நீதிபதி கர்ணனின் முகமூடித்தனம்
வழக்கறிஞர் பொ.இரத்தினம்
அமைப்பாளர்
சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் நடுவம்
தொடர்புக்கு: 94434 58118
ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு உள்ளான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், தன்னை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்ற உத்தரவிற்கு தானே இடைக்காலத் தடை விதித்துக் கொண்டார். பணியிடமாற்றம் பெற்றுள்ள கர்ணனுக்கு எவ்வித பணியும் ஒதுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் சகோதரருக்கு நெருக்கமாக இருந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் அரசியல் செல்வாக்கால் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றார். இவர் பற்றி காலங்கடந்து இப்போதுதான் இவரது சீரழிவுகள் பற்றி தகவல்கள் வருகின்றன. கருணாநிதி என்ற பெயருடைய இவர் அ.இ.அ.தி.மு.க. வில் சேருவதற்காக தனது பெயரை கர்ணன் என மாற்றிக்கொண்டவர். இவர் வழக்கறிஞராக இருந்தபோது குடி மிகுதியால் பிறரால் சேம்பருக்கு அழைத்துக்கொண்டுவரக்கூடிய நிலை இருந்தது.
நீதிபதியாகியும் நிரம்ப தப்புகள் செய்தவர். ஒரு வழக்குத் தொடர்பான மதுரையில் 2011 நவம்பரில் 25 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கறிஞரின் டேப் ஆதாரங்கள் இருக்கின்றன. வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டு, இவ்வழக்கை வெளிப்படையாக விசாரிக்கவேண்டாம், இதற்கென உள்ள அமைப்பின் மூலம் விசாரிக்கலாம் என்றனர். ஆனால் இந்த அமைப்பின் மூலம் இதுவரையில் யாரையும் விசாரித்ததில்லை. அரசியல் கட்சிகள் எப்படி சீரழிந்திருக்கின்றனவோ அதைப்போல இன்று நீதிமன்றங்களும் சீரழிந்து கிடக்கின்றன.
லஜபதிராய் மனுதாரராகக் கொண்டு இவர் மீதான முறைகேடுகளை விசாரிக்க ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாங்கள் வேறு வழிகளில் விசாரிக்கிறோம் என்று தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்கு முடித்துவைக்கப்பட்டது. ஓராண்டிற்கு முன்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நால்வரைத் தவிர அனைத்து நீதிபதிகளும் சேர்ந்து இவரது வில்லங்கமான நடவடிக்கைகளைத் தொகுத்து புகார் செய்தபோதும் எவரும் கண்டுகொள்ளவில்லை.
கர்ணனின் சீரழிவுக்கு ஏற்ற மாதிரியே பல நீதிபதிகள் சீரழிந்து கிடக்கிறார்கள். ஆனால் கருத்தரங்குகளில் புத்தரைவிட அதிகமாகப் பேசுகிறார்கள். இச்சீரழிவின் வெளிப்பாடு இன்று இவ்வாறாக வந்து நிற்கிறது.
கர்ணன் என்பவர் தலித் மக்களின் அவமானச்சின்னம்; நீதித்துறையின் கேடுகெட்ட கிரிமினல். நீதிபதி கிருஷ்ணய்யர் அழகாகச் சொன்னபடி, ஆவணங்கள், சாட்சியங்கள் இருந்த்தால் பணியிலிருக்கும் நீதிபதியின் மீது வழக்குத் தொடர இந்தியத் தண்டனைச் சட்டத்தில் தடையேதுமில்லை. ஆனால் இதை யாரும் செய்யத் தயாராக இல்லை. கண்டனத்தீர்மானம் (Impeachment) என்றொரு கதையைச் சொல்லிவருகிறார்கள். கிரிமினல் நீதிபதிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது. அவர்கள் மேலும் மேலும் குற்றங்களைச் செய்கின்றனர்.
அதிகார மையங்களில் ஆதிக்க சாதிகள் உட்கார்ந்து கொண்டு பாசாங்கு செய்கின்றன. சமூகத் துரோகம் செய்கிற படித்த தலித்களை பதவிக்குக் கொண்டு வருகிறார்கள். நேர்மையான, திறமையுள்ள, சமூக அக்கறையுள்ள படித்த தலித்களை ஓரங்கட்டுகின்றனர். தலித்கள் மோசமானவர்கள் என்கிற கருத்தாக்கத்தை உருவாக்க வழி செய்கிறது.
இந்த கர்ணனும் அடிக்கடி சில ‘ஸ்டண்ட்’களை அடிப்பார். அவற்றில் சில உண்மையும் உண்டு. இந்த சில உண்மைகளைக் கையில் வைத்துக் கொண்டுதான் அனைவரையும் மிரட்டுகிறார்.
ஒரு நீதிபதி தன்னிடம் பணிபுரிய வந்த பெண் பணியாளரை கருக்கலைத்தார் என்னும் செய்தி இன்றும் உயிரோடிருக்கிறது. அதையும் இவர் உறுதி செய்கிறார். அதைப்போல தனபாலன் என்றொரு தலித் நீதிபதி ஓய்வு பெற்றவர்; நிறைய சம்பாதித்தார். இவருடைய மகன் விலையுயர்ந்த கார்களில் வலம் வந்த பிறகு இப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.
தலித் நீதிபதிகளின் சமூகப் பங்களிப்பை கணக்கில் எடுத்தால் நமக்கே விரக்தி ஏற்படுகிறது. தலித் சமூகத்தில் நல்லவர்களே இல்லாதது போல் அதிகார வர்க்கம் திட்டமிட்டு இவர்களைத் தேர்வு செய்கிறது. நேர்மையான தலித்களை ஆதிக்கச் சாதிகள் ஓரங்கட்டுகின்றன. அதிகார மையத்தில் இருக்கின்ற சில தலித்கள் தங்களைப் போன்ற சீரழிவு சக்திகளுடன் இணைந்துள்ளனர். எனவே சீரழிவு தொடர்கிறது.
சமூகத்திற்கு ஒழுக்கம், நேர்மை, சமூக அக்கறை ஆகியவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கிற நிலையின் விளைவுதான் இது. ஒழுக்கமே புத்த நெறி; புத்த நெறியே ஒழுக்கம் என்று அம்பேத்கர் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார். இவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. இதன் விளைவு இன்று சீழ் புழு நெளியும் கட்டத்திற்கு வந்துள்ளது.
சில வழக்கறிஞர்கள் கர்ணனை மக்கள் நீதிபதி, அது, இது என்று கொண்டாடும் போக்கும் உள்ளது. நாம் நடத்திய வழக்குகளில் தலித் மக்களுக்கு எதிராக தீர்ப்பளித்த இவரது பித்தலாட்டங்களைத் தொகுத்து நீதித்துறையில் முகமூடிகள் என்ற துண்டறிக்கை வெளியிட்டு, அதை அவரிடமும் அளித்திருக்கிறேன். தப்பு செய்யும் தலித் நீதிபதிகள் மற்றும் சிலரைப் பற்றிய செய்திகளைச் சொல்வதன் மூலம் அவர்கள் மிரண்டு போயுள்ளனர். கேட்பதற்கு நாதியற்ற ஓர் சூழலை உருவாக்கி விடுகிறார்கள். இந்தக் குழப்பத்தில் மீன் பிடிக்கிறார்கள்.
இவர் மீதான் நூற்றுக்கணக்கான புகார்கள் மீது வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். Impeachment எதற்கு? அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இதைக் கேடயமாக வைத்துள்ளனர். இவர் மீது நடவடிக்கை எடுத்தால் இதர சீரழிவு சக்திகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா! எனவே நிறைய பேர்கள் தப்பிக்கின்றனர்.
தலித்கள் பித்தலாட்டக்காரர்கள்; மோசடிப் பேர்வழிகள் என்று எனது வழக்குகளில் தலித் நீதிபதி ஒருவரை பக்கத்தில் வைத்துக்கொண்டே குற்றச்சாட்டிய சிவப்பா என்றொரு நீதிபதி, தனது பிறந்த நாளை திருத்தி மோசடி செய்ததால் பதவியில் நீடிக்கக் கூடாது அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களால் பதவி நீக்கப்பட்டார். சிவப்பா ஒரு கோடியில் கோயில் கட்டினார். திருடர்களுக்குத்தானே கோயில் கட்டும் யுக்தி தெரியும்! நாம் அப்பவே சொன்னோம், FIR போட்டு நடவடிக்கை எடுங்கள் என்று. யாரும் கேட்கவில்லை.
நோயிருந்தால் கண்டிப்பாக மருந்திருக்கும். அதைப்பற்றியெல்லாம் யாரும் கவலை கொள்வதில்லை. நீதி நிறுவனத்தைப் பற்றி கவலைப்படாதாவர்கள் எல்லாம் நீதிபதியாக இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பகவதியும் நீதிபதி கிருஷ்ணய்யரும் சட்ட உதவி இயக்கத்தை முன்முயற்சி எடுத்து உருவாக்கி நகர்த்தினார்கள். இவற்றை நீதிபதிகளே காலி செய்துவிட்டார்கள். இன்று தலித் நீதிபதி யாரும் சட்ட உதவி தேவை என்று பேசுவதேயில்லை. தாங்கள் நீதிபதியாகிவிட்டதே போதுமென்று எண்ணும் போக்கு மிகுந்துவிட்டது.
நாடாளுமன்றமே தன்னைத்தானே Impeachment செய்துகொள்ள வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. எனவே நீதித்துறையின் சீரழிவுகளைத் தடுக்க நீதிபதி கர்ணன் மீதான புகார்களை FIR பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து நீதித்துறையின் மாண்புகளைக் காக்கவேண்டும்.
மாமேதை அம்பேத்கரின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை உள்வாங்குவோம்.
இந்திய அரசியல் சட்ட ஆட்சியை உருவாக்குவோம்..
ஒருங்கிணைந்து சீரழிவு சக்திகளை விரட்டியடிப்போம்…
(மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் நீதிபதி கர்ணன் விவகாரம் குறித்து இன்று (17.02.2016) வெளியிட்ட அறிக்கை நன்றியுடன் இப்பக்கத்தில் வெளியாகிறது.)
நன்றி: மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக