‘மநுநீதிச் சோழன்’ கட்டுரைக்கு
எதிர்வினை
(ஆகஸ்ட் 04, 2017 நாளிட்ட எனது "பிற்காலச் சோழர்கள் அனைவருமே ‘மநுநீதி’ச் சோழர்கள்", என்ற கட்டுரை (முகநூல், வாட்ஸ் அப்) குறித்த நண்பரின் பதிவும் எனது எதிர்வினையும்.)
தமிழ்ச் சமூகம் பகுத்தறிவுடையதுதானா?
க.ஜீவா
மறைக்கப்பட்ட தமிழக வரலாறு பகுத்தாய்வுக்கு
உட்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பல அரசர்களின் புகழ்
நகைப்புக்குறியதாகி விடுமே!
தமிழக அரசர்கள்
பற்றி மேன்மையான கருத்துக்களே உலவிவரும் நிலையில் தற்போதைய பகுத்தாய்வு அவர்களின் புகழுக்கு மட்டுமின்றி தமிழகத்தின் தொன்மையான புகழுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என அய்யம் ஏற்படுகிறது.
தன்னைப் பற்றி பிறரிடம்
உயர்த்தி புகழ்வதையே கொள்கையாக வைத்துள்ள மானிட சமுதாயத்தில் அரசர்கள்
ஒன்றும் விதிவிலக்கு இல்லையே!
பகுத்தறிவுடைய பாரம்பரிய தமிழக
சமுதாயம், பிராமணிய அறிவுக்குள் அகப்பட்டதைப் பார்த்தால் பகுத்தறிவுடைய தமிழக சமுதாயம் பகுத்தறிவுடையதுதானா?
என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.
விரிந்த, அறிவியல் பூர்வமான, சமூகவியல் பார்வை
தேவை
மு.சிவகுருநாதன்
தங்களது கருத்துப் பகிர்வுக்கு நன்றி. இது
பற்றிய எனது சில கருத்துகள்..
தமிழ்ச் சமூகம், தத்துவங்கள் மட்டுமல்ல;
இந்தியத் தத்துவங்களுக்கே அடிப்படை நாத்திகவாதம் (அவைதீகம்). இதனுடன் போட்டி
போட்டே வைதீகத் தத்துவங்கள் வளர்ந்துள்ளன. இங்கே சைவம், வைணவம், பவுத்தம், சமணம்
ஆகிய எந்தத் தத்துவமும் அரச மதமாக இருந்தபோது தான் பெரும் வளர்ச்சி கண்டுள்ளன.
நமது அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை
வலியுறுத்தினாலும் அன்றாட நடைமுறையில், அரசின் செயல்பாடுகளில் மதநீக்கம் இங்கு
நடைபெறவே இல்லை. விரிவாகப் பேச இங்கு இடமில்லை. (உம்) அரச விழாக்கள். எனவே
பெரும்பான்மை மதச்செயல்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் நிலை உருவாகிறது.
இங்கு வரலாற்றெழுதியல் (Historiography)
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைச் சார்ந்துள்ளது. இதுவரை எழுதப்பட்ட பெரும்பாலான
வரலாறுகள் ஒரு பக்கச் சார்புடையவை. வரலாற்று ஆய்வுகள் இங்கு அறிவியலாக வளர்த்தெடுக்கப் படவில்லை.
தமிழின் தொன்மை அரசர்களால் வந்ததல்ல. எனவே அவை
அழிந்து போகாது.
தற்புகழ்ச்சி கூட தவறல்ல. ஏனெனில் அவை
வரலாறாகாது. பிறர் புகழ்ச்சியே இங்கு
சிக்கல். வரலாறு எழுதியோரின் பார்வையும்
சாதி, மொழி, இனப்பற்றும் வரலாற்று ஆய்வுகளை மழுங்கடித்துள்ளன. பிற்காலச் சோழர்
காலம் தமிழ்நாட்டின் பொற்காலமாகவும், குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலமாகவும்
ஆனதன் அரசியல் பின்னணி இதுவே. மாறாக களப்பிரர் காலம் இருண்ட காலம் எனப்பட்டதன்
அரசியலை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
திருவுளச்சீட்டு முறையான குடவோலை முறை நமக்கு
மக்களாட்சியின் அடையாளமாகத் தோன்றுவது இதனால்தான். கிரேக்கத்தில் குடியரசுகள் இருந்ததைச்
சொல்லும் நமது பாடநூற்கள் புத்தர் காலந்தொட்டு வட இந்தியாவில் இருந்த
குடியரசுகளைப் பேச மறுப்பதன் அரசியலும் உடைக்கப்பட வேண்டியது.
இங்கு திராவிட இயக்கங்கள் வெறும் வாக்கு
அரசியலை மட்டும் நம்பிப் பயணப்பட்டதும், இவர்கள் சாதியவாதிகளாக மாறிப்போனதும் நமது
சீரழிவிற்கு காரணமாக நான் கருதுகிறேன். காந்தி, பெரியார் வலியுறுத்திய சமூக
இயக்கத்தின் தேவைகள் இன்னும் அப்படியே
இருக்கின்றன. அரசியல் கட்சிகள் வேறிடத்திற்குச் சென்றுவிட்டன.
கருத்தியல் தெளிவின்மை மற்றும்
போதாமைகளுக்கும் முக்கிய இடமுண்டு. பெரியாரியம், காந்தியம், அம்பேத்கரியம்,
மார்க்சியம் ஆகியவற்றில் ஒன்றை மட்டும் நம்பி இருக்க இன்றைய நிலையில் முடியாது.
எனவே இவற்றில் உள்ள சாதக, பாதகங்களை திறந்த மனதுடன் ஆய்வு செய்யவும், சுயவிமர்சனம்
செய்து நமக்கான கருத்தியல்களை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும் நாம் முயலவேண்டும்.
மன்னர்கள் வரலாறு தகர்க்கப்பட்டு, மக்கள் வரலாறு
மலரவேண்டும்.
ஆதிக்க வரலாற்றின் தொடர்ச்சி குடியாட்சியிலும் நிலை பெற்றுவிட்டது.
தனிநபர் துதிபாடல்கள், திரு உருக்கள், பிம்ப
வழிபாடுகளும் தகர்க்கப்பட வேண்டும்.
மன்னர்கள் பற்றிய புனைவுகள் மட்டுமின்றி
மொழி, இனம் குறித்தான பொய்மைகளும்
தகர்க்கப்பட வேண்டும். அதற்குத் தேவை விருப்பு, வெறுப்பற்ற
தன்னிலை அழிந்த, அறிவியல் பூர்வமான
பார்வை மட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக