ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

37. ஓரு நல்ல புத்தகம் அதன் ஆசிரியரைவிட மிகவும் புத்திசாலித்தனமானது!
37. ஓரு நல்ல புத்தகம் அதன் ஆசிரியரைவிட மிகவும் புத்திசாலித்தனமானது!
(இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)


மு.சிவகுருநாதன்


  (அகம் புறம் பதிப்பக  வெளியீடாக, ரஃபேல் மொழிபெயர்ப்பில்  2010 இல்  வெளிவந்த ‘அம்பர்தோ எகோ – சில நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு’ என்ற நூல் குறித்த பதிவு.)

              உம்பர்டோ ஈக்கோ (Umberto Eco) நாவலாசிரியராகவும் குறியியலாளராகவும் அறியப்பட்டவர். (இவரது பெயரை எவ்வாறு உச்சரிப்பது என்கிற சர்ச்சையை இங்கு தவிர்த்து விடுவோம்.) அது என்ன குறியியல்? Semiotics அல்லது Semiology என்றழைக்கப்படும் குறியியல் ஃபெர்டினண்ட் டி சசூர் என்ற மொழியியல் அறிஞர் மூலம் பிரபலமடைந்த ஓர் மொழியியல் துறையாகும். இவர் குறியை (sign) குறிப்பான் (signifier) குறிப்பீடு (signified) என இரண்டாகப் பகுப்பார். பிரஞ்சுப் பேராசிரியர் ரோலான் பர்த் ரோஜாப் பூக்கள் செடியில் இருக்கும்போது வெறும் பூக்கள் தான். அந்தப் பூக்கள் காதலுக்கு அடையாளமாக ஒருவருக்குக் கொடுக்கும்போது அப்பூங்கொத்து ‘குறிப்பான்’ ஆகிறது. காதல் என்பது குறிப்பானால் அர்த்தப்படுத்தப்படும் ‘குறிப்பீடு’ ஆகிவிடுகிறது. இங்கு ரோஜாப் பூ வெறும் ‘குறி’ மட்டுமே. (பார்க்க: தமிழும் குறியியலும் – தமிழவன்: வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், நவம்பர் 1992)    உம்பர்டோ ஈக்கோ The Name of the Rose, Foucault’s Pendulum,  The Island of the Day Before,  Baudolino,  The Mysterious Flame of Queen Loana,  The Prague Cemetery,  Numero Zero  ஆகிய நாவல்களை எழுதியவர். The Name of the Rose என்னும் இவரது முதல் நாவல் 1980 –ல் வெளியாகி கோடிக்கணக்கில் விற்றுச் சாதனை படைத்த புத்தகம். இது இதே பெயரில் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது. (இந்நாவல் பற்றிய அறிமுகத்திற்கு  இன்றைய ‘தி இந்து’ பிப்ரவரி, 21, 2016 நாளிதழின் கலை ஞாயிறு பகுதியில் எம்.டி.முத்துக்குமாரசாமி எழுதிய ‘ரோஜாவின் பெயர்’ கட்டுரையைப் பார்க்கவும்.) துப்பறியும் நாவல்கள் பாணியில் அமைந்த இவரது நாவல்கள் சாதாரண நாவல்கள் போலல்லாமல் ஆழ்ந்த வாசிப்பைக் கோருபவை.  இத்தகைய திரில்லர் சாயலை டான் பிரவுன் எழுதிய ‘டாவின்சி கோட்’ போன்ற நாவல்களில் காணமுடியும். இத்தகைய பாதிப்பில் தமிழவன் ‘ஜி.கே.எழுதிய மர்ம நாவல் என்னும் பிரதியை எழுதிப் பார்த்தார். (வெளியீடு: பல்கலைப் பதிப்பகம், சென்னை: அக்டோபர் 1999.) தமிழ்ச்சூழலில் தமிழவனின் பல நாவல்களைப் போல இதுவும் உரிய கவனிப்பை பெறாதாது தமிழுக்கு இழப்புதான்.      ஈக்கோ Mouse and Rat, On Ugliness, Turning Back the Clock, The Infinity of Lists ஆகிய அ-புனைவுகளையும் The Open Work, Misreadings, A Theory of Semiotics, Semiotics and the Philosophy of Language, The Limits Interpretation ஆகிய கல்விப்புல நூற்களையும் எழுதியவர். தன்னை ஓர் பின் - நவீனத்துவவாதியாக அல்லாது குறியியலாளராக இனம் காண விரும்பினார். மேலும் தான் நாவல் எழுதும்போது குறியியலைப் பற்றி நினைப்பதில்லை.  அந்த வேலையை  பின்னாளில் யாரோ ஒருவர் செய்யட்டும் என்கிறார். 

    ஜனவரி 05, 1932 இல் இத்தாலியில் பிறந்த ஈக்கோ அவர்களின் மூன்று நேர்காணல்களை ரஃபேல் இக்குறுநூலில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நேர்காணல்கள் அவரது  ஆளுமையை வெளிப்படுத்தப் போதுமானவை. எழுத்தில் உங்களை எந்த வகையில் அடையாளப்படுத்திக் கொள்வீர்கள் என்ற கேள்விக்கு, “நான் ஓர் கல்வியாளன். கிழமையின் கடைசி நாட்களில் கோல்ஃப் விளையாடுவதற்குப் பதிலாக நாவல் எழுதுகிறேன்”, என்கிறார். 

    “ஒரு வகையில் எல்லா நாவல்களும் சுயசரிதைத் தன்மை வாய்ந்த்தவையே”, என்று  சொல்லும் ஈக்கோ “ஒரு பாத்திரத்தைக் கற்பனை செய்கையில் நீங்கள் அவனுக்கோ அவளுக்கோ உங்கள் தனிப்பட்ட ஞாபகங்களிலிருந்து சிலவற்றை வழங்குகிறீர்கள். உங்களிலிருந்து ஒரு பகுதியை ஒரு பாத்திரத்துக்கும் மறு பகுதியை இன்னொரு பாத்திரத்துக்கும் கொடுக்கிறீர்கள்”, என்று நாவலில் வரும் சுய சரிதைத் தனமை குறித்து விளக்கமளிக்கிறார்.    

         Foucault’s Pendulum நாவலில் வரும் பெல்போ (Belbo) பாத்திரம் சவக்காலையில் நின்றுகொண்டு ட்ரம் வாசிப்பது முழுக்க சுயசரிதைத் தன்மையானது என்றும் “நான் பெல்போ அல்ல; ஆனால் அது எனக்கு நடந்தது”, என்கிறார். ட்ரம்ஸ் வாசிக்க பயிற்சி வேண்டும். சிறுவனாயிருக்கும் நன்றாக வாசிப்பேன். தொலைந்து போன அத்திறனை மீண்டும் உண்டாக்க 2000 டாலர் விலையுள்ள உயர்தரமான ட்ரம் ஒன்றை வாங்கியிருப்பதாகவும் சொல்கிறார்.     குறியியலை  ‘பொய் மொழிதல் கோட்பாடு’ (A theory of lie) என்று சொன்ன முன்பு சொன்ன ஈக்கோ, ‘உண்மைக்கு மாறுபட்டதைக் கூறுதல்’ என்று சொல்லியிருக்க வேண்டும், என்றும் மொழி அனைத்து வகையான சாத்தியப்பாடுகளை கொண்ட தன்மையைக் கண்டடைகிறார். பொய் மொழிதல் மனிதர்களின் சிறப்பான திறன்களுள் ஒன்று எனக் கணிக்கிறார். 

    டான் பிரவுனின் டாவின்சி கோட் பற்றிக் குறிப்பிடும்போது, “Foucault’s Pendulum நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம்தான் அதன் ஆசிரியர் Dan Brown! நான்தான் அவரைக் கண்டுபிடித்தேன்.  Dan Brown என்று ஒருவர் இருந்துகொண்டிருக்கிறார் என்பதைப் பற்றியே நான் அய்யப்படுகின்றேன் என்றும் விளக்குகிறார். 

     வரலாற்று நாவல்கள் பற்றிய தனது பார்வையைச் சொல்லி, வரலாற்று நாவலை ஆக்கச் செயல்பாட்டுக் கூறுகளுடன் இணைத்துத் தர விரும்பும் உத்தியை,  “எனது அனைத்து நாவல்களிலும் எப்போதும் நாவலினூடாக வளர்ந்து, கற்றுக்கொண்டு, சிக்கல்களை எதிர்கொண்டு, தொடர்ச்சியான பட்டறைவினூடு வரும் ஓர் இளம் பாத்திரம் இருக்கும்”, என்பதன் வழி புலப்படுத்துகிறார். 

   “நான் மதத்தை நம்புகிறேன். மனிதர்கள் மதம்சார் பிராணிகள். இந்த வகையான மனிதரின் குணாம்சம் புறக்கணிக்கப்படவோ, நிராகரிக்கப்படவோ முடியாது”, என்று சொல்லும் ஈக்கோ எனவேதான் கடவுளை நம்பாவிடினும் மதங்களைப் பற்றி எழுத வேண்டியுள்ளதைத் தெளிவுபடுத்துகிறார்.   கடவுளின் நகைச்சுவை உணர்வு பற்றிய வினாவிற்கு, “மிகவும் மாறுபட்டதும் தனித்துவமானதுமான மனிதச் சொத்து என்ன? நாம் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்து வைத்திருக்கும் நிலைதான்… அது ஆர்வமூட்டும்படியானதாக இல்லாவிட்டாலும் மனித அறிவில் மிக முக்கியமான பகுதி. நாங்கள் சாகவேண்டும் என்ற உண்மையை அறிந்து வைத்திருப்பதனால், நாங்கள் சிரிப்பின் வழியாக அதர்கு பதில் வினையாற்ற முயற்சிக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன். இந்த வகையில் கடவுளுக்கு இருப்பு இருந்தால், அவருக்குச் சிரிப்பதற்கு எந்தத் தேவையுமிருக்காது”, என்று சொன்ன உம்பர்ட்டோ ஈக்கோ பிப்ரவரி 19, 2016 இல் இத்தாலியின் மிலான் நகரில் 84 வது வயதில் மரணமடைந்தார்.  
  
(பிப்ரவரி 19, 2016 இல் இத்தாலியின் மிலான் நகரில் 84 வது வயதில் மரணமடைந்த உம்பர்டோ ஈக்கோவிற்கு எமது அஞ்சலிகள்!)    

அம்பர்தோ எகோ – சில நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு
தமிழில்: ரஃபேல்

பக்கங்கள்:   93
விலை: ரூ. 40 

முதல் பதிப்பு: 2010 

வெளியீடு

கனடா அருவி வெளியீட்டக உதவியுடன்…
அகம் புறம்,
மனை எண் 56, குகன் தெரு,
வளசரவாக்கம்,
சென்னை – 600087.

தொலைபேசி: 044-42805389
செல்: 9840676895
மின்னஞ்சல்: akampuram@gmail.com


இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்
திருவாரூர் 


பன்மை


மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com 

வாட்ஸ் அப்:   9842802010
செல்:          9842402010


1 கருத்து:

கருத்துரையிடுக