சோளமும் மக்காச்சோளமும்
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத்
தொடர்: 18)
ஐந்தாம் வகுப்பு முதல் பருவ அறிவியல் (தொகுதி 2) உணவு தானியங்கள் பாடத்தில்
‘சோளம்’ பற்றிப் பின்வருமாறு விளக்கப்படுகிறது.
“மெக்சிகோ மற்றும் அமெரிக்கா போன்ற
வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல நாடுகளில் முதன்மை
உணவாக மக்கள் உண்பது சோளம் ஆகும். மக்காசோளம் என்றும் இதனை அழைப்பர். சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயும் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
மஞ்சள் மற்றும் பலநிறமான சோளமானது கண்நலத்திற்கு மி்கவும் நல்லது. மேலும்,
இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
சர்க்கரைக்குப் பதி்லாக சோளச்சாறு பல உணவுகளில் இனிப்பானாக பயன்படுத்தப்படுகிறது. இனிப்புசோளம், காலை உணவுதானியங்கள், தட்டையான
சிப்ஸ்கள், டாக்கோ மற்றும் சோள எண்ணெய் போன்றவை சோளத்திலிருந்து
கிடைக்கும் பொருட்களாகும். (பக். 115)
சோளம் (Sorghum) என்பது வேறு;
maize எனப்படும் மக்காச்சோளம் (Zea mays) என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக்கிக்
குழந்தைகளைக் குழப்புவதுதான் பாடநூலில் பணியாக உள்ளது.
ஆங்கில வழியில் ‘Maize’ எனும் தலைப்பில் “It is also known as corn”,
(பக்.115) என்கிறார்கள்.குழப்பத்திற்கு அளவேயில்லை. மக்காச்சோளப் படங்களே
அப்பகுதியில் உள்ளது.
சோளம் பாரம்பரிய சிறுதானியப் பயிர்; சத்துகள்
நிறைந்தது. மக்காச்சோளம் கலப்பினப்பயிர்.
கால்நடைத் தீவனமாகவும் ஆல்கஹால் தயாரிப்பிலும் பேரளவு பயன்படுத்தப்படுகிறது. நாம் சோளப்பொறியாகவும்
(corn) வேகவைத்து தின்பதற்கும் பயன்படுத்துவது இதுவே. உணவு எண்ணெய் (corn oil)
தயாரிக்கவும் பயன்படுகிறது. தற்போது மரபணு மாற்றத்திற்குள்ளாகி இனிப்பு
மக்காச்சோளம் போன்றவையும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை ஒரு வகையில் உடலுக்குக் கேடு செய்பவை.
மேலும் ‘உணவு தானியங்களை’ அறிமுகம் செய்யும்போது, “கோதுமை, சோளம், அரிசி,
பார்லி, பட்டாணி மற்றும் சிறுதானியங்கள் ஆகியவை உணவு தானியங்களுக்கு சி்ல உதாரணங்களாகும்”, (பக்.116)
ஆங்கில வழியில் beans, peas ஆகியன
தானியமாகச் சொல்லப்படுகின்றன. தமிழில் ‘பட்டாணி’ மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இவை
பருப்பு வகைகளல்லவா! எப்படித் தானியமாயிற்று?
(இன்னும் வரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக