திங்கள், பிப்ரவரி 08, 2016

35. மென்மை பொதிந்த தீவிரக் கல்விச் சிந்தனைகள்35.  மென்மை பொதிந்த தீவிரக் கல்விச் சிந்தனைகள்


(இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)


மு.சிவகுருநாதன்


(அருவி மாலை வெளியீடாக நவம்பர்  2010 –ல் வெளியான, கல்வியாளர் பேரா. ச.மாடசாமி எழுதிய  ‘ஆளுக்கொரு கிணறு – மொழி… பண்பாடு… கல்வி … குறித்த கட்டுரைகள்’ என்கிற குறுநூல்  பற்றிய  பதிவு இது.)

நூலட்டை


     வாட்ஸ் அப்பில் ஓர் தோழர் எனது பதிவு பற்றி கருத்து சொன்னதற்கு பதிலுக்கு நான் நன்றி சொல்ல, அவரோ  ‘நவிலற்க’ என்று பதில் அளித்தார். இதன் பொருள் என்ன? ஏன் இப்படி? என்று கேட்டதற்கு “நன்றி சொல்ல வேண்டாம்” என்று பொருளையும் “இம்மாதிரிச் சொற்களைப் பயன்படுத்துவதுதான் தமிழாசிரியர்களுக்குப் பெருமை, பாராட்டு”, என்றும் பதிலளித்தார். 

      ஒருமுறை தேர்வுப் பணியின் போது ஓர் தமிழாசிரியர் ‘ரமேஷ்’ என்னும் தனது பெயரை ‘இரமேசு’ என்று அடையாள அட்டையில் எழுதியிருப்பதைக் கண்டு அதிர்ந்து, “இதற்கு உங்களது பெயரையாவது மாற்றிக்கொள்ளலாமே!”, என்று சொல்லி விட்டேன். அவர் வருத்தப் பட்டிருக்கக் கூடும் அல்லது எனது தமிழ் விரோதம் பற்றி கவலை கொண்டிருக்கலாம்.      கல்வியாளர், பேராசிரியர் ச. மாடசாமி அவர்களது முந்தைய நூலில் (2010) ஒன்றான ‘ஆளுக்கொரு கிணறு’ நூலில் உள்ள ‘அகங்காரத் தமிழ்’ என்றொரு கட்டுரை ஆசிரியர்கள் குறிப்பாக தமிழாசிரியர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். திணிப்பதுதான் கல்வி, கடினமாக இருப்பது தரம் என்ற இரு தவறான அளவுகோல்களைக் கொண்டு பாடநூற்கள் தயாரிக்கப்படுகின்றன என்கிறார். இது எவ்வளவு பெரிய உண்மை; வன்முறையும் கூட. 

     புரிகிறதோ இல்லையோ கோணங்கியின் சிறுகதைகள் மற்றும் நாவல்களை வாசிக்க விருப்பம் கொள்ளும் நான் இன்றுகூட பாடப்புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம்  துளியும் இருப்பதில்லை. அதிலும் மொழி, கலைப் பாடநூற்களை வாசித்த எவரும் இந்த மொண்ணைத்தனத்தை உணரக்கூடும்.  குழந்தைகள் பாவம்! அவர்களை ஏன் இவ்வாறு கொடுமைப்படுத்த வேண்டும்? படைப்பாற்றல் இல்லாத செயற்கைப் பாடங்களின் வாயிலாக படைப்பாற்றல் கல்வி கற்பிக்க முயல்வதும் ரொம்ப அபத்தம். 

   முதல் வகுப்புப் பாடநூற்களில் அகவை. ஞாலம் என்ற சொற்களை வைத்து மிரட்டுவது, ஆத்திச்சூடியை பொருள் தெரியாமல் சொல்லிக்கொடுப்பது, அகராதி  அகரமுதலியானது போன்றவற்றைச் சொல்லி எளிமையான பாடங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறார். இதனால்தான் அரசின் முதல் வகுப்புப் பாடநூல் படம், பாடம், பட்டம் என்று தொடங்குகிறது. இதைப் போலவே அறிவொளி நூல்கள் பட்டா, படி எனத் தொடங்கின. ஆனால் மழலையர் கல்விப் பாடநூல்களில் இன்னும் அ, ஆ விலிருந்துதான்  தொடங்கப்படுகின்றன. மேலும் ‘ஒளடதமும்’ உண்டு. முதல் வகுப்பில் சொல்லப்படும் ஒளவை, பெளத்தம், பெளர்ணமி, வெளவால், கெளதம், கெளதாரி ஆகிய சொற்கள் கூட தவிர்க்கப்பட வேண்டியவையே.
      இக்குறுநூலில் அறிவொளி, கல்வி அனுபவங்கள் ஒன்பது கட்டுரைகளாக விரிகின்றன. மிக எளிமையாக கடிந்துரைக்காமல் வாழைப்பழத்தில் ஊசி குத்துவதைப் போல குறைகளைச் சுட்டும் நளினம் அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படுகிறது. மாற்றுச் சிந்தனைகளை பிறரை ஏற்கச் செய்யும் மன முதிர்ச்சி இதில் வெளிப்படுகிறது. மேலும் இவை படிப்போரை தன்வயப்படுத்திவிடவும் உதவுகிறது. 

     மாணவர்களை ‘நோ’ சொல்லவைத்து மறுப்புத்திறனை வளர்க்கும் உத்தியை பச்சையம்மாளின் மறுப்பை ஒட்டி பேசுவதோடு, மிக வெளிப்படையாகப் பேசும் குணம் படைத்த சுதந்திரப் பறவை பச்சையம்மாள் உள்பட நம்  அனைவருக்குள்ளும் இருக்கும் கிணறுகளைப் பற்றி முகப்புக் கட்டுரை பேசுகிறது. நமக்குள் உறைந்திருக்கும் கிணறுகளிலிருந்து நாம் எப்போது வெளியேறுவோம்?

    வகுப்பறைகளில் விவாதங்களை உற்பத்தி செய்ய முடியாது. மாறாக விவாதங்கள் தோன்ற வேண்டும். அதற்கு தளம் வெதுவெதுப்பாகவும் சூழல் இணக்கமுள்ளதாக இருக்க வேண்டியதை வலியுறுத்தும் ‘நாற்றம் அடிக்கும் வகுப்பறை’ என்ற கட்டுரை, இன்னும் நம் வகுப்பறைகள் கேள்விகளற்று, விவாதங்களற்று, அதிகாரத்தின் பிடியில் ஒடுங்கிக் கிடக்கும் புதிரை வெளிப்படுத்துகிறது. 
      கொடுக்கலும் வாங்கலுமான வங்கிக்கல்வி முறையை மறுத்து விவாதக் கல்வி முறையின் பக்கம் நின்ற பாவ்லோ பிரெய்ரேவை அறிமுகம் செய்து, விவாதம் நடத்தும் ஆர்வத்தில் “உங்களுக்குப் பிடித்த உடை எது?”, என்ற வினாவிற்கு ‘ஜட்டி’ என்று பதில் வந்ததும் முகம் சிவந்து விவாதத்தையே நிறுத்திய ஆசிரியர், பத்தாம் வகுப்பு முடித்த அறிவொளித் தொண்டரின் மொழி விளையாட்டு, கற்பனை என்பதை கவிதை, கதை எழுதுவது எனத் தவறாகப் புரிந்து வைத்திருக்கும் ‘ஆசிரிய அறியாமை’யை முறியடித்த ராஜாமுகமது என பல அனுபவங்கள் வழி விவாதங்களின்  அவசியத்தை உணர்த்தும் கட்டுரைகள் உண்டு.

    தரம், ஒழுக்கம் என்பது போன்ற ராணுவக் கட்டுப்பாடுகள், நிறுவன விதிகள், பாடப்புத்தக சுமை, பயம் உண்டாக்கும் தேர்வுகள், பரிசு, தண்டனை, ரேங்க் வழங்கித் தரம்பிரித்தல், மாணவர்களின் பன்முகங்களை அழித்துப் பள்ளிக்குப் பொருந்தக்கூடிய ஒற்றை முகத்தை பிசைந்து வடித்தல் என்பதான கல்வி அதிகாரங்களை நோக்கி 19 ஆம் நூற்றாண்டில் குரல் எழுப்பிய டால்ஸ்டாய், அவரைப் பின்பற்றிய காந்தி, நவீனத்துவமும் வர்ணாசிரமும் இணைந்து இத்தகைய அடிப்படைக் கல்வியை சீரழித்த வரலாற்றை ‘காந்தியின் வகுப்பறை’ பேசுகிறது. பெரியோர்களை வெறும் பெயரளவில் கொண்டாடி அவர்களது சிந்தனைகளை ஒதுக்கிவிடும் மரபின் ஓரங்கமாக, நேருவின் விஞ்ஞானக் கல்விக்கு கைத்தொழிலை எதிரியாகக் கட்டமைத்து காந்தியை கழித்துப்பின், நேருவை ஏமாற்றிய கதை என்றும் குறிப்பிடுகிறது.

    அறிவொளி அனுபவங்கள் பல கட்டுரைகளின் பேசு பொருளாகிறது. இடதுசாரிகளின் பங்கேற்பு இன்றி அறிவொளியில் இவ்வளவு புதுமைகளும் வெற்றியும் சாத்தியப் பட்டிருக்காது என்பது புலனாகிறது. களப்பணி, கற்றல் கட்டுகள் உருவாக்கம், அறிவொளியின் வெற்றி ஆகியவற்றில் இடதுசாரிகளின் பணியும் கருத்தியலுக் முக்கிய பங்காற்றின. “கற்றுக்கொடுக்கப்போய் நாங்கள்தான் கற்றுக்கொண்டு வந்தோம் – கதைகள், விடுகதைகள் என அவர்கள் வத்திருந்த ஐஸ்வர்யங்களை”, என திறந்த மனதோடு வெளிப்படுத்தும் பாங்கு குறிப்பிடத்தக்கது. “அறிவொளிக்கு இணையான சந்திப்பு –அனுபவம் வேறு எதுவும் இல்லை”, என்று சொன்னாலும் “தரப்பட்ட வாய்ப்பை இன்னும் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாமோ”, என்ற சுய விமர்சனமும் இணைவது அவசியந்தானே! 

   இக்குறுநூல் ஒப்பீட்டளவில் பரவலான வாசிப்பும் கவனமும் பெற்ற நூல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இன்னும் சற்றுக் கூடுதலாக வாசிக்கப்படுவது தமிழகக் கல்விச்சூழலை சிறிது மேம்படுத்த உதவும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


ஆளுக்கொரு கிணறு – மொழி… பண்பாடு… கல்வி … குறித்த கட்டுரைகள்’

பேரா. ச.மாடசாமி 

முதல் பதிப்பு:  நவம்பர் 2010

பக்கம்: 80
விலை: ரூ. 50

வெளியீடு:

அருவி மாலை,
19, சந்தானம் நகர்,
கோவளம் நகர் அருகில்,
மதுரை – 625003.

போன்:   0452 2692532
செல்: 9444164836
மின்னஞ்சல்: aruvi.ml@gmail.com


இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்
திருவாரூர்

பன்மை

மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com 

வாட்ஸ் அப்:    9842802010
செல்:           9842402010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக