36. அன்பில் திளைக்கும் நினைவுக் குறிப்புகள்
(இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)
மு.சிவகுருநாதன்
(உயிர்மை வெளியீடாக ஆகஸ்ட்
2014 இல் வந்திருக்கும் அ.மார்க்ஸ் –ன் ‘கரையும்
நினைவுகள்’ என்னும் நினைவுக் குறிப்புகள் நூல் குறித்த பதிவு.)
அ.மார்க்ஸின் வழக்கமான நூல்களின் தன்மையிலிருந்து
சற்று விலகி முகநூலில் எழுதப்பட்ட இந்த நினைவுக் குறிப்புகள் பலரைப் பற்றிய புதிய கோணங்களில்
பதிவு செய்கிறது. மார்க்சியம், தலித்தியம், பின் நவீனத்துவம், விளிம்பு நிலையினர்,
சிறுபான்மையினர், இலக்கியம், அரசியல், மனித உரிமைகள், வரலாறு என தீவிரமாக எழுதிவந்த
அ.மார்க்ஸ் அவற்றை விட்டு கொஞ்சம் விலகி, அவரே சொல்வதுபோல், “இவை பெரும்பாலும் இரவு
11 மணிவாக்கில் ஒரு ஓய்வான, குதூகலமான, உள்நோக்கிய சிந்தனை வயப்பட்ட தருணங்களில் பதிவு
செய்யப்பட்டவை”.
சுயம் சார்ந்த எழுத்துகளில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் எழுத்து வடிவை பின்
நவீனத்துவச் சிந்தனையாளர்கள் கையாண்டதும், இவ்வகை எழுத்துகள் வாசிப்பவர்களுக்கு உள்ள
நாட்டம், நினைவுகளைப் பகிர்வதில் உள்ள மனித உந்துதல், பகிர்தலின் மூலம் ஏற்படும் சுமையிறக்கம்
பற்றியெல்லாம் அ.மா. முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
கோட்பாடுகளில் இறுக்கம் தவிர்த்து அவர் எழுதிய இரண்டு நூல்கள் தற்போது நினைவிற்கு
வருகின்றன. ஒன்று ‘கருப்புப் பிரதிகள்’ வெளியிட்ட ‘விலகி நடந்த வெளிகள்’; மற்றொன்று
அடையாளம், சுழல், உயிர்மை வெளியிட்ட நான் புரிந்துகொண்ட நபிகள். (இதன் மூன்றாம் பதிப்பு
உயிர்மை வெளியிட இருக்கிறது.) இந்நூலில் கூட அதைப்பற்றிய சிலாகிப்பு உள்ளது. தய்.கந்தசாமி
‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ நூலைப் படித்துவிட்டு அதன் மொழிவளத்தைப் பாராட்டியதையும்,
“நபிகள் நாயகத்தின் மரணத்தை எழுதும்போது நான் கண்ணீர் விட்டழுதேன். நான் அப்போதெல்லாம்
மையூற்றிய பேனாவால் ஏ4 காகிதத்தில்தான் எழுதுவேன்… என் கண்ணீரால் அந்த வரிகள் கலைந்தன…”,
என்ற வரிகள் இதனை உணர்த்தும்.
முகநூல் என்னும் ஊடகத்தின் வழியே பலதரப்பட்ட விஷயங்களையும் தனது நினைவலைகளையும்
அன்பையும் பகிர்ந்தளிக்கிறது இந்நூல். 35 குறிப்புகளில் ஜெயகாந்தன், தி.க.சி., கரிச்சான்
குஞ்சு, பி.எஸ்.ஆர். போன்ற ஒரு சிலரைத்தவிர எஞ்சியவர்கள் வெகு சாமான்யர்கள். இவர்களைப்
பற்றியும் தனித்த பார்வைக் கோணத்தை முன் வைக்கத் தவறவில்லை.
இளமைப் பருவத்தில் பத்தரிக்கைகளில் வரும் ஜெயகாந்தனின் படங்களை மெழுகு வைத்துத்
தேய்த்துப் புத்தகங்களில் பிரதி செய்து கொண்ட அனுபவங்களை வெட்கப்பட்டுச் சொல்லும் மார்க்ஸ்,
அவரது எழுத்துகள் மீதான விமர்சனம் உண்டென்றபோதிலும், பிற்கால எழுத்துகள் மார்க்சியம்
முன்வைக்கும் பொதுமைச் சிந்தனைகளின்பால் இம்மியும் வெறுப்பை ஏற்படுத்திவிடாது. அனைத்து
தரப்பு மக்களையும் நேசிக்கும் ஜெயகாந்தனின் எழுத்துகள் வெறுப்பை விதைக்கும் ஜெயமோகன்
போன்றோரிடமிருந்து எட்டாத உயரத்தில் நிற்பதையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
நக்சல்பாரிகளுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து கும்பகோணத்தில் நடந்த ஊர்வலத்தில்,
“முதல் வரிசையில் தடியை உயர்த்தியவண்ணம் கரிச்சான் குஞ்சு என்கிற வித்வான் ஆர்.நாராயணசாமி
அய்யர் அன்று ‘நக்சல்பாரிகள் தேசபக்தர்கள்’ என்று முழக்கமிட்டு வந்ததை”, சொல்லும் மார்க்ஸ்,
அவருக்கு காட்ராக்ட் ஆபரேஷனுக்கு பொ.வேல்சாமி ரூ.800 ஏற்பாடு செய்தல், தேவிபிரசாத்
சட்டோபாத்யாயா நூலை மொழிபெயர்த்து வெளியிட்டவுடன்
கிடைத்த தொகையில் ரூ. 800 ஐ திரும்ப அளித்தல், தலித் இலக்கிய முன்னோடி டேனியல்
இறுதிப்பயணத்தில் கலந்து கொண்டு மண் தூவி அஞ்சலி செலுத்திய கரிச்சான் குஞ்சுவின் இன்னொரு
முகத்தை அறிய முடியும்.
தோழர் பி.எஸ்.ஆர். தலித் வீடுகளில் கீரைத்தண்டு சேர்த்த கருவாட்டு குழம்பு சாப்பிட்டதையும்,
“இன்னக்கிந் கீரந்தன்டுங் குழம்புதானா?”, என்று தன்னை மறந்து கேட்டுவிட்டு, அவர்களைப்
புண்படுத்தியதை எண்ணி தவித்துப் போனதை வழக்கறிஞர் சிவ ராஜேந்திரன் சொன்னதைக் குறிப்பிட்டுள்ள
அழகே தனி. பி.எஸ்.ஆரின் தலைமறைவு வாழ்வில் ஒருவர் இல்லத்தில் தங்கியிருந்தபோது நெய்யை
அவர் விரும்பியுண்டதால் ஹார்லிக்ஸ் பாட்டிலில் அவ்வீட்டார் நெய் ஊற்றித்தர, “இல்லை,
நான் எதையும் என்னோட எடுத்துட்டுப் போறதில்ல”, என்று மறுத்த தகவலைச் சொல்லிவிட்டு,
“ஆம், தோழர் பி.எஸ்.ஆர். அவரோடு எதையும் அவரது சாதி, வருணம், மொழி, இனம் என எதையும்
எடுத்துக்கொண்டு போனவரல்ல”, என்று முடிக்கும் மார்க்ஸின் வரிகள் தனித்துவம் மிக்கவை.
ஒருமுறை நண்பர் கு. பழனிச்சாமி திருத்துறைப்பூண்டியை ‘புங்குடு தீவு’ என்று வருணிக்க,
இப்போதைய சாலைகள், பேருந்து வசதிகள் இல்லாத காலத்தில்தான் தோழர் பி.எஸ்.ஆர். பணி செய்தார்
என்று கூறியபோது, “இதெல்லாம் இல்லாட்டி என்ன, கொள்கை இருந்துச்சுல்ல”, கு.ப. நகைச்சுவையாக
குறிப்பிட்டதை ஒரு கட்டுரையில் சுட்டியிருப்பார்.
பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், தேசியம் பற்றிய விமர்சனம், அடித்தள ஆய்வுகள்
போன்ற நிறப்பிரிகையின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட பலர் எதிர்த்தனர். அப்போது
அ.மார்க்சை கடுமையாக விமர்சித்து தி.க.சி.எழுதினார். அதைப்பற்றி அவரது அஞ்சலிக் குறிப்பில்
கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். “அப்போது தி.க.சி.
அவர்களும் எங்களைக் குறிப்பாக என்னை விமர்சித்தார். அது அவரது இயல்பையும் வழக்கமான
மென்மையையும் தாண்டிச் சற்றுக் கடுமையாக மட்டுமல்ல, கொஞ்சம் அவரது பெருந்தன்மைக்கு
பொருந்தாததாகவும் இருந்தது. நாங்கள் மட்டுமென்ன, அன்றைக்கு இருந்த இளமைத் திமிருடன்
எல்லாரையும் பாராட்டிவிடும் அவரது போஸ்ட்கார்டு விமர்சனத்தைக் கடுமையாகக் கிண்டலடித்தோம்.
அப்படி நாங்கள் செய்திருக்கக்கூடாது”.
உண்மையறியும் குழு அனுபவங்கள் அவரை
மட்டுமல்ல படிக்கும் பிறரையும் தூங்க விட மறுப்பவை. நாகூர் எல்லையில் வாஞ்சூர்
எல்லையில் சைக்கள் கடை நடத்தும் ராஜேந்திர பிரசாத் போலீசால் இழுத்துச்செல்லப்பட்டு அடைத்துக் கொலை செய்யப்பட்ட
சுரேசைக் காப்பாற்ற முயன்றது பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை அத்துமீறல், ஆதிக்கசாதி வன்முறை
ஆகியவற்றில் நீதிக்கான போர் புரியும் மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் விவரித்த நிகழ்வுகள்
கண்ணீரை வரவழைப்பவை. பாதிக்கப்பட்டவர்களின் சம்மதம் பெற்று நீதிமன்றம்
சென்று வழக்குப் போராட்டம் நடத்துவதன் இன்னல்கள் யாரையும் சோர்வடைய வைக்கும். ஆனால்
இன்றும் தொடரும் வழக்கறிஞரின் பணிகள் சமூகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்வது.
அப்பாவைப் பற்றியும் அவரது செயல்பாடுகள் வளர்த்த
நாய்கள், சரத் சந்திரர், ஜெயகாந்தனை அறிமுகம் செய்தது போன்றவை பதிவாகின்றன. அவரே சொல்வதுபோல்
அம்மாவைப் பற்றி அதிகம் எழுதியதில்லை. சம்பாதித்துக் கொண்டு வருவான் என சிங்கப்பூருக்கு
கப்பலேற்றிய அனுப்பிய பிள்ளை தலைக்கு விலை கூறப்பட்டு, ஒரு லெதர் பேக், ஒரு தங்க நிப்புடன்
கூடிய பார்க்கர் பேனா, ஒரு கில்லட் ரேசர், பின் அவர் எப்போது பயன்படுத்தாமல் போன இரண்டு
செட் பேன்ட் சர்ட்டுகளுடன் வந்த நின்ற மகனை ‘தோல்பையும் சவரக்கத்தியும்’ என்றும் பொருமும்
அப்பாயி, சிங்கப்பூர், மலேயாவில் தலைக்குப் பத்தாயிரம் வெள்ளி விலை கூறப்பட்டு பிரிட்டிஷ்
அரசால் தேடப்பட்ட அப்பா, அவர் வளர்த்த ஊர்வசி, அப்பா இறந்த சோகத்தில் இறந்துபோன ஜிக்கி,
மதுரையிலிருந்து தான் வாங்கி வந்து வளர்க்கும் விஜய் ஆகியவை இவரது எழுத்தில் நம் கண்முன்
வந்து போகின்றன.
சரத்சந்திரரின்
‘கனவு முடியவில்லை’ நாவலை வாசிக்கும்போது அப்பாவின் நினைவுகள் கிளர்வதை எப்படித் தவிர்க்க
முடியும்? தொடரும் நினைவுகள் அவரை ஏதோ ஒருவகையில் துரத்திக்கொண்டே இருக்கின்றன. விஜியின்
தம்பியை வங்கப் பெண் காதலிக்க, அது நிறைவேறிய பின்னர் அவர்களுக்கு பிறந்த ஆண்குழந்தைக்கு
சரத்சந்திரன் என்று பெயரிட்ட நிகழ்வு சொல்லப்படுகிறது.
மன்னார்குடி கல்லூரியில் தலித் மாணவர்கள் விடுதிக்கான போராட்டத்தில் அ.மா. வாழ்க்கையில்
பிரதான இடமுண்டு. அக்கல்லூரி மாணவர் விடுதியைப் பார்த்துக் கிளர்ந்தெழுந்த நினைவுகளை,
நெடுவாக்கோட்டை உ.ராஜேந்திரன், தய்.கந்தசாமி, தகட்டூர் ரவி, வழக்கறிஞர் சிவ.ராஜேந்திரன்,
உஞ்சைராஜன் போன்றோரின் பங்கேற்பில் நிகழ்ந்த அப்போராட்டக் காலத்திற்கு நாம் சென்று
திரும்புகிறோம்.
2000 களின் தொடக்கத்தில் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரில் அமைப்பொன்றைத் தொடங்கி
காதலை தினம் கொண்டாடியது, அயன்புரம் ராஜேந்திரன், நடராஜ், ‘கருப்புப் பிரதிகள்’ நீலகண்டன்,
அமுதா போன்றோருடன் செயல்பட்ட நிலை, தனது மகள்கள் அமலா, பாரதி இருவருக்கும் சாதி, மத
மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றதும் பதிவு செய்யப்படுகிறது.
இதழியல் பயிற்சியளிக்க ஓர் நிறுவனம் தொடங்க ஆசைப்படும் இஸ்லாமியப் பேராசிரியர்,
“ஏதாவது சிக்கல் வருமா”, என்று கேட்பது இந்த
சமூகத்தின் மீது அறைவது போலுள்ளது. கிருஸ்தவர்களுக்கு வீடு வாடகைக்கு விட மறுக்கும்
என்று சொன்னவர்கள் பிறகு வீட்டை அளிப்பதும் கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்களைப் பகிர்வதும்,
ரம்ஜான் நோன்புக் கஞ்சி அளிப்பதையும், கிருஸ்மஸ் கேக் வாங்கி அளிக்க வேண்டுமெனச் சொல்லி,
“ஆகா, பாரதப் பண்பாடு என்று ஒன்று இருந்தால் அது இதுதான். நமக்கு ஏதடா கலாச்சார தேசியம்…
நம்முடைய தேசியம் காந்தி மகான் சொன்ன புவியியல் தேசியம் தானடா.. இந்தப் புவி எல்லைக்குள்
வாழ நேர்ந்த எல்லோரும் சகோதரர்கள் அன்றோ… நீயும் நானும் மட்டுமா? காக்கை குருவி எங்கள்
சாதி.. நீலக் கடலும் மலையும் எங்கள் கூட்டம்.. நோக்க நோக்கக் களியாட்டம்”, என்று உரக்கச்
சொல்வதையும் காணமுடிகிறது.
மலேசியாவின்
கெடா (கிடாரம்) மாநிலம் சுவாமி ப்ரம்மானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் சுவாமிகளின் உபசரிப்பு,
ஆசிரமத்தில் தங்கிப் படித்த இளைஞர்களுடன் உறவாடல் என இரு கட்டுரைகளாக விரிகிறது. தோழர்கள்
ஈஸ்வரன் - ரத்னா, விடியல் சிவா, மயிலாடுதுறை
இராமதாஸ், சுந்தரம் டாக்டர், விஜயகுமார் போன்றவர்களை அறிமுகம் செய்யும் பதிவுகள் இனிக்கின்றன.
பேரா.கோச்சடை தேர்வு செய்து கொடுத்த ஒரு ஜோடி முயல்களுமே பொண் குட்டிகள் என கண்டுபிடித்துச்
சொன்ன அம்மாலயம் சந்து ‘அவ்வா’ போன்ற சாமான்யர்கள் பற்றிய பதிவுகளிலும் அன்பும் நேயமும்
உருகி வழிவதை அ.மார்க்ஸின் இந்த விலகி நடந்த எழுத்துகளில் உணர முடிகிறது.
இந்தக் குறிப்புகளில் நிறைய இடைவெளிகள், விடுபடுதல்கள் உண்டு. அவற்றையும் எழுதி
இணைத்து, காலவரிசைப்படித் தொகுக்கும்போது ஓர் முழுமையான சுயசரிதை கிடைக்கலாம். அவரது
வேறு தொகுப்பிலுள்ள சில கட்டுரைகளையும் இதனோடு இணைப்பதில்கூட அது சாத்தியமாகக் கூடும்.
அதனாலென்ன? பின் நவீனத்துவ நாவல் போன்று முன்னும் பின்னுமாக கலைத்துப்போட்ட நினைவுக்குறிப்புகள்
கூட அழகுதான்!
கரையும்
நினைவுகள் – அ.மார்க்ஸ்
பக்கம்:
144
விலை: ரூ. 115
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2014
வெளியீடு:
உயிர்மை
பதிப்பகம்,
11/29
சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்,
சென்னை
-600018.
பேச:
044 – 249934448,
இணையதளம்:
www.uyirmmai.com
இங்கும் தொடரலாம்:
மு.சிவகுருநாதன்
திருவாரூர்
பன்மை
மின்னஞ்சல்:
musivagurunathan@gmail.com
வாட்ஸ் அப்: 9842802010
செல்: 9842402010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக