சனி, டிசம்பர் 17, 2016

60. வகுப்புவாத வன்முறையை எதிர்கொள்ள கருத்தாயுதம்

60. வகுப்புவாத வன்முறையை எதிர்கொள்ள கருத்தாயுதம்(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்)மு.சிவகுருநாதன்(சிந்தன் புக்ஸ் டிசம்பர் 2015 -ல் வெளியிட்ட க. மாதவ் மொழிபெயர்ப்பில் டாக்டர் பாலகோபாலின் ‘கருத்தாயுதம்: வகுப்புவாதத்தை எதிர்கொள்ள’ ‘கட்டுரைத் தொகுப்பு பற்றிய பதிவு இது.)       பாலகோபால் இறந்த பிறகு (அக். 08, 2009) அவரது கட்டுரையையும் நேர்காணல் ஒன்றையும் ‘வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்…’ என்னும் குறுநூல் வெளியானது. அவரது தெலுங்குக் கட்டுரைகள் மாதவ் நேரடியாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில் 36 கட்டுரைகள் உள்ளன. அ.மார்க்ஸ் நீண்ட முன்னுரையும் பின்னுரையும் வழங்கியுள்ளார். 1983 தொடங்கி 2009 வரை குறிப்பாக பாலகோபாலின் இறுதி பத்தாண்டுகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. ஹிந்து தர்மம் – ஜனநாயகம், இந்துத்துவம் – கல்வி, மைனாரிட்டிகள் – சங் பரிவாரம் என்கிற பிரிவுக்குள் இந்நூல் கட்டுரைகள் அடக்கப்படுகின்றன.

      மனித உரிமைப்பணிகள் மிகவும் சிக்கலான நெருக்கடிகளுக்கு உள்ளாகக்கூடிய ஒன்று. இருப்பினும் கணித அறிஞராகும் வாய்ப்பைப் புறந்தள்ளி மனித உரிமைப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பாலகோபால். இதற்காக இவர் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். நக்சல்பாரி இயக்கத்துக்குச் சார்பான ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழக’த்தில் (APCLC) இணைந்து செயல்பட்டு, அறம் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக விலகி ‘மனித உரிமை மேடை’ (HRF) என்னும் அமைப்பை உருவாக்கி இறுதிவரை செயல்பட்டவர். பல்வேறு தாக்குதல்களுக்கு இலக்கானவர். (அ.மார்க்ஸின் முன்னுரை, பக். 09, 10)

     ஆந்திர மாநில குடியுரிமைகள் சங்கத்தின் மாத வெளியீடான ‘ஸ்வேச்ச’ இதழில் எழுதிய கட்டுரைகள், அறிக்கைகள் ஆகிய கொண்ட இத்தொகுப்புக் கட்டுரைகளை,

 •  இந்துத்துவத்தின் அடைப்படை அணுகல் முறைகளின் ஊடாக வெளிப்படும் அவர்களின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகள்.
 • மனுதர்மம் குறித்த் மிகவும் விரிவும் ஆழமும் மிக்க ஒரு ஆய்வு.
 • கல்வித்துறையில் இந்துத்துவத்தின் செயல்படுகள்.
 • பா.ஜ.க. முதன்முறை ஆட்சியில் அமர்ந்தது தொடங்கி பாலகோபால் மறையும் வரை சங்கப் பரிவாரங்கள் மேற்கொண்ட செயல்பாடுகள், தொடுத்த தாக்குல்கள், தலைவர்கள் பேசிய பேச்சுகள் ஆகியவற்றை நுண்மையாக ஆய்வு செய்த கட்டுரைகள்

என மேலோட்டமாக இந்நூலை நான்கு பகுதிகளாக பகுப்பதாக அ.மார்க்ஸ் முன்னுரையில் சொல்கிறார். (பக். 12)

     “ஒன்றைச் சொல்லவேண்டும். பிரச்சனைகளை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளக்கூடாது. ஆனால் அந்த ஆபத்து நம்மிடம் நிறையவே குடிகொண்டுள்ளது”, (பக். 17) என்று சொல்லி, மனு தர்மத்தில் குறிப்பிடப்படும் ‘தருமம்’ என்னும் கருத்தாக்கம் இவர்களின் நவீன இந்துத்துவத்தில் ‘தேசம்’ என்கிற கருத்தாக்கத்தால் மாற்றீடு செய்யப்படுவதை” பாலகோபால் கண்டடைவதையும் வெளிப்படுத்துகிறார்.

     அ.மா.வின் பின்னுரை 2009 2015 காலகட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்களை விரிவாகப் பதிவு செய்கிறது. இவற்றையும் இணைத்து வாசிப்பது சூழலை நன்கு புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
     மத்திய வகுப்புவாத மோடி அரசு கார்ப்பரேட்களின் பிடியில் சிக்கியுள்ளது. கார்ப்பரேட்களைச் சரிக்கட்டும் முயற்சியில் அரசும் தனக்கான சட்டங்களை இயற்ற வைப்பதிலும், வளைப்பதிலும் கார்ப்பரேட்களும் ஒருவரை ஒருவர் மிஞ்சிக் கொண்டுள்ளனர்.

 • தேசிய விவாதங்கள் இன்றியே பல மாற்றங்கள்.
 • சிறுபான்மையினரைச் சீண்டுதல்.
 • சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்கள்.
 • நிறுவனச் செயல்பாடுகளில் அரசுத் தலையீடுகள்.
 • அயலுறவுக் கொள்கைகளில் முதிர்ச்ச்சியின்மை.

      என்பது போன்ற மத்திய அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்கள் விவரிக்கப்படுகின்றன. நாட்டில் தலைவிரித்தாடும் வகுப்புவாத பாசிசத்திற்கு எதிராக இந்திய எழுத்தாளர்கள் விருதுகளைத் திரும்ப அளிப்பதையும் இப்பின்னுரை சுட்டுகிறது. (பக். 341)

     “இந்துத்துவம் இவ்வளவு வேகமாக விரிவடைவதற்கு எண்பதாண்டுகளுக்கு மேலாக இந்துமத நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். சின் துணை ஒரு முக்கியக் காரணம். இதர காரணங்களில் வெளிநாடுகளில் இருந்து குவியும் கோடிக்கணக்கான பணமும் ஒரு முக்கிய காரணமே” (பக். 31) என்று தெலுகு முன்னுரையில் பிஜூ மேத்யூ சுட்டுவது குறிப்பிடத்தக்கது.
 
      வகுப்புவாத அரசின் செயல்பாடுகளையும் அவர்களது கோட்பாடுகளையும் மிகத் துல்லியமாக விவரிக்கும் பண்பும் அவற்றின் உண்மை நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் முறையும் பாலகோபாலின் கட்டுரைகளில் துலக்கமடைகின்றன.

     “வகுப்புவாத அரசு என்பது மதப்பணபு கொண்ட அரசு எனப் புரிந்துகொண்டால் இந்தக் குழப்பம் வரும். வகுப்புவாத அரசை மதக் கருத்தியலைப் பயன்படுத்தும் மதச்சார்ப்பற்ற அரசாகப் புரிந்துகொண்டால் எந்தக் குழப்பமும் இல்லாமல் விஷயம் புரிந்துவிடும். பௌத்தத்தின் பெயரால் யுத்தங்களை எவ்வாறு செய்ய முடிகிறதோ, கிருத்துவத்தின் பெயரால் முதலாளித்துவ கோடீஸ்வரர்களை எவ்வாறு ஆதரிக்க முடிகிறதோ, இஸ்லாத்தின் பெயரால் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடிமையாக்கும் சுரண்டல் அமைப்பை எவ்வாறு நிலைநிறுத்த முடிந்ததோ, துரும்பிலும் தூணிலும் இருக்கிறார் என கடவுளை குறிப்பிடும் இந்து மதத்தின் பெயரால் ராமன், குறிப்பிட்ட மசூதி இருக்கிற இடத்திலேயே பிறந்தார் என எவ்வாறு கூறமுடிகிறதோ அப்போது புரிந்துவிடும்” (பக். 67) என்று மிக எளிமையான விளக்கங்களை அளிக்கிறார் போராளி பாலகோபால்.

       பொது சிவில் சட்டம் பற்றிச் சொல்லும்போது, “இஸ்லாம் திருமண உறவை வெறும் ‘செக்யூலர் கான்ட்ராக்ட்’ ஆகக் கருதுகிறது. இந்துத்துவம் அதனை புனித உறவாகக் கருதுகிறது. இரண்டும் பெண்ணுக்கு திருமண வாழ்க்கையில் வன்முறையிலிருந்து பாதுகாப்பை ஏற்படுத்த முடியவில்லை என்கிற கசப்பான உண்மைக்குத் தீர்வு காணவேண்டும். ஆனால் அவர் கருத்துகளை இவர்களோ இவர் கருத்துகளை அவர்களோ ஏற்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?”, (பக். 147) என்று வினா எழுப்புகிறார்.

      “இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி இந்துத்துவ வாதிகளுக்கு தமது சொந்த அஜெண்டா எப்போதையிலிருந்தோ இருக்கிறது. அந்த அஜெண்டாவில் ஜனநாயகம் கடுகளவும் இல்லை. சக்திமிக்கதான தேசிய அரசு, அகண்டமான இந்து ஆதிக்கம், நிலையான படிநிலை அமைப்பு, பத்திரமான பிராமணியப் பண்பாடு – இதுதான் அவர்களது கொள்கை. உலகமயத்திற்குத் தேவையான நிலையாண்மைக்கு இந்தக் கொள்கை கச்சிதமாகப் பயன்படும். ஆகையால் அவர்களுக்கு இப்போது சர்வதேச சூழலும் சாதகமாக இருக்கிறது”, (பக். 194) என்று ஆழமான கருத்தை வெளிப்படுத்துகிறார்.

     “புதிய பொருளாதார முறையில் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாமல் செய்து, விலைவாசியை உயர்த்தி, சமூக சேமநல செலவினங்களைக் குறைத்து, குறைந்தபட்ச வாழ்வுரிமைகளையும் மக்களுக்கு இல்லாமல் செய்யும்போது நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஏதோ ஒருவகையில் விமர்சித்தன. ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு நாடாளுமன்றத்தில் உத்தரவாதமாக நின்று உங்கள் பொருளாதாரக் கொள்கை ‘பேஷ்’ என பி.வி.நரசிம்மராவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தது பாரதிய ஜனதா கட்சி மட்டுமே”, (பக். 211,212) என்று குறிப்பிடுவதன் மூலம் வகுப்புவாதத்திற்கும் மக்கள் விரோத கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பு விளக்கப்படுகிறது.

     இவர்களுடன் அரசுகள், நீதிமன்றங்கள், காவல்துறை, நிர்வாகத்துறை போன்ற அனைத்து அரசு எந்திரங்களும் சமரசம் செய்யும் போக்கை கடைபிடிக்கின்றன. இதனால்தான் பாபர் மசூதிப் பிரச்சினை உருவானதும் இடிக்கப்பட்டதும் நிகழ்ந்தது என்பதைச் சுட்டிக்காட்ட அறிஞர் பாலகோபால் தவறுவதில்லை.

 • கிருத்தவர்கள் தேசபக்தர்கள் இல்லை என பிரச்சாரம் செய்வதன் மூலம் பெரும்பான்மை மதத்தினரிடம் துவேஷத்தைத் தூண்டுதல்.
 • சிறுபான்மைகளின் ஜனத்தொகை பெருகிவிடுகிறதென இந்துக்களின் ஜனத்தொகை குறைகிறதென பிரச்சாரம் செய்வதன் மூலம் இந்துக்களின் அச்சத்தைப் பெருக்குவது.
 • ஆட்சி இயந்திரத்தில் நுழைந்து போலீஸ், அரசு இயந்திரத்தில் மதத் தத்துவத்தைப் பெருக்குவது.
 • மெஜாரிட்டி மதத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு கத்தி, கட்டாரிகள் பயன்படுத்தப் பயிற்சிக் கொடுப்பது.
 • ஒவ்வொரு சிறு சம்பவத்திற்கும் மதச்சாயம் பூசி பிரச்சாரம் செய்வதன் மூலம் மாறுபட்ட மதத்தினரிடையே இடைவெளியைப் பெருக்குவது.”, (பக். 228)

     என்று தமிழகத்தில் இந்துகளுக்கும் கிருத்தவர்களுக்கும் நடந்த மோதல்கள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி வேணுகோபால் 1982 –ல் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டப்படுகிறது.

    மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ‘குஜராத் மாதிரி’யைச் செயல்படுத்த இந்துத்துவம் முனைகிறது. மும்பையில் சிவசேனை அரங்கேற்றிய 1992 -93 படுகொலைகள், ராஜஸ்தான் மாநிலத்தில் பஜ்ரங்தள் 40 லட்சம் ‘திரிசூலங்கள்’ விநியோகிப்பது போன்ற அபாயங்களை எச்சரிக்கச் செய்கிறார் பாலகோபால்.

    “’திரிசூலங்கள்’ என்றதும் சைவத் தலங்களில் காணப்படும் சந்நியாசிகள் கைகளில் இருக்கும் வேலைக்காகாத இரும்புக் கம்பிகள் என நினைக்காதீர். பஜ்ரங்தள் விநியோகிக்கும் திரிசூலங்கள் பிச்சுவா கத்திகள் அளவில் இருக்கும் உறுதியான ஆயுதங்கள். அதனை திரிசூலம் என்பதைவிட மூன்று முனைகள் கொண்ட ஈட்டிகள் என்பதே சரியாக இருக்கும். அதற்குத் திரிசூலம் என பெயர் வைப்பதற்குப் பின்னால் தெளிவான சிந்தனை இருக்கலாம். சீக்கியர்கள் கிர்பான் வைத்திருப்பது குற்றமாகாததைப்போல திரிசூலம் வைத்திருப்பது குற்றமல்ல என டபாய்ப்பதும் சாத்தியமே”, (பக். 267,268) என்றும் பாலகோபால் விளக்குகிறார்.

  கல்வியில் இந்துத்துவம் செய்யும் தலையீடுகள் குறித்த ஆறு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. “சங்பரிவாரம் திருத்தி எழுத எண்ணும் வரலாற்றுக் கண்ணோட்டத்தின் பெருமதிகள் மனிதத்தன்மையற்றவை, ஜனநாயகக் கண்ணோட்டம் விரும்பத்தகாத எதிர்கால லட்சியத்திலிருந்து பிறந்தவை. அது மட்டுமன்றி அவர்களின் கற்றல் முறையில் அறிவியல் நேர்மை பூஜ்யம்”, (பக். 179) என்று பாலகோபால் குறிப்பிடுகிறார்.

    பாடநூல்களில் வரலாற்றில் இந்த்துத்துவ ஆட்களில் தலையீடுகளைப் புரிந்துகொள்வது முதல்படி. இதன்மூலமே அவர்களை எதிர்கொள்வதும் அவற்றிற்கான கருத்தியல் தயாரிப்பும் நமக்குச் சாத்தியப்படும் என்பதையும் விளக்குகிறார். வகுப்புவாதத்தை புரிந்துகொள்ளவும், அவற்றை எதிர்கொள்ளவும் இந்நூல் பேருதவி புரியும்.

    நூலில் உள்ள பிழைகள் நம்மை திகைக்க வைக்கின்றன. அவசரகதியில் தயாரிக்கப்பட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வல்லினம் மிகாத மென்மைப் போக்கு ஏனென்று தெரியவில்லை. இந்நூல் பக்கங்களை அதற்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தலாம் போலுள்ளது. அடுத்தப் பதிப்பிலாவது சரியாகட்டும்.கருத்தாயுதம் – வகுப்புவாதத்தை எதிர்கொள்ள…

(தெலுங்கிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பட்டக் கட்டுரைகள்)

டாக்டர் பாலகோபால்

தமிழில்: க. மாதவ்

முதல் பதிப்பு: டிசம்பர் 2015

பக்கம்: 344

விலை: ரூ. 250வெளியீடு:

சிந்தன் புக்ஸ்,

132/251, அவ்வை சண்முகம் சாலை,

கோபாலபுரம்,

சென்னை – 600086.செல்: 9445123164

மின்னஞ்சல்: kmcomrade@gmail.com

1 கருத்து:

thamizhasiriyar namathu சொன்னது…

//நூலில் உள்ள பிழைகள் நம்மை திகைக்க வைக்கின்றன. அவசரகதியில் தயாரிக்கப்பட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வல்லினம் மிகாத மென்மைப் போக்கு ஏனென்று தெரியவில்லை. இந்நூல் பக்கங்களை அதற்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தலாம் போலுள்ளது. அடுத்தப் பதிப்பிலாவது சரியாகட்டும்.//

கருத்துகளுக்காகப்பொறுத்துக்கொள்வோம்.

கருத்துரையிடுக