செவ்வாய், ஜூன் 25, 2019

யார் அறிவியலாளர்?


யார் அறிவியலாளர்? 


மு.சிவகுருநாதன்


(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 19)       அய்ந்தாம் வகுப்பு முதல்பருவ அறிவியல் பாடநூலில் ‘அன்றாட வாழ்வில் அறிவியல்’ எனும் பாடத்தில் ‘தமிழ்நாட்டு அறிவியலாளர்கள்’ என்ற பட்டியல் உள்ளது. அப்பட்டியலில் 5 பேர் இடம் பெறுகின்றனர்.  இதில் சர். சி. வி. ராமனுக்கு கடைசி இடம்! இவரது பெயரை மட்டும் ஏன் விரித்தெழுதுவதில்லை? முதலில் பட்டியலைப் பாருங்கள்.
    • முனைவர் M. S. சுவாமிநாதன் - மரபியல் -  பசுமைப்புரட்சி
  • சீனிவாச  ராமானுஜன்  - கணி்தம் -  கலப்பு எண்கள்
  • வெங்கடராமன்  இராதாகிருஷ்ணன் -  உயிரியல் - ரிபோசோமின் அமைப்பு
  • முனைவர் A. P. J. அப்துல்கலாம் - வானூர்தி அறிவியல் -  ஏவுகணைத்  தயாரிப்பு
  • சர். C. V. இராமன் - இயற்பியல் -  ஒளிச்சி்தறல்   (பக்.131)


         எழுத்தாளர் ராமநுஜம், Technocrat, Scientist   ஆகியவற்றுக்கு இங்கு வேறுபாடே இல்லை என்பார். M. S. சுவாமிநாதன், A. P. J. அப்துல்கலாம் போன்ற தொழிநுட்ப வல்லுநர்களை அறிவியலாளர்கள் (விஞ்ஞானிகள்) என்று சொல்லும் அவலம் இங்கு மட்டுமே உண்டு. ஒரு வகுப்பில் நம்மாழ்வார், எம். எஸ். சுவாமிநாதன் ஆகிய இருவரையும் ஒரே பக்கத்தில் அறிமுகப்படுத்துகின்றனர். முரண்பாடுகளைச் சொல்வதில்லை.    இப்பட்டியலில் சர். சி. வி. ராமனுக்கு ஏன் இறுதியில் இடம் என்பதை விளக்குவார்களா? அவரது கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் இந்த Technocrat களை விடக் குறைந்தவையா? இம்மாதிரி அரைகுறைகளைக் கொண்டாடும் சமூகம் அறிவுலகமாக மலர்வது கடினம்.

     பாடத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள பயிற்சி வினாக்கள் சிலவற்றை கவனியுங்கள்.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

ஏவுகணை நாயகன் என அழைக்கப்படுபவர் யார்?

) சர். C.V. இராமன்
) முனைவர் A.P.J. அப்துல்கலாம்
) முனைவர் M.S. சுவாமிநாதன்
) இராமனுஜன்       (பக்.137)


கோடிட்ட இடத்தை நிரப்புக.

அக்னிச் சிறகுகள் என்னும் புத்தகத்தை  எழுதியவர் _________. (பக்.137)

பொருத்துக.

  1. மொட்டு மலராதல்  -  முனைவர் A.P.J. அப்துல்கலாம்
  2. மீளக்கூடிய மாற்றம்  -  மறுசுழற்சிக் கழிவு
  3. இலக்கு 2020  -  உயிரிக் கழிவு
  4. காகிதம்  -  பனிக்கட்டி உருகுதல்
  5. காய்கறிகள்  -  மீளக்கூடிய மாற்றம்

சுருக்கமாக விடையளி

தமிழ்நாட்டு அறிவியலாளர்களைக் குறிப்பிடுக. (பக்.138)        சென்ற ஆண்டு வெளியிட்ட ஆறாம் வகுப்பு பாடநூல்களில் நிரம்பி வழியுமளவிற்கு அப்துல் கலாமைப் பேசியாகிவிட்டது. இங்கு அவரது புகழைப் பரப்ப வேண்டுமென்றால் பாடத்தில் தலைப்பையே ‘அப்துல் கலாம்’ என்றாவது மாற்றியிருக்கலாம். சர். சி. வி. ராமனை துணைக்கழைத்து அப்துல் கலாம் புராணம் பாடுவது மிகக்கொடுமை.

    அரைகுறைகளைக் கொண்டாடுதல் பற்றிச் சொன்னோம். அதுவும் அரைகுறையாக, பிழையாகவே சிந்திப்பது அதிர்ச்சியளிக்கிறது. “வெங்கடராமன்  இராதாகிருஷ்ணன் -  உயிரியல் - ரிபோசோமின் அமைப்பு” (பக்.131) என்று பாடநூல் குறிப்பிடுகிறது. யாரிந்த வெங்கட்ராமன்  ராதாகிருஷ்ணன்?
 
    இவர் அறிவியல் அறிஞர் சர். சி. வி. ராமனின் மகனாவார். தனது தந்தையின் நிழல், புகழில் மட்டும் வாழ விரும்பாமல் சிறப்பான அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்ட விஞ்ஞானி இவர். இவரும் ஒரு வானியல் அறிஞர். வான் இயற்பியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டவர். அய்ரோப்பாவில் பணியாற்றிவிட்டு பெங்களூரு ராமன் ஆய்வுக்கழகத்தில் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவருக்கும் ரிபோசோம் ஆய்வுகளுக்கும்  தொடர்பில்லை; இவரது துறை இயற்பியல். 2011 ஆம் ஆண்டு தனது 81 வது வயதில் மரணமடைந்தார்.

     ரிபோசோம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு 2009 இல் வேதியலுக்கான நோபல் பரிசை, தாமஸ் ஸ்டைட்ஸ் (அமெரிக்கா), அடா யோனட்ஸ் (இஸ்ரேல்) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டவர். சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இவரது ஆய்வுப்புலம் உயிர்வேதியியல் மற்றும் உயிர் இயற்பியல். ரிபோசோம்களுக்குள் புரத உற்பத்தி குறித்தது இவரது ஆய்வுகள். பிரிட்டன் கேம்பிரிட்ஜ் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிர் வேதியிலாளராகப் பணிபுரிகிறார். இவரது ஆய்வுகளை வெங்கட்ராமன்  ராதாகிருஷ்ணன் மீது திணிக்கின்றனர். இப்படித் தவறாக அல்ல, அவரது உண்மையான அறிவியல் ஆய்வுகளுக்காக, இப்பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டியவரே.

   ‘வெங்கி’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு 2011 இல் சர் பட்டம் வழங்கப்பட்டது. 2015 இல் பெங்களூருவில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட வெங்கி, இங்கு பிளாஸ்டிக் சர்ஜரி, விமானம் போன்றவை வேதகாலத்திலிருந்தது என்ற போலி அறிவியல்வாதிகளைக் கண்டு  அதிர்ச்சி அடைந்தார்.
 
    இந்திய அறிவியல் மாநாடுகள் ஒரு ‘சர்க்கஸ்’. இனி அதில் பங்கேற்கமாட்டேன், என்று அறிவித்தார். இவ்வாறு போலி அறிவியல் பேசுவது உலகில் இந்தியாவில் தரத்தைக் குறைக்கும். இந்திய விஞ்ஞானிகளை யாரும் மதிக்கமாட்டார்கள், என்று  எச்சரிக்கவும் செய்தார்.

    சர். சி. வி. ராமன் வாழ்விலிருந்தும் இம்மாதிரியான நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்லமுடியும். இந்த விஞ்ஞானிகள் அறிவியலில் அறத்தை நாடினர். எப்போதும் உண்மையின் பக்கம் நின்று அறிவியலைச் செழுமைப்படுத்தினர். விஞ்ஞானிகளுக்கும் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கும் உள்ள பெரும் வேறுபாடே இதுதான். 


(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக