ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

வெட்ட வெளிதன்னில் பொதிகைச்சித்தர்!

வெட்ட வெளிதன்னில் பொதிகைச்சித்தர்!

மு.சிவகுருநாதன் 


(தஞ்சை இலக்கிய வட்ட 17 ஆவது நிகழ்வு பொதிகைச்சித்தர் நூல் விமர்சன அரங்கம் குறித்த பதிவு.)



     தஞ்சை இலக்கிய வட்டத்தின் 17 ஆவது நிகழ்வாய் ‘பொதிகைச்சித்தர் – விமர்சன இலக்கியம் – நூல் மதிப்பீட்டரங்கம்’ ஜூலை 16, 2017 (16.07.2017) ஞாயிறு மாலை தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்றது. பேராசிரியர்கள் க.நெடுஞ்செழியன், கு.வெ.பாலசுப்பிரமணியன், பா.மதிவாணன், முனைவர் இரா.கந்தசாமி ஆகியோர் பொதிகைச்சித்தரின் படைப்புகளை மதிப்பிட்டனர்.

    அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த பொதியின் ‘கருமை செம்மை வெண்மையைக் கடந்து…’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு: ஜூலை 2015) என்ற நூலுக்குப் பதிலாக ‘திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு: டிச. 2011) என்ற நூலை பேரா.க.நெடுஞ்செழியன் விமசர்னத்திற்கு எடுத்துக்கொண்டார். திராவிட இயக்கத்தார் செய்யவேண்டிய பணியை நண்பர் பொதிகைச்சித்தர் செய்துள்ளார். திராவிட இயக்கத்திலுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். ஆனால் எந்த அளவிற்கு இந்நூல் சென்றடைந்திருக்கும் என்பது அய்யமே என்றும் குறிப்பிட்டார். நூலிலுள்ள மேற்கோள்கள், பொதிகைச்சித்தரின் நடை குறித்துப் பேசிய இவர் ஜெயமோகனுடான பகைமுரண்பாடு, தமிழவனுடான நட்பு முரண்பாடு ஆகியவற்றில் முரண்பாட்டைக் களைந்தால் முன்னவரிடத்தில் பகையும் பின்னவரிடத்தில் நட்பும் மிஞ்சும் என்றார்.

    பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன் ‘தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்’ (விஜயா பதிப்பக வெளியீடு: நவ.2016) என்னும் நூலை விரிவாக அறிமுகப்படுத்தினார். நிறமும் வர்ணமும் ஒன்றல்ல என்பதை வேறுபடுத்திக் காட்டினார். திருக்குறள் உரைகளை ஒப்பீடு செய்து பெரியார் வேறுபடும் புள்ளிகளைச் சுட்டினார். பொதிகைச்சித்தரின் பரந்த வாசிப்பு ஒருபுறம்; அதேசமயம் இந்த நூலில் பாதிப் பக்கங்களுக்கு மேல் மேற்கொள்கள் நிறைந்திருப்பதை எடுத்துக்காட்டி அவற்றின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தினார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் பகவத்கீதைக்கு உரை எழுகிறார். உரை மட்டுமல்ல, பகவத்கீதையே அவரால் கி.பி. ஏழாம் எழுதப்பட்டதுதான், என்றும் கூறினார்.

     இதே நூல் குறித்து பின்னர் உரையாற்றிய பேரா.பா.மதிவாணன், ஒவ்வொரு காலக்கட்டத்தில் இந்திய தேசியம், திராவிடத் தேசியம், தமிழ்த் தேசியம் என்பதான தேவை எழுகிறது. தக்‌ஷ்ண வேதீகே என்னும் கன்னட அமைப்பு திராவிடம் பற்றி விவாதிக்க திராவிடப் பகுதியைச் சேர்ந்தவர்களை அழைத்துள்ளது. பிற திராவிட மொழிக்காரர்களுடன் உரையாட நாம் எந்த வழியை வைத்திருக்கிறோம்? என்று வினவினார். என்னைக்கேட்டால் முதல் இந்திய தேசிய இயக்கம் பக்தி இயக்கமே என்றார். 



     இறுதியாகப் பேசிய முனைவர் இரா. கந்தசாமி, பொதிகைச்சித்தர் சுய உணர்வுடனே மேற்கோள்களால் தமது நூற்களை இட்டு நிரப்புகிறார். பல மேற்கோள்களுக்கிடையே ஒன்றிரண்டு வரிகள் எழுதுகிறார். தமது சொந்த எழுத்து என்கிற மாயையைத் தகர்த்து எழுத்துக்களைக் கலைத்துப் போட்டுத் தானும் அதில் பங்குபெறுகிறார். இதுவே பின்நவீனத்துவ மனநிலை, என்றார்.

      நூலாசிரியரின் ஏற்புரைக்குக் கால அவகாசமில்லை.

"நாற்றைப் பறித்து நட்டாற் போல் வேற்று நிலத்தும் வேர் பிடிப்பேன்

ஊற்றுக் கண்ணாய் மடைதிறந்து உலகளாவிடும் என் பயணம்

மண்ணில் ஊன்றின என் பாதம் வெட்ட வெளிதான் என் ஞானம்

பண்ணில் ஊறின என் கானம் பரவசத்தின் அதிமோனம்",


      என்னும் தனது பாடல் வரிகளைப் பாடி விடைபெற்றார் பொதி..



    ஒவ்வொரு உரைக்குப்பின்னும் சிலவரிகள் விளக்கமளித்து, அவர்களுக்குத் தம் நூல் ஒன்றைப் பொதி பரிசளித்தார். நிகழ்வை எழுத்தாளர் செ.சண்முகசுந்தரம் தொகுத்து வழங்க, கவிஞர் துவாரகா சாமிநாதன் நன்றி சொல்லி நிகழ்வை முடித்து வைத்தார்.

   (இப்பதிவு ஆகஸ்ட் – 2017 மாத ‘பேசும் புதிய சக்தி’ இதழில் வெளியாகியுள்ளது. இதழ் அச்சாகும் நேரத்தில் அவசரமாக எழுதப்பட்டதால் ஒருசில பிழைகளைத் திருத்த இயலவில்லை. மேற்கண்ட பதிவில் அவற்றைத் திருத்தியுள்ளேன். நன்றி.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக