வியாழன், ஜூன் 27, 2019

பாடநூல்களில் தொடரும் பிற்காலச்சோழ ‘மெய்கீர்த்திகள்’


பாடநூல்களில் தொடரும் பிற்காலச்சோழ ‘மெய்கீர்த்திகள்’ 

மு.சிவகுருநாதன்  

(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 21) 


        ஏழாம் வகுப்பு முதல்பருவ சமூக அறிவியல் பாடப்பகுதியில்  இயல் III  ‘தென் இந்தியப் புதிய அரசுகள் – பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்’ (பக்.153-163) என்ற பாடத்தில் வழக்கம்போல பிற்காலச் சோழப்பெருமை பாடுகின்றனர். பிற்காலச் சோழர்களின் ‘மெய்கீர்த்தி’களை பாடத் தொடங்கிவிட்டால் பிறகு வரலாறு எப்படி இருக்கும்? புனைவுகள், புராணங்கள் எனும் பெருங்கதையாடல்களாக பாடங்கள் விரிகின்றன.
      
சோழர்கள் ஆட்சியின் புத்தெழுச்சி

           “பண்டைய சோழ அரசு காவிரி ஆற்றின்  கழிமுகப்பகுதியை மையப்பகுதியாகக்  கொண்டிருந்தது. அதன் தலைநகர் உறையூர் (இன்றைய திருச்சிராப்பள்ளி) ஆகும்.  கரிகாலனின் ஆட்சிக்காலத்தில் இவ்வரசு  சிறப்பான இடத்தை வகித்தது. அவருக்குப் பின்வந்தோர் காலத்தில் படிப்படியாகச்  சரிவினைச் சந்தித்தது. ஒன்பதாம்  நூற்றாண்டில் காவிரிக்கு வடக்கே ஒரு  சிறு பகுதியை ஆண்டுவந்த விஜயாலயன்  சோழ வம்சத்தை மீட்டெழச்செய்தார். அவர் தஞ்சாவூரைக் கைப்பற்றி அதைத் தனது  தலைநகராக ஆக்கினார்”. (பக்.153)

     சங்ககாலச் சோழர்களின் வழித்தோன்றல்கள் என்பதை நிருபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை. இது சோழர்கள் என்ற பெயரிலமைந்த ஆட்சியின் இன்னொரு வடிவம். இதை சங்ககால சோழர்களின் புத்தெழுச்சியாகப் போற்ற வழியில்லை. வரலாற்றில் ஆய்வு மனப்பான்மையை வளர்க்காமல் புனைவுகளையும் பெருமைகளை உற்பத்தி செய்வது தொடர்கிறது.

       “அதிராஜேந்திரனின் மறைவைக்  கேள்விப்பட்டவுடன் கீழைச் சாளுக்கிய  இளவரசரான ராஜேந்திர சாளுக்கியன், சோழ அரியணையைக் கைப்பற்றினார்.  முதலாம் குலோத்துங்கன் எனும் பெயரில்  சாளுக்கிய - சோழ வம்சத்தின் ஆட்சியை அவர் தொடங்கி வைத்தார். சோழ அரியணைக்கு  ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல்களை விரைவில்  ஒழித்துக்கட்டி முதலாம் குலோந்துங்கன்  தனது நிலையை உறுதிப்படுத்திக்கொண்டார்.  தேவையற்ற போர்களைத் தவிர்த்த அவர் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.  ஆனால் இலங்கையில் சோழர்களுக்குச்  சொந்தமாக இருந்த பகுதிகளை இழந்தார்.  பாண்டிய நாட்டிலிருந்த பகுதிகளும்  சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவின.  காஞ்சிபுரத்தைத் தெலுங்குச் சோழர்களிடம்  இழக்க நேரிட்டது. 1279இல் பாண்டிய அரசன்  முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்  மூன்றாம் ராஜேந்திர சோழனைத் தோற்கடித்துப் பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில்  நிறுவினார். அத்துடன் சோழ வம்சத்தின் ஆட்சி  முடிவுற்றது”. (பக்.154,155)

        போர்களை மட்டுமல்ல, சுங்கம் தவிர்த்த சோழன் இவன். அகன்ற ஆட்சிப்பகுதிகள் சுருங்குவதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலம்  கி.பி. 1070-1120. அதன்பிறகு ஏழு மன்னர்கள் அரசாள்கின்றனர்;  கி.பி. 1279 தான் வீழ்ச்சி. ஆனால் முதலாம் குலோத்துங்கன் காலத்திலேயே வீழ்ந்ததுபோல் முடிக்கின்றனர். பிற்காலச் சோழர்களைப் பிரித்து அணுகும் போக்கு வைதீக வரலாற்றாசிரியர்களிடம் உள்ளது. அகண்ட பேரரசுப் பெருமையின் வீழ்ச்சி, போர்கள் மூலம் கொள்ளையிடும் செல்வ வருவாய் குறைவு, அதிகார மையம் நோக்கி சூத்திரச் சாதிகளின் நகர்வு  போன்ற பல காரணங்களை இதற்குப்  பட்டியலிடமுடியும். 

    அதிராஜேந்திரனுக்கு முடிசூடும் விழாவில் கலந்துகொண்ட குலோத்துங்கன், சோழ அரியணையை கைப்பற்றினான் என்பது வரலாற்றில் எந்த அளவிற்கு நிருபிக்கப்பட்டுள்ளது? இதைப்பற்றிய பல்வேறு ஊகங்களை ஆய்வு செய்யும் ‘சோழர்கள்’ என்னும் தமது நூலில் பேரா. கே.ஏ. நீலகண்டசாஸ்திரி கீழ்க்கண்ட முடிவுக்கு வந்தடைகிறார்.

     “குலோத்துங்கள், கி.பி. 1070 ஜூன் 9-ம் நாள் முதல் சோழ நாட்டை அரசாளத் தொடங்கினான் என்பது உறுதியாகத் தெரிகிறது. இவனுடைய பிற்காலக் கல்வெட்டுகளைப் பார்க்கும்போது, உரிமையால் இவன், சோழ முடியைப் பெற்றான் என்றும் காவிரி நாட்டை ஆளுவதற்குரிய துணைவனாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டான் என்றும் தெரிகிறது”. (பக்.406, சோழர்கள் – தொகுதி -1, பேரா. கே.ஏ. நீலகண்டசாஸ்திரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். வெளியீடு)

உள்ளாட்சி நிர்வாகம்

   “உள்ளாட்சி நிர்வாகமானது ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகளின்  மூலமாகச் செயல்பட்டது. வேளாண்மையின் 
விரிவாக்கத்தினால் கிராமப்புறங்களில்  அதிக எண்ணிக்கையில் விவசாயிகளின்  குடியிருப்புகள் உருவாயின. அவை ஊர்கள்  என அறியப்பட்டன. நிலஉடமையாளர்களாகஇருந்த ஊரார், ஊரின் சார்பாகப் பேசுபவர்களாக இருந்தனர். பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் பொது  நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும்,  நீதி வழங்குதலையும் மேற்கொண்டனர்.  வணிகர்களின் குடியிருப்புகளை நகரத்தார் நிர்வகித்தனர். இருந்தபோதிலும் தனித்திறன் பெற்ற கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத்தொழில் செய்வோர், தங்கவேலை செய்வோர்,  நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர்.  நாடுகளில் நாட்டார் எனும் அமைப்பு நாடோடு  தொடர்புடைய பூசல்களையும் ஏனைய  சிக்கல்களையும் தீர்த்துவைத்தது”.

         “ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டன.  இக்குழுக்கள் நீர்ப்பாசனம், சாலைகள்,  கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மத விழாக்களை நடத்துதல் போன்ற பணிகளை  மேற்கொண்டன”.

உத்திரமேரூர் கல்வெட்டுகள்

          “இன்றைய காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேய கிராமமாகும். இக்கிராமத்தில் கிராம சபைக்கான உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்துத் தெளிவாக விளக்கும் கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொரு குடும்பிலிருந்தும் (வார்டு) உறுப்பினர்ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மொத்தம் 30  குடும்புகள் இருந்தன. போட்டியிடும் ஆடவர் 35 -70 வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும். வேதநூல்களிலும், சமய நூல்களிலும் தேர்ச்சி  பெற்றிருப்பதும், நிலஉரிமையாளராகவோ, சொந்த வீடு உடையவராகவோ இருக்க வேண்டும் என்பவை தகுதிகளாகும்”. 

 தேர்ந்தெடுக்கும் முறை:

     “ஒவ்வொரு குடும்பிலிருந்தும் தகுதியுடைய  வேட்பாளர்களின் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம்  ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு சிறுவனை அழைத்து குடத்துக்குள் உள்ள ஓலைத் துண்டுகளை  எடுக்கச்  சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இம்முறையின்படி பல குழுக்கள் முடிவு செய்யப்படும்”. (பக்.156)

      குடவோலை முறை பற்றி பலமுறை எழுதியாகிவிட்டது. இந்தத் திருவுளச்சீட்டு முறையை மக்களாட்சி, வேட்பாளர், தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் என நவீனத்துவ சொல்லாடல்களுடன் இணைத்துக் கதைகள் பல உருவாக்குகின்றனர். பிராமணச் சாதிக்கான திருவுளச்சீட்டு முறை அக்காலத் தமிழகம் முழுதும் இருந்த ஒன்றாக கதைப்பது அநியாயம் மட்டுமல்ல; வரலாற்றையும் திரிப்பதாகும். தகுதிகளில் ஒன்று வேதம் கற்ற பிராமணனாக இருக்க வேண்டும் என்பதும் ஒன்று. பெண்களுக்கு இங்கு இடமில்லை. குடவோலை முறை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. கீழக்கண்ட இணைப்பில் ஒரு பழைய பதிவு உள்ளது. தேவைப்பட்டால் வாசிக்கவும். 


     ‘சோழர்களின் கல்விப் பணி’ எனும் தலைப்பில் சொல்லப்படுவன:

      “சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப் பெரும்  ஆதரவு நல்கினர். முதலாம் ராஜேந்திரன்  எண்ணாயிரம் (தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள) எனும் கிராமத்தில்  வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார்.  அக்கல்லூரியில் 14 ஆசிரியர்களின்  வழிகாட்டுதலில் 340 மாணவர்கள்  வேதங்கள், இலக்கணம், உபநிடதங்கள்  ஆகியவற்றைக் கற்றனர். அவருக்குப் பின்வந்த ஆட்சியாளர்கள் அவருடைய அப்பணியை முன் உதாரணமாகக் கொண்டு பின்பற்றினர்.  அதன் விளைவாக இன்றைய புதுச்சேரிக்கு  அருகேயுள்ள திருபுவனை எனும் ஊரிலும்,  இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருமுக்கூடலிலும் முறையே 1048, 1067  ஆகிய ஆண்டுகளில் இதே போன்ற கல்லூரிகள் நிறுவப்பட்டன. உன்னதமான இலக்கியங்களான  ‘பெரியபுராணமும்  கம்பராமாயணமும்’ 
இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும்”.  (பக்.157,158)

     அது என்ன உன்னத இலக்கியம்! பக்தியிலக்கியத்தை கொண்டாடாவிட்டால் இவர்களுக்குத் தூக்கம் வராது போலும்! பெரிய புராணத்தை (திருத்தொண்டர் புராணம்) எழுதிய சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்தவர். இரண்டாம் குலோத்துங்க சோழனின் காலம் கி.பி. 1133 -1150. கம்பரின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியாகும். பிற்காலச் சோழர்களின் தமிழிலக்கிய அடையாளமாக முன்னிறுத்தப்படுபவை அனைத்தும் சாளுக்கிய-சோழ மரபில் வந்த முதலாம் குலோத்துங்கன் மற்றும்  அவருக்குப் பிந்தைய காலத்துப் படைப்புகளாகும்.  சங்க காலத்திலும் (தோராயமாக கி.மு. 300 – கி.பி. 300) களப்பிரர்கள் காலத்திலும் (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார் தவிர்த்த பிற நூல்கள் உருவான காலம், கி.பி.275-575) ) சிறந்து விளங்கிய தமிழ் இந்தப் பெருவேந்தர் காலத்தில் இருந்த இடம் தெரியவில்லை. ஏனென்றால் இவர்களது கைகள் கட்டப்பட்டிருந்தன, வைதீகம் ஆட்சி செய்தது, சமஸ்கிருதம் ஆட்சிமொழியை விட உயர்வாக இருந்தது. அந்த வகையில் இவர்கள் நரேந்திர மோடியின் வைதீகப் பாரம்பரிய  முன்னோடிகள்.

        குறிப்பாக முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகிய பெருவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழில் இயற்றப்பட்ட இலக்கியங்களைப் பட்டியலிட முடியுமா? ஒன்றுமே இல்லை. கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், ஜெயங்கொண்டார், சேக்கிழார் போன்ற அனைவரும் பிற்காலத்திய சாளுக்கிய–சோழ மரபைச் சேர்ந்தவர்களால் ஆதரிக்கப்பட்டவர்கள் என்கிற உண்மை உணர்த்துவது என்ன?

      இளவரசன் ஆதித்திய கரிகாலனை கொலை செய்த மூன்று பிராமணர்களுக்கு மநு தர்மப்படியான தண்டனையே அளிக்கப்பட்டதை நினைவிற்கொள்க. எனவேதான் தங்களது மெய்கீர்த்திகளில் ‘மநு நெறி விளங்கு’மாறு பார்த்துக் கொண்டதோடு, மநுநீதிச் சோழன் என்ற அடைமொழிகளுடன் வாழ்ந்தனர்.

     எத்தகைய கல்வி என்று சொல்லாமல் இவ்வளவு கதையாடல்களை உருவாக்குவதைப் பாருங்கள்! சமஸ்கிருத மொழிக்கல்வியே வழங்கப்பட்டது. பின்பு கோயில் பற்றிச் சொல்லும்போது கல்வியை வளர்த்ததாகச் சொல்வது எவ்வளவு பெரிய வன்முறை! அரசு, வழிபாடு ஆகியவற்றில்  தமிழுக்கு இடமேயில்லை. கீழ்க்கண்ட வரிகளை இதனை உறுதிப்படுத்தும்.

    “இராசேந்திரனைப் பற்றிய வடமொழிப் பட்டயங்களும் கல்வெட்டுகளும் காவிய நடையில் அமைந்தவை. சிறப்பாகத் திருவாலங்காட்டுச் செப்பேடுகளை வரைந்த நாராயண கவி சிறந்த வடமொழிப் புலவர் ஆவார். தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் எண்ணாயிரம் என்பது ஒர் ஊர். அஃது ‘இராசராசச் சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது. அங்கொரு பெரிய வடமொழிக் கல்லூரி நடந்து வந்தது. ------------------------ இங்ஙனமே ‘திரிபுவனை’ என்னும் இடத்திலும் வடமொழிக் கல்லூரி நடந்து வந்தது”. (பக்.212, சோழர் வரலாறு, டாக்டர் மா.இராசமாணிக்கனார், பூம்புகார் பதிப்பக வெளியீடு)

       பிற்காலச் சோழர்களின் பொற்காலச் சாதனைகளின் பட்டியலுக்கு கீழ்க்கண்ட இணைப்பை வாசிக்கலாம். 

https://musivagurunathan.blogspot.com/2015/09/25-30.html
 
நிலம் சார்ந்த உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு

         “சோழஅரசர்கள் வரிவிலக்கு அளிக்கப்பட்ட  நிலங்களை அரசு அதிகாரிகளுக்கும், பிராமணர்களுக்கும், கோவில்களுக்கும்  (தேவதானக் கிராமங்கள்), மத நிறுவனங்களுக்கும் கொடையாக வழங்கினர்.  சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ’பள்ளிச்சந்தம்’ என  அழைக்கப்பட்டது. ’வேளாண்வகை’ என்னும்  நிலங்களின் உடைமையாளர்கள் வேளாளர் என்றழைக்கப்பட்டனர். வேளாளரில் ஒரு  பிரிவினரான ’உழுகுடி’ என்போர் நிலங்களின்  உடைமையாளர்களாக இருக்க இயலாது.  அவர்கள் பிரம்மதேய, வேளாண்வகை நிலங்களில் வேளாண் பணிகளைச்  செய்யவேண்டியிருந்தது. மொத்த விளைச்சலில்  வேளாண் வகை நிலவுடைமையாளர்கள்  ’மேல்வாரத்தைப்’ (விளைச்சலில் பெரும்பகுதி)  பெற்றனர். உழுகுடிகள் ’கீழ்வாரத்தைப்’  (விளைச்சலில் சிறிய பகுதி) பெற்றனர்.  ‘அடிமை’ மற்றும் ‘பணிசெய் மக்கள்’ என்போர் சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்தனர்.  சமூகத்தின் இடை மட்டத்தில் போர் செய்வோரும் வணிகர்களும் இடம் பெற்றனர்”. (பக்.156)

      நன்றாக கதை சொல்கிறார்கள் பாருங்கள்! இத்தகைய வரலாறுகள்தான் தொடர்ந்து பாடமாக முன்வைக்கப்படுகிறது. சாதிப்பிரிவினையே இல்லை என்பதுபோல் இக்கற்பனை உள்ளது. எனவேதான் இயக்குநர் பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்று நீதிமன்றம் கேட்கிறது. வரலாற்றில் உண்மைகளைப் பேசாமல் புனைவுகளை மட்டுமே உருவாக்குவது இம்மாதிரி அபத்தங்களுக்கே இட்டுச்செல்லும். கொஞ்சம் கூடுதலாக விளங்கிக்கொள்ள நொபொரு கராஷிமா எழுத்துகளிலிருந்து…

    “நிலவுடைமை முறையில் இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது? இரண்டு பொருளியல் காரணங்களைக் கூறலாம். ஒன்று, முதல் ராஜராஜன், முதல் ராஜேந்திரன் ஆகியோர் ஆட்சிக்காலத்தில் சோழராதிக்கம் பேரரசாகப் பரவியதை ஒட்டி எதிரி நாடுகளிடமிருந்து கொணர்ந்து குவிக்கப்பட்ட செல்வம் சோழநாட்டின் மையப்பகுதி மக்களிடயே பகிர்ந்தளிக்கப் பட்டமை. இரண்டு, அணைகள், ஏரிகள் முதலிய  புதிய நீர்ப்பாசன வசதிகள் பெருகியதன் காரணமாகப் பயிர் விளைச்சல் பெருகியமை. கீழ்க்காவேரிப் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட ஏராளமான பிரமதேய ஊர்கள் நீர்ப்பாசன வசதிப் பெருக்கத்துக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தன எனலாம். மூன்றாவதாக ஒரு நிர்வாகத் தொடர்பான காரணத்தையும் குறிப்பிடலாம். அதாவது முற்சோழர் காலத்தில் பிரமதேய ஊர்கள் நிறைய ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நிலச்சொத்துரிமை மாற்றங்கள் எளிதானமையால், முதல் ராஜராஜன் காலந் தொடங்கி, பெருகி வந்த்க அரசு அலுவலர் தொகுதிக்கு உடையவர்களிடமிருந்து நிலங்களை எடுத்து வழங்குவது எளிதாயிற்று. இந்த எல்லாக் காரணங்களும் சேர்ந்து காணியுடைமை தனியுடைமை ஆன வளர்ச்சியை ஏற்படுத்தின”. (பக்.57, வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் – சோழர் காலம் (850-1300), நொபொரு கராஷிமா, பாரதி புத்தகாலய வெளியீடு)

 மதம்

       “சோழர்கள் சைவத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவர். சிவபெருமானின்  திருவிளையாடல்கள் சைவ அடியார்களான  நாயன்மார்களால் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பியால்  தொகுக்கப்பட்ட அவை ’திருமுறைகள்’ என  அழைக்கப்படுகின்றன”. (பக்.157)


கோவில்கள்

       “சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான  கோவில்கள் கட்டப்பட்டன. தஞ்சாவூர்,  கங்கைகொண்ட  சோழபுரம், தாராசுரம்  ஆகிய இடங்களிலுள்ள கோவில்கள்  சோழர்களின் கலைகளான கட்டடங்கள்,  சிற்பங்கள், செப்புச்சிலைகள் ஓவியங்கள்,  படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன. சோழர்கள் காலக் கோவில்கள்  வழிபாட்டிற்கான இடங்கள் மட்டுமல்லாமல்  பெருமளவு நிலங்களைச்  சொந்தமாகக்  கொண்டிருந்தன. அவை கல்வியையும்,  பக்திக் கலைகளின் வடிவங்களான நடனம்,  இசை, நாடகம் ஆகியவற்றையும் வளர்த்தன.  நடனமாதர், இசைக்கலைஞர்கள், பாடகர்கள்,  இசைக்கருவிகளை மீட்டுவோர், அர்ச்சகர்கள்  ஆகியோர் கோவில் பணியாளர்கள் ஆவர்”. (பக்.157)
 
    கோயில்களுக்கு பெருமளவிலான நிலங்கள் எப்படி வந்தன? இவை என்ன மாதிரியான கல்வியை வழங்கின? வேத, சம்ஸ்கிருதக் கல்வியை பொதுமைப்படுத்த இயலுமா?  போகிற போக்கில் கோயில்கள் கல்வியை வளர்த்தன என்பது என்ன வகையான சிந்தனை மற்றும் ஆய்வுமுறை? கலைகள் எத்தகையவை? நடனமாதர் என்பது தேவதாசிகளைக் குறிக்கவில்லையா? அவர்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சநஞ்சமா? தஞ்சை, திருவாரூர் கோயிகளில் ஆயிரக்கணக்கில் தேவதாசிகள் ஏன் குவித்து வைக்கப்பட்டனர்?  இவர்களை அன்றைய அரசர்கள் பாலியல் தொழிலாளர்களாகப் பயன்படுத்தியதானே உண்மை.


       அரசர், ’மனு சாஸ்திரத்தின்படி’ தான்  ஆட்சி செய்வதாகக் கூறினார். இக்கோட்பாடு  சமூகத்திலிருந்த ஏற்றத் தாழ்வு நிலைகளை 
நியாயப்படுத்தியது. அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் ’மங்கலம்’ அல்லது  ‘சதுர்வேதிமங்கலம்’ எனும் பிராமணர் குடியிருப்புகளை உருவாக்கினர். இவை நீர்ப்பாசன வசதிகளோடு  உருவாக்கப் பட்டிருந்தன.  நிலத்தின்  உண்மையான உடைமையாளர்கள் ’பூமி  புத்திரர்’ அல்லது ’வேளாளர்’ என விவரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று ரீதியாக அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்களாகையால்  அவர்கள் ’நாட்டுமக்கள்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இச்சமூக மக்கள்  ஒன்றிணைந்த மன்றம் ’சித்திர – மேழி-  பெரிய நாட்டார்’ என அழைக்கப்பட்டது”. (பக்.161)

மதம்

      “பாண்டிய அரசர்கள் வேத நடைமுறைகளுக்கு  ஆதரவு நல்கினர். வேள்விக்குடிச் செப்பேடுகளும்  ஏனைய பொறிப்பியல் சான்றுகளும் சிறந்த பாண்டிய அரசர்கள் ஒவ்வொருவரும் செய்த அஸ்வமேதயாகம், ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய  வேள்வி போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.  பாண்டிய மன்னர்கள் சைவம், வைணவம்  ஆகிய இரண்டையும் சமமாகவே கருதினர் என்பதைப் பொறிப்புச் சான்றுகளின் தொடக்கப் பகுதிகள் உணர்த்துகின்றன. இரு பிரிவைச் சேர்ந்த கோவில்களும் பாண்டிய மன்னர்களின்  ஆதரவைப் பெற்றிருந்தன. இக்கோவில்களுக்கு  நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன.  வரிவிலக்கும்  அளிக்கப்பட்டது.  அவை புனரமைக்கப்பட்டுப் புதிய கோபுரங்களும்  விசாலமான மண்டபங்களும் கட்டப்பட்டன”.

          “புகழ் பெற்ற சைவ, வைணவ அடியார்கள்  (நாயன்மார்கள், ஆழ்வார்கள்) தமிழ் இலக்கிய  வளர்ச்சிக்கும், ஆன்மிக அறிவு மேம்பாட்டிற்கும்  பெரும் பங்களிப்பைச் செய்தனர். அக்காலப்பகுதியில் தீவிர மதமோதல்கள்  இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. அக்காலகட்டப்
பக்தி இயக்கம் புறசமயத்தாரை வாதத்திற்குத் தூண்டின. அப்படிப்பட்ட விவாதப் போட்டிகளில்  பலமுறை பௌத்தர்களும் சமணர்களும் 
தோற்கடிக்கப்பட்டதாகப் பக்தி இலக்கியங்கள்  குறிப்பிடுகின்றன. அக்காலப் பாண்டிய அரசர்கள்  தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து  வளர்த்தனர்”. (பக்.162)

      “சைவத் துறவியான திருஞானசம்பந்தர் அரிகேசரியைச் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். மதம் மாறிய பின்னர் அரிகேசரி சுமார் 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகக் கூறப்படுகிறது. எண்ணிக்கை மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பினும், சைவத்திற்கு மாறிய பின்னர் அரிகேசரியின் சமண எதிர்ப்புப் போக்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது”. (பக்.159)

    மேலே கண்ட பத்திகளில் பின்வரும் தரவுகள் நமக்குக் கிடைக்கின்றன. அவையாவன:

பிற்காலப்பாண்டியர்கள்,


  •  சதுர்வேதிமங்கலம்’ எனும் பிராமணர் குடியிருப்புகளை உருவாக்கினர்.  
  •  ‘மனு சாஸ்திரத்தின்படி’  ஆட்சி செய்தவர்கள்.   
  • வேத நடைமுறைகளுக்கு  ஆதரவு நல்கினர்.
  • அஸ்வமேதயாகம், ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய  வேள்வி போன்ற யாகங்களை நடத்தினர்.
  •   பாண்டிய அரசர்கள்  தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து  வளர்த்தனர்.
  • சைவம், வைணவம்  ஆகிய இரண்டையும் சமமாகவே கருதினர்.
  • அரிகேசரி சுமார் 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகக் கூறப்படுவது எண்ணிக்கை மிகைப்படுத்தல்.
  • அரிகேசரியின் சமண எதிர்ப்புப் போக்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது.



    ஆனால் பிற்காலச் சோழர்கள் பற்றிய பாடப்பகுதியில் மநு சாஸ்திரம்,  ‘சதுர்வேதிமங்கலம்’ எனும் பிராமணர் குடியிருப்புகள், வேத நடைமுறைகள், தமிழ், சமஸ்கிருதம் மொழி வளர்ச்சி குறித்த பேச்சே ஏன் எழவில்லை? அவர்களது காலகட்டத்தில் அத்தகைய செயல்கள் ஏதும் நடைபெறவில்லையா?

    கல்வி, கலைகள் வளர்ந்தன என்றால் என்ன மொழி இலக்கிய வளர்ச்சி இருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டுமல்லவா! மநு தர்ம ஆட்சி நிலவாமல் மநுநீதிச் சோழன், மநுகுல தீபன் போன்ற பட்டப்பெயர்கள் வந்தது எப்படி? தங்களது மெய்கீர்த்திகளைக்கூட சமஸ்கிருதததில் எழுதிக்கொண்டவர்கள் தமிழுக்காக செய்தது என்ன?


     சமணர்களைக் கழுவேற்றியது தொடர்பான எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாம்! அருமையான கண்டுபிடிப்பு! கழுவேற்றும் நிகழ்வு ஒன்றே நடக்கவில்லை என்று எழுதிவிட்டுப் போகலாம். 8000 பேர் இல்லை, 8 பேர்தான் கழுவேற்றப்பட்டனர் என்றாலும் அது ஒரு சிறந்த செயலாகக் கருதமுடியுமா? பவுத்த விகாரைகள் கட்ட அனுமதி. பொருளதவி போன்ற மத நல்லிணக்க நடவடிக்கையாக காண முடியாது. அன்றைய வணிகச்சூழல் சார்ந்த நடவடிக்கைகள் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.   


(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக