வியாழன், டிசம்பர் 29, 2016

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை…

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை…

மு.சிவகுருநாதன்

     அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா தேர்வாகியிருக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான்; அதிர்ச்சியளிக்கக் கூடியதல்ல. விரைவில் தமிழக முதல்வராகக் கூட தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழக அரசியலைக் கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல. இப்படி நடக்காமல் இருந்தால்தான் வியப்படைய வேண்டியிருக்கும்.

        சட்டப்படியான தகுதிகளைத் தவிர தார்மீகத் தகுதிகள் பற்றி விவாதிக்க ஜனநாயகத்தில் இடமில்லை. மக்களின் தீர்ப்பு இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கு உள்ளது. பொதுச்செயலாளாராக யாரையும் தேர்வு செய்யலாம், என்பதைப் போல முதல்வராக அதாவது சட்டமன்றக் கட்சித் தலைவராக யாரையும் தேர்வு செய்யும் உரிமை அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கு உண்டு. அதற்கு சட்டமன்ற உறுப்பினராகக் கூட இருக்க வேண்டியதில்லை என்பதே சட்டம். ஆறு மாதங்களுக்குள் சட்ட மன்ற உறுப்பினரானால் போதும் என்பதுதானே சட்டம்?

            இந்த நிலையில் இரு செய்திகளை மட்டும் சொல்லத் தோன்றுகிறது.

        ஒன்று: இப்போதைக்கு வி.கே.சசிகலா முதல்வராக எவ்விதத் தடையும் இல்லை என்றாலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் காத்திருப்பது அவருக்கு மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கும் தமிழக அரசிற்கும் நல்லது. மீண்டும் ஒரு அலங்கோலம் நடக்காமல் தவிர்க்க இது உதவும்.

        ஜெ.ஜெயலலிதா மரணடைந்தாலும் அந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் வர இருக்கும் தீர்ப்பிலிருந்து நழுவமுடியாது என்பதுதானே உண்மை. வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதக, பாதகமாக இருக்கும் என்பது இங்கு முக்கியமல்ல. கட்சிப்பதவி தீர்ப்பால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் ஆட்சிப்பதவி அவ்வாறானது அல்ல. அரசியல் சாசனச் சிக்கல் ஏற்பட மீண்டும் வழிவகுக்க வேண்டாம்.

      இரண்டு: சசிகலா ஜெயலலிதா பாணி அரசியலைத் தவிர்த்து தனக்கென ஒரு தனித்த பாணியை கைக்கொள்ள வேண்டியது அவசியம். இப்போதைய நிலையை ஓரளவிற்காவது மாற்ற முயல்வது நாட்டுக்கு நல்லது. இதற்கான சாத்தியங்களை வருங்காலம்தான் உருவாக்கும்.

பகத்சிங் மக்கள் சங்கம்

பகத்சிங் மக்கள் சங்கம்

அறிமுக விழா மற்றும் கொடியேற்று விழா

நாள்: 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10:30 மணி

இடம்: சோ.கோ. அறக்கட்டளை – நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கம்

அப்போலோ மருத்துமனை அருகில், க.க. நகர், மதுரை. 




        இந்த சங்கம் இந்திய அவலங்களையும், அரசியல் சீரழிவுகளையும் துடைத்தெறிய மக்களோடு இணைந்து இயக்கம் நடத்த உருவாக்கப்பட்டது. அரசியல் சட்டத்தின் நோக்கங்களை மையப்படுத்தி இயக்கம் நடத்தப்படும். ஊழலை அம்பலப்படுத்தவும், ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் சங்கம் நடவடிக்கை எடுக்கும். பொதுவாழ்வில் ஒழுக்கக் கேடானவர்கள் பங்கேற்பதைத் தடுக்க, விரட்டியடிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சாதி மதமற்ற சமத்துவ சமூகத்தை கட்டமைக்க இதுவரை மாமனிதர்கள் விட்டுச்சென்ற அனுவபங்களை உள்வாங்கிச் செயல்படும். சங்கக்கொடி சிகப்பு நிறத்தில் நடுவில் அசோக சக்கரம் போன்ற சக்கரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 


       சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் சொத்துகளை இழந்தனர். உயர் படிப்பு படித்தவர்கள் எளிய வாழ்க்கை வாழ்ந்து போராளிகளாகத் தியாகம் செய்து விடுதலை இயக்கத்தை வலுவாக்கினர்.  சினிமாவில் கதாநாயகன்களை எழுதிக் கொடுத்த வசனங்கள், பாடல்களுக்கு உதடசைத்து, ஒரே நடிகன் தனி மனிதனாக பெரிய கும்பலுடன் மோதி, அடித்து விரட்டிச் சாதனை புரியும் பொய்த்தனமான போலி கதாநாயகர்களை உருவாக்கிவிட்டனர். கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தினர். தமிழ் சமூகத்தில்தான் இந்த சினிமா வேடதாரிகள் அரசியல் செய்ய முடிகிறது. 


       தமிழ் சினிமா நிறுவனங்களில் பெண்களுக்கு மிகப்பலச் சோதனைகள் தொடர்கின்றன. சமீபத்தில் ஒரு இயக்குநர் பெண்கள் ஆடைக்குறைப்புச் செய்து கவர்ச்சியாக நடிக்க வேண்டுமென்று தனது விபச்சாரப் புத்தியை வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் கடும் எதிர்ப்பைக் கண்டுச் சரணடைந்தார். இது போதாது. கேடுகெட்ட பிறவிகள் நிறைய இருக்கின்றன. அவர்களை இந்த நிறுவனங்களிடமிருந்து அந்நியப்படுத்த வேண்டும். 


       ஆனால் தமிழ் சினிமாவில் தோன்றும் பெண்களில் சிலர் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள். அவர்களால் சமூகம் சார்ந்த தியாக உணர்வோடு சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்கும் பார்வையைப் பெற முடிவதில்லை. வெறும் கவர்ச்சியை மூலதனமாக்கி கள்ளத்தனமான நடவடிக்கைகளால் இவர்கள் அரசியலை நாசமாக்குகிறார்கள். இதனை வேரோடு பிடுங்கி எறியவேண்டும். ஒழுக்கமே புத்த நெறி, புத்த நெறியே ஒழுக்கம் என்றார் மாமனிதர் அம்பேத்கர். எனவே இதனையும் கவனத்தில் கொள்வோம். 


      தோழர் பகத்சிங் விடுதலைப் போராட்டத்தின் அடையாளம் என்பதாலும் மக்களின் தேடலுக்குத் துணை செய்யும் இந்தப் போராளியின் பெயரை முன்னிலைப் படுத்துகிறோம். சதியும் சூழ்ச்சியும் அரசியல் தளத்தில் தொற்றுநோய்போல் பரவிக் கிடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்துகிற அரசியல் அமைப்பு முறையில் நாளுக்குநாள் துரோகங்களும், மோசடிகளும், சமூக விரோத நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. கிட்டத்தட்ட நாடாளுமன்ற அரசியல் அமைப்பு முறை காலாவதியாகிவிட்ட நிலையில் உள்ளது. இதைப்போன்றே படிநிலைச் சாதியக் கட்டுமானமும் பலவித முரண்பாடுகளை எதிர்கொள்ள முடியாமல் புதிய காட்டுமிராண்டிச் செயல்பாடுகளால் தனது இருப்பைத் தற்காத்துக்கொள்ளத் திணறுகிறது. இவற்றை அடிப்படையிலேயே மாற்றிக் கட்டமைக்கத் தேவையான பணிகள் விரைந்து முன்னெடுக்கப் படவேண்டும். மக்களிடையே விடுதலை உணர்வை வளர்க்கத் திட்டமிட்ட வழிமுறைகளில் இயக்கம் நடத்தப்பட வேண்டியது அடைப்படைத் தேவையாகிறது.



     எனவே, சமூகத்தைப் பீடித்துள்ள சாதியம், வர்க்கம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை ஒழித்துக் கட்டவேண்டும். தனிமனித சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஒழுக்க நெறிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட பவுத்த சங்கத்தின் இயக்க நடவடிக்கைகளை உள்வாங்க வேண்டும். பவுத்த மதம் புத்தர் இறந்து சுமார் 400 ஆண்டுகள் கழித்துப் பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இது புத்தர் எதிர்பார்த்திராத சதியின் விளைவுதான். புத்தரை அவரது சங்க நடவடிக்கைகளோடு மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும். கடவுள், மதம் மற்றும் சாதியக் கட்டுமானம் போன்றவற்றை புத்தர் அடியோடு மறுத்தார் என்பதை மக்கள் மயமாக்க வேண்டும்.



    தளர்வில்லா மக்கள் இயக்கம், விடியலை நோக்கிய பங்களிப்புச் செய்யவேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாடே இந்த அமைப்பு. 


    சங்கத்தின் நிர்வாக அமைப்பை வரும் நாள்களில் விரிவுபடுத்தி ஆக்கப்பூர்வமான செயல்களை முன்னெடுப்போம். 

தவறாமல் வாங்க!

நண்பர்களோடு வாங்க!!

நேரத்துக்கு வாங்க!!!

அமைப்புக்குழு

பொ. இரத்தினம், வழக்கறிஞர், 94434 58118

ஒ. மாணிக்கம், சமூகபோராளி, 98427 71751
மு. ஜாகீர் அஹமத், வழக்கறிஞர், 99439 99001

க. யுவராஜ், வழக்கறிஞர், 94826 65265

பெங்களூர் ஆரோக்கியராஜ், சித்த மருத்துவர், 94816 49708



பகத்சிங் மக்கள் சங்கம்
223, கன்னங்குறிச்சி மெயின் சாலை,

அஸ்தம்பட்டி,

சேலம் – 636 007.

100% தேர்ச்சி என்னும் மோசடி

100% தேர்ச்சி என்னும் மோசடி

மு.சிவகுருநாதன்



      10, 12 வகுப்புகளில் பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் பட்டியல் (Nominal Roll) தயாரிக்கும்போது, வருகைப் பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் விடுபடுதல் இல்லாமல் சேர்க்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக நாளிதழ்களில் (28.1.2016) செய்தி வெளியாகியுள்ளது. காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் பாராட்டுவோம்.

      10, 12 வகுப்புகளில் 100% தேர்ச்சிக் கணக்குக் காட்டுவதற்காக பள்ளிகள் பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபடுகின்றன. இதில் சுயநிதி, உதவிபெறும், அரசுப் பள்ளிகளும் அடக்கம். தனியார் பள்ளிகளில் தொடங்கும் இத்தகைய மோசடிகள் எல்லாப் பள்ளிகளுக்கும் பரப்பப் படுகின்றன. இதற்கு அதிகாரிகள் முழு முதற்காரணம். இவையனைத்தும் கல்வித்துறை அறியாததல்ல. இதற்கு மேற்சொன்ன நடவடிக்கை மட்டும் போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. நாம் பலமுறை வலியுறுத்தியதுதான். மீண்டும் ஒருமுறை நினைவு கூர்வோம்.

    அரசுப்பள்ளிகளில் இந்நோய் பரவியுள்ளதற்கு கல்வித்துறை அதிகாரிகளின் நெருக்கடிகளே காரணம். மாற்றுத் திறனாளிகள் இணைந்த ஒருங்கிணைந்த கல்வி முறையில் 100% தேர்ச்சிக்கு மிரட்டுவது அபத்தம். இருப்பினும் அதுதான் நடக்கிறது.

முறைகேடுகள் சிலவற்றைப் பட்டியலிடுவோம்.

  • 9, 11 ஆகிய வகுப்புகளில் பெயிலாக்குதல்; மாற்றுச் சான்றிதழ் வழங்குதல்.
  • பெற்றோர்களை அழைத்துப் பேசி சமரசம் செய்தல்.
  • இம்மாதிரியான ‘கட்ட பஞ்சாயத்துகளை’ பெற்றோர் ஆசிரியர் கழகம் முன் நின்று செய்கிறது.
  • இவர்களை வேறு பள்ளிக்கு அனுப்புதல்; தனித் தேர்வராக்குதல்.
  • 9, 11 வகுப்புகளில் 10, 12 வகுப்புப் பாடங்களை நடத்துதல்.
  • காப்பியடித்தல் உள்ளிட்ட தேர்வு மைய முறைகேடுகள்.
  • 1 முதல் 8 ஆம் வகுப்புகள் முடிய நுழைவுத்தேர்வு நடத்துவதை கல்வி உரிமைச் சட்டம் 2009 தடை செய்கிறது. இதை மீறும் பள்ளிகள் ஏராளம்.
  • 9 ஆம் வகுப்பு இச்சட்டத்தின் கீழ் வராது. எனவே பெயிலாக்குவதையும் நுழைவுத்தேர்வு நடத்துவதையும் தடுக்க வழியில்லை. (வரவிருக்கும் 5 ஆம் வகுப்பிலிருந்து பெயிலாக்கும் சட்டத்திருத்தம் வருண, மநு சாஸ்திரங்களின் பிரதிபளிப்பு என்பதை சொல்லத் தேவையில்லை.)
  • 11 ஆம் வகுப்புச் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடு. பத்தாம் வகுப்பில் 400, 450 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே இடமளிப்பது. அரசுப்பள்ளிகள் கூட இச்செயலைச் செய்கின்றன. 100% தேர்ச்சிக்காக 69% இடஒதுக்கீடு என்னும் சமூகநீதி பலியிடப்படுகிறது.
  • விதிகளுக்குப் புறம்பாக, எழுத்துப் பூர்வமான உத்தரவுகள் ஏதுமின்றி விடுமுறைகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகள்.

       100% தேர்ச்சியைக் காட்டும் பள்ளிகளை முறையாக ஆய்வு செய்தாலே இம்மோசடிகளை எளிதில் கண்டுபிடுக்க முடியும். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். பெரும்பாலான பள்ளிகள் மோசடிகள் மூலமே 100% ஐ எட்டுகின்றன.

       9, 11 வகுப்புகளில் நடைபெற்ற சேர்க்கை, இடைநிற்றல், தேர்ச்சிப் பெறாதவர்கள், மாற்றுச் சான்று பெற்றவர்கள், அவர்களில் வேறு பள்ளிகளில் சேர்ந்தவர்கள், அதற்கான உண்மையான காரணம், தனித்தேர்வராக தேர்வை எழுதியவர்கள் போன்ற புள்ளிவிவரங்கள் இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும்.

      10, 12 வகுப்புகளின் பாடங்களை 9, 11 ஆகிய வகுப்புகளில் நடத்தப்படுவதைத் தடுக்கக் கல்வித்துறை எத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது? இதனைத் தடுத்தால் நாமக்கல், ராசிபுரம் ‘கோழிப்பண்ணை’ப் பள்ளிகளும் தமிழகமெங்கும் உள்ள இதன் கிளைகளும் வீழ்ந்துவிடும். இதுவும் 100% தேர்ச்சி மோசடியோடு இணைந்த ஒன்றுதான். கல்வித்துறையில் இந்த முயற்சிகளைத் தடுக்கும் சக்தி எது?

கொசுறு செய்தி:

      நேற்று (28.12.2016) சிறப்பு வகுப்புக்கு தாமதமாக வந்த 9 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் அடித்ததாகவும் அது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகாரளித்ததாகவும் ஒரு செய்தி வெளியானது.

     இரண்டாம் பருவ மற்றும் அரையாண்டு விடுமுறையில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு எழுத்துப் பூர்வ அனுமதியின்றி சட்டப் பூர்வமற்ற வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த நெரத்தில் நிகழும் அசம்பாவிதங்களுக்கு சம்மந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பாக்கப்படுவார். அதிகாரிகள் மிக எளிதாக தப்பித்துக் கொள்வர்.

     இந்நிலையில் 9 ஆம் வகுப்பிற்கு எதற்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது என்பதை விசாரித்தால் உண்மை விளங்கும். அவர்களுக்கு முதல் பருவம் முடிந்தவுடன் 10 ஆம் வகுப்புப் பாடங்களை தொடங்கி விடுகிறார்கள்.

ஞாயிறு, டிசம்பர் 18, 2016

09. வேலூர் கலகமும் மாபெரும் புரட்சியும்

09. வேலூர் கலகமும் மாபெரும் புரட்சியும்



- மு.சிவகுருநாதன் 
 
 

      ‘ஆரியர்கள் வருகை’, ‘முகலாயர்கள் படையெடுப்பு’ என்கிற தலைப்புகளில் ஒரு சார்புக் கண்ணோட்டத்துடன் பாடநூல்கள் எழுதப்பட்டு வந்தன. இவற்றை மாற்ற கல்விப் புலத்தில் பெரும் போராட்டமே தேவைப்பட்டது. இந்துத்துவ அரசுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் காவிப் பாடங்கள் இது போன்று இருப்பது இயல்பான ஒன்று. திராவிடக் கட்சிகள் ஆளும் தமிழகத்தில் இந்நிலை என்பது விந்தையானது.

   கல்வி – கருத்தியல் குறித்து மனித உரிமைப் போராளி மறைந்த டாக்டர் பாலகோபால் கூறுவதை கொஞ்சம் கவனிப்போம்.

   “மாணவர்களுக்கு வழங்கப்படும் எந்த வகைக் கல்வி ஜனநாயகமானதாக இருக்கும்? சில பிரத்தியேக பள்ளிகளில் படிக்க வைப்பது ஜனநாயகமா? கல்வி ஒரு உலகக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கல்வியை ஞானமாக மட்டும் வழங்குவதில்லை. இந்த ஞானத்தை சில அபிப்பிராயங்களுடன் வழங்குகிறோம். நல்லது, கெட்டது – உயர்வு, தாழ்வு – பின்பற்றவேண்டியது, தடுக்கப்படவேண்டியது – நாகரிகம், அநாகரிகம் எனும் அபிப்பிராயங்களுடன் வழங்குகிறோம். அதாவது கல்வியை ஒரு உலகக் கண்ணோட்டத்துடன் கூறுகிறோம். கணக்கு நன்றாக வந்தால் மாணவனுக்குப் புத்திக்கூர்மை இருப்பதாகக் கூறுவது ஒருவகை கருத்தியல். இது உண்மையல்ல. ஞானத்தை பெருமதிகளுடன் இணைத்து வழங்கவேண்டும்”. (கருத்தாயுதம் வகுப்புவாதத்தை எதிர்கொள்ள…, பாலகோபால், சிந்தன் புக்ஸ் வெளியீடு, டிச. 2015)

    அவர் மேலும் கூறுவதிலிருந்து இன்னும் கொஞ்சம் கூடுதல் தெளிவு கிடைக்கும். இதைத் தமிழ்ச் சூழலுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

    “பாடப்புத்தகங்களில் உலகின் ஞானம் அனைத்தும் இருப்பதில்லை. பாடப்புத்தகங்களின் தேர்வுக்குப் பின்னால் ஒரு கருத்தியல் இருக்கிறது. ஒரு உலகக் கண்ணோட்டம் இருக்கிறது. தெலுகில் நன்னயா எழுத்துகள் இருப்பதற்கு ஒரு கருத்தியல் இருக்கிறது. கிராமிய இலக்கியம் தேர்வு செய்யப்படாமைக்கு ஒரு கருத்தியல் இருக்கிறது. மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்தார்கள்? எவ்வாறு சொத்து சேர்த்தனர்? எவ்வாறு ராஜ்யத்தை இழந்தார்கள்? என்பதைக் கூற விரும்பினார்கள். ஆகவே, வரலாற்றில் அசோகர் பற்றிய பாடங்கள் உள்ளன. மக்கள் தனது வாழ்க்கை வழிகளை எவ்வாறு தயாரித்துக் கொண்டனர்? தமது திறமையை எவ்வாறு வளர்த்துக் கொண்டனர்? எவ்வாறு அழித்தனர் என்பது வரலாறு எனக்கொண்டால் , அதனை மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டுமென்றால் பாடப்புத்தக பாடங்கள் வேறுவகையாக இருக்கும். ஆகவே பாடப்பொருள் தேர்வில் தெளிவான கருத்தியல் இருக்கிறது”. (பக். 186, மேலே குறிப்பிட்ட நூல்)

   “இந்திய வரலாற்றில் 1857 ஆம் ஆண்டு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகக் கருதப்படுகிறது. இவ்வாண்டில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு, இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியை அதிர்ச்சியடையச் செய்தது. இப்புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் ‘படைவீரர்கள் கிளர்ச்சி’ என்றும், இந்திய வரலாற்று அறிஞர்கள் ‘முதல் இந்திய சுதந்திரப் போர்’ என்றும் வர்ணிக்கின்றனர். (பக். 55, சமூக அறிவியல், பத்தாம் வகுப்பு)

    இங்கு நமக்கு ஒரு அய்யம். அது என்ன ஆங்கில வரலாற்று அறிஞர்கள்? பிரிட்டனைச் சேர்ந்தவர்களா அல்லது இங்கிலீஷில் எழுதுபவர்களா? உலகம் முழுவதிலும் இங்கிலீஷில் எழுதும் வரலாற்று அறிஞர்கள் உண்டுதானே! அவர்கள் அனைவரும் ‘சிப்பாய் கலகம்’ என்று சொன்னார்களா என்ன?

   காரல் மார்க்ஸ் 1853 – 1857 காலகட்டம் குறித்து நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் ஏட்டில் எழுதிய கட்டுரைகள், இந்திய வரலாறு பற்றிய குறிப்புகள் ஆகியவற்றில் இந்தியப் புரட்சி என்றே குறிக்கிறார். இவர் என்ன ஆங்கில வரலாற்று ஆசிரியரா?

    காரல் மார்க்ஸின் ‘இந்தியா பற்றி…’ என்ற மொழிபெயர்ப்பு நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து சிலவரிகள் இங்கு தரப்படுகிறது.

    “போகப்போக, மேலும் பல செய்திகள் வெளிவரும். இது இராணுவ கலகமல்ல, மாறாக தேசியப் புரட்சியாகும் என்பதை இச்செய்திகள் அனைவருக்கும் தெளிவாக்கும்”, (பக். 162, இந்தியா பற்றி.. , காரல் மார்க்ஸ், விடியல் பதிப்பக வெளியீடு:அக். 2012)

    “இந்தியப் புரட்சி, ஐரோப்பியப் புரட்சியின் சிறப்பியல்புகளையே மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது வினோதமானதாகும்”, (பக். 171, மேலே குறிப்பிட்ட நூல்)

   அன்றைய வரலாற்று ஆய்வுகள் காலனிய, தேசிய மற்றும் மார்க்சிய நோக்கில் இருந்தன. இன்று வரலாறு அவ்வாய்வுகளைத் தாண்டி பல்வேறு நோக்குநிலைகளைக் கொண்டு அகலித்துள்ளன. காலனிய வரலாற்று ஆய்வுக்கு எதிரான இந்திய தேசிய வரலாற்று எழுதிகள் ‘சிப்பாய் கலகத்தை’ முதல் இந்திய சுதந்திரப் போராக திருத்தி எழுதினர். ஆனாலும் இவற்றில் ஊடாடும் மதச்சார்பு நிலைகள் கூர்ந்து அவதானிக்க வேண்டியன.

    இதே பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் 100 வது பக்கத்தில் ‘வேலூர் கலகம் 1806’ என்ற தலைப்பில் உள்ள பத்தி கீழ்க்கண்டவாறு உள்ளது.

    “ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் புகுத்திய சில கட்டுபாடுகள் வேலூர் கலகத்திற்கு வழிவகுத்தது. இந்து வீரர்கள் தங்கள் நெற்றியில் சமயக் குறிகளை இடக்கூடாது என்றும், முஸ்லீம் வீரர்கள் தங்கள் தாடி மீசைகளை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இது ராணுவ வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. திப்புவின் பிள்ளைகள் இவர்களை ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினர்”.

   மறுபுறத்தில் வேலூர் புரட்சியை ‘வேலூர் கலகம்’ என்று தீர்மானிக்கும் முடிவு, இந்திய தேசியத்துடன் கூடிய இந்துத்துவ பெருமித மற்றும் காலனித்துவ வரலாற்றில் கடன் பெற்ற பார்வையை அப்படியே பிரதிபளிக்கவேண்டிய அவசியம் ஆராயப்பட வேண்டியது. இதன் பின்புலத்தில் திப்பு மீதான வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்பரசியல், வடக்கு-தெற்குப் பாகுபாடு எல்லாம் கவனம் குவிக்க வேண்டிய பிற காரணங்கள்.

   இதுகுறித்து காரல் மார்க்ஸ் ‘இந்திய வரலாறு பற்றிய குறிப்புகளில்’ பின்வருமாறு எழுதுகிறார்.

   “ஜூலை 1807: வேலூரில் (சென்னை ராஜதானி) சிப்பாய்கள் கலகம்; அவ்வூரின் கோட்டையில் தான் திப்புவின் புதல்வர்கள் கைதிகளாக (வைக்கப்பட்டிருந்தனர்) அவர்களின் சார்பில் அவர்களது மைசூர்க்கார ஊழியர்கள் கலகம்; அவர்கள் திப்புவின் போர்க்கொடியை உயர்த்தினர்; கர்னல் கில்ஸ்பீ, ஆர்க்காட்டின் துப்பாக்கி ஏந்திய குதிரைப்படையுடன் சென்று, கலகக்காரர்களில் பலரைக் கொன்று, அவர்களை ஒடுக்க்கினார் – ஆயினும் மிண்டோ பிரபு அவர்களைக் ‘கௌரவமாக’ நடத்தினார். (பக். 469,470, இந்தியா வரலாற்றுக் குறிப்புகள்: 664 – 1858, காரல் மார்க்ஸ், நூல்: இந்தியாவைப் பற்றி…, விடியல் பதிப்பக வெளியீடு, அக். 2012, விலை: ரூ. 390)

    இதன் இங்கிலீஷ் வடிவம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.

    “Mutiny at vellore (Madras Presidency) in fort of which Tipu’s sons (were held) captive; mutiny in their behalf by their Mysorean suite; They hoisted Tipu’s Standard; colonal Gillespie, with dragoon regiment of Arcot, Quelled them, Killing many – Lord Minto, however, gave them ‘genteel’ treatment”. (Notes on Indian History – K.Marx, தமிழர் வரலாறு – சில கேள்விகளும் தேடல்களும் – பக். 143, என்னும் தேவ.பேரின்பன் நூலின் மேற்கோளிலிருந்து எடுக்கப்பட்டது.)

    திப்புவின் பிள்ளைகள் ‘தூண்டிவிட்ட’ இப்புரட்சியைப் பற்றிக்ன் குறிப்பிடாமல் வேறொரு சந்தர்ப்பத்தில் மார்க்ஸ் பின்வருமாறு எழுதுவது, இத்தகைய அரசியல் பின்னணிகளை அரிந்து கொள்ள உதவும்.

   ."குஜராத்திலும், சத்தாராவிலுள்ள பண்டரிபுரத்திலும், நாகபுரிப் பிரதேசத்தில் ஹைதராபாத்திலும், கடைசியில் தென்புலத்து மைசூர் வரையிலும், பொது ஜனப் புரட்சி செய்வதற்கான முயற்சிகள் முன்பே நடைபெற்றன. எனவே பம்பாய், சென்னை ராஜதானிகளது அமைதி முற்றிலும் உறுதியான ஒன்று என்று எவ்வகையிலும் கொள்ள முடியாது,” (பக். 195, இந்தியா பற்றி.. , காரல் மார்க்ஸ், விடியல் பதிப்பக வெளியீடு:அக். 2012)

    பல்லாண்டுகளாக வேலூர் புரட்சியை ‘வேலூர் கலகம்’ என்று சொல்லிக் கொடுக்கும் அபத்தம் கண்டிக்கத்தக்கது. வரலாறு பற்றிய பார்வைகள் விரிவான நிலையில் தமிழக பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளின் ‘நோட்ஸ்களை’ ஆதார நூற்களாகக் கொண்டு பாடநூற்களை எழுதவது மிக மோசமானது மட்டுமல்ல; வருங்கால சமூகத்தின் வாழ்வியலைக் குலைப்பதாகும்.



இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்

திருவாரூர்

https://www.facebook.com/mu.sivagurunathan

http://musivagurunathan.blogspot.in/

https://twitter.com/msivagurunathan

பன்மை

https://panmai2010.wordpress.com/

மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

வாட்ஸ் அப்: 9842802010

செல்: 9842402010

சனி, டிசம்பர் 17, 2016

60. வகுப்புவாத வன்முறையை எதிர்கொள்ள கருத்தாயுதம்

60. வகுப்புவாத வன்முறையை எதிர்கொள்ள கருத்தாயுதம்



(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்)



மு.சிவகுருநாதன்



(சிந்தன் புக்ஸ் டிசம்பர் 2015 -ல் வெளியிட்ட க. மாதவ் மொழிபெயர்ப்பில் டாக்டர் பாலகோபாலின் ‘கருத்தாயுதம்: வகுப்புவாதத்தை எதிர்கொள்ள’ ‘கட்டுரைத் தொகுப்பு பற்றிய பதிவு இது.)



       பாலகோபால் இறந்த பிறகு (அக். 08, 2009) அவரது கட்டுரையையும் நேர்காணல் ஒன்றையும் ‘வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்…’ என்னும் குறுநூல் வெளியானது. அவரது தெலுங்குக் கட்டுரைகள் மாதவ் நேரடியாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில் 36 கட்டுரைகள் உள்ளன. அ.மார்க்ஸ் நீண்ட முன்னுரையும் பின்னுரையும் வழங்கியுள்ளார். 1983 தொடங்கி 2009 வரை குறிப்பாக பாலகோபாலின் இறுதி பத்தாண்டுகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. ஹிந்து தர்மம் – ஜனநாயகம், இந்துத்துவம் – கல்வி, மைனாரிட்டிகள் – சங் பரிவாரம் என்கிற பிரிவுக்குள் இந்நூல் கட்டுரைகள் அடக்கப்படுகின்றன.

      மனித உரிமைப்பணிகள் மிகவும் சிக்கலான நெருக்கடிகளுக்கு உள்ளாகக்கூடிய ஒன்று. இருப்பினும் கணித அறிஞராகும் வாய்ப்பைப் புறந்தள்ளி மனித உரிமைப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பாலகோபால். இதற்காக இவர் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். நக்சல்பாரி இயக்கத்துக்குச் சார்பான ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழக’த்தில் (APCLC) இணைந்து செயல்பட்டு, அறம் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக விலகி ‘மனித உரிமை மேடை’ (HRF) என்னும் அமைப்பை உருவாக்கி இறுதிவரை செயல்பட்டவர். பல்வேறு தாக்குதல்களுக்கு இலக்கானவர். (அ.மார்க்ஸின் முன்னுரை, பக். 09, 10)

     ஆந்திர மாநில குடியுரிமைகள் சங்கத்தின் மாத வெளியீடான ‘ஸ்வேச்ச’ இதழில் எழுதிய கட்டுரைகள், அறிக்கைகள் ஆகிய கொண்ட இத்தொகுப்புக் கட்டுரைகளை,

  •  இந்துத்துவத்தின் அடைப்படை அணுகல் முறைகளின் ஊடாக வெளிப்படும் அவர்களின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகள்.
  • மனுதர்மம் குறித்த் மிகவும் விரிவும் ஆழமும் மிக்க ஒரு ஆய்வு.
  • கல்வித்துறையில் இந்துத்துவத்தின் செயல்படுகள்.
  • பா.ஜ.க. முதன்முறை ஆட்சியில் அமர்ந்தது தொடங்கி பாலகோபால் மறையும் வரை சங்கப் பரிவாரங்கள் மேற்கொண்ட செயல்பாடுகள், தொடுத்த தாக்குல்கள், தலைவர்கள் பேசிய பேச்சுகள் ஆகியவற்றை நுண்மையாக ஆய்வு செய்த கட்டுரைகள்

என மேலோட்டமாக இந்நூலை நான்கு பகுதிகளாக பகுப்பதாக அ.மார்க்ஸ் முன்னுரையில் சொல்கிறார். (பக். 12)

     “ஒன்றைச் சொல்லவேண்டும். பிரச்சனைகளை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளக்கூடாது. ஆனால் அந்த ஆபத்து நம்மிடம் நிறையவே குடிகொண்டுள்ளது”, (பக். 17) என்று சொல்லி, மனு தர்மத்தில் குறிப்பிடப்படும் ‘தருமம்’ என்னும் கருத்தாக்கம் இவர்களின் நவீன இந்துத்துவத்தில் ‘தேசம்’ என்கிற கருத்தாக்கத்தால் மாற்றீடு செய்யப்படுவதை” பாலகோபால் கண்டடைவதையும் வெளிப்படுத்துகிறார்.

     அ.மா.வின் பின்னுரை 2009 2015 காலகட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்களை விரிவாகப் பதிவு செய்கிறது. இவற்றையும் இணைத்து வாசிப்பது சூழலை நன்கு புரிந்துகொள்ள வழிவகுக்கும்.




     மத்திய வகுப்புவாத மோடி அரசு கார்ப்பரேட்களின் பிடியில் சிக்கியுள்ளது. கார்ப்பரேட்களைச் சரிக்கட்டும் முயற்சியில் அரசும் தனக்கான சட்டங்களை இயற்ற வைப்பதிலும், வளைப்பதிலும் கார்ப்பரேட்களும் ஒருவரை ஒருவர் மிஞ்சிக் கொண்டுள்ளனர்.

  • தேசிய விவாதங்கள் இன்றியே பல மாற்றங்கள்.
  • சிறுபான்மையினரைச் சீண்டுதல்.
  • சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்கள்.
  • நிறுவனச் செயல்பாடுகளில் அரசுத் தலையீடுகள்.
  • அயலுறவுக் கொள்கைகளில் முதிர்ச்ச்சியின்மை.

      என்பது போன்ற மத்திய அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்கள் விவரிக்கப்படுகின்றன. நாட்டில் தலைவிரித்தாடும் வகுப்புவாத பாசிசத்திற்கு எதிராக இந்திய எழுத்தாளர்கள் விருதுகளைத் திரும்ப அளிப்பதையும் இப்பின்னுரை சுட்டுகிறது. (பக். 341)

     “இந்துத்துவம் இவ்வளவு வேகமாக விரிவடைவதற்கு எண்பதாண்டுகளுக்கு மேலாக இந்துமத நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். சின் துணை ஒரு முக்கியக் காரணம். இதர காரணங்களில் வெளிநாடுகளில் இருந்து குவியும் கோடிக்கணக்கான பணமும் ஒரு முக்கிய காரணமே” (பக். 31) என்று தெலுகு முன்னுரையில் பிஜூ மேத்யூ சுட்டுவது குறிப்பிடத்தக்கது.
 
      வகுப்புவாத அரசின் செயல்பாடுகளையும் அவர்களது கோட்பாடுகளையும் மிகத் துல்லியமாக விவரிக்கும் பண்பும் அவற்றின் உண்மை நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் முறையும் பாலகோபாலின் கட்டுரைகளில் துலக்கமடைகின்றன.

     “வகுப்புவாத அரசு என்பது மதப்பணபு கொண்ட அரசு எனப் புரிந்துகொண்டால் இந்தக் குழப்பம் வரும். வகுப்புவாத அரசை மதக் கருத்தியலைப் பயன்படுத்தும் மதச்சார்ப்பற்ற அரசாகப் புரிந்துகொண்டால் எந்தக் குழப்பமும் இல்லாமல் விஷயம் புரிந்துவிடும். பௌத்தத்தின் பெயரால் யுத்தங்களை எவ்வாறு செய்ய முடிகிறதோ, கிருத்துவத்தின் பெயரால் முதலாளித்துவ கோடீஸ்வரர்களை எவ்வாறு ஆதரிக்க முடிகிறதோ, இஸ்லாத்தின் பெயரால் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடிமையாக்கும் சுரண்டல் அமைப்பை எவ்வாறு நிலைநிறுத்த முடிந்ததோ, துரும்பிலும் தூணிலும் இருக்கிறார் என கடவுளை குறிப்பிடும் இந்து மதத்தின் பெயரால் ராமன், குறிப்பிட்ட மசூதி இருக்கிற இடத்திலேயே பிறந்தார் என எவ்வாறு கூறமுடிகிறதோ அப்போது புரிந்துவிடும்” (பக். 67) என்று மிக எளிமையான விளக்கங்களை அளிக்கிறார் போராளி பாலகோபால்.

       பொது சிவில் சட்டம் பற்றிச் சொல்லும்போது, “இஸ்லாம் திருமண உறவை வெறும் ‘செக்யூலர் கான்ட்ராக்ட்’ ஆகக் கருதுகிறது. இந்துத்துவம் அதனை புனித உறவாகக் கருதுகிறது. இரண்டும் பெண்ணுக்கு திருமண வாழ்க்கையில் வன்முறையிலிருந்து பாதுகாப்பை ஏற்படுத்த முடியவில்லை என்கிற கசப்பான உண்மைக்குத் தீர்வு காணவேண்டும். ஆனால் அவர் கருத்துகளை இவர்களோ இவர் கருத்துகளை அவர்களோ ஏற்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?”, (பக். 147) என்று வினா எழுப்புகிறார்.

      “இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி இந்துத்துவ வாதிகளுக்கு தமது சொந்த அஜெண்டா எப்போதையிலிருந்தோ இருக்கிறது. அந்த அஜெண்டாவில் ஜனநாயகம் கடுகளவும் இல்லை. சக்திமிக்கதான தேசிய அரசு, அகண்டமான இந்து ஆதிக்கம், நிலையான படிநிலை அமைப்பு, பத்திரமான பிராமணியப் பண்பாடு – இதுதான் அவர்களது கொள்கை. உலகமயத்திற்குத் தேவையான நிலையாண்மைக்கு இந்தக் கொள்கை கச்சிதமாகப் பயன்படும். ஆகையால் அவர்களுக்கு இப்போது சர்வதேச சூழலும் சாதகமாக இருக்கிறது”, (பக். 194) என்று ஆழமான கருத்தை வெளிப்படுத்துகிறார்.

     “புதிய பொருளாதார முறையில் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாமல் செய்து, விலைவாசியை உயர்த்தி, சமூக சேமநல செலவினங்களைக் குறைத்து, குறைந்தபட்ச வாழ்வுரிமைகளையும் மக்களுக்கு இல்லாமல் செய்யும்போது நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஏதோ ஒருவகையில் விமர்சித்தன. ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு நாடாளுமன்றத்தில் உத்தரவாதமாக நின்று உங்கள் பொருளாதாரக் கொள்கை ‘பேஷ்’ என பி.வி.நரசிம்மராவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தது பாரதிய ஜனதா கட்சி மட்டுமே”, (பக். 211,212) என்று குறிப்பிடுவதன் மூலம் வகுப்புவாதத்திற்கும் மக்கள் விரோத கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பு விளக்கப்படுகிறது.

     இவர்களுடன் அரசுகள், நீதிமன்றங்கள், காவல்துறை, நிர்வாகத்துறை போன்ற அனைத்து அரசு எந்திரங்களும் சமரசம் செய்யும் போக்கை கடைபிடிக்கின்றன. இதனால்தான் பாபர் மசூதிப் பிரச்சினை உருவானதும் இடிக்கப்பட்டதும் நிகழ்ந்தது என்பதைச் சுட்டிக்காட்ட அறிஞர் பாலகோபால் தவறுவதில்லை.

  • கிருத்தவர்கள் தேசபக்தர்கள் இல்லை என பிரச்சாரம் செய்வதன் மூலம் பெரும்பான்மை மதத்தினரிடம் துவேஷத்தைத் தூண்டுதல்.
  • சிறுபான்மைகளின் ஜனத்தொகை பெருகிவிடுகிறதென இந்துக்களின் ஜனத்தொகை குறைகிறதென பிரச்சாரம் செய்வதன் மூலம் இந்துக்களின் அச்சத்தைப் பெருக்குவது.
  • ஆட்சி இயந்திரத்தில் நுழைந்து போலீஸ், அரசு இயந்திரத்தில் மதத் தத்துவத்தைப் பெருக்குவது.
  • மெஜாரிட்டி மதத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு கத்தி, கட்டாரிகள் பயன்படுத்தப் பயிற்சிக் கொடுப்பது.
  • ஒவ்வொரு சிறு சம்பவத்திற்கும் மதச்சாயம் பூசி பிரச்சாரம் செய்வதன் மூலம் மாறுபட்ட மதத்தினரிடையே இடைவெளியைப் பெருக்குவது.”, (பக். 228)

     என்று தமிழகத்தில் இந்துகளுக்கும் கிருத்தவர்களுக்கும் நடந்த மோதல்கள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி வேணுகோபால் 1982 –ல் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டப்படுகிறது.

    மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ‘குஜராத் மாதிரி’யைச் செயல்படுத்த இந்துத்துவம் முனைகிறது. மும்பையில் சிவசேனை அரங்கேற்றிய 1992 -93 படுகொலைகள், ராஜஸ்தான் மாநிலத்தில் பஜ்ரங்தள் 40 லட்சம் ‘திரிசூலங்கள்’ விநியோகிப்பது போன்ற அபாயங்களை எச்சரிக்கச் செய்கிறார் பாலகோபால்.

    “’திரிசூலங்கள்’ என்றதும் சைவத் தலங்களில் காணப்படும் சந்நியாசிகள் கைகளில் இருக்கும் வேலைக்காகாத இரும்புக் கம்பிகள் என நினைக்காதீர். பஜ்ரங்தள் விநியோகிக்கும் திரிசூலங்கள் பிச்சுவா கத்திகள் அளவில் இருக்கும் உறுதியான ஆயுதங்கள். அதனை திரிசூலம் என்பதைவிட மூன்று முனைகள் கொண்ட ஈட்டிகள் என்பதே சரியாக இருக்கும். அதற்குத் திரிசூலம் என பெயர் வைப்பதற்குப் பின்னால் தெளிவான சிந்தனை இருக்கலாம். சீக்கியர்கள் கிர்பான் வைத்திருப்பது குற்றமாகாததைப்போல திரிசூலம் வைத்திருப்பது குற்றமல்ல என டபாய்ப்பதும் சாத்தியமே”, (பக். 267,268) என்றும் பாலகோபால் விளக்குகிறார்.

  கல்வியில் இந்துத்துவம் செய்யும் தலையீடுகள் குறித்த ஆறு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. “சங்பரிவாரம் திருத்தி எழுத எண்ணும் வரலாற்றுக் கண்ணோட்டத்தின் பெருமதிகள் மனிதத்தன்மையற்றவை, ஜனநாயகக் கண்ணோட்டம் விரும்பத்தகாத எதிர்கால லட்சியத்திலிருந்து பிறந்தவை. அது மட்டுமன்றி அவர்களின் கற்றல் முறையில் அறிவியல் நேர்மை பூஜ்யம்”, (பக். 179) என்று பாலகோபால் குறிப்பிடுகிறார்.

    பாடநூல்களில் வரலாற்றில் இந்த்துத்துவ ஆட்களில் தலையீடுகளைப் புரிந்துகொள்வது முதல்படி. இதன்மூலமே அவர்களை எதிர்கொள்வதும் அவற்றிற்கான கருத்தியல் தயாரிப்பும் நமக்குச் சாத்தியப்படும் என்பதையும் விளக்குகிறார். வகுப்புவாதத்தை புரிந்துகொள்ளவும், அவற்றை எதிர்கொள்ளவும் இந்நூல் பேருதவி புரியும்.

    நூலில் உள்ள பிழைகள் நம்மை திகைக்க வைக்கின்றன. அவசரகதியில் தயாரிக்கப்பட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வல்லினம் மிகாத மென்மைப் போக்கு ஏனென்று தெரியவில்லை. இந்நூல் பக்கங்களை அதற்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தலாம் போலுள்ளது. அடுத்தப் பதிப்பிலாவது சரியாகட்டும்.



கருத்தாயுதம் – வகுப்புவாதத்தை எதிர்கொள்ள…

(தெலுங்கிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பட்டக் கட்டுரைகள்)

டாக்டர் பாலகோபால்

தமிழில்: க. மாதவ்

முதல் பதிப்பு: டிசம்பர் 2015

பக்கம்: 344

விலை: ரூ. 250



வெளியீடு:

சிந்தன் புக்ஸ்,

132/251, அவ்வை சண்முகம் சாலை,

கோபாலபுரம்,

சென்னை – 600086.



செல்: 9445123164

மின்னஞ்சல்: kmcomrade@gmail.com

வெள்ளி, டிசம்பர் 09, 2016

துல்லியத் தாக்குதல்

துல்லியத் தாக்குதல்

மு.சிவகுருநாதன்


பணமதிப்பு நீக்கம்
கருப்புப் பணத்தை ஒழிக்க என்றனர்.
நம்பினீர்கள்...
கள்ளப் பணத்தைத் தடுக்க என்றனர்.
நம்பினீர்கள்...
இன்று
மின்னணு பரிவர்த்தனையே இலக்கு என்கின்றனர்.
இன்னுமா
நீங்கள்
நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்...
இன்னும் என்னென்ன கதைகள் இருக்கின்றனவோ!
காத்திருங்கள்....
வங்கி
அல்லது
ஏ.டி.எம். களில்
காத்திருப்பதைப் போல!

59. பசுமைப் புரட்சியின் சோகக்கதை

59. பசுமைப் புரட்சியின் சோகக்கதை

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) 





(வம்சி / பூவுலகு வெளியீடாக ஜூலை 2016 –ல் வந்துள்ள வந்தனா சிவா எழுதிய ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ என்ற நூல் பற்றிய அறிமுகப்பதிவு.)

      இந்தியாவின் உணவுப் பஞ்சத்தை, பட்டினிச் சாவுகளைத் தடுத்து நிறுத்தியது பசுமைப் புரட்சி என்கிற பெரிய பிம்பம் ஒன்றிருக்க, அவற்றிற்குப் பின்னாலுள்ள அரசியல் பற்றும் இந்திய வேளாண்மை நாசமாக்கப்பட்ட அவலத்தை பேசும் இந்நூல் சூழலியர் வந்தனா சிவா அவர்களால் எழுதப்பட்டது. பஞ்சாப்பை உதாரணமாகக் கொண்டு பசுமைப் புரட்சியின் கேடுகள் இங்கு, 7 தலைப்புகளாக விவரிக்கப்படுகின்றன.

      இங்கு ‘வளர்ச்சி’ என்பதே ஒரு வன்முறை. அரசியலில் நேர் எதிர் துருவங்களாக இருக்கும் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் இயற்கையை ஆக்ரமிப்பதன் மூலம், மூலதனத்தைப் பெருக்கி, பொருளுற்பத்தியை அதிகரித்து அமைதிக்கான சூழலை உருவாக்க முடியும் என்று நம்புவது அறிமுகத்தில் சுட்டப்படுகிறது.

    தொழில்நுட்பங்களின் உதவியுடன் இயற்கையின் மீது கட்டுப்பாடு செலுத்தும் பழமைவாத கன்ணோட்டத்தின் ஊடாகவே இங்கு பசுமைப் புரட்சியும் வடிவமைக்கப்பட்டது, பசுமைப் புரட்சி அரசியற் களத்தில் முரண்பாடுகளைக் களைவதற்குப் பதிலாக மோதல்களுக்கு வித்திட்டது, வளமான நிலங்கள் குறைந்துள்ளதும் சூழலியல் தளத்தில் மீண்டும் பற்றாக்குறையைத்தான் தோற்றுவித்துள்ளது எனவும் விளக்கப்படுகிறது.

    நார்மன் போர்லாக், சி.சுப்ரமணியம். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய பசுமைப் புரட்சி ஆதரவாளர்கள், இவர்களுக்குத் துணைநின்ற ராக்பெல்லர் நிறுவனம், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய அரசுகள் அவற்றின் செயல்பாடுகள் முதல் கட்டுரையில் துலக்கம் பெறுகின்றன. இவர்களுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்திய லால் பகதூர் சாஸ்திரி, கே.எம்.முன்ஷி, பொருளாதார அறிஞர்கள் பி.எஸ்.மின்ஹாசீம், டி.எஸ்.சீனிவாஸ் ஆகியோரது கருத்துகளும் எடுத்தாளப்படுகின்றன.

     1889 –ல் இந்திய வேளாண்மையில் வேதியியலைப் புகுத்த ஆங்கில அரசிற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட வோல்க்கர் குறிப்பிடும் கருத்து பாரம்பரிய இந்திய வேளாண்மையின் சிறப்பை எடுத்தியம்புகிறது. “இந்திய வேளாண்மை ஒட்டுமொத்தமாக மிகவும் பழமையானது என்றும் பிற்போக்கானது என்றும் கருதும் கருத்துகளோடு எனக்கு உடன்பாடு கிடையாது; பெரும்பகுதிகளில் அதை மேலும் செழுமையடையச் செய்வது என்பது தேவையற்ற ஒன்று என்று நான் நம்புகிறேன். இந்திய வேளாண்மையில் மேம்பாடு செய்யப் பரிந்துரை செய்வதைவிட ஆங்கில வேளாண்மையில் மேம்பாடு அடையப் பரிந்துரை செய்வது இலகுவான காரியம் என்பதை நான் தைரியமாகக் கூறுவேன்.” (பக். 22)

     தனியார் அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க அரசு, உலக வங்கி ஆகிய மூன்றும் அமெரிக்க வேளாண் மாதிரியை இந்தியாவில் கட்டமைக்க போட்டி போட்டுச் செயல்பட்டனர். 1952 லிருந்து போர்டு நிறுவனமும் அதன் பின்னர் ராக்பெல்லர் நிறுவனமும் களத்தில் இறங்கின. சி.சுப்ரமணியம். எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றோர் இந்தியாவில் இதை நிகழ்த்திக் காட்டினர்.

    பசுமைப் புரட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ‘அற்புத விதைகளி’ன் பின்னாலிருக்கும் எந்திர ரீதியான சிந்தனை கலாச்சார வெறித்தனம் கொண்டது. இதன் மூலம் உள்ளூர் பாரம்பரிய ரகங்கள் ‘பழமையானது’ எனவும் பன்னாட்டு விதை நிறுவனங்களில் உருவாக்கப்பட்ட வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் தேவைப்படும் நவீன ரகங்கள் ‘உயர்வானவை’, ‘முன்னேறியவை’ எனவும் கட்டமைக்கும் ஆபத்து நடந்தேறியது.

    1967 –ல் புதுதில்லியில் நடந்த கூட்டத்தில் பேசிய நார்மன் போர்லாக், “நான் மட்டும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்து இந்திய விவசாயிகளுக்கு வேதி உரங்களைக் கொடுங்கள் என்று கத்துவேன்” என்று சொல்வதிலிருந்து பசுமைப் புரட்சியின் உண்மை முகம் விளங்கத்தான் செய்கிறது.

    வேதி உரங்கள் சூழலியல் சீர்கேட்டுக்குக் காரணமாக அமைந்தவை. இவை புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான நைட்ரஜன் ஆக்சைடை வெளிப்படுத்துகின்றன. நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தியதன் மூலம் வேதி உரங்கள் உணவுப் பாதுகாப்பிற்கும் கேடு விளைவித்துள்ளன.

    பஞ்சாப் என்பது சட்லெஜ், பியாஸ், ரவி, செனாப், ஜீலம் ஆகிய சிந்துவின் ஐந்து கிளைநதிகள் பாயும் வளமான மண் கொண்ட பூமி. பசுமைப் புரட்சியின் ‘அற்புத விதைகள்’ சென்ற இடமெல்லாம் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தின. இந்த நிலை பெரும் அணைகளுக்கும் நீர்த்தகராறுகளுக்கும் வழிவகுத்தது. இது சூழலியல் பாதிப்புகளையும் அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் – அரியானா மாநிலங்களுக்கிடையேயான நீர்ப்பங்கீட்டுச் சிக்கல்கள் விரிவான விளக்கப்படுகின்றன.

     பசுமைப் புரட்சிக்குப் பஞ்சாப் அளித்த விலையும் பாதிப்பும் அளப்பரியது. மூன்று வகையான முரண்பாடுகள் இணைந்து இன்றைய பஞ்சாப் நெருக்கடி உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    ஒன்று: பசுமைப் புரட்சியின் அடைப்படையில் உருவான நதிநீர்த் தகராறுகள், தொழிலாளர்களை அப்புறப்படுத்திய நவீனத்துவம், நிலமற்ற சிறு விவசாயிகளின் நிலை, நவீன வேளாண்மையின் லாபமின்மை போன்றவை விவசாயிகள் போராட்டங்களுக்கு வித்திட்டன.

     இரண்டு: மதம், பண்பாடு தொடர்பானவை. அனைத்து உறவுகளையும் வணிகப்படுத்தி, எல்லாவற்றிற்கு விலையுண்டு, எதுவும் புனிதமானதல்ல என்கிற நிலைப்பாடுகளால் உருவான சமூக, நல்லொழுக்க உறவுகளைச் சீர்செய்ய வந்த சமயப் புத்தெழுச்சி இயக்கம் இறுதியில் பிரிவினை வாதத்திற்கு காரணமாக அமைந்தது.

     மூன்று: மத்திய, மாநில அரசுகளிடையே அரசியல் மற்றும் பொருளாதாரப் பங்கீடுகள் செய்துகொள்வது தொடர்பானது.

     பஞ்சாபில் பெப்சிகோ திட்டம் புதிய வேளாண்மைக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. வேளாண் புரட்சிக்கான கிரியா ஊக்கி எனவும் அமைதிக்கான திட்டம் எனவும் இது விதந்தோதப்படுகிறது. இப்போது பெப்சி உணவுகள் என்றழைக்கப்படும் இத்திட்டம் 1986 –ல் பெப்சிகோ, பஞ்சாப் வேளாண் தொழிற்கழகம், டாடாவின் துணை நிறுவனமான வோல்டங்ஸ் ஆகியவற்றின் கூட்டுத்திட்டமாகும்.

     “பெப்சியும் புதிய வேளாண்மைக் கொள்கையும் அமைதிக்கான ஒரு திட்டமாகக் கண்டிப்பாக அமையாது; ஏனெனில், அது விவசாயிகள் வாழ்க்கையில் மேலும் அதிகமான மத்தியக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது; ஏனெனில் அது சூழலியல், அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் வேளாண்மை அமைப்பில் புதிய நிலையின்மையை அறிமுகப்படுத்துகிறது”, (பக். 195)

     இந்தியாவில் வாழ்வாதாரங்களை மறு உயிர்ப்பு செய்வதற்கான சுதந்திரத்தின் குறியீடாகவும், வளர்ச்சியின் கருவியாகவும் காந்தி ராட்டையைக் கண்டார். மேலும் “ராட்டையை அப்படியே பார்த்தால் அது ஓர் உயிரற்றப் பொருள்; ஆனால் அதில் குறியீட்டை முதலீடு செய்யும்போது, அது எனக்கு உயிருள்ள பொருளாகிறது”, (பக். 205) என்றார்.

     பசுமைப் புரட்சி நெல், கோதுமை போன்ற ஓரினப்பயிர் முறையைப் புகுத்தியது. பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற துணைப்பயிர்களைக் களைகளாகக் கருதி ஒதுக்கியது. ஆசியப் பயிரிடும் முறைகளுடன் இணைந்த மீன் வளர்ப்பு போன்றவற்றை பூச்சிக்கொல்லிகளால் நாசமாக்கியது. வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தண்ணீர் ஆகியவற்றின் அதிகப்படியான பயன்பாடு விவசாயிகளுக்கும் பொருளாதார ரீதியிலும் எதிர்மறைத் தாக்கத்தை உண்டாக்கியது.

     தொழில்நுட்பப் புரட்சியோடு வந்த காலனித்துவத்தை காந்தி ராட்டையை இந்தியாவின் சுதந்திரம் மற்றும் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தின் குறியீடாக மாற்றினார். உயிரியல் வளங்களைச் சுரண்ட வரும் மறுகாலனியத்திற்கு மூன்றாம் உலக நாட்டு விவசாயிகளின் பழமையான விதைகள் குறியீடாக விளங்கும் என்று இந்நூல் எடுத்துரைக்கிறது.

     பசுமைப் புரட்சி குறுகிய காலநோக்கில் சில நன்மைகளைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் தொலைநோக்கில் இதன் தீமைகள் பாரதூரமானவை. இவற்றை மறுமதிப்பீடு செய்வது காலத்தின் கட்டாயம். இவற்றின் பின்னாலிருக்கும் வர்க்க நலன், அரசியல் போன்றவை கட்டடுடைப்பு செய்யப்படவேண்டியவை. மேலும் இவற்றை சர்வரோக நிவாரணியாகப் பார்க்கும் போக்கு விமர்சனத்திற்குட்பட்டது. அதே சமயம் இயற்கை வேளாண்மை என்பதுகூட இன்று ஆதிக்கச் சந்தையின் பிடியில் சிக்கியிருப்பதையும் மறுக்க இயலாது. இந்தியப் பசுமைப் புரட்சியை மதிப்பிட இந்நூல் நமக்கு உதவும்.



பசுமைப் புரட்சியின் வன்முறை

வந்தனா சிவா

வெளியீடு:



வம்சி / பூவுலகு வெளியீடு



முதல்பதிப்பு: டிசம்பர் 2009

இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2013

பக்கம்: 225

விலை: ரூ. 140



தொடர்பு முகவரி:



வம்சி புக்ஸ்,

19, டி.எம். சரோன்,

திருவண்ணாமலை.



தொலைபேசி: 04175 251468,

அலைபேசி: 9444867023

மின்னஞ்சல்: vamsibooks@yahoo.com

இணையம்: www.vamsibooks.com



மற்றும்



பூவலகின் நண்பர்கள்,

மே/பா: ஆரோக்கிய சித்த மருத்துவமனை,

ஏ 2, அலங்கார் பிளாசா,

425, கீழ்ப்பாக்கம் கார்டன் பிரதான சாலை,

கீழ்ப்பாக்கம்,

சென்னை – 600010.

பேசி: 044 26461455

செவ்வாய், டிசம்பர் 06, 2016

ஜெ. ஜெயலலிதா: சாமான்ய மக்கள் கொண்டாடிய தலைவர்

ஜெ. ஜெயலலிதா: சாமான்ய மக்கள் கொண்டாடிய தலைவர்

மு.சிவகுருநாதன். 



         தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா (68) 75 நாள்கள் நீண்ட மருத்துவப் போராட்டங்கள் பலனளிக்காமல் 05.12.2016 நள்ளிரவில் மரணமடைந்து விட்டார். இன்னும் நான்காண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்ய பெரும்பான்மை மக்கள் அளித்த தீர்ப்பு கனவாகிப்போனது. எளிதில் அணுக முடியாத புதிரான தன்மையோடு இருந்த அவரது இறப்பு, மருத்துவச் சிகிச்சை அனைத்தும் புதிராக முடிந்தது வியப்பைத் தருவது. மறைந்த தலைவருக்கு அமைதியான முறையில் இறுதியஞ்சலி செலுத்திவதே அவருக்கு செய்யும் நன்றியாக இருக்கும்.

        இங்கு அரசியல் களம் அவருக்கு மலர்ப் பாதையாக இருந்திருக்கவில்லை. மு.கருணாநிதி போன்ற முதிர்ந்த அனுபவசாலிகள், கெட்டித்தட்டிப்போன ஆணாதிக்கச் சூழல் ஆகியவற்றுக்கிடையேதான் அவரது அரசியல் பணி அமைந்தது. இதில் தன்னையும் கட்சியையும் தக்கவைத்துக் கொள்ள அதிரடி அரசியல் பாணியைப் பின்வற்றினார் என்றே சொல்லவேண்டும். இது எம்.ஜி.ஆரிடம் கற்றுக்கொண்ட பாலபாடம்.

       எம்.ஜி.ஆருக்குப் பிறகு சிதறிய கட்சியை ஒன்றுபடுத்தி அவரது சாதனைகள் பலவற்றை முறியடித்து ஆட்சியைத் தக்கவைத்தப் பெருமை ஜெயலலிதாவிற்கு உண்டு. இவற்றிற்கு அடித்தட்டு, சாமான்ய மக்கள் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம், டாஸ்மாக், வேற்று அதிகார மையம் போன்ற குற்றச்சாட்டுகள், வழக்குகள் இருந்தபோதிலும் சாமான்ய மக்கள் ஜெயலலிதா மீது வைத்த நம்பிக்கை கொஞ்சமும் குறையவில்லை; மாறாக அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. இங்குதான் நடுத்தர வர்க்க மனநிலையிலிருந்து விலகி வெகுமக்கள் உளவியலை ஆய்வுக்குட்படுத்தவேண்டிய தேவையிருக்கிறது. குறிப்பாக இடதுசாரிகள் பெறவேண்டிய இடத்தை எம்.ஜி,ஆர்., ஜெயலலிதா போன்றோர்கள் எப்படி பெறுகிறார்கள் என்பது சமூகவியல் ஆய்வு செய்யவேண்டிய ஒன்று.

       இவரது ஆட்சியில் வெகுமக்களின் பங்கு எவ்வளவு இருந்தது என்பது விவாதத்திற்குரிய செய்தி. ஆனால் அவர்கள் ஜெயலலிதாவை அவரது ஆட்சியை தங்களுடையதாகவே கருதி வந்திருக்கின்றனர். ஊழல் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்புகள் கூட இவர்களது நம்பிக்கையைத் தகர்க்கவில்லை.

      தமிழ்நாட்டின் சாபக்கேடு தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்ற ஒருதுருவ அரசியல்தான். கருணாநிதியை விமர்சனம் செய்தால் அவன் அ.இ.அ.தி.மு.க.; ஜெயலலிதாவை விமர்சித்தால் தி.மு.க. என்கிற எளிய முன்முடிவுகளினால் நடுநிலைத் தன்மை அகற்றப்பட்டுவிட்டது. மறைந்த எம்.எஸ்.எஸ்.பாண்டியன் செய்ததுபோல ஜெயலலிதா பற்றிய சமூகவியல் ஆய்வுகள் மிக அவசியம். இதிலிருந்துதான் வருங்கால சமூகம் தனக்கான் தலைவர்களைக் கண்டடைய வேண்டும்.

      பெரியாரின் வாரிசுகளான இவர்கள் பெரியார் கொள்கையிலிருந்து விலகிநிற்றல் குறித்தான் விமர்சனம் இங்குண்டு. சி.என். அண்ணாதுரையிலிருந்து தொடங்கிய இந்த விலகல் இன்று உச்சமடைந்துள்ளது. ராமர் கோயில், ராமர் பாலப் பிரச்சினைகளில் இவரது நிலைப்பாடுகள் மட்டுமல்ல; பெரும்பாலான பிற நிலைப்பாடுகளில்கூட இந்த விலகலை அவதானிக்கமுடியும். தி.மு.க. காரர்கள் மறைமுகமாக செய்யும் இந்த வேலையை கொஞ்சம் வெளிப்படையாக செய்யும் தன்மைக்கு ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. காரர்கள் ஈடுபட்டனர், அவ்வளவே.
     
       ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தினால் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகி இருக்கிறது. இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லாத அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கும் ஒற்றை ஆளாய் செயல்பட்ட ஆட்சிக்கும் இது பொருந்தும். இந்த வெற்றிடம் அல்லது இடைவெளி எவ்வாறு நிரப்பபடுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

     தமிழகத்தின் ஆளும்கட்சியாக மட்டுமல்லாது, இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெருங்கட்சியாக மக்கள் தீர்ப்போடு அமர்ந்த ஒரு கட்சி இன்று தலைமை இல்லாது தனிமரமாகியுள்ளது. இந்த இடைவெளியைக் குறுக்குவெளியில் பயன்படுத்தி பலனடைய பலர் காத்திருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன. இது இந்திய ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் முயற்சி.

     குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. இந்நிலையை வெகுவாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, உதய் திட்டம் போன்றவற்றில் இதை உணரமுடிகிறது. புதிய கல்விக்கொள்கை, ‘நீட்’ தேர்வு போன்றவற்றிலும் இந்நிலை நீடித்தால் அது மிகவும் ஆபத்தாக முடியும். மக்களாட்சி மாண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலைகளில் ஈடுபடும் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

    மாநில ஆளுநர் நியமனமும் இவ்வகையில் நடைபெற்றதும் கண்டிக்கத்தக்கது. மாநில அரசை கலந்தாலோசித்து ஆளுநரை நியமிக்கும் நடைமுறையை விடுத்து, பொறுப்பு ஆளுநர் என்ற தனக்குச் சாதகமான ஒருவரை நியமித்து அவரையே நிரந்த ஆளுநராக மாற்ற எண்ணும் தந்திரம் போன்ற பல மோசடிகள் ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கும்போது நடந்தேறியுள்ளன. தற்போது ஜெயலலிதா மரணடைந்துள்ள நிலைகள் இத்தகைய நடவடிக்கைகள் அதிகமாக வாய்ப்புண்டு. இவற்றைச் சமாளிக்கும் திறனை கட்சியும் ஆட்சியும் பெற வேண்டும்.

    ஆட்சிக்குத் தலைமை ஓ.பன்னீர்செல்வம் என்று முடிவாகிவிட்ட நிலையில் கட்சித்தலைமை யாருக்கு என்ற வினா எழுகிறது. முன்பிருந்தது போல இரண்டையும் ஒருவரே வைத்திருப்பது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை. கட்சியிலும் ஆட்சியிலும் வெளியார் குறுக்கீடுகள், தலையீடுகள் இல்லாமல் பார்த்துகொள்ளவேண்டியது ஒவ்வொரு கட்சித் தொண்டனின் கடமையாக இருக்கவேண்டும்.

     ஒரு சமூகமோ, மக்கள் இயக்கமோ தனக்கான தலைமையை கண்டடையும். திணிக்கப்பட்ட தலைமைகள் மக்கள் ஆதரவைப் பெறுவது இல்லை. அந்த வகையில் அ.இ.அ.தி.மு.க. வும் பயணப்படும் என நம்பலாம். கடந்தகால தவறுகளிலிருந்து அவர்களும் பிற கட்சியினரும் தங்களை மேம்படுத்திக்கொள்ள துயரமான இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் அய்யமில்லை.

வியாழன், டிசம்பர் 01, 2016

இன்குலாப்: மானுடம் பாடிய கவிஞன்


இன்குலாப்: மானுடம் பாடிய கவிஞன்


(டிச. 01, 2016, இன்று மரணித்த புரட்சியாளர், சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் தோழர் இன்குலாப் அவர்களுக்கு இறுதி அஞ்சலி) 


மு.சிவகுருநாதன் 

“இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் எழுச்சி முழக்கம் இன்று
புதிய பொருள் பெறுகின்றது”,

(பேரா. அ.மார்க்ஸ் முகநூலில்…)

“பொன்னேரி சிவந்ததடா - இருள்பொசுங்கும்
பொழுதொன்று விடிந்ததடா
என்று குரல் எழுப்பிக் கொடிய அடக்குமுறை நிலவிய அவசரநிலைக் காலம் உட்பட ,வாழ்நாள் முழுவதும் சொந்த வாழ்க்கையைப் பெரிதாக எண்ணாமல்,பொதுவாழ்க்கையையே பெரிதும் நேசித்த புரட்சியாளர், சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் தோழர் இன்குலாப்”,

(பேரா. சே.கோச்சடை முகநூலில்…)

“இன்குலாப் எழுதும் கவிதைகள், கவிதைகளே அல்ல என்று யாரோ ஒருவர் கூறிவிட்டாராம். போகட்டும். இன்குலாபே ஒரு கவிதைதான் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை போலும்”,

(எஸ்.வி.ராஜதுரை, ‘’சாட்சி சொல்ல ஒரு மரம்’ தொகுப்பிலுள்ள ‘இன்குலாப் என்னும் மோகனப் புன்னகை’ கட்டுரை, விடியல் வெளியீடு, ஆகஸ்ட் 2012)

       சில மாதங்களுக்குமுன்பு குடந்தையில் அ.மார்க்ஸ் உடனான சந்திப்பில் தோழர் நெடுவாக்கோட்டை உ.ராசேந்திரன் உடல்நலம் குறித்த பேச்சு வந்தது. ராசேந்திரனுக்கு ஒரு விழா எடுப்போம். அதற்கு இன்குலாப்பை அழைத்து வருவோம், என்றார் மார்க்ஸ். அவருடைய உடல்நலம் ஒத்துழைக்குமா என்ற சந்தேகத்தைச் சொன்னபோது, ராசேந்திரன் இன்குலாப் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர். இன்றும் அவரை வழிக்காட்டியாக எற்பவர். இதைவிட வேறு மகிழ்ச்சி அவருக்கு இருக்கமுடியாது, என்றும் சொன்னார். விழாவிற்கான ஏற்பாடுகள் ஏதும் நடக்கவில்லை. ஆனால் இன்று இன்குலாப் நம்மிடம் இல்லை.

     “மனுசங்கடா நாங்க மனுசங்கடா”, என்னும் புகழ்மிக்க பாடலை எழுதியவர் இன்குலாப். அதைப் பட்டி தொட்டியெல்லாம் கணிரென்று தனது குரலால் கொண்டு சேர்த்த பேரா.கே.ஏ.குணசேகரன் ஆகிய இருவரும் இன்று நம்மிடம் இல்லை. காலம் நம்மிடமிருந்து இவர்களைப் பிரித்துவிட்டது. ஆனால் இவர்களது படைப்புகள் என்றும் நிலைக்கும். அப்பாடலைக் கீழேத் தருகிறேன்.

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்த்தில தர்ம அடிய வாங்கி கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க — டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா”, (இன்குலாப்)

        “சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இன்குலாப் எந்த மத அடையாளங்களையும் தரித்துக் கொண்டதில்லை. சாகுல் ஹமீது எனும் தன் இயற்பெயரைக் கூட அவர் எந்நாளும் முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை”, என்று பேரா. அ.மார்க்ஸ் முகநூல் பதிவில் குறிப்பிடுகிறார்.

      “தனது இரண்டு ஆண் மக்களின் படிப்பு குறித்தோ அவர்களது எதிர்காலம் குறித்தோ எந்த அக்கரையும் அவரால் எடுக்க முடியவில்லை. ஆண்மக்களில் ஒருவனுக்கு செல்வன் என்னும் இனிய தமிழ்ப் பெயரையும்ம் மற்றவனுக்கு ‘இன்குலாப்’ என்னும் புரட்சிப் பெயரையும் சூட்டிய அவர் புரட்சி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்த பிற பேராசிரியர்களைப் போலத் தனது சொந்தப் பிள்ளைகளுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கித் தரவில்லை. போதாதற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறந்த பெண் குழந்தை வேறு. கடன் தொல்லை. மாத ஊதியத்துடன் பிடிப்புகள் போக, சம்பள தினங்களில் வெறுங்கையுடன்தான் வீட்டுக்குத் திரும்புவார்.. எனினும் அவரது இல்லம் ‘திறந்த வீடாக’ இருந்தது. உடல் நோவும் மன வேதனையும் ஓர் புறமிருந்தாலும், வந்தவர்க்கெல்லாம் அருஞ்சுவை உணவு வழங்கி வந்த அவரது துணையாரின் ஈகைப்பண்பு பாடலுக்குரியது”, என்று எஸ்.வி.ராஜதுரை பதிவு செய்கிறார். (‘’சாட்சி சொல்ல ஒரு மரம்’ தொகுப்பிலுள்ள ‘இன்குலாப் என்னும் மோகனப் புன்னகை’ கட்டுரை)

       இசை மற்றும் நல்லத் திரைப்படங்களில் அவருக்கிருந்த ஈடுபாடு, ஜானிகான்கான் தெருவின் இரைச்சல், அழுக்குக்கும் இடையில் அவரிடம் வலுப்பெற்ற சூழலியல் அக்கறை, ஜன்னலுக்கு வெளியிருந்த அசோக மரம், அதில் இருக்கும் பறவைகள், அம்மரம் வெட்டப்பட்டபோது அவருடைய மனவேதனையை வெளிப்படுத்திய ‘சாளரம்’ இதழில் எழுதிய கவிதை ஆகியவற்றை எஸ்.வி.ஆர். பெருமை பொங்க வெளிப்படுத்துகிறார். அறுபதாம் வயதில் அற்புதமான நாடகாசிரியராக மலர்ந்ததையும் குறிப்பிடுகிறார். (மேலே குறிப்பிட்ட அதே நூல்.)

      “என்னுடைய முதல் நூல் 'எதுகவிதை' யை நான் அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தேன். அந்த நூலுக்கு அவர்தான் முன்னுரையும் எழுதியிருந்தார். அந்த நூலில் நான் அன்றைக்கு இருந்த இளமைத் துடிப்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாரதிக்குப் பிந்திய மகாகவி என அவரை நான் குறிப்பிட்டிருந்தேன். என்னைப் போன்ற அன்றைய இளைஞர்கள் பாரதிக்குப் பின் சம கால அரசியலில் அச்சமின்றி நேர்மையாய்த் தன் குரலை ஒலித்த ஒரு பெருங் கவியாய் அவரைத்தான் கண்டோம். பாரதி காலத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் வடிவம் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்றால் இன்குலாப் காலத்தி்ய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை நக்சல்பாரிகள்தான் முன்னெடுத்திருந்த சூழலில் அவர் எள்ளளவும் தயக்கமின்றி அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

     அன்று அப்படி நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அத்தனை எளிதானதல்ல. கடும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த எந்த அச்சமும் இன்றி அவர் தன் கவிதைகளையே ஆயுதமாக்கிக் களத்தில் நின்றார்” என்று அ.மார்க்ஸ் தனது முகநூல் அஞ்சலிப் பதிவில் எழுதுகிறார்.

      இன்குலாப்பின் ‘ஶ்ரீ இராஜராஜேச்வரியம்’ கவிதைக்காக தூற்றப்பட்டது, அவரது கவிதை பாடநூல்களிலிருந்து நீக்கப்பட்டது, இராஜராஜனுக்கு மு.கருணாநிதி சிலையெடுத்த நிகழ்வில் அக்கவிதையை உ.ராசேந்திரனுடன் விநியோகித்தது, போலீசின் கைகளில் சிக்காமல் சைக்களில் தப்பிவந்தது ஆகியவற்றை அ.மார்க்ஸ் தனது தீராநதிக் கட்டுரையில் விரிவாக எழுதியிருப்பார். (அ.மார்க்ஸ், ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ உயிர்மை வெளியீடு, ஜூன் 2016)

      நக்சலியத்தின் குறுங்குழு ஒன்றில் செயல்பட்டாலும் மானுடம் பாடிய கவிஞன் இன்குலாப். இலக்கிய வடிவங்களை மக்களுக்காக பயன்படுத்திய மகத்தான கலைஞன். தமிழ் தேசியத்தை இறுதியில் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்ட நிலையிலும் புறக்கணிக்க முடியாத ஒரு ஆளுமையை நாம் இழந்துவிட்டோம்.

      “தமிழகத்திலிருந்த ஒட்டுமொத்த நக்சலைட் இயக்கத்தை எடுத்துக் கொண்டால், புரட்சிக்கனல் வீசும் கவிதைகளை, சமூக மாற்றத்துக்கான உள் உந்துதல் தரும் கவிதைகளை எழுதுவதில் ஈடிணையற்றவராக இருந்த ஒரே கவிஞர் இன்குலாப்தான்”, என்று எஸ்.வி.ஆர். சொல்வது மிகப்பொருத்தமானது.

      எஸ்.வி.ஆர். மேலும் சொல்கிறார். “சாதி ஒழிப்பை, தலித் மக்களின் உரிமையை, விடுதலையைத் தனது திட்டத்தின் மையப் பகுதியாகக் கொள்ளாத எந்தப் புரட்சிகர இயக்கத்தாலும் இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்க முடியாது என்னும் கருத்தை எனக்குத் தெரிய 1980 களிலிருந்தே சொல்லி வந்தவர்”.

      இன்குலாப்பிற்கு செவ்வணக்கம்.

     அஞ்சலியாக அவரது கவிதை வரிகள் சில.



“கடந்த ஆயிரம் ஆண்டுகளை

அப்படி ஒன்றும் கைகழுவ முடியாது

மகுடங்கள் துருப்பிடித்திருக்கலாம்

உறைவாள்கள் முனை முறிந்திருக்கலாம்

சபைத் தலைவர்களைத் திருவுளத் தேர்வுசெய்யும்

குடங்கள் ஓவாய் உடைந்திருக்கலாம்

ஓலைகளைச் செல்லரித்திருக்கலாம்

தஞ்சையிலிருந்து காந்தளூர் செல்லும்

சாலைகளில் குளம்பொலிகள் கேட்காதிருக்கலாம்.

அலைமோதும் துறைதோறும்

புலிக்கொடிகள் புரளாதிருக்கலாம்

இருந்தாலும் கடந்த ஆயிரம் ஆண்டுகளை

அப்படி ஒன்றும் கைகழுவ முடியாது.

………………………………………………………………………………………………..

ஆயிரம் ஆண்டுகள் ஒடுங்கிக் கிடந்த

பெருமூச்சும் கண்ணீரும் என்னுள் பீறிடுகின்றன.

ஆயிரம் ஆண்டு மூத்த என் தங்கையின்

காலில் கட்டிய சதங்கை

இந்தப் பெரிய கோயில் முற்றத்தில்

அழுது கொண்டிருக்கிறது இன்னும்

இதனுடைய ஒவ்வொரு கல்லிலும்

என் சகோதரர் தசைகள் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.

வல்லாங்கு செய்யப்பட்டுப் பிறந்து கொண்டிருக்கும்

நான் கூசி நிற்கிறேன்.

அடிமைச்சூடு பொறிக்கப்பட்ட

என் முதுகுப் புண் இன்னும் ஆறவில்லை

இதன் விழிகொள்ளாப் பிரும்மாண்டத்தின் கீழ்

சிறிய தேசங்கள் சிதறிக் கிடக்கின்றன.

……………………………………………………………………………………………………………..

அடக்கப்படும் நமது பெருமூச்சு

பற்றி கொள்ளட்டும்

தேவடியாளாக்கப்பட்ட நம் தாய்மார்களின்

ஒவ்வொரு மார்பகமும் பந்தங்களாய் மூளட்டும்

மகுடங்களின் மாயையில் மக்களை மூடும்

சூனியக்காரர்களும் சூனியக்காரிகளும்

சாம்பலாகட்டும் உண்மைச் சரித்திர விழிப்பில்

சொல்வோம் ஆயிரம் ஆண்டுகளாக

அழுகை மொழி மாற்றிக் கொண்டதில்லை.

ஆத்திரமும் கூடத்தான்

தண்ணீர் நிறம் மாற்றிக் கொண்டதில்லை;

ரத்தமும் கூடத்தான்” - கவிஞர் இன்குலாப்

(இக்கவிதை அ.மார்க்ஸின் ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ உயிர்மை வெளியீடு, நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)


நன்றி: அ.மார்க்ஸ், எஸ்.வி.ஆர்., சே.கோச்சடை. 

08. கல்வி அபத்தங்கள்

08. கல்வி அபத்தங்கள்

- மு.சிவகுருநாதன் 

          கல்வி விழிப்பை உண்டாக்குவது, சிந்திக்கத் தூண்டுவது. பெரியார் சொன்னது போல் நமது சிந்தனையில் தேங்கிப்போன கசடுகளை வெளியேற்றுவதாக கல்வி அமையவேண்டும். ஆனால் கல்விமுறையே அபத்தமாகவும், சிந்தனைகளுக்கு எதிராகவும் இருந்தால் என்ன செய்வது? நாம் வழக்கமாக ஏதோ ஒன்றுக்கு பழக்கப்பட்டுள்ளோம். அதை மாற்றவோ, கேள்வி கேட்க முடியாமல் மழுங்கடிக்கப்பட்டுள்ளோம். வருங்கால சமுதாயத்தையும் இவ்வாறு மழுங்கடிப்பதா கல்வி? சில கல்வி அபத்தங்களை பார்ப்போம்.

அபத்தம் – ஒன்று 

       “பெயரில் என்ன இருக்கிறது?”, என்றெண்ண வேண்டாம். சில நேரங்களில் பெயரே எல்லாமாகவும் இருக்கிறது. விஞ்ஞானம், பௌதீகம், ரசாயனம், மிருகவியல், சரித்திரம், பூகோளம் ஆகிய பெயர்கள் முறையே அறிவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, புவியியல் என்று மாறும்போது இன்னும் ஏன் ’கணக்கு’ என்று சொல்லவேண்டும்?

      Mathematics என்பதை எப்படி கணக்கு என்று சொல்வது? அதை மாற்ற வேண்டாமா? +1, +2 வகுப்புகளில் மட்டும் கணிதவியல், பத்தாம் வகுப்பு முடிய ஏன் இன்னும் கணக்கு? கணிதவியல் என்னும் அறிவியலை கணக்கு (sum) என்ற அளவில் சுருக்குவது தகுமா?

      இது மட்டுமல்ல பிரச்சினை. இந்நிலை தவறான புரிதல்களுக்கு இட்டுச்செல்கிறது? கணிதவியல் என்பது அறிவியல் அல்ல என்ற எண்ணம் பல ஆசிரியர்களுக்கே இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேனிலை வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்கள் உள்ள ஒரு பிரிவுக்கு ‘pure science’ என்று சொல்லும் போக்கும் இங்குண்டு. கணிதவியலைத் தவிர்த்துவிட்ட அப்பிரிவு எப்படி ‘pure science’ ஆகமுடியும்?  கணிதவியலில்  10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குச் செய்முறைத்தேர்வும் மதிப்பெண்கள் வழங்குவதும் இந்தத் தவறான பார்வையால் இல்லாமாற்போகிறது.

      இதோடு இன்னொரு அபத்தம் பாருங்கள்! இன்னொரு மொழிக்கு நாம் எப்படி பெயர் சூட்டியிருக்கிறோம் என்று? English என்பதை இங்கிலீஷ் என்றாவது எழுதிவிட்டுப் போங்கள். அது என்ன ‘ஆங்கிலம்’! ‘மெட்ராஸ்’ சென்னை ஆவது இயல்பாக நடக்கும்போது கணக்கு கணிதவியல் ஆவதும் ஆங்கிலம் இங்கிலீஷ் ஆவதும் வேண்டுந்தானே! இதிலென்ன சிக்கல் இருக்கமுடியும்? 


  அபத்தம் – இரண்டு 


        தேர்வுகள் கொசுக்கள் போல, அதை ஒழிக்க முடியாது போலும்! தேர்வுக்கான நேர நிர்ணயம் எதன் அடைப்படையில் செய்யப்படுகிறது என்பது நமது சிற்றறிவிற்கு புலப்படாத ஒன்று. பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு முடிய 60, 75, 100 (1 – 9 முடிய தொகுத்தறி மதிப்பீட்டுக்கு 60, 10 –ம் வகுப்பு அறிவியலுக்கு 75, பிற பாடங்களுக்கு 100) ஆகிய மதிப்பெண்களுக்கும் 11, 12 வகுப்புகளுக்கு 80, 100, 150, 200 ஆகிய மதிப்பெண்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

        பத்தாம் வகுப்பு முடிய 2.30 மணிநேரம் ஒதுக்கப்படுகிறது. 11, 12 வகுப்புகளுக்கு 3.00 மணிநேரம். அரசு பொதுத்தேர்விற்கு 15 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. ஒன்பது முடிய உள்ள வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு (CCE) முறையில் தொகுத்தறி (SA) மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களுக்கு 2.30 மணிநேரம் மாணவர்களை அமரவைப்பது வன்முறையில்லையா? 11, 12 வகுப்புகளில் 80, 100, 150, 200 என பல்வேறு மதிப்பெண்ணுக்கான தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 3.00 மணி நேரம் நிர்ணயிப்பதும் அபத்தமல்லவா? மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு காலமும் மாறவேண்டுமா இல்லையா?

      மொழிப்பாட இரண்டாம் தாளுக்கு 80 மதிப்பெண்கள் (20 மதிப்பெண்கள் வாய்மொழித்தேர்வு), இயற்பியல், வேதியியல் போன்ற செய்முறைத் தேர்வுடன் கூடிய பாடக் கருத்தியல் தேர்வுகளுக்கு 150 மதிப்பெண்கள், கணிதவியல், வரலாறு, பொருளியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கு 200 மதிபெண்கள் என்ற எல்லா தேர்வுகளுக்கும் ஒரே நேரம் என்பது ஏற்கத்தக்கதா? இதைப்பற்றி யாரேனும் கருத்து சொன்னதுண்டா? தேர்வு எழுதும் மாணவர்களின் கருத்துகள் கேடகப்பட்டதுண்டா? மொழிப்பாடத் திறன்கள், சிந்தனை என்று சாக்குப்போக்குச் சொல்வதெல்லாம் இன்னும் அபத்தம். அப்படி ஒன்றும் திறன்கள் வெளிப்படும் கல்விமுறையாக இது இல்லை என்பதே உண்மை.

     அபத்தம் – மூன்று

      9 - 12 வகுப்புகளுக்கு மொழிப்பாடத்திற்கு இரு தாள்கள் ஏன்? இங்கும் மொழித்திறன் என்னும் பம்மாத்து இருக்கிறது. நடைமுறையில் இதைவிட அபத்தம் இருக்க முடியாது. பத்தாம் வகுப்பில் தமிழில் தேர்ச்சியடையாத மாணவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

       பத்தாம் வகுப்பில் இரு தாள்களுக்கும் சேர்த்து 200 மதிப்பெண்கள். நூற்றுக்குக் கணக்கிடப்பட்டு தேர்ச்சிக்கு 35 மதிப்பெண் எடுக்கவேண்டும். முதல் தாளில் 40 எடுக்கும் ஒரு மாணவர் இரண்டாம் தாளில் 28 எடுத்தால் பெயில் (40 + 28 = 68 ÷ 2 = 34). முறைப்படி பார்த்தால் இவர் இரண்டாம் தாளில் மட்டுமே தேர்ச்சியடையவில்லை. ஆனால் அவர் இரு தாள்களையும் திரும்ப எழுதவேண்டும். இது எவ்வளவு பெரிய அபத்தம் பாருங்கள்!

       இரு தாள்களிலும் நூற்றுக்கு 34 மதிபெண்கள் எடுத்து பெயிலாவது மொழிப்பாடங்களில் மட்டுமே சாத்தியம். இரு தாள்களையும் வெவ்வேறு நபர்கள் திருத்துவதால், விளிம்பில் நிற்கும் மாணவர்ளுக்குக் கருணை காட்ட வாய்ப்பில்லை. இந்நிலை மாற மொழியாசிரியர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

        மேனிலையிலும் முதல் தாள் 100 மதிபெண்கள், இரண்டாம் தாள் 80 மதிப்பெண்கள் (வாய்மொழித்தேர்வு 20 மதிப்பெண்கள்). ஒரு தாளில் பெயிலானால் இரு தாளையும் மீண்டும் எழுதவேண்டும். ஏன் ஒரு தாளாக கணக்கில் கொள்ளக்கூடாது?

        சமூக அறிவியலில் வரலாறு 40, புவியியல் 40, குடிமையியல் 10, பொருளியல் 10 என்ற அடிப்படையில் வினாத்தாள் அமைகிறது. மொழிப்பாடங்களுக்கு 50 + 50 = 100 என்ற அடிப்படையில் ஒரே தாளாக இருந்தால் என்ன? இல்லையில்லை, மொழித்திறன் ரொம்ப அவசியம் என்று கருதினால் இரு தாள்களை தனித்தனி தாள்களாக 7 தேர்வுகள் 700 மதிபெண்கள் என்றும் மேனிலையில் 8 தேர்வுகள் 1200 மதிபெண்கள் என்று அமைப்பதில் என்ன சிக்கல்? (மேனிலையில் இரு தாள்களுக்கு தலா 100 என்பதால் கூடுதல் 1200 ஐ தாண்ட வாய்ப்பில்லை.) தேர்ச்சியடையாதவர்கள் அந்த ஒரு தாளை மட்டும் எழுதினால் போதும் என்ற நிலை அப்போதுதான் வரும்.

   அபத்தம் – நான்கு

        மேனிலை வகுப்புகளில் ஒரு பாடத்திற்கு 200 மதிப்பெண்கள், கூடுதல் 1200 என்பதே மாபெரும் மோசடி. +1, +2 என்பது இரண்டாண்டுத் தொடர் படிப்பு. முதலாண்டில் 6 பாடங்கள் 600 மதிப்பெண்ணுக்க்கான பொதுத்தேர்வு, இரண்டாமாண்டில் 6 பாடங்கள் 600 மதிப்பெண்ணுக்க்கான பொதுத்தேர்வு என 1200 மதிப்பெண்கள் இருப்பதுதான் முறை. நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இதுதான் நடைமுறை. அதனால்தான் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளில் அவர்களது பங்கு கணிசமாக உள்ளது. +1 –ல் பொதுத்தேர்வு நடத்தாமல் +2 –ல் மட்டும் நடத்தில் 1200 க்கான மதிப்பெண் பட்டியல் வழங்குவது மோசடியன்றி வேறென்ன?

          100 மதிப்பெண்கள் தேர்வெழுத 2:45 நிமிடங்கள், 200 மதிப்பெண்கள் தேர்வெழுத 3:15 நிமிடங்கள் என்பதெல்லாம் அபத்தம் மட்டுமல்ல; அநியாயமும் கூட. 9, 11 வகுப்புகளைத் தவிர்க்கும் நிலைக்கும் தனியார் கல்விக்கொள்ளைக்கும் இதுவே காரணம். குறுக்கு வழியில் அரசின் மருத்துவம் மற்றும் பொறியியல் இடங்களை அபகரிப்பதற்கு அதிகார வர்க்கம், தனியார் கல்விக் கொள்ளையர்கள், பணக்காரர்கள் சேர்ந்து தீட்டிய சதித்திட்டமிது.


     அபத்தம் – அய்ந்து 


       +2 கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும் 75 மதிபெண்களுக்கு OMR (Optical Mark Reader) விடைத்தாள் பயன்படுத்தப்படுகிறது. இதை ஏன் பிற பாடங்களுக்கும் குறிப்பாக மாற்றெண் (Dummy) கொண்ட தேர்வுகளுக்கு மட்டுமாவது பயன்படுத்தினால் என்ன? OMR என்பதை ஏதோ கணினிப் பாடம் சார்ந்த ஒன்றாகவே பார்க்கும் மனப்பான்மையை நாம் எப்போது மாற்றப்போகிறோம்? மாணவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்ய இது வசதியாக இருக்குமே!


    அபத்தம் – ஆறு


    சரித்திரம், பூகோளமாக இருந்த காலகட்டத்தில் வாரத்தில் அய்ந்து பாடவேளைகள் வரலாறு பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று வரலாறு, குடிமையியல், புவியியல், பொருளியல் என நான்கு பகுதிகளாக சமூக அறிவியல் மாறிய பிறகும் இந்நிலை தொடர்வது ஏன்? இதனுடைய நீட்சி சமூக அறிவியல் ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு தேவையில்லை என்கிற அளவிற்குச் செல்கிறது. இத்தகைய அபத்தங்களும் மாற்றப்பட வேண்டுமல்லவா! இவை எல்லாவற்றிற்கும் நீதிமன்றங்களையே நம்பியிருக்கும் போக்கு நல்லதல்ல. அவையும் எல்லா நேரங்களில் சரியாக முடிவெடுக்கும் என்று சொல்வதற்கில்லை. இம்மாதிரியான அபத்தங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போவது கல்வியை கேலிக்குரிய ஒன்றாக மாற்றிவிடும்.


  (அபத்தங்கள் தொடரும்…)