செவ்வாய், பிப்ரவரி 02, 2016

34. ஓர் குழந்தையின் டைரிக் குறிப்புகள்



34. ஓர் குழந்தையின் டைரிக் குறிப்புகள்


(இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)


மு.சிவகுருநாதன்


(எதிர் வெளியீடாக டிசம்பர்  2011 –ல் உஷாதரன் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’ நூல் குறித்த பதிவு இது.)




     நாட்குறிப்பு (டைரி) எழுதுதல் குறித்து பொதுப்புத்தியில் படிய வைக்கப்பட்டுள்ள கருத்து நிலை இங்கு முதன்மையானது. டைரி என்பது முற்றிலும் அகவாழ்வு அந்தரங்கம் சார்ந்த அதாவது பாலியல் சார்ந்த ஒன்றாகவே பார்க்கப்படும் நிலையே இன்றும் உள்ளது. மேலும் டைரி பிறர் படிக்கக்கூடிய ஒன்றாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. 

       ஆனால் இதற்கு மாறாக டைரி என்பது ஓர் இலக்கிய வகையினமாகவும் சுயசரிதை மற்றும் நினைவோடை சார்ந்த குறிப்புகளாகவும் இருக்கின்ற தன்மையும் உள்ளது. இதன் வழியே வரலாற்றைப் பதிவு செய்யமுடியும் என்பதற்கு உலகில் பல சான்றுகள் உள்ளன. ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்புகள் புதுச்சேரியின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவின. மேலும் இதன் வழியே வானம் வசப்படும், மானுடம் வெல்லும் போன்ற பிரபஞ்சனின் நாவல்கள் படைக்கப்பட்டன. 



    மிக சமீபத்திய உதாரணம் மலாலா யூசுப் சாய். டைரிகளின் மிக நவீன வடிவமே வலைப்பூ, முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் என்று சொல்லலாம். குல்-மக்காய் என்னும் புனைப்பெயரில் மலாலா எழுதிய வலைப்பூ குறிப்புகள் உலக அளவிலான கவனம் பெற்று அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. 

     இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப்படை அட்டூழியங்களை அனுபவித்த சிறுமி ஆனி ஃபிராங்க் 12 ஜூன் 1942 முதல் 01 ஆகஸ்ட் 1944 முடிய எழுதிய டைரிக்குறிப்புகள் வரலாற்று ஆவணமாக இருக்கிறது. 13 வயதேயான யூதச்சிறுமியான ஆனி ஃபிராங்க் டைரியை கடிதம் போல் வடிவமைத்துக் கொள்கிறார். ‘கிட்டி’க்கு எழுதும் கடிதங்களாக தனது டைரியை அவர் உருவாக்குகிறார். உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த டைரிக்குறிப்புகள் 70 மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. தமிழில் இந்த முழுக் டைரிக்குறிப்புகள் உஷாதரன் மொழிபெயர்க்க எதிர் வெளியீட்டால் நூலாக்கம் பெற்றுள்ளது. 



    டைரிகள் தனிநபர் விருப்பு வெறுப்பு சார்ந்ததாக மட்டும் இல்லாமல் பொதுவெளியில் யாரும் பிரவேசிக்கத்தக்க, இலக்கியத் தரமான வரலாற்று ஆவணமாகவும் இருக்க முடியும் என்பதை இவை நிருபித்துக் காட்டியது. இக்குறிப்புகளில் சில பள்ளிப்பாடநூற்களில்கூட வைக்கப்பட்டது. ஆனால் இதன் பொருண்மை உணர்ந்து செய்யப்பட்டதாக அது இல்லை. எடுத்துக்காட்டாக பழைய ஆங்கில பாடநூல் ஒன்றில், தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளியே போக வாய்ப்பு கிடைத்தால் முதலில் என்ன செய்ய விருப்பம் என்ன என்பதை வெளிப்படுத்தும் கடிதம் (பக். 121) இடம்பெற்றதாக நினைவு. இதுவும் மொன்னையாக சொல்லப்பட்டதே தவிர மாணவர்களின் படைப்பாற்றலை கிளறுவதாக அமையவில்லை.



    வளரிளம் பருவத்தினர் குறித்த சிக்கல்கள் இங்கு வெறும் பேசுபொருளாக மட்டுமே இருக்கிறது. அதற்கான தீர்வுகள் ஏதோ நோய்களுக்கு மருந்து கொடுப்பது போல் இருக்கக்கூடாது. வளரிளம் பருவத்தினரின் தனித்திறனை வெளிப்படுத்த டைரி எழுத, கடிதம் எழுத, முகநூல் - வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பங்கேற்க, அன்றாட நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்க, அரசியல் நிலைப்பாடுகளை அவதானிக்க நாம் ஏதாவது பயிற்சிகள் அளித்திருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். பிறகெப்படி அரபுலகத்தில் நடந்தது போன்ற எழுச்சி இங்கு சாத்தியமாகும்? மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சரிவரப் பயன்படுத்திக் கொள்ள நமது கல்விமுறையும் பாரம்பரியமும் இடம் தரவில்லை. நமது குழந்தைகளை டைரி அல்லது சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளிப்படுத்த பயிற்சியளித்தல் நலம். பெரியவர்களுக்கே இதில் முறையான பக்குவம் இல்லை. இதற்கு நம்ம ஆட்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் நல்ல எடுத்துக்காட்டு. 


    ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் 1929 ஜூன் 29 இல் பிறந்த யூதச்சிறுமி ஆனி ஃபிராங்க். ஆனின் தந்தையான ஓட்டோ ஃபிராங்க் தனது மனைவி மகள்களுடன் நெதர்லாந்துக்குத் தப்பிச் செல்கிறார். நெதர்லாந்தும் நாஜிகளின் ஆதிக்கத்திற்கு வர அங்கும் யூத வேட்டை தொடங்குகிறது. அதிலிருந்து இவர்களது தலைமறைவு வாழ்வு தொடங்குகிறது. இவர்களுடன் மிஸ்டர் வான்டான் குடும்பம் (பீட்டர்) டாக்டர் டூஸல் போன்றோரும் இவர்களுடன் இணைகின்றனர். மொத்தம் 8 பேர். 

   1942 ஜூன் 12 ஆனின் 13 வது பிறந்த நாள். அன்று அவளுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளில் ஆட்டோஃகிராப் நோட்டும் ஒன்று. இதையே டைரியாக மாற்றிய ஆன் ‘கிட்டி’ என்கிற கற்பனை நட்புக்கு கடிதம் எழுதும் பாணியில் டைரி எழுதத்தொடங்கினாள். ஆகஸ்ட் 01, 1944 வரையில் ஆன் டைரி எழுதப்பட்டுள்ளது. 

    ஆகஸ்ட் 04 இல் நாஜி ராணுவம் இவர்களது தலைமறைவு இல்லத்தில் புகுந்து அனைவரையும் அள்ளிச்சென்றது. ‘வெஸ்டர் போர்க்’, ‘ஓஷ்விட்ஸ்’ ஆகிய முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டனர். மிஸ்டர் வான்டான் நச்சு வாயுவால் கொல்லப்பட்டார். ஓட்டோ ஃபிராங்க் உயிர்தப்பினார். சோவியத் செஞ்சேனை முன்னேறி வருவதை அறிந்த நாஜிகள் ‘ஓஷ்விட்ஸ்’ சித்திரவதை முகாமிலிருந்த பீட்டர் வான்டானுடன் சுமார் 10000 பேரை மேற்கு திசை நோக்கி அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் பீட்டரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. 



    ‘பெல்கன் பெல்சன்’ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட மார்க்கோட்டும், ஆனும்  கொடிய சித்ரவதைக்கு ஆளானார்கள். தலை மொட்டையடிக்கப்பட்டு ஆடையின்றி அம்மணமாக அடைத்துவைக்கப்பட்டனர்., மிகத் துணிச்சலுடன் இக்கொடுமைகளை எதிர்கொண்ட சகோதரிகள் 8 மாதங்களுக்குப் பிறகு  முகாமில் பரவிய ‘டைபஸ்’ என்னும் ஆட்கொல்லி நோயிக்குப் பலியானார்கள். 

    இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பின் வீடு திரும்பிய ஓட்டோ ஃபிராங்கிடம் மையீப் கைஸ் எடுத்துப் பத்திரப்படுத்தியிருந்த ஆனின் டைரி ஒப்படைக்கப்பட்டது. இவர் தலைமறைவுக் குடும்பத்திற்கு பணியாளாக இருந்த டச்சுப் பெண்மணி. எழுத்தாளராக வேண்டும் என்று ஆன்  கண்ட கனவு  ‘Tte Dairy of A Young Girl’ என்ற இந்நூலின் மூலம் நிறைவேறியது. இந்நூல் இனவெறியை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஓர் குழந்தையின் நேரடிப் பதிவு ஆவணமாக வரலாற்றில் இடம்பெறுகிறது. 

   எனக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை, அதனால் டைரி எழுதுகிறேன் என்கிறாள் ஆன். (பக். 12) இவளது தனிமையைப் போக்க, துயரைத் துணிவுடன் எதிர்கொள்ள இந்த டைரி அவளுக்கு உதவுகிறது. ‘ஒர் வாயாடி’, ‘திருத்த முடியாத  வாயாடி’ என்று கட்டுரை எழுதச் சொல்லுமளவிற்கு ஆனின் துடுக்குத்தனத்திற்கு குறைவில்லை. மிக மோசமாகப் பழகக்கூடிய சிறுமி, செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட தறிகெட்ட சிறுக்கி பொன்ற பட்டங்களும் இணைந்துகொள்ள  அழுகை, சிரிப்பு என அவ்வவ்போதைய மனநிலைக்கேற்ப இவற்றை எதிர்கொள்ளப் பழகுகிறாள். 



    ஆனை மம்மி குழந்தைபோல் பாவிக்கிறாள். இது ஆனுக்கு துளியும் பிடிக்கவில்லை. டாடியுடன் மிக நேசமான உறவு, அன்பு, நட்பு எல்லாம் இருக்கிறது. மம்மியும் இவ்வாறு இல்லையென்ற ஏக்கம் ஆனுக்கு உள்ளது. டாடி தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட காதலைப் பற்றி கூறுகிறார். அவருக்கு ஏற்பட்டதைப் போன்ற அனுபவங்களைச் சகித்துக் கொள்ளாமலேயே அவரைப்போல பொறுமைசாலியாக தானும் இருக்க ஆசை கொள்கிறாள். தனது கோபத்தை டாடிக்குக் கடிதமாக எழுத, அது அவரது மனக்கஷ்டமாக மாற பின்னாள் ஆன் வருத்தமடைகிறாள். 

   பாலியல் பற்றிய தகவல்களை டாடி சொல்ல அவற்றை மம்மி சொல்லிக் கேட்க விரும்பும் ஆன் மம்மியிடம் தனக்குள்ள முரண்பாட்டை, குறைகளை பல கடிதங்களில் அடுக்குகிறார். உங்களைப் பிள்ளைகள் என்பதைவிட நண்பர்களாகப் பார்க்கிறேம் அன்று அம்மா சொன்னபோதும் ஓர் நண்பனால் தாயின் பாத்திரத்தை வகிக்க முடியாது என்று கவலை ஏற்படுகிறது. கடைத்தெருவிற்கு அழைத்துச் செல்லாதது போன்ற சிறிய மனக்காயங்கள் இன்னும் ஆறவில்லை என்கிறாள். தாயின் அன்பிற்கான ஏக்கம் பல கடிதங்களில் வெளிப்படுகிறது. 

   பழைய கடிதங்களை மீண்டும் படிக்கும்போது அதிலுள்ள வெறுப்பின் மொழி குறித்து மறுபரிசீலனை செய்கிறாள். மம்மி என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பதைப்போல நானும் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. இருவரும் கோபத்தை அடக்கப் பழகிவிட்டதால் நிலைமை சீரடைந்து விட்டதை உணர்கிறாள். மம்மியை நோகடித்து அழவைத்து சங்கடப்படுத்துவது வருத்தத்தைத் தந்தாலும் ஆனுக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. 

    வளரிளம் பருவத்தில் பெண்ணிடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் சக வயதுப் பெண்கள் குறித்தும் டைரியில் சொல்கிறாள். மாதவிலக்கு அசெளகரிகமாக இருந்தபோதிலும் அது இயற்கை அளித்த இனிமையான் ரகசியம் என்று கருத்து சொல்கிறாள். என்னை விட மூத்தவளான மார்க்கோட் இதைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை என கேட்கும் ஆன், வீனஸ் போன்ற நிர்வாண உருவங்கள் மகிழ்விப்பதையும் சொல்கிறாள். 

   பீட்டருடானான பாலியல் ஈர்ப்பு, அவனைப் பார்த்துப் பேசக் கொள்ளும் ஏக்கம், தொடந்த உரையாடல்,  தொடுதல், கனவுகள், முத்தமிடல் என ஆன் தனது வாழ்வின் கணங்களை கடிதங்களில் வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைகிறாள். பீட்டர் டாடியை முதல் தரமான மனிதர் என்று சொல்ல, டாடியைப் போல் பீட்டரும் முதல்தரமான மனிதன்தான் என்று ஆன்  பெருமிதமடைகிறாள். “தலைமறைவு முகாமின் நிலைமைகள் ஆன்மார்த்தமான ஒரு நட்புறவின் ஒளி பரவியிருக்கிறது. இதன் பொருள் எதிர்காலத்தில் பீட்டரைத் திருமணம் செய்துகொள்வேன் என்பதல்ல. அந்த அளவிற்கு நேசம் உருவாகுமா என்பதும் தெரியவில்லை. எதுவாயினும் இப்போது நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே! பீட்டருக்குத் தேவை ஒரு நண்பியா அல்லது காதலியா அதுவும்  இல்லாமல் ஒரு சகோதரியா என்பது எனக்கு இன்னும் புரியவில்லை”, என்றும் பதிவு செய்கிறாள்.

   ஆல்பர்ட் டூஸல் என்ற பல் டாக்டர் இவர்களது தலைமறைவு முகாமைப் பகிர்ந்து கொள்கிறார். டூஸல் கண்ணியமானவராக இருந்தபோதிலும் அவருடன் ஏற்படும் பிணக்குகள் கடிதங்களில் சொல்லப்படுகின்றன. இவர் மருத்துவம் பார்க்கும் காட்சி ‘அரைகுறை மருத்துவரின் செயல்பாடு’ மத்திய காலப் படைப்புகளில் வரும் காவியம் போல் இருக்கிறது என கிண்டலடிக்கிறாள்.  ஃப்ளு நோயால் பாதிக்கப்பட்டபோது, என்னுடைய நிர்வாண மார்பில் தன்னுடைய முரட்டுத்தலையை வைத்து இதயத்துடிப்பை அறிந்துகொள்ள முயற்சிப்பது பிடிக்கவில்லை என்றும் டூசலின் காதுகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும், அதன் கேட்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறது என்றும் அனுமானிக்கிறாள். 

  எழுத்தாளராகவோ பத்தரிக்கையாளராகவோ ஆகவேண்டும் என்பது ஆனின் கனவு. இந்த வயதிலும் நிறைய நூல்களை வாசிக்கும் அவளது ஆர்வம் நம்மை வியப்பிலாழ்த்தக் கூடியது. டைரியும் சில புத்தகங்களும் தண்ணீரில் நனைந்துபோக ‘ஈடு செய்யமுடியாத இழப்பு’ என்ற கிண்டலையும் மீறி ஈடு செய்கிறாள். தனக்கும் பிடிக்காத அல்ஜிப்ரா புத்தகத்தைக் கிழித்தெறியவும் தயங்கமாட்டேன் என்கிறாள். ‘எல்லன் என்ற தேவதை’ என்ற கதை எழுதிருப்பதாகச் சொல்கிறாள். 

   எழுதுவதன் வாயிலாக துயரங்களை உதறியெறிந்து துணிவு துளிர்ப்பதாகச் சொல்லும் ஆன், 14 வயதில் வாழ்க்கை அனுபவங்கள் இல்லாத ஓர் சிறுமியால் எவ்வாறு தத்துவச் சிந்தனைகளை எழுத முடியும் என்று வினா எழுப்பி, துணிந்து முன்னேறுவேன் என்று நம்பிக்கை வைக்கிறாள். எனது விருப்பங்கள், பொழுதுபோக்குகள் என் நீண்ட பட்டியலை வெளியிடுகிறாள். பொழுதுபோக்காக அல்லாமல் எழுதுவது, வரலாறுகளைப் படித்து தகவல்களைத் திரட்டுவது, வரலாற்று ஆய்வு செய்வது, கிரேக்க, ரோமானிய புராணங்களைப் படிப்பது என்பதாக ஆசை நீள்கிறது. கலை வரலாறு, ஓவியம், இசை ஆகியவற்றை விருப்பப் பட்டியலில் வைக்கும் ஆன், அல்ஜிப்ரா, ஜாமட்ரியை வெறுக்கிறாள். 

    தலைமறைவு வாழக்கையில் கழிவறையைப் பயன்படுத்துவது, குளிப்பது, உணவு உண்பது ஆகியவற்றுக்குள்ள கட்டுப்பாடுகளை விளக்கும் ஆன், இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் தனது கிண்டல் மற்றும் நகைச்சுவை உணர்வை மறக்கத் தயாராக இல்லை. கரையான்கள், பூச்சிகள் தொந்தரவு பற்றிக் குறிப்பிடும்போது, நின்ற படியே சொறிவதற்கும், கழுத்தை வளைக்கவும், கால்களையும் முதுகையும் பரிசோதனை செய்யவும்தான் நாங்கள் உடற்பயிற்சி செய்வதாகக் கிண்டலடிக்கிறாள். ஜெர்மன் சர்வாதிகாரி மற்றும் போரில் காயம்பட்ட ஜெர்மானிய வீரர்களின் வானொலி நேர்காணலைக் கேட்டபிறகு, “காயம்பட்டவர்கள் தங்களுடைய எலும்பு முறிவுகளைப் பற்றிப் பெருமைப்படுகிறார்கள். காயம் எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு மகிழ்ச்சி, அவர்களில் ஒருவர் இந்த சர்வாதிகாரியிடம் கை குலுக்கும் பேறு பெற்றதில் (இன்னும் ஒரு கை எஞ்சியிருக்கிறதே என்பதாகக் கூட இருக்கலாம்) பெருமையால் பூரித்துப் போகிறார். பேச வார்த்தைக் கிடைக்காமல் திண்டாடுகிறார்”, என்று டைரியில் குறிப்பிடும் கிண்டல் ரசிக்கத்தக்கது. போலீசும் காவலாளிகளும் எல்லாத் திருடர்களுடன் கூட்டு சேர்ந்து திருடுகிறார்கள். அவர்கள் பசியாற ஏதாவது வேண்டாமா? என்று ஆறுதடைகிறது அவளது பிஞ்சு மனம். 

   இறந்த பிறகும் எழுத்தும் மூலம் வாழவேண்டும் என விரும்புகிறாள். இந்த டைரி ஒன்றின் மூலம் இறந்து வாழும் ஆனின் கனவு நிறைவேறியிருக்கிறது. என்னுடைய கருத்துகள் எடுத்துரைப்பதைவிட எழுதுவதைத்தான் நான் விரும்புகிறேன் என்று மார்க்கோட்டிற்கு எழுத கடிதத்தில் குறிப்பிடுகிறாள். ‘ஏவாளின் கனவு’, ‘கரடி வாழ்க்கை’ என்ர கதைகளை எழுதி அவற்றிற்கு தானே விமர்சகராக மாறிவிடும் அழகே தனி. 14 வயது சிறுமியின் இத்தகைய குணங்களும் தன்னம்பிக்கையும் போற்றத்தக்கது; பின்பற்றக்கூடியது. 

   தலைமறைவில் இருந்தாலும் எழுதமுடிவது மகிழ்ச்சிதான் என்கிறாள். மம்மி, மிசஸ் வான்டனைப்போல அவரவர் வேலையைச் செய்து இறுதியில் மறக்கடிக்கப்படும் பெண்ணாக வாழ நான் விரும்பவில்லை என்று முடிவு செய்து தன்னம்பிக்கைக் கீற்றை படரச் செய்கிறாள். எனது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் எழுதி வைக்க இயலாதிருந்தால் நான் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பேன் என்கிறாள். 

   இவ்வளவிற்கு ஆனி ஃபிராங்க் எந்நேரத்திலும் நாஜிப்படைகளின் கொடிய சித்ரவதைகள், மரணம் ஆகியவற்றை எதிர்கொண்டு வாழ்ந்தவள். காய்கறி வியாபாரி பிடிபட்டதால், இனி காய்கறி, கீரைகளை வாரமொருமுறை மட்டுமே சாப்பிட முடியும் என்கிற நிலை வரும்போது, கெஸ்டப்போக்களிடம் பிடிபடுவதைவிட இது தேவலை என்று அவளால் தேற்றிக் கொள்ளமுடிகிறது. மறுபுறம், நாங்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளாமலிருந்தால் எங்களுக்கு உதவி செய்பவர்களுக்காவது ஆபத்து ஏற்படாமல் இருக்கும். எனவே உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆதங்கம் கொள்கிறாள். 

    ஒவ்வொரு நாளும் போருக்காக பல கோடி ரூபாய்கலைச் செலவழிக்கும இவர்கள் ஏன் மருந்துகளுக்கும் உணவுப் பொருட்களுக்கும் பணத்தைச் செலவழிக்காமலிருக்கிறார்கள்? என்ற வினா ஜெர்மனி மீது மட்டுமல்ல; நம்மீதும் கேட்கப் பட்டதாகவே கருதலாம். 

    கெஸ்டபோக்கள் எங்கள்து யூத நண்பர்கள் சிலரை ‘டிராண்ட்’ முகாமுக்கு  கால்நடைகளை அடைத்து அழைத்துச் செல்லும் டிரக்குகளில் அழைத்துச் செல்கிறார்கள். கழிப்பறை, குளியலறை போன்ற எவ்வித வசதியும் இல்லாத இம்முகாம்களில் ஆண்களும் பெண்களும் அடைக்கப்படுகின்றனர். பெண்கள் மட்டுமின்றி சிறுமிகளும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவது, அவர்களில் பலர் கர்ப்பிணியாக மாறும் அவலத்தையும் ஆன் பதிவு செய்கிறாள். ஒவ்வொரு நாளும் இளம்பெண்கள் காணமாற்போகின்றனர், என்ன நிலைமை இது! என அங்கலாய்க்கிறாள். 

      வின்ஸ்டன் சர்ச்சிலின் கம்பீரமான சொற்பொழிவை வானொலியில் கேட்கிறாள். போர்க்களத்திற்கு வர விரும்பிய 70 வயதான சர்ச்சிலின் துணிச்சல் பற்றியும் எழுதுகிறாள். இந்திய சுதந்திரப் போரில் காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னோக்கிச் சென்றுக்க்கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறாள். இவை இவளது அரசியல் கவனிப்பை வெளிப்படுத்துகிறது. 

     நாஜிப்படைகளின் பாலியல் கொடுமைகள், விஷ வாயுப்  படுகொலைகள் ஆகியவற்றை எதிர்கொண்ட ஆனின் வாழ்வு முழுதும் தன்னம்பிக்கையால் நிரம்பியது. இது வெறும் இளம் வயது சாகசமல்ல. பெருங்கனவிற்கும் நடைமுறை வாழ்வு சிக்கலுக்குமான போராட்டத்தை எதிர்கொள்ளும் ஓர் புத்திசாலி சிறுமியின் வீரம் என்று கூட சொல்லலாம். ஆனிடமிருந்து வளரிளம் பருவத்தினர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய. 

   நூலின் வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது. மொழிபெயர்ப்பின் தரம் சரியில்லை என்றே சொல்லவேண்டும். முதல் பதிப்பே என்னிடம் உள்ளது. இரண்டாம் பதிப்பும் வெளியாகியுள்ளது. அப்பதிப்பில் மிக அதிகமாக உள்ள எழுத்துப்பிழைகள் களையப்பட்டதா என்று தெரியவில்லை. உலகின் முக்கியான நூலொன்றை மொழிபெயர்த்து வெளியிடுவதில் இன்னும் சிரத்தை காட்டியிருக்கலாம்.  


ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
(12 ஜூன் 1942 – 01 ஆகஸ்ட் 1944)

தமிழில்: உஷாதரன்

முதல் பதிப்பு: டிசம்பர்  2011
பக்கம்: 328  (விலை ரூ. 250) 

இரண்டாம் பதிப்பு: 2013
விலை: ரூ. 300

வெளியீடு:

எதிர் வெளியீடு,
96, நீயூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642002.

பேச: 04259 226012  9865005084
மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com
இணையம்:  ethirveliyedu.in

இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்
திருவாரூர் 



பன்மை


மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com 

வாட்ஸ் அப்:   9842802010
செல்:          9842402010


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக