புதன், ஜூன் 26, 2019

அறிவியல் வழி மூடநம்பிக்கைகளை வளர்க்கும் முயற்சி


அறிவியல் வழி மூடநம்பிக்கைகளை வளர்க்கும் முயற்சி 

  
மு.சிவகுருநாதன்

  
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 20)


       ஏழாம் வகுப்பு முதல்பருவ அறிவியல் பாடநூலில் ‘உடல்நலமும் சுகாதாரமும்’ எனும் பாடத்தில் அறிமுகமாக கீழ்க்கண்ட பத்தி இடம்பெறுகிறது.  


“அறிமுகம்

1.   நீங்கள் எப்பொழுதாவது உடல்நலக்குறைவு காரணமாகப் பள்ளிக்குப் போகாமலிருந்தது உண்டா? 
2.   உடல் நலமின்மையின் போது நமக்கு என்ன நிகழ்கிறது? 
3.   சில நேரங்களில், எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளாமல் உடல் சரியாகி விடுகிறது, சில நேரங்களில் நாம் டாக்டரை அணுகி ஆலோசித்த பின் மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அது ஏன்?என்ன காரணங்களால் நோய் ஏற்படுகிறது?

    நோய் ஏற்பட என்ன காரணம் என்பதை விளக்குவதற்கு வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் மனிதர்கள் அல்லது வெவ்வேறு பின்னணியிருப்பவர்கள் பல வழிகளில் ஏற்படுகின்றன எனக் கூறுவார்கள்.

உதாரணமாக ஒரு குழந்தைக்கு  வயிற்றுப்போக்கு ஏன் ஏற்படுகிறது?

     என்பதைப் பற்றி பலரின் கூற்று: சிறிய கிராமங்களில் உள்ளவர்களின், சொல்லின்படி பெற்றோர்கள் எதாவது தவறு செய்திருக்கிறார்கள், அவர்கள் கடவுள் அல்லது ஆவியின் கோபத்திற்கு ஆளாகி இருப்பார்கள்  எனக் கூறலாம். 

      குழந்தைக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு மருத்துவர் கூறலாம். ஒரு பொதுச் சுகாதார அலுவலர் கிராம மக்களின் நீர் அமைப்பு அல்லது கழிவறை சுகாதாரமின்மை இதற்குக் காரணம் எனக் கூறலாம். ஒரு ஆசிரியர் கல்வியறிவு பற்றாக்குறை என்பதே காரணம் என்று கூறலாம்.

    மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அனுபவம் மற்றும் தங்களின் பார்வையிலிருந்து நோய்க்கான காரணத்தைப் பார்க்கிறார்கள். அப்படியானால் யாருடைய கூற்று சரியானது? ஒருவேளை அனைவரின் கூற்றும் சரியானதா அல்லது ஓரளவு சரியானதா?

இது எதனால் என்றால்…

    மேலே கூறப்பட்ட காரணங்கள் ஒவ்வொன்றும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். நோய்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்க உதவும் வழிமுறைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இப்பாடம் நோய் தடுப்பு காரணிகளையும் மற்றும் நோய்க்கான பல்வேறு காரணங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும்”. (பக்.93)


    பாடத்தை, பாடக்கருத்துகளை மிக எளிமையாக அறிமுகம் செய்கிறோம் என்கிற போர்வையில் அறிவியல் பூர்வமற்ற செய்திகள் இணைக்கப்படுகின்றன.  மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் சாயம் பூச முயற்சிப்பது கொடுமையானது.

  சிறிய கிராமங்களில் உள்ளவர்களின், சொல்லின்படி பெற்றோர்கள் எதாவது தவறு செய்திருக்கிறார்கள், அவர்கள் கடவுள் அல்லது ஆவியின் கோபத்திற்கு ஆளாகி இருப்பார்கள்  எனக் கூறலாம்”. 

என்ற மூடநம்பிக்கைக் கூற்று,

“மேலே கூறப்பட்ட காரணங்கள் ஒவ்வொன்றும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.”

    என்ற வழிமொழிதல் மூலமாக அறிவியல் உண்மையாக்கப்படுகிறது. மேலும் இத்தகைய மூட நம்பிக்கைகள் சிறிய கிராமங்களில் மட்டுந்தான் இருக்குமா? பெரிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூடநம்பிக்கைகளே இல்லை. இது எத்தகைய மனநிலை? மூடநம்பிக்கைகளை உருவாக்குவதும் அதைப் பிறர் மீது ஏற்றிவிடுவதும் நகரம் சார்ந்த நடுத்தர வர்க்க மனநிலையாக மாறிவிட்டது போலும்.

    குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வளர்த்தெடுத்துள்ளோம். ஆனால் பாடம் எழுதும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை மிகக்குறைவாக அல்லது இல்லாத நிலையே இருக்கிறது. இது கல்வியின் தோல்வியா அல்லது நடைமுறைப்படுத்துவோரின் தோல்வியா என்பதைச் சிந்திக்க வேண்டும்.  அறிவியல் பாடமல்லாது அனைத்திலும் வாழ்விலும் அறிவியல் சிந்தனை மேலோங்கினால் பல்வேறு சமூகச் சிக்கல்கள் குறையும்; களையப்படும். அதற்கேற்ற வகையில் பாடநூல்களும் ஆசிரியர்களும் அமைய வேண்டும்.

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக