வியாழன், ஆகஸ்ட் 17, 2017

வாஞ்சிநாதனும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரும்

வாஞ்சிநாதனும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரும்

மு.சிவகுருநாதன் 
 

       (தலைப்பைப் பார்த்து யாரும் அதிர்ச்சியடைய வாய்ப்பில்லை. 10 ஆம் வகுப்பு சமச்சீர் சமூக அறிவியல் புத்தகத்தில் 2011 லிருந்து இவ்வாறுதான் இருந்தது. கேட்க நாதியில்லை. எனது ‘தி இந்து’ (பிப். 05, 2015) கட்டுரைக்குப் பிறகு 2016 – 2017 இல்தான் திருத்தப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு 9, 10 வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான RMSA பயிற்சி ஒன்றில் அதில் பங்கேற்ற பேராசிரியர் ஒருவர் வாஞ்சிநாதன் பற்றி கருத்துரைக்க உடன் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதை முன்னிட்டு எழுதப்பட்டதே இக்குறிப்பு.)


      ஆஷைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னைத்தானேச் சுட்டுகொன்று இறந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் கண்டெடுக்கப்பட்ட கடிதம் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

     “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta

     (பக். 150, 151 ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும், ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு வெளியீடு:டிச. 2009) 


     தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் புகழ்மிக்க வாசகம் ஒன்று கீழ்க்கண்டவாறு இருக்கிறது.

       “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்”,

       (நான் யார்? என்று பெரியார் அளித்த விளக்கம்.)

     


வரலாற்றுத்திரிபுகள்

     வ.வே.சு.அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன் (நமக்கு இவ்வாறு சொல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. சாதியைத் துறந்தவர்கள் மீது ஏன் திணிக்கிறீர்கள் என்பதே நம் கேள்வி.) போன்றவர்களுக்கு வழங்கும் கருணையில் இம்மியளவுகூட ஜின்னாவிற்கு இவர்கள் வழங்கத் தயாராக இல்லை.

     வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ்முல்லர் ஆகியோர் தொடங்கிய ஏசியாட்டிக் சொசைட்டி (1785) மூலமாக புனையப்பட்ட ஆசியப்பண்பாடு, சமஸ்கிருத மேன்மை தொடர்ந்து கல்கத்தா இந்துக் கல்லூரி (1817), பிரம்ம சமாஜம் (1828), ஆரிய சமாஜம் (1875), கோரக்‌ஷினி சபா (1882), இந்து மகாஜன சபா (1884), ராமகிருஷ்ண இயக்கம் (1897) எனப் பல்வேறு வழிகளில் இந்துத்துவம் இங்கே வளர்க்கப்பட்டது. சென்னை மகாஜன சபையின் நிறுவன உறுப்பினர் அனந்தார்ச்சார்லு, பாலகங்காதர திலகர், மதன்மோகன் மாளவியா, அரவிந்தர், லாலா லஜபதி ராய் ஆகியோர் இந்து மகாஜன சபையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றனர். பிரம்ம ஞான சபையின் சென்னைக் கிளை அன்னிபெசன்ட்டால் 1893 இல் தொடங்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரசின் தொடக்கத்தில் (1885) பங்குவகித்த ஜி.சுப்பிரமணிய அய்யர், சாமிநாதய்யர், கேசவப்பிள்ளை போன்றோர் பிரம்ம ஞான சபையின் தீவிர உறுப்பினர்கள்.     1892 பாலகங்காதர திலகர் – விவேகானந்தர் சந்திப்பு நடைபெற்ற அறையில் 1893 இல் கஜசூரா (அசுரனைப் பழிதீர்த்தல்) என்ற கணபதி வழிபாட்டைத் தொடங்கி அதைத் தேசிய இயக்கத்துடன் இணைக்கிறார். பல மாணவர் உடற்பயிற்சிக் கழகங்கள் , மித்திர மேளா என்கிற நண்பர்கள் சங்கம் (1899), என இறுதியில் 200 இளைஞர்கள் நாசிக் நகரில் ஒன்றுகூடி 1904 இல் அபிநவ பாரத் சமீதி (இளம் இந்தியர்க் கழகம்) அமைக்கப்படுகிறது.     1906 இல் சியாம்ஜி கிருஷ்ண வர்மா நடத்திய லண்டன் இந்திய விடுதியில் ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் – இந்தியன் கல்வித்திட்டத்தில் திலகர் பரிந்துரையில் 22 வயது விநாயக தாமோதர சவார்க்கர் - (வி.டி.சவார்க்கர்) படிக்க வருகிறார். (படிப்பு முடிந்ததும் ஆங்கில அரசில் எந்தப் பதவியும் பெறாமல் இந்திய விடுதலைக்கு உழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இவ்வுதவி வழங்கப்படுகிறது.) வி.டி.சவார்க்கர் கொள்கையால் ஈர்க்கப்பட்ட சியாம்ஜி அபிநவ பாரத் சமீதியில் உறுப்பினராகிறார். ஒரு கட்டத்தில் ஆங்கில அரசின் கண்காணிப்புக்கு அஞ்சி சியாம்ஜி இந்திய விடுதியை வி.டி.சவார்க்கரிடம் ஒப்படைத்துவிட்டு பாரிஸ் (1907) பயணமாகிறார். இவ்வாண்டே இந்திய விடுதியில் வசிக்க வ.வே.சு. அய்யர் வருகை தருகிறார். கொஞ்ச காலத்திலேயே சவார்க்கரின் நம்பிக்கையைப் பெற்ற அய்யர் ரகசிய இயக்கமான அபிநவ பாரத் சமீதியின் துணைத்தலைவரானார். இவ்வியக்கத்தில் வ.உ.சி.யும் ஓர் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதியுடன் தொடர்புடைய மதன்லால் திங்ரா கர்சன் வைலி (1907) கொலை தொடர்பாக லண்டனில் வி.டி.சவார்க்கர் கைது (1910) செய்யப்பட்டவுடன் மாறுவேடத்தில் வ.வே.சு. அய்யர் புதுச்சேரியில் தஞ்சமடைந்தார்.     சமகாலத்தில் எஸ்.ஆர்.ரானாவும் மேடம் பைக்காஜி நிஸ்தம் காமா அம்மையாரும் பாரிஸ் இந்தியர் கழகத்தை நடத்தி வந்தனர். 22 ஆகஸ்ட் 1907 ஆம் நாளில், பைக்காஜி நிஸ்தம் காமா அம்மையார், ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் என்ற நகரில், ஒரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். இக்கொடியை பக்காஜி காமா அம்மையார், வீர சவார்க்கர், சியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆகியோர் சேர்ந்து வடிவமைத்தனர். பைக்காஜி நிஸ்தம் காமா அம்மையார் அபிநவ பாரத் சமீதி, ஹோம் ரூல் கழகம் ஆகியவற்றிலும் தொடர்புடையவர். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை உடையவர். இவரின் ஆசிரியப் பொறுப்பில் வந்த வந்தேமாதரம் – ஆங்கில வார இதழில் (1911) ஆங்கிலேயர்களை கொல்ல வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார். இவர்கள் 1905 – 1911 காலகட்டத்தில் துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டு வீசுதல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற ஆயுதப்பயிற்சிகள் மேற்கொள்கின்றனர்.     இந்நிலையில்தான் நீலகண்ட பிரம்மச்சாரியை பார்க்க புதுச்சேரி வரும் வாஞ்சிநாதனுக்கு வ.வே.சு. அய்யரிடம் பழக்கம் ஏற்படுகிறது. ஒரு மாதம் துப்பாக்கி சுட பயிற்சியும் துப்பாக்கியும் அளித்து ஆஷ் கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது. ஆஷ் 1911 ஜூன் 17 அன்று கொலை செய்யப்படுகிறார். ஆனால் ஆஷ் கொலைவழக்கில் வ.வே.சு. அய்யர் பெயர் சேர்க்கப்படவே இல்லை. இவர் ஆங்கிலேயர்களிடன் பொது மன்னிப்பு பெற்று 1920 இல் தமிழகம் வந்து, 08, டிசம்பர், 1922 இல் குருகுலம் தொடங்குகிறார். கலெக்டர் ஆஷ் 4 பேரை சுட்டுக்கொன்றார். அதற்குப் பழி தீர்க்கவே இக்கொலை நடைபெற்றதாக பாடநூல் சொல்கிறது. ஆனால் நடந்தது என்ன?     சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி நடத்தியது, கோரல் மில் போராட்டத்தைத் தூண்டியது போன்றவற்றிற்காக வ.உ.சி. 1908 மார்ச் 18 கைது செய்யப்பட்டவுடன் தூத்துக்குடியில் கடையடைப்பும் போராட்டங்களும் நடைபெறுகின்றபோது, நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர். உத்தரவிட்ட கலெக்டர் ஆஷ் நேரடியாக சுட்டதுபோல் இங்கு வரலாறு எழுதப்படுகிறது. தாமிரபரணி (ஜூலை 23, 1999), பரமக்குடி (செப்டம்பர் 11, 2011) துப்பாக்கிச் சூடுகள் அப்போதைய முதல்வர்களால் நடத்தப்பட்டது என்றால் இவர்கள் ஒத்துக்கொள்வார்களா? மேலும் வாஞ்சிநாதனின் சட்டைப்பையிலிருந்து கைப்பற்றப்பட்டக் கடிதத்தில் இந்த துப்பாக்கிச்சூடு குறித்து எதுவும் இல்லை. மாறாக “கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனைக் கொல்லும் செயலுக்கு முன்னோட்டம்” என்றே அக்கடிதம் சொல்கிறது.     வ.வே.சு. அய்யர் பெயரைச் சொல்லவேண்டிய இரு இடங்கள் மிகக் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. ஒன்று சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், மற்றொன்று வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கிச்சுடும் பயிற்சியளித்தது.

     (மேலே உள்ளவை எனது ‘கல்விக் குழப்பங்கள்’ நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்; பாரதி புத்தகாலய வெளியீடு, மார்ச் 2017) 


முழுக் கட்டுரையை பின்வரும் இணைப்பில் காண்க.

பிழைகள் நிறைந்த பள்ளிப் பாடநூற்கள்

http://musivagurunathan.blogspot.in/2015/02/blog-post_66.html

    “இம்மாவட்டத்திலுள்ள (திருநெல்வேலி) சில அருந்ததியப் பெரியவர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட தகவல்களைக் கூறுகின்றனர். ஆஷ்துரை என்ற ஆங்கிலேய ஆட்சியாளர் சாதிப்பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்தினார். தனது அலுவலகத்தில் நிலவிய சாதிப்பாகுபாட்டை நீக்கி, அனைவரும் ஒரே இடத்தில் மதிய உணவு எடுக்கவேண்டும், ஒரே குடத்திலிருந்து தண்ணீர் குடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தெய்வங்கள்தான் குளிக்கும். அந்த நீரில் அடித்தட்டு மக்கள் குளிக்கக் கூடாது. பிராமணர்கள் தெய்வத்திற்கு பூஜை செய்வதால் அவர்கள் மட்டும் குளிக்கலாம் என்று இருந்த நிலையை மாற்றி அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்ட ஆஷ்துரை அதற்கு முன்னுதாரணமாகத் தானே குளித்தார். அதுபோல திடீரென்று ஏற்பட்ட பேறுகால வேதனையால் யாரும் உதவிக்கு வராத சூழ்நிலையில் பொது வழியில், தனியாகத் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு அடித்தட்டு இனத்தைச் சார்ந்த பெண்ணை அப்பக்கமாக வண்டியில் வந்த ஆஷ்துரையும், அவரது மனைவியும் தூக்கி, வண்டியில் கிடத்தி, பிராமணர்களின் தெரு வழியே சென்று மருத்துவமனையில் சேர்த்து உதவினர். இதைப் போன்று சாதி வித்தியாசம் பாராமல் அடித்தட்டு மக்களையும், உயர்சாதியினர் போல் சமமாக நடத்தியதால், தங்களது சாதிய அந்தஸ்து குறைவதாக எண்ணி கோபம் கொண்ட பிராமணர்களும் வெள்ளாளர்களும் திட்டமிட்டு ஆஷ்துரையைக் கொன்றனர். இவ்வாறு சாதி உணர்வினால் ஆஷ்துரையைக் கொன்ற வாஞ்சிநாதனை தேச உணர்வினால் கொலை செய்தார் என்று ஆதிக்க சாதியினர் தூக்கிப் பிடிக்கின்றனர் என்றனர். 
 


(அருந்ததியர் வாழும் வரலாறு – மாற்கு, தமிழினி வெளியீடு, ஏப்ரல் 2001)     “ஆஷ்துரை கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே பிராமணர்களாகவும், வெள்ளாளர்களாகவும் இருப்பதோடு அவர்கள் பெரும்பாலும் தென்காசி – செங்கோட்டைப் பகுதியினராக இருப்பதை அறிந்தோம். பிராமணர்களான ஜகநாதன், ஹரிஹரன், வேம்பு, மகாதேவர், பிச்சுமணி என்ற வெங்கடாசலம், தருமராஜன், வெங்கடேஸ்வரன் மற்றும் வெள்ளாளர்களான T.N. சிதம்பரம், முத்துக் குமாரசாமி, சாவடி அருணாசலம், அழகப்பன் போன்ற குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தென்காசி – செங்கோட்டைச் சார்ந்தவர்கள்”, (பக். 58, மேல் குறித்த அதே நூல்.)     “படுபாவிக்கு பிராமணன் என்னும் பெயர் தகுமோ?” என்று வினா எழுப்பி “தகாவாம். வேஷப்பிராமணன் என்னும் பெயரே பொருந்தும்.” என்று பதிலளிக்கும் அயோத்திதாசப் பண்டிதர்,

    “சுட்டுக் கொல்லப்பட்ட துரைமகனால் ஆயிரமக்கள் சீர்பெற்று ஆனந்தத்திலிருப்பார்கள். சுட்டுக்கொன்ற படுபாவியாலோ ஆயிரம்பேர் அல்லலடந்து சீர்கெட்டிருப்பார்களென்பது அநுபவக்காட்சியாகும். ஆயிரம் பெயரைக் காப்பாற்றிய துரை மகனுக்காகவே சகலசாதி மநுக்களுந் துக்கிப்பார்கள். ஆயிரம் பெயரை குடிகெடுப்பவன் செத்தானனென்றாலோ ஆனந்தங்கொண்டாடுவார்கள்”, (பக். 361, ஜூன் 21, 1911, அயோத்திதாசர் சிந்தனைகள் – தொகுதி 01, தொகுப்பாசிரியர்: ஞான அலாய்சியஸ், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, வெளியீடு: செப். 1999) 


      “ஆர்.டபள்யூ.டிஇ.ஆஷ்ஷி அவர்கள் மறைந்துவிட்டார்” என்னும் தலைப்பில் சூன் 28, 1911 இல் எழுதப்பட்ட கட்டுரை பின்வருமாறு இருக்கிறது.

     “அதாவது நமது திருனெல்வேலி கலைக்ட்டரவர்கள் சீர்மையினின்று இந்தியாவில் வந்து தனது பிரிட்டிஷ் ஆட்சியின் கலைக்ட்டர் உத்தியோகத்தைக் கைக்கொண்டு இவ்விடமுள்ள பூமிகளின் விஷயங்களையும் அந்தந்த பூமிகளின் நீர்ப்பாய்ச்சல் விஷயங்களையும் நன்காராய்ந்தும், நாளாகத் தனது அநுபோகத்திற் கண்டறிந்தவரும் தேச சீர்திருத்தங்களைச் செய்ய வல்லவருமாகவிருந்த ஓர் துரைமகனை ஓர் படுபாவியாகிய துஷ்டன் கொன்றுவிட்டானென்றவுடன் சகல் விவேகமிகுத்த மேதாவிகளும் துக்கத்தில் ஆழ்ந்தினார்களென்பதற்கு ஆட்சேபமில்லை”, (பக். 363, ஜூலை 28, 1911, மேல் குறித்த அதே நூல்.)     “முன்பு நடந்துள்ள திருநெல்வேலி கலகத்தை யாதாரமாகக் கொள்ளினும் அதிற் பலசாதியோர்களையும் சமரசமாக தெண்டித்திருக்க இப்பிராமணரென்று சொல்லிக்கொள்ளுங் கூட்டத்தோருக்கு மட்டிலும் உண்டாய துவேஷமென்னை. அந்தக் கலைக்ட்டரின் குணாதியங்களை அறிந்த விவேகமிகுத்த மேன்மக்கள் யாவரும் அவரை மிக்க நல்லவரென்றும் கொண்டாடுகின்றனர். ஆதலின் அவரைக் கொலைபுரிந்த காரணம் தங்கள் கூட்டத்தோர் சுகத்தைக் கருதிய ஏதுவாயிருக்குமேயன்றி வேறில்லை”, (பக். 364, ஜூலை 28, 1911, மேல் குறித்த அதே நூல்.)     சிறைக்குள்ளும், விடுதலைக்குப் பின்னும் அறம் சார்ந்த நூல்கள் பல எழுதியும் மொழிபெயர்த்தும் சிறப்புற்ற வ.உ.சி. திலகரை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர் மட்டுமல்ல; அபிநவ பாரத் சமீதியின் தீவிர உறுப்பினரும் கூட. எனவே அவரிடமிருந்து இவ்வரிகள் வெளிப்படுவதில் வியப்பொன்றுமில்லை.“ஓரிர வினிலே ஆறிரு மணிக்கென்

அரங்குள் யான்நன் குறங்குங் காலவண்

செறிந்து மிஸ்டர் சிதம்பரம் பிள்ளையென

றறைந்த சத்தமொன் றனேக தடவை

கேட்டு விழித்து பார்த்தேன் அரங்குமுன்

சிறையின் ஜூனியர் சப்அஸிஸ் டெண்டு

சர்ஜன் நின்று சௌக்கியம் உசாவி

கலெக்டர் ஆஷூவைத் தெரியுமா? என்றான்

நன்றாகத் தெரியும் என்றேன் எப்படி

என்றான் யான் இவண் ஏகியற்கும்

தூத்துக் குடியில் தோன்றிய சுதேசிக்

கப்பல் கம்பெனி செத்தொழிந் ததற்கும்

அவன்கா ரணமென் றறைந்தேன் ஒருவன்

அவனை நேற்று மணியாச்சி ஜங்ஷனில்

சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச்

செத்தான் என்றான் நல்லதோர் செய்தி

நவின்றாய் நீ நலம் பெறுவாய் என்றேன்

உனக்கிவ் வருஷக் கரோஒ நேஷனில்

விடுதலை இலையெனப் பகர்ந்தான் விடுதலை

என்றுமில் லெனினும் நன்றே என்றேன்”,    (பக். 161, 162 வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சுயசரிதையிலிருந்து, ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும், ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் வெளியீடு:டிச. 2009)     “ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சமய மற்றும் சனாதனப் பிடிப்புகளிலிருந்து விடுபட்ட புரட்சியாளர்களாக இல்லை. இவர்கள் அனைவரும் அன்றைய தமிழ்நாட்டில் சமூக மேலாதிக்கம் செலுத்திவந்த பிராமணர், வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களே. ‘ஜார்ஜ் பஞ்சமன்’ என்று வாஞ்சியின் கடிதம் ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடுகிறது. பஞ்சமர் என்பது தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகக் குறிப்பிடும் சொல். ஜார்ஜ் மன்னனை இழிவானவன் என்று குறிக்க அவனைப் பஞ்சமன் என்றே வாஞ்சி அழைத்துள்ளான். இத்தகைய கருத்தோட்டம் உடையவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவது கடினம்.

      இத்தகைய குறைபாடுகள் இருப்பினும் வாஞ்சிநாதனும் அவனைச் சார்ந்தவர்களும் விடுதலை ஆர்வத்தினால் உந்தப்பட்டே ஆஷ் கொலையைச் செய்தனர். அவர்கள் மேற்கொண்ட தனிநபர் பலாத்காரம் தவறானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதே நேரத்தில் அச்செயல்கள் எந்தவிதக் குறுகியச் சாதிய உணர்வுடனும் சுயநல நோக்குடனும் செயல்படுத்தப்படவில்லை.; அரசியல் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டது என்பதனை மறுக்க முடியாது”, (பக். 76,77 ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும், ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் வெளியீடு:டிச. 2009) என தனது ஆய்வுநூலை நிறைவு செய்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். சாதியவாத, மதவாத அரசியலை மறைத்து தேசியவாத அரசியல் போர்வையை போர்த்த முயன்று தோல்வியடைகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.        முன்னாள் கலெக்டர் எல்.எம். விஞ்சு நடவடிக்கைகள் இந்தக் கோபத்திற்குக் காரணமாக மதிப்பிடும் ஆ.இரா.வேங்கடஜலபதி, “ஆஷ் பலியானதற்குத் தவறான இடத்தில் தவறான நேரத்தில் அவர் இருக்க நேர்ந்தது முக்கியக் காரணம் எனலாம்” (‘ஆஷ் அடிச்சுவட்டில்…’) என்று சொல்கிறார். பகத்சிங் ஆள் மாற்றி கொலை செய்ததுபோலவே, கிட்டத்தட்ட இதையும் கணிக்கிறார். தேசிய உணர்வு, தீவிரவாதமும் தலைதூக்கிய நேரத்தில் பொறுப்புக்கு வந்த ஆஷ் பலிகடாவானதாக இச்சித்தரிப்பு அமைகிறது. இதுவும் ஆஷின் நல்ல, கெட்டச் செயல்பாடுகளைப் புறந்தள்ளுவதன் வாயிலாக சாதி, மத அரசியலைக் குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறது.      “டேவிட்சன் என்ற கலெக்டரையடுத்து 1910 ஆகஸ்ட் 2 இல் திருநெல்வேலி கலெக்டராக ஆஷ் பதவியேற்றான். இவன் பதவியேற்ற பின்பு, குற்றால அருவியில் காலை நேரத்தில் இரண்டு மணி நேரம் வெள்ளையர்கள் மட்டும் குளிப்பதற்கென்று ஒதுக்கப்பட்டது. இந்நேரத்தில் இந்தியர்கள் அங்கு செல்லக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் தனது இனவெறியை ஆஷ் வெளிப்படுத்திக் கொண்டான்”, (பக். 28, ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும், ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் வெளியீடு:டிச. 2009) 
 


    என்று தெளிவாக வரையறுக்கும் ஆ.சிவசுப்பிரமணியன் குற்றால அருவியில் இந்தியர்கள் அனைவரும் குளிக்க வழிவகை இருந்ததா என்பதைப் பற்றி எதுவும் கூறுவதில்லை அல்லது கண்டு கொள்வதில்லை. அருந்ததியர் வாழும் வரலாறு நூலில் மாற்கு குறிப்பிடும் குற்றால அருவி குறித்த செய்திக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஆ.சிவசுப்பிரமணியன் போன்ற ஆய்வாளர்களும் இவ்வாறு மவுன இடைவெளியால் கடப்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்று.

    ஆ.இரா.வேங்கடசலபதியின் நூலும் இவற்றைப் பற்றிய தெளிவான தரவுகளையோ, பார்வைகளையோ முன்வைப்பதில்லை. இது எனது வேலையல்ல அல்லது எடுத்துகொண்ட பொருளுக்கு அப்பாற்பட்டது எனவும் புறந்தள்ளிவிட முடியும். 


     ஆஷ் தொடர்பான ஆய்வுகளை மீள் விசாரணை செய்து அன்புச் செல்வம் எழுதி புலம் வெளியிட்ட குறுநூலும் வரலாற்று ஆய்வாக அமையாமல் பகடி செய்யும் விமர்சன நூலாகவே நின்று போகிறது. 


     கடந்த 100 ஆண்டுகளின் வரலாறே எப்படியெல்லாம் திரிக்கப்படும் என்பதற்கு ஆக. 15, 2017 நாளிட்ட ‘தி இந்து’ கட்டுரையே சான்று. இதைப் பற்றிய விரிவான வரலாற்று ஆய்வுகள் இனிதான் எழுதப்பட வேண்டும். தமிழில் வரலாற்று நூல்களின் நிலையையும் இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.துணை நின்றவை:01. அயோத்திதாசர் சிந்தனைகள் – தொகுதி 01, தொகுப்பாசிரியர்: ஞான அலாய்சியஸ், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, வெளியீடு: செப். 1999

02. அருந்ததியர் வாழும் வரலாறு – மாற்கு, தமிழினி, சென்னை, வெளியீடு, ஏப்ரல் 2001

03. ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும், ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

வெளியீடு:டிச. 2009

04. ஆஷ் அடிச்சுவட்டில்: அறிஞர்கள், ஆளுமைகள், ஆ.இரா.வேங்கடாசலபதி, வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

05. ஆஷ் படுகொலை: மீளும் தலித் விசாரணை, அன்புசெல்வம், வெளியீடு: புலம், சென்னை, டிச. 2011

06. கல்விக் குழப்பங்கள், மு.சிவகுருநாதன், வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை, மார்ச் 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக