செவ்வாய், ஜூன் 11, 2019

முரண்பாடுகளின் மொத்த உருவமாய் பள்ளிக்கல்விப் பாடநூல்கள்!


முரண்பாடுகளின் மொத்த உருவமாய் பள்ளிக்கல்விப் பாடநூல்கள்!

மு.சிவகுருநாதன்


(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 10)



ஒன்று: எட்டாம் வகுப்பில் மின்சாரத்தைக் கடத்தும் கிராஃபைட் ஒன்பதாம் வகுப்பில் கடத்தாது!


     அலோகங்கள் பொதுவாக அரிதற்கடத்திகளாகும். கார்பனின் ஒரு வடிவமாகிய கிராஃபைட் மின்சாரத்தைக் கடத்தும். (பக்.59, எட்டாம் வகுப்பு அறிவியல், முதல் பருவம்)
 
     ஒன்பதாம் வகுப்பு அறிவியல் வைரம் மற்றும் கிராஃபைட்டுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் அட்டவணையில் "இது (கிராஃபைட்) வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது". (பக்.178) என்றும் சொல்லப்படுகிறது.
 
     ஒன்பதாம் வகுப்புப் பாடநூல்கள் சென்ற கல்வியாண்டு (2018) வெளியிடப்பட்டு, 2019  திருத்திய பதிப்பில் இவ்வாறு உள்ளது.
(முதல் பதிப்பு:2018, திருத்திய பதிப்பு:2019) உள்ளே ஒன்றையும் திருத்தாமல் வெளியே ‘திருத்திய பதிப்பு’ எனப்போட்டுக் கொள்வது என்ன மாதிரியான அறிவு நேர்மை என்று தெரியவில்லை.

  எனது பழைய பதிவில் கீழ்க்கண்டவற்றைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

   “வைரம், கிராஃபைட் வேறுபாட்டில் (பக்.74) கிராஃபைட் வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது என்று குறிப்பிட்டுள்ளனர். கிராஃபைட் வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும். மூன்றாம் பருவம் முடிந்துவிட்டது. இது குறித்து கூட நமது ஆசிரியப் பெருந்தகைகளிடம் சிறு சலனம் கூட இல்லை. பொதுத்தேர்வு நடக்கும் வகுப்புகளை மட்டும் கவனிப்பதே கல்விப் பணியாகிவிட்டது போலும்!”

    “இந்த நோயானது (மலேரியா) பத்து நாள்களுக்குக் குறைவாக மட்டுமே வாழக்கூடிய, மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் பெண் கொசுவாகிய அனோபிலெஸ் கொசுவால் கடத்தப்படுகிறது”, (பக்.197) இப்படி அறிவியல் பாடம் எழுத நிறைய துணிச்சல் வேண்டும்! மனிதனைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும் அனோபிலெஸ் பெண் கொசுக்கள் வாழ்நாள் ஒரு மாதமாகும். சமீபத்திய ஆய்வுகள் ஏடிஸ் கொசுக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன”. 

     மேற்கண்ட பிழைகள் மட்டுமல்ல; எதுவும் திருத்தப்படாமலேயே பாடங்கள் வெளிவருவதை என்ன சொல்வது?


இரண்டு: உணவுப்பயிராகிய கரும்பு!


     வேளாண்மையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பயிர்களை நாம் பலவாறு பிரிக்கின்றோம்.


  • உணவுப்பயிர்கள் (நெல், கோதுமை போன்ற தானியங்கள், கேழ்வரகு, கம்பு, தினை, சோளம் போன்ற சிறுதானியங்கள், பருப்பு வகைகள்)
  • பணப்பயிர்கள் (கரும்பு, புகையிலை) உணவுப்பயிர்கள் தவிர்த்த பிற பயிர்கள் இப்பட்டியலில் சொல்லப்படுவதுண்டு.
  • தோட்டப்பயிர்கள் (தேயிலை, காப்பி, ரப்பர்)
  • பானப்பயிர்கள் (தேயிலை, காப்பி)
  • இழைப்பயிர்கள் (பருத்தி, சணல்)
  • எண்ணைய் வித்துகள் (எள், ஆமக்கு, சூரியகாந்தி, நிலக்கடலை, தேங்காய்)


    ஆனால் இவ்வாண்டின் (2019-2020) எட்டாம் புதிய சமூக அறிவியல் பாடத்தில் 'உற்பத்தி' எனும் பொருளியல் பாடம், "கரும்பு, ஓர் உணவுப்பயிர். அது, வேளாண்மை மூலம் விளைவிக்கப்படுகிறது", (பக்.238) என்று சொல்கிறது.
  
     கரும்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை, வெல்லம் போன்றவை உணவில் சேர்க்கப்பட்டாலும் அவை முதன்மையான உணவுப்பயிர்கள் அல்ல.

     உணவுப் பயிரைத்தான் உற்பத்திக்கு உதாரணமாகக் காட்ட வேண்டுமென்பதில்லை. அனைத்து வேளாண் பயிர்களும் உற்பத்திப் பயிர்களே.

மூன்று: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் தெரியாமல் குழம்பும் / குழப்பும்  பாடம்

      முதல் பருவ எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் முதல்பாடம் ‘மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?’. இதில் மாநில அரசுகளின் அதிகாரம், பணிகள், சட்டமன்றத்தேர்தல்கள் விளக்கப்படுகின்றன.

      இதில் "முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். முதலமைச்சராக பதவி ஏற்கும்போது உறுப்பினராக இல்லாவிட்டால் 6 மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். (பக்.233)

     அடுத்த பக்கத்திலேயே " முதலமைச்சர் (இவரும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும்) அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து  அமைச்சர்களைத் தேர்வு செய்கிறார்", (பக்.234) என்று முரண்படுகிறது. 
 
    சட்டமன்ற உறுப்பினரல்லாதவர்  6 மாதத்திற்குள் உறுப்பினராக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் பொறுப்பேற்பதைப் போலவே சட்டமன்ற உறுப்பினரல்லாத எவரும் அமைச்சராகலாம். அவரும் 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினரானால் போதுமானது. இதை ஏன் பக்கத்திற்கு பக்கம் குழப்பவேண்டும்?
 
     "சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.  ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம்", (பக்.234)

     ஒருவர் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். இரு தொகுதிகள் என்று சொல்லாமல் ‘ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகள்’, என்று சொல்வது தவறு. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தி அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்; மூன்றாவது தொகுதியில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 33 (vii) (b) இன் படி வேட்பாளர் ஒருவர் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும்.
 
    ஜெயலலிதா 2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில் புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய  4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து அவை தள்ளுபடியானது தெரியுந்தானே! குற்ற வழக்கைக் காரணம் காட்டக்கூடாது என்பதற்காக இந்த குயுக்தி வழிமுறைகளைக் கையாண்டனர்.

     ஜெ.ஜெயலலிதா மீது தொடரப்பட்ட டான்சி வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகளும், கொடைக்கானல் ‘Pleasant Stay’ ஓட்டல் வழக்கில் 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சட்டப்படி 3 ஆண்டுகள் தண்டனை பெற்றால் வேட்புமனு நிராகரிக்கப்படும். அதனால் நான்கு தொகுதிகளில் வேட்புமனு எனும் நாடகம் அரங்கேறியது.
 
   “தேர்தலில் பெரும்பான்மை பெரும் கட்சியின் தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 118 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சி ஆளுநரால் ஆட்சி அமைக்க அழைக்கப்படுகிறது”. (பக்.234)

    “பெரும்பான்மை பெரும் கட்சியின் தலைவர்”, என்பது சரியல்ல. தேர்தலில் பெரும்பான்மை பெற்ற சட்டமன்ற கட்சியின் தலைவர் என்பதே பொருத்தம். கட்சியின் தலைவர் வேறாகக் கூட இருக்கலாம். அ.இ.அதி.மு.க. வில் தலைவர் எனும் பதவியே இல்லை. கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் பதவியே அதிகாரமிக்கது. தற்போதும் அந்தப் பதவியும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர்; எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற அ.இ.அ.தி.மு.க. கட்சித்தலைவர்; எனவே அவர் முதல்வரானார்.
    
    அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மை பெற்றது. கட்சியின் தலைவர் அமீத் ஷா பிரதமராகவில்லை. நாடாளுமன்றக் கட்சித்தலைவராகத் தேர்வான நரேந்திர மோடியே பிரதமரானார்.

    தமிழக சட்டமன்றத்தில் 118 என்ற எண்ணிக்கையே பெரும்பான்மைக்குப் போதுமானது. ‘117 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சி’,  என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    தமிழகத்தில் இல்லாத சட்டமன்ற மேலவையைப் பற்றி சொல்வது ஏன்? மக்களவை, மாநிலங்களவை போன்று புதிய சொல்லாக்கங்களைக் கண்டடைந்து கீழவை, மேலவை என்பதை புறந்தள்ள வேண்டும்.  

    “நமது நாட்டில் 29 மாநில அரசாங்கங்கள் செயல்படுகின்றன”, (பக்.237) என்று சொல்கிறது பாடநூல்.  தில்லி, புதுச்சேரி ஆகிய  இந்திய ஆட்சிப்பகுதிகளில் சட்டமன்றங்கள் இருப்பதையும் துணைநிலை ஆளுநர் அங்கு நிர்வாகப் பொறுப்பிலிருப்பதையும் குறிப்பிடலாம். மேலவையைவிட இது தேவையானது.

   ‘ராஜினாமா’ ‘அரசாங்கங்கள்’ போன்ற சொற்களைக் காணும்போது இன்னும் எந்தக்காலத்தில் இருக்கிறோம் என்று கேட்கத் தோன்றுகிறது. பதவி விலகல், அரசுகள் என்கிற நவீன சொல்லாக்கங்களை இன்று அனைத்து ஊடகங்களும் பயன்படுத்துவதில்லையா? பாடநூல்கள் மட்டும் முரண்டு பிடிக்கலாமா?   

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக