வியாழன், டிசம்பர் 01, 2016

இன்குலாப்: மானுடம் பாடிய கவிஞன்


இன்குலாப்: மானுடம் பாடிய கவிஞன்


(டிச. 01, 2016, இன்று மரணித்த புரட்சியாளர், சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் தோழர் இன்குலாப் அவர்களுக்கு இறுதி அஞ்சலி) 


மு.சிவகுருநாதன் 

“இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் எழுச்சி முழக்கம் இன்று
புதிய பொருள் பெறுகின்றது”,

(பேரா. அ.மார்க்ஸ் முகநூலில்…)

“பொன்னேரி சிவந்ததடா - இருள்பொசுங்கும்
பொழுதொன்று விடிந்ததடா
என்று குரல் எழுப்பிக் கொடிய அடக்குமுறை நிலவிய அவசரநிலைக் காலம் உட்பட ,வாழ்நாள் முழுவதும் சொந்த வாழ்க்கையைப் பெரிதாக எண்ணாமல்,பொதுவாழ்க்கையையே பெரிதும் நேசித்த புரட்சியாளர், சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் தோழர் இன்குலாப்”,

(பேரா. சே.கோச்சடை முகநூலில்…)

“இன்குலாப் எழுதும் கவிதைகள், கவிதைகளே அல்ல என்று யாரோ ஒருவர் கூறிவிட்டாராம். போகட்டும். இன்குலாபே ஒரு கவிதைதான் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை போலும்”,

(எஸ்.வி.ராஜதுரை, ‘’சாட்சி சொல்ல ஒரு மரம்’ தொகுப்பிலுள்ள ‘இன்குலாப் என்னும் மோகனப் புன்னகை’ கட்டுரை, விடியல் வெளியீடு, ஆகஸ்ட் 2012)

       சில மாதங்களுக்குமுன்பு குடந்தையில் அ.மார்க்ஸ் உடனான சந்திப்பில் தோழர் நெடுவாக்கோட்டை உ.ராசேந்திரன் உடல்நலம் குறித்த பேச்சு வந்தது. ராசேந்திரனுக்கு ஒரு விழா எடுப்போம். அதற்கு இன்குலாப்பை அழைத்து வருவோம், என்றார் மார்க்ஸ். அவருடைய உடல்நலம் ஒத்துழைக்குமா என்ற சந்தேகத்தைச் சொன்னபோது, ராசேந்திரன் இன்குலாப் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர். இன்றும் அவரை வழிக்காட்டியாக எற்பவர். இதைவிட வேறு மகிழ்ச்சி அவருக்கு இருக்கமுடியாது, என்றும் சொன்னார். விழாவிற்கான ஏற்பாடுகள் ஏதும் நடக்கவில்லை. ஆனால் இன்று இன்குலாப் நம்மிடம் இல்லை.

     “மனுசங்கடா நாங்க மனுசங்கடா”, என்னும் புகழ்மிக்க பாடலை எழுதியவர் இன்குலாப். அதைப் பட்டி தொட்டியெல்லாம் கணிரென்று தனது குரலால் கொண்டு சேர்த்த பேரா.கே.ஏ.குணசேகரன் ஆகிய இருவரும் இன்று நம்மிடம் இல்லை. காலம் நம்மிடமிருந்து இவர்களைப் பிரித்துவிட்டது. ஆனால் இவர்களது படைப்புகள் என்றும் நிலைக்கும். அப்பாடலைக் கீழேத் தருகிறேன்.

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்த்தில தர்ம அடிய வாங்கி கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க — டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா”, (இன்குலாப்)

        “சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இன்குலாப் எந்த மத அடையாளங்களையும் தரித்துக் கொண்டதில்லை. சாகுல் ஹமீது எனும் தன் இயற்பெயரைக் கூட அவர் எந்நாளும் முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை”, என்று பேரா. அ.மார்க்ஸ் முகநூல் பதிவில் குறிப்பிடுகிறார்.

      “தனது இரண்டு ஆண் மக்களின் படிப்பு குறித்தோ அவர்களது எதிர்காலம் குறித்தோ எந்த அக்கரையும் அவரால் எடுக்க முடியவில்லை. ஆண்மக்களில் ஒருவனுக்கு செல்வன் என்னும் இனிய தமிழ்ப் பெயரையும்ம் மற்றவனுக்கு ‘இன்குலாப்’ என்னும் புரட்சிப் பெயரையும் சூட்டிய அவர் புரட்சி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்த பிற பேராசிரியர்களைப் போலத் தனது சொந்தப் பிள்ளைகளுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கித் தரவில்லை. போதாதற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறந்த பெண் குழந்தை வேறு. கடன் தொல்லை. மாத ஊதியத்துடன் பிடிப்புகள் போக, சம்பள தினங்களில் வெறுங்கையுடன்தான் வீட்டுக்குத் திரும்புவார்.. எனினும் அவரது இல்லம் ‘திறந்த வீடாக’ இருந்தது. உடல் நோவும் மன வேதனையும் ஓர் புறமிருந்தாலும், வந்தவர்க்கெல்லாம் அருஞ்சுவை உணவு வழங்கி வந்த அவரது துணையாரின் ஈகைப்பண்பு பாடலுக்குரியது”, என்று எஸ்.வி.ராஜதுரை பதிவு செய்கிறார். (‘’சாட்சி சொல்ல ஒரு மரம்’ தொகுப்பிலுள்ள ‘இன்குலாப் என்னும் மோகனப் புன்னகை’ கட்டுரை)

       இசை மற்றும் நல்லத் திரைப்படங்களில் அவருக்கிருந்த ஈடுபாடு, ஜானிகான்கான் தெருவின் இரைச்சல், அழுக்குக்கும் இடையில் அவரிடம் வலுப்பெற்ற சூழலியல் அக்கறை, ஜன்னலுக்கு வெளியிருந்த அசோக மரம், அதில் இருக்கும் பறவைகள், அம்மரம் வெட்டப்பட்டபோது அவருடைய மனவேதனையை வெளிப்படுத்திய ‘சாளரம்’ இதழில் எழுதிய கவிதை ஆகியவற்றை எஸ்.வி.ஆர். பெருமை பொங்க வெளிப்படுத்துகிறார். அறுபதாம் வயதில் அற்புதமான நாடகாசிரியராக மலர்ந்ததையும் குறிப்பிடுகிறார். (மேலே குறிப்பிட்ட அதே நூல்.)

      “என்னுடைய முதல் நூல் 'எதுகவிதை' யை நான் அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தேன். அந்த நூலுக்கு அவர்தான் முன்னுரையும் எழுதியிருந்தார். அந்த நூலில் நான் அன்றைக்கு இருந்த இளமைத் துடிப்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாரதிக்குப் பிந்திய மகாகவி என அவரை நான் குறிப்பிட்டிருந்தேன். என்னைப் போன்ற அன்றைய இளைஞர்கள் பாரதிக்குப் பின் சம கால அரசியலில் அச்சமின்றி நேர்மையாய்த் தன் குரலை ஒலித்த ஒரு பெருங் கவியாய் அவரைத்தான் கண்டோம். பாரதி காலத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் வடிவம் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்றால் இன்குலாப் காலத்தி்ய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை நக்சல்பாரிகள்தான் முன்னெடுத்திருந்த சூழலில் அவர் எள்ளளவும் தயக்கமின்றி அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

     அன்று அப்படி நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அத்தனை எளிதானதல்ல. கடும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த எந்த அச்சமும் இன்றி அவர் தன் கவிதைகளையே ஆயுதமாக்கிக் களத்தில் நின்றார்” என்று அ.மார்க்ஸ் தனது முகநூல் அஞ்சலிப் பதிவில் எழுதுகிறார்.

      இன்குலாப்பின் ‘ஶ்ரீ இராஜராஜேச்வரியம்’ கவிதைக்காக தூற்றப்பட்டது, அவரது கவிதை பாடநூல்களிலிருந்து நீக்கப்பட்டது, இராஜராஜனுக்கு மு.கருணாநிதி சிலையெடுத்த நிகழ்வில் அக்கவிதையை உ.ராசேந்திரனுடன் விநியோகித்தது, போலீசின் கைகளில் சிக்காமல் சைக்களில் தப்பிவந்தது ஆகியவற்றை அ.மார்க்ஸ் தனது தீராநதிக் கட்டுரையில் விரிவாக எழுதியிருப்பார். (அ.மார்க்ஸ், ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ உயிர்மை வெளியீடு, ஜூன் 2016)

      நக்சலியத்தின் குறுங்குழு ஒன்றில் செயல்பட்டாலும் மானுடம் பாடிய கவிஞன் இன்குலாப். இலக்கிய வடிவங்களை மக்களுக்காக பயன்படுத்திய மகத்தான கலைஞன். தமிழ் தேசியத்தை இறுதியில் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்ட நிலையிலும் புறக்கணிக்க முடியாத ஒரு ஆளுமையை நாம் இழந்துவிட்டோம்.

      “தமிழகத்திலிருந்த ஒட்டுமொத்த நக்சலைட் இயக்கத்தை எடுத்துக் கொண்டால், புரட்சிக்கனல் வீசும் கவிதைகளை, சமூக மாற்றத்துக்கான உள் உந்துதல் தரும் கவிதைகளை எழுதுவதில் ஈடிணையற்றவராக இருந்த ஒரே கவிஞர் இன்குலாப்தான்”, என்று எஸ்.வி.ஆர். சொல்வது மிகப்பொருத்தமானது.

      எஸ்.வி.ஆர். மேலும் சொல்கிறார். “சாதி ஒழிப்பை, தலித் மக்களின் உரிமையை, விடுதலையைத் தனது திட்டத்தின் மையப் பகுதியாகக் கொள்ளாத எந்தப் புரட்சிகர இயக்கத்தாலும் இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்க முடியாது என்னும் கருத்தை எனக்குத் தெரிய 1980 களிலிருந்தே சொல்லி வந்தவர்”.

      இன்குலாப்பிற்கு செவ்வணக்கம்.

     அஞ்சலியாக அவரது கவிதை வரிகள் சில.“கடந்த ஆயிரம் ஆண்டுகளை

அப்படி ஒன்றும் கைகழுவ முடியாது

மகுடங்கள் துருப்பிடித்திருக்கலாம்

உறைவாள்கள் முனை முறிந்திருக்கலாம்

சபைத் தலைவர்களைத் திருவுளத் தேர்வுசெய்யும்

குடங்கள் ஓவாய் உடைந்திருக்கலாம்

ஓலைகளைச் செல்லரித்திருக்கலாம்

தஞ்சையிலிருந்து காந்தளூர் செல்லும்

சாலைகளில் குளம்பொலிகள் கேட்காதிருக்கலாம்.

அலைமோதும் துறைதோறும்

புலிக்கொடிகள் புரளாதிருக்கலாம்

இருந்தாலும் கடந்த ஆயிரம் ஆண்டுகளை

அப்படி ஒன்றும் கைகழுவ முடியாது.

………………………………………………………………………………………………..

ஆயிரம் ஆண்டுகள் ஒடுங்கிக் கிடந்த

பெருமூச்சும் கண்ணீரும் என்னுள் பீறிடுகின்றன.

ஆயிரம் ஆண்டு மூத்த என் தங்கையின்

காலில் கட்டிய சதங்கை

இந்தப் பெரிய கோயில் முற்றத்தில்

அழுது கொண்டிருக்கிறது இன்னும்

இதனுடைய ஒவ்வொரு கல்லிலும்

என் சகோதரர் தசைகள் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.

வல்லாங்கு செய்யப்பட்டுப் பிறந்து கொண்டிருக்கும்

நான் கூசி நிற்கிறேன்.

அடிமைச்சூடு பொறிக்கப்பட்ட

என் முதுகுப் புண் இன்னும் ஆறவில்லை

இதன் விழிகொள்ளாப் பிரும்மாண்டத்தின் கீழ்

சிறிய தேசங்கள் சிதறிக் கிடக்கின்றன.

……………………………………………………………………………………………………………..

அடக்கப்படும் நமது பெருமூச்சு

பற்றி கொள்ளட்டும்

தேவடியாளாக்கப்பட்ட நம் தாய்மார்களின்

ஒவ்வொரு மார்பகமும் பந்தங்களாய் மூளட்டும்

மகுடங்களின் மாயையில் மக்களை மூடும்

சூனியக்காரர்களும் சூனியக்காரிகளும்

சாம்பலாகட்டும் உண்மைச் சரித்திர விழிப்பில்

சொல்வோம் ஆயிரம் ஆண்டுகளாக

அழுகை மொழி மாற்றிக் கொண்டதில்லை.

ஆத்திரமும் கூடத்தான்

தண்ணீர் நிறம் மாற்றிக் கொண்டதில்லை;

ரத்தமும் கூடத்தான்” - கவிஞர் இன்குலாப்

(இக்கவிதை அ.மார்க்ஸின் ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ உயிர்மை வெளியீடு, நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)


நன்றி: அ.மார்க்ஸ், எஸ்.வி.ஆர்., சே.கோச்சடை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக