ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

கல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றப் பயன்படும் ஓர் ஆய்விதழ்

கல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றப் பயன்படும் ஓர் ஆய்விதழ்-

சிற்றிதழ் அறிமுகம் -மாற்றுவெளி ஆய்விதழ்

                                                                                                                                                                                                                                    - மு. சிவகுருநாதன்



                     சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேரா. வீ. அரசுவை சிறப்பாசிரியராகக் கொண்டு மாற்றுவெளி - ஆய்விதழ் இதுவரை கீழ்க்கண்ட ஆறு முக்கிய தலைப்புக்களில் இதழை வெளியிட்டுள்ளது.

 01. கால்டுவெல் சிறப்பிதழ்
 02. இந்தியப் பொருளாதாரச் சிறப்பிதழ்
 03. கல்விச் சிறப்பிதழ்
 04. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சிறப்பிதழ்
 05. தமிழ் நாவல் சிறப்பிதழ் (1990 - 2010)
 06. மாற்றுப் பாலியல் சிறப்பிதழ்


            தமிழில் இவைகள் குறிப்பிடத் தகுந்த முயற்சி என்பதில் அய்யமில்லை.  அறிஞர் கால்டுவெல்லின் A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages   என்ற ஒப்பிலக்கண நூலின் மூன்றாவது பதிப்பில் பல பக்கங்கள் நீக்கப்பட்டன.  நீக்கப்பட்ட பக்கங்களைச் சேர்த்து கவிதாசரண் வெளியிட்டார்.  இதன் பின்னால் பொ. வேல்சாமி போன்ற பலரது உழைப்பு  இருந்தது.  இது தமிழ்ச்சூழலில் பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்தது.


              கால்டுவெல்லின் இப்புதிய பதிப்பு குறிப்பு 24.04.2008 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழிலக்கியத்துறை ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கட்டுரைகளும் கால்டுவெல் பற்றி பேரா.தொ.பரமசிவன் நேர்காணலும் மாற்றுவெளி முதல் இதழை அலங்கரித்தன.   வீ. அரசு, எம். வேதசகாயகுமார், அ. மங்கை, வ. கீதா ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரைகள் மூலம் திராவிட இயல், கால்டுவெல்லின் பதிப்புகள், பிற நூற்கள், கால்டுவெல் குறித்த மாறுபட்ட பார்வைகளை முன் வைக்கப்பட்டன.


             பொருளாதாரச் சிறப்பிதழான இரண்டாவது இதழில் ‘சென்னை அரசியல் பள்ளி’ ஜனவரி 24, 2009இல் ‘இந்தியா அரசு’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் மூவரின் பேச்சுகள் கட்டுரைகளாக்கப்பட்டுள்ளன.  நாகார்ஜுனன் கட்டுரையொன்றும் இடம் பெற்றுள்ளது. 


              மூன்றாவது இதழ் கல்விச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது.  புதிய பொருளாதாரக் கொள்கை - தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் என்ற சூழலில் கல்வி இன்று முழு வியாபாரமாகிப் போனதையும் தமிழகத்தில் தனியார் கல்வி முதலாளிகள் பெருத்துப்போனதையும்
பேரா.ப.சிவக்குமாரின் ‘அறிவு மூலதனமும் பட்டத் தொழிற்சாலைகளும்’  என்ற கட்டுரை புள்ளி விவரங்களோடு எடுத்துரைக்கிறது.  உடலுழைப்பு சார்ந்த உற்பத்தி முறையை கணினிசார் அறிவு உற்பத்தி முறை பெருமளவில் மாற்றி விட்டதையும் அறிவு மூலதனமாக மாறிவிட்ட நிலையையும் இக்கட்டுரை விளக்குகிறது.  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEC - Special Economic Zone) நமது இயற்கை வளங்களை சுரண்டுவதைப் போல சிறப்புக் கல்வி மண்டலங்கள் (SEC - Special Educational Zone) அமைக்க அரசு முயல்கிறது.  இதை உடனடியாக எதிர்க்க வேண்டிய அவசியத்தை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.


           இலக்கியக் கல்வி சுயவாசிப்பு, சமூக பொருளாதார, அரசியல் பின்னணிச் சூழலில் பனுவல்களைப் புரிதல், இலக்கிய வகைகளின் வரலாறு, கூறுகள், மாற்றங்களை இனம் காணுதல், உலகளாவிய சிந்தனைக் களத்தோடு இலக்கியத்தை அறிவுப் பரப்பின் கூறாக அணுகுதல், நெருக்கடியான சூழல்களின் வெளிப்பாடுகளை மதிப்போடு அணுகுதல் ஆகிய தன்மைகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென அ. மங்கையின் ‘இலக்கியக்கல்வி:- பொருத்தப்பாடு மற்றும் திசை வழி’ என்ற கட்டுரை கூறுகிறது.  இலக்கியப் பாடத்திட்டம், கற்றல் முறைகள் இதை நோக்கியதாக அமைவதில்லை என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்.


            தலித்கள் கல்வி உள்பட எந்த உரிமைகளையும் போராடியே பெற வேண்டியுள்ளது என்பதை ‘கல்வியிலிருந்து தலித்துகள் விலக்கப்படுதலும் இணைப்பு முயற்சியும்’ என்ற கோ. இரகுபதியின் கட்டுரை எடுத்துரைக்கிறது.


           பேச்சுத் தமிழிலிருந்து முற்றிலும் அந்நியப்பட்ட வீரமாமுனிவரின் செந்தமிழை ஏற்காத சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் இரேனியஸ் 1814 முதல் 1838 வரை தமிழகத்தில் மேற்கொண்ட கல்விப்பணிகளை  எம்.வேதசகாயகுமாரின் கட்டுரை விவரிக்கிறது.  இரேனியஸ் கல்விப் பணி சாணர்கள், தலித்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இருந்தது.  பிறசாதி மாணவர்களுடன் சேர்ந்து உணவுண்ணா வெள்ளாள மாணவர்கள் மறுத்த போது பாளையங்கோட்டை மாணவர் விடுதியை இழுத்து மூடி அனைவருக்கும் பொதுக்கல்வி என்ற கருத்தை நிலை நாட்டியதை இக்கட்டுரை குறிப்பிடுகிறது.  வ.வே.சு. அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தையும் இதையும் ஒப்பிட வேண்டுமென வலியுறுத்தும் இவர், இரேனியஸ் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டும் கற்பிக்கப்பட்டதையும் தமிழ்வழிக் கல்வி முறை மட்டுமே பின்பற்றப்பட்டதையும் எடுத்துக்காட்டுகிறார்.


            மாயூரம் வேதநாயம் பிள்ளை, ராஜமய்யர், மாதவையர் ஆகிய தொடக்கக் கால நாவலாசிரியர்கள் படைப்புகளில் வெளிப்படும் கல்விச் சிந்தனைகள் குறித்து வெ. பிரகாஷ் கட்டுரை, உ.வே.சா.வின் சரித்திர நூற்கள் வழி அறியப்படும் தமிழ்க் கல்வி முறைகள் குறித்த கன்னியம் அ. சதீஷ் கட்டுரை, கல்வி குறித்த நூற்கள் அறிமுகம் என பக்கங்கள் விரிகின்றன. 


           ஆவணம் பகுதியில் மெக்காலே கல்வி அறிக்கை - 1835 மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.  கல்வி குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணனுடனான உரையாடல் ஒன்று உள்ளது.  கல்வி தொடர்பான தமிழ் -ஆங்கில நூற்கள் மற்றும் அறிக்கைகளின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.


               நான்காவது இதழ் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர்
க. சுந்தரை அழைப்பாசிரியராகக் (Guest Editor) கொண்டு அந்நூலகச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.  6 ஆங்கிலக் கட்டுரைகள், 13 தமிழ்க் கட்டுரைகள் என 144 பக்கங்களில் நிறைந்துள்ளது இவ்விதழ். 


          கோட்டையூர் ரோஜா முத்தையா புத்தகங்களைத் தேடி அலைந்தபோது ஏற்பட்ட அனுபவங்களைக் கூறுகிறார்.  வைணவர்களுக்குத் திருப்பதி எப்படி ஒரு புண்ணிய தலமோ சைவர்களுக்கு காசி எப்படி ஒரு புண்ணிய தலமோ அதைப் போல என் புத்தக சேகரிப்பாளர்க்குச் சென்னை மூர் மார்க்கெட் ஒரு புண்ணிய தலம் என்று கூறும் ரோஜா முத்தையா, மூர் மார்க்கெட் எரிந்து போனதை வாழ்வின் பெருந்துக்கமாகப் பதிவு செய்கிறார்.  இதிலிருந்து புத்தகச் சேகரிப்பில் அவருக்கிருந்த காதல் - தேடல் புலப்படுகிறது.


           ராமாயணத்தில் ராமர் பாலம் கட்ட உதவிய அணிலைப் போன்று இந்த ஆய்வு நூலகம் உருவாக தான் உதவியதாக எழுத்தாளர் அம்பை தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.  இவருக்கு வேறு எந்த உவமையும் கிடைக்கவில்லை போலும்!  இன்று சமூகத் தளத்தில் ராமர் கட்டியதாக நம்பப்படும் பாலம் குறித்து இச்சமூகம் என்ன பாடுபடுகிறது என்ற சிந்தனையில்லாமல் ஒரு படைப்பாளி இருக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று.


                 சு. தியோடர் பாஸ்கரனின் கட்டுரை, ரோஜா முத்தையாவுடனான சந்திப்பு, அவரின் நூலகம் பற்றியும் அதில் சேகரிப்புப் பற்றியும் விரிவாக பேசுகிறது.  இக்கட்டுரையில் கோட்டையூர் நூலக நிலவரம் தற்போது சென்னையில் அமைக்கப்பட்ட ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் பெற்றிருக்கும் வளர்ச்சியினை கோடிட்டுக் காட்டுகிறது.


           ரோஜா முத்தையாவின் பண்புநலன்களையும் அவரின் சேகரிப்புகளை தி.ந. இராமச்சந்திரன் கட்டுரை விளக்குகிறது.  திராவிட இயக்க வரலாற்றைப் பதிவு செய்ய நகரத்தார் சமூகத்தினர் ஆற்றியுள்ள பணிகளைப் பட்டியலிடும் எஸ்.வி. ஆரின் கட்டுரையில் திராவிட இயக்க ஆய்வுக்குத் தேவை திராவிட இயக்கத்தினரின் வெளியிட்ட குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, திராவிடன், உண்மை போன்ற பல்வேறு ஏடுகள் இங்கு தொகுக்கப்பட்டு இந்நூலகம் ‘திராவிட இயக்க ஏடுகளின் பெட்டகமாகத்’ திகழ்வதாக பெருமையுடன்குறிப்பிடுகிறார்.

       தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சிந்துவெளி நாகரிகம், தமிழ் - பிராமி எழுத்துகள் முதலியவை தொடர்பாக தான் சேர்த்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதை இக்கட்டுரை குறிப்பிடத் தவறவில்லை.   இவற்றைக் கொண்டு இந்த நூலகத்தில் ‘சிந்துவெளி ஆய்வு மையம்’ ஒன்று உருவாக்கப்பட்டு சிறப்புறச் செயல்படுவதை ச. சுப்பிரமணியன் கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது.  ஐராவதம் மகாதேவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  நம்முடைய வருத்தமெல்லாம் ஐராவதம் மகாதேவன் போன்ற பெரிய அறிஞர்கள் வரலாற்று, தொல்லியல் புனைவுகள், புரட்டுகள், மோசடிகள் பல மேற்கொள்ளப்படும்போது உரிய எதிர்வினை புரியாமல் மவுனம் காப்பது பற்றித்தான்.


             ரோஜா முத்தையா நூலகத்துறை படிப்புகள் எதையும் படிக்காமல் தாம் சேர்த்து வைத்திருக்கும் நூற்களின் பட்டியலை நுணுக்கமாக கையாண்டிருப்பதை இரா. பிரகாஷ்-ன் கட்டுரை விரிவாக அலசுகிறது.  தமிழ் சினிமா வரலாற்றைப் பதிவு செய்யவும், ஆய்வு செய்யவும் பயன்படும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் பங்கை ராஜன் குறை வெளிப்படுத்துகிறார்.


          அ. மங்கை ‘தமிழ் நாடக வரலாற்று ஆய்வு’ குறித்தும் வீ. அரசு தமிழில் உருவான அச்சு ஆக்கங்கள் - வெகுசனப் பண்பாடு குறித்தும் பேசுகிறது.  இறுதியாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் (RMRL - Roja Muthiah Research Library) சேவைகளை க. சுந்தர் விரிவாக எடுத்துரைக்கிறார்.


         மாற்றுவெளி ஆய்விதழின் 5வது இதழ் தமிழ் நாவல் சிறப்பிதழாக (1990 - 2010) 30 ஆண்டு நாவல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.  இதில் 24 நாவல்களைப் பற்றி குறிப்பும் ஆவணம் பகுதியில் 50 எழுத்தாளர்களின் சுமார் 115 நாவல்கள் பட்டியலிடப்படுகின்றன.  இது முழுமையானதாக இல்லையென்றபோதிலும் இரு மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக கொடுத்த ஆய்வேடு அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லும் போது நமக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது.


           ராஜன் குறை பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவலின் இரண்டு முக்கிய தருணங்களை விளக்கி இந்நாவல் மூலம் பெறச் சாத்தியமாகும் தரிசனங்களைப் பட்டியலிடுகிறார்.  ஜோ. டி. குருஸ் எழுதிய ஆழிசூழ் உலகு, கொற்கை ஆகியன சேர்ந்து 2732 பக்கமுள்ள இரு நாவல்களின் உள்ளார்த்த அரசியலை விமர்சிக்கும் குமார செல்வா, யதார்த்த எழுத்து முறையை மீறி இனியொரு நாவலை அவர் படைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.


              ‘நவீனத்துவத்திற்குப் பின்னரான தமிழ் நாவல்’ குறித்து ஆய்வு செய்து எம். வேதசகாயகுமார் கட்டுரை 2000 ஆண்டு கால தமிழ் மரபு பற்றியும் அதனைப் பின்பற்றிய பெரு நாவல்களைப் பற்றி பேசுகிறது.  பாமாவின் ‘கருக்கு’, சிவகாமியின் ‘ஆனந்தயா’ ஆகியன மட்டும் மரபை முன்னெடுத்துச் செல்லும் தகுதியுடையதாக இருந்ததென்றும் இந்த மரபு இல்லாததனாலே தலித் இலக்கியம் தேக்கநிலைக்குச் சென்றுள்ளதாகவும் கணிக்கிறது.  இவர் குறிப்பிடும் தமிழ் நாவல் மரபு எத்தகையது என்று ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது.  ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’, பின்தொடரும் நிழலின் குரல் வழியேதான் இம்மரபை உணர்ந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.


         நாவலாசிரியன் நல்ல ஆய்வாளனாகவும் இயங்க வேண்டிய கட்டாயத்தை விஷ்ணுபுரம் தோற்றுவித்ததாகச் சொல்கிறார்.  இந்நாவலில் இந்தியத் தத்துவ மரபு முழுமையும் இழையாகத் தொடர்ந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.  இவை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தாயிற்று.  இந்த நாவல் எத்தகைய தத்துவ மரபை முன்னெடுக்கிறது, அதன் சாய்வு  எப்படியாக உள்ளது என்பதை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை.


        வரலாற்று நிகழ்வுகளை புனைவுகளாக மாற்றும் உத்திகளை பொன்னீலனின் புதிய தரிசனங்கள், மறுபக்கம் போன்ற நாவல்கள் செய்ததாகக் குறிப்பிடும்போது இதிலும் உள்ள மாற்றுக் கருத்தை ஏற்காத மனோபாவத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.


       தி.கு. இரவிச்சந்திரன் எழுதியுள்ள கட்டுரை கோணங்கியின் ‘பாழி’ நாவலை லக்கான் துணைகொண்டு ஆய்வு செய்கிறது.  முற்றிலும் கவித்துவ நடையுடன் முற்றுப் பெறாத வாசகங்களுடனுனான புதிர் மொழியில் விரியும் பாழி அறிவு வேட்கையுடன் வாசகனை எதிர் நோக்குகிறது.  லக்கானிய கோட்டிபாட்டின்படி கற்பனை அறிவு (Imaginary Knowledge), குறியீட்டு அறிவு (Symbolic Knowledge) என இரண்டு வகை அறிவுகள் உள்ளன.  கற்பனை அறிவு என்பது ஈகோவின் அறிவு; குறியீட்டு அறிவென்பது அகநிலை அறிவு.  தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ளச் செய்கிறது.  குறிப்பான நனவிலி வேட்கை தொடர்பான உண்மையைப் புரிந்து கொள்ளச் செய்கிறது.  பாழியும் இந்த அறிவை வாசகனிடம் எதிர்பார்ப்பதாக இக்கட்டுரை விளக்குகிறது. 


         வாசகனுக்கும் பனுவலுக்கும் இடையே மறுகட்டமைப்புச் செய்யப்படும் பொருண்மை பாழியில் மிகுந்த அமுக்கத்திற்கு உட்படுகிறது.  இதை எதிர்கொள்ள - வெல்ல வாசகரால் மட்டுமே முடியும். காரணம் வாசிப்பில் நனவு ஈகோவின் பங்கு மிகுதி.  ஆகவே கோணங்கியும் பாழிக்கு ஒரு வாசகராகக் கூடும் என்றும் கட்டுரையாசிரியர் விளக்கம் தருகிறார்.


       குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிப்பிற்குள்ளான மக்கள் திரளை முன்னிலைப்படுத்திய நெடுங்குருதி, குற்றப் பரம்பரை, காவல் கோட்டம் ஆகிய மூன்று நாவல்கள் அடிப்படையில் ஜ.சிவக்குமார் எழுதியிருக்கும் கட்டுரை, இன்றைய உலகமயச் சூழலில் அரச பயங்கரவாதத்தை தமிழ் நாவல்கள் தன்னுடைய புனைவுவெளிக்கு உட்படுத்த வேண்டும் என்ற பேரவாவை முன் வைக்கிறது.

                                                                                                                                                                                                                                                   சு. தமிழ்ச்செல்வியின் மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை, கண்ணகி ஆகிய ஆறு நாவல்களின் வழியே வெளிப்படும் பெண் மீதான வன்மம் மற்றும் எதிர்வினை குறித்த பெ. நிர்மலாவின் கட்டுரை, சராசரி பெண்ணின் பிரதிநிதிகளாக வரும் இக்கதை மாந்தர்கள் ஆணாதிக்கத்தின் முகவர்களாகச் செயல்படும் கொடுமையையும் அதன் மூலம் பெண் வர்க்கம் உள்ளாகும் இன்னல்கள் குறித்தும் பேசுகிறது.



       பொறுப்பற்று திரியும் ஆண்களுக்கான சிலுவை சுமப்பதோடல்லாது ‘கற்றாழை’ போன்று எவ்விடத்திலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடன் கண்ணகிகளாக பெண்கள் வாழ நேரிட்ட அவலத்தைச் சொல்லும் இந்நாவல்கள் வழி பெண்களின் உழைப்புப் பாத்திரத்தைத் தவிர பெண் என்ற தன்னிலை உருவாக்கம் பெறாத, இவற்றின் பொதுத்தன்மைகளை கணக்கில் கொண்டு விமர்சிக்காதது பெருங்குறையாகும்.


         தோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகீர் ராஜா, சல்மா போன்றோரது இஸ்லாமியப் புனைவுகளை ஆய்வுக்குட்படுத்தும் மு. நஜ்மா கட்டுரை பெண்கள் மீதான ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகள், மீறல்கள் போன்றவற்றை இப்புனைவுகள் பேசுவதை மையப்படுத்துகின்றன.


         ‘சமகாலத் தமிழ் நாவல்’ (2000 - 2010) பற்றி பேசும் ஆ. பூமிச்செல்வம் கட்டுரை சாரு நிவேதிதா, எம்.ஜி. சுரேஷ், ரமேஷ் - பிரேம்,
எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், வா.மு. கோமு, பா. வெங்கடேசன், சுதேசமித்திரன், அருணன், ஜோ.டி. குரூஸ், சு.தமிழ்ச்செல்வி போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களை கணக்கில் கொண்டு இனவரையியல் மற்றும் திணைசார் பண்பாட்டுப் பதிவு நாவல்கள், வரலாற்று நாவல்கள், தன் வரலாற்று (சுயசரிதை) நாவல்கள், பெண்ணிய நாவல்கள், த்லித்திய நாவல்கள், ‘விளிம்புநிலை மனிதர்கள்’ குறித்த நாவல்கள் என வேறுபடுத்திக் காட்டுகின்றது.


          சு. தமிழ்ச்செல்வி, யூமா. வாசுகி, சு. வெங்கடேசன் என 3 நாவலாசிரியர்களுடனான உரையாடலும் இடம் பெற்றுள்ளது.  சில விடுபடல்கள் இருப்பினும் குறிப்பிடத்தகுந்த முயற்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


          ’மாற்றுவெளி’ 6-வது இதழ் அனிருத்தன் வாசுதேவன், அ. பொன்னி ஆகியோரை அழைப்பாசிரியர்களாகக் (Guest Editors) கொண்டு மாற்றுப் பாலியல் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.  கைதட்டி வரவேற்கவேண்டிய, பாராட்டத்தக்க பணி இது.  அழைப்பாசிரியர்கள் தலையங்கத்தில் குறிப்பிடுவது போல் இது மாற்றுப்பாலியல் பற்றிய முழுத் தொகுப்பல்ல என்ற போதிலும், பொதுவெளியில் நடந்து வரும் சர்ச்சையைப் புரிந்து கொள்ளவும் பங்கு பெறவும் ஒரு ஆவணமாகப் பயன்படும் என்பது தன்னடக்கத்திற்காக சொல்லப்பட்டதாகவே இருக்கும்.  தமிழ்ச் சூழலில் இது குறித்த விவாதங்களை முன்னெடுக்க இவ்விதழ் களம் அமைப்பதாகக் கருதலாம்.


             ‘பாலியல்பு, திருமணம், குடும்பம் - சில குறிப்புகள்’ என்ற மீனா கோபால் கட்டுரை பெண் உழைப்பு, பாலியல்பு பற்றியும் பாலியல் தொழிலாளிகள் பற்றிய பெண்ணியவாதிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் ஆய்வு செய்து இ.பி.கோ. 377 சட்டப்பிரிவு தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பலனையும் ஆராய்கிறது.


        அ. மங்கை தமிழக நிகழ்த்து கலைகள் சார்ந்த உரையாடலாக ‘உடல், பால்மை, பால் ஈர்ப்பு / வேட்கை அளிக்கைமை சார்குறியீடுகளை’ ஆய்வு செய்யும் கட்டுரை ஒன்றும் ‘உடல், வன்முறை, உரிமை:- இந்திய குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா - 2010’ பற்றிய அனிருத்தன் வாசுதேவன் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.


         தில்லி உயர் நீதிமன்றம் ஜுலை 02, 2009 அன்று சட்டப்பிரிவு 377 பற்றி அளித்த தீர்ப்பை விடுதலையின் பாதையாகக் கருதும் கட்டுரையும் இந்திய சட்டப்பிரிவுகள் 340, 362, 366, 368, 377 ஆகியன ‘க்வியர்’(Queer) பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அபாயம் குறித்தும் இச்சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுவதையும் வலியுறுத்துகிறது.  அரவானிகள் / திருநங்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் தமிழக அரசின் திட்டங்கள் பற்றிய கட்டுரையும் தமிழகத்தில் ஓரினச் சேர்க்கைப் பெண்கள் பற்றிய கட்டுரையும் உள்ளது.  ஜி. நாகராஜனின் நாவல்களில் பாலியல் தொழிலாளி சித்தரிப்புக்களை ஒரு ஆங்கிலக் கட்டுரை பேசுகிறது.


         சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான மாயா சர்மா, வ. கீதா ஆகியோரின் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.  வ. கீதாவின் உரையாடல் 20 பக்கங்கள் வரை நீள்கிறது.  பெண்ணியம், பெண்மொழி, பெரியாரின் பங்களிப்பு என  இவ்வுரையாடல் விரிவாகப் பேசுகிறது.  வான்மேகம் திரைப்பட விமர்சனத்தை ப்ரீதம். கே. சக்கரவர்த்தி எழுதியிருக்கிறார்.  லிவிங் ஸ்மைல் வித்யா, ப்ரேமா ரேவதி ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.


       பெங்களூருவில் ‘சங்கமா’ அமைப்புடன் அரவானிகள் உரிமைகள் மற்றும் பாலியல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் ரேவதியின் The Truth about my life என்ற சுயசரிதையின் ஒரு பகுதி வ. கீதாவால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


           ஆவணம் பகுதியில் பாலியல் சார் சொற்களஞ்சியம், இந்தியத் தண்டனைச் சட்டம் - பிரிவு 377, மாற்றுப் பாலியல் இயக்கம் - நிகழ்வுகள், அட்டவணை, தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியங்களில் மாற்றுப் பாலியல் பதிவுகள், மாற்றுப் பாலியல் தொடர்பான நூல்கள் மற்றும் குறும்படம் ஆகியன முழுமை என்று சொல்லாவிட்டாலும் ஓரளவிற்குத் தொகுக்கப்பட்டுள்ளன. 

                                                                                                     
            மொத்தத்தில் ‘மாற்றுப்பாலியல் சிறப்பிதழ்’ தமிழ்ச் சூழலில் இது குறித்தான விவாதத்தை எழுப்பவும் படைப்புரீதியாக ஆக்கங்கள் மேலெழும்பவும் ஒரு உந்து சக்தியாக இம்முயற்சி பார்க்கப்பட வாய்ப்புள்ளது.


             கல்விப்புல ஆய்வுகள் (academic) மிகவும் மோசமான நிலையில் கெட்டித் தட்டிப் போன நவீன, பின் நவீன கூறுகளை உள்வாங்காத, சமூகத்தின்பால் எவ்வித அக்கறையும் கொள்ளாத தனித்தீவாக உள்ளது.  இந்நிலையை மாற்றவும் ஆய்வுகளை செழுமைப்படுத்தவும் இம்மாதிரியான முயற்சிகள் துணைபுரியும்.  அந்த வகையில் ‘மாற்றுவெளி - ஆய்விதழ்’ இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக