திங்கள், ஆகஸ்ட் 08, 2011

தொல்லியல் - வரலாற்றறிஞராக புது அவதாரமெடுக்கும் அப்துல்கலாம்!

தொல்லியல் - வரலாற்றறிஞராக புது அவதாரமெடுக்கும் அப்துல்கலாம்!

                                                                                                         - மு. சிவகுருநாதன்

    
       கடந்த சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. அணிக்கு ஆதரவாக தமிழ் சினிமா காமெடியன் வடிவேலு நடத்திய கூத்துக்களை வெறுமனே கண்டு,கேட்டு, ரசித்த மக்கள் அந்த நகைச்சுவைகளுக்கு வேறு எந்த மதிப்பும் அளித்திடவில்லை.   அந்த வகையில் தமிழக மக்களுக்கு நன்றி சொல்லலாம்.



            சினிமாவில் காமெடியனாக நடிக்காவிட்டாலும் கூட வடிவேலுக்கு இணையாக காமெடியனாக இந்திய - தமிழ் அறிவுலகில் வலம் வருபவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.  தேசிய முன்னணி (NDA) கூட்டணி அரசும் இந்திய - தமிழ் ஊடகங்களும் அப்துல்கலாமை வழிபாட்டிற்குரிய பேருருவாக கட்டமைத்துள்ளன.  இதற்குப் பின்னாலுள்ள இந்துத்துவ அரசியல், குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலை போன்றவற்றையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.



            பைபிளில் வரக்கூடிய 'நோவா' பேழையில் நீங்கள் யாரை வைத்துப் பாதுகாக்க விரும்புகிறீர்கள் என்று மாணவர்களிடம் கேட்ட போது அவர்களனைவரும் ஒரே குரலில் அப்துல்கலாம் என்று சொன்னதாக சில ஆண்டுகளுக்கு நண்பரொருவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.  ஊடகங்கள் மக்களில் மனத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு இதை கூட உதாரணமாகக் காட்டலாம்.



            உலகில் அல்லது இந்தியாவில் நீங்கள் யாரை பெரிய அறிவு ஜீவியாக நினைக்கிறீர்கள் என்று கேட்டாலும் பெரும்பாலும் அப்துல்கலாம் என்றே பதில் கிடைக்கிறது.  அணுசக்தி, ஏவுகணை, 2020இல் வல்லரசு, கங்கை - காவிரி இணைப்பு, இந்தியப் பொருளாதாரம் என்று பல்வேறு களங்களில் தத்து பித்தென உளறி வைக்கும் ஒரு காமெடியனை கதாநாயகனாக ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன.   அதைப் படிக்கும் கேட்கும் பலரும் இந்த மாயைகளின் பிடியில் ஆட்படுகிறார்கள்.



            பல்வேறு துறை ரீதியாக ஆய்வு செய்து வழங்கப்பட்ட ஆய்வறிக்கைகளைத்  தொகுத்து இந்தியா - 2020 என்ற பெயரில் தாமே எழுதியது போல் காட்டிக்கொண்டது கலாமின் அறிவுலக மோசடித்தனம், இதற்கு இணையான ஒரு மோசடி தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பல்வேறு தமிழ்க்கவிஞர்களின் வரிகளை சேர்த்துப்போட்டு தம் கவிதையாக மாற்றி அதையும் சமச்சீர் கல்வி புத்தகங்களில் பிரசுரித்தது ஆகும்.



            அப்துல்கலாம் போன்றவர்கள் கங்கையையும் காவிரியையும் இணைக்க வேண்டும் என்று சொல்கிறபோது அவர்களுக்கு இந்திய நிலவியல் அறிவு கொஞ்சம் கூட இல்லையயன்பது புலனாகும்.  இருப்பினும் அவற்றைக் கேள்விகளால் எதிர்கொள்ளாமல் வெறும் முழக்கமிடவே நாம் நம் இளைய சமுதாயத்தைப் பழக்கியிருக்கிறோம்.



            அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போதும் முன்பும் பின்பும் கல்லூரி - பள்ளி மாணவர்களிடம் நிகழ்த்திய உரையாடல் மோசடிகளை ‘கவிதாசரண்’ இதழ் முன்பே அம்பலத்துக்குக் கொண்டு வந்துள்ளது.



            அப்துல்கலாமை விஞ்ஞானி என்று தனது கட்டுரையில் குறிப்பிட, எழுத்தாளர் ராமாநுஜம் இல்லை அவர் ஒரு Technocrat என்று திருத்தியதை 
அ. மார்க்ஸ் தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடுவார்.  (அமார்த்யா சென்:- இன்னும் நீதியான ஒரு சமூகத்தை நோக்கி...) ஆனால் ஊடகங்கள் அவருக்கு விஞ்ஞானி என்ற பட்டத்தை வழங்கின.  அதை அவர் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.   ஏவுகணை, செயற்கைக்கோள் தொழில் நுட்பத்திறமை மிகுந்த அப்துல்கலாம், பொருளாதாரம், கல்வி, நிலவியல் போன்ற அனைத்துத் துறைகளின் வல்லுநராக மாறி கருத்துக்கள் உதிர்ப்பதை இச்சமூகம் வாய் பிளந்து கேட்டுக் கொண்டதே தவிர எதிர்க்கேள்வி கேட்டதில்லை. 



            இந்தியாவில் ராணுவம், பாதுகாப்பு, ராக்கெட், அணுசக்தி ஆகிய துறைகளில் சாதனை செய்வோர்தான் விஞ்ஞானிகளாக வலம் வருகின்றனர்.  வேறு எந்தத் துறைகளிலும் அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினாலும் அவர்கள் இங்கு கண்டு கொள்ளப்படுவதில்லை.   இங்கு மன்மோகன்சிங்,
ப. சிதம்பரம், மாண்டேக்சிங் அலுவாலியா, ரெங்கராஜன், சுப்பாராவ் போன்றவர்கள்தான் பொருளியல் மேதைகள்; அமார்த்யா சென் அல்ல.  அப்துகல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, ய.சு.ராஜன், சிதம்பரம், எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன், முன்னாள்  தலைவர் கஸ்தூரிரங்கன் போன்றோர்தான் விஞ்ஞானிகள்.  ஒரு வகையில் இதுவே இந்தியாவின் அவலம்.


            கிருஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக ஆராய்வது தொடர்பான தேசிய கருத்தரங்கு (Seminar on Scientific Dating of Ancient Events Before 2000 BC தில்லியில் 30.07.2011 அன்று நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட அப்துல்கலாம் வழக்கம் போல புராணங்கள், இதிகாசங்கள், மக்கள் நம்பிக்கைகள், வேதங்கள் ஆகியவற்றை வரலாறு, தொல்லியல் ஆகியவற்றுடன் இணைத்து போகிற போக்கில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ( தினமணி-திருச்சி ஜூலை,31 )



            வரலாற்று அறிஞர்களும் அறிவியல் அறிஞர்களும் வேத பண்டிதர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் புதிதாக பலவற்றைத் தெரிந்து கொள்ள முடியுமாம்! வேத பண்டிதர்ககளும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் சொல்வதை வரலாற்று-அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் இதன் உட்பொருள்.



            ராமாயணத்தில் வரும் குறிப்புக்களைக் கொண்டு ஆய்வு செய்து இந்நிகழ்வுகள் நடந்து 7000 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அறிஞர்கள் வந்துள்ளார்களாம்! யார் இந்த அறிஞர்கள் என்பது தெரியவில்லை.  நவரத்ன ராஜாராம், டேவிட் ஃப்ராலி, கோயன்ராட் எல்ஸ்ட், ஸ்ரீகாந்த் தலகிரி போன்ற ‘பென்னம் பெரிய’ அறிஞர்களில் எவரேனும் இருக்கக்கூடும்.  (பார்க்க: அந்தணர் வரலாறு எனும் ஆரிய கூத்து - அ. மார்க்ஸ் - எதிர் வெளியீடு)



            வால்மீகி ராமாயணக் குறிப்பின்படி ராமர் கட்டிய சேதுபாலம் இன்றும் அதே இடத்தில் இருக்கிறது.   இப்பகுதியில் கடல்நீர் மட்டம் 9 அடிக்கு அதிகரித்து விட்டது என்று சொல்லும் அப்துல்கலாமுக்கும் கோமாளி சுப்ரமணியன் சுவாமிக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?  இரண்டு பேருமே பார்ப்பனியத்திற்கு கொடி பிடிக்கும் கோமாளிகளே!



            கோ. ராஜாராம் காளையை குதிரையாக்கி சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என கிராபிக்ஸ் மூலம் ஆரியச்சேவை செய்ததுபோல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்துவதற்கு ராமர் பால அரசியலை முன்னெடுத்தன இந்துத்துவ சக்திகள்.  நாசா எடுத்த புகைப்படத்தில் மணல் திட்டுக்களை காட்டி இவைதான் ராமர் கட்டிய பாலமென கதையளந்தன.   வளைகுடா மணல் திட்டு, டோம்போலா என்பன போன்ற மணற்திட்டுதான் ராமர் கட்டிய பாலமென்று (ஆதம் பாலம்) சொல்லப்படுகிறது என்பதை அறிய நமக்குத் தேவைப்படுவது எளிய புவியியல் அறிவு.  இந்த அறிவு கூட இல்லாத அப்துல்கலாம்களை அறிவுலகப் பிதாமகன்களாக கொண்டாடுவதை என்ன சொல்வது?



            என்னுடைய ஊரான ராமேஸ்வரத்தில் ராமன் தன் கையாலே சிவலிங்கம் பிடித்து, அதனை வழிபட்டு ராமர் பாலம் கட்டி, தனது சேனையுடன் இலங்கை சென்று சண்டையிடுகிறார் என்றெல்லாம் தீர்க்கமாக முடிவுகளைப் பட்டியலிட்டு விட்டு அதை ஆராய வேண்டும் என்று சொல்வதன் உள்நோக்கம் நமக்கு நன்கு புலப்படுகிறது.  வேத - புராண ஆய்வை வரலாற்று - தொல்லியல் - அறிவியல் ஆய்வாக நிறம் மாற்றும் முயற்சி இது. 



            வால்மீகி ராமாயணத்தை பயின்று ராமனைக் கடவுளாகவும் ராமாயணத்தை உண்மை வரலாறு என்ற எண்ணம் கொண்ட த. பரமசிவ அய்யர் ராமாயணத்தில் வரலாறு மற்றும் புவியியலை ஆய்வு செய்து 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலின் பெயர் “Ramayana and Lanka”.   இந்நூல் பற்றிய விரிவான அறிமுகத்தை ‘இராமன் கடந்த தொலைவு’  என்ற தலைப்பில் அ. மார்க்ஸ் சஞ்சாரம் முதல் இதழில் (மார்ச் 2008) செய்திருந்தார். 



            மைசூரில் உள்ள சிவசமுத்திர நீர்மின் திட்டத்தை தொடங்கிய புகழ் பெற்ற பொறியாளர் சர்.கே.சேஷாத்திரி அய்யரிடம் உதவியாளராப் பணியாற்றிய பரமசிவ அய்யர், அப்போதைய பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நுண் விளக்க வரைபடத் தாள்களைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படும் பகுதிகள் குறித்த தனது ஆய்வை மேற்கொண்டு இந்நூலை எழுதியுள்ளார்.



             கோண்டு பழங்குடியினருக்கும் ஆரியர்களுக்கும் நடைபெற்ற போராட்டமே ராமாயணம் என்பதை தெளிவுபடுத்துவதோடு ராவணனின் லங்காவும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றல்ல என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார்.  நர்மதை நதியைத் தாண்டி ராமன் வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெளிவுபடுத்துகிறார்.



            ராமேஸ்வரத்திற்கும் மன்னார் தீவுகளுக்கும் இடையேயுள்ள டோம்போலா மணற்திட்டுத் தொடரான ஆதம்பாலமும் கற்கள், மலைப் பிஞ்சுகள், மரங்கள், முட்புதர்கள் ஆகியவற்றால் ராமனின் உத்தரவால் வானரங்களால் அமைக்கப்பட்ட நளசேதுவும் ஒன்றல்ல என்பதுடன் ராமேஸ்வரத்தில் கோதண்ட ராமர் கோயில் கட்டப்பட்ட காலத்தில்தான் லிங்கம் மற்றும் ஆதம்பாலம் ராமர் பாலமாக மாற்றி கதை புனையப்பட்டது என்பதே பரமசிவ அய்யரின் முடிவு.



            வால்மீகி லங்கா வட இந்தியாவில்தான் உள்ளதென மார்க்சிய அறிஞர்களும் வரலாற்று ஆசிரியர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.   பிறப்பால் பிரமணராக இருந்த பரமசிவ அய்யர் தமது கருத்தியலுக்கு எதிராக இருந்தபோதிலும் உண்மையை வெளிப்படுத்தத் தயங்கவில்லை.  ஆனால் பிறப்பால் இசுலாமியரான அப்துல்கலாம் இந்த ஆய்வுகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாது ஒரு ஆர்.எஸ்.எஸ். காரரைப் போல் கருத்துக்களை உதிர்ப்பது வெட்கக்கேடானது.



              சில நாட்களுக்கு முன்பு கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களைச் சந்தித்த அப்துல்கலாம் 2020இல் இந்தியா வல்லரசாக 10 அம்சத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.  இதுவரை சுமார் 11 மில்லியன் மாணவர்களைச் சந்தித்து அவர்களை மூளைச் சலவை செய்ததைத் தவிர அப்துல்கலாம் சாதித்தது என்ன?   பெரும்பான்மையான இளைஞர்கள் வல்லரசு என்றால் என்ன என்றே தெரியாமல் கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிக்கிறார்கள்.  இதற்கு பலரும் காரணமென்றாலும் அவர்களில் ஒருவர் அப்துல்கலாம் என்பதை மறுக்க முடியாது.



            நவீன அறிவியல் வளர்ச்சியின் காரணமாக தொல்லியல் துறை ஆராய்ச்சிகள் எளிதாகவும் துல்லியமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிடும் கலாம் ராமாயண - வேதகால ஆய்வுகளுக்கு தொல்லியல் தோண்டிகளுக்கு (நன்றி:- அ. மார்க்ஸ் - தீராநதி - நவம்பர் 2010 கட்டுரை) அழைப்பு விடுக்கிறார்.   பாபர் மசூதி இடம் குறித்த அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பையொட்டி எழுதப்பட்ட அ.மார்க்ஸ்-ன் மேற்கண்ட கட்டுரையில் இந்திய தொல்லியல் துறை குறித்த கூர்மையான விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.



          
            1948இல் தக்காணத்தில் தவுலாதாபாத் கோட்டைக்குள் இருந்த ஜும்மா மசூதியை பாரதமாதா கோயிலாக அறிவித்தது, 1970இல் ஹைதராபாத் சார்மினார் கோபுரத்தின் தென்கிழக்கு மூலையிலுள்ள குங்குமம் தெளித்த கல் ஒன்றை பாக்கியலெட்சுமி கோயிலாக ஏற்றுக்கொண்டது, 1977லிருந்து பிகாரில் சசாரம் என்னுமிடத்திலுள்ள ஷெர்ஷா சூரியின் கல்லறைப் பகுதியில் 3 இந்துக் கோயில்கள் உருவாக்க அனுமதியளித்தது, 2007இல் சித்தூர் சுரங்கப்பாதை அருகில் ராணி பத்மினி தீப்பாய்ந்த இடம் என்று பெயர்ப்பலகை வைத்தது என்று இந்துத்துவ எடுபிடிகளாகச் செயல்படும் தொல்லியல் துறைக்குச் சான்றாக நீண்ட பட்டியலே இக்கட்டுரையில் கிடைக்கிறது.



            மக்களின் புராண - இதிகாச நம்பிக்கைகளை வரலாறாக கட்டமைக்கும் போக்கை தொல்லியல் துறையும் நீதிமன்றங்களும் இங்கு செய்து வருவது கண்கூடு.   இப்பெருங்கதையாடல்கள் போலவே நாட்டுப்புற நம்பிக்கைகள, சிறு தெய்வ வழிபாடுகள் போன்றவற்றை வரலாறாக மாற்றி அதன் மூலம் தமக்குத் தேவையான ஒன்றை கட்டமைக்க ஆதிக்க சக்திகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.



            அப்துல்கலாம் குர்ரானை விட பகவத் கீதையை அதிகமாக நேசிப்பவர்; பின்பற்றுபவர்.   இவரும் இவர்களைப் போன்றவர்களும் தங்களுடைய நம்பிக்கைகள மற்றும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள தொல்லியல் துறை போன்ற அமைப்புக்களை நாடுகிறார்கள்.  காலனீய, கீழைத் தேய, இந்துத்துவ சாய்வுகள் கொண்ட தொல்லியல் துறை இவர்களுடைய நம்பிக்கைகளை அறிவியல் மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்க  உதவி புரிவதை நாம் வெறுமனே பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்.



            “இந்திய மண்ணில் வசிக்கும் நாமனைவரும் ஒரே மூதாதையரிடமிருந்து வந்துள்ளோம்.  இது நம்மை ஒற்றுமைப்படுத்தி வலுப்படுத்திக் கொள்ள உதவும்”, என்றும் அப்துல்கலாம் பெருமை பொங்க குறிப்பிடுகிறார்.  இந்தியாவின் வரலாறு, புவியியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் எதையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் ஏதாவது உளறிக் கொண்டிருக்கும் இவர்களைப் போன்றவர்களை அறிவியல், சமூகம், வரலாறு, மானுடவியல் போன்ற துறை சார்ந்த வல்லுநர்கள் கண்டிக்க முன்வரவேண்டும்.  ஊடகங்கள் உருவாக்கும் பேருருவை அப்படியே ஏற்றுக் கொண்டு இவர்களின் உளறல்களை அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது.
          
உதவியவை:


01. அந்தணர் வரலாறு எனும் ஆரியக் கூத்து - எதிர் வெளியீடு.


02. பார்ப்பனர்களின் இராமர் பால அரசியல் - சுழல் வெளியீடு.


03. அமார்த்யா சென்:- இன்னும் நீதியான ஒரு சமூகத்தை நோக்கி.... - எதிர் வெளியீடு.

           ( மேற்கண்ட மூன்று நூற்களின் ஆசிரியர் அ. மார்க்ஸ்)


04. சிந்து வெளி எழுத்து - அஸ்கோ பர்போலா.  தமிழில் : வி. நடராஜ் - தமிழோசை பதிப்பகம்.


 05.  சஞ்சாரம் - இதழ் - 1 - மார்ச் 2008


06. தீராநதி - அக்டோபர் - நவம்பர் 2010 இதழ்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக