செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

பெருந்திரள் மக்கள் பங்கேற்ற அரபுலக எழுச்சி

பெருந்திரள் மக்கள் பங்கேற்ற அரபுலக எழுச்சி

                                                                
                                                                - மு. சிவகுருநாதன்(‘சோறு, சுதந்திரம், சுயமரியாதை :- என்ன நடக்குது மத்திய கிழக்கில்?’ என்ற அ.மார்க்ஸ்-ன் குறுநூல் குறித்த பதிவு)

                                                                     
            30 ஆண்டுகளாக எகிப்தில் கோலோச்சிய சர்வாதிகாரி முபாரக், 23 ஆண்டுகள் சர்வாதிகாரம் செய்த துனீசியாவின் ஆபிதீன் பென் அலி போன்றோர் அரபுலக மக்கள் எழுச்சியினால் தங்கள் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.   இதன் தொடர்ச்சியாக லிபியா சர்வாதிகாரி முஅம்மர் கடாஃபிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி இன்னமும் அடக்க முடியாமல் தொடர்கிறது.  ஏமன், ஜோர்டான், அல்ஜீரியா, மொராக்கோ, சிரியா, குவைத், ஈரான் ஆகிய பல்வேறு நாடுகளிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது.  சூடானிலிருந்து தெற்கு சூடான் தனி நாடாக பிரிந்து போய் ஐ.நா. சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.


            மத்திய கிழக்கில் - அரபுலகத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சிகளை விமர்சன நோக்கில் ஆய்வு செய்கிறது இக்குறுநூல் “பழைய அரசியலிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுபட இயலாத நாம் எல்லோரும் கற்றுக் கொள்ள ஏராளமான பாடங்கள் இதிலிருப்பதை” முகப்புரையில்
அ. மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.


            கடாஃபிக்கு எதிரான மக்கள் புரட்சியை வரவேற்கும் அதே நேரத்தில் தகுந்த நேரம் பார்த்துக் காத்திருந்து மனித உரிமைகள் என்ற பெயரில் உள்ளே நுழையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்க வேண்டிய கட்டாயமான சூழலில் நாமிருப்பதை இக்குறுநூல் சுட்டிக்காட்டத் தவறவில்லை.


            எகிப்து, துனீசியா ஆகிய நாடுகளில் வெற்றி பெற்ற அமைதி வழி மக்கள் புரட்சிக்குத் தூண்டு கோலாக இருந்த அமெரிக்கச் சிந்தனையாளர் 83 வயதான ஜென் ஷார்ப் (1928) பற்றிய குறிப்பொன்று இந்நூலின் பின்னிணைப்பாக தரப்பட்டுள்ளது.  இவரின் ‘சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கி’ (From Dictatorship to Democracy)  என்ற 93 பக்க குறுநூலின் தமிழாக்கத்தை ‘முரண்’ வெளியிடப் போவதும் மகிழ்ச்சியளிக்கிறது. 


            இந்த பெருந்திரள் மக்கள் பங்கேற்ற இவ்வெழுச்சிகள் ஆயுதமின்றி அமைதி வழியில் நடத்தப்பட்டதுதான் முக்கியமானது.  இப்புரட்சிக்கு மக்களைத் திரட்டுவதற்கு இண்டர்நெட், பிளாக், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நவீன தகவல் தொடர்பு சாதனங்களும் அல் ஜஸீரா போன்ற தொலைக்காட்சி ஊடகங்களும் முக்கிய பங்காற்றியதை அ. மா. விளக்குகிறார்.

    
                “நாம் அமைதி வழியைக் கையிலெடுக்கும் போது எதிரி வன்முறையைக்  கையிலெடுக்க மாட்டான் எனவும் நாம் எதிர்பார்ப்பதில்லை.  சொல்லப் போனால் எதிரியின் வன்முறைத் தாக்குதல்களை எதிர் கொள்வதற்கும் நம்மிடம் வழி முறை உண்டு” என்கிற ஜென் ஷார்ப்பின் கருத்துக்கள் கூட நமக்கு மீண்டும் காந்தியைத்தான் நினைவூட்டுகின்றன என்று அ. மா. சொல்கிறார்.


            இந்த எழுச்சியில் பெண்களின் பங்கும் கணிசமானது.  எகிப்தில் பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்ற உரிமைக் குரல் எழுப்பப்பட்டது.  பெண்ணியவாதிகளுக்கும் இஸ்லாமியப் பெண்ணியவாதிகளுக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கெதிரான பாலியல் வக்கிரங்கள் அரங்கேற்றப்பட்ட போது பெண்களும் குழந்தைகளும் வீதிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தியதையும் நிராகரித்து பெண்கள் கெய்ரோ நகர வீதிகளில் கூடிப் போராடியது போன்ற நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது. 


            மையப்படுத்தப்பட்ட அமைப்பு இல்லாமற் போனதற்காக வருத்தமடைய வேண்டியதில்லை எனச் சொல்லும் அ.மா. அத்தகைய அமைப்புகளின் கீழ் நடத்தப்பட்ட புரட்சிகள் மீண்டும் கடுமையான  அதிகாரத்துவ அரசுகளாக மாறிய வரலாற்றையும் நமக்கு நினைவுபடுத்துகிறார்.


            இம்மக்கள் ஆயுதங்கள், வன்முறைகள் ஆகியவற்றை நம்பாமல் சில சாகசக்காரர்கள் அல்லது முன்னோடியினரின் இயக்கமாக அல்லாமல் பெருந்திரளான மக்களை களத்தில் இறக்கி நடைபெற்ற இப்போராட்டங்களில் புரட்சிகரமான கோரிக்கைகள் எதுவுமில்லாமல் அரசு மாற்றம், ஜனநாயகம், மனித உரிமைகள், ஊழல் ஒழிப்பு என சகலரையும் உள்ளடக்கிய (Inclusive) போராட்டமாக அமைந்ததை அ.மா. விளக்குகிறார். 


            இன்றைய முஸ்லீம் இளைஞர்களின் விருப்பம் மற்றும் குறிக்கோள்கள் யாருடன் இணைந்து செயல்படுவது என்பதில் அவர்களுக்குள்ள தெளிவுகள், ஜனநாயகத்தின்பால் உள்ள அடங்காத ஆர்வத்தை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை அ.மா. விளக்குகிறார்.


            மேற்குலக ஆக்ரமிப்புகள், அரபுலக மக்கள் எழுச்சி, அமெரிக்காவின் தந்திரங்கள், இந்தியாவின் அமெரிக்க அடிவருடித்தனம், சர்வாதிகாரத் தலைமைகள் போன்ற பல்வேறு தகவல்களை இக்குறுநூல் கொண்டுள்ளது.


            முபாரக்கையும், பென் அலியையும் கூட எளிதாக விரட்டி விடலாம்.  மத்திய கிழக்கிலிருந்து ஒபாமாவையும் சர்கோசியையும் அதே போல் விரட்டி விட முடியுமா? என்ற கேள்வி மிகுந்த சிந்தனைக்குரியது.  இக்கேள்வியை அரபுலகம் முழுக்கக் கேட்கும்போதுதான் அவர்களுக்கான விடுதலையின் பாதை புலப்படும்.


சோறு, சுதந்திரம், சுய மரியாதை என்ன நடக்குது மத்திய கிழக்கில்? 
- அ. மார்க்ஸ்

பக். 64.                                   விலை ரூ. 40/-

 வெளியீடு:
             முரண்,
            95/202 - கால்வாய்க்கரை சாலை,
            இந்திரா நகர்,
            அடையாறு, 
            சென்னை 600 0020,
            www.muran.in
            மின்னஞ்சல்: muran@live.com
            செல்:   95000 75795
                           94448 00828

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக