வியாழன், டிசம்பர் 29, 2016

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை…

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை…

மு.சிவகுருநாதன்

     அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா தேர்வாகியிருக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான்; அதிர்ச்சியளிக்கக் கூடியதல்ல. விரைவில் தமிழக முதல்வராகக் கூட தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழக அரசியலைக் கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல. இப்படி நடக்காமல் இருந்தால்தான் வியப்படைய வேண்டியிருக்கும்.

        சட்டப்படியான தகுதிகளைத் தவிர தார்மீகத் தகுதிகள் பற்றி விவாதிக்க ஜனநாயகத்தில் இடமில்லை. மக்களின் தீர்ப்பு இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கு உள்ளது. பொதுச்செயலாளாராக யாரையும் தேர்வு செய்யலாம், என்பதைப் போல முதல்வராக அதாவது சட்டமன்றக் கட்சித் தலைவராக யாரையும் தேர்வு செய்யும் உரிமை அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கு உண்டு. அதற்கு சட்டமன்ற உறுப்பினராகக் கூட இருக்க வேண்டியதில்லை என்பதே சட்டம். ஆறு மாதங்களுக்குள் சட்ட மன்ற உறுப்பினரானால் போதும் என்பதுதானே சட்டம்?

            இந்த நிலையில் இரு செய்திகளை மட்டும் சொல்லத் தோன்றுகிறது.

        ஒன்று: இப்போதைக்கு வி.கே.சசிகலா முதல்வராக எவ்விதத் தடையும் இல்லை என்றாலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் காத்திருப்பது அவருக்கு மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கும் தமிழக அரசிற்கும் நல்லது. மீண்டும் ஒரு அலங்கோலம் நடக்காமல் தவிர்க்க இது உதவும்.

        ஜெ.ஜெயலலிதா மரணடைந்தாலும் அந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் வர இருக்கும் தீர்ப்பிலிருந்து நழுவமுடியாது என்பதுதானே உண்மை. வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதக, பாதகமாக இருக்கும் என்பது இங்கு முக்கியமல்ல. கட்சிப்பதவி தீர்ப்பால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் ஆட்சிப்பதவி அவ்வாறானது அல்ல. அரசியல் சாசனச் சிக்கல் ஏற்பட மீண்டும் வழிவகுக்க வேண்டாம்.

      இரண்டு: சசிகலா ஜெயலலிதா பாணி அரசியலைத் தவிர்த்து தனக்கென ஒரு தனித்த பாணியை கைக்கொள்ள வேண்டியது அவசியம். இப்போதைய நிலையை ஓரளவிற்காவது மாற்ற முயல்வது நாட்டுக்கு நல்லது. இதற்கான சாத்தியங்களை வருங்காலம்தான் உருவாக்கும்.

1 கருத்து:

Ravi சொன்னது…

தியாக செம்மல், அமைதியின் மறு உருவம், நாடாளும் சிங்கம் எங்கள் புரட்சி தோழி சின்ன அம்மா சசிகலா அவர்களை ....நாங்கள் ஒரு குவாட்டர் + ஒரு பிரியாணி + 2000 ரூபாய் (புது நோட்டு தான்) வாங்கிக்கொண்டு நிரந்தர முதல்வர்-ஆக்க போகிறோம் .. ஏன் நாங்க வருங்கால பிரதமர் .. மன்னிக்கவும் .. வருங்கால நிரந்தர பிரதமர் ஆகுவோம்

கருத்துரையிடுக