செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

செட்டிநாடு பவுண்டே­ஷ­னின் A School நிர்வாகத்திற்கு எதிராக பெற்றோர்களின் போராட்டம்

செட்டிநாடு பவுண்டே­ஷ­னின்   A  school   நிர்வாகத்திற்கு எதிராக
பெற்றோர்களின் போராட்டம்:

                          உண்மை அறியும் குழு அறிக்கை
                                                                                            











 
23.08.2011,                                                                                                                                                                       சென்னை.    

            சென்ற  ஜுலை 22ஆம் தேதியன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை மன்றம் கட்டிடம் முன்பு செட்டிநாடு பவுண்டே­ஷனின்   
A school நிர்வாகத்திற்கு எதிராகப் பெற்றோர்கள் நடத்திய போராட்டம் பத்திரிக்கைளில் வெளிவந்தது.  நிர்வாகத்திற்கு எதிராக பெற்றோர்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள செய்தியும் வந்தது.  A school பெற்றோர் அமைப்பின் பிரதிநிதிகள் கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர்.  இதையொட்டி கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை அமைப்பினர் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழுவொன்று அமைக்கப்பட்டது.  குழுவில் கீழ்க்கண்டவர்கள் பங்கு பெற்றனர்.

 01. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) சென்னை.

02. முனைவர். ப. சிவக்குமார், முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வர் , சென்னை.

03. பேரா. மு. திருமாவளவன், முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வர், சென்னை.

04. திரு. மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR)   திருவாரூர்.

05. பேரா. செல்வி, மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி, சென்னை.

06. திரு. பூமொழி, தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம், சேலம்.

07. ஜெனி டாலி, சமூக ஆர்வலர், சென்னை.


            இக்குழு சென்ற ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் சென்னையிலுள்ள நான்கு A school பள்ளிகளுக்குச் சென்று பார்வையிட்டது. அங்குள்ள நிர்வாகிகளிடம் (Administrators) பேசியது.  வாசலில்  நிறுத்தி வைத்து நாங்கள் பேசி அனுப்பப்பட்ட போதிலும் வெளியிலிருந்து நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.  வண்ணாரப்பேட்டை பள்ளியில் நிர்வாகியிடம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது எங்களில் ஒரு உறுப்பினர் உள்ளே சென்று பார்த்து வந்தார்.


             சி.பி.எஸ்.இ. வாரிய  மண்டல இணை இயக்குநர்அலுவலகம், தொடக்கக் கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றிற்கும் சென்று நர்சரி பள்ளிகளுக்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கணேசன், சங்கர் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். எஸ். நாகராஜ முருகன் முதலானோரிடம் நேரிலும் தொலைபேசியிலும்   பேசினோம்.

              செட்டிநாடு பவுண்டே­ஷன் நிர்வாகத் தரப்பில் அதன் நிறுவனர் அல்லது  இதர அடுத்த நிலை நிர்வாகி யாரையாவது சந்திக்க வேண்டும் என நாங்கள் கேட்ட போது  வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டோம்.   மின்னஞ்சலில் அனுமதி கோரி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டோம்.  இரண்டு நாட்களுக்குள் நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப் போவதாகச் சொல்லி மின்னஞ்சலில் அதற்கு முன் ஒரு ‘அப்பாயின்மெண்ட்’ கேட்டோம்.  ஒரு வாரத்திற்குப் பின் ஆகஸ்ட் 17 அன்று சந்திக்க முடியும் என தற்போது எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  மிகவும் நீண்ட இடைவெளி ஆயினும் நிர்வாகத்தின் கருத்தைக் கேட்காமல் அறிக்கை அளிக்கக் கூடாது என்பதற்காக ஒரு வாரம் பொறுத்திருந்து ஆகஸ்ட் 17 அன்று நிர்வாகத்தினரைச் சந்தித்தோம்.நிர்வாகத்தின் சார்பாக ஜெயஸ்ரீ மற்றும் சித்ரா ஆகியோர் விரிவாகப் பேசினர்.

பின்னணி:

            சென்னை பெருநகருக்குள் ‘செட்டிநாடு பவுண்டேஷ­ன்’ என்னும் நிறுவனம் 36 A school பள்ளிகளை நடத்துகிறது.   இவற்றில் 11 பள்ளிகள் நிறுவனத்தின் நேரடி நிர்வாகத்திலும் பிற ஃபிராஞ்சைஸ் (Franchise) முறையிலும் நடத்தப்படுகின்றன.  இந்தப் பள்ளிகளில் Pre Nursery, Pre K.G.,  L.K.G., U.K.G., முதல் வகுப்பு வரை உள்ளன.  ஓரிரு பள்ளிகளில் 2ஆம் வகுப்பிலும் சில மாணவர்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்றரை வயது முதல் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.  இரண்டு, மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் A school பள்ளிகளில் 200லிருந்து 300 குழந்தைகள் வரை உள்ளனர்.  புதிதாகத் தொடங்கப்பட்ட பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் உள்ளனர்.  ஆக ஒட்டுமொத்தத்தில் 36 பள்ளிகளிலும் குறைந்த பட்சம் 3000 முதல் அதிகபட்சமாக 4000 குழந்தைகள் கல்வி பயிலுகின்றனர். செட்டிநாடு பவுண்டே­ஷன் விளம்பரம் ஒன்றில் 6000 குழந்தைகள் பயிலுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


            ‘செட்டிநாடு பவுண்டேஷ­ன்’ எனப்படும் இந்நிறுவத்தின் நிறுவனராக (Founder) திரு. அண்ணாமலைச் செட்டியார் என்பவர் உள்ளார்.  இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செட்டிநாடு சிமெண்ட்ஸ், செட்டிநாடு மருத்துவ நகரம், செட்டிநாடு பவர் கார்ப்பரே­ஷன் முதலான செட்டிநாடு குழும கார்ப்பரேட் அலுவலகங்கள் அமைந்துள்ள அண்ணாசாலை ராணி சீதை மன்ற அடுக்கு மாடிக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. சற்றே வித்தியாசமாக ‘செட்டிநாடு பவுண்டேஷ­னின்’ ‘லோகோ’ அமைந்துள்ள போதிலும் ‘செட்டிநாடு’ என்கிற பெயர், பிற செட்டிநாடு குழுமங்களுடன் ஒரே கட்டிடத்தில்  A school  அலுவலகம் அமைந்துள்ள நிலை ஆகியவற்றின் ஊடாக செட்டிநாடு குழுமத்தின் கல்வி அமைப்பாகிய ‘செட்டிநாடு வித்யா­ஷரமின்’ ஒரு அங்கமே இந்த A school-ம் என்கிற பிம்பத்தை இந்நிர்வாகம் வெற்றிகரமாக கட்டமைத்துள்ளது.  பிற மூலதனங்களைக் காட்டிலும் இந்த பிம்பமே A school  களின் மிகப்பெரிய பலமாக உள்ளது.

     பெரிய அளவில் ஆங்கில, தமிழ் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்தும், போஸ்டர்களை வெளியிட்டும் A school குறித்து பிரச்சாரம் செய்யப்படுகின்றது.   தொடக்கத்தில் 36 வெவ்வேறு இடங்களில் A school நர்சரி பள்ளிகளைத் தொடங்கினாலும் எல்லாவிதமான வசதிகளுடனும் போரூர், பள்ளிக்கரணை, மாதவரம், முகப்பேர் முதலான நான்கு இடங்களில் 12ஆம் வகுப்பு வரையிலான மேல்நிலைப் பள்ளிகள் கட்டப்படும் எனவும், C.B.S.E. பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் எனவும், இந்தப் பள்ளிகளில் A school மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தங்களுக்கு வாக்குறுதிகள் அளித்ததன் அடிப்படையிலேயே தங்கள் பிள்ளைகளை  
 A School -களில் சேர்த்தோம் என நாங்கள் சந்தித்த பெற்றோர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.  பல பெற்றோர்கள் இது செட்டிநாடு வித்யா­ஷரமின் ஒரு அங்கம் எனவும் இங்கு C.B.S.E. பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது எனவும்  இன்று வரையிலும் நம்பியுள்ளனர் என்பது எங்கள் உரையாடல்களில் தெரிய வந்தது.


            இவையனைத்துமே பொய்யானவை.விளக்கம்.

பொய் 1:

            பிரச்சினை முற்றி வீதிக்கு வந்த பிறகு, சென்ற வாரத்தில் செட்டிநாடு கார்ப்பரேட் குழுமங்கள் சார்பாக ‘டிரேட் மார்க்’ எச்சரிக்கை
(ஆகஸ்ட் 10, 2011 - டைம்ஸ் ஆஃப் இந்தியா) வெளியிடப்பட்டுள்ளது.  செட்டிநாடு என்கிற பெயரைக் கண்டு ஏமாற வேண்டாமென மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.  எனினும் இதுவரை செட்டிநாடு கார்ப்பரேட் குழுமம் அதன் ஒரு அங்கமே A school என்பது போன்ற பொய் பிம்பம் கட்டமைப்பதை ஊக்குவித்தே வந்துள்ளது.  இப்போதும் கூட A school-களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பதை இந்த விளம்பரத்தில் வெளிப்படையாக அது அறிவிக்கவில்லை.  இன்றும் A school  தலைமை நிர்வாக அலுவலகம் பிற செட்டிநாடு குழும அலுவலகங்கள் உள்ள கட்டிடத்திலிருந்தே செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.எங்களிடம் நிர்வாகத்தின்  சார்பாக பேசியவர்களும்
செட்டிநாடு வித்யா­ஷரமின் நிறுவனர் திருமதி மீனா முத்தையா அவர்களின் மகன்தான் அண்ணாமலைச் செட்டியார் எனவும், மேற்குறிப்பிட்ட விளம்பரம்  தங்களைப் பற்றியதல்லவென்றும் கூறினர். எனினும் செட்டிநாடு வித்யாஷரத்தின் ஒரு அங்கம்தான் செட்டிநாடு பவுண்டேஷனா என்கிற கேள்விக்கு அவர்கள் தெளிவாகப் பதிலளிக்காமல் மழுப்பினர்.

பொய் 2:

            சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்று இப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன என்பது அப்பட்டமான பொய்.  ஆறாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமே இல்லை என்கிற போது 2-ம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இப்பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் எவ்வாறு சாத்தியம்?  செட்டிநாடு பவுண்டே­னின் நேரடி நிர்வாகத்தில் நடைபெறும் வண்ணாரப்பேட்டை A school- ன் நிர்வாகி திருமதி. தாரிணி என்பவரிடம் நாங்கள் இதுகுறித்துத் துருவித் துருவி விசாரித்த போது, “சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைத் தான் நாங்கள் கையாளுகிறோம்.  ஆனால் சி.பி.எஸ்.இ.-ல் ஏற்பு எதையும் நாங்கள் இதுவரை பெறவில்லை.  எட்டாம் வகுப்பு அடையும் வரை இத்தகைய ஏற்பு தேவையில்லை” என்றார்.


            எங்கள் குழு சி.பி.எஸ்.இ.-ன் மண்டல நிர்வாகத்தை அணுகிய போது அவர்களும் தாங்கள் இப்படியான ஏற்பு எதையும் A school- களுக்கு வழங்கவில்லை எனக் கூறினர்.  சி.பி.எஸ்.இ. ஏற்பது என்பது ஆறாம் வகுப்பிற்குப் பின்பே சாத்தியம்.  நர்சரி முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பாட வாரிய அனுமதியில் மட்டுமே இயங்க முடியும்.  கேந்திரிய வித்யாலயா பாடப் புத்தகம் ஒன்றைச் சொல்லிக்கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் மத்திய அரசு அனுமதி பெற்றுள்ளதாகச் சொல்வது பச்சை ஏமாற்றே.    எனவே இப்பள்ளிகள் சி.பி.எஸ்.இ. ஏற்புடன் செயல்படுகின்றன என்பதும் முழுப் பொய்.

 பொய் 3:

             சி.பி.எஸ்.இ. ஏற்பு மட்டுமல்ல.  வேறு எந்த வகை ஏற்புமே பெறப்படவில்லை என்பதே உண்மை.   சென்ற  மாதத்தில்  பெற்றோர்கள் தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி இயக்குநர் முனைவர் மணி அவர்களைச் சந்தித்து விசாரித்த போது அப்படியான பள்ளிகள் நடப்பது குறித்து தங்களிடம் தகவல்கள் இல்லை எனவும் புகார்கள் இருந்தால் காவல் நிலையத்திற்குச் சென்று தருமாறும் கூறியுள்ளார்.  ஒவ்வொரு கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி (DEEO) அலுவலகத்திலும் நர்சரிப் பள்ளிகளை கண்காணிக்க உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் (AEEOs) உள்ளபோது, தொடக்கக் கல்வி இயக்குநர் பெற்றோர்களின் புகாரை ஏற்று உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கலாம், அல்லது உரிய அதிகாரியைச் சென்று சந்திக்குமாறு அறிவுறுத்தியிருக்கலாம்.  அப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடக்கக் கல்வி இயக்குநர், பொறுப்பைத் தட்டிக் கழித்தது கண்டிக்கத்தக்கது.  எனினும் பிரச்சினை முற்றி வீதிக்கு வந்தபின் இயக்ககம் விழித்துக் கொண்டு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நாகராஜ முருகனை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு பணித்துள்ளது.  அவரும் தற்போது அறிக்கை அளித்துள்ளார்.  மாநில அரசிடமோ இல்லை, மத்திய கல்வி வாரியத்திடமோ யாரிடமும் எந்த அனுமதியும் இல்லாமல் கடந்த நான்காண்டுகளாக செட்டிநாடு  A school-கள் செயல்படுவதை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நாகராஜ முருகன்  உறுதி செய்தார்.

பொய் 4:

            போரூர், பள்ளிக்கரணை, மாதவரம், முகப்பேர் முதலான இடங்களில் பெரிய அளவில் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கட்டப்படுமென அளித்த வாக்குறுதி குறித்து நிர்வாகம் இதுவரை பத்திரிக்கைகளில் விளம்பரம் அளித்தது தவிர வேறு எந்த முயற்சியும் செய்யவில்லை.  நிலம் எதுவும் வாங்கப்பட்டதாகவும் தெரியவில்லை என்றும் எங்களைச் சந்தித்த நிர்வாகப் பிரதிநிதிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த இடங்களில்  பள்ளி தொடங்குவதற்கானப்  பூர்வாங்க வேலைகள் முடிந்துவிடும் என்றனர்.


நடைமுறையிலுள்ள A school-களின் தரமின்மை:


            தற்போதுள்ள A school கள் பெரும்பாலும் வணிக வளாகங்களுக்கு மத்தியிலும் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில்  உள்ள கட்டிடப்பகுதிகளிலும் வீடுகளிலுமே செயல்படுகின்றன. சிறு குழந்தைகள் கல்வி பயிலுவதற்கான அடிப்படைத் தகுதிகள் எதுவுமற்ற கட்டிடங்கள் இவை.  எடுத்துக்காட்டாக வண்ணாரப்பேட்டை  A school ஒரு வங்கி மற்றும் ATM அமைந்துள்ள கட்டிடத்தின் மாடியில் உள்ளது.  மேலேறிச் செல்வதற்கு ஒரே ஒரு மாடிப்படிதான் உண்டு.  அதுவும் கூட போதிய அளவு அகலமாக இல்லை.  இப்படியான ஒரு சூழலில் தீ விபத்து ஏற்பட்ட போதுதான் ஓடித் தப்ப இயலாமல் 93 குழந்தைகள் கும்பகோணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிருடன் எரிந்து சாம்பலாயினர். அகன்ற இரு மாடிப்படிகள் உள்ள கட்டிடங்களில்தான் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் அமையவேண்டும் என்பதும் மழலையர் வகுப்புகள் மாடிகளில் அமையக்கூடாதென்பதும் விதிமுறை.


            தவிரவும் இக்கட்டிடத்தின் உச்சியில் இரு செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இத்தகைய டவர்களிலிருந்து கசியும் கதிரியக்க ஆபத்து பற்றி தொடர்ந்து பத்திரிக்கைகளில் செய்திகள் தற்போது வருகின்றன.  எனினும் இப்பள்ளி நிர்வாகி தாரிணி இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் ஆபத்தான வரம்பிற்கு மிகமிகக் குறைவாக உள்ளது என மதுரையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் பெற்றுள்ள சான்றிதழ் ஒன்றை எங்களிடம் காட்டினார்.  ஆனால் தங்கள் பிள்ளைகள் சில சமயங்களில் வலிப்பு முதலிய நோய்களுக்கு ஆளாவதற்கு இதுதான் காரணமென  பெற்றோர்கள் சிலர்  எங்களிடம் கூறினர்.  இதுகுறித்து முறையாக விசாரிக்கப்படுதல் வேண்டும்.  சென்னையில் எத்தனையோ நிறுவனங்கள் உள்ளபோது ஏன் மதுரையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் சென்று  ஒரு சான்றிதழைப் பெற்றுள்ளனர் எனப் புரியவில்லை.


            அசோக் நகர் 18-வது அவென்யூவிலுள்ள .A school குடியிருப்பதற்கான வீடு ஒன்றில் அமைந்துள்ளது.  தலைமை ஆசிரியருக்குச் சமமான பொறுப்பிலுள்ள நிர்வாகி அமர்வதற்கு ஒரு அறை கூட அங்கு கிடையாது.  ஒரு வாட்ச் மேனைப் போல வாசலில் போடப்பட்டுள்ள ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார்.  விளையாடுவதற்கான போதிய இடம், மாணவர் எண்ணிக்கைக்குத் தகுந்த கழிப்பறை வசதிகள் இந்தப் பள்ளிகளில் கிடையாது.  மிகச்சிறிய ஒரு கொல்லைப்புறத்தில் ஒரு சிறு ஊஞ்சல், சறுக்கை முதலியவை ஒப்புக்கு அமைக்கப்பட்டுள்ளன.  பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதற்குச் சாத்தியமேயில்லை. இது குறித்துக் கேட்டதற்கு, "பிள்ளைகள் விளையாடவேண்டுமென்றால் பெற்றோர்கள் 'பார்க்'களுக்கு அழைத்துச் செல்லவேண்டியதுதானே?" எனப் பொறுப்பற்று பதில் கூறினர்.


                குடியிருப்பு வீடுகளின் படுக்கையறையுடன் இணைந்த டாய்லெட்டுகளை குழந்தைகள் பயன்படுத்தும் நிலையும் உள்ளது.  தூய்மையற்ற மிகச்சிறிய, நெருக்கமாக அமைக்கப்பட்ட கழிப்பறைத் தொட்டிகள் சில பள்ளிகளில் உள்ளன.  எல்லா மாணவர்களும் ஒரு சேர இவற்றைப் பயன்படுத்துவதன் விளைவாக சிறுநீர்த் தொற்றுகள் வருவதாகவும் பொதுவான சுகாதாரமின்மையால் அடிக்கடி தொற்று நோய்கள், சிரங்கு முதலானவைகளால் பாதிக்கப்படுவதாகவும் பல பெற்றோர்கள் எம்மிடம் முறையிட்டனர். இதுகுறித்துக் கேட்டதற்கு, "தொற்றுநோய் எங்கள் பள்ளியிலிருந்துதான் வரவேண்டுமா? வேறெங்கும் தொற்றியிருக்கக்கூடாதா?"  என நிர்வாகத்தின் சார்பாக பதில் அளிக்கப்பட்டது.


            இந்த ஆண்டு  ப்ராஞ்சைஸ் முறையில்  தொடங்கப்பட்ட அடையாறு  A  school -ன்  நிர்வாகி சுந்தர்ராஜன் “கட்டிட உறுதிச் சான்று, சுகாதாரச் சான்று, தீ தடையின்மைச் சான்று ஆகியவற்றை பெற வேண்டுமா?” என்று  A school நிறுவனரிடம் கேட்ட போது, “அவற்றை நாங்கள் ‘டீல்’ செய்து கொள்கிறோம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியதாக எங்களிடம் தெரிவித்தார்.


            வகுப்பறைகளும் நெருக்கமாகவே அமைந்துள்ளன.  பள்ளிக்கட்டிடங்கள் என்ற நோக்கமின்றி கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கோ, குழந்தைகள் இதரப் பயிற்சிகள் பெறுவதற்கோ எள்ளளவும் தகுதியற்றவையாக உள்ளன.

 வெளிப்படைத் தன்மையின்மை:

            இப்பள்ளிகளின் செயல்பாடுகள் முற்றிலும் வெளிப்படைத்தன்மை அற்றவைகளாக உள்ளன.  ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து உருவாக்க வேண்டிய பருவத்திலுள்ள இக்குழந்தைகள் குறித்து  முழுமையான செய்திகள் எதையும் பள்ளியிலிருந்து பெற இயலாததை பெற்றோர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.  பள்ளி நிர்வாகிகளிடம் எதைக் கேட்டாலும் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட பிறகே தகவல் சொல்கின்றனர்.   பிரச்சினைகளை முன் வைக்கும்போது நிறுவனரிடம் சொல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். நிறுவனர் எளிதில் அணுகப்படக் கூடியவர் அல்ல.  முன்னதாக அப்பாயின்ட்மெண்ட வாங்கியே சந்திக்க வேண்டும்.  மின்னஞ்சல்கள் மூலமாகவே சந்திக்க விண்ணப்பிக்க வேண்டும்.  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதில்லை.  பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்கள் என நடத்தப்படும் நிகழ்வுகளில் எல்லாப் பெற்றோர்களையும் நிர்வாகம்  ஒரு சேர சந்திப்பது இல்லை.  இடமில்லை என்கிற காரணம் எங்களிடம்  சொல்லப்பட்டது.  பொதுவான பிரச்சினைகளை நிர்வாகத்திடம் முன் வைக்கும்போது,  “பொதுவானவற்றை இங்கு பேசக்கூடாது.  உங்கள் குழந்தைக்கு தனிப்பட்ட பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள்” எனத் தாங்கள் எச்சரிக்கப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.  நிறுவனர் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும் குறைகள், அய்யங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையான பதில்கள் இல்லை. 

பயிற்சியின் தரமின்மை:

            குழந்தைப் பருவத்தில் 10 அல்லது 15 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர், உதவியாளர் இருத்தல் அவசியம்.  ஆனால் பல A school-களில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவரே பொறுப்பாக உள்ளார்.  இந்த ஆசிரியர்கள் முறையான ஆசிரியப் பயிற்சி பெற்றவர்கள்தானா என்பது அய்யமே.  அடையாறு A school நிர்வாகி திரு. சுந்தர்ராஜன் இவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பெற்றவர்கள் அல்ல  என்பதை ஏற்றுக் கொண்டார். A school நிர்வாகம் ஏதோ ஒருவகை பயிற்சி அளித்து அனுப்புவதாகச் சொன்னார்.  இங்கு படிக்கும் குழந்தைகள் U.KG. முடித்த பிறகும் கூட எழுத்துகளை முழுமையாக எழுதத் தெரியாதவர்களாகவும் எண்களைச் சொல்ல இயலாதவர்களாகவும் உள்ளனர்.  எழுத்துப் பிழைகளுடன் கூடிய சொற்களை ஆசிரியர்கள் பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்களில் எழுதியிருப்பதை பெற்றோர்கள் எங்களிடம் காட்டினர்.  இது குறித்து நிர்வாகத்திடம் கேட்ட போது,  “வயதான ஆசிரியை.  தெரியாமல் செய்து விட்டார்” எனப் பொறுப்பற்று பதில்கள் சொல்லப்பட்டுள்ளன.இங்கு படிக்கக் கூடிய பிள்ளைகள் பிற பள்ளிகளில் படிக்கும் சம வயதுக் குழந்தைகளுடன் ஒப்பிடும்  போது மிகவும் கல்வித் தரம் குறைந்துள்ளனர் எனப் பெற்றோர்கள் கண் கலங்கக் கூறினர்.


             குழந்தைகளிடமிருந்து கல்விப் பொருட்களுக்கென ரூ. 6300/- வரை வசூலிக்கப்பட்டாலும் சென்ற ஆண்டில் நான்கே நான்கு நோட்டுப் புத்தகங்களும் சில பயிற்சித் தாள்க லும்  மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.   எழுத்துக்கள், படங்கள் உள்ள புத்தகங்களோ, குறுந்தகடுகளோ எதுவும் குழந்தைகளுக்கு தரப்படவில்லை.  இது குறித்துக் கேட்டபோது, “நாங்கள் செயல்வழிக் கல்வி முறையில் பயிற்றுவிக்கிறோம்” என பதில் சொல்லப்பட்டதாக ஒரு பெற்றோர் கூறினார்.  ஒரு பக்கம்  சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்றும் மறுபக்கம்  செயல்வழிக்கல்வி முறை (ABL) என்றும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் பதில்கள் சொல்லப்படுகின்றன.

சற்றும் பொருத்தமற்ற கல்விக் கட்டணம்:

            இப்பள்ளியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 1800/-. சேர்க்கைக் கட்டணம் ரூ. 9000/-.  பருவக் கல்விக்கட்டணம் (Term Fees) 3 X 9600 ரூபாய்.  பள்ளி நேரத்தில் குழந்தைகளுக்கு சிறு தீனி வழங்க வேண்டுமானால் குழந்தைக்கு மாதம் ரூ. 450/-.   வீட்டிலிருந்து குழந்தைகளை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வர பருவம் ஒன்றிற்கு ரூ. 6900/-.  டாடா மேஜிக் வாகனத்தில் குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அழைத்து வரப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  குழந்தைகளை அழைத்து வருவதற்கான உரிமம் பெற்ற வாகனங்கள் அல்ல இவை. வசூலிக்கப்படும் கட்டணங்கள் எதற்கும் ரசீது தரப்படுவதில்லை.

            மேற்கண்ட கட்டணங்கள் தவிர நிர்வாகக் கட்டணம் எனச் சொல்லி மேலும் ரூ. 9800/- கட்டுமாறு தற்போது பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதையொட்டியே பிரச்சினை எழுந்துள்ளது.  இது எதற்கு எனக் கேட்ட போது குழந்தைகளுக்கு பாட்டு, அபாகஸ், சமையல் கற்றுத் தருவது, இ-மெயில் முகவரி உருவாக்குவது முதலான காரணங்களுக்காக  வசூலிக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளன. நர்சரி வயதுப் பிள்ளைகளுக்கு சமையல் பயிற்சி என்பதும் மின்னஞ்சல் முகவரி உருவாக்குவதற்கு கட்டணம் வசூலிப்பதும் நகைப்பிற்கிடமாக மட்டுமின்றி தனியார் நிறுவனங்களின் கல்விக் கொள்ளைக்கும் சான்றாக இருக்கின்றன.  தவிரவும் கடவுச்சொல்லை (Password) ரகசியமாக வைத்துக் கொள்ளத் தெரியாத பச்சிளம் குழந்தைகளுக்கு மின்னஞ்சல் முகவரி தயாரித்து அளிப்பது வேறு பல சிக்கல்களுக்கு இட்டுச் செல்வதற்கும் வாய்ப்புண்டு.  பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ கொடுப்பதாகச் சொல்வதும் அபத்தமாக  உள்ளது.  அப்படி எதுவும் வழங்கப்படவும் இல்லை.  பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையும் யாரும் போலியாகத் தயாரிக்கக் கூடியதாக உள்ளது.  இந்த வகையில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பும் இல்லை.  நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கப்படும் இந்த ரூ. 9800/-ல் ரூ. 6300/- கல்விப் பொருட்களுக்கான கட்டணமென்று சொல்லப்படுகிறது.  இதற்கு 4 நோட்டுகளும் சில பயிற்சித்தாள்களும் மட்டும் கொடுக்கப்பட்டதை முன்பே குறிப்பிட்டோம்.

        இந்த சிறப்புக் கட்டணம் குறிப்பிட்ட தேதியில் கொடுக்க வேண்டுமென எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ரூ. 100/- அபராதம் வசூலிக்கப்படுகிறது.  இந்தக் கூடுதல் கட்டணத்தை ஏற்க மறுத்து உரிய நாளில் கட்டாத பெற்றோரின் குழந்தைகள் மற்ற பிள்ளைகளிடமிருந்து பிரித்துத் தனியே உட்கார வைக்கப்படுகின்றனர்.  இவ்வாறு தனித்து உட்கார வைக்கப்படுவதால் பயந்து மன அழுத்தத்திற்கு உள்ளான குழந்தைகள் வீட்டிற்கு வந்து பெற்றோர்களிடம் அழுகின்றன.  தாமதத்திற்காக ரூ. 1000/- அபராதத்துடன் கட்டணத்தைச் செலுத்த வந்த ஸ்ரீலேகா எனும் பெண்மணியை நாங்கள் வண்ணாரப்பேட்டையில் சந்தித்தோம்.

 குழந்தைகள் மிரட்டப்படுதல்:
      
                  கட்டணம் கட்டாத குழந்தைகள் தனித்து அமர வைப்பது தவிர இருட்டறையில் அடைத்து விடுவோம் எனச் சொல்லி மிரட்டுவதும் பிற குழந்தைகளை விட்டுத் தவறு செய்வதாக கருதப்படும் குழந்தைகள் அடிக்கப்படுவதும் நடப்பதாகப் பெற்றோர்கள் எங்களிடம் கூறினர்.  நன்றாகப் பயிற்சிகள் செய்வதாக மதிப்பிடப்படும் குழந்தைகளின் கையில் நட்சத்திர அடையாளமிட்டு அவர்கள் தரம் பிரித்துக் காட்டப்படுகின்றனர்.  பச்சிளம் குழந்தைகளிடம் இவ்வாறு தரம் பிரித்துக் காட்டுவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஓன்று.  கல்வி உரிமைச் சட்டத்தின்படி குழந்தைகள் மிரட்டப்படுவதும் தண்டிக்கப்படுவதும் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.குழந்தைகளைத் தனியே அமரவைப்பது தண்டனை நோக்கத்தில் அல்ல, சிறப்புக்கட்டணம் கட்டாத குழந்தைகளை உரிய பயிற்சி நடக்கும்போது தனியாகத்தானே உட்கார வைக்கமுடியும் என்பது  நிர்வாகத்தின் பதிலாக இருந்தது.சிறப்புப் பள்ளிகளைப் பள்ளி முடிந்த பின்பு மற்ற குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டுத்தான் நடத்தவேண்டும். பள்ளி நேரத்தில் எப்படிச்  சிறப்புப் பயிற்சி நடத்த இயலும்?

 எமது பார்வைகள்:
      
            மழலையர் கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வி வணிகப் பொருளாக (Traded Good) மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று கல்வி என்பது பெரு முதலாளிகள், கார்ப்பரேட்டுகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் கொள்ளைக்களமாக உருவாகியுள்ளது.  உலகமயச் சூழலில், போட்டி மிகுந்த இவ்வுலகில் தரமான கல்வி என்பது வாழ்வின் முக்கிய ஆதாரமாக மாறி விட்டதால் எவ்வளவு பணம் கொடுத்தும் தம் குழந்தைகளைத் தரமான பள்ளிகளில் சேர்க்கப் பெற்றோர்கள் தயாராக இருப்பதை இவர்கள் தம்முடைய லாப நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.  எள்ளளவும் அறமும் நீதியும் இல்லாத நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  மத்திய தர, உயர் மத்திய தர வர்க்கத்தினரிடம் நிறைந்துள்ள புகழ்மிக்க சந்தைப்பெயரின் (Brand Names) மீதான கவர்ச்சி இவர்களுக்குச் சாதகமாக அமைகிறது.  அரசுப் பள்ளிகளில் அகக்கட்டுமானங்கள் இல்லை, பொறுப்பான ஆசிரியர்கள் இல்லை என்பன போன்ற கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டிருப்பதன் விளைவாக தனியார் பள்ளிகள் மீதான மோகம் இன்று அதிகரித்துள்ளது.  உண்மையில் பல அரசுப் பள்ளிகளில் உள்ள அடிப்படை அகக்கட்டுமானங்கள் கூட பல தனியார் பள்ளிகளில் இருப்பதில்லை என்பதற்கு A school முதலியவை சாட்சி.  93 குழந்தைகள் எரிந்து  சாம்பலான குடந்தைப் பள்ளியும் ஒரு தனியார் பள்ளியே.  குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப் பளுவுடன் பயிற்சியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் தனியார் பள்ளிகளில்தான்.

            இந்நிலையில் 5ஆம் வகுப்பு அல்லது 8ஆம் வகுப்பு வரை எவ்வித மேற்பார்வையும் கண்காணிப்பும் இன்றி தனியார் பள்ளிகள் செயல்படக் கூடிய வாய்ப்பு அமைந்திருப்பது ரொம்பவும் ஆபத்தானது; ரொம்பவும் வருந்தத்தக்கது.  பள்ளிகளுக்கு உரிய அனுமதிகள் பெறுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கவேண்டுமென்ற நிபந்தனை இருப்பது, இப்படி அனுமதிகள் இல்லாமல் பள்ளிகள் செயல்படுவதற்கு ஒரு காரணமாக உள்ளதை  தொண்டு நோக்கில் பள்ளி ஒன்றை நடத்திவரும் பேரா.கல்விமணி குறிப்பிட்டார்.

           குடந்தை தீ விபத்து, கரியாப்பட்டினம் பள்ளி வேன் விபத்து போன்றவை  நடந்துள்ள பின்னணியில் சிறு குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.  ஆனால் A  school போன்ற அனுமதி பெறாத பள்ளிகள் தமிழகத்தில் ஏராளமாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.  நர்சரி பள்ளிகளுக்கான உதவிக் கல்வி அலுவலர்கள் பணியிலிருந்தும் இது போன்ற பள்ளிகள் இதுவரை அரசின் கவனத்திற்கு வராமல் இருப்பது வியப்பை அளிக்கிறது.  36  A school  -கள் சென்னையில் இருப்பது தனக்கு இதுவரை தெரியாது என்பதை முதன்மைக் கல்வி அலுவலர் ஒத்துக் கொண்டார்.  செட்டிநாடு குழுமமும், செட்டிநாடு பவுண்டேஷ­னும் வேறு வேறா, இல்லை ஒன்றுதானா என்கிற குழப்பம் உள்ளதையும்  நாங்கள் அவருக்கு விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது.

         A school பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை இனி வேறு பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது சிரமம். சென்னை நகரிலுள்ள பள்ளிகளில் இதுபோன்ற வேறு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை.  போதிய பயிற்சி இல்லை என இக்குழந்தைகளை நிராகரிக்க வாய்ப்பும் உண்டு.  இதனால்  A school களில் படித்து வரும் 4000 குழந்தைகளின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.  விரக்தியுற்ற நிலையிலேயே பெற்றோர்கள் மிகவும் தன்னெழுச்சியாக ஜுலை 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.  நிர்வாகம் தங்களுடைய கேமராவை அங்குள்ள போலீஸ்காரர்களிடம் கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்த பெற்றோர்களைத் தனித்தனியே படம் பிடித்து அச்சுறுத்தியுள்ளது. போலீஸ்காரர்களும் இதற்கு ஒத்துழைத்துள்ளனர்.

பரிந்துரைகள்:

 01. நர்சரி பள்ளி முதல் உயர்கல்வி வரை முழுமையான அனைத்து அனுமதிகளையும் பெற்ற பின்னரே அதற்கான பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.  இதற்குரிய சட்டத்திருத்தம் உடனடியாகச் செய்யப்பட வேண்டும்.  அனுமதி பெறுவதற்கு குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை தேவை போன்ற நிபந்தனைகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும்.கல்வியைப் பொதுப்பட்டியலில் வைத்துள்ள மத்திய அரசு இப்போது International School  முதலான பெயர்களில் ஏகப்பட்ட  பள்ளிகள் தொடங்கப்படுவதை உரிய சட்டங்கள் இயற்றி ஒழுங்குப்படுத்தாமல்  இருப்பது கண்டிக்கத்தக்கது.

 02. மாநிலங்களில் இயங்கும் மத்திய வாரியப் பள்ளிகள், பன்னாட்டுப் பள்ளிகள், 'பிளே வே' பள்ளிகள் எதுவான போதிலும் அவற்றின் மீது மாநில அரசின் கட்டுப்பாடுகள் இருப்பது அவசியம்.  இதை நாங்கள் சந்தித்த முதன்மைக் கல்வி அலுவலரும் அனுபவப்பூர்வமாக வற்புறுத்தினார். அனுமதியில்லாமல் , போதிய அடிப்படைத் தரமும் இன்றி  A school  பள்ளிகள் நடைபெற்றபோதிலும் இது குறித்து தான் அறிக்கைதான் அளிக்க முடியுமே ஒழிய நடவடிக்கை இயலாது என முதன்மைக் கல்வி அலுவலர் கூறினார்.

03. தமிழகத்தில் புற்றீசல்கள் போல் முளைத்துள்ள அனுமதி பெறாத பள்ளிகளைக் கண்டறிய உடனடியாகக் குழு ஒன்றை அமைத்து அவற்றை அடையாளம் கண்டு தடை செய்ய வேண்டும்.  அனுமதி பெறாத பள்ளியின் பட்டியலை பத்திரிக்கைளில் அரசு வெளியிட வேண்டும்.

04. பல பொய்களைச் சொல்லி ஏமாற்றி நடந்து கொண்டிருக்கக் கூடிய  A school பள்ளிகள் அனைத்தையும் உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும்.  இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அருகிலுள்ள தரமான பள்ளிகளில் இடம் கிடைக்க அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

05. சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் எஸ்.நாகராஜ முருகன்  A school    பற்றி விசாரித்து அளித்த அறிக்கையை பகிரங்கமாக வெளியிடவேண்டும். பள்ளிகள் அனுமதி பெறுவதற்கான தமிழக அரசின் நிபந்தனைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை இப்பள்ளிகள் பூர்த்தி செய்துள்ளனவா என்பது தெளிவாக்கப்படவேண்டும்.

06. ‘செட்டிநாடு’ என்னும் சந்தைப் பெயரை ஏமாற்றிப் பயன்படுத்தியது மாநகரின் 4 இடங்களில் பள்ளிகள் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகப் பொய் சொல்லியது, சி.பி.எஸ்.இ. ஏற்புப் பெற்றுள்ளதாக பெற்றோர்களின் தவறான நம்பிக்கையைப் பரப்பியது, அபத்தமான காரணங்களைச் சொல்லி சிறப்புக் கட்டணம் வசூலித்தது ஆகிய  குற்றங்களுக்காக செட்டிநாடு பவுண்டே­ஷன் நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   07. தற்போது தங்களது சந்தைப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ள செட்டிநாடு கார்ப்பரேட் குழுமம் இதுநாள் வரை அமைதி காத்து மேற்காணும் ஏமாற்றுதல்களுக்குத் துணை போனதற்காக அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். செட்டிநாடு குழுமம்,செட்டிநாடு பவுண்டேஷன்,செட்டிநாடு  வித்யாஷ்ரம் ஆகியவற்றுக்கிடையேயான உறவை வெளிப்படையாக அது பத்தரிக்கைகளில் அறிவிக்கவேண்டும். பொய்யான நம்பிக்கைகளை ஊட்டி மக்களை ஏமாற்றும் விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது எனவும் வேண்டுகிறோம்.  “அதிகம் படித்த மூஞ்சூறு கழனிப் பானைக்குள் விழுந்ததாம்” எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு.  மெத்தப்படித்து, நிறைய ஊதியம் பெறுகிற மத்திய தர, உயர் மத்திய தர வர்க்கப் பெற்றோர்கள் இப்படி முத்திரைப்  பெயர்களைப் பார்த்து ஏமாறாமலிருப்பதில் கவனம் தேவை என எச்சரிக்கையும் செய்ய வேண்டியிருக்கிறது.

தொடர்பு முகவரி:

அ. மார்க்ஸ்,
3-5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
அடையாறு,
சென்னை - 600 0020. 
செல்: 9444120582.



இணைப்பு:

மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசு அறிவித்திருக்கும் நிபந்தனைகள்



01. கட்டிட உறுதிச் சான்று.
(மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரின் ஒப்புதல் / தொடர் ஒப்புதல், அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை)

02. குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒப்புதல் கட்டணம் (ஒரு ஆண்டுக்கு)

                        மாணவர்கள் எண்ணிக்கை                                     தொகை
                                    100 வரை                                                       ரூ. 500
                        251 முதல் 250 வரை                                              ரூ. 1250
                        251 முதல் 500 வரை                                              ரூ. 2500
                                    500க்கு மேல்                                                ரூ. 2500

            500க்கு மேல் உள்ள மாணவர் ஒருவருக்கு ரூ. 5 வீதம் கூடுதலாக செலுத்தப்பட வேண்டும்

03. கட்டிட உரிமைச் சான்று பெற்ற காலத்திற்கு பள்ளியின் பெயரில் ஏற்படுத்த வேண்டிய வைப்பு நிதி (Fixed Deposit)

                    மாணவர்கள் எண்ணிக்கை                                     தொகை
                                    100 வரை                                                       ரூ. 5000
                        251 முதல் 250 வரை                                              ரூ. 7500
                        251 முதல் 500 வரை                                              ரூ. 15000
                                    500க்கு மேல்                                                ரூ. 25000

04. சுகாதாரச் சான்று  (Sanitary Certificate)
            (அப்பகுதி உதவி சுகாதார அலுவலரால் அளிக்கப்படும் இச்சான்று ஓராண்டு செல்லுபடியாகும்)

05. தீ தடையின்மைச் சான்று   (Fire No - Objection Certificate)
            (அப்பகுதி நிலைய தீயணைப்பு அலுவலரால் தரப்படும் இச்சான்றும் ஓராண்டு செல்லுபடியாகும்)

06. பள்ளியின் வரைபடம் (Blue Print)

          (கட்டிட உறுதிச் சான்று அளித்த பொறியாளரால் அளிக்கப்பட வேண்டும்)

07. பள்ளியின் வரைபடம் மாநகராட்சி / நகராட்சி ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.

08. பள்ளிக்கட்டிடம் / இடம் சொந்தமானது எனில் அசல் பத்திரம் இருக்க வேண்டும்.  வாடகையெனில் 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

09. ஒப்புதல் எனில் ரூ. 1500 பதிவு கட்டணம்.  புதுப்பித்தல் என்றால் கடந்த 3 ஆண்டுகளுக்கு பள்ளியின் தணிக்கை அறிக்கை Charted Accountant-டம் பெறப்படுதல் அவசியம்.

 10. பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம்.  ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஒரு மாத ஊதியத்திற்கு குறையாத தொகை பள்ளியின் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்பட வேண்டும்.

11.ஆசிரியர்களிடம் ஒப்பந்தப் பத்திரம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

12. விளையாட்டிடம் உள்ளதா? வளாகத்திலா? அருகிலா? எவ்வளவு தொலைவில்? விளையாட்டிடம் பள்ளிக்குச் சொந்தமானதா / வாடகையா? அதற்குரிய பத்திரம் / ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

13. பள்ளி ஒரே கட்டிடம் அல்லது வெவ்வேறு கட்டிடங்களில் நடைபெற்றால் அவை இரண்டிற்குமிடையேயுள்ள தொலைவு.  அங்கு நடைபெறும் வகுப்புகள் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.  வெளியேறும் வசதிகள் இருக்க வேண்டும்.  மாடிகள் இருப்பின் இருபக்கமும் மாடிப்படிகள் அகலமாக அமைந்திருக்க வேண்டும்.

14. L.K.G., U.K.G. வகுப்புகள் கண்டிப்பாக தரைத் தளத்தில்தான் நடைபெற வேண்டும்.  மாடியில் இருக்கக் கூடாது.

15. ஓலை அமைப்புகள் இருக்கக் கூடாது.  எதிர்காலத்திலும் அமைக்க மாட்டேன் என்ற உறுதி மொழி அளிக்க வேண்டும்.

16. பள்ளியின் நிர்வாகம் மாறினால் அதற்கு உரிய ஒப்புதல் அரசிடம் பெற வேண்டும்

17. பள்ளிக்கு அருகில் மதுக்கடை, ஓட்டல், சமையலறையுடன் கூடிய விடுதிகள் ஆகியன இருக்கக் கூடாது. சத்துணவு சமையலறை வகுப்பறையுடன் இணைத்து அமைக்கப்படாமல் தனியாக அமைக்கப்பட வேண்டும்.

18. கரும்பலகைகள், இருக்கைகள், கல்விச் சாதனங்கள், நூலகப் புத்தகங்கள், விளையாட்டுக் கருவிகள் ஆகியன போதிய அளவில் இருக்க வேண்டும்.

19. அனைத்து வகுப்புகளுக்கும் தமிழ் முதல் மொழியாக கட்டாயமாக போதிக்கப்பட வேண்டும்.  பகுதி 3-ல் இரு பாடங்கள் தமிழ் வழியில் நடத்தப்பட வேண்டும்

20. 20 மாணவர்களுக்கு 1 யூனிட் என்ற விகிதத்தில் கழிவறை வசதிகள் இருக்க வேண்டும்

21. சுகாதாரமான குடிநீர் வசதிகள் இருக்க வேண்டும்

22. உறுதியான கட்டிடங்கள், நல்ல காற்றோட்டம், வெளிச்ச வசதி, மாணவர்கள் அமர்வதற்கு போதுமான இடவசதியுடன் உள்ள தனித்தனி வகுப்பறைகள் அமைக்கப்பட வேண்டும்.

23, கல்விக் கட்டணக் குழு ஆண்டிற்கு நிர்ணயம் செய்த தொகைக்கு மிகாமல் கல்விக் கட்டணம் இருக்க வேண்டும்.

24.  Trust / Committee Deed பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

25. பள்ளி வளாகம் மாணவர்களுக்கு பாதுகாப்பானது என்றும் அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அரசிடமிருந்து எவ்வித நிதியுதவியும் கோரமாட்டோம் என்றும் நிர்வாகம் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

(மாவட்ட பள்ளிக்கல்வி அலுவலகத்திலிருந்து பெறப்பட்டது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக