புதன், ஆகஸ்ட் 09, 2017

பட்டியல் அரசியல்

பட்டியல் அரசியல்

மு.சிவகுருநாதன்



        திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளி ஒன்றின் ஆசிரிய நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பள்ளியில் புகைப்படமாக வைக்க, 10 விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தேன். இப்பட்டியல் ஏற்கப்படுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இம்மாதிரிப் பட்டியல் தயாரிப்பதன் பின்னணியிலுள்ள அரசியல் பேசவேண்டியது. முதலில் எனது பட்டியலைத் தந்து விடுகிறேன்.

01. ம.சிங்காரவேலர் (1860 - 1946)

02. கோபாலகிருஷ்ண கோகலே (1866 - 1915)

03 . மகாத்மா காந்தி (1869 - 1948)

04. ஜவகர்லால் நேரு (1889 - 1964)

05. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (1897 - 1945)

06. ஈ.வெ.ராமசாமி (1879 - 1973)

07. கு.காமராஜ் (1903 - 1976)

08. பி.சீனிவாசராவ் (1906 - 1961)

09. பகத்சிங் (1907 - 1931)

10. ப.ஜீவானந்தம் (1907 - 1963)



      ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அரசியல் ஒளிந்துள்ளது என்பது மிக வெளிப்படையானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இவற்றுள் இடம் பிடிக்கின்றன. இப்படி பட்டியல் போடுவது மிகவும் சிக்கலானது. எண்ணிக்கை சிக்கலை இன்னும் தீவிரப்படுத்தும். 10 க்குள் அடக்குவது அவ்வளவு எளிதான காரியமா என்ன? இலக்கிய உலகில் க.நா.சு. வின் பட்டியல் வெகு பிரசித்தம். அதை ஜெயமோகன்கள் தொடர்வதும் உண்டு. ஆனால் சில நேரங்களில் பட்டியலிடுதல் தவிர்க்க முடியாதது.

     வழக்கமாக நமது பாடநூல் வரலாறுகளின் செக்குமாட்டுத் தன்மையைப் புரிந்து கொள்வது நலம். தமிழ் சினிமா பாணியிலான ஒரு புள்ளிக் குவி மையக் கோட்பாடே இவற்றின் உட்கிடை. பன்மைத்துவம் அரசியல் சட்டத்திலும் வெற்றுப் பேச்சிலும் மட்டுமே; நடைமுறையில் தலைகீழ் மாற்றம். பொய்கள், புனைவுகள் மற்றும் அவதூறுகளால் நிரம்பியது வரலாற்றுப் பாடநூல்.

    இந்திய தேசிய காங்கிரஸ்தான் இந்திய அளவிலான முதல் அரசியற்கட்சி. அதிலிருந்துதான் எல்லாம் கிளைக்கின்றன. கம்யூனிஸ்ட்கள், சோஷலிஸ்ட்கள், ராஷ்டிரிய சுயம் சேவக்குகள், ஜன ஜங்குகள் எல்லாம் இங்கிருந்து வந்தவர்களே. எனவே காங்கிரஸ் என்கிற ஒற்றை மையச் சொல்லாடல்களின் காலம் முடிந்துவிட்டது. இருப்பினும் நமது வரலாற்றெழுதிகள் அதுவும் குறிப்பாக பாடநூல் எழுதும் நோட்ஸ் வியாபாரிகள் இவற்றை உணர்ந்து கொண்டதேயில்லை.

     தேசிய இயக்கத்தில் தமிழகப் பங்களிப்பு அதிகம். இவற்றில் நிறைய இருட்டடிப்புகள் உண்டு. இந்தியா, தமிழ்நாடு ஆகிய இரண்டுக்கும் சரிபாதி பிரதிநிதித்துவம் இப்பட்டியலில் உண்டு. தேச விடுதலையோடு மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் ஆளுமைகளை நாம் மறந்திடலாகாது. நாட்டு விடுதலைக்குப் பின் தியாகி பென்சன் வாங்கிக்கொண்டு வெறுமனே இல்லாமல் சாகும் வரையிலும் மக்கள் பணி ஆற்றிய தலைவர்கள் உண்டு. பிரித்தானியரை வெளியேற்றினால் போதும் என்ற எண்ணத்தை மட்டும் கொண்டிராமல் இன்னும் ஒழிக்க வேண்டிய பல்வேறு சமூகக் கொடுமைகளுக்காக இவர்கள் போராடினர்.

     சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலருக்கு இந்திய, தமிழக வரலாற்றில் தனியிடம் உண்டு. ஆனால் இவர் நமது பாடநூல் புலிகளால் நிராகரிக்கப்பட்டவராக உள்ளார். எனவே கல்விப்புலத்தில் இவரை அறிமுகம் செய்வது இன்றியமையாதது.

    காந்தி, நேரு, நேதாஜி போன்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மன்மோகன்சிங், நரேந்திர மோடி போன்ற பிரதமர்களைக் கண்டபிறகுதான் நேரு போன்ற ஆளுமைகளின் வீச்சு புரிகிறது.

    2009 இல் இயற்றப்பட்ட இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர் கோகலே. 100 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கட்டாயக் கல்வி பற்றிய கோரிக்கையை பிரிட்டிஷ் அரசிடம் வைத்தவர். அவரது கனவு 100 ஆண்டுகள் கழித்துதான் நிறைவேறியிருக்கிறது, அதுவும் ஏதோ ஒப்புக்கு.

    கோகலேவுக்கு எதிரிடையாக செயலாற்றிய திலகர் பாரம்பரியத்தில் வந்தவர்கள் இன்று கல்வி உரிமையைச் சிதைக்கத் தொடங்கியிருப்பதை இப்போதாவது புரிந்து கொள்ளலாம். இது வெறும் தீவிரவாதி, மிதவாதிப் பாகுபாடு மட்டுமல்ல; அவற்றையும் தாண்டிய வெறுப்பரசியலின் வெளிப்பாடிது.

     சொகுசாக இருந்த சுமார் 600 சுதேச அரசர்கள் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட பிறகும் அவர்களது வாரிசுகள் இன்று மரியாதையாக நடத்தப்பட்டு, வலம் வரும் நிலையில், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத் தலைவர்கள், தலித் தலைவர்கள் இன்னும் பிரிட்டிஷ் முகவர்களாகவே இருப்பது ஏன்? இதுதான் இந்தியாவில் நிலவும் வெறுப்பரசியல் நிலைப்பாட்டின் உச்சம்.

    அதனை முறியடிக்கவே இப்பட்டியலில் பெரியார் இடம் பெறுகிறார். சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்னதாக இவர் தீவிர காங்கிரஸ் தொண்டர், குடும்பத்துடன் கள்ளுக்கடை மறியல் செய்தவர், கதராடை அணிந்து, அவற்றை விற்றவர், வைக்கம் வீரர். 1947 ஆகஸ்ட் 15 ஐ துக்க நாளாக அறிவித்தவர். இது எவ்வளவு உண்மையானது என்றறிய ‘நீட்’ மட்டும் போதுமே!

    காங்கிரஸ் (இ) மற்றும் தி.மு.க., அ.இ.அ.தி,மு,க, போன்ற திராவிடக் கட்சிகளில் எளிமை, தூய்மை, நேர்மைக்கு அவ்வளவு பஞ்சம்! காங்கிரசுக்குக் கூட ஒரு காமராஜ் இருந்தார். இன்றும்கூட தேசிய அளவில் முன்னாள் கேரள முதல்வரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோனியைச் சொல்கிறார்கள். ஆனால் திராவிடக் கட்சிகளில் மருந்துக்குக் கூட ஒருவர் கிடைப்பதரிது. இங்கு எளிமை, தூய்மை, நேர்மை எல்லாம் கிலோ எவ்வளவு ரகம்தான்!

     பகத்சிங் போன்ற இளைஞர்களுக்கு மக்கள் சார்ந்த கருத்தியல் அடித்தளம் இருந்தது. இவரைப் போன்றவர்களை வாஞ்சி (அய்யர்) நாதனுடன் ஒப்பிடுவது சரியல்ல. இவர்களுக்கிடையே உள்ள கருத்தியல் வேறுபாடு கணக்கில் கொள்ளப்படுதல் அவசியம். இருப்பினும் இம்மாதிரியான கொலைகளை மிகையாகக் கற்பனை செய்தல், விதந்தோதுதல் நல்லதல்ல. தீவிரவாதச் செயல்பாடுகள், அரசியல் படுகொலைகள், அழித்தொழிப்பு பொன்ற வகையானவற்றை அணுகுவதில் நமக்கு கவனம், தெளிவு தேவை.

    கர்நாடகாவில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து, கீழத்தஞ்சை தலித் மக்களுடன் வாழ்ந்த மறைந்த பி.எஸ்.ஆர். எனப்படும் பி.சீனிவாசராவ் இங்கேயே (திருத்துறைப்பூண்டி) அடக்கமானவர். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே ‘தியாகி பி.எஸ்.ஆர். மணிமண்டபம்’ உள்ளது. இவர் சுதந்தரப் போராட்ட வீரர் மட்டுமல்ல; உழைக்கும் அடித்தட்டு மக்களை ஒன்றுதிரட்டி இயக்கமாக்கியவர். இப்பகுதியில் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் வளர்ச்சியில் இவரது பங்கு அதிகம். இன்றும் இப்பகுதி தலித் குடும்பங்களில் சீனிவாசன்கள் அதிகம்.

    ப.ஜீவானந்தம் அவர்களின் எளிமை, நேர்மை, உழைப்பு ஆகியன படித்துக் கேட்டு வியப்படையும் ஒன்றல்ல; மாறாக பொது வாழ்வில் கடைபிடிக்க வேண்டியது. அந்த வகையில் காமராஜை விட எளிமையான, விடுதலைப் போராட்ட வீரர். கம்யூனிஸ்ட் என்பதாலே தொடர்ந்து மாணவர்களிடம் தொடர்ந்து விலக்கி வைக்கப்படுபவர்கள்.

    கருத்தியல் இல்லாதவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? ஒவ்வொரு முறை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்படும்போதும் அதனை எதிர்ப்பவர்கள் இடதுசாரிகளே. இம்முறை தமிழக சட்டமன்றத்தில் அவர்களது குரலே இல்லை.

     காந்தியம் காந்தியோடு புதையுண்டு போனது. ஆனால் மார்க்சியம் இவர்களால் இன்றும் வாழ்கிறது. காமராஜ் ஆட்சி என்று பெருமைப்படுகின்ற ஒற்றைப் புள்ளியைத் தவிர வேறு இல்லாத நிலையில், நிருபன் சக்கரவர்த்தி, மாணிக் சர்க்கார் என்ற நீண்ட பாரம்பரியம் இடதுசாரிகளுக்கு மட்டுமே உண்டு. சங்கரய்யா, நல்லக்கண்ணு, பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் என்று நீண்டத் தொடர்ச்சியை இங்கு மட்டுமே காணமுடியும்.

    இடதுசாரிகளிடமும் சில சிக்கல்கள், முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன. அவைகள் சரி செய்யப்பட வேன்டியவை. இன்றைய சூழலில் இந்தியாவில் இவர்களை விட்டால் நேச சக்திகள் ஏதுமில்லை. இவர்களை முன்மாதிரிகளாக மாணவர்களிடம் அறிமுகம் செய்யாமல் இருந்ததோடு, ஆளும் வர்க்கத்திற்கு சாதமானவர்களையே நாம் முன்னிறுத்துகிறோம். இன்னும் எத்தனை தலைமுறைகளை நாம் இழக்கப் போகிறோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக