வியாழன், ஜூன் 20, 2019

பாடநூலில் அறிவுத் திருட்டு!


பாடநூலில் அறிவுத் திருட்டு!


மு.சிவகுருநாதன்


(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 15)





       பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டுரைப் பயிற்சி அளிக்கும் சடங்கு ஒன்றுண்டு. எங்கோ ஓரிருவர் விதிவிலக்காக சொந்தமாக எழுதிவரக்கூடும். பெரும்பாலும் பிறரிடம் எழுதி வாங்கியோ, பிற நூல்களிலிருந்து எடுத்தெழுதியோ வரக்கூடும். இது இயல்பானதுதான். ஆசிரியர்களின் நிலையும் இதுவென்றால்… கல்வியின் நிலை? உயர்கல்வியில் நடைபெறும் ஆய்வுகள் தரமானதாக இல்லை. பிறரால் பணத்திற்கு எழுதிகொடுக்கப்படும் ஆய்வேடுகளின் மூலம் ஆய்வுப்பட்டங்கள் பெற்ற பலர் இருக்கின்றனர். 


    பாடநூல் எழுதுவோர் இவ்வாறு காப்பியடிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? பாடப்பொருளின் கருத்துகளை நன்றாக உள்வாங்கி அதற்காக பல்வேறு நூல்களை வாசித்து அந்த வகுப்பிற்குரிய மாணவர்களது திறனுக்கேற்ப எளிய நடையில் பாடப்பகுதிகள் எழுதப்பட்டால் அது வரவேற்கக்கூடியதுதான். இதில் பார்வை நூல்கள் இடம்பெறுவது நலம். இல்லையென்றால் அந்தத் தலைப்பில் பிறர் எழுதிய கட்டுரைகளை பெயருடன் எடுத்தாள்வதே சிறப்பு. மாறாக பிறரது கட்டுரையை வரிக்குவரி ‘காப்பி’யடித்து, வரிகளையும் பத்திகளையும் களைத்துப் போட்டு  ஒரு கட்டுரையைத் தயார் செய்வது அறிவுத்திருட்டன்றி வேறில்லை. 


    ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் ‘ஏறு தழுவுதல்’ (பக். 64-67) என்றொரு உரைநடைப்பகுதி உள்ளது. இதை யார் எழுதியது அல்லது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்கிற குறிப்பு எதுவும் இவற்றிலில்லை. எனவே பாடநூல் குழுவினரால் எழுதப்பட்டது என்றே கருதலாம்.  





   'ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்' என்ற தலைப்பில் மகராசன் எழுதிய நூல் ‘அடவி’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அந்த நூலிலுள்ள கட்டுரையே பாடத்திற்கு ஆதாரம். அக்கட்டுரை அவரது வலைப்பூவிலும் கிடைக்கிறது. இணைப்பு:  https://maharasan.blogspot.com/2017/01/blog-post.html?m=1


     பாடநூலைப் பார்த்தபிறகு மகாராசன் மிகப் பெருந்தன்மையுடன் கீழ்காணும் பதிவை முகநூலில் இட்டிருக்கிறார். அதிலிருந்து சில வரிகள்: 


    “நான் எழுதிய 'ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்' என்ற நூலில் விவரிக்கப்பட்ட செய்திகளே அந்தக் கட்டுரையில் நான்கு பக்க அளவில் சுருக்கிச் சொல்லப்பட்டுள்ளன. எனது நூலில் உள்ள சில பல பத்திகளும் கூட அப்படியே இடம்பெற்றுள்ளன. இளந்தலைமுறை ஏறு தழுவுதல் பண்பாட்டை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற பொது நோக்கில் இந்தக் கட்டுரை பாடப்புத்தகத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதுதான். ஆயினும், அந்தக் கட்டுரையில் ஓரிடத்தில் கூட எனது நூலின் பெயரோ அல்லது எனது பெயரோ இடம் பெற்றிருக்கவில்லை. எனது நூல் என்றில்லாவிட்டாலும், அந்தக் கட்டுரைக்கான தரவுகள் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன என்கிற குறிப்புகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும். 


     பாடத்திட்ட உள்ளடக்கம், வடிவமைப்பு போன்றவை மேம்பட்ட நோக்குகளோடு அமைந்திருக்கிற நிலையில், ஒரு கட்டுரைத் தரவுக்கான பார்வை நூல்கள் எவையெனக் குறிப்பிடாமல் இருப்பது ஆய்வு முறையியலைக் கேள்விக்கு உள்ளாக்கக்கூடும். இந்தக் குறைபாட்டை மறுபதிப்பு செய்கிற போது சரி செய்திட வேண்டியது பாடத்திட்ட வல்லுநர்களின் கடமையாகும். குறைந்தளவு, பார்வை நூலாகக் கூடக் குறிப்பிடலாம்”. (முகநூல் பதிவில்...)


     ஆனால் இங்கு இதெல்லாம் நடக்குமா? அதிகாரமும் அறிவும் நிரம்பி வழிபவர்களிடம் நாணயம், கண்ணியம் போன்றவற்றை எதிர்பார்க்க முடியுமா என்ன? நமது ஆய்வுப்புலம், கல்விப்புலம் ஆகியவை மிக மோசமாகச் சீரழிந்துள்ளது. பாடப்பகுதி, மகாராசன் கட்டுரை ஆகியவற்றை ஆய்வு செய்தபோது இது அப்பட்டமான அறிவுத்திருட்டு என்கிற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக சில பத்திகளை மட்டும் ஒப்பீடு செய்யலாம். 


      “சங்க கால முல்லைக்கலியில் ஏறுதழுவல் குறித்த பாடல்கள் பலவுண்டு. எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர் என ஏறு தழுவல் களம் காட்டப்படுகிறது”. (மகராசன்)

  “சங்க இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ……………………………………………………
எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிந்தன மருப்பு,
கலங்கினர் பலர்
(கலி – 102: அடி 21-24
என்று முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் களம் குறித்த அடிகள், காட்சியை நம் கண்முன்னே நிறுத்துகின்றன”. (பக்.64, பாடப்பகுதி)

             திமில் பெருத்த இக்காளைகள், பல நிலத்திலிருந்து நீரைக் கொண்டுவருபவை போல நிலத்தை முட்டித்தோண்டின. சில காளைகள் நிலத்தை நொறுக்கின. சில தம்முள் முரண்பட்டு ஒன்றோடொன்று எதிர்த்துச் சிலைத்துக் கொண்டன. சில மண்டியிட்டுப் பாய்ந்தன. இவ்வாறு இந்தக் காளைகள்வீரமுடன் போரிட்டுச் செல்வது, மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச்செல்லும் மருத நிலத்து மள்ளர்களை ஒத்ததாக இருக்கிறது”,  (மகராசன்)

   “திமில் பெருத்த காளைகள் பல, காலாலே தரையைக் கிளறி, புழுதியை எழுப்பின. சில நிலத்தை நொறுக்கின; சில தம்முன் முரண்பட்டு ஒன்றோடொன்று எதிர்த்துக் கொண்டன; சில மண்டியிட்டுப் பாய்ந்தன. இந்தக் காளைகள் மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச் செல்லும் மருதநிலத்துப் போர் வீரர்களை நிகர்த்தனவாக இருந்தன”. (பக்.64,65 - பாடப்பகுதி)


    “காளையின் கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.  …………………… …………………………   இத்தகையச் சிற்பங்களைக் கொண்ட நடுகற்கள் தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ளன எனக் கூறும் பெருமாள் முருகன், சேலம் மாவட்டத்தில் உள்ள எருது பொருதார் கல் ஒன்றில் காணப்படும் செய்தியைக் குறித்தும் விளக்கப்படுத்தியுள்ளார். கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடி பட்டான் சங்கன் மகன் பெரியபயலு நட்ட கல்லு என்கிறது அந் நடுகல் . கருவந்துறை என்னும் ஊரில் எருதோடுபோராடிப் பட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவன் மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் இது. இதில் எருது விளையாடி என்னும் தொடர் இடம் பெறுவது கவனத்திற்குரியது என்பார் அவர். (மகராசன்)

    “ஏறு தழுவுதல் குறித்த பல நடுகற்கள், புடைப்புச் சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது. கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு என்பது அந்நடுகல் பொறிப்பு. கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்துபட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவனுடைய மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் என்பது இதன் பொருள்”.  (பக்.65, பாடப்பகுதி)


        
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூரில் கி.மு 2000 முதல்1500 வரையிலான காலத்தைச் சார்ந்தபாறை ஓவியம் காந்தி ராசன் அவர்களால் கண்டறியப்பட்டது.  கூரியகொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடிவிரட்டுவது போன்ற ஓவியம் கவனிக்கப்பட வேண்டிய  ஒன்று என்கிறார்  அவர். மேலும், மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து மேட்டுப்பட்டியிலும்  ஒரு பாறை ஓவியம் அவராலேயே கண்டறியப்பட்டுள்ளது”. (மகராசன்)

    “கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் காணப்படுகிறது. திமிலும் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது”. (பக்.65, பாடப்பகுதி)


        
சிந்து வெளி என்றழைக்கப்படுகிற மொகஞ்சதாரோ, அரப்பாவில் நடைபெற்ற அகழாய்வுகள் தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளத்தை  உறுதிப்படுத்தியுள்ளன. சிந்து வெளியில் மாடு தழுவும் கல்முத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஏறு தழுவுதலைக் குறிக்கும்  சின்னம் என்கிறார்  அய்ராவதம் மகாதேவன்”. (மகராசன்)

        சிந்துவெளி அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்”. (பக்.66, பாடப்பகுதி)


              “
மாடுகளுள்,  குறிப்பாகக் காளைமாடுகளே ஏரில் பூட்டி உழவு செய்திருப்பதால், ஏர் மாடுகள், எருதுகள், ஏறுகள் என்றழைக்கப்பட்டுள்ளன”. (மகராசன்)

      “ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் ஏர் மாடுகள், எருதுகள், ஏறுகள் என்று அழைக்கப்பட்டன”. (பக்.66, பாடப்பகுதி)

            “மாடுகளைக் குளிப்பாட்டி, பலவண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடிகயிறு அனைத்தும் புதியதாக அணிவித்து, கொம்புகளின் பிசிறு சீவி எண்ணெய் தடவி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டி, செவ்வந்திப் பூமாலை சூட்டி அலங்கரித்து பசுக்கள், கன்றுகள், காளைகள் என அனைத்து மாடுகளையும் மகிழ்வுபடுத்துவர். அதோடு, முதல் நாள் வைத்த மனைப் பொங்கல் போலவே அனைத்துப் படையல்களோடும் பொங்கலிட்டுத் தளுகை வைத்து வணங்குவர். அந்தத்தளுகைப் பொங்கல், முதலில் மாடுகளுக்குத்தான்  ஊட்டப்படும்”. (மகராசன்)

        மாடுகளைக் குளிப்பாட்டிப் பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங் கயிறு, கழுத்துக் கயிறு, பிடி கயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர். கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ, துண்டோ கழுத்தில் கட்டுவர். பின்னர், பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர்”.  (பக்.66, பாடப்பகுதி)


     “இத்தகைய மாடு தழுவல் நிகழ்வு இன்னும் வேறு வேறு பெயர்களாலும்அழைக்கப்படுகிறது. மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு விரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு, எருதுக்கட்டு, காளை விரட்டு, ஏறு விடுதல், வடமாடு, சல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு என வட்டாரம் சார்ந்து அழைக்கப்படுகிறது”. (மகராசன்)

    “ஏறு தழுவுதல், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. அது மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு விரட்டு, வேலி மஞ்சு விரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது”. (பக்.66, பாடப்பகுதி)

    நாம் ஏற்கனவே ‘விக்கிபிடியா’வை காப்பியடிப்பதை உரிய ஆதாரங்களுடன் சுட்டியுள்ளோம். மேலும் ‘google translate’ நகலெடுக்கும் முயற்சியையும் அம்பலபடுத்தியுள்ளோம். இப்போது இந்த அறிவுத்திருட்டைச் சுட்டிக் காட்டுகிறோம். பாடநூலில் உரிய மாற்றங்கள் செய்ய தொடர்புடையவர்கள் முன்வருவார்களா?

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக