ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

அடையாள அரசியல் (Identity politics) அவலம்

அடையாள அரசியல் (Identity politics) அவலம்

மு.சிவகுருநாதன் 


(31.07.2017 முதல் 04.08.2017 முடிய 5 நாள்களுக்கு அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (RMSA) சார்பில் அய்ந்து நாள்கள் பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி பற்றிய அனுபவப் பகிர்வு)

      பொதுவாக இவ்வாறு பாட ஆசிரியர்கள் ஒன்றுகூடும்போது நாங்கள்தான், எங்கள் பாடம்தான் உயர்வானது என்கிற மேட்டிமைவாதம் (elitism) தொடர்ந்து பேசப்படுகிறது; கட்டமைக்கப்படுகிறது. சாதி, மதம், மொழி, இனம் என்ற ஏதேனும் ஒரு அடையாளத்தின் அடிப்படையில் எழும் அடையாள அரசியலின் (Identity politics) ஒரு அங்கமே இது. நுண்தளங்களில், கல்விப்புலங்களில் இம்மாதிரியான அடிப்படைவாதச் செயல்பாடு மிகவும் ஆபத்தானது.

     இந்தகைய அரசியல் செயல்பாடு சிலரை உள்ளேயும் சிலரை வெளியேயும் தள்ளுகிறது; பிரித்து வைக்கிறது; பாகுபடுத்துகிறது. இதன் நீட்சியாக இங்கு எழும் பல்வேறு குரல்களைச் சுட்டலாம். தமிழரல்லாதோருக்கு இங்கு இடமில்லை, பிறருக்கு இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு கூடாது, ஆட்சியதிகாரத்தில் இடமில்லை என்பன போன்ற வாதங்கள் இதனையொட்டி எழுபவை. ஆசிரிய சங்கங்கள் இன்று பல தரப்பாகப் பிரிந்து நிற்பதும் இதன் ஓரம்சமே. இந்த பிளவுபடுத்தும் ஆளும் வர்க்க கருத்தியல் அதிகாரங்களை நிலைநாட்ட வழிவகுக்கிறது.

    குறிப்பிட்ட ஒரு பாடம் படித்தவர்கள்தான் அதைப்பற்றிப் பேசமுடியும் என்பதில் பொருளில்லை. அப்படிப் பார்த்தால் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழக வரலாற்றுப் பாடங்களும் தரமற்றவை. உலகத் தரப்பட்டியலில் இந்தியப் பல்கலைக் கழகங்களுக்கு இடமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. இந்திய அளவில் தில்லி ஜவகர்லால் நேரு (JNU) பல்கலைக் கழகத்திற்கு மட்டுமே தனியிடம் உண்டு. அவற்றையும் இந்துத்துவ சக்திகள் வேரறுத்து வருவது தனிக்கதை.

     ஒரு குறிப்பிட்ட பாடத்தில் முதுகலை மற்றும் ஆய்வுப் பட்டம் பெற்றுவிட்டாலே புலமை வந்துவிடுவதாக கற்பனை செய்வது அபத்தம். தமிழுக்கு தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்களைவிட பிறரின் பங்களிப்பு அதிகம். தமிழ்நாட்டின் பொற்காலமாகப் போற்றப்படும் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆட்சிகாலத்தில் தமிழுக்கு இங்கு இடமில்லை; எங்கும் வேதபாடசாலைகளே இருந்தன. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட முதலாம் குலோத்துங்கள் காலத்தில்தான் தமிழ் சிறிது தலையெடுத்தது. அதைப்போலவே வரலாறு படிக்காமல் வரலாற்று ஆய்வுகளில் சிறப்பு சேர்த்தவர்கள் இங்குண்டு. இத்தகைய அடையாள அரசியல் அந்த குறிப்பிட்ட அடையாளங்களுக்கு நன்மை செய்வதில்லை; மாறாக அறிவைக் குறுக்குகிறது.

    களப்பிரர்களைப் பற்றித் தேடிப்பார்த்தால் இங்கு கிடைப்பது என்ன? கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார், மு.அருணாசலம் பிள்ளை, ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா.இராசமாணிக்கனார் என இங்குள்ள பெரிய வரலாற்றாசிரியர்களைத் தேடி வாசித்தால் ஒருசில பக்கங்கள் மட்டுமே கிடைக்கும். கேட்டால் இருண்ட காலம், சங்கம் மருவிய காலம் என்றுதான் பதில்வரும்.

    பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்து இறுதிக்காலம் வரையில் இடைநிலை ஆசிரியராகவே பணி செய்த மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுகள் மூலமே இருண்ட காலம் விடியற்காலம் ஆனது. மேலும் இவர் பவுத்தம், சமணம், பல்லவர்கள், கலைகள் குறித்த பல ஆய்வு நூல்களை வெளியிட்டவர். இவருடைய நூல்கள் அரசுடையாக்கப்பட்டதால் பல பதிப்பகங்கள் வெளியிடுகின்றன. தமிழ்மண் பதிப்பகம் இவருடைய மொத்தப் படைப்புகளையும் 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.

    ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டது (டிச.2008). அந்நூலில் பின்னுரையாக அ.மார்க்ஸ் எழுதிய ஆய்வுரை மயிலையாரின் ஆய்வுத் தொடர்ச்சியை பேரா.கா.சிவத்தம்பி, பர்ட்டன் ஸ்டெய்ன் ஆகியோர்களின் கருத்துகளையும் இணைத்து களப்பிரர்களைப் பற்றி ஆராய்கிறது. அ.மார்க்ஸ் இயற்பியல் பேராசிரியர், எழுத்தாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர். வரலாறு படித்தவர்கள் செய்யாத வேலையை இவர்கள் செய்கிறார்கள். மேலும் இவர் குமுதம் தீராந்தி இதழில் எழுதும் தொடர் ஒன்றில் மணிமேகலை, பவுத்தம், அசோகர் குறித்தான புதிய பார்வைகளை முன்வைக்கிறார். சிந்துவெளி காளையைக் குதிரையாக கிராபிக்ஸ் செய்து இந்துத்துவ வாதிகள் சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என்றபோது ‘ஆரியக்கூத்து’ நூலில் அதை அம்பலப்படுத்தியவர்.

    மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய எனது கட்டுரை ஒன்றை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.

தமிழுலகம் மறந்த ஆய்வறிஞர் : மயிலை சீனி. வேங்கடசாமி

http://musivagurunathan.blogspot.in/2015/01/blog-post.html

    சிந்துவெளி சித்திர எழுத்துமுறை குறித்த ஆய்வை நெடுங்காலமாக செய்துவரும் தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப் (IAS) பணி அலுவலர். இவரிடைய ஆய்வுகளின் தொடர்ச்சியை அஸ்கோ பர்போலா போன்றோரிடம் காணலாம். ஒரிசா மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் ஆர். பாலகிருஷ்ணன் IAS இடப்பெயர் ஆய்வுகள் மூலம் ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளத்தை’ தமது ஆய்வின் மூலம் நிறுவுகிறார். (பாரதி புத்தகாலய வெளியீடு: ஏப்ரல் 2016)

    வரலாறு, தமிழ் போன்ற துறைகளில் தனது ஆய்வின்மூலம் பங்களிப்பு செய்துள்ள பொ.வேல்சாமி வரலாற்றறிஞரோ, தமிழறிஞரோ அல்ல. இவரைப் போன்றவர்களை மத்தியப் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகள் ஆய்வுரையாற்ற அழைக்கின்றன. இவரது பொற்காலங்களும் இருண்ட காலங்களும், பொய்யும் வழுவும் போன்ற நூல்கள் சிறப்பானவை.

    நமக்கு பட்டிமன்ற ‘கிளுகிளுப்பு’ப் பேச்சாளர்கள்தான் தேவையாக இருக்கிறது. இவர்களை தமிழ் தொலைக் காட்சி சேனல்களில் கண்டு களிக்கலாமே! இவர்களிடம் கற்றுக்கொள்வதற்கு என்ன இருக்கிறது? வரலாறு, தமிழ், பொருளியல் என எந்தத் துறையாகட்டும், இளங்கலை, முதுகலைப் பாடங்களில் படித்த அல்லது இன்றும் இருக்கின்ற பாடத்திட்டங்களை ஒப்பிக்கின்ற பேராசிரியர்கள் தேவையில்லை. தாங்கள் படித்ததை, இன்றும் மாணவர்களுக்கு வேதம்போல ஒப்பிப்பவர்கள் எந்த புதிய செய்திகள், சமகால நிகழ்வுகள், பொருளாதார மாற்றங்கள் எதையும் உள்வாங்குவதில்லை. திறந்த பார்வை, ஆய்வு நோக்கில் அணுகுபவர்கள் வரலாறு படித்திருக்க வேன்டிய அவசியமில்லை.

    இன்றைய வரலாற்று ஆய்வுகள் அறிவியல் ஆய்வுகளில் அடிப்படையில் நிகழ்பவை. இவற்றை அனுமான வரலாறாக குறுக்குவது பழைய பாணி. தொடர்ந்த படிப்பும் சமகால அறிவும் ஆய்வுத்தேடலும் உள்ளவர்களே இன்றையத் தேவை. சிறப்புச் சொற்பொழிவாளர்களை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள்.

    அந்த வகையில் அறிவியல் பயிற்சிக்கு அழைக்கப்பட்ட எழுத்தாளர், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நக்கீரன் பாராட்டுகுரியவர். இந்தத் தலைப்பில் பயிற்சியளிக்க அவரைவிட சிறந்தவர்கள் இப்பகுதியில் இல்லை என்றே சொல்லவேண்டும்.. சூழலியல் இன்று மேட்டிமைவாதமாக உள்ள நிலையில் மக்கள், மொழி சார்ந்த இவரது சூழலியல் கோட்பாடுகள் கவனிக்கத்தக்கவை. போர்னியோ காடுகளில் மரம்வெட்டும் தொழிலில் பணியாற்றிய இவர் எழுதிய ‘காடோடி’ நாவல் தமிழுக்கு புதுவரவு. திருவாரூரிலிருந்து வெளியாகும் பேசும் புதிய சக்தி ஆகஸ்ட் 2017 மாத இதழில் இவரது நேர்காணல் வெளியாகியுள்ளது.

    சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கும் முன்பு இவற்றைக் கவனித்தில்கொளவது நலம். இல்லையேல் பயிற்சி பொதுகூட்டமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக