மீண்டும் நிகழும் வரலாற்றுப் புரட்டுகள்
மு.சிவகுருநாதன்
(ஆகஸ்ட் 15, 2017 ‘தி இந்து’ நாளிதழின் ‘இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதியில் “அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே..!”, என்ற வாஞ்சிநாதனின் பேரன் மதியழகன் என்கிற இரா.ஜெயகிருஷ்ணனின் நேர்காணல் கட்டுரை வெளியாகியுள்ளது. அதிலுள்ள வரலாற்றுப் புரட்டுக்களுக்கான எதிர்வினை இது.)
வரலாற்று நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை திரும்ப நிகழும் என்பார்கள். இங்கு வரலாற்றுப் புரட்டுகள் திரும்பத் திரும்ப நிகழ்வது வாடிக்கையாகிப் போனது.
வாஞ்சிநாதன் பற்றிய மறைக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் நிறைய இருக்க, புனைவுகளின் உற்பத்தி கொஞ்சமும் குறைவின்றி உள்ளது. இம்முறை வாஞ்சியின் வாரிசுகளின் மூலமாக உற்பத்தியாகும் புரட்டுகள் வித்தியாசமானவை. இம்மாதிரியான திரிபு வேலைகளை எவ்வித கேள்விக்கும் இடமின்றி பிரசுரிப்பது எவ்வகையிலான இதழியல் அறம் என்று நமக்கு விளங்கவில்லை.
வாஞ்சி ஆஷைச் சுட்டுகொன்றது ஜூன் 17, 1911. அப்போது அவனது மனைவி பொன்னம்மாள் ஏழு மாத கர்ப்பிணி. உறவினர்கள் இவரைக் கைவிட்டுவிட கூட்டு வண்டியில் அழைத்துச் சென்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அடைக்கலம் கொடுத்ததாகவும், தனது தாய் லெட்சுமி பிறந்த பிறகு தாயையும் சேயையும் பிரித்து, வாஞ்சியின் வாரிசைக் காப்பாற்ற, கந்தவர்வக்கோட்டை கடைகாரரிடம் குழந்தை லெட்சுமியை ஒப்படைத்தும் வாஞ்சியின் மனைவியை மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் பாதுகாப்பாக தங்க வைத்ததும் நடந்ததாம்!
இந்தச் செயல்களை எல்லாம் செய்தபோது முத்துராமலிங்கத்திற்கு 3 வயது. நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்! அக்டோபர் 30, 1908 இல் பிறந்த முத்துராமலிங்கம் 1911 ஜூனில் கூட்டு வண்டி கட்டிக் கொண்டு வந்து வாஞ்சியின் மனைவியை எப்படி மீட்க முடியும்?
திருஞான சம்பந்தர் ஞானப்பால் குடித்துவிட்டு ‘தோடுடைய செவியன்’ என்னும் தேவாரப்பாடலைப் பாடவில்லையா? எனவே இதையும் நம்பிவிட்டு போங்களேன்! முன்பொருமுறை வாஞ்சிநாதன் பற்றிய புனைவு தமிழ் வார இதழொன்றில் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஜூலை 12, 1981 குங்குமம் இதழில் ஜோதி வளையாபதி என்பவர் இதைப் போன்று பல்வேறு கதைகளை அளந்தார். “சேரன்மாதேவி வ.வே.சு.அய்யர் குருகுலத்தில் பரங்கிக்காயில் கைத்துப்பாக்கியை ஒளித்துக் கொண்டுவந்து, வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியளித்தேன்”, என்கிற இவரது கதை பிரபலம்.
1910 இல் வ.வே.சு.அய்யர் புதுச்சேரி வருகிறார். ஆஷ் கொலை ஜூன் 17, 1911 இல் நடக்கிறது. 1920 இல் பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் அளித்து, தேசத் துரோகச் செயல்களில் ஈடுபடமாட்டேன் என்கிற உத்திரவாதத்துடன் பொது மன்னிப்பு பெற்று 1921 இல் சேரன்மாதேவி குருகுலம் தொடங்குகிறார். 1921 இல் தொடங்கப்பட்ட குருகுலத்தில் 1911 கொலைக்கான பயிற்சி நடந்தது எப்படி? இதற்கான மறுப்பை வெளியிடக் கூட அவ்விதழ் விரும்பவில்லை என்பதை ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் எடுத்துக்காட்டுகிறார்.
‘முத்துராமலிங்கம் அடைக்கலம் கொடுத்தது’ மட்டுமின்றி மேலும் பல வரலாற்றுப் புரட்டுகளையும் அடுக்கிக்கொண்டே போகிறார் இந்த வாரிசு.
பாட்டியைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கு பத்தாயிரம் சன்மானம் (கட்டுரையில் அபராதம் என்று தவறாக உள்ளது.) அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.
அடைக்கலம் கொடுப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து சிறையில் அடைப்போம் என்று எச்சரித்தது.
மேற்கண்ட நிகழ்வுகள் நடந்தற்கான ஆதாரங்கள் வரலாற்றில் உண்டா? எனக்கேட்டால் ‘இல்லை’ என்பதே உண்மை.
நீலகண்டப் பிரம்மச்சாரி பற்றிய துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ. 1000 சன்மானம் அறிவிக்கப்பட்டது. வாஞ்சியின் தந்தையார் ரகுபதி அய்யர் விசாரிக்கப்பட்டார். திருவாங்கூர் சமஸ்தான் ஊழியர்கள் மாறுதல், பணிநீக்கம் ஆகிய நடவடிக்கைகளுக்கு உள்ளாயினர். (பார்க்க: ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும், ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் வெளியீடு: டிச. 2009)
இறுதியாக ஒன்று: வாஞ்சி அய்யர் துப்பாக்கியை எடுத்தது தப்பு என்று வாரிசு சொல்ல வரவில்லை. கர்ப்பிணி மனைவிக்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லையே என்கிற ஆதங்கமே இங்கு தப்பாகப் பார்க்கப்படுகிறது. ஆஷின் வாரிசுகளின் கருத்துகள் ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘ஆஷ் அடிச்சுவட்டில்..’ நூல் மூலம் வெளிவந்துள்ளது. இவை இரண்டிற்குமான வேறுபாடுகள் இங்கு மனங்கொள்ளத்தக்கது.
1 கருத்து:
வாட்ஸ் அப், ஃபேஸ்புக் வந்த பிறகு எதை நம்புறது எதை நம்பக்கூடாதுன்னு புரில. இந்த ஷேர் செய்யுற குரூப்பை உதைக்கனும்
கருத்துரையிடுக