100% தேர்ச்சி என்னும் மோசடி
மு.சிவகுருநாதன்
மு.சிவகுருநாதன்
10, 12 வகுப்புகளில் பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் பட்டியல் (Nominal Roll) தயாரிக்கும்போது, வருகைப் பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் விடுபடுதல் இல்லாமல் சேர்க்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக நாளிதழ்களில் (28.1.2016) செய்தி வெளியாகியுள்ளது. காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் பாராட்டுவோம்.
10, 12 வகுப்புகளில் 100% தேர்ச்சிக் கணக்குக் காட்டுவதற்காக பள்ளிகள் பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபடுகின்றன. இதில் சுயநிதி, உதவிபெறும், அரசுப் பள்ளிகளும் அடக்கம். தனியார் பள்ளிகளில் தொடங்கும் இத்தகைய மோசடிகள் எல்லாப் பள்ளிகளுக்கும் பரப்பப் படுகின்றன. இதற்கு அதிகாரிகள் முழு முதற்காரணம். இவையனைத்தும் கல்வித்துறை அறியாததல்ல. இதற்கு மேற்சொன்ன நடவடிக்கை மட்டும் போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. நாம் பலமுறை வலியுறுத்தியதுதான். மீண்டும் ஒருமுறை நினைவு கூர்வோம்.
அரசுப்பள்ளிகளில் இந்நோய் பரவியுள்ளதற்கு கல்வித்துறை அதிகாரிகளின் நெருக்கடிகளே காரணம். மாற்றுத் திறனாளிகள் இணைந்த ஒருங்கிணைந்த கல்வி முறையில் 100% தேர்ச்சிக்கு மிரட்டுவது அபத்தம். இருப்பினும் அதுதான் நடக்கிறது.
முறைகேடுகள் சிலவற்றைப் பட்டியலிடுவோம்.
- 9, 11 ஆகிய வகுப்புகளில் பெயிலாக்குதல்; மாற்றுச் சான்றிதழ் வழங்குதல்.
- பெற்றோர்களை அழைத்துப் பேசி சமரசம் செய்தல்.
- இம்மாதிரியான ‘கட்ட பஞ்சாயத்துகளை’ பெற்றோர் ஆசிரியர் கழகம் முன் நின்று செய்கிறது.
- இவர்களை வேறு பள்ளிக்கு அனுப்புதல்; தனித் தேர்வராக்குதல்.
- 9, 11 வகுப்புகளில் 10, 12 வகுப்புப் பாடங்களை நடத்துதல்.
- காப்பியடித்தல் உள்ளிட்ட தேர்வு மைய முறைகேடுகள்.
- 1 முதல் 8 ஆம் வகுப்புகள் முடிய நுழைவுத்தேர்வு நடத்துவதை கல்வி உரிமைச் சட்டம் 2009 தடை செய்கிறது. இதை மீறும் பள்ளிகள் ஏராளம்.
- 9 ஆம் வகுப்பு இச்சட்டத்தின் கீழ் வராது. எனவே பெயிலாக்குவதையும் நுழைவுத்தேர்வு நடத்துவதையும் தடுக்க வழியில்லை. (வரவிருக்கும் 5 ஆம் வகுப்பிலிருந்து பெயிலாக்கும் சட்டத்திருத்தம் வருண, மநு சாஸ்திரங்களின் பிரதிபளிப்பு என்பதை சொல்லத் தேவையில்லை.)
- 11 ஆம் வகுப்புச் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடு. பத்தாம் வகுப்பில் 400, 450 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே இடமளிப்பது. அரசுப்பள்ளிகள் கூட இச்செயலைச் செய்கின்றன. 100% தேர்ச்சிக்காக 69% இடஒதுக்கீடு என்னும் சமூகநீதி பலியிடப்படுகிறது.
- விதிகளுக்குப் புறம்பாக, எழுத்துப் பூர்வமான உத்தரவுகள் ஏதுமின்றி விடுமுறைகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகள்.
100% தேர்ச்சியைக் காட்டும் பள்ளிகளை முறையாக ஆய்வு செய்தாலே இம்மோசடிகளை எளிதில் கண்டுபிடுக்க முடியும். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். பெரும்பாலான பள்ளிகள் மோசடிகள் மூலமே 100% ஐ எட்டுகின்றன.
9, 11 வகுப்புகளில் நடைபெற்ற சேர்க்கை, இடைநிற்றல், தேர்ச்சிப் பெறாதவர்கள், மாற்றுச் சான்று பெற்றவர்கள், அவர்களில் வேறு பள்ளிகளில் சேர்ந்தவர்கள், அதற்கான உண்மையான காரணம், தனித்தேர்வராக தேர்வை எழுதியவர்கள் போன்ற புள்ளிவிவரங்கள் இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும்.
10, 12 வகுப்புகளின் பாடங்களை 9, 11 ஆகிய வகுப்புகளில் நடத்தப்படுவதைத் தடுக்கக் கல்வித்துறை எத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது? இதனைத் தடுத்தால் நாமக்கல், ராசிபுரம் ‘கோழிப்பண்ணை’ப் பள்ளிகளும் தமிழகமெங்கும் உள்ள இதன் கிளைகளும் வீழ்ந்துவிடும். இதுவும் 100% தேர்ச்சி மோசடியோடு இணைந்த ஒன்றுதான். கல்வித்துறையில் இந்த முயற்சிகளைத் தடுக்கும் சக்தி எது?
கொசுறு செய்தி:
நேற்று (28.12.2016) சிறப்பு வகுப்புக்கு தாமதமாக வந்த 9 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் அடித்ததாகவும் அது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகாரளித்ததாகவும் ஒரு செய்தி வெளியானது.
இரண்டாம் பருவ மற்றும் அரையாண்டு விடுமுறையில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு எழுத்துப் பூர்வ அனுமதியின்றி சட்டப் பூர்வமற்ற வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த நெரத்தில் நிகழும் அசம்பாவிதங்களுக்கு சம்மந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பாக்கப்படுவார். அதிகாரிகள் மிக எளிதாக தப்பித்துக் கொள்வர்.
இந்நிலையில் 9 ஆம் வகுப்பிற்கு எதற்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது என்பதை விசாரித்தால் உண்மை விளங்கும். அவர்களுக்கு முதல் பருவம் முடிந்தவுடன் 10 ஆம் வகுப்புப் பாடங்களை தொடங்கி விடுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக