புதன், ஜூன் 05, 2019

பாடநூல்களில் சாதிப்பெயர்களும் மிகை மதிப்பீடுகளும்


பாடநூல்களில் சாதிப்பெயர்களும் மிகை மதிப்பீடுகளும்


மு.சிவகுருநாதன்


(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 08)





      பாடநூல்களில் சாதிப்பெயரைப் பயன்படுத்துவதில்லை என்கிற ஒரு நல்ல நிலைப்பாட்டை பாடநூல்களை உருவாக்குவோர் இதுகாறும் பின்பற்றி வந்தனர். இதுவும் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தந்த கொடையிது. பெரும்பாலான பிற மாநிலப்பெயர்களில் சாதி இல்லாத (surname) நிலையைப் பார்க்க முடியாது. காந்தி, முகர்ஜி, மோடி என சாதிப்பெயர்கள் நீளும். இவற்றை நீக்கி எழுதுவது சாத்தியமில்லை. ஆனால் சுயமரியாதை இயக்க முன்னோடி முயற்சியால் சாதிப்பெயரை இணைக்காமல் பெரும்பாலான பெயர்கள் அமைந்தன. வெகுசில சாதி அடைமொழிகளுடன் உள்ள பெயர்களைப் பாடநூல்களில் பயன்படுத்தும்போது அவற்றை நீக்கி எழுதும் முறை பொதுவிதியாகவே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. (எ.கா.) உ.வே.சாமிநாதர், நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார், கவிமணி தேசிக விநாயகனார், வ.உ.சிதம்பரனார், இராஜாஜி, வாஞ்சிநாதன்



    இவ்விதியை இவ்வாண்டு வெளியான ஏழாம்வகுப்பு தமிழ்ப்பாடத்தில் தளர்த்தித் தகர்த்துள்ளனர். இம்மாதிரி விதி விலக்குகளை உருவாக்குவது வருங்காலத்தில் அனைவருக்கும் சாதிப் பின்னொட்டை இணைக்கும் அவலத்திற்கு இட்டுச்செல்லும் என்பதை யாரும் உணரவில்லை. 

      ‘தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்’ என்னும் பாடத்தில் மட்டும் சாதிப்பெயரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். இப்பாடத்தில் சாதியின் பெயருடன் சுமார் 35 தடவை பயன்படுத்தப்படுகிறது. மேலும் மதுரை வைத்தியநாத ஐயர் பெயரும் இவ்வாறு இடம்பெறுகிறது. ஆனால் அடுத்த பாடம் ‘கப்பலோட்டிய தமிழர்’. இதில் சுமார் 10 இடங்களில் சிதம்பரனார் என்றே குறிப்பிடுகிறார்கள். இப்பகுதியை எழுதியவர் இரா.பி.சேதுப்பிள்ளை; மிகக் கவனமாக இரா.பி.சேது என்றே குறிக்கின்றனர். மேலும் இப்பாடநூலில் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார், மனோன்மணீயம் பெ.சுந்தரனார் ஆகிய பெயர்கள் சாதிப்பட்டமின்றி இருப்பதும் கவனிக்கத்தக்கது. இப்படி ஒருவருக்கு மட்டும் விதிவிலக்களிப்பது மிகவும் தவறான முன்னுதாரணமாகிவிடும்.  

     பசும்பொன் முத்துராமலிங்கர் பற்றிய பாடம் பாடநூலில் இடம்பெறக்கூடாது என்று நாம் சொல்ல வரவில்லை. அவருடைய அரசியல் குறித்து மாற்றுக்கருத்து உள்ள போதும் யாரையும் இருட்டடிப்பு செய்ய வேண்டிய தேவையில்லை. சில திருவுருக்களை மட்டும் மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்யாமல் புறக்கணிக்கப்படும் பல தலைவர்களும் பாடநூல்களில் இடம்பெறுவது அவசியம். அந்த வகையில் சுந்தரலிங்கம், இம்மானுவேல் சேகரன், மணலூர் மணியம்மாள், ம.சிங்காரவேலர், பி.எஸ்.ஆர்., ப.ஜீவானந்தம் போன்ற பலர் பாடநூல்களின் பார்வையில் இன்னும் வரவில்லை.  

   ‘தேசியம் காத்த செம்மல்’ எனும் பாடம் பழைய சமச்சீர் பாடநூலில் ஆறாம் வகுப்பில் (2012) இடம்பெற்றது. இப்பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கர் என்றே சாதிப்பெயரின்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்ற அவரது சிலையின் படம் கூட கட்சி வண்ணங்கள் இன்றி மிகக்கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்ற கல்வியாண்டு அறிமுகமான புதிய பாடநூலில் அப்பாடம் இல்லை. பாடநூலை மாற்றும்போது பாடங்களை மாற்றுவதும் இயல்புதானே! பெரியார் (இளமையில் பெரியார் கேட்ட வினா), உ.வே.சா., விவேகானந்தர், நேரு இந்திராக்கு எழுதிய மடல் ஆகிய பாடங்கள் கூட அந்நூலில் உண்டு. 



   சமச்சீருக்கு முந்தைய ஆறாம் வகுப்பிலும் முத்துராமலிங்கர் பாடம் உண்டு. ஒருவருடைய பாடத்தை எப்போதும் பாடநூலில் வைத்திருக்க வேண்டும் என்பது என்ன மாதிரியான கொள்கை என்பது விளங்கவில்லை. 

   இப்பாடத்தைச் சேர்க்க கோரிக்கை வந்திருப்பதாகவும் அடுத்த வகுப்பில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒருமுறை ஊடகங்களில் சொல்லியிருந்தார். அந்தப் பாடத்திலிருப்பதுபோல் சாதிப்பெயரின்றி ஒரு பாடத்தை வைப்பதை விடுத்து, அரசும் கல்விதுறையும்  சாதிய வன்மத்தை வளர்க்க முயல்வது மிகவும் ஆபத்தானது. 

    ‘தெரிந்து தெளிவோம்’ பகுதியில் அவர் வாழ்ந்த நாள்கள், சிறையிலிருந்த நாள்கள் என கணக்கு போட்டு ஐந்தில் ஒரு பங்கு சிறைவாழ்க்கை (பக்.61) என குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வ.உ.சிதம்பரனார் பாடத்தில் இத்தகைய கணக்கு வழக்குகள் இல்லையே, ஏன்? 

    மற்றொரு குறிப்பில், “1936 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிடப் பெருந்தலைவர் காமராசர் முன் வந்தார். நகராட்சிக்கு வரி செலுத்தியவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்னும் நிலை இருந்தது. எனவே, முத்துராமலிங்கத்தேவர் ஓர் ஆட்டுக்குட்டியை வாங்கிக் காமராசர் பெயரில் வரி கட்டி அவரைத் தேர்தலில் போட்டியிட வைத்தார்”. (பக்.59) இதில் என்ன பதவிக்கான தேர்தல் என்பது குறிப்பிடப்படவில்லை? இது யாருடைய கருத்து அல்லது எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்கிற விவரம் எதுவுமில்லை. இதற்கான ஆதாரங்களும் இல்லை. வாஞ்சிநாதனின் கர்ப்பிணி மனைவியை வண்டிகட்டிச் சென்று காப்பாற்றிப் பாதுகாத்த ‘தி இந்து’ (இப்போது ‘இந்து தமிழ் திசை’) செய்தியைப்போல் அல்லாமல் உண்மையாக இருந்தால் நல்லதுதான்! “நேதாஜி திரும்பவும் வருவார்”, என்று அவர் புனைவுகளை உற்பத்தி செய்ததுபோல் அவரைப் பற்றிய புனைவு உருவாக்கங்களும் இங்கு மிக அதிகம்.
  
    இப்பாடத்தை வாசிக்கும்போது முத்துராமலிங்கரைப் போன்ற உலகமகா தலைவர் யாரும் இல்லை என்கிற எண்ணம்தான் ஏற்படுகிறது. பெரியார், திரு.வி.க., காமராசர், அண்ணாதுரை, ராஜாஜி என்று அனைவராலும் பாராட்டப்பட்ட திருவுருவாக சித்தரித்தும் மிகைப்படவும் எழுதுவது ஏன்? பல்வேறு காலகட்டங்கள், நிகழ்வுகளில் இவர்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டதில்லையா? எவரைப் பற்றியும் நடுநிலையான பார்வையுடன் அணுகாமல் கதாநாயக பிம்பங்கள் , ஒளிவட்டங்கள், மிகையுணர்ச்சிக் குவியல்கள் என்பதாக  பாடங்கள் அமைவது நல்லதா எனச் சிந்திப்பது கல்விக்கும் தமிழுக்கும் நலத்தை உண்டாக்கும். 

   “அவருடைய (வள்ளலார்) தீவிரமான சிந்தனைகள் பழமைவாத சைவர்களை ஆழமாகப் புண்படுத்தியதால் அவர்கள் வள்ளலாரின் பாடல்களை ‘மருட்பா’ (அறியாமையின் பாடல்கள்) எனக் கண்டனம் செய்தனர்”, (பக்.84, பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல், தொகுதி 1) “வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய”, வள்ளலாரே ஒரு பிரிவினரை மிக ‘ஆழமாகப் புண்படுத்தி’யிருப்பதை விண்டுரைக்கும் பாடநூல்கள் இம்மாதிரியானப் ‘போற்றி’ப்  பாடங்களையும் எழுதுவது ஏன்? 

(இன்னும் வரும்…) 
                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக