வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்புக்கள்: போதுமா இவை?

முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்புக்கள்: போதுமா இவை?                          -அ.மார்க்ஸ்


            ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஜெயலலிதாவிடம் நிறையவே மாற்றங்களைக் காண முடிகிறது."நாட்டில் சட்டம்,ஒழுங்கு கெட்டுப் போனதற்கும் கொலை,கொள்ளைகள் பெருகியதற்கும் ஈழத்தமிழர்களே காரணம். அவர்கள் உடனடியாகத்திருப்பி அனுப்பப்பட வேண்டும்'என ஒரு காலத்தில் சட்ட மன்றத்தில் முழங்கிய ஜெயா இன்று அகதி முகாம்களிலுள்ள ஈழத்தவர்களின் நலன் நோக்கில் பல புதிய அறிவிப்புக்களைச் செய்துள்ளார். ஆளுநர் உரையிலேயே தமிழக மக்களுக்குச் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

             முதற் கட்டமாக சமூக நலத் துறையால் செயற்படுத்தப்படும் முதியோர்,ஆதரவற்ற பெண்கள்,ஆதரவற்ற விதவைகள்,மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான ஓய்வூதியத் திட்டங்கள் முகாம்களிலுள்ள தமிழர்களுக்கு விரிவுபடுத்தப்படுவதற்கான உத்தரவு ஆகஸ்ட் முதல் திகதியன்று இடப்பட்டது.இதன்படி முகாம்களிலுள்ள 5544 ஈழத்தமிழர்கள் மாதந்தோறும் 1000 இந்திய ரூபாய்களை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
ஆகஸ்ட் 4 அன்று வெளியிடப்பட்ட வரவுசெலவு அறிக்கையில் மேலும் பல அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.முகாம்களிலுள்ள வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு 25 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு,10,000 ரூபாய்கள் சுழல் நிதியுடன் கூடிய 416 சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல்,முகாம்களில் உள்ளவர்களுக்கான மாதாந்த உதவித் தொகையை இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

         குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 400 ரூபாயாக இருந்த உதவித் தொகை இனி 1000 ரூபாயாக்கப்படும்.வயது வந்த இதர உறுப்பினர்களுக்கான தொகை 288 இலிருந்து 750 ஆகவும் பன்னிரண்டு வயதிற்குட்பட்டோருக்கான தொகை 400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.மானிய விலையில் மாதந்தோறும் அளிக்கப்பட்டு வந்த 12 கிலோ அரிசி(சிறுவர்களுக்கு 6 கிலோ),2 கிலோ சர்க்கரை,6 லீற்றர் கெரசின் முதலியன மாற்றமின்றித் தொடரும்.


      ஜெயா அரசின் இத்தகைய அறிவிப்புகளின் பின்னணி என்ன,எத்தகைய நோக்கங்களுக்காக ஜெயா காய்களை நகர்த்துகிறார் என்கிற கேள்விகள் அரசியல் ரீதியில் முக்கியமானவைதான் என்ற போதிலும் 1994 தொடங்கி ஈழ அகதிகளின் பிரச்சினைகளைக் கூர்மையாகக் கவனித்து வருகின்றவன் என்கிற வகையில் இந்த அறிவிப்புகள் வரவேற்றகத்தக்கவை என்பதில் ஐயமில்லை.

       பெரிய அளவில் முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நடவடிக்கைகள் இவை என்ற போதிலும் இத்தகைய நடவடிக்கைகளால் மட்டுமே அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதுமில்லை.அடிப்படையான சில அணுகல் முறைகளிலேயே மத்திய மாநில அரசுகள் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும்.

அவை:

1.அகதிகள் பிரச்சினையில் இந்திய அரசு கொள்கை அளவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்

2.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலேயே வாழ நேர்ந்துள்ளவர்கள்  எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் இந்தியக் குடிமக்களுடன் சம உரிமை அளிக்கும் முகமாகச் செய்ய வேண்டிய மாற்றங்கள்.

3.முகாம்களில் வாழ்பவர்கள் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைப் பெறும் நோக்கில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்.

இவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.


        1994 இல் புலம் பெயர்ந்த தமிழர்கள் மாநாடொன்றைத் திருச்சியில் நடத்தினோம்.உலக அளவில் புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைப் பல கோணங்களில் ஆய்வு செய்த அம்மாநாடு தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையும் சிறப்பாகக் கவனத்தில் கொண்டது.அம்மாநாட்டு மலரில் நானெழுதியிருந்த கட்டுரையில் இரண்டு அம்சங்களை வலியுறுத்தியிருந்தேன்.அவை இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

அவை:
 
1.அகதிகள் தொடர்பான ஐ.நா.அவையின் 1951 ஆம் ஆண்டு உடன்பாடு மற்றும் 1967 ஆம் ஆண்டு விருப்ப ஒப்பந்தம் ஆகிய இரண்டிலும் இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்லை.இதன் விளைவாக அகதிகளை விதிமுறைகளின்படி நடத்தாவிட்டாலோ கட்டாயமாக வெளியேற்றினாலோ யாரும் கேட்க முடியாது.நீதிமன்றத்தையும் அணுக முடியாது.ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி சுமார் ஒரு இலட்சம் ஈழ அகதிகள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட போது இதே காரணத்தைச் சொல்லி ஐ.நா.அகதிகள் உயர் ஆணையம் இதில் தலையிட மறுத்தது குறிப்பிடத்தக்கது.


2.அகதிகள் மற்றும் அகதிகள் மறுவாழ்வு தொடர்பாக தேசியக் கொள்கை ஒன்றை இந்திய அரசு இதுவரை உருவாக்கவில்லை.இதன் விளைவாக வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகிற அகதிகளும் வெவ்வேறு மாநிலங்களில் புகல் அளிக்கப்படும்போது அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் ஏற்றத்தாழ்வுடன் அமைகின்றன.காஷ்மீர் மற்றும் திபேத்திய அகதிகளைக் காட்டிலும் அலட்சியமாகவும் குறைவான வசதிகளுடனும் ஈழத் தமிழர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதற்கான பின்னணி இதுவே.பல்வேறு துறைகளில் புதிய தேசியக் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்திய அரசு உடனடியாக அகதிகள் மறுவாழ்வுக்கான தேசியக் கொள்கை ஒன்றை இன்று அகதிகள் தொடர்பாக உலக அளவில் உருவாகியுள்ள மனிதாயக் கண்ணோட்டங்களை உள்ளடக்கி உருவாக்க வேண்டும்.அத்தோடு அகதிகள் தொடர்பான ஐ.நா.அவையின் பிரகடனம்,விருப்ப ஒப்பந்தம் ஆகியவற்றிலும் உடனடியாகக் கையெழுத்திடவேண்டும்.தமிழகத்திலுள்ள  26 மாவட்டங்களிலுள்ள 113 முகாம்களில் ஈழ அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சென்ற 2006 ஆம் ஆண்டில் நான்காம் முறையாக ஈழத்திலிருந்து பெரிய அளவில் அகதிகள் வரத் தொடங்கிய சூழலில் 19 மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து வெவ்வேறு மாவட்டங்களிலுமுள்ள 11 முகாம்களைத் தேர்வு செய்து பார்வையிட்டு அறிக்கை ஒன்றை அளித்தோம்.


      முகாம்களில் நிலைமைகள் மிக மோசமாக இருந்தன.தங்குவதற்கு எந்த வகையிலும் தகுதியற்ற வீடுகள்,குடிநீர்,கழிப்பறை முதலிய மிக அடிப்படை வசதிகளும் இல்லாமை,கொடுக்கப்படும் உதவித் தொகை கால் வயிற்றையும் கூட நிரப்ப இயலாத நிலை,கடுமையான பொலிஸ் கண்காணிப்பு,வயிற்றுப் பிழைப்புக்காக வெளியே வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கடும் சுரண்டல்,மாலை ஆறு மணிக்குள் முகாம்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம்,வேறு முகாம்களிலுள்ள உறவினர்களைச் சந்திக்க வேண்டுமானால் அனுமதிக்காகப் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம்,குளிப்பதற்கும் பிற தேவைகளுக்காகவும் திறந்த வெளிகளைப் பயன்படுத்த நேர்பவர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் எல்லாவற்றையும் அறிக்கையில் பட்டியலிட்டிருந்தோம்.


       2008 இல் மீண்டும் நான் புதுவை மக்கள் உரிமை கூட்டமைப்புத் தலைவர் கோ.சுகுமாரன்,பாரிஸிலிருக்கும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் சுகன் மற்றும் சில மனித உரிமை அமைப்பினர் எல்லோரும் கீழ்ப்புதுப்பட்டு, குள்ளஞ்சாவடி,விருதாசலம் ஆகிய ஊர்களிலுள்ள முகாம்களைப் பார்வையிட்டோம்.குள்ளஞ்சாவடி முகாமிலிருந்த குழந்தைகள் காப்பகம் இருந்த அவலத்தையும் அங்கிருந்த குழந்தைகள் பசியோடிருந்த நிலையையும் பார்த்த சுகன் அப்படியே தரையிலமர்ந்து அழத் தொடங்கி விட்டார்.முதன்முறை நாங்கள் சென்றபோது "ஆஃபர்'என்கிற தொண்டு நிறுவனம் சத்து மாவு,சிறு தீனிகள் முதலியவற்றை குழந்தைகளுக்கு வழங்கி வந்தது.இன்று அது நிறுத்தப்பட்டுள்ளது.சென்றவாரம் கீழ்ப்புதுப்பட்டு முகாமிற்கு நானும் சுகுமாரனும் சென்றிருந்தோம்.இங்கும் அதே நிலைதான்.இது குறித்து ஆஃபர் அமைப்பின் தலைவர் சந்திரகாசனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்கான வெளிநாட்டு உதவி நின்று போனதால் அதைத் தொடர முடியவில்லை என்றார்.


         கீழ்புதுப்பட்டு முகாமில் உள்ளவர்கள் 1990 இல் வந்தவர்கள்.பெரும்பாலும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள்.இவர்களில் பலருக்கு இங்கு வந்த பின் திருமணமாகிக் குழந்தைகள் பிறந்துள்ளன.இந்தக் குழந்தைகளுக்கு இந்திய நாட்டுப் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே உள்ளது.இதை வைத்துக் கொண்டு அவர்கள் பாஸ்போர்ட் வாங்க முடியாது.இங்கே பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமானால் சாதிச் சான்றிதழ் வேண்டும்.அகதிகளுக்கான அட்டை வைத்திருப்போர் சாதிச் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்ற போதிலும் பல பள்ளிகளில் அது வற்புறுத்தப்படுகின்றது.தவிரவும் உயர் கல்வியில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 சத இட ஒதுக்கீடும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.எனவே ஈழ அகதி மாணவர்கள் இங்குள்ள வசதி படைத்த முன்னேறிய பிரிவு மாணவர்களிடம் போட்டியிட்டே இடம் பிடிக்க முடியும்.மேற்படிப்புக்குப் போகாமல் வேலைக்குப் போகலாம் என்றால் ஓட்டுனர் உரிமம் முதலானவை இவர்களுக்கு வழங்கப்படாத நிலை இருந்து வந்தது.

 
       ஆட்டோ ஓட்டுகின்ற பல இளைஞர்கள் உரிமம் இல்லாமல் கடும் பொலிஸ் தொல்லைக்கு உள்ளாயினர்.முகாமிலுள்ள ஆண்களோ பெண்களோ வெளியே உள்ள அகதிகளையோ இந்தியக் குடிமக்களையோ திருமணம் செய்து கொண்டால் அப்படித் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அகதிச் சான்றிதழ் கொடுப்பதில்லை.எனவே கணவர் அல்லது மனைவியுடன் முகாமில் வசித்தாலும் அகதி உதவிகள் எதையும் அவர்கள் பெற முடியாது.அதேபோல் சுய உதவிக் குழுக்களை முகாம்களில் உள்ளவர்கள் உருவாக்கி நடத்தினால் அவற்றை இங்குள்ள வங்கிகள் அங்கீகரிப்பதில்லை.



         இன்னொரு அவலத்தையும் எங்களிடம் அவர்கள் முறையிட்டனர். தமிழகத்தில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனிச் சுடுகாடுகள் உண்டு என்பதை அறிந்திருக்கலாம்.முகாம்களிலுள்ளவர்கள் யாரேனும் இறந்து போனால் இங்கே உள்ள சுடுகாடுகளில் புதைக்கவோ எரிக்கவோ அனுமதிக்காத நிலையும் சில இடங்களில் இருந்தது.முகாம்கள் அனைத்தும் வருவாய்த்துறை மற்றும் உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரைச் சிறைச்சாலைகளாகவே இன்று வரை உள்ளன.அருகிலுள்ள முனிசிபாலிட்டி அல்லது நகரசபை வசதிகள்,குடிநீர் உட்பட எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.


        மனித உரிமை அமைப்புகள் கொடுத்த அழுத்தங்கள்,ஆஃபர் போன்ற அமைப்புகளின் வேண்டுகோள்கள் ஆகியவற்றின் விளைவாக இன்று இந்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.சென்ற அரசு வெளியிட்ட ஒரு ஆணையின் மூலம் சில நூறு பேருக்கு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.இலங்கைத் தூதரகக் கிளை ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ்கள் அளித்தது.ஆனால் அது முழுமை பெறுவதற்கு முன் பாதியிலேயே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலுக்குப் பின் பொலிஸ் கெடுபிடிகளும் சற்றுக் குறைந்துள்ளது.


          இப்படியான சில தற்காலிகக் தீர்வுகளாகவன்றி முகாம்களிலுள்ள ஈழத்தமிழர்களின் இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமானால் முகாம்களிலும் வெளியிலும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு உடனடியாக இரட்டைக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும்.அப்போது இதர இந்தியக் குடிமக்களுக்கான எல்லா உரிமைகளும் எல்லாச் சலுகைகளும் இவ்வாறான சிறப்பு ஆணைகளின்றி தானாகவே அவர்களுக்கும் கிடைத்துவிடும்.இந்திய அரசு வெளி நாட்டிலுள்ள வசதி மிக்க இந்தியர்களுக்கெல்லாம் இரட்டைக் குடியுரிமை வழங்கும்போது ஏன் ஈழத் தமிழர்களுக்கு வழங்கக் கூடாது?ஒரு வேளை நாட்டில் நிலைமைகள் உண்மையிலேயே சீராகிவிட்டதாகக் கருதும் பட்சத்தில் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இலங்கைக் குடியுரிமையைப் பயன்படுத்தி நாடு திரும்பலாம்.


         முன்னாள் முதல்வர் கருணாநிதி இரண்டாண்டுகளுக்கு முன் இரட்டைக் குடியுரிமைக் கோரிக்கையை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.ஏனோ அவர் இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்தவில்லை. முகாம்களில்  உள்ளவர்களுக்கும் இங்குள்ளவர்களுக்கும் பிரச்சினை நேரும் போதெல்லாம் பொலிஸாகட்டும் வேறு யாராக இருக்கட்டும்.அகதித் தமிழர்களைச் சமமாக நடத்துவதில்லை.இரண்டு வாரங்களுக்கு முன் கீழ்ப்புதுப்பட்டிலுள்ள புது முகாமிலிருந்து மூன்று வயதுக் குழந்தை ஒன்று கடத்திச் செல்லப்பட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டபோது குற்றவாளி யாரென்று தெரிந்திருந்தும் உள்ளூர் பொலிஸ் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.

       முகாமிலிருந்தவர்கள் சாலை மறியல் செய்த பின்பும் நடவடிக்கையில்லை.சுகுமாரன் போன்றோர் தலையிட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது."என்ன இருந்தாலும் நாங்க அகதிங்கதானே? என்றார் ஒரு மூதாட்டி.இரட்டைக் குடியுரிமை மேற்குறிப்பிட்ட பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். 'சிறப்பு முகாம்கள்'என்ற பெயரில் தமிழக அரசு இரண்டு நிழற்சிறைகளை நடத்தி வருகிறது.இயக்கத்தவர்கள் எனச் சந்தேகப்படுபவர்கள் இந்தச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.ஒரு முறை இதில் அடைக்கப்பட்டால் பின் வெளியே வருவது அரிது.இன்னும் இந்த இரண்டு சிறைகளில் ஒன்றில் சிலர் அடைக்கப்பட்டுள்ளனர்.போர் முடிந்து பாதுகாப்புப் பிரச்சினை ஒன்றும் இல்லாத நிலையில் சிறப்பு முகாம்களையும் தமிழக அரசு உடனடியாக இரத்துச் செய்து அங்குள்ளவர்களைச் சாதாரண முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்.

        2010 ஏப்ரல் மாதக் கணக்கீட்டின்படி தமிழகத்திலுள்ள 113 முகாம்களிலும் 19,916 குடும்பங்களைச் சேர்ந்த 73,251 பேர் இருந்தனர்.முகாம்களுக்கு வெளியே 11,478 குடும்பங்களைச் சேர்ந்த 32,242 பேர் இருந்தனர்.இவர்களில் சுமார் 1000 இற்கும் குறைவானவர்கள் போருக்குப் பின் நாடு திரும்பியுள்ளதாகவும் 2800 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா.அகதிகள் ஆணையத்தின் இலங்கைப் பிரதிநிதி மிஷேல் ஸ்வாக் தெரிவித்துள்ளார். இங்குள்ளவர்களில் முகாம்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே மாதாந்திர உதவித் தொகைகள் தரப்படுகின்றன என்பது நினைவிற்குரியது.நாங்கள் முதன்முறை (2006)முகாம்களுக்குச் சென்றபோது குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் வெறும் 200 ரூபாய்களும் இதர வயது வந்தோருக்கு 144 ரூபாய்களும் மட்டுமே வழங்கப்பட்டது.கொடுக்கப்பட்ட அரிசி முதலான பொருட்களும் தரக் குறைவாகவும் அளவு குறைவாகவும் இருந்தன.மிக விரிவான விளக்கங்களுடனும் பரிந்துரைகளுடனும் எங்கள் அறிக்கை இருந்தது.வேறு சிலருங்கூட இந்த உதவித் தொகையை அதிகரிக்க வேண்டுமெனக் கோரியிருந்தனர்.

        புதிதாகப் பதவி ஏற்றிருந்த கருணாநிதி அரசு இந்த உதவித் தொகைகளை இரட்டிப்பாக்கியது.அதை வரவேற்ற நாங்கள் எனினும் இது யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போலுள்ளது என்றோம்.குடும்பத் தலைவர்,மற்றவர் என்ற வேறுபாடில்லாமல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் குறைந்த பட்சம் 1050 ரூபாய்களாவது கொடுக்க வேண்டுமெனக் கோரினோம்.இது 2006 இல். இப்போதைய விலைவாசிக்கு குறைந்த பட்சம் 2000 ரூபாய்களாவது ஒவ்வொருவருக்கும் அளிக்க வேண்டும்.குழு ஒன்றை அமைத்து எல்லா முகாம்களுக்கும் சென்று பார்த்து வீடு,கழிப்பிடங்கள்,குடிநீர்,மின்சாரம் முதலான எல்லா வசதிகளும் குறை நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.

        இவை தவிர முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்குவது,கடவுச் சீட்டு வழங்குவது முதலான கடமைகளைச் செய்ய இலங்கை அரசை வற்புறுத்தும் பணியை இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புகளும் தமிழர் கட்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.

         புலம் பெயர்ந்து வந்து இந்தியா போன்ற நாடுகளில் அகதிகளாகச் வதிய நேர்ந்த யாருக்கும் அவர்களின் உச்சபட்சக்கோரிக்கை நாடு திரும்புவதாகத்தான்  இருக்கும்.நாங்கள் சந்தித்த சந்திக்கின்ற ஒவ்வொரு ஈழத் தமிழ் அகதியும் அதைத்தான் சொன்னார்கள்.சொல்கின்றார்கள்.அத்தகைய நிலை ஏற்படும்வரை முகாம்களிலுள்ள ஈழ அகதிகள் குறைந்த பட்ச நிம்மதியுடன் வாழ இந்த அடிப்படைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

நன்றி:- தினக்குரல் 11.08.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக