குழந்தைப் பருவத்தில் 10 அல்லது 15 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர், உதவியாளர் இருத்தல் அவசியம்.  ஆனால் பல A school-களில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவரே பொறுப்பாக உள்ளார்.  இந்த ஆசிரியர்கள் முறையான ஆசிரியப் பயிற்சி பெற்றவர்கள்தானா என்பது அய்யமே.  அடையாறு A school நிர்வாகி திரு. சுந்தர்ராஜன் இவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பெற்றவர்கள் அல்ல  என்பதை ஏற்றுக் கொண்டார். A school நிர்வாகம் ஏதோ ஒருவகை பயிற்சி அளித்து அனுப்புவதாகச் சொன்னார்.  இங்கு படிக்கும் குழந்தைகள் U.KG. முடித்த பிறகும் கூட எழுத்துகளை முழுமையாக எழுதத் தெரியாதவர்களாகவும் எண்களைச் சொல்ல இயலாதவர்களாகவும் உள்ளனர்.  எழுத்துப் பிழைகளுடன் கூடிய சொற்களை ஆசிரியர்கள் பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்களில் எழுதியிருப்பதை பெற்றோர்கள் எங்களிடம் காட்டினர்.  இது குறித்து நிர்வாகத்திடம் கேட்ட போது,  “வயதான ஆசிரியை.  தெரியாமல் செய்து விட்டார்” எனப் பொறுப்பற்று பதில்கள் சொல்லப்பட்டுள்ளன.இங்கு படிக்கக் கூடிய பிள்ளைகள் பிற பள்ளிகளில் படிக்கும் சம வயதுக் குழந்தைகளுடன் ஒப்பிடும்  போது மிகவும் கல்வித் தரம் குறைந்துள்ளனர் எனப் பெற்றோர்கள் கண் கலங்கக் கூறினர்.


             குழந்தைகளிடமிருந்து கல்விப் பொருட்களுக்கென ரூ. 6300/- வரை வசூலிக்கப்பட்டாலும் சென்ற ஆண்டில் நான்கே நான்கு நோட்டுப் புத்தகங்களும் சில பயிற்சித் தாள்க லும்  மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.   எழுத்துக்கள், படங்கள் உள்ள புத்தகங்களோ, குறுந்தகடுகளோ எதுவும் குழந்தைகளுக்கு தரப்படவில்லை.  இது குறித்துக் கேட்டபோது, “நாங்கள் செயல்வழிக் கல்வி முறையில் பயிற்றுவிக்கிறோம்” என பதில் சொல்லப்பட்டதாக ஒரு பெற்றோர் கூறினார்.  ஒரு பக்கம்  சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்றும் மறுபக்கம்  செயல்வழிக்கல்வி முறை (ABL) என்றும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் பதில்கள் சொல்லப்படுகின்றன.

சற்றும் பொருத்தமற்ற கல்விக் கட்டணம்:

            இப்பள்ளியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 1800/-. சேர்க்கைக் கட்டணம் ரூ. 9000/-.  பருவக் கல்விக்கட்டணம் (Term Fees) 3 X 9600 ரூபாய்.  பள்ளி நேரத்தில் குழந்தைகளுக்கு சிறு தீனி வழங்க வேண்டுமானால் குழந்தைக்கு மாதம் ரூ. 450/-.   வீட்டிலிருந்து குழந்தைகளை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வர பருவம் ஒன்றிற்கு ரூ. 6900/-.  டாடா மேஜிக் வாகனத்தில் குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அழைத்து வரப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  குழந்தைகளை அழைத்து வருவதற்கான உரிமம் பெற்ற வாகனங்கள் அல்ல இவை. வசூலிக்கப்படும் கட்டணங்கள் எதற்கும் ரசீது தரப்படுவதில்லை.

            மேற்கண்ட கட்டணங்கள் தவிர நிர்வாகக் கட்டணம் எனச் சொல்லி மேலும் ரூ. 9800/- கட்டுமாறு தற்போது பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதையொட்டியே பிரச்சினை எழுந்துள்ளது.  இது எதற்கு எனக் கேட்ட போது குழந்தைகளுக்கு பாட்டு, அபாகஸ், சமையல் கற்றுத் தருவது, இ-மெயில் முகவரி உருவாக்குவது முதலான காரணங்களுக்காக  வசூலிக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளன. நர்சரி வயதுப் பிள்ளைகளுக்கு சமையல் பயிற்சி என்பதும் மின்னஞ்சல் முகவரி உருவாக்குவதற்கு கட்டணம் வசூலிப்பதும் நகைப்பிற்கிடமாக மட்டுமின்றி தனியார் நிறுவனங்களின் கல்விக் கொள்ளைக்கும் சான்றாக இருக்கின்றன.  தவிரவும் கடவுச்சொல்லை (Password) ரகசியமாக வைத்துக் கொள்ளத் தெரியாத பச்சிளம் குழந்தைகளுக்கு மின்னஞ்சல் முகவரி தயாரித்து அளிப்பது வேறு பல சிக்கல்களுக்கு இட்டுச் செல்வதற்கும் வாய்ப்புண்டு.  பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ கொடுப்பதாகச் சொல்வதும் அபத்தமாக  உள்ளது.  அப்படி எதுவும் வழங்கப்படவும் இல்லை.  பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையும் யாரும் போலியாகத் தயாரிக்கக் கூடியதாக உள்ளது.  இந்த வகையில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பும் இல்லை.  நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கப்படும் இந்த ரூ. 9800/-ல் ரூ. 6300/- கல்விப் பொருட்களுக்கான கட்டணமென்று சொல்லப்படுகிறது.  இதற்கு 4 நோட்டுகளும் சில பயிற்சித்தாள்களும் மட்டும் கொடுக்கப்பட்டதை முன்பே குறிப்பிட்டோம்.

        இந்த சிறப்புக் கட்டணம் குறிப்பிட்ட தேதியில் கொடுக்க வேண்டுமென எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ரூ. 100/- அபராதம் வசூலிக்கப்படுகிறது.  இந்தக் கூடுதல் கட்டணத்தை ஏற்க மறுத்து உரிய நாளில் கட்டாத பெற்றோரின் குழந்தைகள் மற்ற பிள்ளைகளிடமிருந்து பிரித்துத் தனியே உட்கார வைக்கப்படுகின்றனர்.  இவ்வாறு தனித்து உட்கார வைக்கப்படுவதால் பயந்து மன அழுத்தத்திற்கு உள்ளான குழந்தைகள் வீட்டிற்கு வந்து பெற்றோர்களிடம் அழுகின்றன.  தாமதத்திற்காக ரூ. 1000/- அபராதத்துடன் கட்டணத்தைச் செலுத்த வந்த ஸ்ரீலேகா எனும் பெண்மணியை நாங்கள் வண்ணாரப்பேட்டையில் சந்தித்தோம்.

 குழந்தைகள் மிரட்டப்படுதல்:
      
                  கட்டணம் கட்டாத குழந்தைகள் தனித்து அமர வைப்பது தவிர இருட்டறையில் அடைத்து விடுவோம் எனச் சொல்லி மிரட்டுவதும் பிற குழந்தைகளை விட்டுத் தவறு செய்வதாக கருதப்படும் குழந்தைகள் அடிக்கப்படுவதும் நடப்பதாகப் பெற்றோர்கள் எங்களிடம் கூறினர்.  நன்றாகப் பயிற்சிகள் செய்வதாக மதிப்பிடப்படும் குழந்தைகளின் கையில் நட்சத்திர அடையாளமிட்டு அவர்கள் தரம் பிரித்துக் காட்டப்படுகின்றனர்.  பச்சிளம் குழந்தைகளிடம் இவ்வாறு தரம் பிரித்துக் காட்டுவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஓன்று.  கல்வி உரிமைச் சட்டத்தின்படி குழந்தைகள் மிரட்டப்படுவதும் தண்டிக்கப்படுவதும் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.குழந்தைகளைத் தனியே அமரவைப்பது தண்டனை நோக்கத்தில் அல்ல, சிறப்புக்கட்டணம் கட்டாத குழந்தைகளை உரிய பயிற்சி நடக்கும்போது தனியாகத்தானே உட்கார வைக்கமுடியும் என்பது  நிர்வாகத்தின் பதிலாக இருந்தது.சிறப்புப் பள்ளிகளைப் பள்ளி முடிந்த பின்பு மற்ற குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டுத்தான் நடத்தவேண்டும். பள்ளி நேரத்தில் எப்படிச்  சிறப்புப் பயிற்சி நடத்த இயலும்?

 எமது பார்வைகள்:
      
            மழலையர் கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வி வணிகப் பொருளாக (Traded Good) மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று கல்வி என்பது பெரு முதலாளிகள், கார்ப்பரேட்டுகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் கொள்ளைக்களமாக உருவாகியுள்ளது.  உலகமயச் சூழலில், போட்டி மிகுந்த இவ்வுலகில் தரமான கல்வி என்பது வாழ்வின் முக்கிய ஆதாரமாக மாறி விட்டதால் எவ்வளவு பணம் கொடுத்தும் தம் குழந்தைகளைத் தரமான பள்ளிகளில் சேர்க்கப் பெற்றோர்கள் தயாராக இருப்பதை இவர்கள் தம்முடைய லாப நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.  எள்ளளவும் அறமும் நீதியும் இல்லாத நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  மத்திய தர, உயர் மத்திய தர வர்க்கத்தினரிடம் நிறைந்துள்ள புகழ்மிக்க சந்தைப்பெயரின் (Brand Names) மீதான கவர்ச்சி இவர்களுக்குச் சாதகமாக அமைகிறது.  அரசுப் பள்ளிகளில் அகக்கட்டுமானங்கள் இல்லை, பொறுப்பான ஆசிரியர்கள் இல்லை என்பன போன்ற கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டிருப்பதன் விளைவாக தனியார் பள்ளிகள் மீதான மோகம் இன்று அதிகரித்துள்ளது.  உண்மையில் பல அரசுப் பள்ளிகளில் உள்ள அடிப்படை அகக்கட்டுமானங்கள் கூட பல தனியார் பள்ளிகளில் இருப்பதில்லை என்பதற்கு A school முதலியவை சாட்சி.  93 குழந்தைகள் எரிந்து  சாம்பலான குடந்தைப் பள்ளியும் ஒரு தனியார் பள்ளியே.  குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப் பளுவுடன் பயிற்சியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் தனியார் பள்ளிகளில்தான்.

            இந்நிலையில் 5ஆம் வகுப்பு அல்லது 8ஆம் வகுப்பு வரை எவ்வித மேற்பார்வையும் கண்காணிப்பும் இன்றி தனியார் பள்ளிகள் செயல்படக் கூடிய வாய்ப்பு அமைந்திருப்பது ரொம்பவும் ஆபத்தானது; ரொம்பவும் வருந்தத்தக்கது.  பள்ளிகளுக்கு உரிய அனுமதிகள் பெறுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கவேண்டுமென்ற நிபந்தனை இருப்பது, இப்படி அனுமதிகள் இல்லாமல் பள்ளிகள் செயல்படுவதற்கு ஒரு காரணமாக உள்ளதை  தொண்டு நோக்கில் பள்ளி ஒன்றை நடத்திவரும் பேரா.கல்விமணி குறிப்பிட்டார்.

           குடந்தை தீ விபத்து, கரியாப்பட்டினம் பள்ளி வேன் விபத்து போன்றவை  நடந்துள்ள பின்னணியில் சிறு குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.  ஆனால் A  school போன்ற அனுமதி பெறாத பள்ளிகள் தமிழகத்தில் ஏராளமாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.  நர்சரி பள்ளிகளுக்கான உதவிக் கல்வி அலுவலர்கள் பணியிலிருந்தும் இது போன்ற பள்ளிகள் இதுவரை அரசின் கவனத்திற்கு வராமல் இருப்பது வியப்பை அளிக்கிறது.  36  A school  -கள் சென்னையில் இருப்பது தனக்கு இதுவரை தெரியாது என்பதை முதன்மைக் கல்வி அலுவலர் ஒத்துக் கொண்டார்.  செட்டிநாடு குழுமமும், செட்டிநாடு பவுண்டேஷ­னும் வேறு வேறா, இல்லை ஒன்றுதானா என்கிற குழப்பம் உள்ளதையும்  நாங்கள் அவருக்கு விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது.

         A school பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை இனி வேறு பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது சிரமம். சென்னை நகரிலுள்ள பள்ளிகளில் இதுபோன்ற வேறு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை.  போதிய பயிற்சி இல்லை என இக்குழந்தைகளை நிராகரிக்க வாய்ப்பும் உண்டு.  இதனால்  A school களில் படித்து வரும் 4000 குழந்தைகளின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.  விரக்தியுற்ற நிலையிலேயே பெற்றோர்கள் மிகவும் தன்னெழுச்சியாக ஜுலை 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.  நிர்வாகம் தங்களுடைய கேமராவை அங்குள்ள போலீஸ்காரர்களிடம் கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்த பெற்றோர்களைத் தனித்தனியே படம் பிடித்து அச்சுறுத்தியுள்ளது. போலீஸ்காரர்களும் இதற்கு ஒத்துழைத்துள்ளனர்.

பரிந்துரைகள்:

 01. நர்சரி பள்ளி முதல் உயர்கல்வி வரை முழுமையான அனைத்து அனுமதிகளையும் பெற்ற பின்னரே அதற்கான பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.  இதற்குரிய சட்டத்திருத்தம் உடனடியாகச் செய்யப்பட வேண்டும்.  அனுமதி பெறுவதற்கு குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை தேவை போன்ற நிபந்தனைகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும்.கல்வியைப் பொதுப்பட்டியலில் வைத்துள்ள மத்திய அரசு இப்போது International School  முதலான பெயர்களில் ஏகப்பட்ட  பள்ளிகள் தொடங்கப்படுவதை உரிய சட்டங்கள் இயற்றி ஒழுங்குப்படுத்தாமல்  இருப்பது கண்டிக்கத்தக்கது.

 02. மாநிலங்களில் இயங்கும் மத்திய வாரியப் பள்ளிகள், பன்னாட்டுப் பள்ளிகள், 'பிளே வே' பள்ளிகள் எதுவான போதிலும் அவற்றின் மீது மாநில அரசின் கட்டுப்பாடுகள் இருப்பது அவசியம்.  இதை நாங்கள் சந்தித்த முதன்மைக் கல்வி அலுவலரும் அனுபவப்பூர்வமாக வற்புறுத்தினார். அனுமதியில்லாமல் , போதிய அடிப்படைத் தரமும் இன்றி  A school  பள்ளிகள் நடைபெற்றபோதிலும் இது குறித்து தான் அறிக்கைதான் அளிக்க முடியுமே ஒழிய நடவடிக்கை இயலாது என முதன்மைக் கல்வி அலுவலர் கூறினார்.

03. தமிழகத்தில் புற்றீசல்கள் போல் முளைத்துள்ள அனுமதி பெறாத பள்ளிகளைக் கண்டறிய உடனடியாகக் குழு ஒன்றை அமைத்து அவற்றை அடையாளம் கண்டு தடை செய்ய வேண்டும்.  அனுமதி பெறாத பள்ளியின் பட்டியலை பத்திரிக்கைளில் அரசு வெளியிட வேண்டும்.

04. பல பொய்களைச் சொல்லி ஏமாற்றி நடந்து கொண்டிருக்கக் கூடிய  A school பள்ளிகள் அனைத்தையும் உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும்.  இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அருகிலுள்ள தரமான பள்ளிகளில் இடம் கிடைக்க அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

05. சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் எஸ்.நாகராஜ முருகன்  A school    பற்றி விசாரித்து அளித்த அறிக்கையை பகிரங்கமாக வெளியிடவேண்டும். பள்ளிகள் அனுமதி பெறுவதற்கான தமிழக அரசின் நிபந்தனைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை இப்பள்ளிகள் பூர்த்தி செய்துள்ளனவா என்பது தெளிவாக்கப்படவேண்டும்.

06. ‘செட்டிநாடு’ என்னும் சந்தைப் பெயரை ஏமாற்றிப் பயன்படுத்தியது மாநகரின் 4 இடங்களில் பள்ளிகள் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகப் பொய் சொல்லியது, சி.பி.எஸ்.இ. ஏற்புப் பெற்றுள்ளதாக பெற்றோர்களின் தவறான நம்பிக்கையைப் பரப்பியது, அபத்தமான காரணங்களைச் சொல்லி சிறப்புக் கட்டணம் வசூலித்தது ஆகிய  குற்றங்களுக்காக செட்டிநாடு பவுண்டே­ஷன் நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   07. தற்போது தங்களது சந்தைப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ள செட்டிநாடு கார்ப்பரேட் குழுமம் இதுநாள் வரை அமைதி காத்து மேற்காணும் ஏமாற்றுதல்களுக்குத் துணை போனதற்காக அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். செட்டிநாடு குழுமம்,செட்டிநாடு பவுண்டேஷன்,செட்டிநாடு  வித்யாஷ்ரம் ஆகியவற்றுக்கிடையேயான உறவை வெளிப்படையாக அது பத்தரிக்கைகளில் அறிவிக்கவேண்டும். பொய்யான நம்பிக்கைகளை ஊட்டி மக்களை ஏமாற்றும் விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது எனவும் வேண்டுகிறோம்.  “அதிகம் படித்த மூஞ்சூறு கழனிப் பானைக்குள் விழுந்ததாம்” எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு.  மெத்தப்படித்து, நிறைய ஊதியம் பெறுகிற மத்திய தர, உயர் மத்திய தர வர்க்கப் பெற்றோர்கள் இப்படி முத்திரைப்  பெயர்களைப் பார்த்து ஏமாறாமலிருப்பதில் கவனம் தேவை என எச்சரிக்கையும் செய்ய வேண்டியிருக்கிறது.

தொடர்பு முகவரி:

அ. மார்க்ஸ்,
3-5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
அடையாறு,
சென்னை - 600 0020. 
செல்: 9444120582.



இணைப்பு:

மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசு அறிவித்திருக்கும் நிபந்தனைகள்



01. கட்டிட உறுதிச் சான்று.
(மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரின் ஒப்புதல் / தொடர் ஒப்புதல், அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை)

02. குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒப்புதல் கட்டணம் (ஒரு ஆண்டுக்கு)

                        மாணவர்கள் எண்ணிக்கை                                     தொகை
                                    100 வரை                                                       ரூ. 500
                        251 முதல் 250 வரை                                              ரூ. 1250
                        251 முதல் 500 வரை                                              ரூ. 2500
                                    500க்கு மேல்                                                ரூ. 2500

            500க்கு மேல் உள்ள மாணவர் ஒருவருக்கு ரூ. 5 வீதம் கூடுதலாக செலுத்தப்பட வேண்டும்

03. கட்டிட உரிமைச் சான்று பெற்ற காலத்திற்கு பள்ளியின் பெயரில் ஏற்படுத்த வேண்டிய வைப்பு நிதி (Fixed Deposit)

                    மாணவர்கள் எண்ணிக்கை                                     தொகை
                                    100 வரை                                                       ரூ. 5000
                        251 முதல் 250 வரை                                              ரூ. 7500
                        251 முதல் 500 வரை                                              ரூ. 15000
                                    500க்கு மேல்                                                ரூ. 25000

04. சுகாதாரச் சான்று  (Sanitary Certificate)
            (அப்பகுதி உதவி சுகாதார அலுவலரால் அளிக்கப்படும் இச்சான்று ஓராண்டு செல்லுபடியாகும்)

05. தீ தடையின்மைச் சான்று   (Fire No - Objection Certificate)
            (அப்பகுதி நிலைய தீயணைப்பு அலுவலரால் தரப்படும் இச்சான்றும் ஓராண்டு செல்லுபடியாகும்)

06. பள்ளியின் வரைபடம் (Blue Print)

          (கட்டிட உறுதிச் சான்று அளித்த பொறியாளரால் அளிக்கப்பட வேண்டும்)

07. பள்ளியின் வரைபடம் மாநகராட்சி / நகராட்சி ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.

08. பள்ளிக்கட்டிடம் / இடம் சொந்தமானது எனில் அசல் பத்திரம் இருக்க வேண்டும்.  வாடகையெனில் 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

09. ஒப்புதல் எனில் ரூ. 1500 பதிவு கட்டணம்.  புதுப்பித்தல் என்றால் கடந்த 3 ஆண்டுகளுக்கு பள்ளியின் தணிக்கை அறிக்கை Charted Accountant-டம் பெறப்படுதல் அவசியம்.

 10. பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம்.  ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஒரு மாத ஊதியத்திற்கு குறையாத தொகை பள்ளியின் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்பட வேண்டும்.

11.ஆசிரியர்களிடம் ஒப்பந்தப் பத்திரம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

12. விளையாட்டிடம் உள்ளதா? வளாகத்திலா? அருகிலா? எவ்வளவு தொலைவில்? விளையாட்டிடம் பள்ளிக்குச் சொந்தமானதா / வாடகையா? அதற்குரிய பத்திரம் / ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

13. பள்ளி ஒரே கட்டிடம் அல்லது வெவ்வேறு கட்டிடங்களில் நடைபெற்றால் அவை இரண்டிற்குமிடையேயுள்ள தொலைவு.  அங்கு நடைபெறும் வகுப்புகள் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.  வெளியேறும் வசதிகள் இருக்க வேண்டும்.  மாடிகள் இருப்பின் இருபக்கமும் மாடிப்படிகள் அகலமாக அமைந்திருக்க வேண்டும்.

14. L.K.G., U.K.G. வகுப்புகள் கண்டிப்பாக தரைத் தளத்தில்தான் நடைபெற வேண்டும்.  மாடியில் இருக்கக் கூடாது.

15. ஓலை அமைப்புகள் இருக்கக் கூடாது.  எதிர்காலத்திலும் அமைக்க மாட்டேன் என்ற உறுதி மொழி அளிக்க வேண்டும்.

16. பள்ளியின் நிர்வாகம் மாறினால் அதற்கு உரிய ஒப்புதல் அரசிடம் பெற வேண்டும்

17. பள்ளிக்கு அருகில் மதுக்கடை, ஓட்டல், சமையலறையுடன் கூடிய விடுதிகள் ஆகியன இருக்கக் கூடாது. சத்துணவு சமையலறை வகுப்பறையுடன் இணைத்து அமைக்கப்படாமல் தனியாக அமைக்கப்பட வேண்டும்.

18. கரும்பலகைகள், இருக்கைகள், கல்விச் சாதனங்கள், நூலகப் புத்தகங்கள், விளையாட்டுக் கருவிகள் ஆகியன போதிய அளவில் இருக்க வேண்டும்.

19. அனைத்து வகுப்புகளுக்கும் தமிழ் முதல் மொழியாக கட்டாயமாக போதிக்கப்பட வேண்டும்.  பகுதி 3-ல் இரு பாடங்கள் தமிழ் வழியில் நடத்தப்பட வேண்டும்

20. 20 மாணவர்களுக்கு 1 யூனிட் என்ற விகிதத்தில் கழிவறை வசதிகள் இருக்க வேண்டும்

21. சுகாதாரமான குடிநீர் வசதிகள் இருக்க வேண்டும்

22. உறுதியான கட்டிடங்கள், நல்ல காற்றோட்டம், வெளிச்ச வசதி, மாணவர்கள் அமர்வதற்கு போதுமான இடவசதியுடன் உள்ள தனித்தனி வகுப்பறைகள் அமைக்கப்பட வேண்டும்.

23, கல்விக் கட்டணக் குழு ஆண்டிற்கு நிர்ணயம் செய்த தொகைக்கு மிகாமல் கல்விக் கட்டணம் இருக்க வேண்டும்.

24.  Trust / Committee Deed பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

25. பள்ளி வளாகம் மாணவர்களுக்கு பாதுகாப்பானது என்றும் அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அரசிடமிருந்து எவ்வித நிதியுதவியும் கோரமாட்டோம் என்றும் நிர்வாகம் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

(மாவட்ட பள்ளிக்கல்வி அலுவலகத்திலிருந்து பெறப்பட்டது.)

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

கல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றப் பயன்படும் ஓர் ஆய்விதழ்

கல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றப் பயன்படும் ஓர் ஆய்விதழ்-

சிற்றிதழ் அறிமுகம் -மாற்றுவெளி ஆய்விதழ்

                                                                                                                                                                                                                                    - மு. சிவகுருநாதன்



                     சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேரா. வீ. அரசுவை சிறப்பாசிரியராகக் கொண்டு மாற்றுவெளி - ஆய்விதழ் இதுவரை கீழ்க்கண்ட ஆறு முக்கிய தலைப்புக்களில் இதழை வெளியிட்டுள்ளது.

 01. கால்டுவெல் சிறப்பிதழ்
 02. இந்தியப் பொருளாதாரச் சிறப்பிதழ்
 03. கல்விச் சிறப்பிதழ்
 04. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சிறப்பிதழ்
 05. தமிழ் நாவல் சிறப்பிதழ் (1990 - 2010)
 06. மாற்றுப் பாலியல் சிறப்பிதழ்


            தமிழில் இவைகள் குறிப்பிடத் தகுந்த முயற்சி என்பதில் அய்யமில்லை.  அறிஞர் கால்டுவெல்லின் A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages   என்ற ஒப்பிலக்கண நூலின் மூன்றாவது பதிப்பில் பல பக்கங்கள் நீக்கப்பட்டன.  நீக்கப்பட்ட பக்கங்களைச் சேர்த்து கவிதாசரண் வெளியிட்டார்.  இதன் பின்னால் பொ. வேல்சாமி போன்ற பலரது உழைப்பு  இருந்தது.  இது தமிழ்ச்சூழலில் பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்தது.


              கால்டுவெல்லின் இப்புதிய பதிப்பு குறிப்பு 24.04.2008 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழிலக்கியத்துறை ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கட்டுரைகளும் கால்டுவெல் பற்றி பேரா.தொ.பரமசிவன் நேர்காணலும் மாற்றுவெளி முதல் இதழை அலங்கரித்தன.   வீ. அரசு, எம். வேதசகாயகுமார், அ. மங்கை, வ. கீதா ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரைகள் மூலம் திராவிட இயல், கால்டுவெல்லின் பதிப்புகள், பிற நூற்கள், கால்டுவெல் குறித்த மாறுபட்ட பார்வைகளை முன் வைக்கப்பட்டன.


             பொருளாதாரச் சிறப்பிதழான இரண்டாவது இதழில் ‘சென்னை அரசியல் பள்ளி’ ஜனவரி 24, 2009இல் ‘இந்தியா அரசு’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் மூவரின் பேச்சுகள் கட்டுரைகளாக்கப்பட்டுள்ளன.  நாகார்ஜுனன் கட்டுரையொன்றும் இடம் பெற்றுள்ளது. 


              மூன்றாவது இதழ் கல்விச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது.  புதிய பொருளாதாரக் கொள்கை - தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் என்ற சூழலில் கல்வி இன்று முழு வியாபாரமாகிப் போனதையும் தமிழகத்தில் தனியார் கல்வி முதலாளிகள் பெருத்துப்போனதையும்
பேரா.ப.சிவக்குமாரின் ‘அறிவு மூலதனமும் பட்டத் தொழிற்சாலைகளும்’  என்ற கட்டுரை புள்ளி விவரங்களோடு எடுத்துரைக்கிறது.  உடலுழைப்பு சார்ந்த உற்பத்தி முறையை கணினிசார் அறிவு உற்பத்தி முறை பெருமளவில் மாற்றி விட்டதையும் அறிவு மூலதனமாக மாறிவிட்ட நிலையையும் இக்கட்டுரை விளக்குகிறது.  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEC - Special Economic Zone) நமது இயற்கை வளங்களை சுரண்டுவதைப் போல சிறப்புக் கல்வி மண்டலங்கள் (SEC - Special Educational Zone) அமைக்க அரசு முயல்கிறது.  இதை உடனடியாக எதிர்க்க வேண்டிய அவசியத்தை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.


           இலக்கியக் கல்வி சுயவாசிப்பு, சமூக பொருளாதார, அரசியல் பின்னணிச் சூழலில் பனுவல்களைப் புரிதல், இலக்கிய வகைகளின் வரலாறு, கூறுகள், மாற்றங்களை இனம் காணுதல், உலகளாவிய சிந்தனைக் களத்தோடு இலக்கியத்தை அறிவுப் பரப்பின் கூறாக அணுகுதல், நெருக்கடியான சூழல்களின் வெளிப்பாடுகளை மதிப்போடு அணுகுதல் ஆகிய தன்மைகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென அ. மங்கையின் ‘இலக்கியக்கல்வி:- பொருத்தப்பாடு மற்றும் திசை வழி’ என்ற கட்டுரை கூறுகிறது.  இலக்கியப் பாடத்திட்டம், கற்றல் முறைகள் இதை நோக்கியதாக அமைவதில்லை என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்.


            தலித்கள் கல்வி உள்பட எந்த உரிமைகளையும் போராடியே பெற வேண்டியுள்ளது என்பதை ‘கல்வியிலிருந்து தலித்துகள் விலக்கப்படுதலும் இணைப்பு முயற்சியும்’ என்ற கோ. இரகுபதியின் கட்டுரை எடுத்துரைக்கிறது.


           பேச்சுத் தமிழிலிருந்து முற்றிலும் அந்நியப்பட்ட வீரமாமுனிவரின் செந்தமிழை ஏற்காத சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் இரேனியஸ் 1814 முதல் 1838 வரை தமிழகத்தில் மேற்கொண்ட கல்விப்பணிகளை  எம்.வேதசகாயகுமாரின் கட்டுரை விவரிக்கிறது.  இரேனியஸ் கல்விப் பணி சாணர்கள், தலித்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இருந்தது.  பிறசாதி மாணவர்களுடன் சேர்ந்து உணவுண்ணா வெள்ளாள மாணவர்கள் மறுத்த போது பாளையங்கோட்டை மாணவர் விடுதியை இழுத்து மூடி அனைவருக்கும் பொதுக்கல்வி என்ற கருத்தை நிலை நாட்டியதை இக்கட்டுரை குறிப்பிடுகிறது.  வ.வே.சு. அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தையும் இதையும் ஒப்பிட வேண்டுமென வலியுறுத்தும் இவர், இரேனியஸ் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டும் கற்பிக்கப்பட்டதையும் தமிழ்வழிக் கல்வி முறை மட்டுமே பின்பற்றப்பட்டதையும் எடுத்துக்காட்டுகிறார்.


            மாயூரம் வேதநாயம் பிள்ளை, ராஜமய்யர், மாதவையர் ஆகிய தொடக்கக் கால நாவலாசிரியர்கள் படைப்புகளில் வெளிப்படும் கல்விச் சிந்தனைகள் குறித்து வெ. பிரகாஷ் கட்டுரை, உ.வே.சா.வின் சரித்திர நூற்கள் வழி அறியப்படும் தமிழ்க் கல்வி முறைகள் குறித்த கன்னியம் அ. சதீஷ் கட்டுரை, கல்வி குறித்த நூற்கள் அறிமுகம் என பக்கங்கள் விரிகின்றன. 


           ஆவணம் பகுதியில் மெக்காலே கல்வி அறிக்கை - 1835 மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.  கல்வி குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணனுடனான உரையாடல் ஒன்று உள்ளது.  கல்வி தொடர்பான தமிழ் -ஆங்கில நூற்கள் மற்றும் அறிக்கைகளின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.


               நான்காவது இதழ் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர்
க. சுந்தரை அழைப்பாசிரியராகக் (Guest Editor) கொண்டு அந்நூலகச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.  6 ஆங்கிலக் கட்டுரைகள், 13 தமிழ்க் கட்டுரைகள் என 144 பக்கங்களில் நிறைந்துள்ளது இவ்விதழ். 


          கோட்டையூர் ரோஜா முத்தையா புத்தகங்களைத் தேடி அலைந்தபோது ஏற்பட்ட அனுபவங்களைக் கூறுகிறார்.  வைணவர்களுக்குத் திருப்பதி எப்படி ஒரு புண்ணிய தலமோ சைவர்களுக்கு காசி எப்படி ஒரு புண்ணிய தலமோ அதைப் போல என் புத்தக சேகரிப்பாளர்க்குச் சென்னை மூர் மார்க்கெட் ஒரு புண்ணிய தலம் என்று கூறும் ரோஜா முத்தையா, மூர் மார்க்கெட் எரிந்து போனதை வாழ்வின் பெருந்துக்கமாகப் பதிவு செய்கிறார்.  இதிலிருந்து புத்தகச் சேகரிப்பில் அவருக்கிருந்த காதல் - தேடல் புலப்படுகிறது.


           ராமாயணத்தில் ராமர் பாலம் கட்ட உதவிய அணிலைப் போன்று இந்த ஆய்வு நூலகம் உருவாக தான் உதவியதாக எழுத்தாளர் அம்பை தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.  இவருக்கு வேறு எந்த உவமையும் கிடைக்கவில்லை போலும்!  இன்று சமூகத் தளத்தில் ராமர் கட்டியதாக நம்பப்படும் பாலம் குறித்து இச்சமூகம் என்ன பாடுபடுகிறது என்ற சிந்தனையில்லாமல் ஒரு படைப்பாளி இருக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று.


                 சு. தியோடர் பாஸ்கரனின் கட்டுரை, ரோஜா முத்தையாவுடனான சந்திப்பு, அவரின் நூலகம் பற்றியும் அதில் சேகரிப்புப் பற்றியும் விரிவாக பேசுகிறது.  இக்கட்டுரையில் கோட்டையூர் நூலக நிலவரம் தற்போது சென்னையில் அமைக்கப்பட்ட ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் பெற்றிருக்கும் வளர்ச்சியினை கோடிட்டுக் காட்டுகிறது.


           ரோஜா முத்தையாவின் பண்புநலன்களையும் அவரின் சேகரிப்புகளை தி.ந. இராமச்சந்திரன் கட்டுரை விளக்குகிறது.  திராவிட இயக்க வரலாற்றைப் பதிவு செய்ய நகரத்தார் சமூகத்தினர் ஆற்றியுள்ள பணிகளைப் பட்டியலிடும் எஸ்.வி. ஆரின் கட்டுரையில் திராவிட இயக்க ஆய்வுக்குத் தேவை திராவிட இயக்கத்தினரின் வெளியிட்ட குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, திராவிடன், உண்மை போன்ற பல்வேறு ஏடுகள் இங்கு தொகுக்கப்பட்டு இந்நூலகம் ‘திராவிட இயக்க ஏடுகளின் பெட்டகமாகத்’ திகழ்வதாக பெருமையுடன்குறிப்பிடுகிறார்.

       தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சிந்துவெளி நாகரிகம், தமிழ் - பிராமி எழுத்துகள் முதலியவை தொடர்பாக தான் சேர்த்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதை இக்கட்டுரை குறிப்பிடத் தவறவில்லை.   இவற்றைக் கொண்டு இந்த நூலகத்தில் ‘சிந்துவெளி ஆய்வு மையம்’ ஒன்று உருவாக்கப்பட்டு சிறப்புறச் செயல்படுவதை ச. சுப்பிரமணியன் கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது.  ஐராவதம் மகாதேவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  நம்முடைய வருத்தமெல்லாம் ஐராவதம் மகாதேவன் போன்ற பெரிய அறிஞர்கள் வரலாற்று, தொல்லியல் புனைவுகள், புரட்டுகள், மோசடிகள் பல மேற்கொள்ளப்படும்போது உரிய எதிர்வினை புரியாமல் மவுனம் காப்பது பற்றித்தான்.


             ரோஜா முத்தையா நூலகத்துறை படிப்புகள் எதையும் படிக்காமல் தாம் சேர்த்து வைத்திருக்கும் நூற்களின் பட்டியலை நுணுக்கமாக கையாண்டிருப்பதை இரா. பிரகாஷ்-ன் கட்டுரை விரிவாக அலசுகிறது.  தமிழ் சினிமா வரலாற்றைப் பதிவு செய்யவும், ஆய்வு செய்யவும் பயன்படும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் பங்கை ராஜன் குறை வெளிப்படுத்துகிறார்.


          அ. மங்கை ‘தமிழ் நாடக வரலாற்று ஆய்வு’ குறித்தும் வீ. அரசு தமிழில் உருவான அச்சு ஆக்கங்கள் - வெகுசனப் பண்பாடு குறித்தும் பேசுகிறது.  இறுதியாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் (RMRL - Roja Muthiah Research Library) சேவைகளை க. சுந்தர் விரிவாக எடுத்துரைக்கிறார்.


         மாற்றுவெளி ஆய்விதழின் 5வது இதழ் தமிழ் நாவல் சிறப்பிதழாக (1990 - 2010) 30 ஆண்டு நாவல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.  இதில் 24 நாவல்களைப் பற்றி குறிப்பும் ஆவணம் பகுதியில் 50 எழுத்தாளர்களின் சுமார் 115 நாவல்கள் பட்டியலிடப்படுகின்றன.  இது முழுமையானதாக இல்லையென்றபோதிலும் இரு மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக கொடுத்த ஆய்வேடு அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லும் போது நமக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது.


           ராஜன் குறை பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவலின் இரண்டு முக்கிய தருணங்களை விளக்கி இந்நாவல் மூலம் பெறச் சாத்தியமாகும் தரிசனங்களைப் பட்டியலிடுகிறார்.  ஜோ. டி. குருஸ் எழுதிய ஆழிசூழ் உலகு, கொற்கை ஆகியன சேர்ந்து 2732 பக்கமுள்ள இரு நாவல்களின் உள்ளார்த்த அரசியலை விமர்சிக்கும் குமார செல்வா, யதார்த்த எழுத்து முறையை மீறி இனியொரு நாவலை அவர் படைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.


              ‘நவீனத்துவத்திற்குப் பின்னரான தமிழ் நாவல்’ குறித்து ஆய்வு செய்து எம். வேதசகாயகுமார் கட்டுரை 2000 ஆண்டு கால தமிழ் மரபு பற்றியும் அதனைப் பின்பற்றிய பெரு நாவல்களைப் பற்றி பேசுகிறது.  பாமாவின் ‘கருக்கு’, சிவகாமியின் ‘ஆனந்தயா’ ஆகியன மட்டும் மரபை முன்னெடுத்துச் செல்லும் தகுதியுடையதாக இருந்ததென்றும் இந்த மரபு இல்லாததனாலே தலித் இலக்கியம் தேக்கநிலைக்குச் சென்றுள்ளதாகவும் கணிக்கிறது.  இவர் குறிப்பிடும் தமிழ் நாவல் மரபு எத்தகையது என்று ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது.  ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’, பின்தொடரும் நிழலின் குரல் வழியேதான் இம்மரபை உணர்ந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.


         நாவலாசிரியன் நல்ல ஆய்வாளனாகவும் இயங்க வேண்டிய கட்டாயத்தை விஷ்ணுபுரம் தோற்றுவித்ததாகச் சொல்கிறார்.  இந்நாவலில் இந்தியத் தத்துவ மரபு முழுமையும் இழையாகத் தொடர்ந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.  இவை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தாயிற்று.  இந்த நாவல் எத்தகைய தத்துவ மரபை முன்னெடுக்கிறது, அதன் சாய்வு  எப்படியாக உள்ளது என்பதை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை.


        வரலாற்று நிகழ்வுகளை புனைவுகளாக மாற்றும் உத்திகளை பொன்னீலனின் புதிய தரிசனங்கள், மறுபக்கம் போன்ற நாவல்கள் செய்ததாகக் குறிப்பிடும்போது இதிலும் உள்ள மாற்றுக் கருத்தை ஏற்காத மனோபாவத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.


       தி.கு. இரவிச்சந்திரன் எழுதியுள்ள கட்டுரை கோணங்கியின் ‘பாழி’ நாவலை லக்கான் துணைகொண்டு ஆய்வு செய்கிறது.  முற்றிலும் கவித்துவ நடையுடன் முற்றுப் பெறாத வாசகங்களுடனுனான புதிர் மொழியில் விரியும் பாழி அறிவு வேட்கையுடன் வாசகனை எதிர் நோக்குகிறது.  லக்கானிய கோட்டிபாட்டின்படி கற்பனை அறிவு (Imaginary Knowledge), குறியீட்டு அறிவு (Symbolic Knowledge) என இரண்டு வகை அறிவுகள் உள்ளன.  கற்பனை அறிவு என்பது ஈகோவின் அறிவு; குறியீட்டு அறிவென்பது அகநிலை அறிவு.  தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ளச் செய்கிறது.  குறிப்பான நனவிலி வேட்கை தொடர்பான உண்மையைப் புரிந்து கொள்ளச் செய்கிறது.  பாழியும் இந்த அறிவை வாசகனிடம் எதிர்பார்ப்பதாக இக்கட்டுரை விளக்குகிறது. 


         வாசகனுக்கும் பனுவலுக்கும் இடையே மறுகட்டமைப்புச் செய்யப்படும் பொருண்மை பாழியில் மிகுந்த அமுக்கத்திற்கு உட்படுகிறது.  இதை எதிர்கொள்ள - வெல்ல வாசகரால் மட்டுமே முடியும். காரணம் வாசிப்பில் நனவு ஈகோவின் பங்கு மிகுதி.  ஆகவே கோணங்கியும் பாழிக்கு ஒரு வாசகராகக் கூடும் என்றும் கட்டுரையாசிரியர் விளக்கம் தருகிறார்.


       குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிப்பிற்குள்ளான மக்கள் திரளை முன்னிலைப்படுத்திய நெடுங்குருதி, குற்றப் பரம்பரை, காவல் கோட்டம் ஆகிய மூன்று நாவல்கள் அடிப்படையில் ஜ.சிவக்குமார் எழுதியிருக்கும் கட்டுரை, இன்றைய உலகமயச் சூழலில் அரச பயங்கரவாதத்தை தமிழ் நாவல்கள் தன்னுடைய புனைவுவெளிக்கு உட்படுத்த வேண்டும் என்ற பேரவாவை முன் வைக்கிறது.

                                                                                                                                                                                                                                                   சு. தமிழ்ச்செல்வியின் மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை, கண்ணகி ஆகிய ஆறு நாவல்களின் வழியே வெளிப்படும் பெண் மீதான வன்மம் மற்றும் எதிர்வினை குறித்த பெ. நிர்மலாவின் கட்டுரை, சராசரி பெண்ணின் பிரதிநிதிகளாக வரும் இக்கதை மாந்தர்கள் ஆணாதிக்கத்தின் முகவர்களாகச் செயல்படும் கொடுமையையும் அதன் மூலம் பெண் வர்க்கம் உள்ளாகும் இன்னல்கள் குறித்தும் பேசுகிறது.



       பொறுப்பற்று திரியும் ஆண்களுக்கான சிலுவை சுமப்பதோடல்லாது ‘கற்றாழை’ போன்று எவ்விடத்திலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடன் கண்ணகிகளாக பெண்கள் வாழ நேரிட்ட அவலத்தைச் சொல்லும் இந்நாவல்கள் வழி பெண்களின் உழைப்புப் பாத்திரத்தைத் தவிர பெண் என்ற தன்னிலை உருவாக்கம் பெறாத, இவற்றின் பொதுத்தன்மைகளை கணக்கில் கொண்டு விமர்சிக்காதது பெருங்குறையாகும்.


         தோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகீர் ராஜா, சல்மா போன்றோரது இஸ்லாமியப் புனைவுகளை ஆய்வுக்குட்படுத்தும் மு. நஜ்மா கட்டுரை பெண்கள் மீதான ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகள், மீறல்கள் போன்றவற்றை இப்புனைவுகள் பேசுவதை மையப்படுத்துகின்றன.


         ‘சமகாலத் தமிழ் நாவல்’ (2000 - 2010) பற்றி பேசும் ஆ. பூமிச்செல்வம் கட்டுரை சாரு நிவேதிதா, எம்.ஜி. சுரேஷ், ரமேஷ் - பிரேம்,
எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், வா.மு. கோமு, பா. வெங்கடேசன், சுதேசமித்திரன், அருணன், ஜோ.டி. குரூஸ், சு.தமிழ்ச்செல்வி போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களை கணக்கில் கொண்டு இனவரையியல் மற்றும் திணைசார் பண்பாட்டுப் பதிவு நாவல்கள், வரலாற்று நாவல்கள், தன் வரலாற்று (சுயசரிதை) நாவல்கள், பெண்ணிய நாவல்கள், த்லித்திய நாவல்கள், ‘விளிம்புநிலை மனிதர்கள்’ குறித்த நாவல்கள் என வேறுபடுத்திக் காட்டுகின்றது.


          சு. தமிழ்ச்செல்வி, யூமா. வாசுகி, சு. வெங்கடேசன் என 3 நாவலாசிரியர்களுடனான உரையாடலும் இடம் பெற்றுள்ளது.  சில விடுபடல்கள் இருப்பினும் குறிப்பிடத்தகுந்த முயற்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


          ’மாற்றுவெளி’ 6-வது இதழ் அனிருத்தன் வாசுதேவன், அ. பொன்னி ஆகியோரை அழைப்பாசிரியர்களாகக் (Guest Editors) கொண்டு மாற்றுப் பாலியல் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.  கைதட்டி வரவேற்கவேண்டிய, பாராட்டத்தக்க பணி இது.  அழைப்பாசிரியர்கள் தலையங்கத்தில் குறிப்பிடுவது போல் இது மாற்றுப்பாலியல் பற்றிய முழுத் தொகுப்பல்ல என்ற போதிலும், பொதுவெளியில் நடந்து வரும் சர்ச்சையைப் புரிந்து கொள்ளவும் பங்கு பெறவும் ஒரு ஆவணமாகப் பயன்படும் என்பது தன்னடக்கத்திற்காக சொல்லப்பட்டதாகவே இருக்கும்.  தமிழ்ச் சூழலில் இது குறித்த விவாதங்களை முன்னெடுக்க இவ்விதழ் களம் அமைப்பதாகக் கருதலாம்.


             ‘பாலியல்பு, திருமணம், குடும்பம் - சில குறிப்புகள்’ என்ற மீனா கோபால் கட்டுரை பெண் உழைப்பு, பாலியல்பு பற்றியும் பாலியல் தொழிலாளிகள் பற்றிய பெண்ணியவாதிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் ஆய்வு செய்து இ.பி.கோ. 377 சட்டப்பிரிவு தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பலனையும் ஆராய்கிறது.


        அ. மங்கை தமிழக நிகழ்த்து கலைகள் சார்ந்த உரையாடலாக ‘உடல், பால்மை, பால் ஈர்ப்பு / வேட்கை அளிக்கைமை சார்குறியீடுகளை’ ஆய்வு செய்யும் கட்டுரை ஒன்றும் ‘உடல், வன்முறை, உரிமை:- இந்திய குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா - 2010’ பற்றிய அனிருத்தன் வாசுதேவன் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.


         தில்லி உயர் நீதிமன்றம் ஜுலை 02, 2009 அன்று சட்டப்பிரிவு 377 பற்றி அளித்த தீர்ப்பை விடுதலையின் பாதையாகக் கருதும் கட்டுரையும் இந்திய சட்டப்பிரிவுகள் 340, 362, 366, 368, 377 ஆகியன ‘க்வியர்’(Queer) பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அபாயம் குறித்தும் இச்சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுவதையும் வலியுறுத்துகிறது.  அரவானிகள் / திருநங்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் தமிழக அரசின் திட்டங்கள் பற்றிய கட்டுரையும் தமிழகத்தில் ஓரினச் சேர்க்கைப் பெண்கள் பற்றிய கட்டுரையும் உள்ளது.  ஜி. நாகராஜனின் நாவல்களில் பாலியல் தொழிலாளி சித்தரிப்புக்களை ஒரு ஆங்கிலக் கட்டுரை பேசுகிறது.


         சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான மாயா சர்மா, வ. கீதா ஆகியோரின் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.  வ. கீதாவின் உரையாடல் 20 பக்கங்கள் வரை நீள்கிறது.  பெண்ணியம், பெண்மொழி, பெரியாரின் பங்களிப்பு என  இவ்வுரையாடல் விரிவாகப் பேசுகிறது.  வான்மேகம் திரைப்பட விமர்சனத்தை ப்ரீதம். கே. சக்கரவர்த்தி எழுதியிருக்கிறார்.  லிவிங் ஸ்மைல் வித்யா, ப்ரேமா ரேவதி ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.


       பெங்களூருவில் ‘சங்கமா’ அமைப்புடன் அரவானிகள் உரிமைகள் மற்றும் பாலியல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் ரேவதியின் The Truth about my life என்ற சுயசரிதையின் ஒரு பகுதி வ. கீதாவால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


           ஆவணம் பகுதியில் பாலியல் சார் சொற்களஞ்சியம், இந்தியத் தண்டனைச் சட்டம் - பிரிவு 377, மாற்றுப் பாலியல் இயக்கம் - நிகழ்வுகள், அட்டவணை, தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியங்களில் மாற்றுப் பாலியல் பதிவுகள், மாற்றுப் பாலியல் தொடர்பான நூல்கள் மற்றும் குறும்படம் ஆகியன முழுமை என்று சொல்லாவிட்டாலும் ஓரளவிற்குத் தொகுக்கப்பட்டுள்ளன. 

                                                                                                     
            மொத்தத்தில் ‘மாற்றுப்பாலியல் சிறப்பிதழ்’ தமிழ்ச் சூழலில் இது குறித்தான விவாதத்தை எழுப்பவும் படைப்புரீதியாக ஆக்கங்கள் மேலெழும்பவும் ஒரு உந்து சக்தியாக இம்முயற்சி பார்க்கப்பட வாய்ப்புள்ளது.


             கல்விப்புல ஆய்வுகள் (academic) மிகவும் மோசமான நிலையில் கெட்டித் தட்டிப் போன நவீன, பின் நவீன கூறுகளை உள்வாங்காத, சமூகத்தின்பால் எவ்வித அக்கறையும் கொள்ளாத தனித்தீவாக உள்ளது.  இந்நிலையை மாற்றவும் ஆய்வுகளை செழுமைப்படுத்தவும் இம்மாதிரியான முயற்சிகள் துணைபுரியும்.  அந்த வகையில் ‘மாற்றுவெளி - ஆய்விதழ்’ இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.