செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

வெகுசன சினிமாவுக்கான ஓர் ஆய்விதழ்: காட்சிப் பிழை திரை

வெகுசன சினிமாவுக்கான ஓர் ஆய்விதழ்: காட்சிப் பிழை திரை

                                                                                                - மு. சிவகுருநாதன்                  தமிழ் சிறு பத்திரிக்கை வரலாற்றில் சினிமாவுக்கான இதழ்கள் மிகவும் குறைவு.  அப்படி வெளிவரும் ஒரு சிலவும் பாதியில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும்.  சிறு பத்திரிக்கை சார்ந்து வருகின்ற சினிமா இதழ்கள் ஈரான் படங்கள் போன்ற கலைப்படங்களை மட்டுமே கவனத்தில் கொள்வதாக இருக்கும்.  தமிழ் வெகுஜன சினிமா பற்றிய விமர்சனங்களும், ஆய்வுகளும் அதிகம் இல்லாதது பெருங்குறையாகும்.  இந்த இடைவெளியை நிரப்ப ‘காட்சிப் பிழை திரை - திரைப்பட ஆய்விதழ்’-இன் பங்களிப்பு முக்கியமானது.            ஆகஸ்ட் - செப்டம்பர் 2010-இல் ‘காட்சிப்பிழை’ என்ற பெயருடன் இரு மாத இதழாகத் தொடங்கப்பட்ட இவ்விதழ் இரண்டு இதழ்களுக்குப் பிறகு ‘காட்சிப் பிழை திரை’ என்ற சிறிய பெயர் மாற்றத்துடன் மாத இதழாக இதுவரை 8 இதழ்கள் வெளிவந்திருப்பது தமிழ்ச் சூழலில் மகிழ வேண்டிய ஒரு நிகழ்வாகும்.            வீ.எம்.எஸ்.சுபகுணராஜன் ஆசிரியராகக் கொண்ட இவ்விதழ் மதுரை பாபு, மலர்விழி ஜெயந்த், மோனிகா, சுந்தர்காளி, ராஜன்குறை, முகமது சஃபி ஆகியோரின் ஆசிரியர் குழு பங்களிப்பில் வெளிவருகிறது.  தியோடர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ஸ்டீபன் ஹியூஸ், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆகியோரடங்கிய ஆலோசனைக்குழுவுடன் மோனிகாவின் அழகான வடிவமைப்பில் இதழ் வந்து கொண்டிருக்கிறது.            இதுவரை அங்காடி தெரு, நந்தலாலா, அழகர்சாமியின் குதிரை, ஆரண்ய காண்டம் ஆகிய தமிழ் சினிமாக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இப்படங்கள் குறித்த பல்வேறு பார்வைகள் வாசகனுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.  இந்த உரையாடல்கள் திடீரென்று முடிந்து விடுவது போல் உள்ளது.  தொகுக்கும் போது வெட்டின்றி விரிவான முழுமையான விவாதங்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.            தமிழ் சிறு பத்திரிக்கைகளுக்கு எப்போதும் நேர்காணல்களுக்கு தனித்த இடம் உண்டு.   மிகவும் பிரபலமானவர்களை மட்டும் நேர் காணுவதுதான் இங்குள்ள நடைமுறை அதற்கு மாறாக காட்சிப் பிழை திரை முகம் தெரியாத சினிமா கலைஞர்களையும் திரைப்படத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள பலரை இந்நேர்காணல்கள் மூலம் வெளிப்படுத்துவது பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும்.            சினிமா ஆபரேட்டர் கம்பம் ஷேக் பரித், திரைப்பட விமர்சகர் பேரா. வசந்தன், சினிமா சமையற்கலைஞர் சுப்ரமணி, இசை ஆர்வலர் - இசைத் தட்டு சேகரிப்பாளர் திருநின்றவூர் டி. சந்தான கிருஷ்ணன், பண்டிட் ராஜுவ் தாராநாத், தயாரிப்பாளர் மின்னல் (உதுமான் முகையதீன்), நாடக நடிகர் கலைமாமணி எஸ்.ஏ. கண்ணன் போன்ற பல நிலைகளில் சினிமாவுடன் உறவாடிய முகம் தெரியாத மனிதர்களின் கருத்துக்கள் தமிழ் சினிமாவின் விளிம்பு நிலை கருத்துக்களாக இவ்விதழில் வெளிப்படுவது சிறப்பாகும்.            ராஜன் குறை, வெங்கடேஷ் சக்கரவர்த்தி, சுப. குணராஜன் போன்றோரது கட்டுரைகள் தமிழ் சினிமாக்களை அகலமாக அலசுகிறது.  கதாநாயகனின் மரணத்தைப் பேசிய ராஜன் குறையின் கட்டுரை, பாலாவின் படைப்புலகத்தை அலசும் சுப. குணராஜன் கட்டுரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், வானம் திரைப்படங்களை முன் வைத்து தேசியத்தின் வறுமையைச் சொல்லும் மலர்விழி ஜெயந்த் கட்டுரை போன்ற பல்வேறு ஆக்கங்கள் குறிப்பிடத்தகுந்தவை.            ‘டேவிட் லீனின் ரயான்ஸ் டாட்டரும் (1970) மண்வாசனை சினிமாவின் வணிக வடிவமும்’ என்ற வெங்கடேஷ் சக்கரவர்த்தியின் கட்டுரைத் தொடர் 1976 - 1976 வரை உருவான மண் வாசனை சினிமாக்களை ஆய்வு செய்து, இவைகள் ஆங்கிலப் படங்களின் காப்பி என்று சொல்ல முடியாதபோதும் அவற்றின் நுட்பங்கள் இவற்றில் செயல்படுவதை விவரிக்கிறது.  1970களில் பாலியல் வேட்கைளை முதன்மைப்படுத்தும் தமிழ் மண்வாசனைப் படங்கள் உருவாக எந்த சமூக, கலாச்சார, சரித்திர, பொருளாதார நிகழ்கவுகள் காரணிகளாக இருந்தன என்ற கேள்வியுடன் இக்கட்டுரைத் தொடர் முடிகிறது.            சி. மோகன், சஃபி, பெருமாள் முருகன் ஆகியோரது பத்திகள் தொடர்கின்றன.  தமிழ்த் திரைப்படங்களின் மனநோய் குறித்த சஃபியின்  தொடர் இதுவரை யாரும் கவனிக்காத பகுதிகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியாகும்.  ‘பரண்’ பகுதி பழைய சினிமா இதழ்களின் பக்கங்களை நம் கண்முன் விரிக்கிறது.            தீவிர வாசிப்பு, எழுத்து, இலக்கியம் ஆகியவற்றிற்கு எதிராகவே தமிழ் சினிமா இருந்து வந்துள்ளது.  வெகுசன மக்களின் கலையாக பார்க்கப்பட்ட சினிமாவை பல தருணங்களில் இலக்கியவாதிகள் புறக்கணித்தே வந்துள்ளனர்.  சினிமாவுலகமும் தீவிர எழுத்தை கண்டு கொள்வதில்லை.   இந்நிலை மாற இம்மாதிரியான இதழ்கள் உதவி புரியக் கூடும்.  மேலும் வெகுசன சினிமாவை பார்க்க, புரிந்து கொள்ள, விமர்சிக்கத் தூண்டுவதாகவும் இருக்கிறது.            தமிழ் சினிமாவில் தற்போது செய்யப்படும் ஒன்றிரண்டு சோதனை முயற்சிகள் மற்றும் அயல் மொழிப்படங்களைக் காப்பியடிக்கும் போக்கு போன்றவற்றை விளங்கிக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் தமிழ் சினிமா பற்றிய கோட்பாட்டுருவாக்கங்களை ஆராயும் இவ்விதழ் பயன்படுமெனத் தோன்றுகிறது.  எனவே இதைப் போன்ற இதழ்கள் தொடர்ந்து வெளியாவது தமிழ்ச் சூழலில் இன்றியமையாத தேவைகளுள் ஒன்று.


            தனி இதழ் ரூ. 20/-    ஆண்டு சந்தா ரூ. 200/-

 தொடர்புக்கு:-

             காட்சிப் பிழை திரை,
            மே/பா. ரியல் இம்பேக்ட் சொல்யூசன்ஸ்,
            12 - மூன்றாவது தெரு,
            கிழக்கு அபிராமபுரம்,
            மைலாப்பூர்,
            சென்னை - 600 004.
            தொலைபேசி: 044 - 24984433
            செல்: 94878 11939
            மின்னஞ்சல்: kaatchippizhai@gmail.com

1 கருத்து:

கருத்துரையிடுக