வெள்ளி, டிசம்பர் 09, 2016

59. பசுமைப் புரட்சியின் சோகக்கதை

59. பசுமைப் புரட்சியின் சோகக்கதை

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) 





(வம்சி / பூவுலகு வெளியீடாக ஜூலை 2016 –ல் வந்துள்ள வந்தனா சிவா எழுதிய ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ என்ற நூல் பற்றிய அறிமுகப்பதிவு.)

      இந்தியாவின் உணவுப் பஞ்சத்தை, பட்டினிச் சாவுகளைத் தடுத்து நிறுத்தியது பசுமைப் புரட்சி என்கிற பெரிய பிம்பம் ஒன்றிருக்க, அவற்றிற்குப் பின்னாலுள்ள அரசியல் பற்றும் இந்திய வேளாண்மை நாசமாக்கப்பட்ட அவலத்தை பேசும் இந்நூல் சூழலியர் வந்தனா சிவா அவர்களால் எழுதப்பட்டது. பஞ்சாப்பை உதாரணமாகக் கொண்டு பசுமைப் புரட்சியின் கேடுகள் இங்கு, 7 தலைப்புகளாக விவரிக்கப்படுகின்றன.

      இங்கு ‘வளர்ச்சி’ என்பதே ஒரு வன்முறை. அரசியலில் நேர் எதிர் துருவங்களாக இருக்கும் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் இயற்கையை ஆக்ரமிப்பதன் மூலம், மூலதனத்தைப் பெருக்கி, பொருளுற்பத்தியை அதிகரித்து அமைதிக்கான சூழலை உருவாக்க முடியும் என்று நம்புவது அறிமுகத்தில் சுட்டப்படுகிறது.

    தொழில்நுட்பங்களின் உதவியுடன் இயற்கையின் மீது கட்டுப்பாடு செலுத்தும் பழமைவாத கன்ணோட்டத்தின் ஊடாகவே இங்கு பசுமைப் புரட்சியும் வடிவமைக்கப்பட்டது, பசுமைப் புரட்சி அரசியற் களத்தில் முரண்பாடுகளைக் களைவதற்குப் பதிலாக மோதல்களுக்கு வித்திட்டது, வளமான நிலங்கள் குறைந்துள்ளதும் சூழலியல் தளத்தில் மீண்டும் பற்றாக்குறையைத்தான் தோற்றுவித்துள்ளது எனவும் விளக்கப்படுகிறது.

    நார்மன் போர்லாக், சி.சுப்ரமணியம். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய பசுமைப் புரட்சி ஆதரவாளர்கள், இவர்களுக்குத் துணைநின்ற ராக்பெல்லர் நிறுவனம், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய அரசுகள் அவற்றின் செயல்பாடுகள் முதல் கட்டுரையில் துலக்கம் பெறுகின்றன. இவர்களுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்திய லால் பகதூர் சாஸ்திரி, கே.எம்.முன்ஷி, பொருளாதார அறிஞர்கள் பி.எஸ்.மின்ஹாசீம், டி.எஸ்.சீனிவாஸ் ஆகியோரது கருத்துகளும் எடுத்தாளப்படுகின்றன.

     1889 –ல் இந்திய வேளாண்மையில் வேதியியலைப் புகுத்த ஆங்கில அரசிற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட வோல்க்கர் குறிப்பிடும் கருத்து பாரம்பரிய இந்திய வேளாண்மையின் சிறப்பை எடுத்தியம்புகிறது. “இந்திய வேளாண்மை ஒட்டுமொத்தமாக மிகவும் பழமையானது என்றும் பிற்போக்கானது என்றும் கருதும் கருத்துகளோடு எனக்கு உடன்பாடு கிடையாது; பெரும்பகுதிகளில் அதை மேலும் செழுமையடையச் செய்வது என்பது தேவையற்ற ஒன்று என்று நான் நம்புகிறேன். இந்திய வேளாண்மையில் மேம்பாடு செய்யப் பரிந்துரை செய்வதைவிட ஆங்கில வேளாண்மையில் மேம்பாடு அடையப் பரிந்துரை செய்வது இலகுவான காரியம் என்பதை நான் தைரியமாகக் கூறுவேன்.” (பக். 22)

     தனியார் அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க அரசு, உலக வங்கி ஆகிய மூன்றும் அமெரிக்க வேளாண் மாதிரியை இந்தியாவில் கட்டமைக்க போட்டி போட்டுச் செயல்பட்டனர். 1952 லிருந்து போர்டு நிறுவனமும் அதன் பின்னர் ராக்பெல்லர் நிறுவனமும் களத்தில் இறங்கின. சி.சுப்ரமணியம். எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றோர் இந்தியாவில் இதை நிகழ்த்திக் காட்டினர்.

    பசுமைப் புரட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ‘அற்புத விதைகளி’ன் பின்னாலிருக்கும் எந்திர ரீதியான சிந்தனை கலாச்சார வெறித்தனம் கொண்டது. இதன் மூலம் உள்ளூர் பாரம்பரிய ரகங்கள் ‘பழமையானது’ எனவும் பன்னாட்டு விதை நிறுவனங்களில் உருவாக்கப்பட்ட வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் தேவைப்படும் நவீன ரகங்கள் ‘உயர்வானவை’, ‘முன்னேறியவை’ எனவும் கட்டமைக்கும் ஆபத்து நடந்தேறியது.

    1967 –ல் புதுதில்லியில் நடந்த கூட்டத்தில் பேசிய நார்மன் போர்லாக், “நான் மட்டும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்து இந்திய விவசாயிகளுக்கு வேதி உரங்களைக் கொடுங்கள் என்று கத்துவேன்” என்று சொல்வதிலிருந்து பசுமைப் புரட்சியின் உண்மை முகம் விளங்கத்தான் செய்கிறது.

    வேதி உரங்கள் சூழலியல் சீர்கேட்டுக்குக் காரணமாக அமைந்தவை. இவை புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான நைட்ரஜன் ஆக்சைடை வெளிப்படுத்துகின்றன. நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தியதன் மூலம் வேதி உரங்கள் உணவுப் பாதுகாப்பிற்கும் கேடு விளைவித்துள்ளன.

    பஞ்சாப் என்பது சட்லெஜ், பியாஸ், ரவி, செனாப், ஜீலம் ஆகிய சிந்துவின் ஐந்து கிளைநதிகள் பாயும் வளமான மண் கொண்ட பூமி. பசுமைப் புரட்சியின் ‘அற்புத விதைகள்’ சென்ற இடமெல்லாம் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தின. இந்த நிலை பெரும் அணைகளுக்கும் நீர்த்தகராறுகளுக்கும் வழிவகுத்தது. இது சூழலியல் பாதிப்புகளையும் அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் – அரியானா மாநிலங்களுக்கிடையேயான நீர்ப்பங்கீட்டுச் சிக்கல்கள் விரிவான விளக்கப்படுகின்றன.

     பசுமைப் புரட்சிக்குப் பஞ்சாப் அளித்த விலையும் பாதிப்பும் அளப்பரியது. மூன்று வகையான முரண்பாடுகள் இணைந்து இன்றைய பஞ்சாப் நெருக்கடி உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    ஒன்று: பசுமைப் புரட்சியின் அடைப்படையில் உருவான நதிநீர்த் தகராறுகள், தொழிலாளர்களை அப்புறப்படுத்திய நவீனத்துவம், நிலமற்ற சிறு விவசாயிகளின் நிலை, நவீன வேளாண்மையின் லாபமின்மை போன்றவை விவசாயிகள் போராட்டங்களுக்கு வித்திட்டன.

     இரண்டு: மதம், பண்பாடு தொடர்பானவை. அனைத்து உறவுகளையும் வணிகப்படுத்தி, எல்லாவற்றிற்கு விலையுண்டு, எதுவும் புனிதமானதல்ல என்கிற நிலைப்பாடுகளால் உருவான சமூக, நல்லொழுக்க உறவுகளைச் சீர்செய்ய வந்த சமயப் புத்தெழுச்சி இயக்கம் இறுதியில் பிரிவினை வாதத்திற்கு காரணமாக அமைந்தது.

     மூன்று: மத்திய, மாநில அரசுகளிடையே அரசியல் மற்றும் பொருளாதாரப் பங்கீடுகள் செய்துகொள்வது தொடர்பானது.

     பஞ்சாபில் பெப்சிகோ திட்டம் புதிய வேளாண்மைக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. வேளாண் புரட்சிக்கான கிரியா ஊக்கி எனவும் அமைதிக்கான திட்டம் எனவும் இது விதந்தோதப்படுகிறது. இப்போது பெப்சி உணவுகள் என்றழைக்கப்படும் இத்திட்டம் 1986 –ல் பெப்சிகோ, பஞ்சாப் வேளாண் தொழிற்கழகம், டாடாவின் துணை நிறுவனமான வோல்டங்ஸ் ஆகியவற்றின் கூட்டுத்திட்டமாகும்.

     “பெப்சியும் புதிய வேளாண்மைக் கொள்கையும் அமைதிக்கான ஒரு திட்டமாகக் கண்டிப்பாக அமையாது; ஏனெனில், அது விவசாயிகள் வாழ்க்கையில் மேலும் அதிகமான மத்தியக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது; ஏனெனில் அது சூழலியல், அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் வேளாண்மை அமைப்பில் புதிய நிலையின்மையை அறிமுகப்படுத்துகிறது”, (பக். 195)

     இந்தியாவில் வாழ்வாதாரங்களை மறு உயிர்ப்பு செய்வதற்கான சுதந்திரத்தின் குறியீடாகவும், வளர்ச்சியின் கருவியாகவும் காந்தி ராட்டையைக் கண்டார். மேலும் “ராட்டையை அப்படியே பார்த்தால் அது ஓர் உயிரற்றப் பொருள்; ஆனால் அதில் குறியீட்டை முதலீடு செய்யும்போது, அது எனக்கு உயிருள்ள பொருளாகிறது”, (பக். 205) என்றார்.

     பசுமைப் புரட்சி நெல், கோதுமை போன்ற ஓரினப்பயிர் முறையைப் புகுத்தியது. பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற துணைப்பயிர்களைக் களைகளாகக் கருதி ஒதுக்கியது. ஆசியப் பயிரிடும் முறைகளுடன் இணைந்த மீன் வளர்ப்பு போன்றவற்றை பூச்சிக்கொல்லிகளால் நாசமாக்கியது. வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தண்ணீர் ஆகியவற்றின் அதிகப்படியான பயன்பாடு விவசாயிகளுக்கும் பொருளாதார ரீதியிலும் எதிர்மறைத் தாக்கத்தை உண்டாக்கியது.

     தொழில்நுட்பப் புரட்சியோடு வந்த காலனித்துவத்தை காந்தி ராட்டையை இந்தியாவின் சுதந்திரம் மற்றும் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தின் குறியீடாக மாற்றினார். உயிரியல் வளங்களைச் சுரண்ட வரும் மறுகாலனியத்திற்கு மூன்றாம் உலக நாட்டு விவசாயிகளின் பழமையான விதைகள் குறியீடாக விளங்கும் என்று இந்நூல் எடுத்துரைக்கிறது.

     பசுமைப் புரட்சி குறுகிய காலநோக்கில் சில நன்மைகளைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் தொலைநோக்கில் இதன் தீமைகள் பாரதூரமானவை. இவற்றை மறுமதிப்பீடு செய்வது காலத்தின் கட்டாயம். இவற்றின் பின்னாலிருக்கும் வர்க்க நலன், அரசியல் போன்றவை கட்டடுடைப்பு செய்யப்படவேண்டியவை. மேலும் இவற்றை சர்வரோக நிவாரணியாகப் பார்க்கும் போக்கு விமர்சனத்திற்குட்பட்டது. அதே சமயம் இயற்கை வேளாண்மை என்பதுகூட இன்று ஆதிக்கச் சந்தையின் பிடியில் சிக்கியிருப்பதையும் மறுக்க இயலாது. இந்தியப் பசுமைப் புரட்சியை மதிப்பிட இந்நூல் நமக்கு உதவும்.



பசுமைப் புரட்சியின் வன்முறை

வந்தனா சிவா

வெளியீடு:



வம்சி / பூவுலகு வெளியீடு



முதல்பதிப்பு: டிசம்பர் 2009

இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2013

பக்கம்: 225

விலை: ரூ. 140



தொடர்பு முகவரி:



வம்சி புக்ஸ்,

19, டி.எம். சரோன்,

திருவண்ணாமலை.



தொலைபேசி: 04175 251468,

அலைபேசி: 9444867023

மின்னஞ்சல்: vamsibooks@yahoo.com

இணையம்: www.vamsibooks.com



மற்றும்



பூவலகின் நண்பர்கள்,

மே/பா: ஆரோக்கிய சித்த மருத்துவமனை,

ஏ 2, அலங்கார் பிளாசா,

425, கீழ்ப்பாக்கம் கார்டன் பிரதான சாலை,

கீழ்ப்பாக்கம்,

சென்னை – 600010.

பேசி: 044 26461455

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக