வெள்ளி, ஜூன் 21, 2019

ஜோதிடம் கற்றுத்தரும் திட்டமா?

ஜோதிடம் கற்றுத்தரும் திட்டமா? 


மு.சிவகுருநாதன்


(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 16)



        கடந்த ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ‘சூரிய குடும்பம்’ விளக்கப்படுகிறது. அதில் ஓரிடத்தில் வெள்ளி (பக்.144) என்றும் மற்றோரிடத்தில் ‘சுக்கிரன்’ (பக். 143) என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் சூரியக் குடும்ப படம் ஒன்றில் வெள்ளி (பக். 143) எனவும் மற்றொன்றில் ‘சுக்கிரன்’ (பக். 141)  எனவும் குறிக்கப்படுகிறது. 


    “நமது சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன.  வெளிபுறக்  கோள்கள் வாயுக்களால் ஆனது.  அவை வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்.  உட்புறப்பாறை கோள்கள்  புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய். உறைந்திருக்கும் கோள்கள் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் 
ஆகும்”.  (பக். 143)



    “புதனும், வெள்ளியும் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்கள் ஆகும். பூமிக்கு அடுத்தபடியாக  செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை உள்ளன. சூரியனுக்கு அருகில் உள்ள கோள்கள் மிகவும் வெப்பமானவை. சூரியனிலிருந்து மிகத் தொலைவில்  உள்ள கோள்கள் மிகவும் குளிர்ச்சியாக உள்ளன. புதன் கோள் மற்ற கோள்களைவிட  மிகவும் சிறியது. வெள்ளியும், புவியும் “இரட்டைக்கோள்கள்” என அழைக்கப்படுகின்றன. செவ்வாய் “செந்நிறக் கோள்” என அழைக்கப்படுகிறது. மேலும் பூமி “நீர்க்கோள்” என அழைக்கப்படுகிறது. வளையங்களைக் கொண்டக் கோள் சனி ஆகும்”. (பக்.144) 
 
        Mercury, Venus, Earth. Mars, Jupiter, Saturn Uranus and Neptune என்று ஆங்கிலப் பெயர்களை அப்படியே சொன்னாலாவது பரவாயில்லை. ‘சுக்கிரன்’ என்று சொல்லி மாணவர்களைக் குழப்புவதும்  திருப்புவதும் ஏன்? 

      பல்கலைக்கழகங்களில் கலைப்பாடங்களை நீக்கிவிட்டு ஜோதிடம், யோகா போன்றவற்றைக் கற்றுகொடுக்கக் கல்வித்திட்டம் வகுக்க முனைகின்றனர் மத்தியில் ஆளும் வலதுசாரி இந்துத்துவக் கட்சினர். அதை உடனே நமது தமிழ்ப்பல்கலைக்கழகம் நிறைவேற்றிக் காட்டுகிறது. இங்கு ஜோதிடப் படிப்புகள் உண்டு. 



    புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, ராகு, கேது, சந்திரன், சூரியன் ஆகியவற்றை ஒன்பது கோள்களாக ஜோதிடம் கற்பிதம் செய்கிறது. இதை அறிவியல் என்று புலம்புவாரும் உளர். எனவே இனி சுக்கிரன், மங்கள், குரு என இந்திப் பெயர்கள்தான் கோலோச்சுமோ! ‘மங்கள்யான்’ என  சமஸ்கிருத – இந்திப் பெயர்களைத் தேடி அலையும் நிலையில்தானே இந்திய ஒன்றியம் உள்ளது! 

      சிபிஎஸ்இ ஆல் அங்கீகரிக்கப்பட்ட பாடநூல் ஒன்று 9 கோள்கள்தான் என்று அடம்பிடிக்கிறது. (தமிழ் அருவி – நான்காம் வகுப்பு, மதுபன் பப்ளிகேஷன்ஸ், நொய்டா)

    இப்படியெல்லாம் தொடர்பில்லாத ஒன்றை நுழைத்துக் குழந்தைகளைக் குழப்பத்தில் ஆழ்த்தாமலிருப்பது கல்விக்கு அழகு.


(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக