ஆசிரியர்களே! கல்விக்காகவும் சமூகத்திற்காகவும்
போராடுங்கள்!
- மு.சிவகுருநாதன்
‘ஆசிரியர்கள்
மாறவேண்டிய நேரம்’ என்ற எனது கட்டுரை திருவாரூரிலிருந்து வெளிவரும் ‘பேசும் புதிய சக்தி’
என்ற மாத இதழில் (மார்ச் 2015) வெளியாகியுள்ளது. இக்கட்டுரையை தனியே பதிவிடுகிறேன்.
இப்போது அக்கட்டுரை தொடர்பாக இன்னும் கொஞ்சம்.
டிச. 10 ஆசிரியர்கள் போராட்டம், அரசு பொதுத்தேர்வை
ஒழித்தல், கல்வியில் இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் போன்றவை பற்றி அக்கட்டுரை பேசுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (JACTTO) 15
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மார்ச் 08, 2015 அன்று (நாளை)
நடத்துவதாக அறிவிப்புச் செய்துள்ளது.
15 கோரிக்கைகளில் ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கவேண்டும்
என்பது இருக்கிறது. மாணவர்களுக்கான தேர்வை நீக்குதல் அல்லது மாற்றியமைத்தல் பற்றி எவ்வித
வேண்டுகோள்களும் இல்லை. ஆனால் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்கு தனி சட்டம் இயற்றப்படவேண்டும்
என்று சொல்லப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு ரத்து, கல்வியில் தனியார் மயம் ஒழிப்பு,
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட அமலாக்கம் போன்ற மாணவர்கள் தொடர்பான கோரிக்கைகள்
இல்லையென்றாலும் இப்போதாவது போராட வந்ததற்கு முதலில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்
கொள்வோம்.
ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகள் மற்றும் குளறுபடிகளுக்கு
முந்தைய தி.மு.க. அரசும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியும் முழு முதற்காரணம். உரிய
முறையில் அப்போதே போராடி இருக்கவேண்டிய ஆசிரியர்கள் வெறுமனே இருந்ததற்கு காரணம் உண்டு.
அப்போது அமைக்க உத்தேசிக்கப்பட்டிருந்த தமிழக சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்காக சங்க
நிர்வாகிகள் ஆசிரிய சமூகத்தை அடகு வைத்தனர். தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்துவிட்டது. எனவே
ஆசிரியர்கள் இனிப் போராட மாட்டார்கள் என அறிக்கை கூட இவர்கள் வெளியிடத் தயங்கவில்லை.
இது பழங்கதை; ஆனால் மறுக்க முடியாத உண்மைக்கதை.
ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு அமைந்து
மூன்றரை ஆண்டுகள் ஆன பிறகு ஜெ.ஜெயலலிதா மீதான பெங்களூரு தனி நீதிமன்றத் தீர்ப்பு –
முதல்வர் பதவி பறிப்பிற்குப் பின்னர்தான் போராட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஜெ.ஜெயலலிதா
முதல்வர் பதவியில் தொடர்ந்திருந்தால் இப்போராட்டம் நடந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.
சமூக உருவாக்கத்தில் பெரும்பங்காற்றும் ஆசிரிய
சமூகம் ஓர் ஆட்சியோடு தங்களை இனம் கண்டுகொள்வதும் பிறிதொரு ஆட்சியின் மிரட்டல்களுக்குப்
பணிவதும் சரியானதுதானா என்று ஆசிரியர் இயக்கங்கள் தங்களை சுய விமர்சனம் செய்துகொள்ளவேண்டும்.
2003 போராட்டங்களும் அதனால் ஏற்பட்ட எஸ்மா, டெஸ்மா
பாதிப்பு மற்றும் இழப்புகளும் பல இருந்தபோதிலும் மீண்டும் போராடித் தீரவேண்டிய நியாயங்கள்
அப்படியே இருக்கத்தான் செய்கின்றன. மு.கருணாநிதி அள்ளிக் கொடுத்துவிடுவார் என்று வாளாயிருப்பதும்
ஜெ.ஜெயலலிதா அடக்குமுறையை ஏவுவார் எனப் போராடாமல் இருப்பதும் எவ்வகையான நியாயம்?
பொதுவாக இம்மாதிரியான போராட்டங்களில் சமூகம் சார்ந்த
(மக்கள், மாணவர்கள்) பொதுக் கோரிக்கைகளை இணைத்து முன்வைப்பது மரபு. அப்போதுதான் பொதுத்தளத்தில்
போராட்டங்களுக்கான ஆதரவு கிட்டும். இன்று இவர்கள் முன்வைக்கும் 15 கோரிக்கைகளில் ஒன்றுகூட
பொதுமக்களுக்கானதாக இல்லை என்பது மிக மோசமான நிலையாகும்.
தமிழ் வழிக்கல்வி, தமிழை முதல் பாடமாக்குதல் போன்ற
கோரிக்கைகள் நகைப்பிற்கிடமானவை. எத்தனை ஆசிரியர்கள் வீட்டுக் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில்
படிக்கிறார்கள் என்பது கிடக்கட்டும். தமிழ் வழியில் எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்று
கேட்டாலே இக்கோரிக்கைகளின் அபத்தம் விளங்கும்.
ஆசிரியர்களுக்கான பாதுகாப்பை அரசு சட்டங்களின்
மூலம் வழங்கிவிட முடியுமா என்ன? உண்மையான பாதுகாப்பு மாணவர்கள், பெற்றோர் அடங்கிய சமூகத்தோடு
இணைந்திருப்பதன் மூலமே சாத்தியப்படும். வெறும் சட்டங்களை நம்புவதால் மட்டும் பலனில்லை.
மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பிரச்சினைகள்
ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இவற்றைத் தனித்தனியே பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.
பொதுத்தேர்வுகள் ரத்து, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு CCE மதிப்பீட்டு முறை அமலாக்கம்,
11, 12 ஆம் வகுப்புக்களில் மாணவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு, பள்ளிகளில் குடிநீர்,
கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கல்வி தனியார்மயப் பிரச்சினை, கல்விக்கடனுக்கான
வட்டியை ரத்து செய்தல் என்பது போன்ற மாணவச் சமூகத்தின் பல்வேறு கோரிக்கைகள் கவனிப்பாரற்றுக்
கிடக்கின்றன. இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பது ஆசிரிய சமூகத்தின் பணியாக இருக்கமுடியாது.
இவற்றையெல்லாம் இணைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் போராட்டகளம் காணுவதே சிறப்பாக
இருக்கும். குறைந்தபட்சம் இக்கோரிக்கைகளையாவது இணைப்பது குறித்து ஆசிரிய இயக்கங்கள்
யோசிக்க முன்வரவேண்டும்.
தனித்தனி சங்கங்களும் சரி கூட்டமைப்பும் சரி
10, 12 வகுப்புக்களுக்குப் பொதுத்தேர்வை ரத்து செய்தல் அல்லது பருவ முறையில் தேர்வு
நடத்துதல் என்பது குறித்த சிந்தனையே இல்லை எனத் தெரிகிறது. தேர்வை ரத்து செய்வது மிகவும்
எளிதானது. பருவ முறைத் தேர்வு நடத்துவதிலும் எவ்வித சிக்கலும் இல்லை. ஏனெனில் மார்ச்-ஏப்ரல்,
ஜூன் (மறுதேர்வு), அக்டோபர் என ஆண்டுக்கு மூன்று பொதுத்தேர்வுகளை அரசு தற்போது நடத்திக்கொண்டுதான்
உள்ளது.
ஆசிரிய இயக்கங்கள் தேர்வு தொடர்பான கோரிக்கைகள்
என்றால் தேர்வுப்பணி, விடைத்தாள் திருத்தும் பணி ஆகியவற்றுக்கான மதிப்பூதியம் தொடர்பான
கோரிக்கைகளுடன் நின்று போவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கு
இரு தாள்கள் ஏன் என யாரும் கேள்வி கூட கேட்பதில்லை. CCE மதிப்பீட்டு முறையிலும் வளரறி
மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கு சம பங்கு அளிக்காமல் 40%, 60% என்று அளிக்கும் முரணைக்
கூட இங்கு யாரும் கண்டு கொள்வதில்லை.
மார்ச்-ஏப்ரல் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்களுக்கு
உடனடி மறுதேர்வு என்பது மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவல்ல. இங்கு காலியாக
இருக்கும் அனைத்து வகையான சுயநிதிக் கல்லூரிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலைக்கான ஓர் தந்திரமே
இது. இதைப்போல உயர்கல்விக் கடன்கள் வழங்கப்பட்டதும் மாணவர் நலம் சார்ந்த நடவடிக்கை
என்று எண்ணவேண்டியதில்லை. இதனால் பலர் பலனடைந்துள்ளனர் என்பதும் உண்மையே. இருப்பினும்
கல்விக் கொள்ளையர்கள் வாழவேண்டி தொடங்கப்பட்டதுதான் இத்திட்டம். இங்கு உண்மையில் மாணவர்
நலனே முதன்மை என்றால் இக்கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன்? வோடபோன்,
நோக்கியா போன்ற நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி வரிச்சலுகைகளும் பெருமுதலாளிகளின்
வாராக் கடனைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசுகள் கல்விக்கடன் மீது நடவடிக்கைகள் எடுப்பது
ஏன்?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்கேற்பு
ஓய்வூதியத் திட்டம் (CPS) என்பதும் மிகப்பெரிய மோசடியாகும். இன்று தனியார்
வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் பல்கிப் பெருகி வருவதை தொலைக்காட்சி
விளம்பரங்களில் காணமுடியும். CPS மூலம் திரட்டப்படும் மூலதனம் உள்நாட்டு,
பன்னாட்டு கார்ப்பரேட்டுகளிடம் அள்ளிக்கொடுக்கப்படப் போகிறது. மக்களின்
வரிப்பணம் இவர்களுக்கு சலுகைகளாகப் போனது பத்தாது என்று அரசு ஊழியர்களின்
பங்கையும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கத் தயாராக இருக்கும்
அரசுகள்தான் 24 ஆண்டுகளாக இந்தியாவை ஆள்கின்றன.
இந்த அரசுகள்தான் விவசாயிகளின் நிலங்களை குறுக்குவழியில் சட்டம் போட்டு கைப்பற்றத் துடிக்கின்றன.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக உலகமய பொருளியல் சுழலில் அரசியல், சமூகம்,
பொருளியல், பண்பாடு என அனைத்து களங்களும் பெரிதும் மாற்றம் கண்டுள்ளன. இவற்றின் பின்னணியில் தெளிவான அரசியல் புரிதல் மற்றும் பார்வையோடு செயல்படவேண்டிய கட்டாயம் அனைத்து தொழிற்சங்களுக்கும் உண்டு. இதற்கு ஆசிரியர்களும் விதிவிலக்காக இருக்கமுடியாது.
நிலைமை இவ்வாறிருக்க ஒட்டுமொத்த சமூகமும் போராடாமல்
வாழ்வில்லை. எனவே ஆசிரிய சமூகங்கள் தமது பொறுப்புணர்வை உணர்ந்து செயலாற்ற வேண்டுமென
இச்சமூகம் எதிர்பார்க்கிறது. இனிமேலாவது இதற்கான முன்கை எடுக்கப்படவேண்டும்.
1 கருத்து:
எனது முகநூல் பக்கத்தில் இக்கட்டுரைக்கு வந்த எதிர்வினை மற்றும் எனது பதிலை இத்துடன் இணைத்துள்ளேன்.
பாலசுப்பிரமணியன் கே
,,கல்விக்காகவும் சமூகத்திற்காகவும் போராடுங்கள்!,,இது,ஆக்க பூர்வமான யோசனை,, பொதுமக்கள் ஆதரவை பெற இது ஒன்றே வழி
Saravana Murugan
தங்கள் எழுத்துக்களில் அடிப்படை அறியாது குறைகூறும் போக்கும், ஆசிரியர்களை அரசியலோடு இணைத்து கூறுவதுமாய் உள்ளது.
சங்கங்கள் என்பது தனது உறுப்பினர்களுக்கு ஏற்படும் குறைகளை களைவதற்கு ஜனநாயகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பாகும். தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என் கர்நாடகா மக்களுக்காக போராடவில்லை, ஒரிசா மக்களுக்காக போராடவில்லை என்பது போல்லுள்ளது. 15 கோரிக்கைகளில் ஒன்றுகூட பொதுமக்களுக்கானதாக இல்லை என்பது மிக மோசமான நிலையாகும்.என்று நீங்கள் கூறியுள்ளது.
சங்கம் வைத்து பொதுமக்களுக்காக போராட முடியாது அதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும். எங்களுக்கு அதற்கு அனுமதியில்லை.
எந்த அரசாங்கத்திற்கும் எதிராகவும் போராட்டம் நடைபெறும். எல்லாருடைய ஆட்சியிலும் போராட்டங்கள் உண்டு. எஸ்மா, டெஸ்மா, எந்த அம்மா எல்லாம் காட்டி பயமுறுத்தும் விதமான சாடல் உங்கள் கருத்துகளில் உள்ளது.
உங்கள் குழந்தை கல்விக்காக பாதுகாப்புக்காக எத்தனை போராட்டங்கள் நீங்கள் நடத்தியுள்ளிர்.மாணவனுக்கு , சமுதாயத்திற்கு அக்கறைவுள்ளவர் போல் கட்டுரை எழுதி ஆசிரியரை தனிமைப்படுத்த முடியாது என்பதை உணருங்கள். மாணவர் இல்லாமல் ஆசிரியர் இல்லை, நாங்களும் சமுதாயத்தின் ஒரு அங்கம். பள்ளியில் எங்கள் பணியை செய்கிறோம். மாணவனுக்காக கல்வி மாற்றங்களுக்காக பேசுகிறோம். ஆனால் அவை பற்றிய செய்திகள் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. எங்கள் குறைகளை தெரிவித்தும் தீர்க்காத சூழலில் அறிவித்த போராட்டம்தான் உங்கள் கண்ணை உறுத்துகிறது
ஒரு தொழிலாளியின் பென்ஷன் என்பது வாழ்வதற்கு ஆதரமாகும். அதை cps என்ற பெயரில் பறித்து தேர்தல் வாக்குறுதியில் நான் மாற்றுவேன் என்று அறிக்கைவிட்டு ஓட்டுக்களை பெற்று ஜெயித்தபின் எதுவும் பேச்சே இல்லாமல் இருப்பதை சொல்லத்தான் இந்த JACTTO கூட்டமைப்பு
ஆசிரியர் குடை பிடித்து, கொண்டை போட்டுக்கொண்டு, அன்றைய அரசர்களிடம் கையேந்தி இருந்த நிலையில் இருக்கவேண்டும் என்பதுதான் உங்கள் போன்றோரின் நினைப்பாய் உள்ளது. இன்று உள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் இருந்தால்தான் நாங்களும் குடும்பம் நடத்தமுடியும். பாடம் நடத்தமுடியும்
ஆசிரிய சமூகங்கள் தமது பொறுப்புணர்வை உணர்ந்து செயலாற்ற வேண்டுமென நீங்கள் எதிர்பார்ப்பது நன்று. பொறுப்பற்று இருந்தால் தான் பொறுப்புணர்ந்து நடக்கவேண்டும். ஆசிரியர் சமுதாயம் பொறுப்புடன்தான் நடக்கிறது தனக்குள்ள குறைகளை நீக்க போராடுகிறது. தங்கள் அறிவுரைக்கு நன்றி
சிவகுருநாதன் முனியப்பன்
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சிலவற்றை தெளிவு படுத்தவிரும்புகிறேன்.
ஆசிரியர்கள் மட்டுமல்ல. இங்கு யாரும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அரசியல் நிலைப்பாடு இல்லாமல் எந்த அமைப்பு செயல்படுவதில்லை.
பொதுமக்கள் சார்பான கோரிக்கைகள் எழுப்ப அரசியல் கட்சி தேவையில்லை. தனிநபர் கூட செய்யலாம். ஆசிரிய இயக்கங்கள் கோரிக்கைகள் வைப்பதில் தவறில்லை. இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உண்டு.
உங்களது போராட்ட நியாயங்களை யாரும் மறுக்கவில்லை.
ஆசிரியர் பணியில் இருப்பதாலேயே சமூகப் பொறுப்புணர்வு கூடவே வந்துவிடும் என்று நினைக்க வேண்டியதில்லை.
என்னுடைய பிறிதொரு பதிவை முடிந்தால் படித்துப் பார்க்கவும்.
இணைப்பு;
http://musivagurunathan.blogspot.in/.../03/blog-post_22.html
CPS பற்றி ஜெ.ஜெயலலிதாவின் வாக்குறுதி மூன்றரை ஆண்டுகளைக் கடந்துவிட்டதே! கூடங்குளம் மக்களுக்கு இதைப்போல வாக்குறுதி அளிக்கப்பட்டது. CPS ஐ மாற்ற மத்திய அரசோடு இணங்கியிருந்த தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் முயலவில்லை என்பதுதானே உண்மை.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது போராடாமல் இருந்தது மாபெரும் தவறு. அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் இவ்வளவு காலம் காத்திருந்ததும் தவறு என்பதே எனது நிலைப்பாடு. இனியாவது தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். எனவேதான் இவ்வாறு சொல்லவேண்டியுள்ளது.
இதற்காக வருந்த வேண்டாம். சில படிப்பினைகளின் வாயிலாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஆசிரியர்கள் மறுக்கக்கூடாது.
மாணவர்கள் மட்டுமல்ல. ஆசிரியர்களும் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
நன்றி.
கருத்துரையிடுக